Search This Blog

26.10.08

சந்திராயன் - 1 என்ற விண்கலத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் யார்?


இந்நாள் நிலவுப் பயணமும்!
அந்நாள் நிலவுபற்றிய மூடநம்பிக்கையும்!நில உலகிலிருந்து நிலா உலகில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் ஆவார். நிலவிற்கு அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் சில நாடுகள் விண்கலத்தை ஏவியுள்ளன. (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், அய்ரோப்பிய விண்வெளி முகமை) நம் நாடு ஆறாவது நாடு என்ற பெருமையுடன் வெண்ணிலவை நோக்கி விண்கலத்தை செலுத்தி சாதனை படைத்துள்ளது அனைவரும் பெருமைப் படத்தக்க சாதனை யாகும்.

இதனைச் சாதித்த அத்துணை விண்வெளி விஞ்ஞானி களுக்கும் குறிப்பாக திருவாளர்கள் மாதவன் நாயர். மயில்சாமி
ம. அண்ணாதுரை ஆகியவர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

பொள்ளாச்சிக்குப் பக்கத்திலிருக்கும் கொத்தவாடி என்ற கிராமத்தில் பிறந்த விஞ்ஞானி அண்ணாதுரை அவர்கள், ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியரின் மகனாவார்! அவர் பள்ளிப் படிப்பு முழுவதையும் கிராமத்திலேயே படித்து, பிறகு கல்லூரிப் படிப்பை கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் படித்து, பட்ட மேற்படிப்பை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் படித்தவர்!

சந்திராயன் - 1 என்ற விண்கலத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் இவரே. அதைத் தன் குழந்தை என்று வர்ணித்தவர் - அதைப் படிக்க வைத்து திருமணம் செய்து வைப்பது போலத்தான் விண்கலமும் என்கிறார்!

அறிஞர் அண்ணா பெயரைத் தான் அவரது அருமைத் தந்தையார் இவருக்கு வைத்திருக்கக் கூடும். சந்திராயன் - 1-அய்த் தொடர்ந்து, சந்திராயன் - 2 திட்டத்துக்கும் அவரே இயக்குநர் பொறுப்பு ஏற்றுள்ளார் என்பதும் இனிக்கும் செய்தியாகும்.

கிராமத்தில் படித்து முன்னேறிய இத்தமிழர் - விஞ்ஞானியின் தொழில் நுட்ப அறிவும் ஆற்றலும் பாராட்டத் தக்கவை மட்டுமல்ல; பிறருக்குப் பாடம் புகட்டவும் தகுதியுள்ளவை.

தகுதி திறமை தமக்கே உண்டு என்று தம்பட்டம் அடித்து, மற்றவர்களுக்கு, அறிவு இல்லை; ஆற்றல் இல்லை, தகுதி இல்லை, திறமை இல்லை என்று கூறும் உயர்ஜாதி ஆணவத்தின் மண்டையில் அடித்த பாடம் அது! உரிய வாய்ப்புக் கொடுத்தால், உழைக்கும் திடசித்தமுள்ள வர்களாக ஒவ்வொருவரும் மாறிட முடியும் என்பதுதான் உண்மையாகும்.


11 விஞ்ஞானக் கருவிகளுடன் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சந்திராயன் - விண்கலம் நவம்பர் 15-ஆம் தேதி நிலவுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நின்று படங்களை அனுப்பும் பணியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

ஏவப்பட்ட 18-ஆவது மணித்துளிகளில் அந்த விண் கலம் பூமியின் சுற்று வட்டப் பாதையை அடைந்துள்ளது!

நிலவு, சூரியனின் துணைக்கோள்.

இது 27 லட்சத்து 38 ஆயிரத்து 800 மைல் தூரத் திற்கு அப்பால் இருந்து பூமியைச் சுற்றி வருகிறது!

இதன் சுற்றளவு 6800 மைல்கள். குறுக்களவு 2162 மைல் எனவும் கூறுகின்றனர்.

இது பூகோள வட்ட அளவில் 80-ல் ஒரு பாகம் என்று கணிக்கப்பட்டுள்ளது!

இது 29 நாள்கள், 12 மணிகள், 44 விநாடிகளில் பூமியை ஒரு முறை சுற்றி வருகிறது.

நிலவு, பூமி, சூரியன் இம்மூன்று கிரகங்களும் ஒரே நேர் பாதையில் அமைகையில் நமக்கு முழு நிலா (பவுர்ணமி) தோன்றுகிறது.

இது பூமிக்குப் புறமாகும்போது சந்திர உதயமும், ஒளியும் முறையே குறைந்து 15 ஆவது நாளில் பூமி, சந் திரன், சூரியன் என்ற ஒரு நேர் பாதையில் அமைகையில் சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிற்றலால் இரவில் காணப்படுவதில்லை. அத்தினமே அமாவாசை (அ-இல்லை, மா -சந்திரன், வாஸ்ய இருக்கிறது - சந்திரன் இல்லாத நாள்).

சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வரும்காலம்தான் ஒரு மாதம் எனப்படுகிறது. இது அறிவியல் பார்வை. இவை அறிவியல் பாடம் - வகுப்புகளில்!

ஆனால் புராண மூடநம்பிக்கைப் புளுகுகளோ, நம் மக்கள் மண்டைகளில் ஏற்றிய பாதுகாக்கப்படும் குப்பைகள்.

சந்திரனைப் பற்றி:

1) இவன் விஷ்ணு மூர்த்தியின் மார்பில் பிறந்தவன் திருப்பாற்கடலைக் கடைகையில்!

2) இவன் அத்திரிக்கு அநுசையிடம் பிறந்தவன், அத்திரி தவம்புரிய அவன் வீரியம் மேலெழுந்து கண் வழி ஒழுகிற்று; அதை பிரமன்திரட்டி விமானத்திலிட அது உயிர் பெற்றது. அதனைச் சோமன் என்றனர்! இதில் சிந்திய துளிகள்தான் பயிர்களாயினவாம்!!

3) தட்சனின் பெண்கள் 27 பேர்களை மணம் புரிந்த பின்பும், அவர்களிடத்தில் ஒருமித்து ஆசை வைக்காது, கார்த்திகை, உரோகினி - இவர்களிடம் மாத்திரம் அன்பு வைத்ததால் நாள் தோறும் ஒவ்வொரு கலைதேயவும் க்ஷயரோகமும் அடையச் சாபம் தந்தனர், அப்பெண்களின் தந்தையால், பிறகு சாபம் தீர சிவமூர்த்தி யால் வரம் தந்து கலைகள் வளரவும், நோய் நீங்கவும் வளருபவன்!!!

4) சிவசன்னிதானத்து நாரதர் கொணர்ந்து கொடுத்த கனியை பிரமன் கந்தமூர்த்திக்கு கொடுக்க வேண்டுமென, கணபதி அவரைக் கோபிக்கையில், சந்திரன் விநாயகரைக் கண்டு சிரித்ததால் விநாயகரால் ஒளி இழக்கவும், சண்டாளத்துவம் பெற்று மீண்டும் அவரால் சாபம் வருஷத்து ஒரு நாளில் அடைய வரம் பெற்றவன்!!!!

5) இராகு, கேதுக்களின் வஞ்ச உருவத்தை மோகினி உருக்கொண்டு திருமாலுக்கு காட்டினமையால் அவரால் பகைமை பெற்று விழுங்கப் பெற்றவன்!!!!! ஆதாரம்: அபிதான சிந்தாமணி பக்கம் 578,579


இதையெல்லாம்விட மிகவும் ஆபாசம், குரு பத்தினியான தாரையிடமே சென்றவன். நம் நாட்டில் தாராசசாங்கம் என்ற நாடகமும் பல ஆண்டுகளுக்கு முன் நடக்கும்; அதில் குரு பத்தினி (நிர்வாணமாக) எண்ணெய் தேய்த்து விடும் காட்சியைக் காணத் தவறாதீர்கள் என்று விளம்பரம் செய்து வசூலை அதிகப்படுத்திய காலமும் உண்டு.

மூடத்தனத்தின் முடைநாற்றம் எப்படி பார்த்தீர்களா?

அறிவியல் படித்தால் போதுமா? அதற்கு நேர்மாறான புராண ஆபாசங்களை நம்பலாமா? சந்திரகிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்று கூறுவது மூடநம்பிக்கை அல்லவா?

இளைஞர்களே! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

ராகு கேது பாம்பு சந்திரனை விழுங்குகிற கதையை நம்பி அறிவை இழந்து, மூடநம்பிக்கையை மூளையிலிருந்து வெளியேற்றுங்கள்.


--------------------------- கி. வீரமணி அவர்கள் 26-10-2008 "விடுதலை" யில் எழுதியது.

0 comments: