Search This Blog

1.10.13

பெரியார் கண்ட இயக்கத்தின் தலைவர் - தமிழர் தலைவரைத் தாக்குவதா?


நாடெங்கும் கண்டனங்கள் வெடிக்கின்றன! தலைவர்கள் கண்டன அறிக்கை!

சென்னை, அக்.1- தமிழர் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தாக்கப்பட்டதற்கு நாடெங்கும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பி யுள்ளன.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்

தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் விருத்தாசலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றுக்காகச் சென்ற போது அவரது வாகனத்தை வழிமறித்து சிலர் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். தங்கள் ஜாதியைச் சேர்ந்த கடவுளை கி.வீரமணி அவர்கள் அவமரியாதை செய்துவிட்டதாகச் சொல்லி ஒரு கும்பல் திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் எனக் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்த போதி லும் போதிய பாதுகாப்பு வழங்காமல் அலட்சியப்படுத்தியிருக்கிறது.

அய்யா கி.வீரமணி அவர்களைத் தாக்க முற்பட்ட ஜாதிவெறியர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தராமல் இழுத் தடித்து, பல்வேறு இடையூறுகளைச் செய்ததோடு  அய்யா வீரமணி அவர் களுக்கு உரிய பாதுகாப்புத் தராத விருத்தாசலம் காவல்துறை அதிகாரி யின் மெத்தனப் போக்குக்கும் எனது கணடனத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

மனிதர்களிடையே ஜாதி பார்த்து அவர்களுக்கிடையே பகைமையை வளர்த்துக்கொண்டிருந்த ஜாதி வெறியர்கள் தமது ஆதாயத்துக்காக இப்போது கடவுளுக்கும் ஜாதி கற் பித்து வன்முறையைத் தூண்டுகிறார் கள். இதை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கவேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. தேர்தல் நெருங்குகிற போதெல்லாம் இத்தகைய ஜாதிவெறி சக்திகள் ஊக்கம் பெற்று சமூக அமைதியை சீர்குலைக்க முனைவது  வழக்கம். அதைத் தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட் டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் சட்ட மன்ற குழுத் தலைவரும் இராமநாத புரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: கடந்த 28-9-2013 அன்று விருத்தா சலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அவர்களுடைய வாகனத்தை மறித்து  சமூகவிரோதிகள் தாக்கியுள்ளனர் அதோடுமட்டுமில்லாமல் திராவிடர் கழகக் கொடிகளைச் சாய்த்தும், சுவரொட்டிகளைக் கிழித்தும் வன் முறையை தூண்டும் விதமாக அந்த சமூக விரோதக் கும்பல் வெறியாட்டம் நடத்தியுள்ளது.  இதுபோன்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறை இதை தடுக்காமால்  வேடிக்கை பார்த்து இருந்தது என தெரிய வருகிறது.
சமூகநீதிக் கொள்கையை கடைசி மூச்சு வரை, வன்முறையை சிறிதும் தூண்டாமல் பரப்பி வந்த தந்தை பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்  மீது தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக அரசு இத்தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக இருந்த வன்முறைக் கும்பலைக் கைது செய்யவும் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லை எனில் தமிழகத்தில் மக்கள் மற்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டி ருக்கும் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என உலக நாடுகள் கருதக் கூடும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கையில் கூறியுள்ளார்.

சமாஜ்வாடி கட்சி கண்டனம்

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக போராடிய தந்தை பெரியார் வழியில், போராட்ட களத்தை வழி நடத்தி வருகின்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களை கொலை செய்யும் முயற்சியுடன் சில சமூக விரோத சக்திகள் கடந்த 28.9.2013 அன்று கடலூர் மாவட்டம், விருத் தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணி மாநாட்டிற்கு சென்றபோது அவரது கார்மீது தாக்குதல் நடத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்மீது கொலை செய்யும் முயற்சியிலும் தாக்குதல் நடத்திய சமூக விரோத சக்திகளை உடனடியாக காவல்துறை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சமாஜ்வாடி கட்சி சார்பில் கேட்டுக் கொள் கின்றோம். இவ்வாறு சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் இளங் கோயாதவ் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

அமெரிக்கா - வாசிங்டனிலிருந்து உருக்கமான கடிதம்

பெரியார் பன்னாட்டு அமைப்பின் அமைப்பாளர் - அமெரிக்கா வாசிங் டனில் உள்ள பேராசிரியர் அரசு செல்லையா அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
விருத்தாசலம் பகுதியில் தமிழர் தலைவர் அவர்களைத் தாக்கும் முயற்சியை படங்களுடன் விடு தலையில்  பார்த்தேன். அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இப்படியெல்லாம் எப்படி நடக்க முடிகிறது? இனி இவ்வாறு நடக்கா மலிருக்க என்ன செய்யப்பட வேண் டும்? போன்ற கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன.
இந்தியா முழுமைக்கும் தந்தை பெரியார் கொள்கைகளை ஓய்வின்றி பரப்பி வரும் தமிழர் தலைவர் நீண்ட நெடுங்காலம் நல்ல உடல் நலத் துடனும், அமைதியான மன நிலை யிலும் வாழ வேண்டும் என்பது அவரது தொண் டினை அறிந்த உலகளா விய பகுத்தறிவுவாதிகள் அனைவரின் பேரவா.
ஒரு முறை ஈரோடு கவிஞர் தமிழன்பன் பேசும்போது சொன்னார்: தந்தை பெரியார் விட்டுச் சென்ற மூன்று பெரும் சொத்துக்கள்: தமிழர் தலைவர், விடுதலை, பெரியார் திடல்
அந்த மூன்று சொத்துக்களையும் பெரும் கவனத்துடன் பாதுகாப்பது இந்திய பகுத்தறிவாளர்கள், சமூக நீதியில் அக்கறையுள்ளவர்கள் அனை வரின் கடமை.
இதய அறுவை சிகிச்சைகள் மூன்று முறை நடந்த பின்னும், 80 வயதினைத் தாண்டியும், அவரின் தொடர்ந்த பிரச்சார பயணங்களும், எழுத்தும், பேச்சும் எவரையுமே மலைக்க வைக்கக் கூடியவை.
அவரது வழிகாட்டலும், சிந்தனை களும், விமர்சனங்களும் சமூகநீதி இந்தியா முழுமையும் பரவ மிகவும் இன்றியமையாதவை.
அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்தும் செய்யப்பட வேண்டும் என்று பெரிதும் விரும்பு கிறோம்.

இவ்வாறு பேராசிரியர் அரசு செல்லையா எழுதியுள்ளார்.
 ************************************************************************************

விருத்தாசலத்தில் தமிழர் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டனக் கூட்டங்கள்!
கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள்!

விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 அன்று மிக எழுச்சியுடன் திராவிடர் மாணவர் கழக மண்டல மாநாடு வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
தொடக்க முதலே இந்த மாநாடும், பேரணியும் நடைபெறக் கூடாது என்று காவிக் கூட்டமும்  அதற்குத் துணை போகும் ஒரு சிறு கும்பலும் தீவிரமாக முயற்சித்தன. உள்ளூர்க் காவல்துறையும் துணை போனது வேதனைக்குரியது.

எல்லா இடர்ப்பாடுகளையும் மீறி வெகு சிறப்புடன் நடைபெற்றது மாநாடும், பேரணியும் என்றவுடன் ஆத்திரக்காரர்களுக்குப் புத்தி மட்டு என்ற தன்மையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மாநாட்டுக்கு வந்த போது அவரது வேனைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப் பதற்றமான சூழ்நிலையிலும், மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், மக்களை ஆற்றுப்படுத்தினார் கழகத் தலைவர். மாநாட்டு நிகழ்ச்சி எந்தவிதக் குறைபாட்டுக்கும் இடமில்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பெற்றது. பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இளைஞர்கள் திறந்த வெளி மாநாட்டில் கூடியிருந்தனர். அவர்களிடத்தில் தமிழர் தலைவர் சிறப்பானதோர் கொள்கை உரையை நிகழ்த்தினார்.

கருப்புக் கொடி காட்டுவோம் என்று ஒரு கும்பல் சொல்லியிருந்தும், காவல்துறை எப்படி அலட்சியமாக இருந்தது என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. தமிழர் தலைவரைத் தாக்க கும்பல் தேர்ந்தெடுத்திருந்த இடத்தில் செய்தியாளர்கள், தொலைக்காட்சியினர் வந்திருந்தனர் என்றால், ஏற்கெனவே திட்டமிடப்பட்டது என்பது வெளிப்படை!

இவ்வளவு நடந்திருக்கும்போது காவல்துறை, தன் கடமையைச் செய்யாதது ஏன்? பொதுவான ஏடுகள்கூட இதனைச் சுட்டிக் காட்டியுள்ளன. உலகம் முழுவதிலிருந்தும் பெரு மக்கள் தொலைபேசியில் விசாரித்த வண்ணமே இருந்தனர்.  தி.மு.க. தலைவர் கலைஞர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், குமரி அனந்தன் முதலியோர் கண்டன அறிக்கைகளை விடுத்தும், விசாரித்தும் வருகின்றனர்.

மாபெரும் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் இயக்கத் தலைவரை, இந்த 2013-லும் தாக்க வேண்டும் - கொலை செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம், திட்டமிட்டு செயல்பட்டது என்றால், அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது - கூடாது.

வரும் 3ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் கண்டனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், இதில் ஒத்த கருத்துள்ள முன்னணியினரும் கலந்து கொள்ளும் வண்ணம், கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து உடனே விரைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கண்டனப் பொதுக்கூட்ட விவரம்
நாள்: 03.10.2013 வியாழன்
1. சென்னை - கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) 2. விழுப்புரம் - வழக்குரைஞர் கோ. சாமிதுரை (பொருளாளர், திராவிடர் கழகம்)
3. மதுரை - சு. அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
4. சேலம்  - முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
5. நாகப்பட்டினம் - இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்). வழக்குரைஞர் பூவை. புலிகேசி
6. தஞ்சாவூர் - உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்புச் செயலாளர்), தஞ்சை. இரா. பெரியார் செல்வன்
7. திருவள்ளூர் - வழக்குரைஞர் அ. அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்)
8. கோயம்புத்தூர் - முனைவர் அதிரடி க. அன்பழகன்
9. கடலூர் - இராம. அன்பழகன்
10. காஞ்சிபுரம் - கவிஞர் பொதட்டூர். புவியரசன், பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்)
11. விருதுநகர் - இல. திருப்பதி (மாநில இளைஞரணி செயலாளர்) முத்து - கதிரவன்.
12. சிவகங்கை - வழக்குரைஞர் ச. இன்பலாதன் (சட்டத்துறைச் செயலாளர் திராவிடர் கழகம்), திருத்துறைப்பூண்டி குணசேகரன்
13. திருவாரூர் - குடவாசல் கணபதி (மாநில விவசாய திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர்), புலவர் வீர. கலாநிதி
14. வேலூர் - தமிழ் சாக்ரடீஸ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
15. திருவண்ணாமலை - யாழ். திலீபன்
16. நாமக்கல் - மாங்காடு மணியரசன்
17. கன்னியாகுமரி - பால் இராசேந்திரம்
18. பெரம்பலூர் - கோபி. குமாரராசா
19. அரியலூர் - நெய்வேலி வெ. ஜெயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்)
20. திருப்பூர் - பேராசிரியர் காளிமுத்து
21. தேனி - வேங்கைமாறன்
22. நீலமலை - புலியகுளம் வீரமணி, மண்டலச் செயலாளர்
23. இராமநாதபுரம் - சிவகங்கை. சுப்பையன்
24. புதுக்கோட்டை - என்னாரெசு பிராட்லா
25. கிருஷ்ணகிரி - காஞ்சி. கதிரவன்
26.  4.10.2013 - திருச்சி - வழக்குரைஞர் ச. சிங்காரவேல்
27. 4.10.2013  - திருநெல்வேலி - பால். இராசேந்திரம்
28. 4.10.2013 - தூத்துக்குடி - முத்து. கதிரவன்
29. 4.10.2013 - கரூர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி
30. 4.10.2013 - தாராபுரம் - முனைவர் அதிரடி க.அன்பழகன்
31. 4.10.2013 - கோபிசெட்டிப்பாளையம் - டாக்டர் பிறைநுதல்செல்வி, கோபிகுமாரராசா
 32.  5.10.2013 - புதுச்சேரி - நாத்திக நம்பி.
 33. 5.10.2013 - திண்டுக்கல் - இராம. அன்பழகன், ஆ. நாகலிங்கம்.

குறிப்பு: ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்தவர் களையும் இதில் கலந்து கொள்ளச் செய்யலாம். மாற்றப்பட்ட தேதிகளைத் தவிர்த்து மற்ற பொதுக் கூட்டங்கள் அனைத்தும் 3.10.2013 அன்று மாலை நடைபெறும்.
----------------------------- கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் - "விடுதலை" 1-10-2013


13 comments:

தமிழ் ஓவியா said...


மோடியின் உரையும் விருத்தாசலம் மாநாடும்


வருங்காலப் பிரதமர் இவர்தான் என்று மிகப் பெரிய அளவு - பணத்தை வெள்ளமாகப் பாய்ச்சி ஆள் பிடித்துக் கூட்டத்தைச் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டது ஒரு கூட்டம்! அப்படி ஒரு கூட்டம் திருச்சியில் கடந்த வியாழனன்று நடைபெற்றது.

பிரம்மாண்டமான ஏற்பாடு என்பது உண்மைதான். கொட்டிக் கொடுக்கத்தான் பெரும் பெரும் பணத் திமிங்கலங்கள் இருக்கிறார்களே - அவர்கள் தானே மோடி பிரதமராக வரவேண்டும் என்பதில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

என்னதான் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், மோடி தன் உரையின் மூலம், தான் யார் என்பதை தன்னைத்தானே வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.

சுதந்திர நாள் என்று கூறப்படும் நாளில் பிரதமரை மோசமாக விமர்சித்தார். திருச்சி உரையும் அப்படித்தான்! நம் வீரர்களைப் பாகிஸ்தானில் கொல்லும்போது நமது பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு பிரியாணி சாப்பிடுகிறார் என்று எவ்வளவு கண்ணியமாகப் பேசி இருக்கிறார்.

குஜராத்தில் வெள்ளத்தால் மக்கள் பெரும் துயரத்திற்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ள நேரத்தில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டுள்ளாரே! மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் எழுப்பிய குற்றச்சாற்றை அலட்சியப்படுத்த முடியுமா?

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளும் காங்கிரஸ் கட்சி, மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்தி, மொழி வாரியாக மக்களைப் பிரிக்கும் பாவத்தைச் செய்தது - என்று திருச்சியில் மோடி முழங்கி இருக்கிறார்.

இது ஒன்றே போதும் மோடியைத் தூக்கி எறிவதற்கு! ஆர்.எஸ்.எஸின் கொள்கை, மாநிலங்களே கூடாது - ஒற்றை ஆட்சி முறைதான் இருக்க வேண்டும், ஒரே மொழிதான் ஆட்சி மொழி - அது சமஸ்கிருதம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை; கோணிப்பைக்குள் இருந்த பூனை இப்பொழுது வெளியே வந்துவிட்டது.

மொழிவாரி மாநிலம் கூடாது என்பதுதான் பிஜேபியின் - நாளைய பிரதமர் என்று கனவு காணும் நரேந்திரமோடியின் முடிவு என்றால் இதுபற்றி அனைத்து மாநில மக்களும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

தங்களின் மொழி, இனம், பண்பாடு இவற்றை இழந்து எல்லோரும் இந்துத்துவா என்ற இந்து மகா சமுத்திரத்தோடு கரைந்து போய் விட வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணமும், ஏக்கமுமா?

இந்த நாட்டில் இருக்கக் கூடிய கிருஸ்தவர்களும், முசுலிம்களும் - தங்களை இந்துமயமாக்கிக் கொள்ள வேண்டும். இந்துக் கடவுளான, கிருஷ்ண னையும், இராமனையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறக் கூடியவர்கள் இதனையும் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிஜேபியோடு கூட்டு சேரலாம் என்று அசை போட்டுக் கொண்டிருப்போர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அப்படி கூட்டுச் சேர்ந்தால் மொழிவாரி மாநிலமே கூடாது என்பவர்களோடு கை கோர்த்துக் கொண்டு வரலாமா என்று கேட்க மாட்டார்களா தமிழர்கள்? தமிழர்கள் என்ன சுயமரியாதையற்றவர்கள் என்ற நினைப்பா?

இன்னொரு குற்றச்சாற்றையும், ஆளும் காங்கிரஸ்மீது வைத்துள்ளார். மதத்தின் பெயரால் பிளவுபடுத்துபவர்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரசுக்காக வக்காலத்து வாங்கிப் பதில் சொல்வது நம்முடைய வேலையல்ல; ஆனால் அதே நேரத்தில் இப்படிச் சொல்பவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டாமா?

இந்துத்துவா என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டவர்களா இதைப் பேசுவது? நான் ஒரு இந்துத் தேசியவாதி! (Hindu Nationalist) என்று பகிரங்கமாகப் பேட்டி கொடுத்த பேர் வழியா இப்படி ஒரு குற்றச்சாற்றை வைப்பது?

குஜராத்து மாநிலத்தில் சிறுபான்மை மக்களைத் தேடித் தேடிச் சென்று கொலை வேட்டை ஆடிய ஆசாமிகளா இந்தக் குற்றச்சாற்றை வைப்பது?

வாக்காளப் பெரு மக்கள் ஏதோ ஒரு காரணத் தால் தவறான முடிவை மேற்கொள்வார்களேயானால் குஜராத்தில் அவர்கள் நடத்திக் காட்டிய அதே வேட்டையை இந்தியா முழுமையும் நடத்திக் காட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை! விருத்தாசலம் திராவிடர் கழக மாநாடும் இந்த எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...


இன்று (அக். 1) சர்வதேச முதியோர் தினம்


இன்றைய சூழலில் முதி யோரின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. 2050ஆம் ஆண் டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடு களிலும் முதியோரின் எண் ணிக்கை இருமடங்காக உயரும் என அய்.நா., மதிப்பிட்டுள்ளது.

வயதான காலத்தில், இவர் களை நன்றாக கவனிக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ஆம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படு கிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில், குடும்ப உறவுகள் முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளை களால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளா தாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப் பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளை யும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதியோர், குழந்தைகளுக்கு சமம் எனக் கூறுவர். 50 வயதை கடந்தவர்கள், முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர் களின் செயல்பாடுகள் மாறி விடும். முதியோரின் அறிவு மற் றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். அவர்களை சுமையாக கருதா மல், வரமாக கருதுங்கள். குடும் பத்தில் முதியோரை அரவ ணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக் காவது முதியோரை கவனிக்க முன்வர வேண்டும்.

பிள்ளைகள் நல்ல வசதி யோடு இருந்தும், பெற்றோரை பார்த்துக்கொள்ளாமல் முதி யோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது. யாருடைய பெற் றோராவது முதியோர் இல்லத் தில் இருந்தால், மீண்டும் வீட் டுக்கு அழைத்து வர இத்தி னத்தை பயன்படுத்திக் கொள் ளுங்கள். அரசும் முதியோருக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகை களை வழங்க வேண்டும்.

உதிர்ந்து போன சருகுகளா... முதியவர்கள்?

கொடிது கொடிது... முதுமை கொடிது; அதனினும் கொடிது... முதுமையில் வறுமை. முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மதுரை அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் அலசி ஆராய்ந்தால், அங்கே முதியவர்கள் மட்டும், ஆதர வின்றி தனியாய் நின்று சிகிச்சை பெறுவர். நீண்ட வரிசையில் தள்ளாடி தள்ளாடி நின்று மருந்து வாங்கிச் செல்வர். இன்னும் சொல்லப் போனால், சிகிச்சை பெற முடியாமல், எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து உட்கார்ந்திருப்பர்.நீண்ட வரிசையில் நிற்கும் போது, சில முதியவர்கள் மயக்கமடைந்து, இறந்த சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதுமையின் கொடுமையால், மாதம் 10 பேர் வரை, இங்கு இறக்கின்றனர். சட்டைப் பையில் முகவரியோ, மொபைல் போன் எண்ணோ இருந்தால், காவல்துறையினர் உறவினர் களிடம் தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால், அனாதைப் பிணமாகிறது.

ஏன்? முதுமை என்றால் இத்தனை பாராமுகம்? இன் றைய இளமை நாளைய முது மையாய் மாறித் தானே ஆக வேண்டும்?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூரில் மாணவர்களுக்கு பெரியார் பொன்மொழிகள் போட்டி

சிங்கப்பூர், அக்.1- தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் போட்டிகள் 2013 என்ற தலைப்பில் பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் போட்டி மற்றும் தமிழ் கட்டுரைப் போட்டிகளை லிட்டில் இந்தியாவில், உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் செப்டம்பர் 28 ஆம் நாள் சனிக்கிழமை நடத்தியது.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து போட்டிகளில் பங்கேற்ப தற்காக தொடக்க நிலை 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர் களும், உயர்நிலை ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களும் தங்களின் பெற்றோர்களுடன் ஆர்வமுடன் வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சி, காலை சிற்றுண்டியுடன் தொடங்கியது. போட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி வகுப்பு அறைகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுக் கும் இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் ஆறு ஆசிரி யர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை வழி நடத்தினார்கள்.

பெரியார் பொன்மொழிகள்!

பெரியாரின் பொன்மொழிகளை மாணவர்கள் வாசித்து ஒரு பொன்மொழியினை விளக்கிக் கூறும் போது மாணவர்களின் அறிவுக் கூர்மையும், தெளிவான சிந்தனையும் நடுவர்களையும், பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பாடல்களைப் பாடும்போது மாணவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், குரலும் இனிமையாக இருந்தது. கட்டுரைப் போட்டியில் ஆர்வமுடன் மற்றும் குறித்த நேரத்தில் எழுதி முடித்து தொடக்க நிலை மாணவர்கள் எழுதும் திறனை வெளிப்படுத்தினார்கள்.

போட்டி முடிந்த பின் மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும் மதிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடுவர்கள் வெற்றியாளர்களை அறிவித்தார் கள். மூன்று பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 12 வெற்றி யாளர்கள், 6 ஊக்கப் பரிசாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள். போட்டிகளின் முடிவு உடனடியாக அறிவித்ததை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டார்கள்.

பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டி, சான்றிதழ்களையும், ஆங்கில மொழியாக்கத்துடன் உள்ள திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

வெற்றியாளர்களை அறிவிக்கும்போது ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தமிழில் பேசுவது, எழுதுவது மற்றும் பாடுவது பற்றி வழிமுறைகளை எடுத்துக்கூறினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக மன்றத்தின் செயலாளர் க.பூபா லன் நன்றி கூறி வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக் கும் பரிசுப் பொருள்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களும், பெற்றோர்களும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டுதோறும் இது போன்ற போட்டிகள் நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றார்கள்.

நிகழ்ச்சியில், பெரியார் சமூகசேவை மன்ற உறுப்பி னர்கள், தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்
//

தமிழ் ஓவியா said...

காப்போம், காப்போம்! தமிழர் தலைவரை உயிர் கொடுத்தும் காப்போம்!!
கழகத் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பு

கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்ற கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை - குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் கட்சிக் கொடியுடன் அன்பு தழுவ வரவேற்றனர்.

காப்போம்! காப்போம்!! தமிழர் தலைவரைக் காப்போம்!

காப்போம், காப்போம், தமிழர் தலைவரை உயிர் கொடுத்தும் காப்போம்! என்று உணர்ச்சி முழக்கமிட்டனர்.

அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களுக்குக் கழகத் தலைவர் மாலை அணிவித்தார்.

தமிழ் ஓவியா said...


காந்தியார் பிறந்த நாள் சிந்தனைகள்!


- ஊசிமிளகாய்

அண்ணல் காந்தியடி கள் பிறந்த இந்நாளில் அவரது சிலைக்கு மாலை, அவரது சமாதி அருகில் மலர்வளையம், ரகுபதி ராகவ ராஜாராம் பஜனை பாடினால் மட்டும் போதுமா?
125 ஆண்டுகள் வாழ் வேன் என்று கூறி, வாழ விரும்பிய காந்தியாரை அப்படி வாழ விடாமல் சுட்டுக்கொன்றது ஏன்? எதற்காக? சுட்டவன் யார்? யாரிடம் பயிற்சி பெற்றவன்?
இந்நாளிலாவது உரக்கச் சிந்திக்கவேண்டாமா?

எந்தப் பார்ப்பன மதவெறிச் சக்திகள் சதி நடத்தி காந்தியார் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தனவோ, அவைகளும் சேர்ந்தல்லவா காந்தி பஜனை செய்து மக்கள் கண்ணில் மண்ணைத் தூவுகின்றன!

காந்தி பிறந்த மண், இன்று காவி மண்ணாக ஆக்கப்பட்டுவிட்டது!

அதுபோதாது என்று இந்திய நாட்டையே காவி மயமாக்கி, இந்து நாடாக்கிட எல்லாவித சாம, பேத, தான, தண்ட முயற்சிகளையும் மேற்கொள்ளு கின்றன!

பெரியார் பிறந்த மண்ணையும், காவி மண் ணாக்கிட முயலுகின்றனர்!

இதில் மிகப்பெரிய வெட்கக்கேடு - காந்தி பெயரில் வசன வியாபாரி ஒருவர், அரசியல் தரகராக முதலில் ஒரு சாமி செய்த கூட்டும் முயற்சியை குதூ கலமாகச் செய்கிறாராம்!

திராவிடத்தில் பெரியார் - அண்ணா முத்திரைகளைப் பொறித்துக் கொண்டுள்ள, அரசியலில் பதவிப் பசி அதிகம் உள்ள அமைப்பு ஒன்று, மீண்டும் காவி அணியிடம் சரணடைந்து, பதவி லோக வழி தேடுவது, பெரியார் - அண்ணாவுக்குப் பெருமை சேர்ப்பதா?
அவர்கள் கட்டிக்காத்த சிறுபான்மையோர் பாதுகாப்பு - உரிமை எல்லாம் பலி பீடத்தில் நிறுத்துவதுதானா? பல கதவுகள் மூடிவிட்ட நிலையில், இந்தக் கதவாவது நமக்குத் திறந்துள்ளதே! கதவு மட்டுமா? கருவூலமும் சேர்ந்து அல்லவா திறந்துவிடப்பட்டுள்ளது என்ற தாகம்தான் மோடிக்கு சேடியாக்கிடுகிறது போலும்!

ஆசை வெட்கமறியாது; அதிலும் பதவி ஆசை, மானமும் அறியாது!

காங்கிரஸ்காரர்களைவிட கோட்சே கும்பல்தான் இன்று ஏதோ காந்தியின் பரம பக்தர்கள்போல காட்டிக்கொண்டு, ஓநாய் சைவமாகிவிட்டதுபோல் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே காவி உலா நடத்திக் காட்டி, வாக்காளர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிட முயலுகிறது!

மதவெறியை வளர்ப்பது காந்திக்குச் செய்யும் அஞ்சலியா? மதக் கலவரங்கள் பெருகுவதா?

வன்முறையால் திட்டமிட்டு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உரிமையை ஒழிப்பதா காந்திக்குச் செய்யும் பிரார்த் தனை?

கோவில்களை விபச்சார விடுதிகள் என்றவர் காந்தியார் - காஞ்சிபுரம் தேவநாதன்கள் வழக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே!

வேதம் ஓதும் உங்களுக்கு பார்ப்பனர்களுக்கு, ஸ்டெதஸ்கோப்பும் (டாக்டர் படிப்பு), டி ஸ்கொயரும் (பொறியியல் படிப்பு) எதற்கு என்று கேட்டு, சமூகநீதி தராசைச் சரியாகப் பிடித்ததினால்தானே பார்ப்பன, மதவெறியாளர்களால் காந்தியார் கொல்லப்பட்டார்!
எனவே, காந்தி பிறந்த நாளில், மதச்சார்பின்மை, சமூகநீதி, இவைகளையே முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுப்பதே - உண்மையாக அவருக்குக் காட்டும் மரியாதையாகும்.

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

- (விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கு.முத்துசாமி - மலர்விழி ஆகியோரின் செல்வன் மு.வினோத் குமார் என்பவருக்கும், ஓமலூர் வட்டம் நச்சுவாயனூர் சி.மாரி யப்பன் சிங்காரம் ஆகியோர் களது மகள் மா.அன்புச்செல்வி என்கிற மணமகளுக்கும் 29.9.2013 அன்று ஓமலூர் நடராஜன் திரு மண மண்டபத்தில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

மணவிழாவிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண் முகம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் முன்னி லையில் மேட்டூர் மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் வர வேற்புரையுடன் துவங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

தமிழர் தலைவர் மண மக் களுக்கு உறுதிமொழி கூறி மண விழாவை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் தமது வாழ்த் துரையில் குறிப்பிட்டதாவது: இங்கே மா.அன்புச்செல்வி - மு.வினோத்குமார் ஆகியோர் களது திருமணம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பழனி.புள்ளையண்ணன், சுப்பிரமணி ஆகியோர் எடுத்துச் சொன்னதைப் போல இத்திரு மணத்தை நடத்தி வைப்பதிலே பெருமை கொள்கிறேன். மாரி யப்பன் அவர்களின் சம்பந்தியான முத்துசாமி - மலர்விழி ஆகி யோரை பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன்.

இந்த மணவிழா விலே மாரியப்பன் கருப்புச் சட் டையுடன் இருக்கிறார் என்றால் அதற்கு சுப்பிரமணியன் போன்ற வர்கள்தான் காரணமாக இருக்க முடியும். மணவிழாவே மாநாடு போல இங்கே மக்கள் கூடி இருக் கிறார்கள். பெரியார் கொள்கை இங்கே வெற்றி பெற்றுள்ளது. என்றைக்கும் பெரியார் கொள்கை தோற்காது. நேற்று கூட விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது அங்கே கூலிப்படையினரால் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் சொல்கிறேன். இயற்கை மரணம் அடைவதைவிட கொள்கைக் காக போராட்டக்களத்தில் சாவது நல்லது. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

இத்திருமணத்தில் தாலி உள்ளதா என சுப்பிரமணியிடம் கேட்டேன். அதற்கு தாலி இருந் தால் உங்களை அழைத்திருப் பேனா என்று பதில் சொன்னார். தாலி என்பது திருமணத்தில் இடையிலே புகுத்தப்பட்ட ஒன்று இங்கே கருப்புச் சட்டைக் காரர்களுக்கு ஜாதி என்பது கிடையாது.

இன்று பெரியார், காமராஜர் அண்ணா போன்றவர்களின் உழைப்பினால் நம் பிள்ளைகள் நன்றாக படித்துள்ளார்கள் மண மக்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். இது நமக்கு பெருமையாக உள்ளது.

எல்லாத் திருமணங்களையும், எங்களைப் போன்றவர்களை வைத்து நடத்த வேண்டியதில்லை. நம் குடும்பத்தில் உள்ள தமிழர் களை வைத்து பகுத்தறிவு, சுயமரி யாதை முறைப்படி நடத்திட வேண்டும். திருமண வாழ்க்கை முறை என்பது இத்தோடு முடிவ தில்லை. நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள்.

சுப்பிரமணி குடும்ப மண விழா என்பது அது எங்கள் குடும்ப திருமணம் போன்றது. இப்பகுதியிலே அவர்கள் பல ஆசிரியர்களை உருவாக்கி இருக் கிறார்கள். பெரியார் திருமண முறை என்பது வேகமான, ஆவேச மான திருமண முறை அல்ல அது படிப்படியாக அறிவை வளர்த்து செய்யக்கூடியது.

பணக்காரரைவிட கொள்கை காரர்களே சிறந்தவர்கள். அந்த கொள்கை சுப்பிரமணி போன்ற குடும்பத்தினரிடம் உள்ளது. அந்த வகையில் மணமக்களின் திரு மணத்தை நடத்தி வைக்கிறேன் வாழ்க மணமக்கள் என்று தமிழர் தலைவர் வாழ்த்துரை வழங் கினார்.

தமிழ் ஓவியா said...


நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


விருத்தாசலம் மாநாட்டுத் தீர்மானங்கள்


விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 சனியன்று நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு, பல வகைகளிலும் சிறப்பு நிலையைப் பெற்றது. குறிப்பாக அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முத்தாய்ப்பானவைகளே.

முதல் தீர்மானம், பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதாகும். தமிழ் மொழியில் ஊடுருவிய ஆரியப் பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் தமிழைப் பல கூறுகளாக்கி மணிப்பிரவாள நடையையும் உருவாக்கியது.

தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும் ஆரிய மொழியின் ஊடுருவலால் தனித்தனி மொழி எனும் தோற்றத்திற்கு ஆளாகி விட்டன.

தமிழ்நாட்டு மக்களின் பெயர்களும், ஊர்களும் சமஸ்கிருதமயமாயின. புளியந்தோப்பு, திண்டிவனம் ஆனதும், குடமூக்கு கும்பகோணம் ஆனதும், திருமரைக்காடு வேதாரண்யம் ஆனதும், திருமுது குன்றம், விருத்தாசலம் ஆனதும் ஆரிய சமஸ்கிருத ஊடுருவலின் அடையாளங்களாகும்.

விருத்தாசலத்தை, திருமுதுகுன்றம் என்று மீண்டும் மாற்ற வேண்டும் என்பதற்குத் திராவிடர் கழகம் உள்பட பல அமைப்புகளும், முயற்சிகளை மேற்கொண்டதுண்டு. ஆனாலும், வலுவாக இருக் கும் ஆரிய நிருவாகம் - ஆட்சி முறை - பெரும் இடையூறாக உள்ளது.

மயிலாடுதுறையை மீட்டதுபோல திருமுதுகுன்றத் தையும் மீட்க வேண்டும் - மாநாட்டின் முதல் தீர்மானம், இந்த வகையைச் சேர்ந்ததாகும்.

தந்தை பெரியார் தமது தலைமையிடமாகக் கொண்ட திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மான மாகும்.

திமுக தலைவர், கலைஞரும் இதற்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன் அவர்களும், இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட வில்லையா? அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப் பையும் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

மூன்றாவது தீர்மானம் - தந்தை பெரியார் இறுதியாகக் களம் அமைந்த - அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.

ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது பகுத் தறிவும், மனித உரிமை ஆர்வமும் கொண்டவர்களின் மகத்தான கோட்பாடாகும். இன்றைக்கு அது அதிகார பூர்வமாக நிலை கொண்டு இருப்பது கோயில் கருவ றைகளில்தான். பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் யாரும் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியாது. காரணம் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள்; - சூத்திரர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று ஆகமங்கள் சொல்லுவதாக உச்சநீதிமன் றத்தில் எடுத்துக் கூறி தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை முடக்கி விட்டனர். இது 2013 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை முன்னி றுத்தித் தன் பணிகளைத் தொடர இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒட்டு மொத்தமாக, தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இதன் வெற்றியை சுவைக்க அனைவரின் ஒத்துழைப்பையும், திராவிடர் கழகம் கோருகிறது.

நான்காவது தீர்மானம், ஈழத் தமிழர் பிரச் சினையைப் பற்றியதாகும். தமிழர்களின் தொப்புள் கொடி உறவினராகிய ஈழ மக்கள் எல்லா உரிமை களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காகத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றனர். (இதில் அரசியலைப் புகுத்தும் கேவலமும் குடி கொண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை).

இந்திய அரசு போதிய ஒத்துழைப்பைக் கொடுக் குமேயானால் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வைப் பெறுவார்கள்.

கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, தமிழக மீனவர்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து தவிக்கிறார்கள். இலங்கைக் கடற்படையால் தினமும் பெரும் துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டும் வருகின் றனர்.
கச்சத் தீவை மீட்க வேண்டும் - அதுவே நிரந்தரத் தீர்வு என்பதை விருத்தாசலம் மாநாடு தெளிவு படுத்தியுள்ளது - தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் இதிலும் வெற்றியை ஈட்ட முடியும் என்று திராவிடர் கழகம் உறுதியாக நம்புகிறது - தமிழர்கள் ஒன்று சேர்வார்களாக!

தமிழ் ஓவியா said...


தெலுங்கானாவிலும் பெரியார் விழா


வெளியூர் 27.9.2013 விடுதலை இதழ் கடைசி பக்கத்தில் தெலுங்கானா - ஆந்திரா நாத்திக சமாஜத்தினர் வெளி யிட்டுள்ள தெலுங்கு சுவரொட்டியைப் பார்த்து பூரித்துப்போனேன். 65 ஆண்டு கட்கும் மேலாக திராவிட இனப்பற்றுடன் செயல்படும் எனக்குத் தெலுங்கு படிக்கத் தெரியும் என்பதால் பிரஜா நாஸ்திக சமாஜம்
மதம் அன்டேனே மாண யாகம்
மூடநம் மகாளு விடுச்சி - முந்தடுகு வேயண்டி

என்ற வேண்டுகோள் மட்டுமல்ல, நமது திராவிடர் கழகக் கொடியையும், மய்யத்தில் அய்யா படத்துடன் பெரியார் என்றும் தெலுங்கில் எழுதியிருப்பதானது திராவிட இன உணர்வு ஆந்திர - கர் நாடக - கேரள மாநிலங்களிலும் ஓசைப் படாமல் வளர்ந்து வருவதை அடிக்கடி விடுதலை செய்தியாக அறிந்து மகிழ்ந் தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் திராவிடர் தலைவராக வளர்கிறார்.

- வேலை.பொற்கோவன், வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...

வினை விதைத்த விநாயகன்

விநாயகர் சதுர்த்தி விழா ஒற்றுமை யாக இருந்த கிராம மக்களை இரண் டாக்கியது. வேலூர் மாவட்டம், திருப்பத் தூர் வட்டம், பொம்மிகுப்பம், பழத்தோட்டம் கிராமத்திலும், கிராமத்திலுள்ள இளைஞர் ஒன்று சேர்ந்து தங்களின் பொருளாதார வசதிக்கேற்ற விநாயகர் சிலையை வைத் தார்கள். வழக்கம்போல மின்விளக்கு, ஒலி பெருக்கி வைக்க, மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பைப் எடுத்துக் கொண் டார்கள். மின்சார வாரிய ஊழி யருக்கு சொல்ல வேண்டியவர் முன் கூட்டியே சொல்ல வில்லை. மின் ஊழியர் வந்து பார்த்து விட்டு ரூ. 2000/- அபராதம் விதிப்பேன் என்று மிரட்டினார். கையூட்டு கொடுத் ததும் அமைதியாகப் போனார். ஏன் முன் கூட்டியே தகவல் சொல்ல வில்லை என்ற தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் நவீன், திருப்பதி, சிலம்பரசன், சந்துரு ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இரத்தகாயம் ஏற்பட்டது. சாமியப்பாரு எல்லாம் இந்த விநாயகனால் வந்த தொல்லை தானே, என்று கூறி சந்துரு விநாயகனின் கை கால்களை மயில் வாகனத்தை உடைத் தெறிந்தார்.

பின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். பின்னர் ஊர் பஞ்சாயத்து கூடியது அவரவர் அடித்த தற்கேற்ப ரூ. 8000/- வரைக்கும் அபராதம் விதித்தார்கள். ஒற்றுமையாக இருந்த கிராமமக்கள் விநாயகனால் இரண்டாகப் பிளவுப்பட்டார்கள்.

- இளங்குமரன், திருப்பத்தூர்

தமிழ் ஓவியா said...இதுதான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா? பூனைக்குட்டி வெளியில் வந்தது!


விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது காலிகள் திட்டமிட்டுத் தாக்கியது கண்டு உலகத் தமிழர்கள் பதறுகிறார்கள்! தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண்டன அறிக் கைகளை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழர் தலைவரை நேரில் சந்தித்தும் கவலை தெரிவித்த வண்ணம் உள் ளனர். தக்க பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். உங்கள் உயிர் எங்களுக்கு உரியது. தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும், ஏன், உலகம் முழுவதும் உள்ள மனித நேயர்களுக்கும், பகுத்தறிவாளர் களுக்கும், சமத்துவவாதிகளுக்கும் உரியது என்று கண்ணீர்மல்க தங் களின் உணர்வுகளை வெளிப்படுத் திக் கொண்டுள்ளனர்.

ஏடுகள் விருத்தாசலத்தில் நடந்த தாக்குதல் குறித்து படத்துடன் வெளியிட்டுள்ளன. முறைப்படி காவல் துறைக்கும் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.

இவ்வளவு நடந்திருந்தும், எதுவுமே நடக்காததுபோல காவல்துறையும், அதற்குச் சைகை காட்டும் அரசும் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

தாக்குதல் தொடுத்தவர்கள் யார் என்பது மிக வெளிப்படையாக தெரிந் திருந்தும், ஏடுகள் படம் பிடித்துக் காட் டிய பிறகும், காவல்துறை தூங்குவது ஏன்? நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தாக்குதல் தொடுக்கப்பட்ட இடத் தில் பத்திரிகையாளர்கள் வந்தது எப்படி? தொலைக்காட்சி ஒளிப்பதி வாளர்கள் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது எப்படி?

ஆக, வன்முறை திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை - விழித்துக் கொள்ள வில்லை என்றால், இந்தத் தாக்குதல் காவல்துறைக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என்ற முடிவுக்குத் தானே வரவேண்டியுள்ளது.

வேறு ஒரு கட்சியின் தலைவருக்கு இதுபோல தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மாநாட்டில் கூடியிருந்த உணர்ச்சிமிகுந்த மக்கள் வெள்ளத்தின்முன் தலைவர் வீரமணி அவர்கள் கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால், என்ன நடந்திருக் கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

பொறுமையுடனும், சகிப்புத் தன் மையுடனும் பொதுவாழ்வில் கடைபிடிக் கப்பட வேண்டிய, வன்முறைக்கு அப்பாற்பட்ட நன்முறையும், ஒரு தலை வரால், அமைப்பால் கடைப்பிடிக்கப் பட்டால், அவர்களுக்குக் கோழைகள் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு முத்திரை குத்துகிறதா?

தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் என்பவை அன்றாடம் நடைபெறும் வழமையான செயல்களாக ஆகிவிட்டனவே - நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கு தல்கள் நடந்திருக்கின்றனவே!

தலைவர்கள் தாக்கப்படுதலும், அந்தப் பட்டியலில் இடம் பெற்று விட்டதோ இந்த ஆட்சியில்!

1.10.2013 நாளிட்ட ஆளும் கட்சி யின் அதிகாரப்பூர்வமான நாளேட்டில், (பக்கம் 4) நெத்தியடி எனும் தலைப் பின்கீழ் ஜனநாயகத்திலும் - கருத் துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள் ளோர் அனைவரும் கண்டிக்கனும்...! என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையைக் கிண்டல் செய்து எழுதியுள்ளது.

விருத்தாசலத்திற்குப் போன கி.வீரமணி மீது நாலு பேருதாக்குதல் நடத்த எத்தனித்ததற்காக இப்படி எம்பிக் குதிக்கிறீர்களே! என்று வித்தாரமாக எழுதுகிறது ஆளும் கட்சி ஏடு. நாலு பேர் தாக்குதல் நடத் தினார்கள் என்பதை அ.இ.அ.தி.மு.க. ஏடு ஒப்புக் கொண்டுள்ளதே அந்த நாலு பேர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே கேள்வி.

எதிலும் அரசியல்தானா? ஒரு தலைவர் தாக்கப்பட்டதற்கு அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கண்டனம் தெரிவிக்கிறார் என்றால், அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசாகும் (Welfare State).

அதற்கு மாறாக வன்முறையை ஏவியவர்களுக்காக ஆளும் கட்சியின் நாளேடு வக்காலத்து வாங்கி எழுது கிறது என்றால், இதற்குப் பெயர் என்ன?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எங்குப் பயணம் செய்தாலும், தாக்குதலை மேற்கொள் ளுங்கள் - அ.இ.அ.தி.மு.க. அரசு அதனைக் கண்டுகொள்ளாது என்று ஆளும் கட்சி ஏடு சமிக்ஞை செய்வ தாகத்தானே பொருள்?

காவல்துறை இதுவரை நட வடிக்கை எடுக்காததற்கான பின் னணி இப்பொழுது வெட்ட வெளிச் சமாகிவிட்டது! - பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!

தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி என்பதை உணர்ந்து அவர வர்களும் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்கு உரியதைச் செய்து கொண்டாக வேண்டும் என்று சொல் லாமல் சொல்லிவிட்டது ஆளும் கட்சி ஏடு.

அ.தி.மு.க. ஆட்சி பற்றி தமிழ் நாட்டு மக்கள் நிலைமையைத் தெரிந்து கொள்வார்களாக! தமிழ் நாட்டுத் தலைவர்களும் இது குறித்து உரத்த முறையில் சிந்திப்பார்களாக!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

3.10.2013
சென்னை