Search This Blog

9.10.08

நாகம்மை குழந்தைகள் இல்லம் - ஆதரவற்றோர் இல்லம் அல்ல; ஆதரவு பெற்றோர் இல்லம்




நேற்று கடிதம் ஒன்றினைப் பார்த்தபோது, உவகை பொங்கியது; உண்மையான தொண்டறம் - மானுடநேயம் மங்காது, மடியாது என்ற நல்ல நம்பிக்கையை நம்முன் ஏற்படுத்தி, உற்சாகத்தை அள்ளித் தந்தது!

உங்கள் ஆர்வத்தை அணை போட்டுத் தடுக்காமல் அக்கடிதத்தை அப்படியே வெளியிடுகிறேன்.

நன்றி மறிவாத நல்லவர்கள், பகுத்தறிவின் வல்லவர்கள், வேர் செறிவாக, செம்மையாக இருந்தால் விழுதுகளும் பழுதுபடாது வளர்வர்; பெருமைகொள் வாழ்க்கைக்குரியவர் ஆவர் என்பதற்கு எடுத்துக்காட்டு இக்கடிதம்:

அனுப்புதல்:

டாக்டர் சங்கீதா பிஎச்.டி.,
4/119கு, குகாஸ்ரம் சாலை
ஃபேர்லண்ட்ஸ்
சேலம் - 636 016

பெறுநர்:

டாக்டர் கி.வீரமணி எம்.ஏ.,பி.எல்.,
தலைவர், திராவிடர் கழகம்
பெரியார் திடல்
50, ஈ.வி.கே. சம்பத் சாலை,
வேப்பேரி
சென்னை - 600 007

அன்பார்ந்த அய்யா,

நான் தி மாடர்ன் ரேசனலிஸ்ட், உண்மை ஏடுகளுக்கு ஆயுள் சந்தாதாரர் (சந்தா எண் முறையே 1401/சி மற்றும் 21435).

காலஞ்சென்ற என் பாட்டனார் திரு.எஸ்.கிருபாகரன் (சேலம் ஓய்வு பெற்ற வட்டாட்சியர்) தந்தை பெரியாரின் ஆழ்ந்த பற்றாளரும் வல்லிய பகுத்தறிவாளரும் ஆவார். திருச்சியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நான் சிறப்பாக நன்கொடை அளிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

அவரது அந்த விருப்பத்தினை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்கு இப்போது கிட்டியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்காக 25000 (இருபத்தைந்தாயிரம்) ரூபாய்க்கான காசோலை (எண் 985481 நாள் 6.10.2008) இத்துடன் இணைத்துள்ளேன். நாகம்மையார் குழந்தைகள் இல்லக் குழந்தைகளின் நலனுக்கு மட்டுமே தொகை செலவிடப்பட வேண்டும் என்பது அன்னாரது விருப்பம்.

என் சித்தி டாக்டர் கே.லலிதா, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ., அவர்களும் நாகம்மையார் இல்லத்திற்கு ரூ.10,000/- அளித்துள்ளார். டாக்டர் கே. லலிதா, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ.,

சி67, பிள்ளையார் கோயில் தெரு,

சுவர்ணபுரி இரண்டாம் வாசல்

சேலம் - 636 004

தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன். நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

சங்கீதா


டாக்டர் சங்கீதா அவர்களை நான் பார்த்ததில்லை. ஆனால், அவரது பாட்டனார் வட்டாட்சியர் மானமிகு எஸ். கிருபாகரன் அவர்கள்பற்றி அறிவேன்.

அந்த வேர் தந்த விழுதின் விழுமிய பண்பான கடிதமும், இயக்கத்திற்கு அவர்கள் செலுத்தும் நன்றிக் காணிக்கையும் புல்லரிக்க வைத்தது! அதுபோல அவர்களது சித்தியின் சீரிய செயலும் நமது மகிழ்ச்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகியுள்ளது!

நன்றி என்பது பயனடைந்தோர் காட்டவேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்த்தால் அது சிறுமைக்குணமேயாகும் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த இலக்கணத்திற்கேற்ற இலக்கியம்தான் இக்கடிதமும், இரண்டு காசோலைகளும்!

திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லம் - ஆதரவற்றோர் இல்லம் அல்ல; உலகம் முழுவதும் உள்ள பாசமுள்ள - கடமையுணர்ச்சியுடன் இயக்கும் ஆதரவு பெற்றோர் இல்லம் என்பது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.


அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் தொடங்கிய நாகம்மை குழந்தைகள் இல்லத்தை நாம் அனாதை இல்லம் என்றோ, ஆதரவற்றோர் இல்லம் என்றோ அழைப்பதில்லை - அன்பும், பாசமும் ஊட்டும் திருமிகு சங்கீதாக்களும், டாக்டர் லலிதா அம்மையார் போன்றவர்களும் உலகம் முழுவதும் பரவி - ஆதரவுக்கரம் என்பதைவிட பாசப் பொழிவினைத் தரும் மானுட நேயர்களும் இருக்கிற காரணத்தால்!

பேரப்பிள்ளைகளின் பெருமையைப் பற்றி அண்மையில் வாழ்வியலுக்கு இதுவும் ஒரு ஆதாரம்தானே!

நன்றிப்பெருக்கு, மனிதநேயம் விருப்பங்களையும், விழைவுகளையும் வினைத்திட்பத்தோடு செயலாற்றி மகிழும் தன்மை எல்லாம் இந்த கடிதத்தின் இரண்டு காசோலைகளிலும் உள்ளடக்கமே!

வாழ்க! வளர்க மனிதநேயம்!

-------------தி.க.தலைவர் மீ.கி. வீரமணி அவர்கள் 9-10-2008 "விடுதலை" யில் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள்.

0 comments: