Search This Blog

23.10.08

நெற்றிக்குறியின் தத்துவம் என்ன?





மூடநம்பிக்கை என்பவைகளில் முக்கியமானவை மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் முதன்மையானவையாகும்.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு மனிதன் சிவனையோ, விஷ்ணுவையோ, இராமனையோ, கிருஷ்ணனையோ, கந்தனையோ, சுப்பனையோ இருப்பதாகவும், அவர்களைக் கடவுளர்களாகவும் நம்பிக்கொண்டு சாம்பலையோ, மண்ணையோ நெற்றியில் பட்டையடித்துக் கொள்வதன் மூலம் பக்தி செலுத்திக் கொண்டு, நான் சமதர்மவாதி என்று சொல்லுவானேயானால் அவன் உண்மையான, யோக்கியமான சமதர்மவாதியாக இருக்க முடியுமா? கொள்ள முடியுமா? முடியும் என்று கருதுகிறவர்கள் அறிவாளிகளாக இருக்க முடியுமா?


ஒரு மனிதன் முதலாவதாகத் தனது நெற்றியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியான அறிவில்லாத ஒரு மனிதன் எப்படிச் சமதர்மத்திற்கேற்ற அறிவுடையவனாகக் கருதப்பட முடியும்? அறிவின்மை என்பதைக் காட்டுவதுதானே நெற்றிக்குறி? நெற்றிக்குறியென்றால் மூளைக்குறி என்று தானே பொருள்?

நான் நெற்றிக்குறி என்று சொல்லுவதில் குறி மாத்திரமல்ல; அவற்றுள் அடங்கியிருக்கும் தத்துவங்களையே குறிகொண்டு சொல்லுகிறேன். அதாவது, மத சம்பந்தமான முட்டாள்தனம், மூட நம்பிக்கைகள் யாவற்றையும் கசக்கிப் பிழிந்து, காய்ச்சிச் சுண்ட வைத்து இறக்கிய சத்துதான் நெற்றிக்குறி! அதற்கு வேறு பொருள் என்ன சொல்ல முடியும்?
சமதர்மம் பேசும் காங்கிரசுக்காரர்களோ, மற்ற கட்சிக்காரர்களோ, மதக் கருத்தென்ன? நெற்றிக்குறிக் கருத்தென்ன? என்பதைச் சிந்திக்கிறார்களா?

நான் ஒரு உண்மைச் சமதர்மவாதியென்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் கழகத்-தாரும், என்னை உண்மையாய்ப் பின்பற்றுகிறவருங்கூட சமதர்மப் போக்குக்காரர்கள் என்றே சொல்லுவேன். எங்கள் எல்லோருடைய நெற்றியும் சுத்தமாக இருக்கும்.


ஆகவே, உண்மையான சமதர்மவாதிகள் தன்னை தன் அறிவை, தன் நெற்றியைச் சுத்தப்-படுத்திக்கொள்ள வேண்டும்.

----------------------- தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம்-15.12.1969

0 comments: