Search This Blog

31.10.13

காமன்வெல்த்-தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசைப்பற்றி...கி.வீரமணி


தமிழர் தலைவர் பேட்டி
பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

சென்னை, அக்.31- தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான உணர் வினை மதிக்காமல் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா பங்கேற்பதானது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைக் காங்கிரஸ் கை கழுவி விட்டது என்பதைத்தான் காட்டுகிறது என்றார் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள். கலைஞர் தொலைக்காட்சிக்கு இன்று (31.10.2013) அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கேள்வி: இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட் டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ளலாம் என்று காங் கிரஸ் உயர்மட்டக் குழு முடி வெடுத்திருப்பதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இலங்கையில் நடைபெறக் கூடிய காமன்வெல்த் மாநாட்டில் அங்கே நடைபெற்ற இனப் படு கொலை, போர்க்குற்றங்கள் ஆகியவை களை நிகழ்த்திய ராஜபக்சே அரசை, மறைமுகமாக ஆதரிப்பதைப் போன்று இந்திய அரசு கலந்து கொள் வது என்பது, ஒட்டுமொத்தமான தமிழர்களின் உணர்வுகளைப் புறக் கணிக்கின்ற ஒன்றாகும்.

இதனை வலியுறுத்தி, தமிழ் நாட்டுத் தமிழர்கள் அனைவரும் கட்சி, ஜாதி, மத பேதமின்றி அனை வரும் ஒருமித்த குரலிலே, பல்வேறு நிலைப்பாடுகளில் இருந்தாலும் ஒன் றாக இதனை வலியுறுத்தியுள்ளனர்.

டெசோ கூறியிருப்பது

ஏற்கெனவே, சில நாள்களுக்கு முன்னால், தமிழகத்தினுடைய ஒட்டுமொத்தமான உணர்வுகளை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் டெசோ அமைப்பின்மூலமாக பல மாதங்களுக்கு முன்னால் தெரிவித்து, ஆங்காங்கு அறப்போராட்டங்களும், கிளர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானமும், இதனை வலியுறுத்தக் கூடிய தீர்மான மாக இருந்தது. அனைவரும் அத் தீர்மானத்தினை வரவேற்றிருக் கிறோம்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஏழு கோடி மக்களுடைய முடிவு மட்டு மல்ல; உலகத் தமிழர்கள், பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களின் அனைவருடைய உணர்வுகளும் இதிலே பிரதிபலிக்கவேண்டும் என் கிற முறையில்தான், அனைத்துத் தரப்பினரும் இம்மாநாட்டினை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்ற ஒருமித்த குரலில் மத்திய அரசினை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று கூடிய காங்கிரஸ் உயர்மட்டக் குழு இலங் கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த தால், காங்கிரஸ், தமிழர்களுடைய உணர்வுகளை மதிப்பதற்குத் தயாராக இல்லை; டில்லி தயாராக இல்லை என்பதைத்தான் அது உலகத்திற்குப் பிரகடனப்படுத்தக் கூடியதாக இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட் டால், நிச்சயமாக தமிழர்கள் அவர்களைப் புறக்கணிப்பார்கள்.

இதன் விளைவு

இதனுடைய விளைவுகள் அரசியல் ரீதியாக பாரதூரமானதாக இருக்கும் என்பது மிகவும் முக்கியமானது.

மதவாத சக்திகள் தலைதூக்கிக் கொண்டு, ஜாதிய வாத சக்திகள் தலைதூக்கிக் கொண்டிருக்கின்ற இந்த மிக முக்கியமான ஒரு தருணத் தில், காங்கிரஸ் தனக்குத்தானே மிக ஆழமான ஒரு பள்ளத்தினைத் தோண் டிக் கொள்கிறது என்று அதற்குப் பொருளாகும். எனவே, தமிழர்களின் உணர்வு களைப் புறந்தள்ளி, அவர்கள் சென்று கலந்து கொள்வார்களே யானால், அதனுடைய முக்கியமான விளைவு தமிழகத்தைக் காங்கிரஸ் கைகழுவிவிட்டது என்று பொருள்.

கேள்வி: ஒட்டுமொத்த தமிழர்க ளின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசைப்பற்றி...

பதில்: ஒட்டுமொத்தமான தமிழர் களின் உணர்வுகளைத்தான் ஏற்கெ னவே டெசோ அமைப்பின் மூல மாகவும் பிரகடனப்படுத்தினோம்; சட்டமன்றத்தின்மூலமாகவும் பிரகடனப்படுத்தினோம்; எதிரும் புதிருமாக இருக்கின்ற கட்சிகள் யாவும் இப்பிரச்சினையில் வேறு நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. ஆகவேதான், இந்த உணர்வு என்பது தமிழகத்தினுடைய உணர்வு என்பது மட்டுமல்ல, நான் ஏற்கெனவே சொல்லியதுபோல, முழுக்க முழுக்க இது உலகத் தமிழர்களுடைய உணர்வுகளாகும். எல்லாவற்றையும் நாங்கள் புறந்தள்ளுகிறோம் என்று இந்த அரசு சொன்னால், மனித உரி மையைப்பற்றி நாம் கவலைப்பட வில்லை; ஜனநாயகக் குரலைப்பற்றி நாம் கவலைப்படவில்லை என்று கூறுவதாகத்தான் பொருள். ஏனென் றால், மற்றவர்கள் கலந்து கொள் வதற்கும், இந்தியா கலந்து கொள் வதற்கும் வேறுபாடு இருக்கிறது.

தொப்புள் கொடி உறவு

மனித உரிமையை மீறிய குற்றத் திற்காகவே, கனடா நாட்டுப் பிரதமர் நான் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன் என்று சொல்லிய நிலையில், தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கு நெருக்கமாக இருக்கக் கூடிய தமிழர்களுடைய வாக்கு வங்கியினால் பயன்பெற்று ஆட்சி அமைத்திருக்கின்ற இவர்கள் அதைப் புறந்தள்ளுகிறார்கள் என்று சொன்னால், நிச்சயமாக வருகின்ற தேர்தலில் தமிழகத்தைக் காங்கிரஸ்,  கை கழுவ முடிவு செய்து விட்டது  என்று நினைக்கத் தோன்றுகிறது. தமிழகத்தில் இது எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பது மிக வேதனையோடு ஆழ்ந்து பார்க்கக்கூடிய ஒன்றாகும்.

கேள்வி: இதுகுறித்து நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்திருக்கிறார் கள், பல அமைப்புகள் போராட் டங்களை நடத்தியிருக்கிறார்கள், அப்படியிருந்தும் மத்திய அரசு செவி சாய்க்காத மத்திய அரசு பற்றி...


பதில்: பின் விளைவுகள் என்ன? அரசியல் ரீதியான விளைவுகள் மிகத் தெளிவாக இருக்கும். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்குப் பொதுத்தேர்தல் வர இருக்கிறது. அந்தப் பொதுத்தேர்தலை, அதனு டைய முடிவை இப்பொழுதே இவர் கள் நிர்ணயம் செய்துவிட்டார்கள் என்பதுதான் இதற்குப் பொருள்.

                    ----------------------------"விடுதலை” 31-10-2013

30.10.13

தீபாவளி கொண்டாடும் தமிழா! உன் சிந்தனைக்குச் சில வினாக்கள்!!-3அவதாரம் எங்கே?

தேவர்களை, சுரர்களைத் துன்புறுத் தினான் என்பதற்காக இரண்யாட்ச தனை - நரகாசுரனைக் கொல்ல, அவ தாரம் எடுத்து பன்றி வேடம் புனைந்த மகாவிஷ்ணு, சேலத்திலே இராமனைச் செருப்பால் அடித்து அவமானப்படுத்திய (இவ்வாறு பக்தி வேஷம் போட்ட போலி அரசியல்வாதிகளால் வலியச் சொல்லப் பட்டபடுகிற இக்கருத்தை நாம் வாதத் திற்காக ஏற்றுக் கொள்கிறோம்) தந்தை பெரியாரை-அன்னை மணியம்மை யாரை, விடுதலை ஆசிரியரும் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்களை இன்ன பிற கருஞ்சட்டைத் தொண்டர் களை, தோழர்களை, திராவிட இயக்கத் தவர்களை, சம்ஹரித்து, போரிட்டு அழித்துக் கொல்ல ஏன் இன்று இது காறும் எந்த அவதாரமும் எடுக்க வில்லை? எடுப்பதாகத்தான் ஏதேனும் உத்தேசம் உண்டா?

நாயன்மார்கள் 63 பேர் என்பதோ டும், ஆழ்வார்கள் 12 பேர் என்பதோடும், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதோ டும் முடிந்துவிட்டதா? இனி நாயன்மார் களும், ஆழ்வார்களும், அவதாரங்களும் கிடையாதா?
பக்த கே()டிகளே! நீங்கள் அனை வரும் சேர்ந்து ஆண்டவனிடம் அவத ரிக்க வேண்டிபெரியாரியக்கத்தவர்களை சம்ஹரிக்க வேண்டி வேண்டக் கூடாதோ!
64-ஆம் நாயன்மாரும், 13-ஆம் ஆழ்வாரும், 11-ஆம் அவதாரமும் பாவப் பட்டவைகளா?

கட்டை வண்டி காலத்திலேயும், அகல் விளக்கு காலத்திலேயும் மக் களைக் காக்க-துஷ்டர்களைச் சம் ஹரிக்க அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு மகானுபாவர் தற்போதைய இந்தக் கார் (பேருந்து, மின் விளக்குக் காலத்தி லேயும்) காலத்திலே அவதாரம் எடுக்க ஏன் தயங்குகிறார்?

நரகாசுரனைச் சம்ஹரிக்க அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அண்மையில் நடந்த இந்தியா-சீனா-பாகிஸ்தான் படை எடுப்பின்போது எதிரியைக் கொல்ல நம்மைப் பாதுகாக்க ஏன் அவதரிக்கவில்லை?

ஏன், இன்றைய இலங்கைப் போரை யாவது தடுத்து நிறுத்தி இலங்கைத் தமிழர்களையாவது காத்து அருள் பாலிக்க மகாவிஷ்ணு அவதாரம் செய் திருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

பெரியார் இயக்கத்தின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை, இனி மகாவிஷ்ணுவின் அவதாரம் எக்காலத் திலும் கிடையாது என்பதுதானே உண்மை! 

இது பெரியாரின் பகுத்தறிவுக் காலம், எனவே, இனிப் பொய்ப் பிரச் சாரக் கட்டுக் கதைகள் செல்லுபடி ஆகாது என்ற தெளிவான முடிவுக்கு ஆரியம் வந்துவிட்டது என்பதுதானே உண்மை. திராவிட மக்களை-திராவிட மன்னர்களை ஆரியர்கள், தம் சூழ்ச்சி யின் திறனால் அடிமை கொண்டு இழிவுபடுத்திய நாளே தீபாவளிக் கதையின் (ஆரியர்களின் புராணக் கதைக் கருத்துப்படி) கருப்பொருளாக இருக்க, இவ்விழாவைத் திராவிடத் தமிழ் மக்கள் கோலாகலக் களிப்பு, கும்மாள மகிழ்வோடு கொண்டாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அசுரர் யார்?

தங்களுக்கு உடன்பாடான யாகம் செய்தல் என்னும் வேள்விக் கொள்கைக் கும், பலி இடுதல் என்னும் உயிர்க் கொலை கொள்கைக்கும் மாறுபட்ட அன்பு, அருள், கருணை, இரக்கம், ஈவு, ஒழுக்கம், சமரசம், சன்மார்க்கம், ஜீவ காருண்யம் முதலிய நன்னெறிக் கொள் கைகளைக் கைக்கொண்டு ஒழுகிய தமிழ்த் தலைவர்களை-தமிழ் மன்னர் களை ஆரியர்கள், அரக்கர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் இழிவுபடுத்தி உரைத்தனர் என்பதை உலக வரலாறு எழுதிய நேரு பெருமகனார், அறிவுக் கடல் மறைமலை அடிகளார், தமிழ் அறிஞர், ந.சி கந்தையா (பிள்ளை), தனித் தமிழ்ப் பற்றுக் கொண்ட ஆரியத் தமிழ் அறிஞர் வி.கோ சூரிய நாராயண சாஸ்திரி என்னும் பரிதிமாற் கலைஞர், பசுமலை கணக்காயர் நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றோர் தெள்ளத் தெளிவாய் எடுத்துரைத்து விளக்கிய பின்னருமா, கல்தோன்றி மண் தோன் றாக் காலத்தே வாளொடு முன் தோன் றிய மூத்தகுடி முத்தமிழா! நீ ஆரியர்க்கு லாலிபாடி அவர்தம் கீழ்மை கயமை சுயவாளித்தன காலித்தனக் கொள்கை களுக்கு ஆட்பட்டு, நடை பாவாடை விரித்து அமைத்து, எடுபிடி ஆளாய், முன்னோடும் பிள்ளையாய்-எடுப்பார் கைப்பிள்ளையாய் இருந்து முனைப் போடு முன்னின்று தீபாவளி கொண் டாடி மகிழ்கிறாய். யதார்த்த உண்மைக் கும், வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்து வராத-முரண் பட்டு இருக்கிற-பொய்ச் செய்திகளை எல்லாம் மதத்தின் பேரா லும், கடவுளின் பேராலும் சொல்லி நம்மை இழிவுபடுத்துகிற உலக அரங்கில் தாழ்வு படுத்துகிற இந்தத் தீபாவளியும், தீபாவளி பற்றிய கதைகளும் தமிழா! உனக்குத் தேவையா?

நீ பேயா!

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்துள் அலகையாய் வைக்கப்படும் என்ற குறளின் மூலம், வள்ளுவர் உலகத்து மக்கள் அனைவரும் உண்டு என்று ஒருமித்து, ஒப்புக் கொள்கிற ஒரு கருத்தை இல்லை என்று காரண காரிய விளக்கம் இன்றி மறுத்துப் பேசுபவன் பேயாய்க் கருதப் படுவான் என்று விளக்கினாரே, அந்த வகையில் அளவீடு செய்து பார்த்தால் உலகத்து மக்கள் அனைவரும் ஒருமித்த மனத்தவராய், காரணகாரிய அறிவு விளக்க அனுபவ ஆராய்ச்சி அடிப் படையில் உலகம் உருண்டை என்ற கருத்தை ஏற்றிருக்கும் வேளையில், தமிழா! நீ மட்டும் தீபாவளி கொண் டாடுகிறதன் காரணமாக உலகம் தட்டை என்று சொல்லி, உலகம் உருண்டை என்கிற உண்மைக் கருத்தைக் காரண காரியமின்றி மறுக்கிறாய் என்றால், நீயும் ஒரு பேய்தானே! பேய் என்னும் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் வாதத்திற்காகக் கேட்கிறோம்!

பெரியார் கொள்கையே நமக்கு வேண்டும்!
அதுவே நம்புகழ் வாழ்வைத் தூண்டும்!
மதக் கருத்தால் மடமையே அண்டும்!
மதவாதப் பொய்யை மாய்ப்போமே யாண்டும்!

------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்--"விடுதலை” 29-10-2013

29.10.13

தீபாவளி கொண்டாடும் தமிழா! உன் சிந்தனைக்குச் சில வினாக்கள்!! 1,2

தீபாவளி கொண்டாடும் தமிழா! உன் சிந்தனைக்குச் சில வினாக்கள்!! 


இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு மட்டுமா? அல்லது பல்வேறு கண்டங் களும், அவற்றில் அடங்கிய நாடுகளும் இணைந்த ஒருமித்த மொத்த உலகமா?
பூமி என்பது அனைத்துலகும் ஒருமித்தது என்றால், ரஷ்யாவில், ஜப்பானில், இங்கிலாந்தில், அமெரிக் காவில் இன்னபிற நாடுகளில் ஏன் இக்கருத்தும், கொள்கையும், இதற்கு ஆதாரமான தீபாவளியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? நம்பப்பட வில்லை? கொண்டாடப்படவில்லை?
ரஷ்யா, சீனா, சப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் நீங்கலாக, அனைத் துப் பிற நாடுகளும் நீங்கலாக தமிழ் நாட்டை-திராவிட நாட்டை- இந்தி யாவை மட்டும் பாயாகச் சுருட்டி னானோ?
உலகின் அனைத்துக் கண்டங்களையும் தன்னுள் அடக்கிய உலகப் பூமியை ஒட்டு மொத்தமாக இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால், இக்கதைக்கு ஆதாரமான விழா மட்டும் இந்தியாவுக்கும், இந்து மதத்திற்கும் மட்டும் சொந்தம் ஆவானேன்?
எங்கும் ஞாயிறு
இன்றும் கும்பகோணத்தில் இருக் கிற எனக்கு ஞாயிற்றுக்கிழமை என் றால், அமெரிக்காவில் இருக்கின்ற மருத்துவர் சோம இளங்கோவன் அவர் களுக்கும், இலண்டனில் இருக்கின்ற தமிழ்மணி அரங்க முருகையன் அவர் களுக்கும், குவைத்தில் இருக்கின்ற ச. செல்லப் பெருமாள் அவர்களுக்கும், மலேசியாவில் இருக்கின்ற நாராண திருவிடச் செல்வன் அவர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமைதானே!
நாம் ஞாயிறு என்று தமிழில் சொல்வதை அவர்கள் Sunday என்று ஆங்கிலத்தில் சொல் கிறார்கள் வேறுபாடு இதுதானே ஒழிய பொருள் ஒன்றுதானே! இதில் ஒன்றும் எந்த மாற்றமும், வேறுபாடும் இல்லையே!
அனைத்து நாடுகளிலும் நேரம் மட்டுமே வேறுபடும்  என்பது பூகோள ரீதியான, அறிவியல் பூர்வமான தவிர்க்க முடியாத உண்மை என்பது யாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட செய்தி ஆனால், தீபா வளிப் பண்டிகையும், அது தொடர்பான கருத்துகளும் உலகம் தழுவிய அளவில் அனுசரிக்கப்படவில்லையே! இதிலி ருந்து தீபாவளி பற்றிய கதை பொய்-புரட்டு-பித்தலாட்டம்-கற்பனை என்பது புலப்படவில்லையா?
கேவலம் ஞாயிற்றுக் கிழமைக்கு இருக்கிற ஒற்றுமையும், ஓர்மையும், மதிப் பும், மரியாதையும், சீர்மையும், சிறப்பும் பகவான் விஷ்ணுவுக்கு இல்லாமல் போய் விட்டதே!
ஏசு கிறிஸ்துவை முன்னிலைப் படுத்தியும், முதன்மைப் படுத்தியும், மய்யப்படுத்தியும், ஆதாரப்படுத்தியும் 2005-ஆம் ஆண்டு இன்று உலக முழுவதும் உலா வருவது போல, நமது காக்கும் கடவுள், உலக இரட்சகர், படிய ளக்கும் பரந்தாமன், மகா விஷ்ணுவை முன்னிலைப்படுத் தியும் ஆதாரப்படுத் தியும் ஏற்பட்ட தீபாவளி மட்டும் உலக உலா வராமைக்கு என்ன காரணம்? கதையும், கதைக்கு ஆதாரமான கருப்பொருளும் உண்மை அல்ல என்பது தானே யதார்த்தம்?
சரித்திரமா - அதிசயமா?
தீபாவளி என்பதும், அது பற்றிய காரணக் குறிப்புகளும் உலக வரலாற் றில் இடம் பெறுகின்ற-பெற்ற-பெற வேண்டிய சரித்திர வரலாற்றுச் சான்று செய்திகளா அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு தனி மதத்திற்கும், கடவுளுக்கும் சம்பந்தப்பட்ட புராணக் கற்பனை அதிசய அற்புதச் செய்தியா?
மகாவிஷ்ணுவின் தோன்றலாகிய (தமிழில்) கண்ணனோ அல்லது (வடமொழியில்) கிருஷ்ணனோ சரித்திர வரலாற்று நாயகர்களா? அல்லது அவர்கள் மாயாஜால வித்தைக்காரர் களான வெறும் வேடிக்கை அற்புத அவதாரப் புருஷர்களா?
வரலாற்று சரித்திர நாயகர்கள் என்றால் அது உண்மைச் செய்தி அவதாரப் புருஷர்கள் என்றால் அது கற்பனை கலந்த பொய்ச் செய்தி என்பதுதானே யதார்த்தம்? அக்பரும், பாபரும், அசோகனும், நெப்போலியனும், அலெக்சாண்டரும், ஏசுநாதரும், நபிகள் நாயகமும் சரித்திரப் புகழ் பெற்ற வர லாற்று நாயகர்கள் என்றிருக்க, கண் ணணும், கிருஷ்ணனும் கற்பனையில் வரையறுக்கப்பட்ட கட்டுக்கதை நாயகர் கள்தாமே?
பூமி வேறு - கடல் வேறா?
பூமியைப் பாயாகச் சுருட்டிய தீபாவளிப் பற்றிய அறிவிப்புகள் உலக வர லாற்றில் பதிந்த உண்மைச் செய்திகள் எனில், ஏன் இவ்விழாவும், இவ்விழா பற்றிய கருத்துகளும் அனைத்து நாட்டி னராலும், அனைத்து மொழியினராலும், அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? கொண்டாடப் படவில்லை?
இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டிய பூமியுடன் கடலுக்குள் புகுந்தான் என்று சொல்லுகிற ப(க்)த தமிழா! அந்தக் கடல் பூமியில் அல்லாது வேறு எங்கு இருந் தது? வேறு எங்கே இருக்க முடியும்?
கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை, காடு, மேடு, பள்ளம், குன்று, மலை, சமவெளி ஆகிய அனைத்தும் ஒரு சேர அமைந்த முழுப் பகுதியே உலகம்-பூமிஎன்று கொள்ளப்பட்டிருக்க-சொல் லப்பட்டிருக்க பாயாகச் சுருட்டிய பூமி யோடு கடலில் புகுந்து ஒளிந்தான் இரண் யாட்சதன் என்றால், எந்தக் கடலில் எப்படிப் புகுந்தான்? எப்படிப் புக முடியும்?
பூமியை மீறிய கடல் ஒன்று ஆகாய அந்தரங்கத்தில் தொங்குகிறதோ! கடலையும் தன்னுள் உள்ளடக்கியது தானே பூமிஎன்பது?
கிறித்தவத்திலும் மடமை
அகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித் துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப் பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்பதும், தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வரலாற் றில் பதித்து நிறுவினார் என்பதும் தானே உண்மை!
உலகம் உருண்டை என்னும் அறிவுப் பூர்வமான-ஆக்க ரீதியான கலிலி யோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங் கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அறிவியல் ஆய்வ றிஞன் கலிலியோவை அடித்தே கொன் றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?
உலகமதம் என்ற நிலையைப் பெற்ற கிறித்தவ மதத்தின் யோக்கியதையே சந்தி சிரிக்க-ஊர் மதமான இந்து மதத் தின் யோக்கியதை எவ்வாறு இருக்கும்?
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இந்து மதம் ஆனாலும் அல்லது உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்து ஆதிக்கம் செலுத்தும் கிறித்தவ மதம் ஆனாலும், இசுலாமிய மதம் ஆனாலும் மதம் என்று வந்தால் அவை அனைத்தும் மடமையைப் பரப்பும் மூடச் சாதனங்களோ என்பது புலனாகிறது அல்லவா?

                         -------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்--"விடுதலை” 26-10-2013

**************************************************************************************எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? எல்லாமும் ஒன்றுதானே! பாம்புக்கு நச்சுத் தன்மை உண்டு என்கிறபோது, அதில் குட்டிப் பாம்பென்ன? குஞ்சுப் பாம்பென்ன? எல்லாமும் ஒன்றுதானே!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது என்றும், அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்றும் தமிழ்ப் பெரும்புலவர் பேராசிரியர் சைவப் பெரியார் கா சுப்பிரமணி (பிள்ளை)யன், தாமெழுதிய தமிழர் சமயம் என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைப் பக்தத் தமிழா நீ அறிவாயா?

தீபாவளி என்பது வடநாட்டுக் குஜ ராத்தி மார்வாரிகளுக்குப் புத்தாண்டு புதுக்கணக்கு விழாவாகும் என்றும், தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக் கும் தமிழ் இலக்கியங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்றும் பேராசிரியர் சைவத் தமிழ் அறிஞர் அ.கி பரந்தாமனார், தாமெழுதிய மதுரை நாயக்கர் வரலாறு என்னும் நூலில் எழுதி இருப்பதைப் பக்தத் தமிழா! நீ அறிவாயா? அதற்கு நீ அளிக்கும் விளக்கம்தான் யாது?

தீபாவளி சமண சமயப் பண் டிகை என்றும், பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்காலை தினமே தீபாவளிக்கு ஆதாரம் என்றும், தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும், நரகாசுரன் கதைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும், தீபாவளி என்பதன் பொருள் (தீபம் விளக்கு ஆவளி வரிசை) விளக்கு வரிசை என்றும் முதுபெரும் வரலாற்று ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, தாமெழுதிய சமணமும், தமிழும் என்ற நூலில் வெளிப்படுத்தி இருப்பதைப் பக்தத் தமிழா! நீ படித்து அறிந்தது உண்டா?

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஒவ்வொரு மதத்தோடும் தமிழை இணைத்தும், இயைந்தும் ஆய்வு செய்து பல புத்தகங்கள் வெளியிட்ட வரலாற்றுப் புகழ் மிக்க சரித்திரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத் தக்கது கிறித்தவமும் தமிழும், பவுத்தமும் தமிழும், இசுலாமும் தமிழும், சமணமும் தமிழும் என்பன இவர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும்.
ஆரியப் பார்ப்பனர் கட்டுவித்தப் பொய்க் கற்பனைக் கதையே தீபாவளி என்றும், தீபாவளிக்கும், கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் சைவத் தமிழ்க்கடல் மறைமலை அடி களார், தாம் எழுதிய தமிழர் மதம் என்ற நூலில் பகர்ந்திருப்பதைப் பக்தத் தமிழா நீ படித்ததுண்டா? பார்த்ததுண்டா?

தந்தை பெரியாரின் தன்மானப் பகுத்தறிவியக்கத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத நூற்பெரும் நற்றமிழ் அறிஞர்கள் தீபாவளியை மறுத்துள்ள னரே  ஒருவருக்கொருவர் மாறுபட்ட, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துகளை யும், கதைகளையும் சொல்லுகின்றனரே! ஏ தமிழா! குதர்க்கத்திற்கும், குழப்பத்திற் கும் வழிகோலுகின்ற தீபாவளிப் பண்டிகை உனக்கு ஒரு கேடா?

மலம் தின்னும் பன்றி

பூமியும், பன்றியும் புணர்ந்து கலவி செய்ய முடியுமா? பூமிக்கும், பன்றிக்கும் புணர்ச்சியின் விளை வால் குழந்தை பிறக்குமா? அப்படிப் பிறந்த குழந்தை பூமியின் சாயல் உடையதா? அன்றி, பன்றியின் சாயல் உடையதா?
உலகத்தில் இருப்பது ஒரு பூமி தானே! அப்படி இருக்க இந்த வரலாற் றுக் கதை மற்ற நாட்டவர்களால் ஏற்றுக் கொண்டு அனுசரிக்கப்படவில்லையே! எப்படி எனில் தமிழ்ப் பூமிஎன்று தனியாக ஒன்று இருந்ததா? பூமிஒன்றுதான் நாடுகளே பலப்பலஅப்படி இருக்க இரண்யாட்சதன் சுருட்டியது ஒருமித்த உலக பூமியையா? அல்லது உலக பூமியில் அங்கம் வகிக்கும் தனித்த ஒரு நாட்டையா?

அது எப்படி உலக பூமியில் அங்கம் வகிக்கும் தனித்த ஒரு நாட்டை மட்டும் தனியாகப் பிரித்து சுருட்ட முடியும்?

மகாவிஷ்ணு பன்றி அவதாரம்  எடுத் தார் என்றால், ஆஞ்சநேய அனுமார் குரங்குக் குட்டிச் சாமிக்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிட்டு மகிழ்ந்து கும்மாளம் அடிக்கும் பக்தர் கூட்டம், பன்றிக்கும் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிட்டு மகிழத்தானே வேண்டும்.

பக்தர் குழாமே! உங்கள் மன்னிப்பை வேண்டி இவ்வினாவைத் தொடுகின்றேன் மகாவிஷ்ணு எடுத்த அவதார மாகிய பன்றி மலம் தின்னுகிறது என்றால் மகாவிஷ்ணுவை வணங்கும் பக்தர்களும், தீபாவளி கொண்டாடி மகிழும் தமிழர்களும் மலம் தின்னுவதில் தவறில்லை அல்லவா? தின்னுவார்களா? தின்னத் தயாரா?

சைவப் பெரியார் சிங்காரவேலு முதலியார் தொகுத்து எழுதி வெளியிட்ட அபிதான சிந்தாமணியில் பக்கம் 93 இல் நராகாசுரன் வராக (பன்றி) உருக் கொண்ட மகாவிஷ்ணுவிற்கும், பூதேவிக்கும் பிறந்த அசுரன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறாரே!

ராட்சசனா?

கடவுள் பெறுவது ராட்சசனா? மகாவிஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் பிறந்த குழந்தை எப்படி அரக்கனாக-அசுரனாக-ராட்சசனாக இருக்கமுடியும்? மகாவிஷ்ணுவோ மக்களைக் காக்கும்படி அளக்கும் பரந் தாமக் கடவுள், பூமாதேவியாகிய நில மகளோ துச்சனர்களையும் பொறுத்துக் கொண்டு தாங்குகிற பொறுமைக் குணமும், தாய்மைக் குணமும் கொண்ட பேரறப் பெருந்தெய்வம் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை எங்ஙனம் கொடூரம் மிக்கதாக இருக்கமுடியும்?

எதற்கெடுத்தாலும் திருக்குறளை ஆதாரப்படுத்த முந்துகிறவாழ்வியல் நூல் என்று வள்ளுவத்தைக் காட்டி மகிழ்கிற மூத்த குடியாம் தமிழினமே! தீபாவளி பற்றிய கருத்துக்கு வள்ளுவத் திருக்குறளாம் உலகப் பொதுத் தமிழ் மறையில் ஆதாரம் ஏதும் உள்ளதோ?

------------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் --“விடுதலை” 28-10-2013

28.10.13

தமிழர்களும் - தீபாவளியும்! சுரணை உள்ளவர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?

தமிழர்களும் - தீபாவளியும்


தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.
சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும்.
இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாச மானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்க மாக விளக்குவோம்.
அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.
மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத் திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்குவ தற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.
அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். 

அக்குழந்தைக்குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்ப வளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.
நரகாசூரன் விஷ்ணுவைத் தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப்படுங்கள்.

ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?
சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?
கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகா சூரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?
அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?
அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது?
அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்திருக்க வேண்டும்? பூமா தேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்களாக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டி ருப்பான்?
இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.
ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டா லும், பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களுக்குச் சுரணை இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.
இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங் களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும், மன வேத னையும் படுவது உண்மையானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?
--------------- தந்தை பெரியார்-"குடிஅரசு" - கட்டுரை மறுவெளியீடு - 31.10.1937

27.10.13

இந்தியாவை குஜராத் ஆக்கும் இலட்சணம் இதுதான்! ஹி.... ஹி...


பாரதிய ஜனதா கட்சிக்கு வக் காலத்து வாங்க யார் வேண்டு மானாலும் முன்வரலாம். பெண் ணொருவர் அப்படி வந்தார் என்றால் பரிதாபம் மட்டுமல்ல - மன்னிக்கப் படவே முடியாதவர் ஆகி விடுவார்.
காரணம் இந்து மதம் பெண்ணை ஒரு மனுஷியாகவே ஏற்றுக் கொள்ள வில்லையே!

அவர்கள் ஏற்றிப் போற்றும் அய்ந்தாவது வேதம் என்று நீட்டி முழக்கப்படும் கீதை என்ன சொல்லு கிறது? பகவான் கிருஷ்ணன் என்கி றார்களே, அவன் என்ன சொல்லி வைத்திருக்கிறான்?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியி லிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32).

கீதையை விட்டுத் தள்ளுங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அணி வகுப்பில் அலங்கரித்து எடுத்துச் செல்கிறார்களே மனுதர்ம சாஸ்திர நூலை. அந்த மனுதர்மம் பெண்கள் பற்றி என்ன கூறுகிறது? 

 படுக்கை, சரணம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தனை இவற் றினை மாதர் பொருட்டே மனுவான வர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியா யம் 9 சுலோகம் 17).  

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும்,  கணவன் இறந்த பின் பிள்ளைகள் ஆக்ஞையிலும்  இருக்க வேண்டிய தல்லாமல் ஸ்திரீகள், தன் சுவா தீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது. (மனுதர்மம் அத்தியாயம் - 5 சுலோகம் 148).

இப்படிப்பட்ட சாஸ்திரங்கள் தான் இந்து மதத்தின் உயரிய பொக்கிஷங்களாம்! இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் டாக்டர்  தமிழிசை சவுந்தரராசன் என்ற தாய்க் குலத்தைச் சேர்ந்தவர், ஹிந்து ராஷ்டிரம் அமைக்க இருப்ப தாகக் கூறும் கட்சியைத் தாங்கிப் பிடிக்கத் துடிப்பது கெட்ட வாய்ப்பே!

ஜூனியர் விகடன் (30.10.2013) இதழில்தான் எழுதியிருக்கிறார்.

95 வயது வரை வாழ்ந்த தந்தை பெரியாரையே பின்பற்ற முடியாமல் பலவாறாகப் பிரிந்து கிடக்கிறார்களாம் - இப்படி ஒரு குற்றச்சாற்று, தங்கள் கட்சியின் சார்பில் பிரதம ருக்கான வேட்பாளர் என்று ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளாரே - இதில் எப்படியெல்லாம் இவர்கள் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு எழுதுவதுதான் தமாஷ்!

செல்வி உமாபாரதி பிளவுபட்டுச் சென்றது எப்படி - பின் இணைந்தது எப்படி? கல்யாண்சிங் என்ன ஆனார்!

இதுபோல அடுக்கடுக்கான கேள் விகள் அனந்தம் உண்டு. தனக்கு வழிகாட்டியான தந்தையாரையே புறந்தள்ளித் தானே அம்மையார் பா.ஜ.க.வில் தஞ்சம் புகுந்துள்ளார்.

டாக்டர் தமிழிசை அவர்கள் நம்மைப் பார்த்து குற்றம் சொல்லும் இதே கால கட்டத்தில்தான் பிஜேபி யின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி சொன்ன ஒரு தகவல் வெளி வந்துள்ளது. திரவுபதிக்குக்கூட அய்ந்து புருஷர்கள்தான். ஆனால் எங்கள் கட்சிக்கோ 105 புருஷர்கள் என்று சொல்லி இருக்கிறாரே (Draupadi was fortunate she had five husbands the B.J.P. has 105 (‘India Today’ 24.10.2013).

இதற்கு விளக்கம் தேவை யில்லை. அம்மையாரின் வாயை அவரது கட்சியின் முன்னாள் தலைவரே அடைத்து விட்டார்.

சட்டமன்றம் - நாடாளுமன்றங் களுக்குச் செல்லாமல் அரசியல் கட்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுப்பது தரகு வேலையாம்.

மறைமுக (Hidden Agenda) அஜண்டா எல்லாம் பிஜேபியோடு நிற்கட்டும்.
ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான் எங்கள் செயல்பாடு என்பதை டாக்டர் அம்மா அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் தரகு வேலை என்ன இருக்கிறது? அம்மையாருக்கே வெளிச்சம். வாய்ப் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுத வேண்டாம்.

பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பல்வேறு விவகாரங்களில் குருட்டுத்தன மாகத்தான் நடந்து கொள்வார்கள் என்பதற்கு உதாரணம், அவர்கள், மோடியை விமர்சிப்பதும்!

அம்மையாரின் அகராதியில் பகுத்தறிவு என்றால் குருட்டுத்தனம் போலும்! இதன் மூலம் பகுத்தறி விற்குச் சம்பந்தம் இல்லாதவர் என்று தம்மைத் தொடக்கத் திலேயே அறிமுகப்படுத்திக் கொண்டிருக் கிறார் - பாவம் ஆத்திரம் என்ன எழுதுகிறோம் என்பதில்கூட தடு மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
மோடியை விமர்சிக்கவே கூடாதா? அப்படி விமர்சித்தால் அது குருட்டுத்தனமா?

மோடி என்றால் தவறான கட்சி - நல்லதே செய்ய மாட்டார் என்று தீர்மானம் செய்து கொள்கிறோமாம்.

தவறான கட்சி என்பதில் என்ன சந்தேகம்? பிறப்பின் அடிப்படை யிலேயே பேதம் பேசும் இந்துத்துவா கொள்கையுடையது தவறான கட்சிதானே.
சிறுபான்மை மக்கள் குடியுரிமை யின்றி வாழ வேண்டும் - முஸ் லீம்கள், தங்கள் மதக் கடவுளைத் தூக்கி எறிந்து விட்டு, கிருஷ்ணனை வணங்க  வேண்டும்; கிறித்தவர்கள், ராமனை வணங்க வேண்டும் என்று கூறுவது, தவறானது என்பதையும் தாண்டிய பாசிசம் அல்லவா!

எனக்குள்ள வருத்தமெல்லாம் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேசுபவர்கள், கோத்ரா ரயிலில் துடிக்கத் துடிக்கக் கருகினார்களே - அவர்களைப் பற்றி கவலையே படவில்லையே? என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.
கோத்ரா ரயிலில் கருகிச் செத் ததை நாங்கள் நியாயப்படுத்த வில்லை. ஒரு பொறுப்பு வாய்ந்த முதல் அமைச்சர் என்ன செய்ய வேண்டும்? உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க வேண்டுமே தவிர  சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு, அதி காரிகளை கையில் போட்டுக் கொண்டு, தானே தலைமை தாங்கி நர வேட்டை ஆடலாமா என்பதுதான் கேள்வி.

முதல் அமைச்சர் நரேந்திர மோடி தனது வீட்டில் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் முஸ்லீம்கள்மீது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் உத்தர விட்டாரே - அதற்கு என்ன பதில்?

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கலாம். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கூறினாரே - உண்மையைச் சொன்னதற்காக அவரும் மர்மமான முறையில் படுகொலை செய்யப் படவில்லையா? தன் மகன் படு கொலைக்கு முதல் அமைச்சர் மோடிதான் காரணம் என்று ஹரேபாண்டியாவின் தந்தையாரும் கூறவில்லையா?

இப்படிப்பட்டவரை கொலைகாரர் என்று விமர்சித்தால் டாக்டர் அம்மா வுக்குக் கோபம் பீறிடுகிறது - மோடியை ஆதரித்து தீர வேண்டும் என்ற வெறியில் ஒரு தாயின் உள்ளம் இப்படி கல் நெஞ்சமாக மாறிடலாமா!

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்தச் சிசுவை நெருப்பில் போட்டுத் துள்ளிக் குதித்தார்களே சங்பரி வார் காட்டுமிராண்டிகள் -  அத்தகைய கொடியவர்களுக்காக ஒரு தாய் வக் காலத்து வாங்கலாமா?

நாம் சொல்வது இருக்கட்டும் -  உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அரிஜித் பசாயத் என்ன கூறினார்? அப்பாவி குழந்தைகளும், ஆதரவில்லாப் பெண் களும் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்த நவீன கால நீரோ மன்னன் முதல் அமைச்சர் மோடி என்ன செய்து கொண்டி ருந்தார்? என்று சொன்னவர் உச்சநீதி மன்ற நீதிபதியல்லவா? நீதிபதியையும் கறுப்புச் சட்டைப் பட்டியலில் சேர்க்கப் போகிறாரா அன்புக்குரிய டாக்டர் அம்மா அவர்கள்!

மோடி பிற்படுத்தப்பட்டவராம். சமூக நீதிபற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுபவர்கள், மோடியை எதிர்க்கலாமா என்பது சாமர்த்தியமான கேள்வி.
பி.ஜே.பி. சங்பரிவார்க் கூட்டத்தின் ஞானாசிரியர் (Think Tank) கோவிந்தாச் சார்யா கொடுத்த Social Engineering (சமூக விஞ்ஞானம்) என்ன தெரியுமா?
பி.ஜே.பி. என்றால் பிராமின் பார்ட்டி என்ற முத்திரை இருக்கிறது. அது மாற்றப்பட வேண்டும் என்ற யோசனையின் விளைவு இது.

உத்தரப்பிரதேசத்தில் கல்நாத் மிஸ்ரா வுக்குப் பதிலாக கல்யாண் சிங், மத்திய பிரதேசத்தில் உமாபாரதி, குஜராத்தில் நரேந்திரமோடி பீகாரில் சுசில்மோடி என்று அறிமுகப்படுத்தப்பட்டது அந்த அடிப் படையில்தான் (பிரபல விமர்சகர் ஓ.எஸ். பன்னீர்செல்வம் - நக்கீரன்).

அகில இந்திய பிஜேபியின் தலைவராக பங்காரு லட்சுமணன் (தாழ்த்தப்பட்டவர்) தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதி (தாழ்த் தப்பட்டவர்) என்று படங் காட்டப்பட்டது எல்லாம் பி.ஜே.பி.யின் பார்ப்பன முகத்தை மாற்றிக் காட்டவே.

எப்படியெல்லாம் என்னை அவமானப் படுத்தியது பிஜேபியின் உயர் ஜாதி பார்ப்பனக் கூட்டம் என்று கண்ணீர் சிந்தி அவர் பேட்டி கொடுக்கவில்லையா?
இல. கணேசன் என்பார் என் கைகளைப் பிடித்து முறுக்கினார் என்று கூறவில் லையா?

இன்றைக்கு டாக்டர் தமிழிசை அவர்கள் தேசிய செயலாளராக பி.ஜே.பி. யால் நியமிக்கப்பட்டார் என்றால் அதுகூட திராவிடர் கழகத்தின் தாக்கத்தால் என்பதை மறந்துவிடவேண்டாம்.

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என் றிருந்த நிபந்தனையை உடைத்யெறிந்தது - தந்தை பெரியாரும், திராவிடர் இயக்க ஆட்சியும் தான் (முதல் அமைச்சர் பனகல் அரசரின் உத்தரவு) என்ற வரலாறு டாக்டர் அம்மையாருக்குத் தெரியுமா? (அம்மையார் டாக்டர் ஆனதும் திராவிடர் இயக்கத்தின் உபயம் தான் - மறக்க வேண்டாம்.

திருவையாறு தியாகய்யர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடினார் என்பதற்காக சந்நிதானம் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, தீட்டுக் கழித்த பிறகுதான் பாடினார் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்பது டாக்டர் தமிழிசைக்குத் தெரியுமா?  தீட்டாயிடுத்து என்று குடிஅரசு  9.2.1946 இதழில் கலைஞர் அதனைக் கண்டித்து எழுதிய தகவல் எல்லாம் தெரியுமா?
மோடியால் குஜராத் வளர்ச்சி பெற்றுள் ளதே -என்று, தன் கட்சியைப் பலப்படுத்த விரும்புகிறார்.

இந்தப் பொய்க் கதை இப்பொழுது சிரிப்பாய்ச் சிரிக்கிறதே!

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான அறுவர் குழு, மோடியின் குஜராத் நிலையை அம்பலப் படுத்தி விட்டதே!

பொருளாதார நிலையில் இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் 12ஆவது இடத்தில் அல்லவா குஜராத் உள்ளது.
தனி நபர் வருமானத்தில் 10ஆவது இடம், எழுத்தறிவில் 18ஆம் இடம், சாலைகள் பராமரிப்பில் 11ஆம் இடம்.

நாட்டிலேயே முதன் முதலாக செறிவூட்டப்பட்ட அரிசியும், கோதுமையும், குஜராத்தில்தானே வழங்கப்படுகிறது என்று டாக்டர் எழுதுகிறார்.

உண்மை நிலை என்ன? பிரசவ காலத்தில் பிற மாநிலங்களில் குழந்தைகள் மரணம் ஆயிரத்துக்கு 12 முதல் 14 வரை குஜராத்தின் நிலைமை என்ன தெரியுமா? ஆயிரத்துக்கு 62. மோடியின் கவலை எல்லாம் பெரும் முதலாளிகளின் நலன்களைப் பற்றியதே இல்லையென்றால் டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் நிலங்களைத் தாரை வார்த்து இருப்பாரா? முத்திரைத்தாள் விலக்கு வேறு.

9750 கோடி ரூபாய்க் கடன் வேறு - செலுத்த வேண்டிய காலம் 20 வருடம் வட்டி விகிதம் என்ன தெரியுமா? 0.1 சதவீதம் (புள்ளி ஒன்று சதவீதம்). மோடி ஊழல் ஒழிப்பு நாயகரா? சி.ஏ.ஜி. அறிக்கையில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் என்று கூறப்பட்டுள்ளதே!

இந்தியாவை குஜராத் ஆக்கும் இலட் சணம் இதுதான்!
ஹி.... ஹி...
டாக்டர் அம்மாவின் அரசியல் மருத் துவத்தால் குஜராத் பிள்ளை பிழைக்காது!

இதுதான் மோடியின் குஜராத்
ஜாதிவாரியாக நேரம்

காலை 9 மணிமுதல் 10 மணிவரை பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்,

காலை 10 முதல் 12 (மதியம்) மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார்.
நண்பகல் 12 முதல் (மதியம்) ஒரு மணிவரை தலித் இனத்த வருக்கு என எழுதியுள்ளனர்.

டாக்டர் தமிழிசை இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

                       ---------------------------27-10-2013 “ விடுதலை” யில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

26.10.13

இந்தியா முழுமையும் தேவைப்படுகிறார் தந்தை பெரியார்


மதச் சார்பற்ற  தோழமைக்கான ஒருங்கிணைப்பு முன்னணி - கலந்துறவாடலும் - ஆலோசனைகளும் Consultation and Discussion on forming a secular solidarity alliance Chennai - October 24, 2013 எனும் அமைப்பில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் கட்டளைப்படி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்றுக் கருத்துரை வழங்கியதன் பின்னணியில் உருவாக்கப்பட்ட கட்டுரை இது; பல்துறை அறிஞர் பெருமக்கள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களி லிருந்தும் கலந்து கொண்டனர்.

வகுப்புத் துவேஷம் வகுப்புவாதம் என்ற சொற்கள் தமிழ்நாட்டில் உச் சரிக்கப்படுவதற்கும், மற்ற மற்ற பகுதிகளில் ஒலிப்பதற்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு.

இந்த நாட்டிலே நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கக் கூடிய ஒரு சிறு கூட்டம் பிறப்பால் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும், பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்றும், பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே எங் களுக்குத்தான் என்றும் சாஸ்திரங் களை எழுதி வைத்து - அவற்றைக் கடவுள் உண்டாக்கினார் - மதம் இப்படித்தான் கூறுகிறது - அதனை மீறக் கூடாது என்றும் கூறுகிறவர்கள் மத்தியில் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து, ஜாதி கூடாது என்றும், பிறப்பின் அடிப்படையில் பேதம் கூடாது என்றும் பெரும்பான்மையான மக்கள் சூத்தி ரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப் பட்ட மக்களுக்காக உரிமையைக் கோருபவர்களை, போராடுபவர்களைப் பார்த்து ஆண்டாண்டுக்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் அந்த ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்து இயக்கம் நடத்துபவர்களைப் பார்த்து வகுப்புத் துவேஷிகள், வகுப்புவாதிகள் என்று தூற்றுவதுண்டு.

லாலா லஜபதிராய் ஒருமுறை அழகாகச் சொன்னார். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்புத் துவேஷிகள், வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று சொல்லி யிருக்கிறார். அதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாகும்.

தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதுதான் முக்கியம்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக் குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்த தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத்துப்போய், வலிவு குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தை களுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையை கொடுத்து,
மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறை வான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். அந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

(விடுதலை 1.1.1962, பக்கம் 1)

இந்த மனிதாபிமான உணர்வைப் புரிந்துகொள்ளாமல், புரிந்திருந்தும்கூட தங்களின் ஆதிக்கத்திற்கும் இது சம்மட்டி அடியாக இருக்கும் என்ற காரணத்தால் பிராமணத் துவேஷி என்று அவருக்கு முத்திரை குத்தினார்கள்.
கொசு கடிக்கிறது என்பதற்காகக் கொசு வலை கட்டிக் கொண்டால் கொசுத் துவேஷியா என்று பதில் அடிகொடுத்து அடக்கினார் பெரியார்.
பெரியார் அன்று கொடுத்த குரல் எச்சரித்தது - அதைத்தான் வேறு பெயர் கொடுத்து இன்றைக்குப் பலரும்  கையில் எடுத்துக்கொண்டு இருக் கிறார்கள்.
1925ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே சேலம் பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது இந்து ஏடு தனது நூற்றாண்டு விழாவின் போது வெளியிட்ட மலரின் 337ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை இங்கு நினைவூட் டுவது மிகவும் பொருத்தமானதாகும்.

While speaking at a public meeting, at Salem, E.V.Ramasami Naiker said that they must settle the brahmin question while the British supremacy lasted; otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy.

வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டு ஆட்சியில் இருக்கும்போதே பார்ப்பனர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்; அவ்வாறு காணாவிட்டால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் மற்றவர்கள் அவதிப்பட நேரும் என்றார் - இன்றைக்கு 88 ஆண்டு களுக்கு முன்.

இன்றைக்கு இந்துத்துவா என்பதும், இந்து ராஷ்டிரம் என்பதும், ராமராஜ் ஜியம் என்பதும் அன்று பெரியார் சொன்னதுதானே!

இந்துத்துவா கோட்பாடு என்பது வருணாச்சிரமம்தானே? அன்று சம்பூ கன் என்பவன்  தவம் இருந்தான் - அவ்வாறு சூத்திரன் தவம் இருப்பது வருணாசிரமத்துக்கு எதிரானது என்று கூறி இராமன் அவனை வாளால் வெட்டினான். இன்று.....

பாபர் மசூதியை இடிக்கவில்லையா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ் லிம்களை ஆட்சி அதிகாரம் கொண்டு ஒரு முதல் அமைச்சரே தலைமை தாங்கி படுகொலை செய்யவில்லையா?.

அந்த முதல் அமைச்சர் ஆளும் மாநிலத்தில் மனுதர்மம் பாடமாக வைக்கப்படுகிறது. பி.ஜே.பி. ஆளும் மாநிலத்தில் நான்கு வருணத்தையும் நானே படைத்தேன் என்று கூறும் கிருஷ்ணனின் கீதை பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் அவர்களின் சித்தாந்தப் படியேதான் செயல்படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் ‘Bunch of Thoughts’ என்ற அவர்களின் வேதப் புத்தகத்திலே கூறுவது என்ன?

நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை. ஒரு வழியில் நாம் அநாதிகள். துவக்கம் இல்லாதவர்கள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; நாம் அறிவுத்திறம் கொண்டவர்கள். இயற்கையின் விதி களை அறிந்தவர்கள் நாம்தான். ஆன் மாவின் விதிகளை அறிந்தவர்களும் நாம்தான். மனிதனுக்கு எவை எவை நன்மை பயக்குமோ, அவை அவைகளை எல்லாம், மனித சமூகம் நன்மை பெறுவதற்கே வாழ்க்கைக்குக் கொண்டு வந்தது நாம்தான்!
அப்போது நம்மைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாகத்தான் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் அவர்கள் சூட்டவில்லை. சில நேரங்களில் - நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத் திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்
(The origin of our People is unknown to scholors of history. In a way we are anadhi; without a beginning or we existed when there was no need of any name. We were the good, the enlightened people. We were the people who know about the laws of nature the laws of spirit. We had brought into actual life almost every thing that was beneficial to mankind. Then the rest of humanity was just bipeds and so no distinctive name was given to us. Sometimes in trying to distinguish or people from others, we were called the enlightened - the Aryas - and the rest the melachas’.
-(From “Bunch of Thoughts”)

ஆரியர்கள்தான் பூர்வீகக் குடிகள் என்றும் ஆரியர்களைத் தவிர, மற்ற வர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்றும், ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல் வால்கர் எழுதியுள்ளாரே!

வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே - நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும்; சமூக ஏற்றத்தாழ்வு அல்ல; பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார் தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளும், அவர வர்கள் - சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன்மூலம் கடவுளை வணங்க லாம் என்பதுதான் இதன் தத்துவம்.

பிராமணர்கள் தங்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள்; சத்தி ரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள்; வாணிபம், விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள்; தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத் துக்கு சேவை செய்பவர்கள் சூத்தி ரர்கள். இந்த நான்குப் பிரிவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இது ஒரு சமூக அமைப்பு; இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறை தான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
- என்கிறார் கோல்வால்கர் (Bunch of Thoughts) (8ஆவது அத்தியாயம் பக். 107, 108)
குருஜி கோல்வால்கர் வரையறுக்கப் பட்ட நமது தேசியம் (We or our nationhood defined) என்ற நூலில் குறிப்பிடு கிறார்.

இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்ற வைகளை வளர்த்துக் கொள்ள வேண் டும். அவர்கள் தங்களை அயல்நாட்டி னராகக் கருதக் கூடாது. அப்படி இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்த சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை தராமல் குடிமக்கள் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று எழுதியுள்ளார்.

ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங் களுடைய நரம்புகளில் ஒடிக்கொண்டி ருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். (ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் - தினமணி 16.10.2000)

நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் - பார்ப்பனரை முன்னிறுத்தாமல் ஒரு பிற்படுத்தப் பட்டவரை முன்னிறுத்துகிறார்கள். அதற்குக் காரணம் என்ன?

ஆர்.எஸ்.எஸின் சிந்தனைக் கர்த்தா (Think Tank) என்று சொல்லப்பட்ட கோவிந்தாச்சார்யா அளித்த திட்டம் Social Engineering என்பது; பார்ப்பனத் தலைவர்களை நீக்கி பிற்படுத்தப்பட்டவர்களைத் தலைவர் களாக நியமித்தது. அதன் விளைவே, உத்தரப்பிரதேசத்தில்   கல்நாத் மிஸ் ராவுக்குப் பதில் கல்யாண்சிங், மத்திய பிரதேசத்தில் உமாபாரதி, குஜராத்தில் நரேந்திர மோடி, பீகாரில் சுசில் மோடி முதலிய மாற்றங்களாகும்.

(ஏ.எஸ்.பன்னீர்செல்வம் - நக்கீரன் கட்டுரை - பக்கம் 161)

தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதி (தாழ்த்தப்பட்டவர்) அகில இந்திய பா.ஜ.க. தலைவராக பங்காரு லட்சுமண் (தாழ்த்தப்பட்டவர்) அறிவிக்கப்பட்டதும் அந்த அடிப்படையில்தான்.

பிற்படுத்தப்பட்டவரான மோடி பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும்போது அவர்களின் வேலை இலகுவாகிவிட்டதே.

பார்ப்பனர்பற்றி மோடியின் அபிப் பிராயம் என்ன? இதோ ஓர் எடுத்துக் காட்டு.

Brahmins kept Indian culture alive
- NARENDRA MODI
(Daily news and analysis)
Brahmins are custodians of Indian culture and shastras. The brahmin community has helped & preserved Indian culture. If our culture is still thriving, it is because of brahmins. He said that social system can be created by two methods - by the gun or shastras.

(சூரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த சம்மேளனத்தில் நரேந்திர மோடி)
இந்தியக் கலாச்சாரத்துக்குப் பார்ப்பனர்கள்தான் பாதுகாவலர்கள் என்கிறார். மோடியையும் சேர்த்துதான் சூத்திரன் என்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லையா?

தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார். நிஜப் புலியை விட வேஷம் கட்டிய புலி அதிகமாகக் குதிக்கும் (விடுதலை 21.5.1954) அந்த வகையைச் சேர்ந்த வர்தான் குஜராத் மோடி!

குஜராத்தை இந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமாகப் பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள். அந்தப் பாணியை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவது என்பதுதான் அவர்களின் திட்டம்.
மோடி மாதிரி முரட்டு ஆள் கிடைத்து விட்டால் அவர்கள் கெட்டிக்காரத் தனமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தானே செய்வார்கள்? அதுதானே இப்பொழுது நடக்கிறது.

குஜராத்தில் கிராமம் ஒன்றில் நுழை யும்போது நீங்கள் இந்து ராஷ்டிரத்தில் நுழைகிறீர்கள் என்ற ஓர் அறிவிப்புப் பலகை வரவேற்கும்.

(சமநிலைச் சமுதாயம் - மே 2011 பக்கம் 62, 63)

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் - தலைமை வகித்து நடத்திய அந்த வன்முறைகளை அரங்கேற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் வெடித்த மதக்கலவரம் - அதனை பால் தாக்கரே தலைமை வகித்து நடத்தினார். தண்டிக் கப்படவில்லை.

2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த மோடி தண்டிக்கப்படாததோடு அல்ல; அவர் பிரதமருக்கான வேட் பாளராகவே அறிவிக்கப்பட்டுவிட்டாரே.

இந்த நிலையில் வன்முறைகள் - வகுப்புவாத வெறித்தனங்கள் எப்படி அடங்கும் - ஒடுங்கும்?

கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப் பட்டது. அதில் 59 பேர் மரணமடைந்தனர். வருத்தத்திற்குரிய ஒன்றுதான் அது.

பொறுப்பான முதல் அமைச்சராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பிரச்சினை வேறு வடிவமாக - வன்முறை யாக உருவெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியோடு நடந்து கொண்டு இருக்க மாட்டாரா?

மாண்டவர்களின் உடல்களை அவரவர்கள் ஊருக்கு அங்கிருந்து அனுப்புவதாக இருந்ததை மாற்றி அகமதாபாத்துக்குக் கொண்டு சென்று அத்தனை உடல்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் என்றால் அதன் உள்நோக்கம் என்ன?

மக்கள் உணர்ச்சி வயப்பட்டு வன்முறையில் இறங்கட்டும், மதக்கல வரம் நடக்கட்டும் என்பதுதானே அதன் நோக்கம்? அதுதானே நடக்கவும் செய்தது.
அதிகாரிகளை அவசர அவசரமாகக் கூப்பிட்டு மூன்று நாட்கள் என்ன கலவரம் நடந்தாலும் கண்டு கொள் ளாதீர்கள் என்று சொல்லுகிறார் ஒரு முதல் அமைச்சர் என்றால், ஹிட்லரே இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் தானே?
காவல்துறை அதிகாரிகள் நடந்த உண்மையை வெளியிட்டு விட்டார்கள்.
குடியரசுத் தலைவர் மாண்புமிகு கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பேயி யிடம் பலமுறை தொடர்பு கொண்டு குஜராத் கலவரத்தை அடக்கிட இராணு வத்தை அனுப்புவும் - ராணுவத்திற்குச் சில அதிகாரத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் பிரதமர் அதைச் செய்யவில்லையென்று சொல் லியுள்ளாரே!

மானவ சம்ஸ்கிருதி (மனிதப் பண்பாடு - மலையாள இதழில் பேட்டி 15.4.2005 - நானாவதி ஆணையத் திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது)

பெரிய மனிதர் என்று வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் பிரதமர் வாஜ் பேயி குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டும் அதனைக் கண்டு கொள் ளாதது - ஏன்?
அவர் இந்துத்துவாவின் தலைமை ஆசிரியர் - வேறு  எப்படி நடந்து கொள்ள முடியும் அவரால்?

அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவிலே விசுவ ஹிந்து பரிசத் மாநாட்டில் பேசியபோது என்ன சொன்னார்? எங்களுக்குப் பெரும்பான்மை கிடைத் தால் ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்லவில்லையா?

1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதற்குரியவர் ஏ.பி.வாஜ் பேயிதான். அந்தக் கட்டுரையின் தலைப்பு Sangh my Soul என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.

ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் நல்லவர் என்ன சொல்லுகிறார்?

முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:

(1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising).

(2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation) (இதன் பொருள்: முஸ்லிம்களுக்கென்று உள்ள அடை யாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).

அப்படி முஸ்லிம்களை உட்கொள் ளுவதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:

(1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.

(2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகு முறை.

(3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.

இது எவ்வளவுக் குரூரம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாசிஸ்டு களின் அச்சில் வார்த்தெடுத்த சிந்தனை அப்படியே இதில் வழிகிறதா இல்லையா?

வாஜ்பேயியே இப்படியென்றால் அவரின் சீடர் மோடி நான் ஒரு ஹிந்து நேஷனலிஸ்ட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

இப்படிப்பட்டவர் எப்படி மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக வரமுடியும்?

மதச்சார்பற்ற தன்மை என்பது தன் வசதிக்கு ஏற்ப திரித்தும் கூறுகிறார்.
என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங் களை நிறைவேற்றுவதுதான் மதச்சார் பின்மை.

(சென்னை காமராஜர் அரங்கில் துக்ளக் ஆண்டு விழாவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பேச்சு)

ஆதாயத்துக்காக சலுகை காட்டும் அணுகுமுறைக்கு மரண வியாபாரி மோடி - இது சோவின் உரை. அதே கூட்டத்தில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மோடி சொல்லும் மதச் சார்பின்மை சரியானதுதான் என்கிறார். இப்படி ஒரு விளக்கத்தை சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் சொன்னதுண்டா?
ஒரு பேரபாயம் நாட்டு மக்கள் தலைக்குமேல் கொடு வாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

1998 மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு சிறுபான்மையினர் வாக்கு 6.9 சதவிகிதம். 2004இல் 5.07 சதவிகிதம், 2009இல் 2.33 சதவிகிதம்.
குஜராத்தின் முஸ்லிம்களும் பிஜேபிக்கு வாக்களித்ததாகச் சொல்லப் படுகிறது. அது உண்மையெனில் அச்சத்தில் முரட்டுப் பிடியிலிருந்து அவர்கள் இன்னும் விடுதலை பெற வில்லை என்று பொருள்.

அண்மையில் குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி சார்பில் ஒரு முஸ்லிம் கூட நிறுத்தி வைக்கப்படவும் இல்லை.

இன்னொன்று முக்கியமானது; பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு மட்டும் ஆபத்தும் இழப்பும் அல்ல.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கேடுகள் உண்டு. இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகிவிடும். ஒட்டுமொத்தமாக பெண்களுக்குப் பெரும் கேடு. ஹிந்துத்துவாவில் பெண் களுக்கு உரிய இடம் என்ன என்று தெரியுமே.
பிஜேபியில் பார்ப்பனர் அல்லாதார் நிலை என்ன என்று உ.பி. கல்யாண் சிங்கு, ம.பி. உமாபாரதி வெளிப் படையாகச் சொன்னதுண்டே!

இந்தியா முழுமையும் உள்ள சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் பாசிச பிஜேபிக்கும் எதிராக ஒன்று திரட்டப்பட வேண்டும்.

ஊடகங்களில் குறிப்பாக இணைய தளங்களில் நம் ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டும்.

ஜாதி அமைப்புக் கூட்டணி என்ற பெயரால் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படும் மக்களும்  தெளிவடையும் வகையில் பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக 18 வயதில் முதன்முதலாக வாக்களிக்கும் இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.  போதிய தகவல்களும் உண்மை நிலைகளும் அவர்களிடத்தில் இல்லாமையால் - ஏதோ மாற்றம் நடக்கட்டுமே என்ற மிதப்பில் அவர்கள் நடந்து கொள்ளக் கூடும்.

இந்தப் பேராபத்தைஉணர்ந்து அவர்கள் மத்தியில் உண்மை வெளிச்சம் ஊடுரு வப்பட உரியது செய்யப்பட வேண்டும். 18 வயதுள்ளவர்களுக்கும் வாக்குரிமை உண்டு என்பதை மறந்து விடக் கூடாது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தியா முழுமையும் ஹிந்துத்துவாவை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படு கிறார். அது முன்னிறுத்தப்பட வேண்டும்.

இராமனைப் பற்றி பெரியார் சொன்ன போது, இராமன் படத்தைக் கொளுத்திய போது அதன் முக்கியத்துவத்தை உண ராதவர்கள், இப்பொழுது ராமராஜ்ஜி யத்தை உருவாக்க முனைகிறார்களே - இப்பொழுதாவது புரிந்துகொள்ள வேண்டும். முதலில் பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

------------------- --------------- கலி.பூங்குன்றன் துணைத் தலைவர்,திராவிடர் கழகம் அவர்கள் 26-10-2013  “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

மதம், சாமி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம்! - பெரியார்

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும்

தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ் நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டு மென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக்கொண்டு - நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது. ஒருசமயம் மேல் நாட்டின் பெருமையையும் கீழ் நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேசவேண்டு மென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை. ஆன போதிலும் இந்தத் தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்ல லாமென்பதாகக் கருதி சில குறிப்பு வைத்திருந்தேன். ஆனால் இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள் சமாதி வணக்கம், கொடி, பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாமார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்டு மக்கள் மூட நம்பிக்கையால் பின்பற்றுவதாகுமென்றும் சொன்னபோது இங்குகூட்டத்திலிருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய் விட்டது போல் கருதி கூக்குரலிட்டதையும், கோபத்துடன் ஆnக்ஷபித்த தையும் பார்த்தவுடன் நான் முன் குறிப்பிட்டு வைத்தவைகளையெல்லாம் தூரத் தள்ளிவிட்டு அவருக்கேற்பட்ட பீதியையும், இன்னும் அதுபோலவே இந்துக்களென்பவர்களுக்கு ஏற்பட்ட பீதியையும் பற்றியே பேசவேண்டியது அவசியம் என்று கருதிவிட்டேன். அதாவது இம்மாதிரி கீழ் நாட்டின் பீதியை ஒழிக்க வேண்டியது நமது முதற்கடமை யென்பதைப் பற்றியே பேசுகிறேன்.

நண்பர்களே! ஏதாவதொரு விஷயத்திற்கு ஆதாரமில்லை யென்றோ அது அறிவுக்குப் பொருத்தமில்லை யென்றோ, அதனால் பயனில்லை யென்றோ, அல்லது அதனால் இன்னின்ன கெடுதி என்றோ யாராவதொருவர் எடுத்துச் சொன்னால் அதற்கு மாறுபட்டவர்கள் அறிவுள்ளவர்களாயிருந்தால் அல்லது தங்கள் கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய யோக்கியமான வேலை யென்ன வென்றால் தைரியமாய்த் தக்க சமாதானம் சொல்லி தங்கள் கொள்கைகளை-தாங்கள் நடந்து வருவதற்கேற்ற ஆதாரங்களைக் காட்டி அறிவு அனுபவம் ஆகியவைகளுக்கு பொருத்தி மெய்ப்பித்துக் காட்டவேண்டியது யோக்கியமான கடமையாகும். அந்தப்படியான காரியம் ஒன்றும் செய்யாமல் எடுத்ததற்கெல்லாம் கடவுள் போச்சு, மதம் போச்சு, மார்க்கம் போச்சு, ஆண்டவனின் நம்பிக்கை போச்சு, ஆண்டவன் வார்த்தைக்கு விரோதமாச்சு என்று வெறும் கூப்பாடு போடுவதானால் என்ன பயன் விளையக்கூடும். மக்கள் மூடர்களாயிருக்கும் வரை இம்மாதிரி கூப்பாடுகளை மதித்து அவர்களும் எதோ முழுகிப் போய் விட்டது போல் ஆத்திரப்படக்கூடும். பிறகு அவர்களுக்கும் விபரம் தெரிந்து விட்டால் இந்தமாதிரி கூப்பாடு போட்டவர்களை வட்டியோடு அவமானம் செய்து விடுவார்கள். விஷமப் பிரசாரமும் சுயநலப் பிரசாரமும் வெகு நாளைக்கு இருக்க முடியாது. எந்த மக்களுக்கும் பகுத்தறிவு செல்வாக்குப் பெறும் போது ஏமாற்றினவர்கள் மீதுதான் முதலில் அவர்களது ஆத்திரமெல்லாம் திரும்பும். பிறகு தான் தங்கள் தங்கள் முட்டாள்தனத்தைப்பற்றி வருந்துவார்கள். ஆகையால் தான் விஷம பிரசாரங்களைப்பற்றி நான் எப்போதுமே பயப்படுவதில்லை. ஆனால் சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி வேண்டாமா என்பது தான் எனது கேள்வி.

நண்பர்களே! என்னைப்போல் ஒரு சாதாரண மனிதன் பேசுவதி னாலோ, தனக்குத் தோன்றியதை எழுதுவதினாலோ கடவுள் போய் விடும்- மார்க்கம் போய் விடும் - சமயம் போய்விடும் என்று நீங்கள் பீதி அடைவீர் களானால் உங்கள் கடவுளுக்கும் மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் கடவுளை உறுதி யானவரல்ல, உண்மையானவரல்ல என்றும், உங்கள் சமயம் உறுதி யானது அல்ல, உண்மையானது அல்ல என்றும், நீங்களே கருதியிருக்கின்றவர் களாகிறீர்கள். நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லையென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லை யென்பதை உறுதியாய் நம்புங்கள். அவைகளைப்பற்றி உண்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிவதல்ல எனது வேலை. நீங்கள் சொல்லுவதற்கு, நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதார மென்ன? அது உங்கள் பகுத்தறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்து வருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்வது தான் எனது வேலையாகும். அவைகளுக்கு இடம் கொடுப்பதாலேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவைகளைப்பற்றி மறுபடியும் வெளியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவா வென்று கேட்கின்றேன்.

இந்தப்படி ஆராய்ச்சி செய்து பார்ப்பதாலேயே மறைந்து போகும் மார்க்கமும், ஆண்டவனும் பிறகு என்ன காரியத்திற்குத்தான் பயன்படக் கூடும் என்பதை நீங்களே ஆத்திரப்படாமல் யோசித்துப் பாருங்கள். “எங்கள் கடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகமாயிருக்கக்கூடியவர்” என்று கருதிக் கொண்டு, “அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற நீங்கள், “அப்படியானால் சற்று ஆராய்ச்சி செய்து அறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதா வென்று பார்க்கலாமா” என யாராவது கேட்டால் உடனே இந்த மாதிரி பயந்தால் அப்பொழுது இந்தப் பயப்படுகின்ற ஆட்களுக்கு கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்கின்ற விஷயத்திலும், அவர் சர்வ வியாபகமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும் தங்களது மார்க்கம் அவரால் தான் ஏற்பட்டது என்கின்ற விஷயத்திலும் நம்பிக்கையிருக்கின்றதா வென்பதை சற்று யோசித்துப் பாருங்கள். மனிதனுடைய அறிவிற்குப் பயப்படும் கடவுளும், அவனது ஆராய்ச்சிக்குப் பயப்படும் மார்க்கமும், உலகத்தில் யாருக்கென்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும் ஆராய்ச்சி யையும் கண்டால் ஏன் இப்படிப் பயந்து ஓடுகின்றீர்கள்? ஆராய்ச்சிக்கு மதிப்புக் கொடுக்காத காரணமே இன்று இந்தியா, உலகிலுள்ள நாடுகளி ளெல்லாம் அடிமையான நாடாகவும், இந்தியர்கள் உலகிலுள்ள மக்களி ளெல்லாம் இழிவான மக்களாகவுமிருக்க வேண்டியதாகி விட்டது. கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை, மதம் என்றால் மூடநம்பிக்கை யென்கின்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையைத் தவிர கடவுளுக்கும் மதத் திற்கும் வேறு அவமானம் வேண்டியதேயில்லை. இந்த மாதிரி அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கின்றவனை விட கடவுளையும், மதத்தையும் பற்றி கவலைப்படாதவனோ, இல்லையென்று கருதிக் கொண்டிருக்கின்றவனோ வீரனென்றே நான் சொல்லுவேன். ஏனெனில் கவலைப்பட்டுக் கொண்டு உண்டு என்று சொல்லிக்கொண்டு மெய்பிக்க திண்டாடிக் கொண்டும் நடுங்கிக்கொண்டும் திரிவது பயங்காளித் தனமென்றே சொல்லுவேன்.

சகோதரர்களே! நாங்கள் வேலையில்லா வெட்டி ஆள்களா? அல்லது ஏதாவது பூசாரி புரோகிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதாவது பண்டிதபுராண காலட்ஷேபக் கூட்டத்தார்களா? எங்களுக்கு இந்த வேலையில் ஏதாவது ஜீவனத்திற்கோ பெருமைக்கோ சிறிதாவது இதில் வழியுண்டா? நாங்கள் ஏன் எங்கள் சொந்த காசையும் நேரத்தையும் செலவு செய்து கொண்டு இந்த மாதிரி ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டு காசுக்குதவாத வெரும் ஆட்கள் எல்லாம் எங்களை வையும் படியாகவும் “சாபம்” கொடுக்கும்படி யாகவும், வெட்டுகின்றேன், குத்துகின்றேன் என்று மிரட்டவும், அவ்வள வையும் லட்சியம் செய்யாமலும், வந்ததுவரட்டும் நாம் செத்துப் போனால் நமக்குத்தானாகட்டும் மற்றும் யாருக்குத்தானாகட்டும் என்ன முழுகிப் போகும் என்கின்ற துணிவின் பேரில் வீட்டிலுள்ள வர்களிடம் கடைசிப் பயணம் சொல்லிக்கொண்டு வந்து, இந்த மாதிரி அலைவதற்குக் காரணம் என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள். இக் கூட்டத்திற்கு தலைமை வகித் திருக்கும் தலைவர் ஜனாப் தாவுத்ஷா பி.ஏ. அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எவ்வளவோ பாடுபடுகின்றவர். அவர் சப் மேஜிஸ் திரேட் உத்தியோகத்தை ராஜிநாமா கொடுத்தவர். ராஜிநாமாக் கொடுக்காமல் இப்போது அவர் உத்தியோகத்திலேயே இருந்திருப்பாரேயானால் இன்றையதினம் ஏதாவது ஒரு பெரிய பதவியில் இருப்பார். மாதம் 4000, 5000 சம்பளமுள்ள உத்தி யோகத்தில் இல்லாவிட்டாலும் மாதம் 900, 1000 ரூ. உத்தியோகத்திலாவது இருந்திருப்பார். அப்படிப்பட்டவர் ஏன் இந்த மாதிரி பாடுபடுகிறார் என்பதை யோசித்துப்பாருங்கள்.

இன்று உலகம் போகின்ற போக்கில் உலகமக்கள் அடைந்திருக்கின்ற முற்போக்கில் - நாகரீகத்தில் நாம் எந்த நிலையிலிருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நம் “அறிவாளிகள்” இன்று சாமி போச்சு, சமயம் போச்சு, சைவம் போச்சு, சாமியும் சைவமும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது என்ப தாக சிறிதும் வெட்கமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். நம்மைக் காப்பாற்ற ஏற்பட்ட சர்வ சக்தியுள்ள கடவுளை, நம்மை வாழ்விக்க ஏற்பட்ட பரிசுத்த சமயத்தை, நாம் காப்பாற்ற வேண்டிய அளவு நெருக்கடி யான சமயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல ஆரம்பித்தால், அது கடவுளுடையவும், சமயத்தினுடையவும் பலக்குறைவா? அல்லது அந்த மாதிரி சொல்லுகின்ற மக்களின் அறிவுக்குறைவா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். மனிதனுக்கு எப்படிச் சுயமரியாதை பிரதானமோ, அப்படியே கடவுளுக்கும், மார்க்கத்திற்கும்கூட சுயமரியாதை அவசியம் என்பதை நீங்கள் உணருங்கள். அப்படியானால் தங்களைக் காப்பாற்ற இந்த மாதிரி இத்தனை வக்காலத்து கொடுத்திருக்கும் அவைகளுக்கு சுயமரியாதை இருக்கின்றதா என்று யோசித்துப்பாருங்கள்.

சகோதரர்களே! ஐரோப்பாவின் “நோயாளியான” துருக்கியானது, ஆண்டவனுக்கும் மார்க்கத்திற்கும் வந்த நெருக்கடியைக் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்திருக்குமானால் இன்று அது இன்றைய மாதிரியில் இருந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப்பாருங்கள். கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் இருந்த ருஷீயா இன்று ஆண்ட வனையும், மார்க்கத் தையும், ஆதாரத்தையும் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்தால் அது இன்றைய நிலையை எந்தக்காலத்திற்காவது அடைய முடியுமா வென்பதை யோசித்துப்பாருங்கள்.

அதுபோலவே, சீனாவையும், ஜப்பானையும், பிரஞ்சையும், இங்கி லாந்தையும், அமெரிக்காவையும் நினைத்துப்பாருங்கள். எந்த நாட்டுக் கார னாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத்தையும், இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள் தனமானதும், பயனற்றதும், நாசவேலையானதுமான வேலையில் ஈடுபடுத்தியிருக்கின் றார்களா வென்பதை நடு நிலையிலிருந்து யோசித்துப்பாருங்கள்.

கடவுள் போய் விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலை யாகும்? என்று நினைக்கிறீர்கள். அவர்களை விட பயங்காளிகள், அறிவிலி கள் வேறு யார் இருக்கக்கூடும்? என்று எண்ணுகின்றீர்கள். கடவுளுக்கும், சமயத்திற்கும் அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையு டையதாகவே ஆகாது.

ஆகவே நீங்கள் முதலில் அந்த பயத்தை ஒழியுங்கள். “சமாதை வணங்க வேண்டாம்” அதற்கு “பூசை செய்யவேண்டாம்” என்றால் உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால், இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்துமத சம்மந்தமான கோவில்களெல்லாம் பெரிதும் சமாதுதான். அந்தக் கடவுள்களெல்லாம் அநேகமாய் அந்த செத்துப் போன ஆள்களேதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக்காரர்கள் துணிபு. அதனால்தான் பல புண்ணிய ஸ்தலங்களும் பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று. அதையொழிப்பதற்கு தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்க மாகும். இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும், அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடாதென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகிறது. அதற்கு நேர் விரோத மாக நீங்கள் சமாதுகளை யெல்லாம் வணங்கவும் பூசிக்கவும், ஆரம்பித்து விட்டீர்களானால் நீங்கள் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்ல யோக்கியதை யுடையவர்களாவீர்கள்? அதுமாத்திரமல்லாமல், அல்லாசாமி பண்டிகை யிலும், கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ்லாமானவர்கள் சிலர் நடந்து கொள்வது மிகவும் வெருக்கத்தகுந்ததாகும். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படி பகுத்தறிவு மார்க்கமென்றும், இயற்கை மார்க்க மென்றும் சொல்லிக் கொள்ளக்கூடும்? என்பதை யோசித்துப்பாருங்கள்.

 இவைகளையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் அந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவுமார்க்கமாகவோ உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்கமுடியவே முடியாது. அதோடு மாத்திர மல்லாமல் மார்க்கத் தலைவருக்கும், மார்க்க வழிகாட்டியாருக்கும் கூட இது அவமானமும் வசைச்சொல்லுமாகும் என்றே சொல்லுவேன். இன்று இந்து வும், கிருஸ்தவரும் பகுத்தறிவைக்கண்டால் பயப்படுகின்றார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று ரூபிக்க பந்தயம் கட்ட வருகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட அதாவது சமாது வணக்கமும், பஞ்சா வணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை ஏராளமாய் வைதுக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர் களையும் வைத்துக்கொண்டு இஸ்லாம் மார்க்கம், பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்லிக்கொள்வதென்பது எனக்குத்தெரியவில்லை.

நீங்களே சொல்லுங்கள், இவைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்க மாகுமா? கோபிப்பதில் பயனில்லை. இந்து மதம் என்பதை விட, கிருஸ்துமதம் என்பதை விட இஸ்லாம் மதம் என்பது மேலானது என்பது எனதபிப்பிராயம் என்று எங்கும் சொல்லுவேன். ஆனால் அதில் இனி சிறிது கூட சீர் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பவர்களுடன் நான் சிறிது பலமாக முரண்பட்டவனே யாவேன். ஏனெனில் நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டுதான் சொல்லுகின்றேன். அதுவும் இன்று இஸ்லாம் மார்க்கத்தார் என்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் அனுஷ்டித்து வரும்- நடந்து வரும் கொள்கைகள் இஸ்லாம் மார்க்க கொள்கைகள் என்றால் ஆண் பெண் இரு துறையிலும் சீர்திருத்தம் செய்யவேண்டிய சங்கதி பல இருக்கின்ற தென்று தைரியமாய்ச் சொல்லுவேன். நீங்களும் அவற்றை சீர்திருத்த வழி தேடுங்கள். அவற்றை நிலைக்க வைக்க ஆதாரத்தை தேடாதேயுங்கள். மனிதனின் நன்மைக்கும் சௌகரியத்திற்கும் மார்க்கம் ஏற்பட்டதென்று கருதி தற்கால அறிவுக்கும், நிலைமைக்கும் ஒத்திட்டுப் பாருங்கள். எக்காலத்திற்கும் ஏற்ற மதமென்றால் காலத்திற்கு ஏற்றபடி தானாகவே மாறவோ, மாற்றிக் கொள்ளவோ சௌகரிய மிருக்கும் என்பதில் பயமோ, அவநம்பிக்கையோ கொள்ளாதீர்கள். இருட்டானால் விளக்கைப்பற்ற வைத்துக் கொள்ளுங்கள், பகலானால் விளக்கை அணைத்து விடுங்கள் என்றுதான் பகுத்தறிவுள்ள மார்க்கம் சொல்லி இருக்கும். எப்போதும் விளக்கு வைத்திருங்கள் என்றோ, எப்போதும் விளக்கு வைத்திருக்காதீர்கள் என்றோ, சொல்லி இருக்க முடியாது. ஆகவே, காலப் போக்குடன் கலந்து கொள்ள பயப்படாதீர்கள். இந்தியாவுக்கு இரண்டுமதம் சொந்தமாய்விட்டது. அதாவது இந்துமதம் இஸ்லாமிய மதம் இரண்டும் ஒன்றுபட்டாலொழிய இந்தியாவுக்கு விடுதலை இல்லை. ஒருவர் மதத்திற்கு ஒருவர் வர வேண்டுமென்றால் ஒரு நாளும் முடிவு பெறாது. இருவரும் பகுத்தறிவுப்படி நடந்துகொள்ளலாம் என்றால், யாருக்கும் ஆnக்ஷபனை இருக்க வழியிருக்காது. தங்கள் மதம் பகுத்த றிவுக்கு ஏற்றதாய்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிப்பாய் இந்த ராஜிக்கு ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கு நம்பிக்கை இல்லாதவர்கள் எடக்குப்பேசித்தான் தீருவார்கள். அவர்கள் அதன் பயனை அடைந்துதான் தீருவார்கள். இந்த நிலையில் என்ன சுயராஜ்யம் வந்தாலும், பூரண விடுதலை வந்தாலும் அவை நமக்குள் உதை போட்டுக்கொள்ளத்தான் உதவும்.

 இதுவரை பொதுவாகப் பேசினேன், கடைசியாக இந்துகளுக்கென்று சில வார்த்தை பேசுகின்றேன். ஏனெனில் நானும் சில நண்பர்களும் சாப்பிட்ட தற்குப் பிறகு ஒரு நண்பர் இந்தஊர் கோவில் தேரையும், கோபுரத்தையும் வந்து பார்க்கும்படி கூப்பிட்டார். நாங்கள் பார்ப்பதற்காக அங்கு சென்றோம். பிறகு அங்கு பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. காட்டு மிராண்டிகள் காலத்தில்தான் சாமி களும் கோவில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராலும் மறுக்கமுடியாத படி அவைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

முதலாவது நாங்கள் இந்த ஊர்தேரைப் பார்த்தோம். அதில் சித்தரித்து வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் மிகமிக ஆபாசமானவையாய் காணப் பட்டன. அவைகளுக்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதானாலும், மனிதப்பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போலும் இது போன்ற மற்றும் பல உருவங்களை சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒப்புக் கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை. கோபுரங்களைப் பார்த்ததைப் பற்றிச் சொல்லலாம் என்றாலோ அவற்றைப்பற்றி இன்னும் ஒரு தடவை நினைப்பதற்குக்கூட கஷ்டமாய் இருக்கின்றது. பெண்களை அதில் படுத்துகின்ற பாடும், காம விகாரங்களை அதில் எடுத்துக்காட்டி இருக்கும் முறையும் அநியாயம், அநியாயம். இவைகளையெல்லாம் நெருப்புவைத்துக் கொளுத்தி இடித்து எறிந்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல் லாம் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்துவிட்டாலொழிய இதைச் சேர்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.

“சுயமரியாதைகாரர்கள் புராணக் குப்பைகளைக் கிளரிக்கிளரி வெரும் ஆபாசங்களைப் பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள்” என்று பேசு கின்றீர்கள். எங்கள்மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளுகின்றீர்கள்.

ஆனால் இந்த கோவில்களுக்குப்போய், தேங்காய் பழம் உடைத்து வைத்து காசும் கொடுத்து இந்த உருவங்களைப்பார்க்க வந்துகொண்டி ருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிதுகூட சிந்திப்ப தில்லை. நாங்கள் எழுதுவதையும் பேசுவதையும் பார்த்து வெறுப்புக் கொண்டு என்ன செய்வது? இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக் கைகள் நின்றதா? நிருத்த யாராவது பாடுபட்டீர்களா? காரமடைத்தேரில் இதைவிட அசிங்கமாகப்பார்த்தேன். திருவொற்றியூரில் வெகு ஆபாச மாய்ப் பார்த்தேன். மதுரை முதலிய இடம் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இந்த ஊர் கோபுரம் எல்லாவற்றையும் மீறி விட்டது. இதுவரை நாங்கள் எழுதாத, பேசாத நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கின்றன. எல்லாம் சாமிகளாகவும் ரிஷிகளாகவும், முனிவர் களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றன. இதையெல்லாம் பற்றி அன்னிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ணமாட்டார்களா? கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான அவமானமே இல்லாமல் போய் விட்டது. இதை நிறுத்தவேண்டுமா, வேண்டாமா? நிறுத்த வேண்டுமானால் என்ன செய்வது? இதுவரை சமயதிருத்தக்காரரும் சமூக திருத்தக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா? போதாக் குறைக்கு பணம் படைத்த மூடர்களும் யோக்கியப் பொருப்பற்றவர்களும் இந்த சித்திரங்களுக்கு சாயம் அடித்து ரிப்பேர் செய் கின்றார்களே. அவர் களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை.

 சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் ஊரார் பணத்தை ஏழைகள் பணத்தை கொள்ளை அடித்து அவர்களைப் பட்டினிபோட்டுவிட்டு இந்த மாதிரி மிருக மனிதப் புணர்ச்சிகளுக்கு பொம்மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர் பிடித்ததுமான காரியமாகும் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்த லக்ஷணத்தில் நாங்கள் இந்த கோவிலுக்குள் புகுந்துவிடுவோமென்று இப்போது போலீசு காவல் போடப்பட்டிருக்கின்ற தாம். நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவில்காரர்கள் எல்லாம் இப்படியேதான் செய்கின்றார்கள். ஆகவே இந்துக்கள், சமயவாதி கள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின்றேன் - இந்த இந்துமதத்தை இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் காப்பாற்றப் போகின்றீர்கள்? என்று கேட்கின் றேன்.

 மதம், சாமி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. வருத்தப்பட்டுப் பயனில்லை, வெட்கப்பட வேண்டும். அப்போதுதான் அறிவு, ஒழுக்கம், நாகரீகம் விளங்கும். ஆகவே சகோதரர்களே! இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப்பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பொருளற்ற கூப்பாடு போடுவதால் பயன் விளையாது. இனியும் இந்தமாதிரி குஷ்டவியாதி வந்த சரீரமாதிரி இந்த சமுகம் நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

--------------------திருநெல்வேலி மாவட்ட களக்காட்டில் நடைபெற்ற ஐக்கிய முஸ்லீம் சங்க மாநாட்டின் இரண்டாம் நாளில் ஆற்றிய உரை.-"குடி அரசு" - சொற்பொழிவு - 01.02.1931

25.10.13

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!

தீபாவளி பற்றித் தமிழறிஞர்கள் கருத்து 
தீபாவளிப் பண்டிகை - தமிழர்க்கு எவ்வகையிலும் ஒவ்வாதது என்றும்  காட்டுமிராண்டிக் கால கற்பனைகள் நிறைந்தது என்றும்  அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், உண்மை நிலைக்கும், இயற்கைத் தன்மைக்கும் முரணானது என்றும் தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கத்தவர்களாகிய நாமும் முக்கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாட்டிலே பேசியும், ஏட்டிலே எழுதியும் அறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம். என்றாலும், நாம் எதிர்பார்த்தவாறு மக்கள் இன்னும் திருந்தி தெளிந்த அறிவு பெற்றார்கள் இல்லை. தீபாவளி மோகம் மக்களை இன்னமும் வாட்டி வதைத்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நமது பகுத்தறிவு நாத்திக இயக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடான, வேறுபாடான எண்ணம் கொண்ட தமிழக ஏழு பெருந்தமிழ் அறிஞர்களின் கருத்துரைகள் நமது கொள்கைக்கு வலுவூட்டி அரண் செய்வதாக அமைந்திருக்கின்றன. மொத்தத்தில் அத்தமிழறிஞர்களின் கருத்துரைகள் தீபாவளி தமிழர் விழா அன்று என்பதையும், தீபாவளிக்கு இலக்கியச் சான்றுகள் ஏதும் இல்லை என்பதையும், தீபாவளி வடநாட்டுப் பண்டிகை என்பதையும், தீபாவளி சமண சமயப் பண்டிகை என்பதையும் நன்கு தெளிவுபடுத்துகின்றன. தீபாவளி கொண்டாடி மகிழும் பக்த அன்பர்களாம் தமிழ்ப் பெருமக்கள் மதி நலமும், மான உணர்வும் பெற வேண்டும் என்ற நன்னோக்கில் அத்தமிழ் அறிஞர்களின் கருத்துகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன.

1. தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகா சுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்ற தற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்ப தற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படு கிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடின மாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.  (ஆசிரியர்: கா. சுப்பிரமணிய (பிள்ளை), நூல்: தமிழ் சமயம் பக்கம்: 62. )

2. வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியா வின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத் தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபா வளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத் தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண் டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத் திலிருந்து வந்து மதுரையில் குடி யேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங் காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை; தீப ஆவளி=தீபாவளி.  குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக் கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளி யில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்த தில்லை.

(ஆசிரியர்: பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம்: 433-434)

3. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!

வடநாட்டில் அக் காலத்திலிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வட நாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமி ழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத் தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களா லும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திரு நாள் கொண்டாடப்படு வதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையா யிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக்கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநா ளுக்கும் கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் யாதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீப ஆவளி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச்சிறிதும் இசைவது அன்று.
(ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள். நூல்: தமிழர் மதம் பக்கம்: 200-201)

4. அகராதிக் குறிப்பில்...

இரண்யாட்சதன்: இவன் கதா பாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணு மூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார் பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண் மையை மறுத்து தட்டை என்னும் மத வாதத்தை வற்புறுத்துகிறது) (169) நரகாசுரன்: வராக (பன்றி) உருக் கொண்ட விஷ்ணு விற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934) சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப் பெயர் அடைந்த தேவர் (705). சுரா பாணம் என்பது ஒரு வகை மது; அதை உண்டதால் அவர்கள் சுரர் ஆனார்கள்.
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதா வது மது அருந்தும் ஆரியப் பார்ப் பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமி ழர்கள்) (24)

(ஆசிரியர்: சைவப் பேரறிஞர் ஆ. சிங்காரவேலு முதலியார், நூல்: அபிதான சிந்தாமணி)

5. சமண சமயப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக் கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்த போது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற் பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆன படியினாலே சொற்பொழி வைக் கேட்டுக் கொண் டிருந்த மக்கள் அனை வரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்த படியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக்கண்டு அரசனுக்கு அறி வித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வர வழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத் திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவளி = வரிசை : தீபாவளி) மகாவீரர் விடி யற்காலையில் இயற்கை எய்திய படியால் தீபாவளி என்ற பெயரில் விடியற் காலையில் கொண்டாடப் படுகிறது. விடியற்காலை யில் நீராடிய பின்னர் திரு விளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக் கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டி கையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்த மற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகா சுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண் டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்ய மில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதை தான் நரகாசுரன் கதை.
(ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80)

6. அறிவுக்குப் பொருத்தமற்ற கதை

வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ் விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்தி லேயே வீடு பேறு அடைந் தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந் தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன்கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவ தற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை, தீபாவளி = விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலை யில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட் டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத் தில் சமணர்கள் சைவ வைணவங் களைத் தழுவி னர். அந்நிலையிலும் தீபா வளியைக் கொண்டாடி னர். அப்பழக்கம் பிற சம யத்தாரிடையேயும் நாள டைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத் திகள் முதலியோர் இன் றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

(ஆசிரியர்: டாக்டர் மா. இராசமாணிக்கனார்
நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும் பக்கம் 33-34) 

7. அசுரர் கொலைக்கு விழாவா?

தீபாவளியின் உண்மை அறிந்த வர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும் பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண் டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தால் கொண்டாடப் படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இரணியன், இரா வணன், இடும்பன் மகன், சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்கவேண்டும். ஆகவே நரகா சுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகா சுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று.

 (ஆசிரியர்: திருமுருக கிருபானந்தவாரியார், நூல்: வாரியார் விரிவுரை விருந்து பக்கம்: 95)

 --------------------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்--"விடுதலை” 25-10-2013