Search This Blog

23.10.08

பார்ப்பனர்கள் மாநாடு போட்டு எங்களுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள் என்று தீர்மானம் போடுகிறார்கள்.



சென்னை - அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ராணி சீதை மன்றம் நேற்று மாலை - மறந்து போன - மறைத்து வைக்கப்பட்ட ஒரு புதையலைக் கண்டெடுத்து அரங்கேற்றமும் செய்தது என்றே சொல்ல வேண்டும்.

வகுப்புரிமை நாயகர் முத்தையா முதலியார் என்ற சொற்கள் எங்கோ கேட்டதுபோல சிலரின் நினைவுக்கு வரலாம்.

ஒவ்வொரு தமிழன் வீட்டில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தைக்கு முத்தையா என்றும், பெண் குழந்தைக்கு முத்தம்மாள் என்றும் பெயர் சூட்டவேண்டும் என்று தந்தை பெரியார் கூறும் அளவுக்கு ஒரு மனிதர் இருந்தார் என்றால், அவர் பார்ப்பனர் அல்லாதாருக்கு - தமிழர் களுக்கு அசாதாரணமாக எதையாவது கண்டிப்பாகச் சாதித்திருக்க வேண்டும் - அப்படித்தானே!

டாக்டர் சுப்பராயன் முதலமைச்சராக - நீதிக்கட்சியின் ஆதர வோடு நடைபெற்ற அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சராக விருந்த எஸ். முத்தையா முதலியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் (ஆசிரியர் முனைவர் ந.க. மங்கள முருகேசன்) வெளியீட்டு விழா அரங்கேற்றப்பட்டது.

வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் எனும் தலைப்பில் 204 பக்கங்களோடு வெளிவந்திருக்கிறது.

நீதிபதி கோகுலகிருஷ்ணன்

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு குஜராத் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.இரா. கோகுலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார்.

நாம் படித்ததற்கும், பட்டம் பெற்றதற்கும் - பதவிகளை அனு பவித்ததற்கும் வித்திட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளி யிடப்பட்டுள்ளது. அந்த மாமனிதரை தமிழர்களில் எத்தனைப் பேர் அறிந்து வைத்துள்ளனர் என்கிற நியாயமான ஆதங்கத்தை எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்தினார்.

நாங்கள் எல்லாம் சிறுவர்களாக, மாணவர்களாக இருந்த நேரத்தில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அரசியல் எல்லாம் எங்களுக்குத் தெரியவே தெரியாது; பிற்காலத்தில் இந்த இயக்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறப் போகிறது என்று கனவு கூடக் கண்டது கிடையாது.

அன்றும் சரி, இன்றும் சரி எங்களுக்குச் சமுதாயக் கண் ணோட்டம்தான்; பார்ப்பனர் அல்லாதார் வளர்ச்சிதான்.
பணத்தையும், பதவியையும் தேடி ஓடுகின்றார்களே தவிர பண்பாட்டை நோக்கி வருவதில்லையே!
இன்னும் ஒரு கூட்டம் தம் கலாச்சாரத்தை நம்மீது திணிக்கப் பார்க்கிறது. எல்லாமே தங்களைச் சுற்றிதான் நடக்கவேண்டும் என்ற ஆதிக்க நிலையிலிருந்து அவர்கள் இறங்கி வரத் தயாராக இல்லை.

நம் மக்களை நமக்கு எதிராகவே மோதவிட்டு வளமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஜாதி ஜாதி என்று அந்த வலைகளுக்குள் தமிழன் சிக்கிக் கொண்டு இருக்கின்றானே தவிர, அதனைக் கிழித்தெறிந்து வெளியில் வந்து நாம் தமிழர்கள் என்ற உணர்வுக்கு வரவேண்டாமா?
இன்றைக்கு நாம் படித்திருக்கிறோம் - பதவிகளை அனுபவிக் கிறோம் என்றால், அதற்குக் காரணம் மாமனிதர் முத்தையா முதலியார் அன்று 1928 இல் கொண்டு வந்த வகுப்புரிமை ஆணை தானே - இல்லை என்று மறுக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பினார்.
தமிழர்களிடத்திலிருந்து ஜாதி உணர்வு முற்றும் அழிந்து போய் இனவுணர்வு வேர்ப் பிடிக்கவேண்டும் என்ற ஏக்கம் அவர் உரையில் மின்னித் தெறித்தது.

நீதிபதி எஸ். நடராசன்


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். நடராஜன் அவர்கள் தம் வரவேற்புரையில், தமிழர்களின் கல்விக் கண்ணையும், பதவிக் கதவுகளையும் திறந்துவிட்ட முத்தையா முதலியார் அவர்களை உரிய முறையில் தமிழகம் - தமிழ்நாடு கவுரவிக்கவில்லையே - நினைவுகூரவில்லையே என்று அவரும் தம் ஆதங்கத்தைக் கூறினார்.

அவரைப் பற்றிய ஒரு நூலையாவது கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியில் தாம் ஈடுபட்டதையும், அதனை எழுதி முடிக்க பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்கள் அருமையாகக் கிடைத்ததையும், அதற்கு வழிகாட்டும் வகையிலும் உதவி செய்த வகையிலும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் கிடைத்ததையும் பெருமை பொங்கக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இனமானப் பேராசிரியர்

தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான இனமானப் பேராசிரியர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள் முத் தையா முதலியார் படத்தைத் திறந்து வைத்தும், அவர்தம் வாழ்க்கை வரலாற்று நூலினை வெளியிட்டும் அரியதோர் உரையினை நிகழ்த்தினார்.
நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றும்போது, வகுப்புரிமை நாயகர் முத்தையா முதலியார் அவர்களைப்பற்றி தமிழர்கள் அறியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.
இந்த அறியாத மக்கள் இதையும் அறியமாட்டார்கள். அதே நேரத்தில், தமிழர்களிடத்தில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தாலும், தமிழர்கள் கல்வி பெற்று பதவிகளை அனுபவித்தும் வளர்ந்த நிலையில் தானிருக்கிறார்கள். நீதியரசர் கோகுலகிருஷ்ணன் போன்றவர்கள் பெரிய பதவிகளுக்குச் செல்ல முடிந்திருக்கிறது; அதற்குரிய தகுதி அவரிடம் உண்டு என்றாலும், அதனை வைத்து அந்த இடங்களை அடைந்திருக்க முடியாது. தந்தை பெரியார், முத்தையா முதலியார் போன்ற நமது தலைவர்களின் முயற்சியால், உழைப்பால், திராவிட இயக்கம் ஊட்டிய உணர்வால் அந்தத் திறமைகளை அங்கீகரிக்கச் செய்யும் ஒரு நிலை ஏற்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

முத்தையா முதலியார் அவர்களுக்கு நினைவுச் சின்னம் என்பது - உண்மையிலேயே அவர் வாழ்ந்து காட்டிய, சாதித்துக் காட்டிய அந்த உணர்வுகள், கொள்கைகள் நம்மிடம் வீழாது இருப்பதுதான் நிரந்தரமான சின்னமாக இருக்க முடியும்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்த காலந்தொட்டு (1942) அவரை அறிந்தவனாக, அதன்பின் அவரிடம் பழகியவனாக இருந்திருக்கிறேன் என்றும், இனமானப் பேராசிரியர் அவர்கள் மலரும் நினைவுகளை உதிர்த்தார்கள்.

ஒரு காலகட்டத்தில் பார்ப்பனர்கள் மட்டும்தான் படித்திருந்தனர் - பதவிகளில் இருந்தனர். அப்படியிருந் தவர்கள் தம் குடும்பத்தவர்களை, உற்றார் உறவினர்களைத் தேடித் தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்திக் கொள்ளும் போக்குடையவர்களாக அவர்கள் இருந்தனர் என்பதையும் நிதியமைச்சர் அவர்கள் கோடிட்டும் காட்டினார்கள்.

அது கல்லுப் போன்ற உண்மையாகும். அதற்கு ஆயிரம் ஆயிரம் எடுத்துக்காட்டுகளை பட்டியலிட்டே கூற முடியும்.

அப்பொழுது சென்னை மாகாணம் என்பது ஆந்திராவிலே ஒரு பகுதி, கருநாடகத்திலிருந்து ஒரு பகுதி, கேரளாவில் மலபார் பகுதிகள் எல்லாம் அடங்கிய பகுதிதான்.
நெல்லூர் மாவட்டம், வெங்கட்ரமணையா என்ற பார்ப்பனர் உயர் பதவியில் இருந்தார். தம் அதிகாரச் செல்வாக்கைப் பயன்படுத்தி தம்முடைய குடும்பத்தினர், உறவினர்கள் 49 பேர்களுக்கு அரசு உத்தியோகங்களைத் தேடிக் கொடுத்தாரே!
பாஷ்யம் அய்யங்கார் வகையறாவைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.


1861-லிருந்தே 1921 வரை அந்த அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த அய்ந்து பேர் சட்டமன்ற உறுப்பினர்கள்; இருவர் அட்டர்னி ஜெனரல்கள்; மூவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள்; மூவர் ஸ்மால் காஸ் கோர்ட் நீதிபதிகள்; மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரைகளால் உருவாக்கப் பட்ட ஆட்சியில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதல் உள்துறை அமைச்சர். மூவர் மாநில அரசின் துணைச் செயலாளர்கள்; அதற்கு மேலும் தாசில்தார்கள்; துணை ஆட்சியர்கள்; அரசு வழக்கறி ஞர்கள், இத்தியாதி... இத்தியாதி... கணக்கில் அடங்காது.
சர்.சி.பி. இராமசாமி அய்யர் குடும்பம் மட்டும் என்ன? தஞ்சாவூர் முதல் மலபார் வரை அவர் குடும்பம் பதவி வளங்களில் சுகித்துக் கிடந்ததே!

கிருஷ்ணராவ் என்ற பார்ப்பனர் ஹுசூர் செரஸ்தார் என்ற மாவட்ட ஆட்சியருக்கு இணையான பதவியில் இருந்தார் - அதனைப் பயன்படுத்தி கடப்பை மாவட்டத்தில் மட்டும் தம் உறவினர்களான 116 பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் பெற்றுக் கொடுத்தார்.
அதே பார்ப்பனர் அனந்தப்பூர் மாவட்டத்தில் 106 உறவினர்களுக்கு அரசுப் பதவிகள் கிட்டுமாறு செய்தார்.


அந்த நிலைகளை அறிந்தால்தான் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார்களின் வளர்ச்சி எத்தகையது? அதற்குக் காரணமான நம் திராவிட மூதாதையர்களின் உழைப்பும், முயற்சியும் எத்தகையது என்பது விளங்கும். இனமானப் பேராசிரியரின் உணர்வூட்டும் பேச்சின் பின்னணிகள் இவையாகும்.

பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன்

மக்களவை உறுப்பினரும், இந்திய யூனியன் முசுலிம் லீக்கின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்கள் உணர்வின் ஊற்றாக வார்த்தைகளை வடித்துத் தந்தார்.

இந்தத் தலைமுறைக்கு இந்த நூல் சென்றடையவேண்டும். என்னுடைய தரப்பில் 25 நூல்களைப் பெற்றுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

மேலும் ஒரு வரலாற்றுக் குறிப்பு அவர் உரையில் கிடைத்தது. அரசியல் நிர்ணய சபைக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களை அனுப்பி வைக்க அவர் பிறந்த மகாராட்டிரம் முன்வரவில்லை; அதேநேரத்தில் வங்காளத்திலிருந்து முசுலிம் லீக்கைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்து அண்ணல் அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபைக்கு அனுப்பி வைத்தனர் என்று கூறினார்.


தந்தை பெரியாரும், முத்தையா முதலியார் போன்றவர்களும் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால், நாம் மனிதர்களாக அங்கீகரிக்கப்பட்டு இருப்போமா என்பது சந்தேகம்தான் என்று மிக உருக்கத்தோடு உணர்வின் பிழம்பாகவே பேசினார்.

அமைச்சர் மாண்புமிகு பரிதி இளம்வழுதி

தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மாண்புமிகு பரிதி இளம்வழுதி அவர்கள் தம் நன்றி உணர்வைப் புலப்படுத்திக் கொண்டார்.

நூற்றுக்கு 97 பேர்களாக இருக்கக் கூடிய நாம், ஏன் இன்னும் போராடவேண்டியுள்ளது?
நாம் படிக்கக் கூடாது! படித்தால், நாக்கை அறுக்கவேண்டும்; மற்றவர்கள் படிப்பதைக் கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தார்கள். கல்வி பக்கம், உத்தி யோகம் பக்கம் நம்மை நெருங்கவிடாமலே தடுப்பு அரணை உண்டாக்கி வைத்தார்கள் - அதனை எல்லாம் உடைத்தெறிந்த பெருமக்கள்தான் தந்தை பெரியார், முத்தையா முதலியார், அறிஞர் அண்ணா, கலைஞர், ஆசிரியர் வீரமணி போன்றவர்கள்.

பிரம்மாவின் நெற்றியில் பிராமணன் பிறந்தான்; தோளில் சத்திரியன் பிறந்தான்; இடுப்பில் வைசியன் பிறந்தான்; சூத்திரன் பாதங்களில் பிறந்தான் என்று எழுதி வைத்தனர்.
எங்களைப் போன்றவர்களை அதற்கும் கீழே - வைக்க இடம் இல்லாமல் பூமிக்குள்ளே வைத்திருந்தனர்.
அதனால்தான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அடுக்குமாடிகள் கட்டிக் கொள்ள விரும்பும் மக்களுக்கு அனுமதி வழங்கும் துறைக்கு என்னை அமைச்சராக ஆக்கியுள்ளார் என்று வெகு அழகாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

தமிழர் தலைவர் கி. வீரமணி

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி இது. ஏதோ சம்பிரதாயமான வார்த்தையல்ல - உண்மையிலேயே வரலாற்றை உண்டாக்கிய வரலாற்று நிகழ்ச்சிதான்.

தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் நாம் தன்மானம் பெற்றிருக்க முடியாது - முத்தையா முதலியார் இல்லாவிட்டால் தமிழர்கள் படித்தி ருக்க முடியாது - படித்திருந்தாலும் பதவிப் பக்கம் சென்றிருக்கவும் முடியாது.

இன்றைய நிலை என்ன? பார்ப்பனர்கள் மாநாடு போட்டு எங்களுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள் என்று தீர்மானம் போடுகிறார்கள்.

இட ஒதுக்கீடு கூடாது என்றவர்கள், அதனை ஒழித்துக் கட்டவேண்டும் என்றவர்கள் இட ஒதுக்கீடு தேவை என்று மனு போடும் நிலை இன்று.

என்றாலும், இன்னொரு பக்கத்திலே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம்வரை சென்று தடை வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

1928 இல் முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்த நேரத்தில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடுக்கு வழி செய்தார்.

உலகில் அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதி என்பது இடம்பெற்றிருப்பது இந்தியாவில்தான்.
அதற்குக் காரணமாக இருப்பது தமிழ்நாடுதான் என்பதை மறந்துவிடக் கூடாது.

1947 இல் கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில், முத்தையா முதலியார் அவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அப்பொழுது நாங்கள் எல்லாம் தொண்டர்களாக இருந்து அவர்களை வரவேற்கும் வாய்ப்பு பெற்றேன்.
தமிழ் இனத்துக்கு கண்ணொளி தந்த முத்தையா முதலியார்பற்றி பரவலாகத் தெரியாமல் இருக்கலாம் - எப்பொழுதும் கட்டடத்தின் முகப்புகளும், வனப்புகளும்தான் கண்களுக்குத் தெரியும்; அஸ்திவாரம் கண்களுக்குத் தெரியாது. அந்த அஸ்திவாரம் இல்லாவிட்டால், அந்தக் கட்டடங்களே இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த நூலை முனைவர் பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்கள் வெகு சிறப்பாக படைத்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் திடலில் தனியாக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அவர் பாராட்டப்படுவார்.
நமது இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களால் பல ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டது வகுப்புரிமைப் போராட்டம் என்ற இந்தப் புத்தகம்.
அந்த நூலுக்கே மதிப்புரை தந்துள்ளார் நமது முத்தையா முதலியார் அவர்கள். அந்த நூலினை விரைவில் திராவிடர் கழகம் வெளியிட இருக்கிறது - அதற்கான அனுமதியையும் பேராசிரியரிடம் பெற்றுவிட்டோம்.

வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் என்ற இந்த நூல் நூலகங்களில் எல்லாம் இடம்பெறவேண்டும்; பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டமாக வைக்கப்படவேண்டும். முதலில் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்படும்.
வகுப்புரிமைச் சிற்பி முத்தையா முதலியார் அவர்களுக்கு உரிய நினைவுச் சின்னத்தைக் கண்டிப்பாக உருவாக்கவேண்டும்.

சென்னையில் முக்கியமான ஓரிடத்தில் அவர் சிலையை திராவிடர் கழகம் நிறுவும் - அந்தக் குழுவுக்கு நீதியரசர் நடராஜன் அவர்களே புரவலராக இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, மத்திய அரசின் சார்பில் நினைவு அஞ்சல்தலை வெளியிடவும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டார் தமிழர் தலைவர் கி. வீரமணி.

நூலாசிரியர் முனைவர் மங்கள முருகேசன்

நூலினை சிறப்பாக எழுதிய முனைவர் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் அவர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் நிதியமைச்சர் மாண் புமிகு க. அன்பழகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

நூலாசிரியர் தம் ஏற்புரையில், நான் இதுவரை இரு நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருந்தாலும், மூன்று நூல்களை எழுதியதற்காக நான் பெருமைப்படுவதுண்டு என்றார்.
1. சுயமரியாதை இயக்கம்பற்றி நான் எழுதிய நூல் - எங்கு சென்றாலும் அந்நூல்தான் என்னை அடையாளப்படுத்துகிறது.
2. வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் என்ற இந்த நூல்
3. பாரதியார்பற்றி நான் எழுதிய நூல்; குடிஅரசு இதழில் தொடக்கக் காலகட்டத்தில் பாரதியார் பாடல்களை தந்தை பெரியார் வெளியிட்டதுதான் பாரதியார்பற்றி நான் நூல் எழுதக் காரணம் என்று குறிப்பிட்ட பேராசிரியர், ஆசிரியர் வீரமணி அவர்கள் முத்தையா முதலியார்பற்றிய இந்த நூலினை எழுதிட முக்கிய வழிகாட்டியாக இருந்தார் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.

முத்தையா முதலியார் அவர்களின் துணைவியார் மறைந்தபோது தந்தை பெரியார் சென்னை மயிலாப்பூரிலிருந்து சுடுகாடுவரை நடந்தே சென்றார் என்ற தகவலையும் நூலாசிரியர் எடுத்துச் சொன்னது பலருக்கும் புதிய செய்தியாகவே இருந்தது.

நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் 1921 ஆம் ஆண்டிலும் (அரசு ஆணை எண் 613 நாள்: 16.9.1921) 1922 ஆம் ஆண்டிலும் (ஆணை எண் 658 நாள்: 15.8.1922) வகுப்புரிமைக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், வகுப்புரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது என்பது 1928 இல் எஸ். முத்தையா முதலியார் பிறப்பித்த ஆணைதான் (எண் 744 நாள்: 13.9.1928).
அரசு நிர்ணயம் செய்வது 12 இடங்கள் என்றால், அதில்
இந்து பார்ப்பனர் அல்லாதாருக்கு - 5
பார்ப்பனர்களுக்கு - 2
முகம்மதியர்களுக்கு - 2
கிறித்துவர்களுக்கு
(ஆங்கிலோ இந்தியர் உள்பட) - 2
மற்றவர்களுக்கு
(ஆதிதிராவிடர் உள்பட) - 1 மொத்தம் 12
அன்று வகுப்புரிமைச் சிற்பி அடியெடுத்துக் கொடுத்தார்; இன்று தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் 69.
விதையூன்றிய அந்த வித்தகருக்கு வீர வணக்கம் செலுத்துவோம் - அதுவும் அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட 80 ஆம் ஆண்டில் மிகப் பெருமையுடன் அவரை நினைவு கூர்வோம்!



--------------22-10-2008 "விடுதலை" இதழில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: