Search This Blog

16.10.08

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவுதலைவரவர்களே! தோழர்களே!

பாமர மக்கள் கலியாணம் என்பதை வீட்டு வேலைக்கு ஒரு பெண் ஆள் (வேலைக்காரியை) வைப்பதுபோலவே கருதுகிறார்கள்.

புருஷன் அப்படியே கருதுகிறான். புருஷன் வீட்டாரும் அதுபோலவே தங்கள் வீட்டு வேலைக்கு ஒரு பெண் கொண்டுவருவதாகவே கருதுகிறார்கள். இது மாத்திரமா? பெண் வீட்டாரும் தங்கள் பெண்ணை வீட்டு வேலைக்கே தயார்செய்து விற்றுக் கொடுக்கிறார்கள்.

பெண்ணும் தான் ஒரு வீட்டுக்கு வேலை செய்யப் போவதாகவே கருதுகிறாள்.

பெண்ணின் கடமையும் சமையல் செய்வது, பாத்திரம் விளக்குவது, வீடு வாசல் கூட்டி மெழுகிச் சுத்தம் செய்வது இவைகளோடு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டு அவர்களை வளர்ப்பது ஆகியவைகளையே முக்கியமாய்க் கொண்டதாக இருக்கிறது.

மதமும் சாஸ்திரங்களும் கலியாணத்தைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்று பார்த்தால் பெண் சுதந்திரமற்றவள்; அவள் காவலில் வைக்கப்படவேண்டியவள் என்பது ஒருபுமிருக்க, கலியாணம் செய்வதானது மனிதன் புத் என்னும் நரகத்திற்குப் போகாமல் இருப்பதற்கு ஆகவும், பெற்றோர்களுக்கு இறுதிக்கடன், திதி முதலியவைகள் செய்ய ஒரு பிள்ளையைப் பெறவும் கலியாணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறது.

ஆகவே, கலியாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நுகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்திற்கு இளைப்பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவுமே ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதைப் பெரும்பாலோர் சிந்திப்பதேயில்லை.

கலியாணப் பொருத்தம் பார்க்க வேண்டிய பொறுப்பு மணமக்களுக்கே உண்டு என்பதையும் கருதுவதே இல்லை. கலியாணம், மணமக்கள் எத்தனத்தினாலேயே ஆக வேண்டியது என்பதையும் ஒப்புக்கொள்ளுவதே இல்லை.

கலியாணம் என்றால், அது தெய்விகமானது, தெய்வ எத்தனமானது, தெய்வமே பொருத்தி வைக்க வேண்டியது என்று கருதுவதும் கலியாணத்தில் எப்படிப் பட்ட பொருத்தம் பொருந்தாப் பொருத்தமானாலும், அதனால் எப்படிப்பட்ட துன்பமும் தொல்லையும் அனுபவமானதும் கண்கூடான பிரத்தியேக அனுபவமாய் இருந்தாலும் அதைத் தெய்வ எத்தனம், தெய்வ சித்தம் என்கின்ற பெயரால் அனுபவிப்பதும், அப்படி நினைத்து திருப்தியடைவதுமாய் இருக்கின்றன.

கலியாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை - சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமே ஒழிய அடிமை வாழ்க்கை - மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை.


நாம் ஆயிரம் சமாதானம் சொன்னாலும், பெண்ணை அடிமையாகவே - ஒருவனுடைய சொத்தாகவே கருதுகிறோம் என்பதோடு, பெண்ணை தமது போகப் பொருளாகவே கருதுகிறோம். அதற்கு ஒரு தனி உயிரும் மனமும் இருப்பதாகக் கருதுவதில்லை. இது இன்று உலக சித்தாந்தமாய் இருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு பெண்சாதியாய் இல்லாத - கலியாணமில்லாத பெண்ணுக்கு மாத்திரம் சுதந்திரம் என்பது சிறிதாவது உண்டு என்று சொல்லலாமே தவிர, மற்றபடி கலியாணமான பெண்கள் என்றால் அடிமைகளாகவே மதிக்கப்படுகிறார்கள்.

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்துகொண்டே வருகின்றது.

தாயின் குணம், தாயின் தன்மை பெரிதும் பிள்ளைக்குப் பிறவியிலேயே வருகின்றது என்பதை யார் மறுக்கமுடியும்? மக்களின் குணம் 100க்கு 90 பாகம் சரீர அமைப்பைப் பொறுத்ததேயாகும். சரீர அமைப்புக்குத் தாய் தகப்பன் சரீர அமைப்பே பெரும்பாகம் காரணமாகும். ஆகையால், இந்த அடிமைப் பெண் சுதந்திர உணர்ச்சியுள்ள பிள்ளையைப் பெறமுடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கல்வி, அறிவு, செல்வம் ஆகியவைகள் இல்லாத தாயானவள் நல்ல தாராள புத்தியும் சமத்துவ ஞானமும் திருப்தியான மனம் உள்ள பிள்ளைகளை எப்படிப் பெறமுடியும் என்பதை உணர்ந்தோமேயானால், மனித சமூகம் சுதந்திரமாகக் கவலையற்று ஏன் வாழவில்லை என்பது தானாகவே விளங்கும்.

------------------ தந்தைபெரியார் - கீழையூரில் 10.6.1935லும், திருபுவனத்தில் 11.6.1935லும், திருச்சிராப்பள்ளியில் 13.6.1935லும் சொற்பொழிவு - "குடிஅரசு", 16.6.1935

0 comments: