Search This Blog

13.10.08

தினமணி அய்யரின் அருள்வாக்கு! சன்மார்க்கமா? - மதச்சார்பின்மையா?

தினமணி ஏட்டின் ஆசிரியரான திருவாளர் வைத்திய நாதய்யர் தினமணி அலுவலகத்தில் பணியாற்றுவதைவிட உபந்நியாசம் என்பதில்தான் அதிகக் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

அத்தகைய சொற்பொழிவுகளில் எல்லாம் சன்னமாக ஒன்று இழையோடுவது மட்டும் உண்மை. அதுதான் பச்சையான ஆர்.எஸ்.எஸ். என்ற அருவருப்புக் குப்பை - அதற்கு விளக்கம் வேண்டும் என்றால் பார்ப்பனப் புத்தி!

வடலூர் வள்ளலார் விழா ஒன்றில் பங்கு கொண்ட அவர் ஒரு போடு போட்டு இருக்கிறார் பாருங்கள் - படிப்பவர்கள் யாரும் அசந்து போய்விடுவார்கள்.

வாயைத் திறந்தவுடனேயே ஒரு அருமுத்து.

1) வள்ளலாரும், மகாத்மா காந்தியும் இந்து மத நம்பிக்கை உடையவர்கள். ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். நாத்திகத்தை வெறுத்தவர்கள் - தினமணி ஆசிரியர்.
இதே தினமணி -இராமலிங்க அடிகளார் வரலாறு (ஊரன் அடிகள்) நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளது (7.5.1971)

சீர்திருத்த சைவ வழி கண்டவர் வள்ளலார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அப்படியிருக்கும் பொழுது அன்றைய தினமணி ஏட்டின் கூற்றுக்கு முரணாக வள்ளலாரை இந்து என்று கூறுவது எத்து வேலையல்லவா!

சைவம் வேறு - இந்து மதம் வேறு என்பதை மறைமலை அடிகளார் போன்றவர்கள் நிறுவியுள்ள நிலையில், இந்தக் குட்டை குழப்பும் வேலை ஏன்?

ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரின் வாய் இந்து மதத்துக்கு முட்டுக் கொடுக்கத்தானே செய்யும்! அதைத்தான் திரு. வைத்தியநாதய் யரும் சன்னமாக செய்துள்ளார்.

இன்றைக்கு இராமலிங்க அடிகளைத் தூக்கிச் சுமக்கும் இந்தப் பேர் வழிகளின் முன்னோர்கள் அவரை எப்படியெல்லாம் சிதம்பரத்தில் அவமானப்படுத்தினர். உண்மையான தில்லை நடராசன் சிதம்பரத்தில் இல்லை; இங்கு தானிருக்கிறார் என்று வடலூரைக் கண்டவர் அல்லவா அடிகளார்.

வள்ளலார் ஒரு இந்துவாக இருந்தால் கடவுள் ஒருவர் - அதுவும் அருட்பெருஞ்ஜோதி என்று கூறியிருப்பாரா?

இருட்சாதித் தத்துவ சாத்திரக்குப்பை
இருவாய்ப்புப்புன்செய்யில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களைச் சிரம
வழக்கெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு என்று தன் நிலையைத் தெளிவாக்கியிருக்கிறாரே!


சமயங்கள், மதங்களை மண் மூடிப் போகச் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துச் சென்றுள்ள இராமலிங்க அடிகளாரை இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று தினமணி வைத்தியநாதன்கள் சொல்லுவது அசல் ஆர்.எஸ்.எஸ். பாணிப் புத்திதானே!

சிதம்பரத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வேதனை யுற்று வடலூரில் ஒரு கோயில் நிறுவி அதற்கு உத்தர ஞான சிதம்பரம் என்று பெயர் சூட்டினாரே - உருவ வழிபாடு கூடாது என்பதற்காகத்தானே ஒளி (ஜோதி) வழிபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடவுள்கள் - மனைவிமார்கள், கூத்தியர்கள் என்று பட்டியல் போட்டு உருவங்களைப் படைத்திருக்கும் இந்து மதத்தோடு கடவுளுக்கு உருவமே கூடாது என்று உறுதியாகக் கூறி அதற்குச் சான்றாக அருட்பெருஞ் ஜோதி தனிப் பெரும் கருணை என்று மதமற்ற, உருவமற்ற ஒன்றை உருவாக்கியவரை, எவ்வளவு தில்லுமுல்லுத்தனத்தில் ஊறியிருந்தால் ஒரு இந்து மதக்காரர் என்று நாக்கூசாமல் பேசியிருப்பார்?

காந்தியாரைச் சுட்டு கொன்றவன்கூட தன்னை இந்து என்றுதான் பெருமையாகக் கூறிக் கொண்டான்.


இந்தியா மதச் சார்பற்றது என்று காந்தியார் சொன்ன 50 நாள்களிலேயே இந்து வெறியனின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தியாரின் மார்பைத் துளைக்கவில்லையா?

பார்ப்பனரை எதிர்த்து வருணாசிரமக் குப்பைகளை எரியூட்டச் சொன்ன இராமலிங்கனாரை சூடம் வைத்துக் கொளுத்தி ஜோதியாகி விட்டார் என்று அவர் கதையை முடித்த கூட்டம் இராமலிங்கனாரைப் புகழ்வது போல காட்டிக் கொள்ள முன்வருகிறது. இதற்கு பெயர்தான் பார்ப்பனியம் என்பது.


காந்தியாரும் இராமலிங்க அடிகளாரும் நாத்திகத்தை வெறுத்ததாகக் கூறியுள்ளார்.
நாத்திகம் என்பதும் இந்து மதத்தில் உள்ள ஒன்றுதான்; தசரதனின் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகர் இருந்தார் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் கூட்டத்தினர் இப்பொழுது நாத்திகர் என்று குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றது போல் பேசுவது ஏன்?


இந்து மதத்துக்காக வக்காலத்து வாங்கும் வைத்தியநாதய்யர்வாளுக்கு இந்து மதத்தைப் பற்றிக்கூட சரியாகத் தெரியவில்லை என்பதுதான் சரியான தமாஷ்!

இந்துமதத்தில் கடவுள் இல்லை என்பதற்கும், நாத்திகத்துக்கும் சம்பந்தம் கிடையாது; மாறாக இந்து மதத்தில் யார் நாத்திகர் என்றால் வேதங்களை மறுப்பவன் தான் - வருணாசிரம தர்மத்தை மறுப்பவன்தான் நாத்திகன்.

இதுபற்றி விவரம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் காஞ்சி சங்கராச்சாரியார் - மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதி வெளிவந்துள்ள தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் (பக்கம் 407-408-இல்) காணலாம்.

கடவுளை மறுத்தால் கூட பார்ப்பனர்களுக்குக் கஷ்டம் இல்லை. மாறாக வேதங்களை, சாத்திர சம்பிரதாயங்களை எதிர்க்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு; காரணம் ஜாதிதானே அவர்களை உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து சுரண்டல் தொழிலுக்கு லைசென்சு கொடுத்துள்ளது.

இந்துமத வேதங்களையும், வருணத்தையும் வள்ளலார் எதிர்ப்பதால் அவரும்கூட அவாள் பார்வையில் நாத்திகர்தானே!

2) மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்துக்குத் தீர்வு சமரச சன்மார்க்கம்தானே தவிர, இறைமறுப்புக் கொள்கையை ஒற்றிய மதச் சார்பின்மையில்லை என்று ஒரு புதிய தத்துவத்தை உதிர்த்திருக்கிறார்.

சரிதான். இதன் மூலம் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மதத்தின் பெயரால் தீவிரவாதம் - அதாவது வன்முறைகள் நடக் கின்றன என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் - (எங்கே சுற்றினாலும் கடைசியில் ஈரோட்டுச் சந்திப்புக்குத்தானே வர வேண்டும்)
மதச்சார்பின்மை என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் ஒரு கால கட்டத்தில் ஒரு கூட்டம் மிகவும் மிரண்டு போய்த்தானிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது.

மதச்சார்பற்ற தன்மை என்பது இறைமறுப்பு என்பதும் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரிந்து விட்டது. அதனால்தான் இப்பொழுது இப்படியெல்லாம் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டனர்.
மதச்சார்பின்மையை எடுத்து விட்டு அந்த இடத்தில் வள்ள லாரின் சமரச சன்மார்க்கத்தை வைத்து விடலாமா? இது குறித்து அவாளின் பார்ப்பன சங்கத்தில் ஒரு தீர்மானம் போடச் செய்யட்டுமே! சங்கராச்சாரியாரின் திருவாயை மலரச் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா பூணூல் திருமேனியார்?

அவர் சொல்லும் சன்மார்க்கத்தில் கடவுள் கிடையாது. அதாவது உருவம் கிடையாது - வெறும் ஜோதிதான் - மதம் கிடையாது - ஜாதி கிடையாது - ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படி ஏற்றுக் கொண்டால் தினமணி ஆசிரியர் முதலில் தன் பூணூலை அறுத்து வள்ளலாரின் ஜோதியில் பஸ்பமாக்க வேண்டும். சங்கர மடத்தில் இப்பொழுது இருப்பவர்களுக்குக் கல்தா கொடுத்து சுப்பனுக்கும், குப்பனுக்கும் பயிற்சி கொடுத்து சங்கராச்சாரிகளாக ஆக்கிட வேண்டும் - தயார்தானா?

3) இறை உணர்வு இந்த நாகரிக உலகுக்குப் பொருந்தாது என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவிலே நோட்டுகளில் கடவுளிடம் நம்பிக்கை வைக்கிறோம் என்கிற வாசகம் இருப்பதைக் காணலாம். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் என்று பேசியிருக்கிறார். இறை நம்பிக்கையை காப்பாற்ற இப்படி ஒரு கரடியை அவிழ்த்து விடுகிறார். அமெரிக்காவின் டாலர் நோட்டில் கடவுள் நம்பிக்கை இடம் பெற்று இருக்கிறது என்பதால் அதனை எல்லா நாட்டினரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?
பார்ப்பனர்களுக்கு அமெரிக்கா என்றால் அப்படி ஒரு ஆசையும் பற்றும் - அதனால்தான் அமெரிக்கா எது செய்தாலும் தோள் கொடுக்க சோ முதல் ஆசாமியாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்.

சந்தடி சாக்காக கந்தகப் பொடி தூவுவதுபோல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான் என்கிறார்.

அதுகூட உண்மையல்ல அப்பட்டமான புளுகுதான்!

அய்யர்வாள் கூறும் அதே அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நேச்சர் (சூயவரசந) இதழில் வெளிவந்த தகவலை ராணி இதழ் (18.7.1999) வெளியிட்டுள்ளதே! 1914-இல் கடவுளை நம்பாத விஞ்ஞானிகள் 72 விழுக்காடு; 1993-இல் 85 விழுக்காடு; 1999-இல் 90 விழுக்காடு. போதுமா?

கடவுள் நம்பிக்கையும் போய், மதமும் மண்டையைப் போட்டு, ஜாதியும் சாவுக் குழிக்குச் சென்று விடுமானால் பார்ப்பனர் பிராமணனாக இருக்க முடியாது - மனிதனாக இருக்கலாம் - என்ன சம்மதம் தானா?

-----------------------மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை -"விடுதலை" 12-10-2008

2 comments:

Dr.Rudhran said...

only humans will agree to the last sentence

தமிழ் ஓவியா said...

நன்றி டாகடர்.
தங்களின் கருத்தை தொடர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.