Search This Blog

24.10.08

பொதுவுடைமை பற்றி பாரதி -லெனின் வழி சரியான வழி இல்லையா?







பொதுவுடைமைக் கொள்கையில் பாரதிக்கு எத்தன்மையான புரிதல் இருந்தது என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

1905இல் ருசியாவில் ஒரு புரட்சி தோன்றி தோல்வியில் முடிவுற்றது. ஆனால் அந்தப் புரட்சி இயக்கம் மேலும் மேலும் வளர்ந்து வந்தது. அவ்வப்போது அங்கு நடந்த நிகழ்ச்சிகளை ராய்ட்டர் என்ற செய்தி நிறுவனம் தந்தி மூலம் பத்திரிக்கை அலுவலகங்களுக்குத் தெரிவித்து வந்தது. அக்காலக்கட்டத்தில் இந்தியா ஏட்டில் பொறுப்பாசிரியராக இருந்த பாரதி 30.6.1906 இல் ருசியாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சி என்ற தலைப்பில் எழுதியதாவது;

“ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சிச் சின்னங்கள் எற்பட்டு வருகின்றன. ஜார் சக்கரவர்த்தியின் அநீதிச் சிங்காதனம் சிதைந்து கொடுங்கோன்மை துண்டுத் துண்டாகக் கழிவுபெற்று வரும் ருஷ்யாவில் அமைதி நிலைக்க இடமில்லை. சில இடங்களில் நிலச் சேனையுடன் சேனைக்காரர்கள், ராணுவமும் கலகம் தொடங்கித் தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து விடுகின்றனர்.” (1). 1906 சூலை 7ஆம் தேதி, ரஷ்யாவில் ஏற்படும் புரட்சி குறித்து அச்சமடைவதாகப் பாரதி எழுதியுள்ளார்:

“சென்ற வாரம் ருஷ்யாவைப் பற்றி எழுதிய குறிப்பிலே அத்தேசமானது ஒரு பெரிய ராஜாங்கப் புரட்சியேற்படும் (நிலையிலுள்ளது) என்று தெரிவித்தோம். அதற்கப்பால் வந்து கொண்டிருக்கும் தந்திகள் நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தி விட்டன. கைகலப்புகள் தொடங்கிவிட்டனவென்றால் ராஜாங்கம் எத்தனைத் தூரம் அமைதி கெட்ட நிலையிலிருக்க வேண்டுமென்பதை எளிதாய் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.” (2)

புரட்சி நடக்கிறது என்றால் நமக்கு உரிமை உணர்ச்சியும், எழுச்சியும் உண்டாகும். ஆனால் பாரதியோ, அச்சமுண்டாகிறது என்பதோடு புரட்சி நடப்பதால் ராஜாங்கம் அமைதி கெட்டுவிடும் என்கிறார். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது யாதெனில் பாரதி போல்ஷ்விக்குகளின் புரட்சியை 1906 முதலே ஆதரிக்கவில்லை என்பதேயாகும். ஆனால் அதே நேரத்தில் ஜாரின் கொடுங்கோன்மையை அவர் எதிர்க்கிறார் என்பதை அவருடைய கட்டுரைகளில் மூலம் அறிய முடிகிறது.

“ஒரு விஷயம் மட்டிலும் இங்குப் பலகாலமாக அறிவுறுத்துதற்குரியது. ருஷ்ய ஜனங்களாகிய ஆடுகள் மேது அரசேற்றும் கடுவாய் அரசனும் அவனது ஓநாய் மந்திரியும் நெடுங்காலமாய்த் தரித்திருக்க மாட்டார்கள். இவர்களின் இறுதிக் காலம் வெகு சமீபமாக நெருங்கிவிட்டதென்பதற்குத் தெளிவான பல சின்னங்கள் புலப்படுகின்றன. நீதி ஸ்வரூபியாகிய சர்வேசனது உலகத்திலே அநீதியும், ருஷ்ய ஓநாய்த் தன்மைகளும் நிலைக்கமாட்டா” (3) என்கிறார்.

1906 இல் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியைப் பாரதி ராஜாங்கத்திற்கு எதிரான கலகங்கள் என்றே எழுதுகிறார். “இப்பொழுது மறுபடியும் பெரும் கலகம் தொடங்கி விட்டது. ருஷ்ய சக்ரவர்த்தியின் சிங்காதனம் இதுவரை எந்தக் காலக்கட்டத்திலும் ஆடாதவாறு அத்தனைப் பலமாக இருக்க இப்பொது ஆடத்தொடங்கி விட்டது. பிரதம மந்திரியின் வீட்டை, வீட்டின் விருந்தின் போது வெடிகுண்டு எறியப்பட்டதும், சைன்யத்தலைவர்கள் கொலையுண்டதும், ராஜ விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும் தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளிலே ராஜாங்கத்தாருக்கு விரோதமாகக் கலகங்கள் எழுப்புவதும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப் பற்றித் தந்திகள் வந்த வண்ணமாகவேயிருக்கின்றன.” (4)

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், ஜாரின் கொடுங்கொன்மையை எதிர்க்கும் பாரதி, ஜாரின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களைக் கலகக்காரர்கள் என்றும் அவர்கள் கொடூரமான செயல்கள் செய்வதாகவும் காண்கிறார். ஜார் அரசனின் கொடுங்கோன்மையை 1906 இலேயே எதிர்த்த பாரதி, 1917இல் பிப்ரவரியில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சியில் கெரென்ஸ்கி தலைமையில் டூமாவுக்குள் (நாடாளுமன்றத்திற்குள்) சென்றபோது ஜாரை சிறையில் அடைத்தனர். அப்பொதுதான் பாரதி ஜாரின் வீழ்ச்சியைக் குறித்துப் புதிய ருஷ்யா-ஜார் சக்ரவர்த்தியின் விழ்ச்சி என்ற தலைப்பில் பாடல் ஒன்றை எழுதியுளளார் .அப்பாடல் வருமாறு:

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்தது பார்யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
...
இரணியன்போல் அரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும் பேர்இசைந்த பாவி.
...
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான்
ஜாரரசன்.. (5)


1917 பிப்ரவரியில் நடைபெற்ற இப்புரட்சியில் பாட்டாளிகளும், முதலாளிகளும் செர்ந்தே ஜாரை எதிர்த்துப் புரட்சி நடத்தினர். இதில் முதலாளிகள் தற்காலிகமாக வென்று டூமாவுக்குள் சென்றனர். இப்புரட்சியை ஒரு தெய்விக நிகழ்ச்சியாக்கி “மாகாளி பாரசக்தி கடைக்கண் காட்டியதால் தான் புரட்சி நடந்தது” என்கிறார் பாரதி.

நம் நாட்டுப் பொதுவுடைமைவாதிகள் பலரும் பாரதி அக்டோபர் புரட்சியை வாழ்த்திப் பாடியதாகவே கூறுகின்றார்கள். அதற்கான சான்றாதாரம் இப்பாடலில் எதுவுமில்லை. இப்பாடல் முழுவதுவும், ஜாரின் வீழ்ச்சியைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. ஜார் வீழ்ச்சியுற்றது அக்டோபர் புரட்சியில் அல்ல. அதற்கு முன்னரே நடைபெற்ற பிப்ரவரி புரட்சியிலாகும். அக்டோபர் புரட்சியை ஆதரித்துப் பாடியிருந்தால், லெனின் கொள்கைகளை, அப்போதே கண்டிக்கவேண்டிய அவசியம் இல்லையே.

லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசு நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பிடுங்கி எழை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தபோது பாரதி அதை மிக வன்மையாகக் கண்டிக்கிறார்.


“இந்தக் கொள்கையை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிறசெல்வங்களும், தேசத்தில் பிறந்த அனைத்து ஜனங்களுக்கும் பொதுவுடைமை ஆகிவிட்டது. இந்த முறைமை போர் பலத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவதில் எனக்கு சம்மதமில்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடத்தக்கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க சமத்துவம் சகோதரத்துவம் என்ற தெய்வீகத் தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குறித்து வெட்டு, பீரங்கி, துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கை என்று நான் நினைக்கிறேன்” (6)

மேலும் லெனின் போன்றவர்களை, பாரதி, மறைமுகமாக ஒன்றும் தெரியாத மூடர்கள் என்று கூறுகிறார்.

“கொலையாலும் கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரமமூடர்கள் என்று நான் கருதுகிறேன்” என்று கூறிவிட்டு, இதற்கடுத்த வரியிலே பாரதி கூறுகிறார்:

“இதற்கு நாம் என்னச் செய்வோம்! கொலையாளிகளை அழிக்க கொலைகளைத்தானே கைகொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலே அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறானக் கொள்கை.

கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமே ஒழியக் குறைக்காது. பாவத்தைப் புண்ணியத்தாலேத்தான் வெல்ல வேணடும்... கொலையையும், கொள்ளையையும் அன்பினாலும், ஈகையினாலும் தான் மாற்ற முடியும்.இதுதான் கடைசி வரை கைகூடிவரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து”.(7)

மேலே கண்ட பாரதியார் கருத்து மூலம் நாம் அறிந்து கொள்ளவது என்னவென்றால், பாரதி ஒரு மதவாதி; எனவே அவர் புரட்சி வழியை ஆதரிப்பதற்கு பதிலாக ‘தர்மகர்த்தா முறை’ சோசலித்தையே ஆதரிக்கிறார் என்று புலப்படும்.

மேலும் அவர் கூறுகிறார்:

“லெனின் வழி சரியான வழி இல்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோம் ஆதலால் இந்தியாவின் ஸாத்தியா ஸாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும், முதலாளிகளும் ஜரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் எழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே கொள்கைகளுடன் கொலைகளும், சண்டைகளும், பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசியைத் தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும்.”(8)

பாரதி மேலே கூறியபடி அதற்கான வழி வகைகளையும் கூறியுள்ளார். இக்கட்டுரையை எழுதும்போது பாரதி கடயத்தில் இருந்தார். எனவே கடயத்தையே உதாரணமாகக் கொண்டு பின்வரும் கருத்தை முன் வைக்கிறார்.

"கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதாரர்களும் பல சில்லறை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிர்வாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில்(மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்த கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்களுக்கு இன்னின்ன தொழில்களுக்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றும் மேற்பபடி தொழில் நிர்வாக சங்கத்தினர் தீர்மானம் செய்வார்கள்.

அந்தப்படி கிராமத்திலுள்ள அத்தனை பேரும் தொழில் செய்ய வெண்டும். அந்தத் தொழில்களுக்கு தக்கபபடியாக ஆண்,பெண், குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சன்னதியில் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கிறோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஆன விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்பு பட்டயம் எழுதி இந்தக் கோவிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின் படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள்.”(9)

பாரதியின் மேலே கண்ட இந்தப் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்றினால் அசல் நால்வருணம்தான் நீடிக்கும். நிலம் நில உடைமையாளர்களுக்குச் சொந்தமாகவே இருக்கும். சோற்றுக்காக ஏழைகள் தலைமுறை தலைமுறையாக அவர்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அவரவர் தகுதிக்கேற்ற வேலை என்று பாரதி சொல்வது குலத்தொழில் முறைப்படித் தொழில் நடைபெற வேண்டும் என்பதேயாகும். கூட்டு முயற்சியினால் வரும் பலனை எல்லோருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று பாரதி சொல்லவில்லை. ஆகவே இக்கூட்டு முயற்சியினால் விளையும் பலன் முழுக்கவும் நிலவுடைமையாளருக்கும், சமுதயத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் போய்ச் சேரும் என்பது வெளிப்படை.

நம் நாட்டில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பாரதி காணும் ஒரே தீர்வு “கலியுலகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டும். அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படும். அப்போது மாதம் மும்மாரி பொழியும். அப்போதுதான் பஞ்சமும் இராது என்பதுதான் அவரின் இறுதிகாலக் கொள்கையாகும்.” (10)

பாரதி, லெனினின் கொள்கையைக் கண்டித்து பல மாற்று வழிகள் கூறிக் கொண்டிருந்த காலத்தில்தான், பாரதியுடன் நெருங்கிப் பழகிய கனக.சுப்புரத்தினம் (பின்னாளில் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார்.) லெனின் புரட்சி ஏற்படுத்தியவுடன், லெனினைப் புகழ்ந்து பாடல் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடல் வரிகளாவன:

யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்
உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின்
அரசாள வந்த லெனினே!
சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின்
சுதந்திர மான லெனினே!
இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின்
இறையாகி வந்த லெனினே!
நறவூறுகின்ற மொழி பொருளர்க்கும் என்றவ்ழி
நடை கொண்டு வந்த லெனினே!
உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி
உரமாக்கி வைத்த லெனினே! (11)


இப்பாடலை, பாரதிதாசன் பாரதியோடு புதுவையிலிருந்த போதே, 1918 பிப்ரவரி மாதத்தில் ‘ஜனவிநோதினி’ எனும் ஏட்டில் எழுதியுள்ளார் எனப் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து எழுதியுள்ள கோ.கிருஷ்ணமுர்த்தி குறிப்பிட்டுள்ளார். (12) லெனின் அக்டோபர் புரட்சியை ஏற்படுத்தியதற்காக அவர் உயிருடன் இருக்கும் போதே அவரைப் பாரட்டிக் கவிதை எழுதிய ஒரே தமிழ்க் கவிஞன் கனக.சுப்புரத்தினம் ஒருவர்தான் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும்.

மேலும் 1924 இல் லெனின் மறைவுற்றபோது லெனினுக்கு இரங்கற்பா எழுதிய தமிழ் கவிஞர் பாரதிதாசன் ஒருவரே ஆவார்!

ஆனால் நம்நாட்டு பொதுவுடைமைவாதிகளோ, லெனின் கருத்துக்கு முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட பாரதியாரைப் புகழ்ந்து பேசுவதையும், எழுதுவதையுமே தொழிலாகக் கொண்டுள்ளார். ஆனால் பாரதிதாசனைப் பற்றி இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதை நான் கூறுவதைவிட நம் புரட்சிக் கவிஞர் கூறியுள்ளதே சிறப்பாக உள்ளது. அவை பின் வருமாறு:

நான் போதுவுடைமைக்குப் பகைவனா?

இது அறிவெனத் தெறிந்த நாள் முதல் புதுவையில்
சுதந்திரம் சமத்துவம் சகோத ரத்துவம்
மூன்றும் என்னுயிர் உண்ர்வில் ஊறியவை
என்பாட் டாலே வளர்ந்த இயக்கம்
தன்பாட் டுக்குத் தப்புத் தாளம்
பின்பாட்டுப் பாடும் பிழைப்புக் கெல்லாம்
என்னை விற்காத தால்ஏதும் அறியாத
கொள்ளைப் பயல்களைக் கொண்டேசுகின்றனர்
இவர்கள் யாரென எனக்குத் தெரியும்
புரட்சியின் பேரால் புரட்டு செய்பவர்கள்
தொழிற்சங் கத்தால் தோழர்கள் உழைப்பை
வழிப்பறி செய்யும் வலஇட சாரிகள்
தாய்மொழிப் பற்றும் தன்இனப் பற்றும்
தாய்நாட்டுப் பற்றும் சற்றும் இல்லதவர்கள்
முடிந்த வரைக்கும் முந்நூல் கொள்கையில்
அடிதொழு திருக்கும் அடிமைகள் மார்ச்சு லெனின்
நூல்களை எல்லாம் நுனிப்புல் மேய்ந்து
கால்படித் தமிழால் மேற்படி யாரின்
விளக்கெண்ணெய் மொழியால் விளங்காது செய்பவர்
உருசியன் ஒதுக்கும் ஒரு கோடிப்பணத்தையும்
வரிசையாய்ப் பகுத்து வாழ்வு நடத்திடும்
பொறுக்கி களாகப் போன தினாலே
குறீக்கொள் உயர்ந்த பொதுமைக் கொள்கை
வெறிச்சென்று பொனது; வெற்றியில் தாழ்ந்தது
பாட்டா ளிகளின் கூட்டம் குறைந்தது
மூட்டிய போர்க்குண்ம் முடம்கொண் டழிந்து
கண்டிதனைக் கழறுவ தாலே அறிவிலா
முண்டங்கள் என்ன முழுக்க முழுக்க
பொதுவுடைமைக் கெதிரி என்று முழங்குவர்.(13)

மேற்கண்ட சான்றுகாளால் பாரதியார் தொடக்கம் முதல் இறுதிவரை பொதுவுடைமைக் கொள்கையினை எதிர்த்து வந்தார் என்பதனை அறியலாம். இப்படிப்பட்ட பாரதியைத்தான் பொதுவுடைமைவாதிகள் தூக்கிப் பிடிக்கின்றனார். தீக்கதிர் பாரதி நூற்றாண்டுச் சிறப்பு மலரை வெளியிட்டது. ஆனால் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை கண்டுகொள்ளவேயில்லை. இப்படி இருந்தால் பொதுவுடைமை இயக்கம் எப்படி வளரும்.

அடிக்குறிப்புகள்

1. பாரதி தரிசனம் தொகுதி(1)நி.செ.பு.நி.ப.300
2. பாரதி தரிசனம் தொகுதி(1),ப.301
3. மேற்படி நூல், ப.302
4. மேற்படி நூல், ப.303
5. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.நி.ப.123
6. பாரதியார் கட்டுரைகள், ப.451
7. மேற்படி நூல், ப.453
8. மேற்படி நூல், ப.456
9. மேற்படி நூல், ப.454-458
10. பெ.தூரன்,பாரதி தமிழ், ப.244
11. பாரதிதாசன் கவிதைகள்,பெருமக்கள்,மணிவாசகர் பதிப்பகம்,ப.19
12. கோ.கிருட்டிணமூர்த்தி, பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு,ப.65
13. புரட்சி ஏடு 1.1.1963.

----------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் ஆறாம் அத்தியாயம் - பக்கம் 57 - 64

---------------நன்றி: "கீற்று"

0 comments: