Search This Blog

24.10.08

தீபாவளிப் பண்டிகை கொண்டாடுபவர்களே? எது தீபாவளி?

தீபாவளியா?...

இந்தத் தீபாவளி பற்றிய ஒவ்வொரு செய்தியும் ஒன்றுடன் ஒன்று இடிக்கிறது. இது எல்லாவற்றையுமவிடக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை அன்று. தீபாவளி கொண்டாட்டமும் ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு விதமான வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் உடையதாக இருக்கிறது. உண்மையை உரக்கச் சொல்வது என்றால் தீபாவளியின் தோற்றம் பற்றிய புதிய எந்த விவரமும் கடவுள் நம்பிக்கையுடையவரும் நம்பும்படியானதாக இல்லை.

வடநாட்டில் தீபாவளி

வட நாட்டில் இந்த விழாக் கொண்டாடப்படுவதற்காகக் கூறப்படும் காரணங்கள் பலவாக இருக்கின்றன. எதை ஏற்பது, எதை விடுவது என்று புரியாமல் குழப்பம்தான் பக்தர்களுக்கு மிஞ்சுகிறது.

வடக்கு, மேற்கு மாநிலங்களில் இராமாயணக் கதையில் பேசப்படும் இராவணனை ராமன் வெற்றிபெற்று இலங்கையிலிருந்து அயோத்தி திரும்பிய நாள்தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்.

இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை முடித்துச் சீதையுடனும், தம்பியுடனும் அயோத்தி திரும்பிய நாளை மக்கள் கொண்டாடினர். நதி நீராடி புத்தாடை அணிந்து அறுசுவை உணவு உண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அந்த நாளே தீபாவளி என ஆண்டுதோறும் அதே நாளைத் தீபாவளித் திருநாளாக அயோத்தி மக்கள் கொண்டாடினர்.

இன்னொரு கதை இராமனின் காலத்திற்கு முன்னேயே தீபாவளி கொண்டாடப்பட்டது என்று கூறிச் செல்கிறது. அதையும் பார்ப்போம். சீதை ராமனிடம் இப்படிக் கேட்டாளாம், நாம் வனவாசம் முடித்து அயோத்திக்கு வந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியாகக் கொண்டாடு கிறார்களே, இதற்கு முன் தீபாவளி கொண்டாடப்பட்டதா?

அப்போது ராமன் அரிச்சந்திரன் கதையை கூறிக் கடைசியில் அரியணையில் அரிச்சந்திரன் அமர்ந்த நாளில் மக்கள் விளக்கேற்றிப் புத்தாடை அணிந்து கொண்டாடினர் என்று கூறுவார். மராத்தியம், குஜராத் ஆகியவற்றில் திருமால் எடுத்த அவதாரங்களில் வாமனன் அவதாரமெடுத்துப் பார்ப்பன உருக்கொண்டு மகாபலிச் சக்ரவர்த்தியின் தலையை மூன்றாம் அடியில் வைத்துப் பாதாளத்தில் தள்ளிய நாள்தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்.

மூன்றாவது கதை - நரகாசுரன் கதை


மூன்றாவது கதை நாம் அறிந்த நரகாசுரன் கதை. நரகாசுரன் தவமிருந்து பிரம்மாவிடம் பெற்ற வாத்தினால் அவரைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாரும் கொல்ல முடியாதாம். நரகாசுரனின் தாய் சத்யபாமா என்றும், அவளே நரகாசுரனுக்கும், கண்ணனுக்கும் நடைபெற்ற போரில் தேர் ஓட்டும் சாரதியாக விளங்கியது. சத்யபாமா, திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன்தான் நரகாசுரன்.

போரின்போது நரகாசுரன்விட்ட அம்பு பட்டுத் துவண்டு நிலை குலைந்து தேரில் சாய்ந்தான் கிருஷ்ணன். அப்படி ஒரு நாடகமாம். கணவன் கிருஷ்ணன் நிலை கண்டு சத்யபாமா கொதித்தெழுந்தாள். வில்லை எடுத்தாள். நாணேற்றி நரகாசுரனை வீழ்த்தினாள் சத்தியபாமா. மரணத் தருவாயில் நரகாசுரனும் சத்திய பாமாவும் வேண்டியபடி அன்று நரக சதுர்த்தி தினமாகப் பூவுலகில் மக்கள் கொண்டாடக் கண்ணன் அருள் பாலித்த நாள்தான் தீபாவளியாம்.
இப்படி ஒரு கதை.

மத்தியில் ஒரு புதுக்கதை

மைய இந்தியாவில் இக்கதைகள் தவிர இன்னொரு புதுக்கதை முளைத்திருக்கிறது. மத்திய இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மழை வேண்டி இந்திரனைக் கோகுலத்தவர் வழிபட்டனர். இந்திரனை வழிபட்ட மக்களைக் கண்ணன் கோவர்த்தன மலையை வழிபட வைத்ததால், அம்மக்கள் மீது கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையையும், புயலையும் உருவாக்கியதாகவும், தன் விரலால் கோவர்த்தன மலையைக் கண்ணன் குடையாகப் பிடித்தான் என்றும் அந்த நாளே தீபாவளி என்றும் கதையை நம்பித் தீபாவளி கொண்டாடப் படுகிறது.

---------------- நன்றி: "விடுதலை" 24-10-2008

0 comments: