Search This Blog

23.10.08

விடுதலைப்புலிகள்மீது பழிபோட்டு தமிழின உணர்வாளர்களைக் கொச்சைப்படுத்தலாமா?விடுதலைப்புலிகள்மீது பழிபோட்டு தமிழின உணர்வினைக் கொச்சைப்படுத்துவதா?
உடனடியாக இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்
The Economic and Political Weekly-யின் தலையங்கம்
எம்மினத்தின் அழிவைத் தடுத்து நிறுத்திட முதல்வர் கலைஞர் அவர்களின்
முரசொலிப்பறை ஒலி கேட்டு மனிதச் சங்கிலியாய் அணிவகுப்போம் வாரீர்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

விடுதலைப்புலிகள்மீது பழிபோட்டு தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதுபற்றி ஆங்கில வார ஏடு எழுதிய தலையங்கத்தை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

வருகின்ற 24 ஆம் தேதி (நாளை) ஈழத் தமிழர் இன்னல் அகற்றப் பட்டு, அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு உதவிடவேண்டும் என்ற தமிழ் இன உணர்வுடன் மனிதநேயச் சிந்தனையாளர்கள், அனைத்துக் கட்சிகள் இணைந்து அழுத்தம் தந்திட, அறிவுப்பூர்வமாக வற்புறுத்திட நம் அய்க்கியத்தின் ஆழ்ந்த வெளிப்பாடாகத்தான் 24 ஆம் தேதி (நாளை) சங்கற்பச் சங்கிலி- மனிதச் சங்கிலி - தமிழர் சங்கிலியாக இணைந்து உயர்ந்து நிற்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ள நமது முதல்வர் கலைஞரின் அறிக்கை - உருக்கத்தை வழிந்தோடச் செய்த உணர்ச்சி அலைகளாய் மோதிக் கொண்டிருக்கின்றது.

கலைஞரின் உருக்கமிகு எழுத்துகள்

மேட்டில் விளையாடிய குழந்தை; நூறு அடி ஆழக் குழியில் - இரு நூறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் - தவறி விழுந்துவிட்டதென் றால் - அதைப் பார்ப்பவர்களுக்குப் பரிதாப உணர்ச்சி மட்டும் பறந் தோடி வந்தால் போதுமா? அவர்கள் எத்துணை அதிர்ச்சி கொண்டு இயந்திரங்களைப் பயன்படுத்தி அந்தக் குழந்தையை வெளியே கொண்டுவரத் துடியாய்த் துடிக்கிறார்கள். உரக் கிணற்றில் ஒரு குழந்தை விழுந்த செய்தி உலகத்தார் அனுதாபத்தையே பெற்று விடும்போது, பழந்தமிழன் வாழ்ந்த பகுதி - ஆண்ட பகுதி - நமது கரிகாலனும், ராஜராஜனும், ராஜேந்திர சோழனும் கடல் கடந்தும் களம் கண்டு போரிட்டு; கடாரத்திலே ஏற்றினார்களே புலிக்கொடி; அது புவியாண்ட கொடி அல்லவா!
அந்தக் கொடி நிழலில் வாழ்ந்தோர் - ஆண்டோர் - இன்று இலங்கையிலே தாழ்ந்தோர் - மாண்டோர் என்ற கணக்கில் அல்லவா வருகின்றனர்! அந்தோ தமிழர்களே, உங்களுக்காகக் குரல் கொடுக்கவும் முடியாமல், இங்குள்ள தமிழன் குறுக்கே நிற்கின்றானே!
அங்கே போர் நின்று விடுமோ? அமைதி திரும்பிவிடுமோ? கள்ளிக்காடு சூழ அவதியுறும் இலங்கைத் தமிழன் ஆறுதல் பெற அங்கே முல்லைப்பூ பூத்துவிடுமோ என்று முட்டிக்கொண்டு கதறவும் முடியாமல், அய்யோ இலங்கைத் தமிழர் இனம் காப்பாற்றப்பட்டு விடும் போலிருக்கிறதே என்று. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற பாடலை மாற்றிப் பாட முனைந்து, தமிழன் என்று சொல்லடா, தழை இலைகளை மெல்லடா என்றல்லவா பாடிட விரும்புகிறான் துரோகத் தமிழன் என்று எழுதியுள்ளார் முதல்வர் கலைஞர்.

குள்ளநரிக் கூட்டத்துக்கும், விபீடணர்களுக்கும் பதிலடி!

அவர்களுக்குப் பதில் கூறி அத்தகைய துரோகத்தையும், தமிழ் இன உணர்வை - மனிதநேயத்தைக் காட்டுவதே குறுகிய மொழி வெறி என்று கூறும் குள்ளநரிகளின் கூட்டத்திற்கும், அதற்குத் தூபம் போடும் நம் இனத்து விபீடண ஆழ்வார்களுக்கும் தகுந்த பதிலடியாகட்டும்! நமது இணைந்த சங்கிலி - வரலாற்றின் இணையற்ற சங்கிலியாக நாளை நடைபெறும் மனிதச் சங்கிலியில் குடும்பம் குடும்பமாய் திரளுங்கள் தமிழர்களே!
மழை என்ன - அடை மழையானாலும், இடி மின்னல் வந்தாலும், சங்கிலி எழுச்சி சங்கிலியாக நடைபெற்றாகவேண்டும் என்ற உணர்வுடன், உறுதியுடன் திரளுங்கள் தமிழ்ப் பெருமக்களே!

இந்த நியாயமான மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்தி சில கோணல் புத்தி ஏடுகள் கோலங்கள் போட்டு தடுத்துவிட முயலுகின்றன!

“The Economic and Political Weekly”

இதழில் தலையங்கம்


பத்திரிகா தர்மம் என்ற பாஞ்சாலித்தனம் தான் பச்சையாக தமிழ்நாட்டில் கொடி பறக்கும் வேளையிலும், நடுநிலை தவறா ஏடுகளும் இல்லாமல் இல்லை என்பதற்கு அடையாளம் உலகின் பிரசித்திப் பெற்ற ‘The Economic and Political Weekly’ என்ற ஆங்கில வார ஏட்டின் தலையங்கத்தில் ‘Humanitarian crisis in Srilanka’s Final Battle’ என்ற தலைப்பில் அங்குள்ள ஈழத் தமிழர்கள் எத்த கைய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை எடுத் துக்காட்டி, தமிழ்நாடு இந்தியா மட்டுமல்ல; அதைக் கண்டித்து உலகின் பற்பல நாடுகளும் வரும் நிலை உருவாகியுள்ளது என்று எழுதியுள்ளது.

அதன் சில முக்கிய பகுதிகள் இதோ:-
“Yet this ‘military’ argument ignores the fact that the Sri Lankan Government has been showing no great concern for the hundreds and thousands now on the verge of starvation. Earlier this week UN convoys of food had to turn back because neither side was willing to temporarily end the fighting to allow relief to reach civilians.
It is against this background the near-entire polity of Tamil nadu has pressed the Government of India to take a strong stance against the government of Sri Lanka’s military operations in Wanni. The threat of the Members of Parliament from Tamil Nadu to resign should not be interpreted as merely a chauvinist response to the fact that the LTTE is on the verge of a military defeat.

இதன் தமிழாக்கம் வருமாறு:-

இலங்கையில் நடக்கும் இறுதிப் போரில் மனிதநேயப் பண்பு மறைந்து போனது
இன்று நூறாயிரக்கணக்கான மக்கள் உணவின்றி பட்டினியின் பிடியில் சிக்கித் தவிப்பதைப் பற்றி சிறீலங்கா அரசு சிறிதும் அக்கறை காட்டவோ, கவலைப்படவோ இல்லை என்ற உண்மையை, ராணுவத்தீர்வு எனும் வாதம் காண மறுக்கிறது.
நிவாரணப் பொருள்கள் பொதுமக்களைச் சென்றடைவதற்காக தங்களின் போரைத் தற்காலிகமாகமாவது நிறுத்திக் கொள்ள இரு தரப்பினரும் தயாராக இல்லாத காரணத்தால், இந்த வாரத் துவக் கத்தில் உணவு போன்ற அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற அய்க்கிய நாடுகள் அமைப்பின் லாரிகள் திரும்பி வர நேர்ந்தது.
இந்தச் சூழ்நிலையின் பின்னணியில்தான், தமிழ் நாட்டில் உள்ள - ஏறக்குறைய - அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு முகமாக வவுனியாவில் நடைபெறும் சிறீலங்கா ராணுவத் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு உறுதியான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. பதவி விலகுவோம் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த எச்சரிக்கைக்கு, தற்போது விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்படும் நிலையில் உள்ளனர் என்ற காரணத்தால் விடப்பட்டது என்று எவரும் தவறான விளக்கம் அளிக்கக்கூடாது; தப்புக் கணக்கு போடக்கூடாது.
மேலும் அந்த ஏடு கூறுகிறது:
...அதுமட்டுமல்ல... கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன் (விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்ட) போர் நிறுத்தத்தைத் தொடர்ந்த சம்பவங்கள் இலங்கை அரசின் எப்படிப்பட்ட மொழி வெறி, இனவெறி முகம்தான் என்பதைக் காட்டியது.

எவ்வளவோ வார்த்தை ஜாலங்களை வைத்து வர்ணித்த சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பிறகு பல இனங்களைக் கொண்ட சமுதாயமான ஒரு நாடாக இருக்கும் என்று உதட்டளவில்கூட கூறவில்லை.

அங்கு ஆளும் அரசியல் வர்க்கம் வெளிப்படையாகவே அது ஒரு சிங்கள நாடுதான் என்று கூறி, தனது இராணுவத்திற்கு முழு அதி காரத்தை வழங்கியதோடு, சிங்களவர்களுக்குச் சம அந்தஸ்தை மற்ற சிறுபான்மையினர் கேட்கவே உரிமை இல்லை என்றே கூறினர்; இந்நிலையில், வன்னியில் இப்போது நடக்கும் மூர்த்தண்யமான போருக்கு எதிராக தமிழ்நாடு கிளர்ந்து எழுந்து கண்டனக்குரல் எழுப்புவது கண்டு யாரும் வியப்படைய வேண்டியதில்லை. மனிதநேயத்திற்கு எதிராகத் தற்போது நடக்கும் போர் நாளுக்கு நாள் மேலும் மோசமடையவே செய்யும் நிலை உள்ளதால், இந்திய அரசு தலையிட்டு, இந்த ஆபத்தான போர் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என்ற கருத்து மேலும் அதிகமாக வலுப்பெறும் நிலையே ஏற்படும் என்று எச்சரித்துள்ளது அந்த ஆங்கில வார இதழ்.

“But the Sri Lankan Government for its own part has shown its chauvinist face in the events following the end of a lame duck cease-fire two years ago. For all its rhetoric of building an inclusive Sri Lanka after defeating the LTTE, the Sri Lankan Government today does not even pay lip service to the idea of a multi-ethnic society. The ruling Political class openly talks of a “Sinhala” Country and the military, given a free hand by the Government, has been making unacceptable political statements about the minorities having no right to an equal status. So it is not surprising that the Tamil Nadu polity has felt a need to express its strong anger against to Sri Lankan action in the Wanni. The current humanitarian crisis in the north of Sri Lanka could well worsen.”

விடுதலைப்புலிகள்மீது பழிபோட்டு தமிழின உணர்வாளர்களைக் கொச்சைப்படுத்தலாமா?
இதிலிருந்து இரண்டு செய்திகள் புரிகின்றன.

1. அங்குள்ளவர்கள் அவதிப்பட்டு காடுகளிலும், வனாந்தரங் களிலும் வதியும் 2 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்களுக்குப் பாது காப்பும், பட்டினியற்ற வாழ்வும் கிடைக்கச் செய்யவேண்டுமானாலும், உடனடியாக சிங்கள அரசு அங்கு தனது இராணுவ நடவடிக்கை களை நிறுத்திடவேண்டும். அதைத் திட்டவட்டமாக வற்புறுத்திட வேண்டும்.

2. இங்குள்ள பார்ப்பன ஏடுகள் சொல்வதுபோல், இப்போது ஏற் பட்டுள்ள உணர்வு வெறும் தமிழ்மொழி வெறியை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உணர்வு (Tamil Chavanism) என்று வர்ணிப் பது; விடுதலைப்புலிகளைக் காப்பாற்றும் நடவடிக்கை என்று பழி போட்டு, தமிழ்நாட்டின் உணர்வினை கொச்சைப்படுத்துவது நியாயமற்றது - உண்மைக்கு மாறானது என்று விளக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய அரசும், மயக்கத்தில் உள்ள சில வெட்கங் கெட்ட தமிழர்களும் உணர்ந்தாக வேண்டும்!

எரிகிற வீட்டில் பிடுங்கியதுவரை ஆதாயம் என்று அரசியல் லாபம் தேடிட தமக்கு ஒரு சந்தர்ப்பம் என்ற சிலர் காணும் கனவுகளும் கலைக்கப்பட்டு விட்டுவிடும் - 24 ஆம் தேதி தமிழர் எழுச்சி காவியமாய் அமையும்போது.

கலைஞரின் முரசொலி கேட்டு
கூடுவோம் - வாரீர்!


எனவே, தமிழர் இனம் - மனம் இரண்டும் ஒன்றுபட்டு நிற்போம்.

எம்மினத்தை அழிவிலிருந்து காக்க முதல்வர் கலைஞரின் முரசொலி பறை ஒலி கேட்டு பாங்குடன் கூடுவோம், வாரீர்! வாரீர்!!


----------------------- "விடுதலை" 23-10-2008

2 comments:

தேவன் said...

ஈழத்தின் துயரை சுமக்கும் உங்கள் பணிகளுக்கு நன்றிகள் நண்பரே!

தமிழ் ஓவியா said...

நன்றி தோழர்.