Search This Blog

24.10.08

சாமர்த்தியமாகப் பேசும் மகிந்த ராஜபக்சே!

14.10.2008 அன்று தமிழ்நாடு அரசால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் உருப்படியான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கரமேனன் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜெயசிங்கேவை அழைத்து, அமைதியான முறையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டும்; போர் நிறுத்தப்படவேண்டும்; பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்படவேண்டும் என்று அந்தச் சந்திப்பில் கூறப்பட்டது.

அதன் பிறகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் தொலைப்பேசியில் பேசியபோது இதே கருத்து இந்தியப் பிரதமரால் வலியுறுத் தப்பட்டது.

ஆனாலும், இலங்கை சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போர் என்று கூறி வழக்கம்போலவே தமிழர்களைக் கொன்று குவித்துத்தான் வருகிறது.

இப்பொழுது ராஜபக்சே அதற்குப் புது விளக்கங்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

இந்தியாவுடனான உறவு நீடிக்கிறது! புலிகளுடனான போரை இந்தியா நிறுத்தச் சொல்லவில்லை. இந்தியாவில் உள்ள கூட்டணிக் கட்சி காரணமாக, அங்கிருக்கும் பல்வேறு நெருக்கடிகள், அதனால் எழும் பிரச்சினைகள் பற்றி தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

இப்பொழுது நடக்கும் யுத்தத்தால் பாதிக்கப்படுவது ஈழத் தமிழர்கள் என்பது நன்றாகத் தெரிந்திருந்தாலும் - அதனை மறைத்துவிட்டு, விடுதலைப்புலிகளோடு நடத்தும் யுத்தத்தை இந்தியா நிறுத்தச் சொல்லவில்லை என்பது எவ்வளவு பெரிய நயவஞ்சகமான கருத்து.

யுத்தத்தை இந்தியா நிறுத்தச் சொல்லுகிறது என்றால், அதன் பொருள் என்ன? விடுதலைப்புலிகளோடு யுத்தத்தை நடத்தாமல் வேறு யாரோடு சிங்கள அரசு யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறது? ஈழத்தில் யுத்தத்தை நிறுத்தவேண்டும் என்றால் அதன் பொருள் - விடுதலைப்புலிகளோடு நடத்தும் யுத்தத்தை நிறுத்துவது என்பதுதானே!

மிக சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு ராஜபக்சே பேசுவதை இந்திய அரசு புரிந்துகொள்ளாதா?

ராஜபக்சேயின் பதிலில் இந்திய அரசைப்பற்றிய கேலியும் தொக்கி நிற்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். இந்தியாவில் பெரும் பான்மை பலத்தோடு ஆட்சியில்லை. பல கட்சிகளின் உதவியோடு கூட்டணி அரசு நடைபெறுகிறது. அதனால்தான் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் வற்புறுத்தலால்தான் இந்திய அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது - கூட்டணி ஆட்சியாக இல்லாமல் பெரும்பான்மை பலம் கொண்டதாக அமைந்திருக்குமானால் இந்திய அரசு இவ்வாறு நடந்துகொள்ளாது என்கிற பொருள் - ராஜபக்சேயின் கருத்தில் உள்ளதைக் கவனிக்கவேண்டும்.

மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது நாடு; இராணுவ பலத்தில் நான்காவது இடத்தில் இருக்கக் கூடியதாகக் கூறப்படும் இந்திய அரசின் கருத்தை இந்த அளவுக்கு மலினப்படுத்துகிறது இலங்கை அரசு என்றால், இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களிடத்தில் எந்த அளவுக்கு மோசமாக நடந்துகொள்ளும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

விடுதலைப்புலிகளோடு மட்டும்தான் போர் புரிவதாக சிங்கள அரசு சாமர்த்தியமாகச் சொல்லலாம்; செஞ்சோலையிலே மழலைச் செல்வங்களைக் குண்டுமாரி பொழிந்து படுகொலை செய்தார்களே அதுகூட புலிகளோடு நடத்திய போர்தானா?


உலகம் ஒப்புக்கொண்டுள்ள மரபுகள் - நியதிகள் - தார்மீகக் கோட்பாடுகளைக் காலில் போட்டு மிதித்து, மருத்துவமனைகள் மீதும் குண்டுமாரி பொழிந்தார்களே - அதுகூட விடுதலைப் புலிகளோடு போரிட்ட பாங்குதானா?

கொழும்பு நகரில் தங்கியிருந்த தமிழர்களையெல்லாம் இரவோடு இரவாக வெளியேற்றிய சிங்கள அரசுக்கு என்ன பெயர்?

தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களவர்களைத் திட்டமிட்டுக் குடியேற்றி, தமிழர்களை சிறுபான்மையினராக ஆக்கும் செயல்பாட்டுக்கான நோக்கம் என்ன?

இவையெல்லாம் தமிழர்களை நோக்கி மேற்கொள்ளப்படும் அழிவு வேலையா? அல்லது புலிகளோடு போர் புரியும் செயல்பாடா?

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் அரணாகச் செயல்படும் போராளிகளின் கதையையும் முடித்துவிட்டால், அதற்குப் பிறகு அங்கு வாழும் தமிழினத்தை முற்றிலுமாகக் கொன்று ஒழித்து, சிங்களப் பவுத்த அரசு என்று பிரகடனப்படுத்தி விடலாம் என்னும் சூழ்ச்சியும், வஞ்சகமும்தான் இதன் பின்னணியில் இருக்கின்றன என்பது வெளிப்படை!

எனவே, இந்திய அரசு, சிங்கள அரசாகச் செயல்படும் இலங்கை அரசை சரியான வழிக்குக் கொண்டுவர எது சரியான வழியோ அதனை கைக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாகும்.

-------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 24-10-2008

0 comments: