Search This Blog

25.10.08

நாத்திகப் பிரச்சார விளம்பரத்திற்காக நன்கொடை குவிகிறது




கடவுளுக்குக் கல்தா!



இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நாத்திகப் பிரச்சார விளம்பரத்திற்காக நன்கொடை தேவை என அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இலக்கை விட அய்ந்து மடங்கு நன்கொடைகள் குவிந்தன. இந்தச் செய்தி லண்டன் தி இந்து ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பெரியாரடியான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் இத்தகைய நாத்திகப் பிரச்சார விளம்பரத் திட்டம் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன் முறையாகும். மாநகரப் பேருந்துகளில் விளம்பரச் சுவரொட்டிகள் அமைக்க, 5,500 இங்கிலாந்து பவுண்டுகள் தேவை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. திங்கள் இரவுக்குள் தனிப்பட்டவர்களும், அமைப்புகளும் 28,000 இங்கிலாந்து பவுண்டுகளை இந்தத் திட்டத்திற்காக நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர்.

இந்தத் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப் படுத்தப்பட இருந்தது.

இந்தப் பேருந்து சுவரொட்டிகளில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.

கடவுள் எனப்படுவது எதுவுமில்லை. எனவே கடவுளைப் பற்றிக் கவலைப்படுவதை விடுத்து, உங்கள் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள்.

கிறித்தவர்கள் அல்லாதவர்கள் நரகம் எய்துவர் என்ற மத முழக்கங்களுக்கு எதிரான ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இந்தப் பேருந்து நாத்திகப் பிரச்சாரத் திட்டம் அமையும் என்று கார்டியன் இதழில் பெண் எழுத்தாளர் அரியனே ஷெரினே என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகிறார்:

நமது இந்தச் செய்தி புதுமையானதும், மிகவும் எளிமை வாய்ந்ததும் ஆகும். என்றாலும் அது தன்னுள் ஒரு தீவிரமான கருத்தை உள்ளடக்கியுள்ளது. மதச்சார்பற்ற நாட்டை நாத்திகர்கள் விரும்புகிறார்கள்; மதச்சார்பற்ற பள்ளியும் அரசும் வேண்டும் என நாம் விரும்புகிறோம். இத்தப் பிரச்சாரத் திட்டத்திற்காக எண்ணற்ற மக்கள் நன்கொடை அளிக்க முன் வந்துள்ளது இந்த உணர்வின் வலிமையைக் காட்டுகிறது.

இத் திட்டத்திற்குக் கிடைத்த ஆதரவின் அளவு என்னை வியப்படையச் செய்கிறது. அதிகப்படியாக கிடைத்துள்ள நன்கொடைப் பணத்தைக் கொண்டு இதைவிட மேலான மற்ற பிரச்சாரத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். ஒரு நகரத்தில் மட்டுமல்லாமல் தேச அளவில் இதைச் செய்ய முடியும்; சுரங்க ரயில் பாதைகளில் இந்த சுவரொட்டிகளை வைக்கலாம்; மாறுபட்ட வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள்; கூடுதலான பேருந்துகளில் பிரச்சாரம்; பேருந்தின் உள்பக்கம் பிரச்சாரம் என்று எவ்வளவோ செய்ய முடியும். இதற்கு வானம்தான் எல்லை! என்று அவர் கூறுகிறார்.


கடவுள் மாயை என்னும் நூலை எழுதிய ரிச்சர் டாக்கின்ஸ் இத் திட்டத்திற்கு மேலும் 5,500 பவுண்டுகள் நன்கொடை வழங்க உள்ளார். இந்தப் பணம் இதுவரை வலை தளங்களில் வெளியிடப்பட்ட தொகையில் சேர்க்கப்படவில்லை. மொத்தத் தொகையில் மேலும் 6,000 பவுண்டு கூடுதலாகச் சேரும். இங்கிலாந்து நாட்டு மனிதநேய அமைப்பு இந்த நன்கொடைகளை நிர்வகிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தேவாலயங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களை சிந்தனை செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் டாக்கின்ஸ் கடவுள் பற்றி தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதை வரவேற்பதாக பிரிட்டிஷ் மெதாடிஸ்ட் சர்ச் வரவேற்றுள்ளது. பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக தங்கள் மத அல்லது தத்துவ நிலை பற்றிய கருத்துக்களை எவரும் வெளிப்படுத்து வதற்காக அவர்கள் பெற்றுள்ள உரிமையை அது பாதுகாக்கிறது என்று இங்கிலாந்து சர்ச் தெரிவித்துள்ளது. நீங்கள் என்னதான் கரடியாகக் கத்தினாலும் மக்கள் மத்தியில் கடவுள் பக்தி பெருகித்தான் வருகிறது என்று நம்மைப் பார்த்து நையாண்டி செய்பவர்கள் உண்டு.

நீங்கள் பிள்ளையாரை உடைக்கப் போய்தான் எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் உண்டாகி விட்டன என்று வக்கணை பேசுபவர்கள்கூட உண்டு.

கோயில்கள் பெருகுவதால் உண்டியல்கள் பெருகுகின்றனவே தவிர பக்தி பெருகியதாகப் பொருள் கிடையாது.

நடைபாதைக் கோயில்களில் உள்ள உண்டியலை அன்றாடம் இரவில் உடைத்து வசூலைக் கணக்கிட்டு, இரவு நேரத்தில் உற்சாகப்பானம் அருந்துவதுதான் பக்திப் பெருக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் அதன் ஆசிரியர் திரு. வைத்திய நாதய்யர்கூட ஒரு விழாவில் பேசும்போது காந்தியாரும் - வடலூர் வள்ளலாரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதோடு, உலகம் முழுவதும் கடவுள் நம்பிக் கையாளர்கள்தான் அதிகம், நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் - விஞ்ஞானிகள் எல்லாம் ஆத்திகர்களே. அமெ ரிக்காவின் டாலர் நோட்டில் கூட கடவுள் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பீற்றிக் கொண்டார்.

அதே தினமணி ஏட்டில் (13.6.2008) வந்த ஒரு செய்தி அவர்களின் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது:

அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு!

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறை வாகவுள்ளதாக, லண்டன் அல்ஸ்டெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகங் களில் பணியாற்றும் அறிஞர் களுக்கு இறை நம்பிக்கை மிக மிகக் குறைவு. தாங்கள் புத்திக் கூர்மையோடு திகழ்வதற்கு தங்களது திறனே காரணம்; இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றே பெரும்பாலான பிரிட்டன் பல்கலைக்கழகப் பேராசிரி யர்கள் உறுதியாகத் தெரிவிக் கின்றனர். பிரிட்டனில் ஆரம்பக் கல்வி பயில்பவர்கள் மத்தியில் இறைநம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெறப் பெற அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை மெதுவாகக் குறைய ஆரம்பித்து விடுகிறது. அந்த வகையில் 20-ஆம் நூற்றாண்டில் 137 வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் சமயநம்பிக்கை குறைந்து வருகிறது. மக்கள் அறிவாளி களாக மாறி வருவதே இதற்குக் காரணம். பிரிட்டனில் 3.3 சதவீதம் பேர்தான் இறை நம் பிக்கை உள்ளதாக தெரிவித் தனர். 68.5 சதவீதம் பேர் தங்கள் மீதான நம்பிக்கை தவிர்த்து வேறெந்த நம்பிக்கை யும் இல்லை எனத் தெரி வித்ததாக, இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் ரிச்சர்டு லைன் தெரிவித்தார். தினமணி ஆதாரப்படுத் திக் காட்டும் அமெரிக்காவி லிருந்து வெளிவரும் நேச்சர் என்கிற விஞ்ஞான இதழ் தரும் புள்ளி விவரம் நெற்றியை மேலும் கீழுமாக அசையச் செய்வதாகும்.

கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகளின் தகவல்கள்:

1914-இல் - 72 விழுக்காடு
1993-இல் - 85 விழுக்காடு
1999-இல் 90 விழுக்காடு

இதுதான் யதார்த்தமான நிலைப்பாடு.

கடவுள் உண்டு என்பது ஒரு முட்டாளுக்குத் தோன்றிய நம்பிக்கை. அது அச்சத்தாலும், ஆசையாலும் தூண்டப்பட்ட ஒன்றாகும். இது இரண்டும் அருகும் நிலையில் - உலகம் கடவுள் நம்பிக்கைக்குக் கல்தா கொடுத்து விடும்.

அந்த உலகில் அறிவு உயர்ந்த இடத்தில் அணி செய்யும்.

தன்னம்பிக்கை தலையாயதாக இருக்கும். தான் செய்யும் தவறுக்குத் தானே பொறுப்பேற்கும் அறிவு நாணயம் கொழுந்து விட்டு எரியும்.

மதத்தின் பெயரால் சுரண்டல் என்பது ஒழிந்துபோய் விடும்.

அறிவு வழிகாட்ட அன்பு அரவணைக்கும் - தந்தை பெரியார் காண விரும்பிய ஒப்புரவு உயர்ந்த சீலத்தில் சமத்துவச் சிரிப்புடன் பூத்துக் குலுங்கும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

------------------- மின்சாரம் அவர்கள் 25-10-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: