Search This Blog

17.10.08

பெரியார் பார்வையில் தீபாவளி



அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும், நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.


சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள். இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது. கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போவதாலும், பட்டாசு சுடும்போது திடீரென்று வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப்பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.

-----------------------ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு 'குடிஅரசு' 20.10.1929)

0 comments: