Search This Blog

17.10.08

பொது ஜனங்களின் சமத்துவத்துக்கும் - சுயமரியாதைக்கும் இடைஞ்சலா யிருப்பவர்கள் பிராமணர்களே!
சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுசீந்திரம் என்னுமிடத்தில் சத்தியாக்கிரகம் நடைபெறும் விஷயத்தைப் பற்றி இதற்கு முன் நமது பத்திரிகை மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதை வாசகர் களறிவார்கள். அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் விஷயத்தையும் இந்த இதழ் 3-வது பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடைந்து வெகுநாட்களாகிவிட வில்லை. அதற்குள்ளாக மற்றோர் இடத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட தோன்றியுள்ள சத்தியாக்கிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். அநீதியும், அக்கிரமமும் தொலைய வேண்டுமானால் வெறும் சட்டங்களாலும், எழுத்தாலும், பேச்சாலும் முடியா தென்றும், சத்தியாக்கிரகமும் தியாகமுமே உற்ற சாதனமாகுமென்றும் பல தடவைகளில் வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் ஜாதிக் கொடுமையும், பிறவியினால் உயர்வு - தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலைய வேண்டியது அவசியமாகும். இக்கொடுமைகளை ஓர் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஜம்பமாக தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுதுவதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவதும் தன் மனசாட்சி அறியச் செய்யும் மகத்தான அக்கிரமமேயன்றி வேறல்ல.

மேலும், இவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு பொது .ஜனங்களை ஏமாற்றுவதும், எலெக்ஷன் பிரசாரம் செய்வதும் மிக மோசமான செய்கையாகும். தாங்கள் பிழைக்க வேண்டும், தங்கள் மக்கள் நன்றாயிருக்கவேண்டும், தங்கள் சமூகத்தார் மேன்மையான ஸ்திதியிலிருக்க வேண்டும், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாய் சாஸ்திரங்களையும், புராணங்களையும், இதிகாசங்களையும், மனு தர்மசாஸ்திரம் என்னும் அயோக்கிய நூலொன்றையும் காட்டிக்கொண்டு வயிறு வளர்ப்பதுடன், தங்கள் கட்சியைப் பலப்படுத்திக்கொள்ள சுயமரியாதையற்ற ஆண்மையற்ற சிலரைச் சேர்த்துக்கொண்டும் செய்யும் சூழ்ச்சிகளெல்லாம் நொறுக்கப்படவேண்டுமாயின், பொதுமக்கள் சர்வ ஜாக்கிரதையுடனிருந்து விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவைகளையெல்லாம் சுட்டிக் காட்டவல்லது சுயமரியாதையும், சத்தியாக்கிரகமும், உண்மையான தியாகமுமே என்று கூறலாம்.

நமது நாட்டிலேயே பிறப்பால் மனிதர்களாயிருந்தும், தாழ்த்தப்பட்டவர்கள் - கண்ணில் தென்படக் கூடாதவர்கள் - தங்கள் தெய்வங்களைத் தரிசிக்கக் கூடாதவர்கள் - தங்கள் வேதத்தைப் படிக்கக் கூடாதவர்கள் என எத்தனையோ லட்சம் பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கொடுத்துள்ள உரிமையைக்கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம். இந்நிலையில் நமக்கு சுயராஜ்யமும், விடுதலையும் அத்தியாவசியமா? அல்லது முன் கூறியவர்களின் முன்னேற்றமும், சுயமரியாதையும் அத்தியாவசியமா வென்பதை பொது ஜனங்களே சிந்திக்க வேண்டும்.

சமத்துவம், சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள மக்களனைவருக்கும் ஏற்பட்டாலன்றி, அதற்கு முன்னர் கிடைக்கும் சுயராஜ்யம் ஓர் ஜாதியார் பிழைப்பதற்கு ஆதாரமாயிருக்குமேயல்லாது வேறல்ல. சுயராஜ்யம் கிடைக்கும் முன், நம்மவர்களுக்குள் எவ்விஷயத்திலும் ஒற்றுமை , சமத்துவம், சுயமரியாதை ஏற்படக்கூடிய விதமான வேலைகளைச் செய்து கொள்ளவேண்டியது மிக்க அவசியமாயிருக்கின்றது. சமத்துவம் ஏற்படுமானால் பிராமணர்கள் பாடு திண்டாட்டமாகிவிடுமென்பது உண்மையே. முன்னர் கூறிய நூல்களைக் காட்டிக்கொண்டு பிராமணர்கள் வயிறு வளர்ப்பது நின்று போய்விடும். சுயமரியாதை உண்டாகிவிடுமானால் பிராமணர்கள் நிலைமை இப்போதிருப்பது போலிராமல் கீழ் நிலையடையலாம். இங்ஙனம் நேரிடுமென்பதைக் கருத்தாகக் கொண்டே ராஜீய பிராமணர்களாகட்டும், சில சர்க்கார் உத்தியோக பிராமணர்களாகட்டும் அவர்கள் மிதவாதிகளோ, சுயேச்சைக் கட்சியோ, ஆச்சாரியாரோ, ஐயங்காரோ, ஐயரோ, பந்துலுவோ எவராயிருந்தபோதிலும் சரி ஒன்றுகூடிக்கொண்டு பிராமணரல்லாதாரை - தமிழர்களை எதிர்த்து நிற்கிறார்கள்.

நிற்க, பிராமணர்கள் அநியாயம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; திருவிதாங்கூரிலும் அதிகமாக இருக்கின்றதை வைக்கம்சத்தியாக்கிரகத்தின் மூலியமாய் யாவரும் அறிவார்கள். திருவாங்கூர் கவர்மெண்டார் இவ்வநியாயங்களுக்கு உடந்தையாயிருக்கிறார்களோவெனச் சிலர் சந்தேகிக்கக்கூடும். திருவிதாங்கூர் ராஜ்யத்திலுள்ள பொது ரஸ்தாக்களும், பொதுக் குளங்களும் ஜாதிமத வித்தியாச மில்லாமல் பொது ஜனங்கள் அநுபவிக்கலாம் என சில வருஷங்களுக்கு முன்னரே உத்தரவு போட்டிருக்கின்றனர். ஆக கவர்மெண்டார் பேரில் குற்றமில்லை. பிராமணர்கள் தவிர்த்த ஏனைய ஜாதியர்களான நாயர் முதலானவர்கள் தங்கள் சமூக மகாநாடுகளில், பொது ரஸ்தாக்களிலும், பொதுக் குளங்களிலும் ஜாதி மத வித்தியாசங் காட்டலாகாது எனத் தீர்மானம் செய்திருக்கின்றனர் - செய்து வருகின்றனர். ஆக பொது ஜனங்களின் சமத்துவத்துக்கும் - சுயமரியாதைக்கும் இடைஞ்சலா யிருப்பவர்கள் பிராமணர்களேயாகும். இதிலும் மலை யாள நம்பூதிரிப் பிராமணர்களைவிட அங்கு பிழைக்கவும் அங்குள்ள கோவிற் சோற்றைச் சாப்பிடவும் சென்றுள்ள தமிழ்நாட்டுப் பிராமணர் களே அதிக இடைஞ்சல் செய்பவர்களென்று கூறத் தகுந்த ஆதாரமுண்டு.

இவர்களின் இடைஞ்சல்களும், தொந்தரவும் தொலைய வேண்டுமானால், சத்தியாக்கிரகந்தான் சிறந்த வழி. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்.

தமிழ்நாட்டினர், வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும், ஆட்கள் உதவியும், ஒத்தாசை செய்தார்களோ அவ்வாறே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும், தாங்கள் நன்கொடை யளித்து ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறோம்.

பிராமணர்கள் பலரும், மற்ற வகுப்பைச் சார்ந்த சில சுயநலக் காரர்களும் இச்சத்தியாக்கிரகத்திற்கு எதிரிடையாயிருப்பார்களென்பது உண்மையே. இத்தகைய குறுகிய நோக்கமுடையோர் வெகு சிலரேயானபடியால் பொதுமக்கள் இவர்களைப் பற்றிக் கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை. தங்கள் கடமை எதுவோ; எது நியாயமென தங்கள் மனதில் படுகிறதோ அதை மாத்திரம் கெட்டியாக பிடித்துக்கொண்டு இப்பேர்ப்பட்ட சமயத்தில், இத்தகைய சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம். தமிழ்நாட்டு தேசீய வாலிபர்களானாலும் சரி, மற்றும் எந்தக் கட்சியைச் சேர்ந்த எவரேயானாலும் சரி அனைவரும் சத்தியாக்கிரகத்திற்குத் தொண்டு செய்ய அவசியமேற்படும் போது தயாராயிருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

தமிழ்நாட்டார் சுசீந்திரத்தில் உரிமைப் போர் நடப்பதற்கு தங்களால் இயன்ற நன்கொடையைக் கொடுக்கவும் தயாராயிருக்க வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெறுமாக !

-----------------------------தந்தைபெரியார் - "குடிஅரசு"-31.1.26

0 comments: