Search This Blog

29.10.08

பார்ப்பனர்கள் பார்வையில் ஈழப் பிரச்சினை

பார்ப்பனர்களை அடையாளம் காண வேண்டுமானால் இரண்டு அளவுகோல்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்களைப் பொறி வைத்துப் பிடித்துவிடலாம்.

ஒன்று - சமூகநீதி தொடர்பானது, இன்னொன்று தமிழன் என்ற இனக் கோட்பாடு; இரண்டிலும் அவர்கள் தங்களைப் பார்ப்பனர்கள் என்பதைக் காட்டிக் கொள்வார்கள்.


இப்பொழுது மிக முக்கியப் பிரச்சினையாக எழுந்துள்ள ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அண்ணாவின் பெயரைத் தம் கட்சியில் பொறித்து வைத்துள்ள செல்வி ஜெயலலிதா வானாலும், மார்க்சியம் பேசுகின்ற இந்து ராம் ஆனாலும் பத்திரிகா தர்மம் பேசுகின்ற சோ ராமசாமியானாலும் - இந்த அக்ரகாரத் திருமேனிகள் இந்தப் பிரச்சினையில் சுருதி பேதம் இல்லாமல் ஒரே வாசிப்பாக இருப்பதை நாடு அறிந்து கொண்டுதானிருக்கிறது.

இலங்கையிலிருந்துகூட அரசு வானொலி சோ ராமசாமியைத் தேடிப் பிடித்துதான் பேட்டி காண்கிறது. அவர் போன்றவர்கள் கூறும் கருத்துகள்தானே அவர்களுக்குத் தேவை. இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர்கூட கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வையுங்கள் என்று எடுத்துக்காட்டுவதையும் கவனித்தால், இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களால் பிழைத்துக் கொண்டிருந்தாலும்கூட, தமிழர்களைக் காட்டிக் கொடுப்பதில் எந்த அளவுக்கு ஆர்வ வெறி பிடித்தவர்களாக இருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஈழத்தில் முதலில் செய்யவேண்டியது போராளிகளை ஒடுக்குவதுதானாம். அதன்பின் பாதிக்கப்படும் மக்களுக்காகச் செய்யவேண்டியதுபற்றி யோசிக்கலாம் என்கிற தோரணையில் பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

போராளிகளைப்பற்றி கொச்சைப்படுத்தவேண்டும் என்பதுதான் இந்தக் கும்பலின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்தப் போராளிகள் எந்தச் சூழ்நிலையில் தோன்றினார்கள்? எந்தக் காலகட்டத்தில் ஆயுதங்களை ஏந்தினார்கள் என்கிற திசையிலே தப்பித் தவறிக்கூட அவர்கள் சிந்திக்கமாட்டார்கள் - அந்த இடத்தின் பக்கமே தங்களின் பார்வையைச் செலுத்தமாட்டார்கள்.

ஏதோ இந்தப் போராளிகள் தோன்றி ஆயுதங்களைத் தூக்கியதற்குப் பிறகுதான் சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க ஆரம்பித்ததுபோல ஒரு பித்தலாட்டப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டு வருகிறார்கள்.

1938 இல் இருந்தே இலங்கைப் பிரச்சினை தொடங்கப்பட்டது. 1953-இல் 1983-இல் எல்லாம் என்ன நடந்தது என்பதைப்பற்றி இவர்கள் ஏன் வாயையோ, பேனாவையோ திறப்பதில்லை?

தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று சிங்களவர்கள் விளம்பரம் செய்தது எல்லாம் எந்த அடிப்படையில் சிங்கள இராணுவம்!

இவ்வாறு அரசு, போராளிகளைத்தான் தாக்குகிறது; அங்குள்ள தமிழர்களையல்ல என்பது போன்ற தோற் றத்தை இவர்கள் உருவாக்க முயலுகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

வீடு வீடாகச் சென்று தேடுதல் என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தினார்களே - அதுகூட போராளிகள்மீதான எதிர்ப்புதானா?

தன் தாயையும், தன் மகளையும் தன்னெதிரே பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்தியபோது, மான உணர்ச்சி உள்ள எவரும் ஆயுதத்தைத் தூக்கமாட்டானா? பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய பிரச்சினைகளில் ரத்தம் சூடேறாது - ஒரு கரண்டி நெய்யின்மூலம் விபச்சார தோஷத்தைப் போக்கிக் கொள்வார்கள்! தமிழர்கள் அத்தகையவர்கள் அல்லவே!

ஏதோ ஈழத் தமிழர்கள்மீதுதான் பார்ப்பனர்களுக்குத் துவேஷம் என்று கருதிவிடக் கூடாது. ஈழத் தமிழர்கள் என்பது ஒரு குறியீடு; மற்றபடி எந்த நாட்டில் வாழும் தமிழர்களும் பார்ப்பனர்கள் கண்களில் கருவேல் முள்ளைப்போல உறுத்தத்தான் செய்யும்.

தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்றால், அவர்களின் நிலை என்ன? தமிழ் வழிபாட்டு மொழி என்றால் அவர்களின் பார்வை என்ன? தமிழனும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்றால், அவர்களின் செயல்பாடுகள் எத்தகையவை? அதே நிலைதான் ஈழத் தமிழர்ப் பிரச்சினையிலும்.

தமிழர்களே, பார்ப்பனர்களை இதற்கு மேலுமா அடையாளம் காணத் தயங்குகிறீர்கள்?


------------------- நன்றி:"விடுதலை" தலையங்கம் 28-10-2008

0 comments: