Search This Blog

27.10.08

நூற்றுக்கு நூறு மன நிறைவு இல்லையென்றாலும் இவ்வெழுச்சிமூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் மிகப்பெரிய திருப்பம் இது!* ஈழத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள் அனுப்பப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
* போரை நிறுத்தி அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
* முதலமைச்சரின் முதிர்ச்சியான அணுகுமுறையும், கட்சிகளைக் கடந்து தமிழர்கள் காட்டிய உணர்வுமே இதற்குக் காரணங்களாகும்
* உணர்ச்சிவயப்பட்டு உரையாற்றிய நமது சகோதரர்களை கருணை கொண்டு முதல்வர் விடுதலை செய்யக் கோருகிறோம்

நூற்றுக்கு நூறு மன நிறைவு இல்லையென்றாலும்
இவ்வெழுச்சிமூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் மிகப்பெரிய திருப்பம் இது!

இலக்குகளை முற்றிலும் அடைய
ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த 14.10.2008 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்திட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இலங்கையில் அப்பாவித் தமிழர்களான ஈழத் தமிழர்கள் அங்கே பொழியும் குண்டு மழைகளால் செத்து மடிவதும், பாதுகாப்புக் கருதி காடுகளிலும், பாலை சதுப்பு நிலங்களிலும் ஓடி, வானத்தையே கூரையாகக் கொண்டு, வயிற்றுக்குக் கஞ்சி, குழந்தைகளுக்குப் பால்கூட கிடைக்காது பட்டினியால் சாகும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத்தில் அமைதி திரும்பிட வழி வகை செய்யவேண்டும் என்று வற்புறுத்தி, தமிழ்நாடே ஒன்று திரண்டு குரல் கொடுத்த நிலையில், உணர்ச்சிக் கொப்பளிக்க ஓரணியில் கைகோர்த்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நின்ற மனிதச் சங்கிலி, உலக வரலாற்றிலேயே புதுமையானது - சாதனை படைத்த அமைதிப் புரட்சியாகும்!

முதலமைச்சர் எடுத்த முயற்சிகள் வீண்போகவில்லை


நமது முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்த அடுக்கடுக்கான முயற்சிகள், தமிழ் மக்களின் எழுச்சி வீண்போகவில்லை; நல்ல விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றன!

சிங்கள அதிபராகவே நடந்துகொள்ளும் ராஜபக்சே நமது பிரதமரிடம் பேசியது; இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் இந்தியத் தூதுவரிடம் பேசி, இலங்கை அரசுக்கு இந்திய அரசின் கவலையையும், உணர்வுகளையும் தெரிவித்தது; அங்கிருந்து அவரது ஆலோசகர்களை ஒரு குழுவாக அனுப்பி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச வைத்தது; அங்குள்ள தமிழர்களைக் கொல்லாமல், காப்பாற்றிட அவர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்களை உடனடியாக அனுப்பிட ஏற்பாடுகள் செய்திருப்பது உள்பட அரசியல் தீர்வு காண உடனடியான ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் உத்தரவாத - உறுதி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருமதி சோனியா அவர்களின் முயற்சி


அந்நிலையில்தான், நேற்று (26.10.2008) அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் நமது முதல்வர் கலைஞர் அவர்களுடன் இரண்டுமுறை தொலைப்பேசியில் உரையாடிய பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் முதல்வரைச் சந்திக்கச் செய்து, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கியும் (தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உட்படுவதைத் தடுக்கும் வகையிலும்) கூறச் செய்தார்கள்.

முதல்வருடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு

நேற்று மாலை சென்னைக்கு வந்து நமது முதல்வர் அவர்களைச் சந்தித்தபோது, முதல்வர் அவர்கள் வற்புறுத்திய போர் நிறுத்தம், நார்வே நாடு போன்றவைகள்மூலம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துதல், ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு, உலக அமைப்புகளான செஞ்சிலுவை மற்றும் பொது அமைப்புகள்மூலம் உணவுப் பொருள்கள், மருந்துகள் அனுப்புதல், உடனடியாகத் தொடங்குவது போன்ற பல முக்கிய கோரிக்கைகளை இலங்கை அரசு ஏற்றுள்ளது என்பதை விளக்கியதோடு, ராணுவ நடவடிக்கைகள் பலன் தராது; அரசியல் தீர்வுதான் பயன் தரும் என்ற கருத்தினை ஏற்றுக்கொண்டு அதற்கான தொடர் முயற்சிகளை இந்திய அரசு முனைப்பாகச் செய்யும் என்று தெரிவித்து செய்தியாளர்களிடையேயும் வெளியுறவுத் துறை அமைச்சர் இதை விளக்கி அறிவித்தும் உள்ளார்!

அத்தோடு, இந்நிலையில், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களது ராஜினாமா தேவையில்லை; அம்முடிவைக் கைவிடச் சொல்லியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

கடந்த 14 நாள்களில் ஏற்பட்ட எழுச்சி ஆக்க ரீதியான பலன்கள் பலவற்றைத் தந்துள்ளது.

நூற்றுக்கு நூறு மன நிறைவு இல்லை


நமக்கு 100-க்கு 100 முழு மன நிறைவு இதன்மூலம் உடனடியாக ஏற்பட்டுவிட முடியாது என்றபோதிலும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போரில் இது ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது!

இதற்காக முழு முயற்சியை உணர்வுப்பூர்வமாக, அந்தரங்க சுத்தியுடன் செய்து, ஆத்திரம், ஆவேசம் கொள்ளவேண்டிய சில சந்தர்ப்பங்களில்கூட அமைதி காத்து, பொது நோக்கத்திற்குக் குந்தகம், கேடு விளைந்திடக் கூடாது என்பதற்காக மிகுந்த முதிர்ச்சியுடன் இப்பிரச்சினையைக் கையாண்ட நமது முதல்வர் கலைஞரின் அரசியல் அணுகுமுறை மிகவும் பாராட்டத்தகுந்ததாகும்!

தலையிருக்க வால்கள் ஆடிய நிலையிலும், நிதானித்து, தமிழ்நாட்டின் இந்த எழுச்சிக்கு எதிராகத் திட்டமிட்டே இவ்வுணர்ச்சியைத் திசை திருப்ப முயன்ற ஏடுகள், ஊடகங்கள், அரசியல்வாதிகள், இவர்களையெல்லாம் தலை கவிழச் செய்யும் அளவில், பெரும் பயனை - பாதுகாப்பினை ஈழத் தமிழர்களுக்கு உருவாக்கித் தந்துள்ளார் நமது முதல்வர்.

அவரது இந்நிலைக்கு ஒத்துழைப்புத் தந்த அனைத்துக் கட்சி அமைப்பின் தலைவர்களும் நமது பாராட்டுதலுக்கும் உரியவர்கள் ஆவார்கள்.

எங்கோ சில அபஸ்வரங்கள் கேட்டாலும், பெரும்பாலோர் கட்சி, ஜாதி, மதம், வயது, பால் வேற்றுமை பாராது ஒன்றுபட்டு நின்று - ஓங்கியது தமிழர் ஒற்றுமையும், உணர்வும் என்று 24 ஆம் தேதி கோத்த கரங்கள் தொடரவேண்டும் - தொய்வின்றித் தொடரவேண்டும்!

இணைந்த கைகள் பிரியக்கூடாது!

இவ்விளைவுகள் ஒரு தொடக்கமே தவிர, முடிவல்ல; முடிவின் முதல் தொடக்கமே இது!

போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை, அமைதியான வாழ்வு எம் தமிழின உறவுகளுக்கு என்பதை உலகம் அறியுமட்டும் கோத்த கைகள் பிரியக்கூடாது. உயர்ந்த கோடிக் கைகளால்தான் உயரிய கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன், இன உணர்வுடன் வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியும்!

ராஜினாமா - மறுபரிசீலனை செய்யவேண்டும்

இந்நிலையில், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும் முடிவை செயல்படுத்த இப்போது தேவை எழவில்லை என்பதால், நமது முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் உணர்ச்சி மேலீட்டால், உரை வீச்சுகளால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட நேர்ந்த, சிறையில் வதியும் எமது சகோதரர்களையும்கூட விடுதலை செய்யவேண்டும் என்று மனிதாபிமான அடிப்படையில் முதல்வருக்கு மிகுந்த வேதனையுடன் - வேண்டுகோள் விடுக்கிறோம்.

நம் கையைக் கொண்டு கண்ணைக் குத்தும் முயற்சிகளை இன எதிரிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றாலும், இப்பிரச்சினையில் - ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் எல்லை தாண்டியவர்கள்கூட அப்படி நாங்கள் ஏதும் பேசவில்லை; என்று மறுத்திடும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை தொடர்வது தேவையா? என்பதை நமது முதல்வர் அவர்களும், அரசும் கருணையோடு பரிசீலித்து நல்ல முடிவிற்கு வரவேண்டும்.கடுமையாய் அல்ல - கருணையால்!

தீவிரமான முயற்சிகளை முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சியினரும், அமைப்புகளும் - அரசியல் வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கையில், அதனைத் திசை திருப்பும் முறையிலோ, கொச்சைப்படுத்தும் வகையிலோ சில நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால், கைது நடவடிக்கைகளை எடுக்காமல், தமிழக அரசோ, முதல்வரோ இருக்க முடியாது; என்றாலும்கூட, ஒரு சுமுகச் சூழல் ஏற்பட, இதனை நமது முதலமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது.

கடுமையினால் வெல்ல முடியாதவற்றை, தன் கருணையால் வெல்லும் உள்ளம் படைத்தவர் நமது முதல்வர் என்பதை அறிந்ததால்தான் இதனை வேண்டுகோளாக வைக்கிறோம். உறவுகள் உணரும் காலமும் வரவே செய்யும்.

அந்தச் சகோதரர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டு அரசுக்கு தர்மசங்கடமான ஒரு நிலையை இந்த முக்கியமான காலகட்டத்தில் உருவாக்கலாமா?

முதல்வர் கலைஞர் அவர்களைப் போன்ற இன உணர்வுள்ள முதல்வரின் முயற்சியால்தான் - இந்த தி.மு.க. அரசு இருப்பதால்தான் - அசையாத மலைகள் அசைந்துள்ளன! ஓயாது பொழிந்த குண்டுமாரிகள் நிற்கும் வாய்ப்புகள், பேச்சுவார்த்தை என்ற வெள்ளி முளைத்தலும், கிழக்கு வெளுத்தலும்மூலம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது!

செல்லவேண்டிய தூரம் உண்டு

இல்லையேல், இவ்வளவு பெரிய பலன் - இவ்வளவு குறுகிய காலத்தில் கிட்டியிருக்குமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்னும் செல்லவேண்டிய இலக்குகள் ஈழத் தமிழர் முதல் இங்குள்ள தமிழர் நலம்வரை எவ்வளவோ உள்ளது!

அதையும் எண்ணிப் பார்க்கவேண்டும் அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டும் - இப்பிரச்சினையில்!

----------------------- நன்றி: "விடுதலை" - 27.10.2008

4 comments:

சிக்கிமுக்கி said...

தன் குடும்ப நலனுக்கே வாழ்க்கை என முடிவு செய்துவிட்ட ஏமாற்றுக் காரருக்குத் துணைபோகும் ஏய்ப்புரைகள்!

சே! இந்த இனம் அழிவதே நல்லது.

பரணீதரன் said...

அன்புள்ள ஓவியா அவர்களுக்கு நான் என்னுடைய ப்ளோக்கை தமிழ் மனத்தில் பதிவு செய்து விட்டேன். அவர்களும் என்னுடைய ப்லோக் பதிவு செய்ய பட்டதாக என்னுடைய மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பிவிட்டார்கள். இதன் பிறகு நான் எப்படி என்னுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பது. அந்த வழியை சொல்லுங்கள்.

வள்ளிமகன் said...

//// தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும் முடிவை செயல்படுத்த இப்போது தேவை எழவில்லை என்பதால், நமது முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.////


ஆமாம்,ஆமாம்!

போர் நிறுத்தப்பட்டு விட்டது!

இடம் பெயர்ந்து சொல்லொணாத் துயருற்ற ஈழத்தமிழரின் துயர் துடைக்கப்பட்டு விட்டது!

நார்வே தலைமையில் அமைதிப்பேச்சு தொடங்கி விட்டது!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் படி
எல்லாம் நடைமுறைப் படுத்தப் பட்டு விட்டன!

என்ன, இன்னும் வெற்றி விழாவிற்குத் தான் நாள் குறிக்கவில்லை!

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் பதவி விலக வேண்டியதில்லை!

மானக்கேடு! வெட்கக்கேடு!

butterfly Surya said...

சுயமரியாதை சிங்கம் வீரமணி.. பெரியாரின் கொள்கைகளை குழி தோண்டி புதைந்த உத்தம சீலரே..

இதைவிட நமீதா வீட்டில் பாத்திரம் தேய்த்து.. புடவை தோய்க்கலாம்..

தூ.. இதெல்லாம் ஒரு பிழைப்பா..???