Search This Blog

9.10.08

நூற்றுக்கு நூறு பேர் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை!

ஆன்மிக வாழ்த்தில் அரசியல் வாடையா?

வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு வெற்றித் திருநாளாம் விஜயதசமியன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் காட்டாட்சி அகன்று நல்லாட்சி மலர்வதற்கான முயற்சியில் தமிழக மக்கள் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, என் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

- இப்படி ஒரு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்து இருப்பவர் எந்த மடத்துத் தம்பிரானும் அல்ல - அண்ணாவையும், திராவிட என்பதையும் தம் கட்சியின் பெயரிலே வைத்து முடிச்சுப் போட்டுள்ள, ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் - செல்வி ஜெயலலிதாதான் இந்த வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

அண்ணா யார்? திராவிட இயக்கம் எத்தகையது? என்பது குறித்த அ, ஆ கூடத் தெரியாத, அவசரக் கதியாக கட்சிக்குள் காலடி எடுத்து வைத்து, திடீர் கொள்கைப் பரப்புச் செயலாளரானவரிடமிருந்து எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்!

"எலக்ட்ரிக், இரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன் டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம் ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு இயந்திரம், இரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின், இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப் பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டு பிடித்தவர்கள் எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம் ஆயுத பூசை, சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல் லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர்; நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்!

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும் ஏரும், மண்வெட்டியும் அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை. கற்பூரம்கூட நீ செய்ததில்லை. கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடிகூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம். நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம். உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்".

------------------------"திராவிட நாடு", 26.10.1947.

- மேலே கண்ட வரிகள் அறிஞர் அண்ணாவுக்குச் சொந்தமானவை.


சரஸ்வதி பூஜைக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் செய்தி கூறும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் இதனை அறிவாரா? பரிதாபம் - அவர் எங்கே படித்திருக்கப் போகிறார்? அப்படி படித்து அறிந்தவர்களைப் பக்கத்தில் எங்கே வைத்திருக்கப் போகிறார்?

நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம் - இந்தத் தன்மை உள்ள ஒருவர் அண்ணாவின் பெயரைக் கட்சிக்குச் சூட்டிக் கொள்ளலாமா? திராவிட என்ற பார்ப்பனர் அல்லாதார் கொள்கைக் குறியீடான சொல்லையும் பயன்படுத்தலாமா?

செல்வி ஜெயலலிதா திருந்துவார் - ஏற்றுக்கொள்வார் என்பதற்காக இதனைச் சுட்டிக் காட்டவில்லை. அக்கட்சியில், அண்ணாவின் கொள்கையை நம்பி இருக்கும் அருமையான தோழர்களின் சிந்தனைக்கு இவ்வினாக்களை விருந்தாகப் படைக்க விரும்புகிறோம் - அவ்வளவுதான்!

புத்த மார்க்கத்தில் புகுந்த பார்ப்பனச் சக்திகள் அதனை இருகூறாக்கி அதன் ஆணிவேரையே அசைத்து, அதனை மதமாக்கி, கடைசியில் இந்தியாவிலேயே அதன் சுவடு தெரியாமல் அழித்த அதே சக்திகள் திராவிட இயக்கத்திலும் புகுந்து புரட்டுகளைச் செய்வதை தமிழர்கள் - குறிப்பாக அக்கட்சியில் இருக்கும் அன்பர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!

இதில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஒரு மதத் தொடர்பான ஒரு பண்டிகையில் வாழ்த்துக் கூறும் கட்சியின் பொதுச்செயலாளர், அந்த ஆன்மிகத்தோடு நில்லாமல், அரசியலையும் அதில் கொட்டிக் கவிழ்த்துள்ள அநாகரித்தைக் கவனித்தாகவேண்டும்.

எது எதற்கெல்லாமோ வரிந்து கட்டிக்கொண்டு, இதனை அரசியலாக்கலாமே - அரசியல் வாலை நுழைக்கலாமே என்று கருத்துச் சொல்லும் அதிகப் பிரசங்கிகள், எழுத்தாணி ஓட்டும் பேர்வழிகள் இதனை எந்த வகையில் விமர்சிக்கப் போகிறார்கள்?

எதிலும் அரசியல்தானா? எதை எடுத்தாலும் பதவி நாற்காலிப் பைத்தியம்தானா? அப்படிப் பார்க்கப் போனால், ஒவ்வொரு ஆண்டும்தான் இதுபோன்ற பண்டிகைகளின்போது அம்மையார் வாழ்த்துச் செய்திகளைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். திருவிளக்குப் பூஜைகளை அதிகாரப்பூர்வ கட்சிக்காரர்களை நடத்தச் சொல்கிறார் - தானும் அதனைச் செய்கிறார்!

யாகங்களையும் நடத்துகிறார்; ஆஸ்தான ஜோதிடர்களின் யோசனைப்படி காய் களை நகர்த்துகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக தோட்டத்தைவிட்டுப் புறப்படும்போது ஏகப்பட்ட பூஜை புனஸ்காரங்கள் எல்லாமும்தான் செய்யப்படுகின்றன.

கடந்த தேர்தலில் ஏன் தோல்வியைத் தழுவிக் கொண்டார்? ஆட்சியை ஏன் பறிகொடுத்தார்? வெற்றி தேவதையான விஜயலட்சுமி ஏன் கைகொடுக்க வில்லை?

ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா? சுயமாக சிந்திக்க முடியாவிட்டாலும், பட்டறிவைக் கொண்டாவது பாடம் கற்றுக்கொள்ளவேண்டாமா?

வடக்கே குஜராத்தில் விஜயதசமியையொட்டி சாமுண்டாதேவியைத் தரிசிக்கச் சென்ற பக்தர்கள் இருநூறுக்கு மேலாகப் பரிதாபகரமாக பலியானர்களே - இதிலிருந்தாவது சிந்தனையைத் துலக்கிக் கொள்ளவேண்டாமா?

அறிஞர் அண்ணா அழகாகவே எழுதினார், அதுவும் செல்வி ஜெயலலிதாவுக்காகவே எழுதுவதுபோல எழுதினார்.

பரம்பரை பரம்பரையாக நாம் செய்துவந்த சரசுவதி பூசை, ஆயுத பூசை நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர் நாம் ஆச்சரியப் படும்படியான அற்புதங்களை, அற்புதங்கள் செய்ததாக நாம் கூறும் நமது அவதாரப் புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவியலின் துணை கொண்டு கண்டுபிடித்துவிட்டார்களே என்று யோசித்தால், முதலில் கோபம் வரும், பிறகு வெட்கமாக இருக்கும், அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

அண்ணா அடுக்கிக் கூறிய கோபம் - வெட்கம் - விவேகம் - இதில் எந்த இடத்தில் முன்னாள் முதலமைச்சர் இருக்கிறார்? அவர் சிந்திக்காவிட்டாலும், மற்றவர்கள் சிந்திப்பார்களாக!


-------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 9-10-2008

3 comments:

ரங்குடு said...

இவ்வளவு வாய் கிழியப் பேசிய பெரியாரும்,
அண்ணாவும் என்ன கண்டு பிடித்தார்கள்?
பாரதி சொல்லிய படி நாமெல்லாரும்
'வாய்ச் சொல்லில் வீரர்கள்'.
அண்ணா, 'மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்'
என்று சொல்லி ஊரை ஏமாற்றி ஓட்டு வாங்கி
முதல்வரானார். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பணம்
சுருட்டு முன்னரே காலமானார்.
எத்தைச் சொல்லி ஏமாற்றினால் என்ன?
பக்தியானால் என்ன? பகுத்தறிவானால் என்ன?
விஜய தசமியானால் என்ன? விடுதலை தலயங்கமானால்
என்ன?

Robin said...

//அக்கட்சியில் இருக்கும் அன்பர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!// சிந்தித்து பார்ப்பவர்கள் அக்கட்சியில் இருக்க முடியுமா?

Robin said...

பார்பனீயத்தை பற்றிய விழிப்புணர்வை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியதே பெரியாரின் இமாலய சாதனை. அண்ணாதுரை முதல் ஜெயலலிதா வரை வந்த அரசியல்வியாதிகள் பெரியாரின் கொள்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டி புதைத்துவிட்டனர்.