Search This Blog

20.10.08

இராமன் குடிகாரன் , கறி (மாமிசம்) தின்றான் என்பது இட்டுக்கட்டி எழுதிய கற்பனையின் பாற்பட்டதல்ல.



7.5.1971 அன்று சென்னையில் பகுத்தறிவாளர் கழகச் சார்பில் தமிழக அமைச்சரவைக்குப் பாராட்டு விழா நடத்தப் பெற்றது. தந்தை பெரியார், முதல்வர் கலைஞர், அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், அமைச்சர் திருமதி. சத்தியவாணிமுத்து, அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், அமைச்சர் க. ராசாராம் ஆகியோர் கலந்துகொண்ட பாராட்டு விழாவில் நானும் உரையாற்றினேன்.

திருவாரூர் மாநாட்டில், குடிகார இராமன், விபச்சாரி சீதை வேடமணியத் தடைவிதித்த நிலையில் அந்த ஊர்வலத்தையே தந்தை பெரியார் அவர்கள் ரத்து செய்த நிலையில், மாநாட்டில் (16.5.1971 இல்) ஆவேசமடைந்த தோழர்களை தந்தை பெரியார் அவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

திருவாரூரும்- தி.மு.க. அரசும் என்ற 17.5.1971 ஆம் விடுதலை தலையங்கம் வருமாறு:-

திருவாரூரில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டினையொட்டி நடைபெறவிருந்த மாபெரும் ஊர்வலம், தி.மு.க. ஆட்சியினரால் அந்த ஊர்வலத்தில் குடிகார இராமன், விபச்சாரி சீதை வேடமணிந்து அந்த இராமன் குடித்துக் கொண்டும் மாமிசம் தின்றுகொண்டும் வரும் காட்சியை நடத்தக்கூடாதென தடைவிதிக்கப்பட்டது.

மக்களுக்கு அறிவூட்டவும், தெய்விகத்தன்மை என்ற பூச்சாண்டியைப் போக்கி தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும்தான் கழக மாநாட்டு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம் என்பதால் தந்தை பெரியார் அவர்கள் அரசினரின் போக்கு குறித்து மிகுந்த வேதனை அடைந்து அந்த ஊர்வலத்தையே ரத்து செய்து பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்களை அமைதிப்படுத்தினார்கள்.

இந்த ஆட்சி பகுத்தறிவாளர் ஆட்சி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஆட்சி மட்டுமல்ல; பகுத்தறிவாளர் கழகப் பாராட்டு விழாவில் 7.5.1971 அன்று முதல்வர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதுபோல - பகுத்தறிவுப் பிரசாரத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதைக் கடமையாகக் கொண்டுள்ள ஒரு ஆட்சியுமாகும் என்ற நிலையில், தந்தை பெரியார் தம் 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் நிகழாத ஒரு சம்பவம் இப்படி நடைபெற்றது குறித்து அவர்களே மிகுந்த வேதனையும் சங்கடமும் படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியது, பல லட்சக்கணக்கான பகுத்தறிவாளர்களை, திராவிடர்கழகத் தோழர்களை, சுயமரியாதை இயக்க வீரர்களை மிகவும் ஆத்திரத்திற்குள்ளாக்கிய ஒரு செயலாகும்.

இராமன் குடிகாரன் என்பதோ, கறி (மாமிசம்) தின்றான் என்பதோ தந்தை பெரியார் அவர்களோ திராவிடர் கழகமோ இட்டுக்கட்டி எழுதிய கற்பனையின் பாற்பட்டதல்ல. வால்மீகி இராமாயணத்தில் ஆதாரப்படி உள்ள செய்திகளாகும். இவ்வேடம் அருவருப்பு என்றால், இது கூறும் இராமாயணம் புனித நூல் என்று மக்களிடையே பரப்பிடுவது மட்டும் சட்டப்படி அனுமதிக்கக்கூடிய காரியமா? இராமாயணத்தை அனுமதித்து அதை இன்னமும் புதுப்புது பதிப்புகள் போட்டு விற்கும் நிலையில், இப்படி ஒன்றை ஊர்வலத்தில் காட்டுவது எப்படித் தவறாகும்? இது எப்படி மற்றவர் மனதைப் புண்படுத்தும்? இது சட்டப்படி (இ.பி.கோ. 295 ஏ செக்ஷன்படி) குற்றம் என்றால், இராமாயணத்தைக் கண்டித்து விளக்கிப் பேசுவதும் எழுதுவதும் கூடக் குற்றம் என்று வாதிட இடமேற்பட்டுவிடும். பகுத்தறிவாளர்களும், இந்த ஆபாசத்தை, பக்தி மூடநம்பிக்கையை மக்களுக்கு சுட்டிக்காட்டி அறிவு கொளுத்தும் திராவிடர் கழகத்தினரும் பிறகு பேன் குத்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்?


சட்டப்படி அதில் ஓட்டைகள் இருக்கின்றன என்றாலும் நாம் கேட்பதெல்லாம் பிறர் மனம் புண்படாமல் எந்தப் புரட்சியாளராகவது, சமூக சீர்திருத்தவாதியாவது காரியமாற்ற முடியுமா?

ராஜமானியத்தை ஒழித்தால் ராஜாக்கள், மனம் புண்படுகிறது! சோஷலிசம் என்றால், பணக்காரர் மனம் புண்படுகிறது. நிலச்சீர்த்-திருத்தம் - நிலவுடமைக்கு உச்சவரம்பு என்றால், நிலப்பிரபுக்களுக்கு மனம் புண்படுகிறது. நீ ஏன் உயர்ஜாதி நான் ஏன் கீழ் ஜாதி? என்றால், பார்ப்பான் மனம் புண்படுகிறது என்று கூறலாமே! அதற்காக சமுதாய மாற்றப் பணியை விட்டு விட முடியுமா?


திராவிடர் கழகம் போன்ற தீவிர - ஓட்டு வேட்டையாட வேண்டிய அவசியமற்ற - சமுதாயப் புரட்சி இயக்கத்தின் வேகத்திற்கு ஆட்சியாளர் வரவேண்டும் என்பதல்ல - நமது கோரிக்கை. அது முடியாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பார்ப்பனத் தலைவர் ஆச்சாரியார் ஆண்ட போது இல்லாத அளவுக்கு - பழைய காங்கிரஸ் ஆட்சியான காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் ஆட்சிக்காலத்தில் நடைபெறாத ஒரு செயல் - ராமன், சீதை வேடத்திற்குத் தடை தி.மு.க. ஆட்சியில் நடைபெறுகிறது என்றால், தந்தை பெரியார் முதல், இயக்கத்தின் சாதாரணத் தொண்டர் உள்ளம்வரை எவ்வளவு குமுறும், கொதிக்கும் என்பதை ஆட்சியாளர் சிந்திக்கவேண்டும். சேலம் மாநாட்டு நிகழ்ச்சியைப் பெரிது-படுத்தியும்கூட அதற்குப் பிறகே சட்ட-மன்றத்தில் 184 இடங்களைத் தி.மு.க. பெற்றது என்றால் எதனால்? ஆத்திக சிரோன்மணிகள், பார்ப்பனர்கள் இவர்கள் தயவாலா? ஓட்டாலா? இல்லையே! தந்தை பெரியார் அவர்கள் கொளுத்திய இன உணர்ச்சி, பகுத்தறிவுக் கொள்கை காரணம் ஆக அல்லவா?

இந்நிலையில் ஆட்சியாளர் ஏன் சில அதீதக் கற்பனைகளில் ஈடுபட்டு, ஆஸ்திகர்களுக்கும், ஆச்சாரியார் கூட்டத்திற்கும் உள்ள அக்கறையை விட அதிக அக்கறைகாட்டி பகுத்தறிவாளர் தம் அதிருப்திக்கு ஏன் ஆளாக வேண்டும்? ஆட்சியாளர் நடுநிலையில் நின்றால் கவலை இல்லை. ஆனால், ஆத்திகத்தின் அதிதீவிர வக்கீலாக மாறிவிட்டால், அதனைத் தந்தை பெரியாரோ, அவர்தம் வழி நடப்-பவரோ எப்படிப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியும்? வேதனை! சகிக்க முடியாத வேதனை!!

திருவாரூரில் மீண்டும் தேர் ஓடவேண்டும் என்பதற்காக சுமார் 30 லட்ச ரூபாய் செலவான ஒரு செயலை சகித்தோமே அது அளவுக்கு மீறிய சகிப்புத் தன்மையேயாகும். இந்நிலையில் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போன்று, அந்த ஊரில் இராமன், சீதை வேடமணிந்து கூட ஊர்வலம் வரக்கூடாது என்று தடுத்தால், இவ்வுணர்ச்சியை மேலும் தீவிரப்படுத்த அதற்குப் பெட்ரோல் ஊற்றுவதாகுமே தவிர, வேறில்லை. தடுப்புக்கு ஒருபோதும் உதவாது.


எனவே, ஆட்சியாளர்கள் தமிழ்நாடெங்கும் திருவாரூர்களை உருவாக்கினால், அது விரும்பத்தக்கதல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவது நமது கசப்பான ஆனால் இன்றியமையாத கடமை ஆகும்.


-------------- தி.க.தலைவர் மீ.கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் அய்யாவின் அடிச்சுவட்டில்... இரண்டாம் பாகம் (5) லிருந்து ஒரு பகுதி -நன்றி: "உண்மை" - அக்டோபர் 1-15 2008

0 comments: