Search This Blog

28.10.08

பெரியாரும் குடிஅரசு இதழும்



நமது பத்திரிகை


'குடி அரசு' ஆரம்பமாகி ஒரு வருஷம் முடிந்து இரண்டாம் வருஷம் ஆரம்பமாகிவிட்டது. இவ்வொரு வருஷ காலமும் 'குடி அரசு' தன்னால் கூடியதை ஒளிக்காமல் உண்மையோடு உழைத்து வந்திருக்கிறது என்பதைப் பற்றி நாமே உணர்ந்து திருப்தி அடைகிறோம். 'குடி அரசை' ஆதரித்தும் ஆசி கூறியும் வரும் சமாசாரக் கடிதங்களிலிருந்தே இதை உணருகிறோம்.

இதுவரை 'குடிஅரசி' ன் தொண்டைப் பற்றிச் சிலாகித்து சுமார் முந்நூறு நானூறு கடிதங்களும் பிகுடிஅரசிபீன் மீது குற்றம் சுமத்தி சுமார் 3,4 கடிதங்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சிலாக்கியமாய் எழுதியவர்களைப் பற்றி இதில் எழுத இடமில்லை; எழுதினாலும் தற்புகழ்ச்சியாக முடியும். ஆனாலும் குற்றங் கூறி எழுதியவர்களைப் பற்றி எழுதுவதற்கு இதில் இடமுண்டு. அதாவது, குற்றங்கண்டு எழுதிய கனவான்கள் நான்கு பேர் யாரென்றால்,

1. சிறீமான் எ. ரெங்கராம் நாயக்கர், ஆனைமலை.

2. சிறீமான் சுப்பிரமணிய ஐயர், நெரூர்.

3. சிறீமான் ராஜரெத்தின முதலியார், காஞ்சீவரம்.

4. சிறீமான் அ. குப்புசாமி முதலியார் , வேலூர்.

இவர்களுள் முதலாவதவர் எழுதியதாவது, "உமது பத்திரிகையின் நோக்கம் நல்லதேயாயினும் அதன் போக்கு நமக்குப் பிடிக்கவில்லை" என்றும், இரண்டாவதவர், "தாங்கள் செய்து வரும் வேலையை ஜஸ்டிஸ் கட்சியாரே செய்து வருவதால் இதை விட உபயோகமாகமுள்ளதான பழய ஒத்துழையாமையிலிறங்கி வேலை செய்வீர்களானால் நாங்கள் அநேகம் பேர் தங்களைப் பின்பற்றத் தயாராயிருக்கிறோம்" என்றும், மூன்றாவது, நான்காவதவர் மிகவும் கடினமான வார்த்தைகளால் அதாவது, "உமக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது; ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கத் துவங்கி விட்டீர்கள்; நீர் யோக்கியர் அல்ல" என்று எழுதியதோடு ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்கையும் செய்து எழுதியிருக்கிறார்கள்.

இதுவரை நமக்குள்ள சுமார் இரண்டாயிரம் சந்தாதாரர்களில் இந்நால்வர் அதிருப்திக்கே உள்ளாயிருக்கிறோம். இன்னும் அதிகமாயிருக்கலாமென்று சிலர் நினைக்கக் கூடுமென்றே அவர்கள் பெயரையும் காட்டி விட்டோம். அல்லாமலும் சுமார் 10,12 பேர் வரையிலும் காரணம் சொல்லாமல் பத்திரிகை இனி அனுப்ப வேண்டாம் என்று எழுதினார்கள்.

பத்திரிகைகளிலேயும் நமது போக்கை "பிராமணன்" என்கிற ஒரு கும்பகோணப் பத்திரிகையும் "தேசபந்து" என்கிற ஒரு சென்னைப் பத்திரிகையும்தான் இதுவரை அடிக்கடி பலமாய்க் கண்டித்து எழுதி வருகின்றன. சர்க்காராரும் நமது பத்திரிகை விஷயத்தில் கவனம் செலுத்தித்தான் வருகிறார்கள் என்பதற்கு உதாரணமாக நமக்கு எச்சரிக்கைகள் கொடுப்பதிலிருந்தும், நமது பத்திரிகையில் குறிப்பிடும் அரசாங்கம் சம்பந்தமானவையும் அரசாங்க உத்தியோகஸ்தர் சம்பந்தமான விஷயங்களையும் கவனித்து கடிதப் போக்குவரத்துக்கள் நடத்துவதிலிருந்தும் தெரிகிறோம்.

மற்றபடி நமது பத்திரிகையைப் பற்றி நம்மிடம் நேரில் பேசுகிறவர்களில் சிலர் "எல்லாம் சரி, பிராமணர்களைத் திட்டுகிறீர்கள். அது போனாலும் போகட்டும், அதிக கடினமான வார்த்தை களால் திட்டுகிறீர்கள். அது சில சமயங்களில் நமது 'குடிஅரசு' பத்திரிகையின் யோக்கியதையைக் கெடுத்து விடுகிறது" என்கிறார்கள். இவ்விரண்டும் உண்மையாயுமிருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்வது? இதன் ஆசிரியர் முதலில் சர்க்காருக்கு எவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தாரோ அதைவிட அதிகமாகத்தான் பிராமணர்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்து வந்தவர். சர்க்கார் சார்பாக எத்தனையோ கலெக்டர்கள், நிர்வாகப் பதவி அங்கத்தினர்கள் முதலியவர்களின் சிநேகமும் கவர்னர் முதலியோரின் நன்றியறிதல் கடிதங்களும் பட்டம் முதலியவைகளுக்கு சிபார்சுகளும் பெற்றி ருந்தாரோ, அதுபோலவே அநேக பிராமணர்களின் சிநேகமும், உள்ளன்பும், உபசாரப் பத்திரங்களும், தலைவர் பட்டங்களும் பெற்றவர்தான். ஆனால், அவர் சர்க்காரின் குற்றங்களை எடுத்துச் சொல்லும் போதும், சர்க்காரை கடினமான வார்த்தைகளால் திட்டும்போதும், அதற்காக ஜெயிலுக்குப் போகும் போதும், "நாயக்கர் வெகு தைரியசாலி", "உண்மையான தேசபக்தர்", "வீரர்" என்கிற பெயர் பெற்றார். ஆனால், அவர் பிராமணர்கள் குற்றத்தை எடுத்துச் சொல்லும்போதும், அதற்கேற்ற 'கடினபதங்கள்' உபயோகிக்கும்போதும் பிராமணத் துவேஷியாகி விடுகிறார். 'கடினபதம்' என்றால் என்ன? பதங்களைப் பார்த்தால் போதுமா? குற்றங்களையும் குற்றம் செய்யும் ஆட்களையும் பார்க்க வேண்டாமா? குதிரையை அடிப்பதானால் கொரடாவை மேலே படும்படி வீசினால் போதும்; எருமையை அடிப்பதானால் பெரிய தடி எடுத்துத்தான் ஓங்கி அடிக்க வேண்டும்; யானையை அடிப்பதாய் இருந்தால் கூர்மையான இரும்புத்தடி (அங்குசம்) கொண்டு குத்த வேண்டும். இவற்றை அறியாமல் பேசுவதில் என்ன பலன்? பிராமணர்களிடம் நமக்குத் துவேஷமில்லை. அவர்கள் சூழ்ச்சிக்கு நமது நாட்டில் யோக்கியதை இருக்கும் வரை நமக்கு விடுதலையில்லை என்பது நமது துணிபு. ஆகவே, இவ்விரண்டில் பிராமணர் புன்சிரிப்பை எதிர்பார்ப்பதா? விடுதலையைஎதிர்பார்ப்பதா?


நமது மக்களுக்கு பிராமண சூழ்ச்சியை அறிய சக்தியில்லை. பிராமணர்களின் வெகுகாலத்திய சூழ்ச்சிப் பிரசாரத்தால் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் 'பக்தி' காரணமாய் நமது பதங்கள் சிலருக்குக் கடினமாகக் காணப்படுகிறது. அவர்களால் நமது குடி கெடுவது நமக்குக் கடினமாய்த் தோன்றுவதில்லை. நாமும் முதலில் மரியாதையாகத்தான் எழுதினோம். அவர்களுக்கு அது சரியானபடி தைக்காததால் தைக்கும்படி எழுதுகிறோம். அதிலும் பிரயோஜனமில்லை. ஆதலால், நமது மக்களுக்குத் தெரியும்படி எழுதுகிறோம்.


'குடிஅரசு' எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநல வாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால் தானே மறைந்து விடுமேயல் லாமல் மானங்கெட்டு விலங்குகளைப்போல் உயிர் வாழாது.

'குடி அரசு' தோன்றிய பிறகு அது ராஜீய உலகத்திலும் சமூக உலகத்திலும் பெரிய மாறுதல் ஏற்படுத்தியிருக்கிறது என்று பலர் நமக்கு எழுதியிருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம். 'குடிஅரசு' ஆசிரியர்களுக்கு உண்மை நண்பர்களாய் இருந்து வந்த சிறீமான்களான டாக்டர் வரதராஜூலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார் முதலியவர்களின் கூட்டுறவு குடிஅரசு க்குக் கிடைத்திருக்குமேயானால் அல்லது குறைந்தபட்சம் அவர்களுடைய எதிர்ப்பாவது இல்லாதிருக்குமானால் இன்னும் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கும். என்ன செய்வது? உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டியதுதான்.

இவ்வருஷத்தில் குடிஅரசுக்கு அதிக வேலையிருக்கிறது. அதாவது, வரப்போகும் தேர்தலுக்காக சிறீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் அவர்கள் சென்னைப் பிரசங்கத்தில் காங்கிரஸின் பேரால் பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க ஊரூராய், கிராமம் கிராமமாய், தெருத் தெருவாய்த் திரிந்து தனது தொண்டைக் கிழியும் வரை (கிழிந்தாலுங்கூட) பிரசாரம் செய்யப் போவதாய் சொல்லியிருக்கிறார். சிறீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் மதுவிலக்கின் பெயரால் பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்களை எழுதிக்கொண்டு வருகிறார்.

சிறீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் தன் பணத்திமிராலும், மடாதிபதிகள் மகந்துகள் பணத் திமிராலும், கஞ்சிக்கில்லாத பிராமண ரல்லாத பிரசாரர்களை நியமித்து விஷமப் பிரசாரம் செய்வதன் மூலமும் பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக்கொடுக்க உறுதி கொண்டிருக்கிறார். டாக்டர் நாயுடு அவர்களோ, எந்தக் கட்சி ஜெயிக்கும் எந்தக் கட்சி தோற்கும் என்று ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சிறீமான்கள் சர்க்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆரியா , எஸ். ராமநாதன், தண்டபாணிப் பிள்ளை போன்றவர்கள் மனதில் மாத்திரம் வேகமாயிருக்கிறார்களே ஒழிய வெளியில் வந்து அவர்களைப் போல் வேலை செய்ய கவலையில்லாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் குடிஅரசுக்கு இருக்கும் பொறுப்பையும் கஷ்டத்தையும் நினைத்துப் பாருங்கள்.

'குடிஅரசின்' போக்கையும் அதன் தொண்டையும் விரும்புகிறவர்கள் இது சமயம் முன் வந்து உதவாவிடில் எதிர் பார்க்கும் பலனை அடைய முடியாது. அதாவது ஒவ்வொரு பட்டணங்களிலும் பிகுடி அரசுபீக்கு கெளரவ ஏஜெண்டுகள் முன்வர வேண்டும். அவர்கள் பத்திரிகையைத் தெருத் தெருவாய் விற்க வேண்டும். சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நமது முன்னேற்றத்திற்கு விரோதமான பத்திரிகைகளை விலக்கச் செய்யவேண்டும்.


இனி ஒன்றிரண்டு மாதங்களுக்குள் ஆயிரம் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் அதிகமாகச் சேரவேண்டும். ஆங்காங்கு உள்ளவர்கள் கிராமம் கிராமமாய்ச் சென்று சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும்.

இது சமயம் பிராமண சூழ்ச்சிகளைத் தைரியமாய் வெளிப்படுத்த இரண்டே பத்திரிகைகள் உழைத்து வருகின்றன. அதாவது 'திராவிடன்' என்னும் தினசரியும் 'குடிஅரசு' என்னும் வாராந்திரமுமேயாகும். 'திராவிடனும்' குடி அரசும் குறைந்தது கிராமத்திற்கு ஒன்றாவது போகும்படி வேலை செய்ய வேண்டும். பிராமணர்கள் தங்களை ஆதரித்து தங்களுக்கு ஓட்டுச் செய்யும்படி பிரசாரம் செய்ய முக்கிய பட்டணங்களிலும் பிராமணரல்லாதாரைக் கொண்டே பத்திரிகை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். சில இடங்களிலும் ஏற்பாடாகி விட்டது. இன்னும் பல இடங்களில் ஏற்படப் போகிறது. இதை உணருங்கள் இதற்குத் தகுந்தபடி நடவுங்கள்.

---------------------------- தந்தைபெரியார் - குடிஅரசு-2.5.26

0 comments: