Search This Blog

31.7.14

இதுதான் சமஸ்கிருதம் - பெரியார்

இதுதான் சமஸ்கிருதம்

- தந்தை பெரியார்
புரட்டு இமாலயப் புரட்டு! நூலிலிருந்து....
சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல; அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி.
அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (ஜிக்ஷீளீமீ) மொழி, ஈரானிய மொழி - பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.


மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.


இவர்கள் வடமேற்கிந்தியாவில் இரு முறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்; இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க - பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக - கிரேக்க மொழிக்கலை இலக்கிய இலக் கணங் களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப் பெற்றது.


மற்றும், சமஸ்கிருத மொழி இந்தி யாவின்... லத்தீன்... மொழி என்றும் அழைக் கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படையெடுத்த போது, இத்தாலிய மக் களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.

மொழிகளின் பிரிவு

மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.

சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள், சுத்தப்படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப் பட்டது என்பதாகும்.

மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ்தானியில் சான்ஸ்கிரிட் என்று உச்சரிக்கப்படுகிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும், அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியி லிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்

வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள், இடைக் காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.

சமஸ்த = எல்லாம்;
கிருதி = தொகுக்கப்பட்டது

- என்பதே இதன் பொருள்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜுலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழி ஆரிய மொழி களுடன் கொண்டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும் இவர் விளக்கி யுள்ளார்.

டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர், கோதிக் மொழியிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும் சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டார். சர். மானியர் வில்லியம் என்பவர் தமது சமஸ்கிருத ஆங்கில அகராதியின் (அச் சிட்டது: காலண்டர் பிரஸ்; ஆக்ஸ்போர்டு - 1899) முகவுரையில், சமஸ்கிருத மொழி; பாக்ட்ரியானா - சாக்டி யானா வட்டாரங்களில் தோன்றியது; புக்காவிலோ, ஆக்ஸ்நதி துவக்க வட்டாரத்திலோ தோன்றியதல்ல என்று கருத்து வெளி யிட்டிருக்கிறார்.
இந்தியாவினுள் நுழைந்த இந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிதாய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்களென்பதும் கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்தவர்களென்பதும் பல சரித்திரச் சான்றுகளால் தெளிவுபடுகிறது.

பிறந்த விதம்

இந்த கோதிக் மொழியே இடையில் பல்வேறு மாற்றங்கள் பெற்று சமஸ்கிருத மொழியாக உருவெடுத்தது. ஆரியர்கள் மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, இந்தக் கலப்பட சமஸ்கிருத மொழியையும் அங்கிருந்த மக்கள் (ஹிந்து) பால் திணித்தனர். வேதகால சமஸ்கிருதத்திற்கும் இக்கால சமஸ்கிருதத் திற்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன.

பொய்க் கூற்று


எனவே, இந்த சமஸ்கிருத மொழி அனாதிகால மொழியென்றும், இம்மொழி யிலிருந்துதான், இந்தியாவின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற் றெனவும் சொல்வது ஆதாரமற்றதாகிறது. ஏனெனில், இந்த மொழி கி.மு. 1500லும் அதற்குப் பின்னரும்தான் உருவாயிற் றென்பது தெளிவாகிறது. இந்தியர்கள் மீது திணிக்கப்பட்ட மொழிகளில் இதுவே கடைசி மொழி. உண்மை இப்படியிருந் தும், தற்கால மொழிகளில் சிலவற்றை இந்த சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்ததாகச் சிலர் கூறிக் கொள்கின்றனர்.
இந்த நார்டிக் ஆரியர்களும், ஈரானிய ஆரியர்களும் பல்வேறாகப் பிரிந்து, பல்வேறு திக்குகளில் படர்ந்தனர். இவ் விரு பிரிவினரும் இந்தியாவில் வசித்த இந்தோனேஷியர் சந்ததிகளே என்றும், இவர்களே வடகிழக்கு நாடுகளில் பரவினர் என்றும் சிலர் கூறுகின்றனர்.


ஹிந்துஸ்தானி


இவ்விதம் சென்றவர்களில் இரானிய ஆரியர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினர். இது வேத சமஸ்கிருத மொழி இந்தியாவில் நுழைக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியா திரும்பிய இந்த ஈரானியர்கள் தாம், இப்போது மேற்கிந்தியாவில் பேசப்படும் ஹிந்தி (பிராக்கிருதி) (ஹிந்துஸ்தானி) மொழியைக் கொண்டு வந்தவர்கள். இவர்கள் வந்ததும், அவ் வட்டாரங்களில் வசித்து வந்த பழங் குடிகளான இந்தோனேஷியர்களைத் தெற்கில், தக்காணத்துக்கும் கிழக்கில் வங்காளக் குடாக்கடல் வட்டாரத்திற்கும் அதற்கப்பாலும் செல்லச் செய்தனர். இவ்வாறாக நெருக்கித் தள்ளப்பட்ட இந்திய - இந்தோனேஷியர்கள் பசிபிக் தீவுகள் வரையிலுள்ள வட்டாரங்களில் குடியேறினர்.


நார்டிக் இனத்தவரும் இந்தியா திரும்பியபோது தங்கள் மொழியையும் கொண்டு வந்தனர். ஆயினும் ஈரானிய, பர்மீரிய, பாரசீக, கிரேக்க மொழிப் பண்புகள் இம்மொழியில் கலந்திருந்தன. இந்தக் கலப்பு மொழிதான் பின்னர் சமஸ்கிருதமெனப்பட்டது.


இந்த சமஸ்கிருத மொழி, பரம்பரை அனாதிகால மொழியென்றும் (தெய்வ மொழி என்பர் தென்னாட்டுப் பார்ப்பனர்) இலக்கிய வளமிக்கதென்றும் கூறி, அப்போதிருந்து வந்த ஹிந்தி (ஹிந்துஸ் தானி) மொழிகளின் மீது திணிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து பழம்பெரும் மொழிகளான இந்தோனேஷிய மொழி யிலிருந்து அடிநாளில் பிறந்த ஹிந்தி (ஹிந்துஸ்தானி)யும், நார்டிக் மொழிகளும் பல்வேறு வட்டாரங்களில் நெடுகப் பேசப்பட்டு பாக்ட்ரியானாவில் சமஸ் கிருதமாக உருமாற்றமும் பெயரும் பெற்றது. மொழி வரலாறுகளில் அறியக் கிடக்கிறது. இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த சமஸ்கிருதமும், ஹிந்தி (ஹிந்துஸ்தானி)யும் அப்போதிருந்த பற்பல இந்திய மொழிகளில் ஊடுருவி முக்கியமாக வடஇந்தியாவில் வழங்கிய மொழிகளை ஆக்கிரமித்துத் தலைமை யிடம் கொண்டன.
சமஸ்கிருத மொழிக்கும், நார்டிக் மொழிகளுக்கும் முக்கியமாக கோதிக் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு காணப் படுகிறது. ஏனெனில், இந்த சமஸ்கிருத மும் நார்டிக் மொழிகளில் ஒன்றேயாகும் என்று டாக்டர் பாப் சுட்டிக் காட்டுகிறார்.


மற்ற மொழிகளைவிட இந்த சமஸ் கிருத மொழிதான் அதிகமாக அயல் மொழிகளின் கலப்பைக் கொண்டு பெரும் உருமாற்றம் பெற்றிருக்கிறது; இருந்தாலும் இதுவும் நார்டிக் மொழிக் குழுவைச் சேர்ந்ததேயாகும்.


இன மனித உட்பிரிவுகள்


தென்கிழக்கு ஆசிய மக்களின் இனப் பிரிவைத் திட்டவட்டமாகக் கணித்துக் காண்பது கடினமாகவிருந்தாலும் முக்கிய மாக முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை:-


1. இந்தாஃப்ரிக்கர் (கருப்பர்)
2. துரேனியர் (மஞ்சள் - சிவப்பு)
3. ஆரியர் (மாநிற - வெள்ளை)


இப்போது, இவர்களில் இந்தாஃப்ரிக்கர் முக்கியமாகத் தென்மேற்குப் பசிபிக் தீவுகளிலும், மத்தியாஃப்ரிக்காவிலும், தென்னாஃப்ரிக்காவிலும் (அமெரிக்காவில் இருப்பவர் தவிர்த்து), வசிக்கின்றனர்.


துரேனியர்கள் முக்கியமாக கிழக்கு ஆசியாவிலும், மத்திய ஆசியாவிலும், வடக்கு யூரேஷியாவிலும் (அமெரிக்க இந்தியர் தவிர்த்து) வசிக்கின்றனர்.
ஆரியர்கள் முக்கியமாக இந்தியாவி லும், ஈரானிலும் (பாரசீகம்), அய்ரோப்பா விலும், வடக்காஃப்ரிக்காவிலும், தென் னாஃப்பிரிக்காவிலும் வசிக்கின்றனர்.
இந்தாஃப்ரிக்கன் மொழி, துரேனிய மொழி, ஆரிய மொழி, இந்த இனப் பிரிவினையின் அடிப்படையிலே வந் தவை. ஆயினும் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன; அடைந்து வருகின்றன. கெதேயில் குடியேறும்வரை அதாவது கி.மு. 2300 வரை நார்டிக் மக்களின் தெற்கிலே மேற்கு துருக்கிஸ்தானத்தில் துரேனியர்களும் (துருக்கியர்) (சுமேரியர்) (கி.மு.4300 வரை) பின்னர் ஹிட்டைட்சும் (கி.மு.2300 வரை) இருந்தனர். நார்டிக் மக்கள் துவக்க காலத்தில் எண்ணிக் கையில் குறைவாகவிருந்ததால், தங்களை விட நாகரிக மக்களான சுமேரியர்களின் சம்பந்தத்தையும் கருத்துக்களையும், பழக்க வழக்கங்களையும் கைக்கொண்டனர்.
நார்டிக்குகளும் ஹிட்டைட்சுகளும் கலந்து வாழ்ந்ததன் விளைவாக துரேனிய மொழி, நார்டிக் மொழி சார்பினதாக மாற்றம் பெற்றது. ஹிட்டைட்ஸ் மொழியி லிருந்தும் பல சொற்கள் சுவீகரிக்கப் பட்டன.

நார்டிக்குகளின் படையெடுப்பு


துரேனியர்கள் தெற்கே பரவியபோது, நார்டிக்குகள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி பாக்ட்ரியானாவில் குடியே றினர். இவ்வட்டார மக்களின் மொழிக் கிணங்க தங்கள் மொழியிலும் மாற்றம் செய்து கொண்டனர். இங்கு வசித்த மக்களின் கலாச்சாரம் இரானிய கலாச் சாரத்தைப் போன்றதே.
இவர்கள் தெற்கு நோக்கிப் படை எடுக்கத் தீர்மானித்தபோது இவர்களு டைய மொழி வேதம் சமஸ்கிருதம். கி.மு.1400இல் வடமேற்கிலிருந்து இந்தி யாவிற்குள் வந்தபோது இந்த வேத சமஸ்கிருத மொழியைத்தான் தங்கள் இலக்கியங்களில் கையாண்டனர். இவர்கள் அடிநாளில் இனங்களாகவும், வகுப்புகளாகவும் பிரிந்திருந்ததாகவும் ஏழு ஆற்று நாட்டில் - (மத்திய ஆசியா) வசித்து வந்ததாகவும் திட்டவட்டமாக அறியக் கிடக்கிறது. இவர்கள் இரு குழுவினராக இருமுறை இந்தியாவில் நுழைந்தனர். இரு குழுவினரும் ஒரே மொழியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். பின்னவர் மொழியில் பாரசீகம், கிரேக்கக் கலப்படம் அதிகம் இருந்தது. இரண்டாம் படையெடுப்பே பிற்கால வரலாற்றுக்கு முக்கியமானதாகிறது.


கி.மு. 750இல் இவர்கள் காஸ்பியன் கடல் நோக்கி நகர்ந்தனர். பாரசீகத்தில் தடை ஏற்பட்டது. பாரசீகர்கள் தாக்கு தல்கள் வலுக்கவே, இவர்கள் தனித்தனிக் கும்பலாகப் பிரிந்து சென்று, தனித்தனித் தலைவர்கள் தலைமையில் தனி இனங்களாகி விட்டனர்.


இந்தப் பிரிவினர்களில் ஒருவரான காஸ்பி சாதியாரின் பெயரடியாகவே காஸ்பியன் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவர்களில் பெரும்பகுதி கிழக்கே பாமிர் மலைப்பகுதிகளை நோக்கி நகர்ந்தனர்; அங்கிருந்த பழங்குடிகளையும் சிதைத்து ஒடுக்கினர்.


வடகிழக்கு ஈரானில் குடியேறியவர் களில், குடியேறிய இந்த நார்டிக் சாதியார்களில் முக்கியமானவர்கள் ஆரீ-சோராங்மீ-பாஸியானி ஆகியோர்.
ஆரி சாதியார் முதலில் தங்கிய வட்டாரத்திலிருந்த ஆற்றுக்குத் தங்கள் பெயரடியாக ஆரியஸ் நதி என்று பெயரிட்டனர்.


ஆரியர் என்ற சமஸ்கிருத மொழியி லிருந்துதான் ஆரியன் என்ற சொல் தோன்றிற்று. ஆரியன் என்றால் மேல் மக்கள், ஆளும் இனம் என்று பொருள் ஆகியது.


சிதறிய நார்டிக்குகள்


இந்த நார்டிக் இனத்தார் பிற்காலத்தில் பல்வேறு குழுவினராகச் சிதைந்து பல்வேறு வட்டாரங்களில் பரவிய போது அவர்களுடைய அடிநாள் பொதுப் பெயரும் மறைந்தது! தனிப் பிரிவினராகத் தனித்தனிப் பெயர்களிட்டுக் கொண்டனர். பாமீர் வட்டாரத்தில் பாமிரியர்கள், குஷான்கள் என்று பெயர் கொண்டனர். இதுவே பாக்ட்ரியானா நாடு. இதில் புக்காராவும் சேர்ந்தது. இதன் தலைநகர், இப்போது வட ஆஃப்கானிஸ்தானத் திலுள்ள பால்க் என்பது.
தொக்காரி, குஷான்கள், எப்தா லைட்ஸ், சாக்கே, சாக்கியர் ஊசன் ஆகிய சாதியார் (உட்பிரிவினர்) இணைந்து பெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் அடிப்படையில் நார்டிக் மக்களே. பாக்ட்ரியானாவில் குடியேறியவர் வெள்ளை ஹுனர்களெனச் சீனர்களால் அழைக்கப்பட்டனர். இவர்களும் நார்டிக் குகளில் ஒரு பிரிவினரான கோத்திக் இனத்தவர்களேயாவர். இந்தியாவுக்குள் வந்தவர்கள் ஆரிய மொழியினர் என்ப தற்கு பல்வேறு சரித்திர ஆதாரங்கள் உள்ளன.


அலெக்சாண்டர் படைஎடுப்புக்குப் பின்னர், அதாவது கி.மு. 701ஆம் ஆண்டு
வாக்கில் வடமேற்கு இந்தியாவில் வேத சமஸ்கிருத மொழி செல்வாக்கற்றுப் போயிற்று. இப்போதுள்ள சமஸ்கிருத மொழி அப்போது அங்குக் கிடையாது.

இப்போதைய சமஸ்கிருதம்


குஷான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கரின் ஆட்சி கி.மு. 53இல் துவக்கமாகிறது. இந்தியாவில் விக்ரம சகாப்தத்தைத் தோற்றுவித்தவர் இந்த கனிஷ்கரே. மற்றும், அக்காலத்தில் வடஇந்தியாவில் வழங்கி வந்த கிரேஷிய கலாச்சாரங் களையும், கிரேக்க மொழியையும் ஒழித்து, நார்டிக் மொழியை அடிப்படையாகக் கொண்ட இப்போதைய சமஸ்கிருத மொழியைத் தோற்றுவித்தார். இது பழங்குடி யினர் சொற்களைக் (பிராக்கிருதம்) கொண்டது. எனவே, இப்போது வழங்கப்படும் சமஸ்கிருத மொழி கி.மு.58இல் தோன்றிய தெனலாம்.


கி.பி. 123-153ஆம் ஆண்டுகளில் ஆண்ட இரண்டாவது கனிஷ்கர் பவுத்தர். இவர் காஷ்மீர் வட்டாரங்களில் பவுத்த மதக் கொள்கைகளை தற்கால சமஸ்கிருத மொழியில் எழுதிப் பழங்குடிகளிடையே பரப்பினார். இவற்றை யெல்லாம் கவனிக்குமிடத்து சமஸ்கிருத மொழி எப்போது பிறந்தது? அதன் அடிப்படை மூலம் என்ன? எம்மொழிகளிலிருந்து பிறந்தது? இது இந்தியாவில் எப்போது எவ்விடம் நுழைக்கப்பட்டது? என்பன, சந்தேகமறத் தெளிவுபடுகின்றன.
இந்த சமஸ்கிருத மொழி பாக்ட்ரியானாவிலிருந்துதான் வந்தது என்று தற்கால அறிஞர்கள் பலர் திட்டமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


இந்திய சமஸ்கிருத மொழி வரலாறு


இந்தியாவில் நுழைக்கப்பட்ட சமஸ்கிருதமொழி வேதகால சமஸ்கிருதமென்றும், தற்கால சமஸ்கிருத மென்றும் இருவகைப் படும் என்பதும், இவற்றின் பிறப்பு வரலாறும் மேலே தெளிவுப்படுத்தப்பட்டது. அதாவது வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வந்த நார்டிக் ஆரியரால் இறக்குமதி செய்யப்பட்ட மொழி என்பது விளக்கப்பட்டது.
சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு, திரட்டித் தொகுத்தது, புதுப்பித்து அமைக்கப்பட்டதுஎன்று பொருள். பழங்கால மொழிகளுக்கும் இந்தப் புதுமொழிக்கும் வேற்றுமை காணவே இப்பெயரிடப்பட்டது. பிராமணீய இந்தியா காலத்தில் வழங்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கும் அதற்கு முன்னைய கால சமஸ்கிருதத்திற்கும் பல வகைகளிலும் வேற்றுமை காணப் படுகிறது. வேதகால சமஸ்கிருதம், கலைக்கால சமஸ்கிருதத் திலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது.
இந்த சமஸ்கிருத மொழி, இந்தோ ஜெர்மனிய அல்லது ஆரிய மொழியிலிருந்து பிறந்த கீழ்க்கோடி வட்டாரப் பிரிவாகும். இந்து ஆரியர்கள், வடமேற்கிலிருந்து தான் இந்தியாவுக்குள் வந்தனர் என்பது மக்கள் சரித்திரங்களால் உறுதிப்படுகிறது. இந்து ஆரியர்கள் கிழக்கு கபூலிஸ்தான் மலை வட்டாரங்களிலிருந்து பஞ்சாபுக்கும் அதன் பின் யமுனை கங்கை ஆற்று வட்டாரங்களுக்கும் வந்தனர் என்பது அவர்களுடைய பரம்பரை இலக்கிய ஏடுகளிலிருந்தே அறியக் கிடக்கிறது. வேத ஆரியர்கள், ஈரானிய மக்கள் ஆகிய இரு இனத்தவர்களின் மொழி மத நூல்கள் ஆகியவற்றிற்குள்ள இந்த ஜெர்மனிய குடும்ப சந்ததிகளேயெனவும், இருவரும் முன்னர் சேர்ந்திருந்து பின்னர் பிரிந்தவர்களெனவும் தெளிவாகிறது.


சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றிப் பெரும்பாலும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. ஆதித் தாய்மொழியின் கலை மகள் இந்த சமஸ்கிருதம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த இனத்தைச் சேர்ந்த மற்ற ஆறு மொழிகளான, ஈரானிய ஹெலினிக், இத்தாலிய - செல்டிக் - ட்யூடர்னிக், லெட்டோஸ்லாவிக் மொழிகளில் இலக்கிய வளமின்மையால் இந்த சமஸ்கிருதம் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த இலக்கியவளமும், ஆங்காங்குப் பல நாடுகளி லுள்ள, தொன்மை மொழிப் புலவர்களின் கூட்டுறவால் ஏற்பட்டதேயாகும். கிரேக்க மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் அதிக ஒற்றுமை காணப்படுகிறது.


இந்திய எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய வரலாறு இன்னும் புலனாகவில்லை. அசோகர் காலத்தில் புத்தமத அறமொழிகள் பாலி மொழியிலே பாறைகளிலே செதுக்கப் பட்டிருக்கின்றன. மவுரிய - ஆந்திரா வரிவடிவங்களுக்கு முன்னைய வரிவடிவம் பற்றி விளக்கம் கிடைக்கவில்லை.


எனவே, பிராமணர்கள் எதையும் எழுதவில்லை என்றும், அவர்களுடைய மொழிக்கு அப்போது வரிவடிவம் (எழுத்து இல்லையென்றும், சமஸ்கிருத வரிவடிவம் பிற்காலத்தில் இந்திய மொழி வரிவடிவங்களிலிருந்து அமைத்துக் கொள்ளப்பட்டதே என்றும் தெளிவுபடுகிறது. ராயல் ஏசியாடிக் சொசைட்டி ஜர்னலின் 14ஆவது பாகத்தில் இந்த மெய்மை தெளி வுறுத்தப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் ஒரு மொழியென்றாலும்கூட இது இந்தி யாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி மொழியாக வுமிருந்ததில்லை, பேச்சு மொழியாகவும் இருந்ததில்லை. அக்காலத்தில் ஆண்ட கிரேக்க பாக்ட்ரியானா மன்னர் கியூக்ராடைட்சின் சந்ததியார் நாட்டு மொழியான பிரம்மி மொழியில் தான் நாணயங்களை அச்சிட்டனர். இந்த பிரம்மி எழுத்துக்கள்தான் இப்போது வழங்கப்படும் நகரி - தேவ நகரி எழுத்துக்களுக்குத் தாயாகும். இந்த பிரம்மி மொழியின் அடிநாள் வரலாறு என்ன என்பது இன்னும் கலைஞர்களாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.


பாக்ட்ரியானாவிலிருந்த இந்த வடக்கத்தித் தலைவர்கள் அடிப்படையில் கிரேக்கர்களேயாகையால், இவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது திருத்தப்பட்ட நார்டிக் மொழியை (சமஸ்கிருதம்) இந்தியாவில் நுழைக்க அதிக அக்கறை கொள்ளவில்லை. கி.மு. 58இல் வட இந்தியாவில் ஆண்ட குஷான் குலத்தினரே இந்த சமஸ்கிருத மொழியை வட இந்தியாவில் பரப்பும் பணியை மேற்கொண்டனர். முதலாவது கனிஷ்கர் வடமேற்கு இந்தியா வட்டாரங் களைப் பிடித்த பின் இந்த சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் கருத்துச் செலுத்தினார்.


இதற்குமுன், நாட்டு மொழிகளுடன் கிரேக்க மொழி தான் ஆட்சித் துறையில் கைக்கொள்ளப்பட்டிருந்தது. கனிஷ்கர் காலத்தில் கிரேக்க மொழி, நாட்டு மொழி களினிடத்தை சமஸ்கிருதம் பிடித்துக்கொண்டு அரசாங்க மொழியாயிற்று.


பாக்ட்ரியானாவுக்கு வருமுன் நார்டிக் - ஆரிய தொக்காரிகளின் மொழி சமஸ்கிருதமாக இருந்தாலும், பாக்ட்ரியானாவில் அந்நாட்டு மக்கள் மொழிகளைத் தழுவி கி.மு.546-330இல் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. முக்கியமாக கி.மு. 330-126இல் கிரேக்கர் காலத்தில் அதிக மாறுதல் பெற்று உருமாற்றமடைந்தது, இந்த சமஸ்கிருத மொழி.


எனவே, இப்போது வழங்கப்படும் நவீன சமஸ்கிருதம் அரசுத் துறையில் கி.மு.58ஆம் ஆண்டு வாக்கில்தான் நுழைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்படுகிறது. இது ஆட்சி ஆதிக்கம் கொண்ட இனத்தவர்களின் மொழியாகவிருந் ததால் ஆளப்பட்ட இந்நாட்டுப் பழங்குடி இலக்கியப் புலவர்கள் இந்த அயல்மொழியை ஏற்றுக் கொள்ள அதிக காலமாயிற்று.
சமஸ்கிருதம் ஒரு தாய்மொழியல்ல


மேலேயுள்ள வரலாறுகளால் விளக்கமாவது என்ன?


வேதகால சமஸ்கிருத மொழியும், நவீன சமஸ்கிருத மொழியும் மேற்கு இந்தியாவில் அந்நிய நாட்டினரால் நுழைக்கப்பட்டவை என்பதும், இவற்றிலிருந்து இப்போது வழக்கிலுள்ள சமஸ்கிருத மொழி இந்தியாவின் பழங்கால மொழிகளுக்குத் தாய்மை மொழியாக இருக்க முடியாது என்பதும், சமஸ்கிருதம் பிறப்பு வகையிலும், இந்தியாவில் இடம்பெற்ற வகையிலும் அண்மைக்காலத்தினதே என்பதும், அதாவது அண்மைக்காலத்தில் பிறந்து அண் மைக் கால இந்தியாவில் இடம்பெற்ற மொழியே என்பதும் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்) தெளிவுபடுகிறது.


பர்மிரியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், பல புதிய மொழிகளையும் நுழைத்தனர். வடமேற்கில் வழங்கப்படும் ஹிந்தி (இந்துஸ்தானி) மொழியும் இதிலொன்று. இம்மொழி இரானிய (பாரசீக) மொழியி லிருந்து பிறந்தது. மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் படை எடுத்தவர்கள் அண்மைக்காலத்தில் நுழைத்ததே இம்மொழியும். இதுவும் அண்மைக்கால நுழைவு மொழி என்பதற்குப் பல சரித்திர ஆதாரங்கள் உள்ளன.


இந்த ஆராய்ச்சியில் அறியக்கிடப்பது என்ன வென்றால்:


தற்கால ஆரிய மொழிகள் எல்லாம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பழங்காலத்தில் வழங்கிய இந்தோனேஷிய மொழியிலிருந்தே பிறந்தவை என்பதும், திராவிட மொழி களுக்கெல்லாம் பிற்பட்டவை என்பதும், திராவிட மொழி களிடையே முன்னணியிலும் பின்னணியிலும் அலைந்து கொண்டிருந்ததென்பதும், படை எடுப்பாளர்களுக்குச் சாதகமாக இருந்ததென்பதும் ஆகும்.


தற்கால புலவர்கள் தீட்டியுள்ள மொழி வரலாற்று நூல்கள் முழு ஆராய்ச்சியின் சித்திரமாக இல்லை. மக்களின் இனம், மொழி, பிறப்பு வளர்ச்சி வரலாறுகளில் ஆழ்ந்த கருத்துச் செலுத்தாமலேயே சரித்திரம் தீட்டி விடுகின்றனர். மக்கள் பிறந்த இடம், வாழ்ந்த இடம், அந்தந்தக்கால பண்புகள் கோட்பாடுகள் அவர்கள் பேசிய வெவ்வேறு மொழிகளின் அடிப்படை வளர்ச்சி வரலாறுகள் அம்மொழிகள் எங்கெங்கே எவ்வெப் போது பேசப்பட்டன; எங்கெங்கே எவ்வெத் துறைகளில் மாற்றங்களடைந்தன; எதனால் அம்மாற்றங்கள் செய்யப்பட்டன முதலிய வரலாறுகளையும் கண்டு தொகுத்திருந்தால், சரித்திர வரலாறுகள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். இப்போது இத்துறையில் போதுமான ஆதாரங்கள் இன்மையால் இம்மொழி வரலாற்று ரகசியங்களை அறிவது கடினமாக வுள்ளது.

ஆரிய இனமொழி

ஆரியன் என்ற பெயர் இரானிய இனமான ஆரியை (ஹச) என்பதன் அடிப்படையாக வந்தது; மொழி பழக்க வழக்கங்களும் மேற்படி இனத்தவரதே. இந்த ஆரிய இனமொழியிலிருந்தே சமஸ்கிருதம் வந்தது.
சமஸ்கிருத மொழியின் அடி வரலாற்றைத் திட்டவட்டமாக அறிய பல்வேறு நார்டிக் மக்கள் ஒன்றாக இருந்த அடிநாளி லிருந்து, பின்னர் பல்வேறு காலங்களில் பல்வேறிடங்களில் பேசிய மொழிகளின் வரலாறுகளையும் கவனிக்க வேண்டும்.


இந்தியாவில் வழங்கிய இந்தோனேஷிய மொழியை, ஈரானியர் சுலைமான் மலைகள் வழியாக ஈரானிய பீட பூமிக்குக் கொண்டு சென்றனர். இந்தக்காலம் முதல் அம்மக்களின் வாழ்க்கைத் துறைகளிலும் மொழித் துறைகளிலும் பற்பல மாறுதல்கள் ஏற்படலாயின.


கி.மு. 7700-7500 ஆண்டு வாக்கில் நார்டிக்குகள் துரேனியர் களுடன் தொடர்பு கொண்டு வந்துளர்.


மேற்கு துருக்கிஸ்தானத்தில் கி.மு. 7500ஆம் ஆண்டு வாக்கில், சுமேரியர்கள் காலூன்றிய காலத்தில், நார்டிக்குகள் வடமேற்காகப் படர்ந்து தமது தாயகமான கெத்திக் நாட்டுக்கு மீண்டும் திரும்பினர். அதன்பின் கி.மு. 4300 வரை... அதாவது மேற்கு துருக்கிஸ்தானில் சுமேரியருக்கு பதில் ஹிட்டைட்சுகள் ஆதிக்கம் கொண்டபோது, இரு இனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மொழி பழக்க வழக்கத் தொடர்புகளே அதிகம் கவனிக்க வேண்டியதாகும். அடுத்து 2000 ஆண்டுகளில் நார்டிக்கு களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. எனவே அவர்கள் தனித்தனிக் குழுவினராகப் பிரிந்து பல திக்குகளிலும் பரவினர்.


தற்கால சமஸ்கிருத மொழியிலுள்ள ஈரானிய, பாரசீக, பாமீரிய, கிரேக்க மொழிக் கலப்படங்களை நீக்கிவிட்டால், இது பழங்கால மாஸாகெட்டே அல்லது தேக்காரி மொழியாகும். கி.மு. 1000-750இல் வழங்கிய சாக்கிய மொழியும் இவ்வாறே இருக்கும்.


மொழிகளின் தாயகம்

பல்வேறு ஆரிய மொழிகள் பிறந்த அடிப்படைத் தாய் மொழியும், இந்தாஃப்ரிக்கன் மொழிகளும், துரேனியன் மொழிகளும் பிறந்த தாய்மை மொழியும், வங்காளக் குடாக்கடல் கரையோரத்தை அடுத்த வட்டாரங்களிலும் அல்லது இந்தியாவின் உட்பகுதியிலும் பிறந்தனவேயாகும். மற்றும், இப்போது தக்காணத்தில் வசிக்கும் திராவிட மக்களின் மூதாதைகள் பேசிவந்த தொன்மை மொழியி லிருந்தே, இந்த ஆரிய மொழிகளும் மற்ற மொழிகளும் பிறந்தவையாகும்.


கன்னடம், துளு, குடகு, தோடா, கோட்டா, குருக்ஸ், மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி ஆகிய திராவிட மொழிகள் பால்-திணை ஆகியவை களுக்காக பல்வேறு குறிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளன.


ஜாவா, சுமத்திரா, மலேயா வட்டாரங்களிலும், வங்கக் கடல் கரைப்பகுதியிலும், இன்னும்பல தொன்மை மொழிகள் பேசப்படலாம்.
இந்தாஃபிரிக்க இனத்தார் வடமத்திய இந்தியாவிலும், துரேனியர்கள் பர்மாவிலும் அதற்கு வடகிழக்கு வட்டாரங்களிலும், ஆரியர்கள் வடமேற்கு இந்தியாவிலும் இருப்பதாகக் கொள்ளலாம். மற்றும் துரேனிய இனத்தார், திபேத்திய பீடபூமியின் கிழக்குச் சரிவுகளிலும், ஆரிய இனத்தார் சுலபமாக மலைகளைக் கடந்து இரானிய பீடபூமியிலும் இண்டஸ் (சிந்து) ஆற்றின் மேல் படுகை வழியாகக் காஷ்மீரிலும், மேற்குத் திபேத்திலும் (இறுதி குடியேற்றம் கி.மு. 6000) அதற்கு அப்பாலும் குடியேறின ரெனலாம்.


இந்தாஃப்பிரிக்கா இனத்தார். கிழக்கு முகமாக பசிபிக் தீவுகளுக்கும், மேற்கு முகமாகத் தென் அராபியா, ஆஃப்பிரிக்கா மூலமாகவும், இந்தோனேஷிய ஆரியர் களால் விரட்டப்பட்டனர். இந்தோனேஷிய ஆரியர்களும் பனிக் கடுமையால் வட இந்தியாவிலும், தென்முகமாகத் தக்காணத்திலும் பரவ வேண்டியதாயிற்று. இது கி.மு. 5000 வாக்கில் நடந்தது. எனவே, ஆரிய இனத்தைத்தோற்றுவித்தவர்களும், இப்போது தக்காணத்திலுள்ள திராவிட மக்களின் இந்தோனேஷியக் கிளை மூலமாக மூதாதைகளே என்கின்றனர். இந்தாஃபிரிக்கர்கள் வெளியேறியதும் இந்தோனே ஷியர் சிந்து நதி வட்டாரத்தில் குடியேறினர். சுலைமான் மலையைக் கடந்து திரும்பி வந்த இரானியர் (ஹிந்துக்கள்) வட தக்காண திராவிட மக்களிடையே ஊடுருவினர். இந்த ஆராய்ச்சியில் காணும் முடிவுக் கருத்தாவது:-


1. திராவிடருக்கு முற்பட்ட மக்கள்

ஜாவா, சுமத்ரா, மலேயா, இலங்கை, ரோடியர், பெருகு யீச்சுவா, வங்காளக் கடலின் இருமருங்கு கரையோர வட்டார மக்கள்.

2. தக்காண திராவிடர்

கன்னடம், துளு, குடகு, கோடா, கோட்டா, குருக்ஸ் (குறும்பர்), மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி மொழி பேசுபவர்கள் இவர்கள் நீண்ட தலை மக்கள். இது அடிப்படை முக்கியம்.

3. இந்தோனேஷியர்

இது வடமேற்கில் பரவிய இனம்; திராவிட மொழியில் திருத்தம் செய்து பேசியவர்கள் வங்க மொழியின் அடிப்படையிலும், பசிபிக் தீவிலுள்ள போலினேஷியர் மொழிகளின் அடிப்படையிலும் ஒப்பனை காணலாம். இந்தாஃபிரிக்கன், துரேனிய மொழிகளுடன் இவைகளும் தோன்றியிருக்கலாம். இவர்களும் நீண்ட தலையுடைய மக்களே.

4. ஈரானியர்கள்

(மத்திய தரைக்கடல் வட்டாரத்தினர் - ஹாமைட்கள், ஹிந்துக்கள்):
மத்தியதரை வட்டாரத்தினர் - மொழி வட்டாரங்கள் - கருங்கடலுக்கு தெற்கே ஈரான், அரேபியா, பழங்கால எகிப்து, கீரீட், மத்தியதரை முகத்துவாரப் பகுதிகள், ஹாமைட்கள் வட்டாரங்கள்: மேற்கு இந்தியா, தென் ஈரான், எத்தோபியா (அபிசினியா) பிற்கால எகிப்து.

ஹிந்து - ஈரானிலும் இந்தியாவிலும் ஹிந்தி மொழிகள் பேசும் வட்டாரங்கள்.
அடிநாளில் இவ்வினத்தவர்களும், இந்தோனேஷியர் களிடமிருந்து தோன்றியவர்களே; இவர்களும் நீண்ட தலைகளையுடையவர்களே.

5. செவ்ட்டோ ஸ்லாவ்ஸ்

சிறிய தலையுடையவர்கள்; பாமீரியர், ரஷ்யாவிலுள்ள ஸ்லாவ்கள், பால்கன் முதலிய வட்டார மக்கள், அண்ட்டோலியாஹெலன்கள், கிரீசிலும் சுற்று வட்டாரத்திலும், வசிப்போர், மத்திய அய்ரோப்பிய ஆல்பைன்ஸ் கெல்டல்கள் (இத்தாலி, சய்பீரியன் தீபகற்பம், மத்திய ஃப்ரான்ஸ், கிழக்கு ஃப்ரான்ஸ் ஆகியவைகளில் வசிப்போர் உட்பட) இவர்களும் ஆதி இந்தோனே ஷியரிடமிருந்து உற்பத்தியானவரே.

6. நார்டிக் மக்கள்

உருண்ட தலையர்களான ஆரிய மக்கள், சூவியர் நார்வீஜியர், சுவிடன் மக்கள், பிரிசீயர், ஆங்கிலர், சாக்ஸன்கள், துரிங்கியர், ப்வேரியர், செம்னோனிய அல்லது சுவாபியர், அலிமன்னியர், கிம்மேரியர் - மேதியர், சூர்டுகள், தோரியர், அல்பேனியர், மற்றும் வீசர். வெரா ஆறுகளுக்கு மேற்கிலும் உர்டன் பர்க் தன் பேடன், அல்சாசுக்கு வடக்கிலும் மேற்கு ஃப்ரான்சிலும் வடக்கு ஃப்ரான்சிலும் வசிப்போர் (மத்தியதர வட்டார புருனட்டுகளையும், அல்பைன் கெல்டுகளையும் ஆங்கிலோ சக்ச்களைத் தவிர்த்தும்).
கேதே-சுவிடன், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகியவற்றிலுள்ள கோத்கள்.
மாஸ்ஸநேத்தே, வடகிழக்கு ஈரான், தோக்கரி, குஷான் பாக்ட்ரியானா, எப்தாலைட்கள்.


சாக்கே:- சாக்யோனியாவில் வசிக்கும் வூசுன்கள் உட்பட இறுதியில் கூறப்பட்ட இரு இனத்தவரில் இந்தி யாவில் சிந்தோ இந்திய சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர் களின் சந்ததியாருமுளர். இவர்கள் மொழி சமஸ்கிருதம்.
சார்மேதியரான போலந்தியர், உக்ரேனியர், கிம்மேரியர் கெத்தே இனத்தவர்கள் கலப்பட சந்ததியார்.


இவர்கள் கெல்ட்டோஸ்லாவ் இனத்திலிருந்து உற்பத்தியானவர்கள். இயற்கை மாறுதல்களால் நாளடைவில், ஏற்பட்ட உட்பிரிவுகளால் இவர்கள் தனித்தனியாயினர். எனவே, அடிநாள் வரலாற்றைக் கொண்டுதான் இவர்களுடைய அடிநாள் உற்பத்தியையும் இனத்தையும் கணிக்கமுடியும்.
எனவே, மேற்கண்ட ஆராய்ச்சிக் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆரியர்கள் என்பவர்கள் பல இடங்களில் பராரியாகத் திரிந்த பல கூட்டங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்து தங்கிப்போன ஒரு கலப்பு இனக்கூட்டம் என்பதும் இவர்கள் இப்போது தங்கள் தாய்மொழியாகவும் மதமொழியாகவும் பாவித்துக் கொண்டு மற்றவர்களுக்கு வேத மொழி என்று கூறி ஏமாற்றுப் பிரச்சாரம் செய்யும் சமஸ்கிருத மொழி என்பதானது, பல பிரிவு மக்கள் பல இடங்களில், பல காலங்களில் பேசிவந்த பல்வேறு மொழிகளின் சேர்ப்பு மொழியே தவிர, ஒரு குறிப்பிட்ட கால குறிப்பான மொழி அல்ல என்பதும், இதில் எவ்விதமான உயர்வுத் தன்மையும் கிடையாது என்பதும், பார்ப்பனர் அதைப்பற்றி உயர்வாக பேசுவதும் பிரசாரம் செய்வதும் தங்கள் சமய-மத கோட்பாடுகளை உயர்த்திக் கொள்ளவும் நமது மொழிகளை இழிவுபடுத்தவுமே ஆகும் என்பதும் நன்றாய் அறியப்படுகின்றன.


(ஆதாரம்: புரட்டு இமாலயப் புரட்டு! - தந்தை பெரியார்)

30.7.14

பெரியாரின் தாக்கம் பெரியவாளிடம்!

 
தந்தை பெரியாரின் கொள்கையும், பிரச்சார மும் பாமர மக்கள் மத்தி யில் மட்டுமல்ல; படித்தவர் கள் மத்தியிலும் அம்பாகத் தாக்கியிருக்கிறது. ஏன்? 

முற்றும் துறந்த முனிபுங்க வர்களையும், காவி தரித்த கனவான்களையும்கூடக் கச்சிதமாகவே தாக்கி களைப்பாறி இருக்கிறது.


மடத்துக்குள்ளிருந்த என்னை மக்கள் மத்தியில் கொண்டு வந்து நிறுத்திய வர் தந்தை பெரியார் என்று மனம் நிரம்பக் கூறியவர் மறைந்த தவத்திரு குன்றக் குடி அடிகளார் அவர்கள்.


மறைந்த காஞ்சி சங் கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியாரையே தாக்கி இருக்கிறது என்று சொன்னால், சுலபத்தில் யாரும் ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.

உண்மை என்னவென் றால் மேனாவில் (பல்லக் கில்) முன்னால் நான்கு பேர் களும், பின்னால் நான்கு பேர்களும் தோளில் சுமந்து அதில் பவனி வந்த அந்தச் சங்கராச்சாரியார், அதனை விலக்கி விட்டு, காலால் நடந்து செல்லும் ஒரு நிலையை ஏற்படுத்தி யவர் தந்தை பெரியார்.


சக்தி விகடன் பொறுப் பாசிரியராக இருந்த ரவி பிர காஷ் இதோ எழுதுகிறார் படியுங்கள்! படியுங்கள்!!


பெரியவாள் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) ஒருமுறை மேனாவில் சென்று கொண்டிருந்த போது, வழியில் மேடைப் போட்டு பெரியார் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர் கள் சிரமப்பட்டு தூக்கிச் செல்ல, சொகுசாக உட் கார்ந்து கொண்டு போகி றாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனி தன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என் றால் எல்லா சுகங்களையும் துறக்கவேண்டும்; இப்படி அடுத்தவர் தோளில் உட் கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்று முழங்கிக் கொண்டி ருப்பது பெரியவாளின் காதுகளில் விழுந்தது. அவ் வளவுதான், மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லிவிட்டு, இறங்கி விட்டார் பெரியவர்.


அவர் ஏதோ சொல்றார், சொல்லிவிட்டுப் போறார், அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ!


உங்களைச் சுமந்து கொண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம் என்று மடத்தைச் சேர்ந்த வர்கள் பெரியவாளிடம் கெஞ்சியிருக்கிறார்கள். இல்லை, அவர் சொல்றது தான் சரி. சுகத்தைத் துறக் காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போக ணும்னாலும் நடந்துதான் போகப் போகிறேன் என்று தீர்மானமான முடிவெ டுத்து விட்டார்.


கடைசி வரையிலும் அவர் அந்த முடிவிலிருந்து மாற வில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந் தன. இது வெளிவந்த இதழ்  சக்தி விகடன் - எழுதியவர் அதன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் - அதற்குச் சாட்சியமாகக் கூறப்பட்டவர் 40 ஆண்டு காலம் சங் கராச்சாரியாரிடம் சேவை செய்த இலட்சுமி நாராய ணன் என்பவர் - மாங்காட் டில் இருக்கக்கூடியவர்.

பெரியவாளிடமும்கூட தாக்கத்தை ஏற்படுத்தியவர் பெரியாரன்றோ!      

----------------------- - மயிலாடன்   அவர்கள் 30-07-2014 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை

29.7.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 15(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)பால காண்டம்

பதினான்காம் அத்தியாயம் தொடர்ச்சி ஆரியப் பார்ப்பனர் மயக்கத்தில் எவ்வாறோ அகப்பட்டு மயங்குபவரோ?  அன்றி அவ்வகுப்பினரில் ஒருவரோ இச்சாமிநாதன்?  மேலே நாம் கூறியுள்ள மொழி பெயர்ப்பாளர் நால்வரில் அநந்தாச்சாரியாரும் சீனிவாசய்யங்காரும் வைணவ சமயத்தினர்.  மற்றிரு வரும் ஆரியரே.  இவர்கள் எல்லோரும் அகலிகை சோரம் போனமையையும் தசரதன் தன் பத்தினிமார் களை இரித்விக்குகளிடம் ஒப்படைத்ததையும் ஒப்புக் கொண்டு உண்மையை உள்ளவாறெழுதியிருக்க அவற்றைத் தாமும் படியாமல் படித்த நமது கூற்றையும் கேளாமல் இவர் பிதற்றுரை பல வரைகின்றனரே?  கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்த அரைகுறைப் படிப்பாளியாகிய நம் சாமிநாதனே ஆரியப் புரளியில் இவ்வாறு ஏமாறி மயங்கிக் கிடந்தனரென்றால், கொஞ்சமும் படியாமலிருக்கும் சாதாரண மக்களின் நிலையைக் கூறவும் வேண்டுமா?  தாடகாபிராட்டி யாருடைய பெருமைகளை இவர் தேவாரத்தைப் படித்து உணர்வாராக !


இனி அவர் தமக்கே பொருள்படாதெழுதும் வெற்று ரைகளை விடுத்து, அவர் பின்னெழுதும் இராமா யணத்தில் அநேக ஜனங்கள் வெகுவாய்த் தெரிந்து கொண்டிராத - ராமனுடைய குற்றமெனக் கருதிக் கொண்ட ஒரு பார்ப்பனக் குழந்தையின் மரணத்துக்காக ஒரு சூத்திரனைச் சிரச்சேதம் செய்த கதையை எடுத்துக்காட்ட வந்த நாயக்கருக்கு, எல்லாராலும் ஸ்பஷ்டமாய்த் தெரிந்திருக்கும்படியான விஷயமாகிய குகனென்னும் படகோட்டி விஷயத்தில் ஜாதி வித்தியாச மின்றி அவனை அன்போடாதரித்து அவனையும் சகோதரர்களில் ஒருவனாகச் சேர்த்துக் கொண்ட உண்மை நெறியும், வானரர்களை வித்தியாசமின்றி அன்பினால் பிணித்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாயிருந்து காலங் கடத்திய நீதிமுறையையும், மானிட வகுப்பைச் சேராத சடாயு என்னும் பக்ஷியின் மேல் வைத்த அன்பினால் தான் மரணத்துக்காகக் கண்ணீர் விட்டுக் கதறியழுது, அதைப் புள்ளினமெனக் கருதாது அதற்கும் மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைத் தாமே செய்த நேர்மையும், சபரி என்னும் ஓர் ஏழைப் பெண்ணாலளித்த உணவுவினை உண்ட அன்பின் பெருக்கும், அரக்கர் குலத்தைச் சேர்ந்த விபீஷணரின் நேர்மையான நடத்தையைக் கருதி, அவரை அரக்கனெனத் தள்ளாமல் தன்னுடன் சேர்த்துக் கொண்ட சமத்துவ நீதியும், நிராயுதபாணியாய்த் தன்னுடைய பாணத்தில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு கதியற்றவனாக நின்ற இராவணனை, இன்று போய் நாளை வா என்று சொன்ன அரச நீதியும், வண் ணான்தானே என்று அலட்சியம் செய்யாமல் அவனை ஒரு பிரஜா உரிமை உடையவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டும் என்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டினர சியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும் இராமன் பால் இருக்க, சமத்துவ வேஷம் பூண்ட நாயக்கருக்கு இவையெல்லாம் விளங்காமல் அந்த ஒரு விஷயம் மட்டும் அடிக்கடி பல சமயங்களிலும் நிதர்சனமாய்க் கொண்டு வருகின்ற நேர்மைதானென்னே! என்ற கூற்றினை ஆராய்வோம்.  மேலே கண்ட கூற்றுகளைப் படித்துப் பார்த்தால், அது ஒரு பார்ப்பனன் தமிழாகவே காணப்படுகிறது.  ஆதலின் சாமிநாதன் என்பவர் ஒரு பார்ப்பனராதல் வேண்டும்.  அன்றி பார்ப்பனன் பெற்ற பிள்ளையை (கட்டுரையை)த் தாம் பெற்ற பிள்ளையாகக் கொண்ட ஒரு பார்ப்பனரல்லாதாராக வேண்டும்.  இவர் பார்ப்பனரல்லாதாரெனின், இவர் பிறருக்குப் பிறந்த பிள்ளைகளைத் தன்னவையெனக் கொண்ட தசரதன் செயலுக்குப் பரிந்து பேசுதற்கு ஒப்பமிட்டது வியப் பாகாது.  அன்றி பார்ப்பனரேயெனின், இவ்வாறெழு துவது அவரியல்பே.  இத்தகைய கட்டுரையை வெளிப் படுத்தியவரின் பெருமைதானென்னே!  இதனால் தமிழ்நாடு ஆசிரியர் பெருமையும், கல்வியும், ஆராய்ச்சி வன்மையும் இனிது புலனாகும்.  குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்புகளும் உள.  இனி மேலே குறித்துள்ள கூற்றுகளை ஆராய்வோம்.


இராமன் ஒரு பார்ப்பனனுக்காக ஒரு சூத்திரனுடைய தலையை வெட்டிய அநியாயத்துக்குச் சமாதானம் கூறுவதை விடுத்து, நம் சாமிநாதன் வேறு பல விரித்தார்.  விரித்தமையும் மிக அழகிதே.  இராமனைப் பற்றிய வேறு சில செய்திகளைக் குறித்தார்.  அவற்றை வரும்போது விவரமாக ஆராய்வோமேனும் ஈண்டுச் சுருங்கக் கூறுவோம்.  குகனுடைய உதவியில்லாமல் போனால், இராமன் கங்கையைக் கடத்தலரிது.  ஆதலின், அவனு டைய உதவி பெறுதற்காக இராமன் அவனை அவ்வாறு பேசி மயக்குகிறான்.  இராமன் ஒரு ராஜதந்திர நிபுணனே.  குரங்குகளோடு அவன் கூடி வாழ்ந்தது அவன் பெற்ற சாபப் பயனேனும், அவன் வாலியை மறைந்து நின்று கொன்று சகோதரத்துரோகியாகிய சுக்ரீவனோடு நட்பு கொண்டது.  பரதனாகிய தனது சகோதரனுக்குத் துரோகம் நினைத்த அவ்விராமனுக்கு இயல்பானதே.  இது போலவே சகோதரத் துரோகியாகிய விபீஷணனிடம் இராமன் நட்புக் கொண்டதும் அவனுக்கு இயல்பும் இராஜ தந்திரமுமாம்.  இவ்வாறாக இவ்விருவருடனும் நட்பு கொண்டதை இராமனுக்குப் பெருமையானதென மயங்கினார் சாமிநாதன்.


பேராசைக்காரனும் சகோதரத் துரோகியுமாகிய விபீஷணனைத் தன்பக்கம் சேர்க்காதிருந்தால், இராமன் இராவணனைக் கொன்றிருத்தல் இயலாது.  இராவண னுடைய நெஞ்சில் அம்பெய்து கொல் எனக் கூறி அருகே நின்றானே பாவி விபீஷணன்!  அநியாயம்!  அநியாயம்!  இன்று போய் நாளை வாவென இராமன் கூறியதாகக் கூறுவது, இராமனால் பற்றுடைய வால் மீகியும் கம்பரும் என்பதைச் சாமிநாதன் உணர்வாராக !  இனத்துரோகமும் இனத் துரோகச் சேர்க்கையும்தான் சாமிநாதனுக்குச் சமத்துவமாகத் தோன்றுகின்றன போலும்.  தனக்கு உதவி செய்த சடாயுவுக்கு  மனமிரங்  கியது உலக இயற்கையே.  நல்லுணவு கிடையாது திண்டாடிய இராமனுக்குச் சபரி நல்லுணவு தர அதை அவன் ஆவலுடன் வாங்கி உண்டதும் அவனுக்கு ஒரு பெருமையே!  நன்றாகச் சாப்பிட்டதை ஒரு பெருமை யாகக் காட்டியது சுவாமிநாதனுக்கு ஒரு பெருமையே.  இவற்றால் இராமனுடைய துரோகச் செயல்கள் இனிது புலனாகும்.  இராமன் சூத்திரனைக் கொன்றது அதிபாத கமே.  அதனால், இராமன் சிறந்த அதர்மராஜனே என்பதும் விளங்குகிறது.  இனி சீதையைப் பற்றி அவர் கூறுவதைக் கவனிப்போம்.


இராமன் சீதையின் கற்புடைமையில் அய்யுறுகிறான்.  சீதையை இராவணன் பற்றி மடியில் வைத்துப் போனதும் அவனுடைய வசமாக அவள் பத்துமாதம் வாழ்ந்ததுமே அவ்வையுறவுக்குக் காரணம்.  சீதையும் தன்னுடல் இராவணன் வசமிருந்ததை ஒப்புக் கொள்ளுகிறாள்.


இராமன் அரசாளும் நாளையிலே ஒரு வண்ணான் அந்நியனோடு வாழ்ந்த சீதையை இராமன் சேர்த்துக் கொண்ட இழிசெயலை மிக இழித்துப் பேசுகிறான்.  அதனால் மானம் பொறுக்க மாட்டாமல் இராமன், நிறைந்த கர்ப்பிணியாக இருந்த சீதையைக் காட்டுக்கு வஞ்சகமாக அனுப்புகிறான்.  இவ்விழிந்த செயலைப் பாராட்டிச் சாமிநாதன், வண்ணான்தானே என்று அலட் சியம் செய்யாமல் அவனும் ஒரு பிரஜா உரிமையுடை யவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டுமென்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டின் அரசியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும் என்று எழுதினார்.  பிரஜா உரிமைபற்றியும் அரசாளும் முறைபற்றியும், நன்னடத்தை பற்றியும் இச்சாமிநாதனுக்குள் அறிவு மிக அழகியதே.  இவ்விழிந்த ஆராய்ச்சியையும் தமிழ்நாடு வெளிப் படுத்தியதே!  அறிவாளர் நகையாடக் கூடிய இத்தகைய கட்டுரைகளை வெளிப்படுத்துவதிலும் நல்ல கட்டுரைகள் கிடையாது போலும்.  வெள்ளைத் தாள்களை மடித்துச் சந்தாதாரர்களுக்கு அனுப்பின் மிக நலமாக இருக்குமே. வண்ணான் ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் அய்யுற்றது காரணமாகத் தன் மனைவியை - அதிலும் பூரணக் கர்ப்பிணியை ஒருவன் காட்டுக்கு அனுப்பினா னென்றால், அவனைப் போலும் அறிவில்லாத முழு மூடன் ஒருவன் இவ்வுலகத்தில் இதுகாறும் தோன்றி யிருப்பானா என்பதைச் சாமிநாதன் சிந்திப்பாராக!  இராமன் இதனால் மிகவும் முழுமூடனாதல் வேண்டும்.  அன்றியும் இரக்கமற்ற பாவியுமாதல் வேண்டும்.  தன்னுடைய மனைவியும் பூரணக் கர்ப்பிணியுமாகிய சீதையென்ற ஒரு பெண்ணிடத்திலே இவ்வாறு மிருகத் திலும் கேடு கெட்ட மிருகம்போல நடந்துகொண்ட இராமன், தவம் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திர னுடைய தலையை வெட்டினானென்பது ஒரு ஆச்சரிய மன்று.  விவேகானந்தர் கூறுகிறாரென நம்பும் இடைச் செருகலெனும் நம்பிக்கையைச் சாமிநாதன் விட்டொழிப் பாராக!  மேலும், சீதை கற்பிழந்தவளாகாதிருந்தால், அவள் கணவனாகிய இராமன் அய்யுற்றதோடு நில் லாமல் உறுதி கொண்டு அவளைக் காட்டுக்கு அனுப்பி யிரானன்றோ?  அவரது பாரதக் கூற்றாராய்ச்சியை வரும்போது எழுதுவோம்.இது இடனன்றாம். 


அய்யோத்தியா காண்டம்

முதல் அத்தியாயம் பரதன் சத்துருக்கனோடு மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். தசரதனுக்குத் தன் மக்கள் நால்வரிடத்திலும் சம அன்பு என்றாலும், இராமனிடத்தில் அதிக அன்பு. இராமனோ பிறரால் அறியமுடியாத எண்ணத்தை யுடையவன், ஆலோசித்த காரியம் முடியும் வரையில் பிறர்க்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொள்வான். இராமன் எல்லா ஜனங்களுக்கும், தசரதனுக்கும் மகழ்ச்சியைக் கொடுக்கும் நல்ல நடைகளோடு விளங்கினான். அதனால் ஜனங்கள் இவன் தங்களுக்கு அரசனாக வேண்டுமென்று ஆசை கொண்டார்கள். தசரதனும் நமது குழந்தை இராமனுக்குப் பட்டா பிஷேகம் செய்து இந்த முதிர்ந்த வயதில் அதனா லுண்டாகும் ஆனந்தத்தை அனுபவித்துத் தன் மந்திரிகளோடு யோசித்து இராமனுக்குப் பட்டங்கட்டத் தீர்மானித்தான். அதுவும் சீக்கிரம் நடைபெற வேண்டுனெ எண்ணினான். தூதர்களையனுப்பி அரசர்களை வரவ ழைத்தான்.  ஆனால் கேகய மன்னனும் சனகனும் வெகு தூரத்திலிருந்ததால், பிறகு கேட்டு மகிழட்டுமென்று அவர்களுக்குச் செய்தியனுப்பவில்லை. அவ்விரு வரையும் தவிர எல்லா அரசர்களும் வந்து சேர்ந்தனர். அவ்வரசர்களையும் தன் குடிகளையும் பார்த்துத் தசரதன் பின்வருமாறு கூறினான்.


எனக்கு வயது முதிர்ந்து விட்டது. அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தளர்ந்துபோன இவ்வுடலுக்கு ஓய்வு வேண்டுகிறேன். அதனால் இப்போது இங்கிருக்கும் எல்லோருக்கும் சம்மதமானால் இளவரசாக இருக்கத் தகுந்தவனென்று நான் குறிப்பிடும் மூத்த மகனான இராமனை அரசனாகச் செய்து சுகமாக இருக்க நினைக்கிறேன். இராமன் உத்தம குணங்களையுடையவன், இவ்வெண்ணம் நலமெனத் தோன்றினால், நீங்கள் அனுமதி கொடுக்கலாம். இது உசிதமன்றென்றால், வேறு என்ன செய்யலா மென்று அதையும் சொல்லுங்கள். இராமனுக்குப் பட்டம் கட்டுவதே உசிதமென்று எனக்குத் தோன்றினாலும், மத்தியஸ்தர்களான உங்களோடு ஆலோசித்துச் செய்வதே உசிதமென்று நினைக்கிறேன் என்று சொன்னான். அதைக்கேட்ட எல்லோரும் அவனு டைய எண்ணப்படி செய்வதே நலமென்று கூறினர்.

               ------------------------ தொடரும்-"விடுதலை”  29-07-2014

மதச் சார்பின்மையையும் சமூக நீதியையும் குழப்பும் ஓம் சக்தியார்!

மதச் சார்பின்மையையும் சமூக நீதியையும் குழப்பும் 'ஓம் சக்தியார்!'!

திருவாளர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களால் நடத்தப்படும் ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியரான எம். சிதம்பரநாதன் செக்யூலரிசம் பற்றிய தவறான புரிதல் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை தினமணியில் (23.7.2014) தீட்டியுள்ளார்.

1) செக்யூலரிசம் என்பது மதச் சார்பற்றது, சமயச் சார்பற்றது பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அது மதத்திற்கு எதிரானது என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டு விட்டது நமது துரதிர்ஷ்டம். இந்தப் புரிதல் அரசே மதத்திற்கு எதிரானது என எண்ணுமாறு செய்து விட்டது

****
செக்யூலர் அரசு என்பது  மத அக்கறையற்ற அரசல்ல. மதங்களுக்கு எதிரான அரசும் அல்ல. சிறுபான்மை மதத்தாரை அச்சுறுத்தும் அரசும் அல்ல. உண்மையில் செக்யூலரிசத்தை சமயச்சார்பற்ற அரசு என்பதைவிட சமய சமத்துவமுடையது என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

நமது மறுப்பு: செக்யூலரிசம் குறித்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தெரிவித்த தெளிவான கருத்து அதன் உண்மைத் தன்மையைப் பளிச்சென்று உணர்த்தும்.

'செக்குலர் - மதச் சார்பற்ற என்ற சொல் லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார் கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்குஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பது போல பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?

செக்குலர் என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தினார்களே ஒழிய, வேறு மொழிச் சொல்லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல்லுக்கு வியாக்கியானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல் லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர் களும், காங்கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத்தமாக முடியுமா?' என்றார் தந்தை பெரியார் (உண்மை 14.12.1971 பக்கம் 2)

விளக்கம்: செக்யூலர் என்பதுபற்றி ஆங்கில அகராதி கூறுவது என்ன?

Secular -  (Secularis - latin Word)
(means - ‘worldly’ or ‘temporal’)
- the state of being Separate from religion’
- not being exclusively allied with or against any particular religion.

உலகியல் சார்ந்தது, மதத்திற்கு அப் பாற்பட்டது - எந்த மதத்திற்கும் தொடர் புடையது அல்லது எதிர்ப்புடையது அல்ல;

இதுதான் செக்யூலர் என்ற மூலச் சொல்லின் துல்லியமான பொருள். இதனைப் புறந்தள்ளி செக்யூலரிசத்தை சமயச் சார்பற்ற அரசு என்பதைவிட சமயச் சமத்துவம் உடையது என்று திரிப்பதைப் பார்க்கும் பொழுது தந்தை பெரியார் சொன்ன கன்னிப் பெண் உதாரணம்தான் நினைவிற்கு வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

செக்யூலரிசம் குறித்து முழுத் தெளிவு கிடைக்க வேண்டும் என்றால் இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குத் தான் போக வேண்டும்.

1994 ஆம் ஆண்டிலேயே தெளிவான தீர்ப்பு வந்தாகி விட்டது.

ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதக் கிளைகள் பற்றியோ ஆட்சியின் கண் ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதத்தைக் கலக்கக் கூடாது. அரசுப் பிரச்சினையில் மதத்துக்கு இடம் இல்லை.
எந்த ஒரு மாநில அரசும் மதச்சார் பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க - குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு.

ஆறு நீதிபதிகள் தனித்தனியே அளித் துள்ள தீர்ப்புகளில் - அரசியலமைப்புச்  சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஓர் ஆட்சி - மதச் சகிப்புத்தன்மையை மேற்கொள்வதாலோ - ஒரு குடிமகனுக்கு மதத்தைப் பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிப்பதாலோ அந்த அரசு மதச்சார்பு ஆகிவிட முடியாது. அரசின் மதத்தோடு தொடர்பில்லாத மற்றும் மதச்சார்பின்மை தொடர்புடைய எந்த ஒரு செயலிலும் மதத்தின் குறுக்கீட்டுக்கு இடமே கிடையாது என்றும் நீதிபதிகள் திட்டவட்ட மாகக் கூறியுள்ளனர். நீதிபதி பி.பி.ஜீவன் (ரெட்டி) தெரிவித்துள்ள கீழ்க்கண்ட கருத்தை ஏனைய நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் அரசு அதி காரத்தைக் கைப்பற்றுவதற்கோ அல்லது அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கோதான் உருவாகின்றன. அதுதான் அக்கட்சிகளின் நோக்கம்.

சில தனி மனிதர்களைக் கொண்ட அமைப்பு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அப்படியானால் அது ஒரு மத அமைப்பு. மற்றொரு அமைப்பு - கலாச்சார மேம் பாட்டுக்குப் பிரச்சாரம் செய்யலாம்.

அப்படியானால் அது ஒரு கலாச்சார அமைப்பு. இந்த அமைப்புகளின் நோக்கம் - அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதல்ல. ஆனால் அரசியல் கட்சிகளின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். ஒரு ஜனநாயக ஆட்சி அமைப்பு - அரசியல் கட்சிகள் இல்லாமல் செயல்பட்டுவிட முடியாது.

அரசியல் கட்சிகள் என்பவை அரசியல் சட்டத்தின் அங்கங்கள்; அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது அரசியல் கட்சி களுக்கும் அதுவே அடிப்படை அம்சமாகி விடுகிறது.
அரசியல் சட்டம் மதத்தையும் அரசி யலையும் ஒன்றாகக் கலப்பதை அனுமதிக்க வில்லை. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம் இந்த நாட்டை ஆண்டு கொண் டிருக்கும் காலம் வரை - இதை யாரும் மாற்றிவிட முடியாது  - இவ்வாறு ஆறு நீதி பதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு திட்டவட்டமாக, தெளிவாக தீர்ப்பாகவே கூறிவிட்டது. (14.3.1994).

மதத்துக்கும் அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது- கிடையவே கிடையாது என்று உச்சநீதிமன்றத்தின் 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கறாராக சொல்லி விட்டதே!

இதற்குப் பிறகாவது சமய சமத்துவ முடையது அரசு என்ற கிளிப்பிள்ளை கீச் கீச் பேச்சு வேண்டாமே!

முழுக்க முழுக்க கிறித்தவர்களின் பூமியான அமெரிக்காவின் குடியரசு தலைவராக பொறுப்பேற்றபோது ஜான் எஃப் கென்னடி வெளியிட்ட அறிக்கை தான் நினைவிற்கு வருகிறது.

நான் ஆண்டு தோறும் வாட்டிகன் நகருக்குச் சென்று என்மத குரு போப் பாண்டவரை சந்தித்து ஆசி பெற்று வருவேன்.

ஆனால், இப்போது நான் அமெரிக்க நாட்டிலுள்ள அனைத்து மதப் பிரிவின ருக்கும் மத சார்பற்ற பகுத்தறிவாளர்களுக் கும் பொதுவானவனாக இருக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பில் உள்ளேன். எனவே, எவர் மனமும் புண்படக் கூடிய வகையிலோ என்னை நான் ஒரு பிரிவைச் சார்ந்தவனாக யாரும் கருதும் வகையிலோ என் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது எனக் கருதுகிறேன். ஆகையால் நான் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் வரை போப்பாண்டவரைச் சந்தித்து வணங்கி வாழ்த்துப் பெற மாட்டேன் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுகிறோம்.
  ***********************************************************************

2. ஹிந்து மதத்தினர் பெரும்பான்மை யாக இருந்தும், சிறுபான்மையினரைப் போல  சிறப்பாக நடத்தப்படுவதில்லை. உதாரணத்திற்கு ஒரு தொடக்கப் பள்ளி யையோ, உயர்நிலைப் பள்ளியையோ அல்லது தொழில் கல்லூரியையோ ஹிந்து பெயர் கொண்ட ஒருவர் நிறுவினால், அந்தப் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரி யர் பணியிடங்களைச் சுழற்சி முறையில் தான் நிரப்பியாக வேண்டும். அதுவும் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியலிலிருந்து தான் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள சிறுபான்மையினருக்கு உரிய பணி இடங்களை அவர்களில் தகுதியானவர் கிடைக்கும் வரை வேறு ஜாதியினரை நியமிக்காமல் வைக்க வேண்டும்.

இதுபோன்ற கல்வி நிலையத்தை ஒரு கிறிஸ்தவரோ, முஸ்லீமோ, சீக்கியரோ நிறுவினால் இத்தனை விதிகளும் அவர் களுக்குப் பொருந்தாது. இதுதான் சமயச் சார்பற்ற அரசு நடவடிக்கையாக இங்கே நீடித்து வருகிறது என்று தினமணி கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நமது பதில்: சமயச்சார்பின்மை யையும், சமூக நீதியையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார் இந்தக் கட்டுரையாளர்.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களைக் கை தூக்கி விட ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இடஒதுக்கீடு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையிலேயே (Preamble) Justice Social, Political and Economical என்று தான் தொடங்குகிறது என்பது பாலபாட மாகும்.
சிறுபான்மையினர்களின் மக்கள் தொகையைச் சொல்லத் தெரிந்த (அதிலும் தவறுகள் மலிந்துள்ளன) கட்டுரையாளர் அவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு களில் எந்தத் தாழ்தளத்தில் இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா!?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 

15 கோடி இஸ்லாமியர்கள்; 3 கோடி கிறிஸ்தவர்கள்; 2 கோடி சீக்கியர்கள்; 1 கோடி பவுத்தர்கள்; 40 இலட்சம் ஜைனர்கள்.  வேலை வாய்ப்பு மற்றும் கல்வி 2012 வேலை வாய்ப்பு: 3% இஸ்லாமியர்கள்; 2 கிறிஸ்தவர்கள்; 1 சீக்கியர், 1 இதரர்.
கல்வி 2.05% இஸ்லாமியர்; 2% கிறிஸ்தவர்கள்; 3% இதரர்.

23 Aug ‘The Telegraphic Survey

வேலை வாய்ப்பை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியர்கள் 3 விழுக்காடு, கிறித்தவர்கள் 2 விழுக்காடு தானே!

இந்த நிலையில் உள்ளவர்களுக்குச் சில வாய்ப்புகளை அளிப்பதுதான் சமூக நீதி. இதில் மதத்தைக் கொண்டு  வந்து திணித்து நச்சுப் புகையைக் கிளப்புவானேன்?

இந்தியாவில் மட்டும் தானா? அமெ ரிக்கா போன்ற நாடுகளில்கூட கறுப்பர் களுக்கு இந்த வகையில் இடஒதுக்கீடு (Affirmative Action) உண்டு என்பது தெரியுமா?

அமெரிக்காவில் 11 பேர்களுக்குமேல் பணியாற்றும் எந்த ஒரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் தம் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் கறுப்பர்கள் எத்தனைப் பேர் என்று அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எந்தப் பிரிவினராவது தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் வழக்குத் தொடரலாம்.

தென்னாப்பிரிக்காவில் நடத்தும் நிறுவ னங்கள் 25 சதவீதம் அளவுக்கு கறுப்பி னத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை தர வேண்டும்.

நார்வேயில் வேலை வாய்ப்பு 40% பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தாக வேண்டும். பிரேசிலில் பிறந்த குடி மக்கள், கறுப்பர் ஆகிய இனத்தவர்களுக்கு 20%, அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு 20%,  ஊனமுற்றவர்களுக்கு 5% ஒதுக்கீடு செய்யப்படுகின்றனவே.

                                   ----------------------(அவுட்லுக் 29.5.2006)

திறமைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டிய கிரிக்கெட்டில்கூட தென்னாப் பிரிக்காவில் கறுப்பர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு என்ற செய்தியையெல்லாம் தெரிந்து கொண்டால் தினமணி கட்டுரை யாளர் பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ். கண் கொண்டு பார்த்துக் கதற மாட்டார்.
மற்றொரு தகவல் உண்டு; தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமையும் கல்வி யும், மருத்துவமும் பரவலாக நிறைந்ததற்குக் கிறித்துவத்தின் பங்களிப்பை தீண்டேன் திரு நீலக்கண்டன் என்பது போலப் பார்க்கக் கூடாது!

***********************************************************************
3. செக்யூலரிசத்தில் போலி அசல் என இரண்டு உண்டு. காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்தது போலி செக்யூலரிசம். பா.ஜ.க.  கடைப்பிடித்தது மத சமத்துவமான அசல் செக்யூலரிசம். அசல் செக்யூலரிசத் தில் வாக்கு வங்கியில்லை, இடஒதுக்கீடு இல்லை. சலுகை இல்லை. சிறுபான்மை பெரும்பான்மை என்ற வரையறையில்லை - இதுவும் தினமணி கட்டுரையில் கண்டுள்ளதுதான்

நமது பதில்: பா.ஜ.க. கடைப்பிடிப்பது மத சமத்துவமான செக்யூலரிசமா? உண்மை தானா? பிஜேபியின் தேர்தல் அறிக்கை ஒன்று போதுமே - பிஜேபி என்பது இந்து மதவாத நஞ்சை உள்ளே அடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு  ராமர் கோயில் கட்டுவோம் - பசுவைப் பாதுகாப்போம், யூனிபார்ம் சிவில் சட் டத்தைக் கொண்டு வருவோம் - காஷ் மீருக்கான 370ஆவது பிரிவைத் தூக்கி எறிவோம் என்பதுதான் பிஜேபி கடைப்பிடித்து வரும் மத சமத்துவமான அசல் செக்யூலரிசமா?

இன்னும் ஒருபடி மேலே போய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் என்று பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி வராணாசியில் பேசியதுகூட (பி.டி.அய் 12.12.2013) 22 காரட் அசல் செக்யூலரிசம் தானா?

உண்மைக்கு முற்றிலும் திரையிட்டு கலப்படமற்ற பொய்யுரைகளை ஒருவர் கட்டுரையாக எழுதுவதும் அதற்குத் தினமணி தாராள இடம் கொடுப்பதும் எந்த ரக யோக்கியதாம்சத்தைச் சேர்ந்தது?

ஒன்றே ஒன்று மட்டும் முக்காலும் உண்மை! பிஜேபி செக்யூலரிசத்தில் இடஒதுக்கீடுகள் இருக்காது என்பதன் பொருள் என்ன? எல்லாம் பார்ப்பனர் வயிற்றில் அறுத்து வைக்கப்படும் - பழைய மனுதர்மம் ஓகோ என்று பறக்க விடப்படும் - என்பது மட்டும் கட்டுரையாளரின் எழுத்துகள் காட்டும் முழு உண்மையை ஒப்புக் கொள்கிறோம்.

வாக்கு வங்கி அரசியல் இல்லையாமே! அடேயப்பா - எத்தனைப் பெரிய அண்டப் புளுகு! வாக்காளர்களை இந்து முஸ்லீம் என்று பிரிப்பது வாக்கு வங்கி அரசியல் இல்லையா?

மோடியின் மன சாட்சியான அமித்ஷா உ.பி.யில் என்ன செய்தாராம்? முசாபர் நகர் மதக் கலவரத்தின் சூத்ரதாரி அவர் தானே! தேர்தல் நேரத்தில் எதிரிகளைப் பழி வாங்க வேண்டும் என்று பேசினாரே - யார் அந்த எதிரிகள்? கட்டுரையாளர் தினமணி ஆசிரி யர் திருவாளர் வைத்தியநாதய்யரிடம் கடன் கேட்டு வாங்கியாவது சொல்லட்டுமே பார்க்கலாம்.
 ******************************************************************************
4. வாஜ்பேயியைப் பிரதமராக்கி மக்கள் அவரை வகுப்புவாதியாகப் பார்க்க வில்லை. தேசியவாதியாகத்தான் பார்த் தார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நரேந் திர மோடியைப் பிரதமராக்கி இருக்கும் மக்களும் அவரை வகுப்புவாதியாகப் பார்க்கவில்லை, தேசியவாதியாகவே பார்க்கிறார்கள்.
- இப்படிக்கூட துணிந்து எழுத முடிகிறது ஒருவரால்.

குஜராத்தில் ஈராயிரம் சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்த  ஆட்சியின் முதல் அமைச்சர் - அகதி முகாம்களில் அடைக்கலமான முஸ்லீம் மக்களைப் பார்த்து மக்கள் பெருக்கத்திற்கான ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆபாச வார்த்தைகளை அள்ளிக் கொட்டிய ஒருவரை மக்கள் தேசியத் தலைவராகப் பார்க்கிறார்கள் என்று கூறும்பொழுது அந்தத் தேசியத்தை உச்சரிக்கக்கூட வெட்கமாகத் தானிருக்கிறது.
சந்தடி சாக்கில் வாஜ்பேயிக்கும் ஒரு பூமாலை! எங்களுக்கு மெஜாரிட்டி கிடைத் தால் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமன் கோயில் கட்டுவோம் என்று அமெ ரிக்கா வரை சென்று ஸ்டேட்டன் தீவில் முழங்கிய பெருமான் ஆயிற்றே அவர்.

அத்திப் பழத்தைப் புட்டால் அத்தனை யும் சொத்தைதான்! யானை போட்ட லத்தியில் முதல் லத்தி என்ன, இரண்டாம் லத்தி என்ன?

காந்தியாருக்கு மணி மண்டபம் கட்டி அங்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கும் வசதி செய்து கொடுக்கும் பொள்ளாச்சியார் குழுமத்திலிருந்து வெளிவரும் ஓம் சக்தியின் பொறுப்பாசிரியரிடமிருந்து சமுதாயப் பொறுப்பை உள்ளடக்கிய கருத்துகளை எதிர்பார்க்க முடியுமா? அப்படி எழுதினால் தினமணி தான் வெளியிடுமா?

------------------- கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள் 26-07-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/84795.html#ixzz38olZLgRE

25.7.14

ஆடி அமாவாசைப் பக்தர்களே! அறிவு கொண்டு சிந்திப்பீர்!

 

நாளை - சனியன்று ஆடி அமாவாசையாம்! அமாவாசை தான் மாதா மாதம் வருகிறதே, அது என்ன ஆடி அமாவாசை!

ஒவ்வொரு மாதமும் எந்த அக்கப் போரையாவது அள்ளி விட்டு மக்கள் பணத்தை அள்ளிக் கொள்ளும் புரோ கிதச் சுரண்டல் ஜாம் ஜாமென்று நடக்க வேண்டும் அல்லவா!

அதற்குத்தான் இந்தத் தெருப் புழுதி கள் எல்லாம். அமாவாசையன்று முன் னோர்களை வணங்கினால் நன்மை கிடைக்குமாம். அதில் ஆடி அமாவாசை என்பது விசேடமாம்!

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இறந்து போன முன்னோர்கள் தம் குடும்பத்த வரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை இறைவன் பூமிக்கு அனுப்பி வைக்கிறானாம்.

அந்த நாளில் தர்ப்பணம் செய்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார் களாம்! அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கு மாம்.

அய்தீகப்படி நம் முன்னோர்கள் தான் மறுபிறப்பு எடுத்துவிட்டார்களே, அப்படி இருக்கும்பொழுது ஆத்மா எங்கே இருந்து குதித்ததாம்.

கறந்தபால் முலைப்புகா
கடைந்த வெண்ணெய் மோர்ப்புகா
விரிந்த பூ உதிர்ந்த காய்
மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை, பிறப்பதில்லையே!

என்று நமது சித்தர் பாடியதுதான் நினை விற்கு வருகிறது!

ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம்
மறுபிறப்பு ஆகியவற்றைக்
கற்பித்தவன் அயோக்கியன்
நம்புகிறவன் மடையன்
இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்
மகாமகா அயோக்கியன்

என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறியதுதான் எத்தகைய அரு மையும், அறிவும், உண்மையும் வாய்ந்தது!
இப்பொழுது நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் நாடகத்திற்கு வருவோம்!

தனது தகப்பனாரின் திதிக்காக (திவ சத்துக்காக) புரோகிதப் பார்ப்பனர் வரு வார்.

நடிகவேளுக்கே உரித்தான குரலில் வரவேற்பார்!

அய்யர்வாள்! உங்களிடம் கொடுக்கும் பதார்த்தங்கள் எல்லாம் எங்கள் அப்பாவுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் தானே?
- நடிகவேள்

பேஷா, நன்னா கிடைக்கும் - சந்தேகம் வேண்டாம்!
- புரோகிதப் பார்ப்பான்

ஓ, பார்ப்பான் வயிறு பரலோகத் துக்குத் தபால் பெட்டியோ?
- நடிகவேள்

பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கலகலப்பு, சிரிப்பு வெடி!

இதோ பாருங்க அய்யர்வாள், எங்கள் அப்பா இருக்கிறாரே, அவருக்குக் கவிச்சு இல்லைன்னா ஓருண்டை சோறு உள்ளே போகாது; ஒரு துண்டு கருவாடாவது கண்டிப்பாக இருக்கவேண்டும். நீங்கள் என்னா செய்றேள், மீன், கோழி, முட்டை, ஆட்டுக்கறி சமையல் எல்லாம் தயாராக இருக்கிறது.

எனக்கு முன் உட்கார்ந்து திவ்யமா சாப்பிடனும் - அது எங்கள் அப்பாவுக்குக் கிடைக்கனும். உங்கள்மூலம் அந்தக் காட்சியை நான் கண்குளிரப் பார்க்கனும் - சந்தோஷப்படனும் - சாப்பாடு ரெடி - நீங்கள் ரெடிதானே? என்பார்.
அவ்வளவுதான்! அய்யர் ஓட்டம் பிடிப்பார்.

இதற்கு விளக்கம் தேவையில்லை.
 ஆடி அமாவாசைப் பக்தர்களே! அறிவு கொண்டு சிந்திப்பீர்! அய்யன்மார்களின் சுரண்டலுக்கு அடிபணியாதீர்! அடி பணியாதீர்!!

-----------------  25-07-2014 “விடுதலை” யில் கருஞ்சட்டை  எழுதிய கட்டுரை

24.7.14

சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?- கி.வீரமணி

களவுபோன கடவுளைக் கண்டுபிடிக்க மனிதர்களைவிட நாய்தான் உதவுகிறது! சிவகிரியில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சிவகிரி, ஜூலை 22- சிவகிரியில் 28.6.2014 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

நீண்ட இடைவெளிக்குப் பின், பக்கத்தில் இருக்கின்ற ஒரு ஊரில், உரையாற்றிவிட்டுச் சென்ற அனுபவம் எனக்குப் பழைய அனுபவம். சிவகிரியைப் பொறுத்தவரை யில், ராயகிரியில் பலமுறை பேசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தாலும், சிவகிரியில் நான் பேசுவது இதுதான் முதல்முறை என்று நினைக்கின்றேன்.

தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற பைனர்
இந்தப் பகுதியைப்பற்றி இங்கே வரவேற்புரையாற்றிய நல்லசிவன் அவர்கள், வரலாற்று ரீதியாக இரண்டு செய்திகளை மிக அழகாகச் எடுத்துச் சொன்னார்கள். பாராட்டத் தகுந்த அளவில் இருந்தது. இது ஒரு ஜமீன் பகுதி - ஆரம்பத்தில்; இந்தப் பகுதியில் ஜமீன்தாராக இருந்தவர், அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய அளவிற்கு தேவதாசிகள் ஒழிக்கப்படவேண்டும்; தேவதாசிகள் என்கிற பெயரால் நம்முடைய சமுதாயத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி, கடவுளுக்குப் பணியாற்று கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நிலையில், கேவலப்படுத்திய அந்தத் தன்மைகளையெல்லாம் எடுத்து விளக்குவதற்காக, மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார் அவர்கள், தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் என்ற ஒரு நாவலை எழுதினார். அது கற்பனை நாவல் போல் இருந்தாலும், புதினத்திலே, எப்படியெல்லாம் அந்தக் காலத்தில் கொடுமைகள் நடைபெற்றன; பெண்களை எப்படி ஒரு வியாபாரப் பொருள்களாக ஆக்கினார்கள் என்பதையெல்லாம், அந்தக் கொடுமைகளையெல்லாம் போக்கவேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் தீவிரமான முயற்சியை, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் எடுத்த நேரத்தில், அதற்கு ஆதரவாக, அப்பொழுது இந்த நூல் ஒரு ஆதாரபூர்வமான நூலாக வெளிவந்தது, மிகப்பெரிய அளவிற்கு.

சுயமரியாதை இயக்கம் மிகப்பெரிய பணியை செய்தது. அதுபோலவே, அற்புதமான மற்றொரு செய்தியையும், இந்த நகரத்தின் வரலாறு எப்படிப்பட்டது என்பதையும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார் நல்லசிவன்.
மிகப்பெரிய அளவிற்கு, ஜமீன் அளவிற்கு இருந்தாலும், மற்றவர்கள் அதை வியந்து பாராட்டக்கூடிய அளவிற்கு, இந்தப் பகுதி மக்கள் சிறப்பாக இதனைச் செய்திருக்கிறார் என்று நினைக்கும்பொழுது, மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஏனென்றால், அந்தக் காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் ஜமீன் என்றால், மக்களுக்குச் சம்மந்தமில்லாத இடத்தில் இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி, மிகப்பெரிய அளவில், அவர்கள் எல்லாம் நல்ல அளவிற்கு, சமுதாயத்திற்கு வரவேண்டும் என்ற சூழல்.

எனவே, இப்பொழுது குற்றாலம் பயிற்சி முகாமிற்கு வந்ததைப் பயன்படுத்தி, தோழர் குருசாமி அவர்களும், திருப்பதி அவர்களும், கேட்டுக்கொண்டனர் எங்களை. அதுபோல, நம்முடைய மாவட்டத் தோழர்கள் எல்லோரும், அவர்களுடைய முயற்சியில். உங்களை எல்லாம் சந்திக்கும்பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

பேராசிரியர்கள் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்

பகுத்தறிவாளர் கழகம் என்பது, தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப் பெற்ற ஒரு சிறந்த பொது அமைப்பு. பகுத்தறிவாளர் கழகத்தைத் தந்தை பெரியார் அவர்கள், சென்னையில் தொடங்கினார்கள் 1971, 72 ஆம் ஆண்டில். அப்படித் தொடங்கியபொழுது, பெரிய அதிகாரி கள் எல்லாம், அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம்கூட தொடக்கத்தில் இருந்தார்கள்; பேராசிரியர்கள் பொறுப் பாளர்களாக இருந்தார்கள். இப்படி பல தலைமை அதிகாரிகள் எல்லாம் இருந்தார்கள். அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள், அந்தப் பகுத்தறிவாளர் கழகத்தி னுடைய தொடக்க விழாவில், சென்னையில், எப்படித் தொடங்கினார்கள் என்று கேட்கும்பொழுது, மிகவும் வியப்பாக இருக்கும்.
பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்றால், அதுவும் சென்னையில், தலைநகரத்தில் இப்பொழுதுதான்  பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறேன். அப்படி பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறேன் என்று சொன்னால், என்ன அர்த்தம் என்றால், மனிதர்கள் கழகத்தை இப்பொழுதுதான் நான் உருவாக்குகிறேன் என்று அர்த்தம் என்று தந்தை பெரியார் ஆரம்பித்தார்.

பகுத்தறிவாளர் கழகம் என்று சொன்னால், மனிதர்கள் கழகம். அப்படி என்றால், இவ்வளவு நாள் மனிதர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். உருவத்தால் மனிதர்களாக நம்மில் பலர் இருக்கிறார்களே, தவிர, ஆறாவது அறிவாகிய பகுத்தறிவுதான், மனிதனை, மிருகங்களிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடியது.
நாய்க்கு இருக்கின்ற ஆற்றல், மனிதனுக்கு இல்லாத ஆற்றல்!
மனிதன் மிருகங்களைவிட உயர்ந்தவன் என்று சொன்னால், மிருகங்களுக்குச் சில சக்திகள் இருக்கின்றன; சில உணர்வுகள். அது மனிதனுக்குக் கிடையாது. இருந்தாலும், மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான். உதாரணமாக, இங்கே உரையாற்றிய திருப்பதி அவர்கள் நாயைப்பற்றி ஒரு கதையை சொன்னார்.

நாய்க்கு நன்றி உணர்ச்சி மட்டும் முக்கியமல்ல; நாய்க்கு இருக்கின்ற ஆற்றல், மனிதனுக்கு இல்லாத ஆற்றல் என்னவென்று சொன்னால், மோப்ப சக்தியின் மூலமாக குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது நாய்தான். ஒரு கொலை நடக்கிறது, கொள்ளை நடக்கிறது; அதையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டும் என்று சொன்னால், காவல்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் - நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து, அந்த மோப்ப நாய்களை குற்றம் நடைபெற்ற இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். மோப்ப சக்தியின் மூலமாக பலவிடங்களுக்குச் சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கின்ற ஆற்றல், நாய்களுக்கு உண்டு.

அதுமட்டுமல்ல, யார் எதிரிகள்? யார் பழகியவர்கள்? யார் பழகாதவர்கள்? இதனை சிறப்பாகக் கண்டுபிடிக்கக் கூடிய சக்தி நாய்களுக்கு உண்டு.
மனிதர்களைவிட, நாய்தான், கடவுளையும் சேர்த்து கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கிறது

இன்னுங்கேட்டால், கடவுள் சிலைகளே காணாமல் போவது இப்பொழுது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருடு போகிறது; காணாமல் போன கடவுள் சிலைகளை எப்படிக் கொள்ளையடித்தார்கள். கோவில் உள்ளே எப்படி நுழைந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டுமானால், மனிதர்களைவிட, நாய்தான், கடவுளையும் சேர்த்து கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கிறது.
என்றாலும், ஆறறிவு படைத்த மனிதன் அதைவிட மேலானவனாக இருக்கிறான். காரணம் என்னவென்றால், அய்ந்தறிவு பெற்றவைகளுக்கு உணர்வுகள் மேலானதாக இருந்தாலும், மிகப்பெரிய அளவிற்கு மனிதனுக்குத்தான் சிறப்பு உண்டு.

குருவிகள் கூடு கட்டுகின்றன; அவை தனக்கு மட்டும் தான் கூடு கட்டிக் கொள்ளும். மனிதன்தான் வீடு கட்டு கிறான்; அதுவும் தனக்காக மட்டும் கட்டிக் கொள்வதில்லை; அடுத்தவர்களுக்காகவும் கட்டுகிறான். மனிதன் அவன் ஒரு சமுதாயப் பிராணி; கூட்டு வாழ்க்கையை விரும்புகின்றவன் என்று அர்த்தம்.

மிக முக்கிய தேவையானது சுயமரியாதை!

அதுமட்டுமல்ல, மான உணர்ச்சி என்பதை, பகுத்தறிவின்மூலம்தான் மனிதன் பெறுகிறான். பெரியார் ஆரம்பித்த இயக்கத்திற்கு, சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்கள். அந்த சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்த நேரத்தில், அய்யா அவர்கள், மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிக முக்கிய தேவையானது சுயமரியாதையாகும் என்றார்.

உங்களுடைய பணி என்ன என்று தந்தை பெரியார் அவர்களைப் பார்த்து கேட்டபொழுது, 90 ஆம் வயதில் தந்தை பெரியார் தன்னுடைய கருத்தைச் சொன்னார்:

திராவிடச் சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே பணி. உலக மக்களை நான் பார்க்கிறேன்; என்னுடைய மக்களையும் நான் பார்க்கிறேன். உலக மக்களெல்லாம் எவ்வளவோ முன்னேறி போய் விட்டார்கள். ஆனால், நம்முடைய மக்கள் இன்னமும் மூட நம்பிக்கையிலே உழன்று கொண்டிருக்கிறார்கள்; இன்ன மும் மான உணர்ச்சியற்றவர்களாக இருந்து கொண்டிருக் கிறார்கள். இன்னமும் அடிமை வாழ்வை சகிப்பதிலே மட்டுமல்ல,  சுவைப்பதிலேயும் அவர்கள் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவைகளெல்லாம் மாற்றவேண்டாமா? இதற்காகத்தான் நான் என்னால் முடிந்த வரையில், பதவிக்குப் போகாமல், புகழ் வேட்டையில் ஈடுபடாமல், எவ்வளவு அதிகமான கெட்ட பெயர் எனக்கு வந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், துணிந்து விமர்சனங்களை எதிர்கொண்டு நான் செய்கிறேன், அப்படிப்பட்ட தோழர்களையே என்னுடைய தோழர் களாகவும், என்னுடைய அமைப்பிலே உருவாக்குகிறேன்.

ஒரு விஞ்ஞானி விருப்பு வெறுப்பில்லாமல் எப்படி பார்த்து சொல்வாரோ, அதேபோலத்தான் முழுக்க முழுக்க இதைச் செய்கிறார்கள் என்ற அளவில், தெளிவாக இந்தக் கருத்தை எடுத்துச் சொன்னார்.

இன்றைக்கும் அதுதானே தேவைப்படுகிறது.
இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் நாம் ஏமாறுவது இருக்கிறது, மிகப்பெரிய அளவில்.


நம்முடைய நாட்டில், நாள்தோறும் மூட நம்பிக்கைகள், எல்லையற்ற மூட நம்பிக்கைகள் தலைவிரித்தாடுகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது; வாழ்க்கை முறை கூடியிருக்கிறது. ஆனால், இதெல்லாம் எப்படி என்று சிந்திப்பதற்கு நாம் தயாராக இல்லையே!

ஒரு பொது அமைப்பு மாதிரிதான் பகுத்தறிவாளர் கழகம்; திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர் கழகம் ஏன் தேவைப்படுகிறது? பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன? ஊரில் உள்ள ஒரு பொது அமைப்பு மாதிரிதான் பகுத்தறிவாளர் கழகம். திரா விடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் எல்லாம் ஒன்றுதான். அது தேவைதான். அவை எல்லோருக்கும் பாதுகாப்பானது தான். தயவு செய்து அது ஒரு கட்சி என்று ஒதுக்காதீர்கள்.

காவல் நிலையம் என்பது பொதுவானது - ஆட்சிகள் மாறும், கட்சிகள் மாறும்; ஊர் நலத்திற்கு ஒரு காவல் நிலையம் எப்படி தேவை - எந்தக் குற்றமும் நடை பெறாமல் இருப்பதற்கு காவல் நிலையம் தேவை.

அதுபோலவே, மருத்துவமனையும்; அந்த மருத்துவ மனையின் தத்துவம் என்னவென்றால், யார் நோயாளியாக இருந்தாலும், அவர்களுக்குச் சிகிச்சை அளித்து, அவர்கள் நீண்ட காலம் வாழக்கூடிய அளவிற்கு - நோய்நாடி நோய் முதல் நாடக் கூடிய அளவிற்குச் செய்யவேண்டியது மருத்துவமனையின் பொறுப்பு. மருத்துவமனை என்பது எல்லோருக்கும் பொதுவானது; இந்தக் கட்சிக்கு, இன்ன ஜாதிக்கு,  இந்த மதத்திற்கு, இன்னாருக்கு, பணக்காரருக்கு என்பதெல்லாம் கிடையாது.

அதேபோல், தீயணைப்பு நிலையம், அதேபோல், ஒரு பள்ளிக்கூடம் - ஆகவே மேற்சொன்ன அத்தனையும் மக் களுக்குப் பொதுவானது. அதேபோல தான் நண்பர்களே, திராவிடர் கழகமும் மக்களுக்குப் பொதுவானது; பகுத்தறிவாளர் கழகமும் மக்களுக்குப் பொதுவானது. ஆகவே, உங்களுடைய நலனைப் பாதுகாப்பது.

இங்கே வந்ததும், நம்முடைய ராயகிரி தோழர்கள், நல்லசிவன் போன்றவர்கள் எல்லாம் என்னிடம், இந்த ஊரில் கல்லூரி கிடையாது; மகளிர் கல்லூரி ஒன்று அமைப் பதற்கு நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. எங்கள்மேல் வைத்திருக்கின்ற உங்கள் நம்பிக்கைக்கு நான் தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன். அதேநேரத்தில், ஒரு காலத்தில் திராவிடர் கழகத்துக்காரன் என்றால், ஊரைக் கெடுக்கிறவர்கள்; கருப்புச் சட்டைக்காரன் வந்தால், ஊரில் மழை பெய்யாது; அவர்கள் ஊருக்குள் வரவே கூடாது; கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் அவர்கள் என்றெல்லாம் சொன்ன கருத்துகள் போய், பெரியார் சொன்னதுபோல், கடவுளை மற என்று சொன்னதோடு நிறுத்தவில்லை; அடுத்து, மனிதனை நினை என்று சொன்னார். அதுதான் மிக முக்கியம் என்று சொன்னார்.

நாலணாவை வாங்கிய பிறகுதான், கையெழுத்துப் போடுவார்

இங்கே படிப்பதற்காக மிக நீண்ட தூரம் செல்கிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு மகளிர் கல்லூரி இல்லை, அதைத் தொடங்க உதவி செய்யுங்கள்; ராயகிரியில் தொடங்குங்கள் என்று அவர் கேட்டார்; இவையெல்லாவற்றையும் யாரைப் பார்த்து கேட்கிறார்கள், பதவிக்கே போகாதவர்களைப் பார்த்து,  பதவி பக்கமே தலை வைத்துப் படுக்காதவர் களைப் பார்த்து, இருந்தாலும், உங்களுக்கு எங்கள்மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது என்னவென்றால், இந்த மாதிரி பணிகளைச் செய்கின்ற இயக்கம் இந்த இயக்கம். அதன் விளைவுதான், தந்தை பெரியார் அவர்களிடம் கொடுக் கப்பட்ட ஒவ்வொரு காசினையும், முடிச்சுப் போட்டு வைத்திருந்தார். கையெழுத்து வேண்டும் என்று யாராவது கேட்டால், நாலணா இருக்கிறதா? என்று கேட்பார். நாலணாவை வாங்கிய பிறகுதான், ஆட்டோ கிராப் புத்தகத்தில் கையெழுத்துப் போடுவார். இயக்க நூல்களை வாங்கினால், கையெழுத்திற்குப் பணம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அப்படியெல்லாம் வாங்கிய பணம்தான், இன்றைக்கு அறக்கட்டளையாக அவரால் உருவாக்கப் பட்டு, மிகப்பெரிய அளவில், தன்னுடைய சொந்த வருமானம், சொந்த பூர்வீக சொத்து, மக்கள் கொடுத்தது எல்லாவற்றையும் அறக்கட்டளையாக ஆக்கி, அவரும் சரி, அவருக்குப் பிறகு தலைமை தாங்கிய அன்னை மணிய ம்மையார் அவர்களும் சரி, எல்லாம் சேர்ந்து உருவாக்கியது தான், இன்றைக்குப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உருவாகி இருக்கிறது; பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் 35 காலமாக நடைபெற்று வருகிறது; பெரியார் மருந்தியல் கல்லூரி உருவாகியிருக்கிறது. பல ஊர்களில், பல உயர்நிலைப்பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ராயகிரியில்கூட, ஒரு தொழில்நுட்பத் துறையில், அங்கிருந்த இடத்தைப் பயன்படுத்தி, அதை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பெரியார் அறக்கட்டளை நடத்தினால், பொது நலனுக்காக நடத்துவீர்கள்!

நேற்றுகூட கீழப்பாவூரில் நடைபெற்ற கூட்டத்தில், கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞர், ஷாஜகான் என்பவர், பெரியார் உலகத்திற்கு 50 ஆயிரம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு,  அய்யா உங்களிடம் ஒரு வேண்டுகோள் என்று சொல்லிவிட்டு, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மட்டும்தான் பள்ளி, கல்லூரிகள் எல்லாம் வைத்திருக்கிறீர்கள்.

தென்மாவட்டங் களில் சட்டக் கல்லூரி ஒன்றை தொடங்குங்கள்; அதற்கு நாங்கள் உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். நானும் உதவி செய்கிறேன். இதை பெரியார் அறக்கட்டளை நடத்தினால், பொது நலனுக்காக நடத்துவீர்கள்; ஒழுக்கமாக நடத்துவீர்கள்; மிகவும் கண்டிப்பாக நடத்துவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே அதனை நீங்கள் செய்யவேண்டும் என்று சொன்னார்.
நான், இந்தக் கோரிக்கையைப் பற்றி சிந்திக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
இங்கே வந்தால், நம்முடைய தோழர்கள் வரிசையாக மனு கொடுக்கிறார்கள். நான் சட்டமன்ற உறுப்பினரும் அல்ல; நாடாளுமன்ற உறுப்பினரும் கிடையாது; ஆளுங் கட்சியை ஆதரிக்கின்றவர்களும் அல்ல; தேவையில்லாமல் எதிர்க்கின்றவர்களும் கிடையாது. அதேநேரத்தில், தெளிவாக எங்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், சிவகிரி, ராயகிரி போன்ற பகுதிகளில், நீங்கள் இயக்கத்தின்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்குத் தலைவணங்கி நான் நன்றி செலுத்துகிறேன். நிச்சயமாக, நீங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. அது எந்த அளவிற்கு, எந்தக் காலகட்டத்தில், எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகிறபொழுது செய்ய முடியுமோ, அதை நாங்கள் அவசியம் செய்வோம். தேர்தல் வாக்குறுதிபோல நாங்கள் வாக்குறுதிகளை கொடுக்கமாட்டோம்.
உங்களுக்குத் தெரியும்; பல்வேறு சூழ்நிலைகள் ஒத்துப் போகவேண்டும்; நாங்கள் செய்யவேண்டும் என்று முன் வந்தாலும், பல்கலைக் கழகங்கள் ஒத்துழைக்கவேண்டும்; இந்தப் பகுதியில் பல்கலைக் கழகம் என்று சொன்னால், இங்கே உள்ள பல்கலைக் கழகம் எதுவோ, அது ஒத்துழைக்க வேண்டும். அதைவிட, முதலில் அரசாங்கத்தினுடைய ஒத்துழைப்பு வேண்டும். எங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட முறையில் எந்த அரசாங்கம்மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது.

மக்கள் நலம் சார்ந்ததாக இருந்தால், ஆதரிப்போம், வரவேற்போம். மக்கள் நலனுக்கு விரோதமாக இருந்தால், தயவு தாட்சண்யமின்றி கண்டிப்போம், எதிர்ப்போம். இதுதான் எங்களுடைய அணுகுமுறையாக இருக்கக் கூடிய சூழ்நிலை.
அந்த நிலையில், நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை செயல்படுத்த, நாங்கள் கண்டிப்பாக முயற்சி செய்வோம். இந்த ராயகிரி பகுதியில் தேவையான இடம் இருக்கிறது; நீண்ட காலத்திற்கு முன்பே இங்கே கல்லூரி வந்திருக்கவேண்டும்; ஆனால், வர முடியாத அளவிற்கு பல சூழ்நிலைகளை உள்ளூர்காரர்களே உருவாக்கினார் கள். நல்ல காரியங்கள் நடைபெறுவதற்குத் தடையாக இருப் பவர்களும் நம் நாட்டில் ஏராளம் உண்டு. இது உங்களுக்குத் தெரியாததில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நிச்சயமாக இந்தப் பகுதியில், இந்த இயக்கம் வளரக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கின்ற நேரத்தில், உங்களுடைய எண்ணங்களை செயல்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம்.கடவுள் இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார்; அது உண்மைதான். அதனை நாங்கள் மறுப்பதற்குத் தயாராக இல்லை. ஏன்? இல்லை, அதனால் இல்லை என்றோம்.

உலக நாடுகளில், எங்கேயாவது ஜாதி இருக்கிறதா?

நாங்கள் கல்லூரி தொடங்குவது ஒரு பக்கத்தில் இருக் கட்டும்; எல்லா இடங்களிலும், படிக்கவேண்டும், படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது பாருங்கள், இதுவே தந்தை பெரியார் அரும்பாடு பட்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்று அர்த்தம். பெரியாருடைய உழைப்பு. ஏனென்றால், இந்த சமுதாயத்தில் ஜாதியை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்? யாரோடு நாங்கள் போராடுகிறோம்?  தனிப் பட்ட முறையில், எந்தப் பார்ப்பனர் எங்களுக்கு விரோதி? ஜாதி வெறியோ, மதவெறியோ கூடாது; மனித நேயம்தான் இருக்கவேண்டும் என்று பகுத்தறிவாளர்கள், தந்தை பெரியாருடைய தொண்டர்களாகிய நாங்கள் பாடு படுகிறோம் என்றால், என்ன காரணம்? மனிதனுக்குப் பகுத்தறிவு வரவேண்டும் என்றால், கல்வி வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும் என்பதுதானே மிக முக் கியம். அப்படிப் பயன்படுத்திக் கொண்ட உலக நாடுகளில், எங்கேயாவது ஜாதி இருக்கிறதா?
பெரியார் என்ன செய்தார் என்று பல பேர் நினைக் கிறார்கள். பெரியாருடைய கருத்துகளை, அவருடைய தொண்டை, மனிதநேயப் பணிகளை எல்லாம் மறந்து விட்டு, ஏதோ கடவுள் இல்லை என்று  சொன்னவர், சாமி இல்லை என்று சொன்னவர், பார்ப்பனர்களைத் திட்டியவர் என்று இரண்டே வரிகளில் அடக்கிவிடுகிறார்கள், தந்தை பெரியாரை!

பெரியார் அவர்களின் தொண்டு என்பது, 95 ஆண்டு காலம் அவர்கள் வாழ்ந்தார்கள்; தன்னுடைய சொந்த செல்வத்தையெல்லாம் மக்களுக்கே கொடுத்துவிட்டுச் சென்றார்; அதனை அறக்கட்டளையாக ஆக்கினார்.
மக்களுக்கே கொடுத்ததினால்தால், இங்கே இதெல்லாம் செய்யுங்கள்; உங்கள் அமைப்பினால்தான் இவையெல்லாம் நடக்கும் என்று எங்களிடம் கேட்கிறீர்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார்; அது உண்மைதான். அதனை நாங்கள் மறுப்பதற்குத் தயாராக இல்லை. ஏன்? இல்லை, அதனால் இல்லை என்றோம்.

கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது?

ஒருவர் புதிதாக இயக்கத்தில் இணைந்தவர், தந்தை பெரியாரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார், அய்யா, நாம் கடவுள் இல்லை என்று சொல்கிறோமே, திடீரென்று ஒரு நாள் கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு எங்களைப் போன்றவர்களாக இருந்தால் என்ன பதில் சொல்லியிருப்போம், யோவ், இல்லாத ஆள் எப்படிய்யா வருவார்? ஏனய்யா, மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறாய். ஏனய்யா பயப்படுகிறாய் என்று. ஆனால், பெரியார் அய்யா அப்படி பதில் சொல்லவில்லை. அவரைப் போல் பதில் சொல்வதற்கு ஆளே கிடையாது. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் சொல்வார். இன்றைக்கு அவரைப் பற்றி தெரியாத தலைமுறையினருக்காக இதை சொல்கிறேன்.
                                             ---------- தொடரும்  --"விடுதலை” 22-07-2014
சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?

சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
சிவகிரி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி
சிவகிரி, ஜூலை 23- சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா? என்ற கேள்வியை எழுப்பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

சிவகிரியில் 28.6.2014 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

வந்துட்டார் என்றால், இருக்கு என்று சொல்லிட்டுப் போவோம்!
உடனே அவர் கேட்ட கேள்விக்கு, பளிச்சென்று பதில் சொன்னார், வந்துட்டார் என்றால், இருக்கு என்று சொல்லிட்டுப் போவோம்; நமக்கு என்ன நட்டம்; இதுவரையில் வரமாட்டேன் என்கிறானே!  துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்தாலும் வரமாட்டேன் என்கிறானே! என்று தெளிவாகப் பதில் சொன்னார்.
சாமி சிலையை திருடுகிறார்கள்; கர்ப்பக் கிரகத்தில் பெண்ணை பாலியல் வன்முறை செய்கிறார்கள்; காஞ்சிபுரத்தில் தேவநாதன் அர்ச்சகரும் அந்த வேலையைத் தான் செய்தார்.  இவ்வளவு நடந்தும் கடவுள் வரமாட்டேன் என்கிறானே, இருக்கின்னு சொல்றதா? இல்லையென்று சொல்வதா? அதுதானே மிக முக்கியம். அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், மனித வாழ்வு! மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும்; கைகோர்த்துக் கொண்டிருக்கவேண்டும்.
ஜாதியால் பிளவுபட்டிருக்கக்கூடாது! 
ஜாதி முறை உலகத்தில் வேறு எங்காவது உண்டா? சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே, இந்த 67 ஆண்டுகளில் எந்த நாட்டிலாவது சூத்திரன் என்று ஒருவன் இருக்கிறானா? பஞ்சமன் என்று ஒருவன் இருக்கிறானா? தாழ்த்தப் பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று நம் நாட்டில் இருப்பதுபோல, வேறு எந்த நாட்டிலாவது உண்டா? 1944 ஆம் ஆண்டு டிவேலி நிக்கோலஸ் என்பவர் வெளி நாட்டுப் பத்திரிகையின் ஆசிரியரை இந்தியாவிற்கு அனுப்பினார்கள்; அப்பொழுது இந்தியா சுதந்திரமடைய வில்லை. அவர் காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார்; அந்த புத்தகத்தின் தலைப்பு இந்தியாவைப்பற்றி எனது தீர்ப்பு! A Verdic on India அதில் அவர் எழுதுகிறார், நான்  காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்தேன்.
பல பேரை சந்தித்தேன். இந்தியா முழுவதும் நான் சுற்றியிருக்கிறேன். ஆனால், இவ்வளவு நான் சுற்றினாலும், ஒரு இந்தியரைக்கூட பார்க்க முடியவில்லை. அடுத்து சொல்கிறார், இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரையும் நீங்கள் யார்? என்று கேட்டால், நான் ஒரு இந்தியன் என்று பதில் சொன்னவர்கள் ஒருவர்கூட கிடையாது.

நான்  ரெட்டியார்; நான் செட்டியார்; நான் கவுண்டர்; நான் வன்னியர்; நான் சாஸ்திரி; நான் மிஸ்ரா; நான் சட்டோபாத்தியா என்றுதான் சொன்னார்களே தவிர, நான் ஒரு இந்தியன் என்று யாரும் சொல்லவேயில்லை.
இதைத்தான் நான், இந்தியாவில் ஒரு இந்தியனைக்கூட பார்க்கவில்லை என்று சொன்னேன்; நான் இனிமேல்தான் அதுகுறித்து ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றார்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கலாகாது!

ஜாதியால் நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம்; ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம்; ஒன்றாக சேர வாய்ப்பில்லாமல் இருந்தோம். நல்ல வாய்ப்பாக திராவிடர் இயக்கம் வந்ததினால், மக்கள் எல்லாம் ஒன்றாக சேரக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், மற்ற இடங்களில் அந்த வாய்ப்பு கிடையாதே! மற்ற நாடுகளில் ஜாதியே கிடையாதே! சூத்திரர்களுக்கு எதை கொடுத் தாலும், அறிவைக் கொடுக்கலாகாது என்று வைத்திருந்தார்கள்.
 
ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு என்று கேட்டார்கள்; இன்றைக்கு கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊதுகிற அடுப்பே கிடை யாது; திருகுகின்ற அடுப்பைத்தான் கொடுத்திருக்கிறார்.  இன்றைக்கு மக்கள் எல்லாம் வசதியாக இருக்கிறார்கள்.

பெண்கள் மிகப்பெரிய அளவிற்கு படிக்கிறார்கள்; பிளஸ் டூ தேர்விலும் சரி, பத்தாம் வகுப்புத் தேர்விலும் சரி, பெண்கள்தான் முதல் இடத்தைப் பிடிக்கின்றனர்.

சரசுவதி பூஜை ஆண்டுதோறும் கொண்டாடக்கூடிய நாட்டில், கல்விக்குத் தனியாக ஒரு கடவுளை வைத் திருக்கும் நமது நாட்டில், பாட்டி சரசுவதிக்குக் கையொப்ப மிடத் தெரியாது; ஆனால், பேத்தி சரசுவதி டாக்டர் சரசுவதி; வழக்குரைஞர் சரசுவதி; நீதிபதி சரசுவதி; பொறியாளர் சரசுவதி; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., சரசுவதி இவ்வா றெல்லாம் வந்திருக்கின்றார்களே, இது சரசுவதி பூஜை யினால் வந்ததா? தயவு செய்து நடுநிலையாளர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். பெரியார் பாடுபட்டதின் விளைவாகத்தான் பெண்கள் இன்றைக்கு இவ்வளவு படித்திருக்கிறார்கள்; திராவிடர் இயக்கத்தினுடைய சாதனைதான், இத்தனை கல்விப் பெருக்கம். திராவிட இயக்கத்தினுடைய சாதனை மட்டுமல்ல, பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசருடைய அரிய முயற்சியினால்தான், இவ்வளவு பெரிய சமுதாய மாற்றங்கள். இன்னும் படிக்கவேண்டும்; படிக்கவேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் என்ற நிலை வந்துவிட்டது.
ஆனால், ஜாதிய அமைப்பில் என்ன சொல்கிறான்,  சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக் காதே, கல்வியைக் கொடுக்காதே என்று. இந்த இயக்கம் வந்த பிறகுதானே, சூத்திரன் என்றாலே என்ன தெரிந்து கொண்டோம்! பெரியார் கேட்டார், அறிவும், மானமும் உள்ள சமுதாயமாக இந்த சமுதாயத்தை மாற்றிடவேண்டும் என்று தெளிவாகச் சொன்னார்.
நம்மாளிடம் சென்று, ஏங்க, உங்களிடம் பணம் இருக்கிறதா? என்று கேட்டாலும் சரி, உங்களிடம் வீடு, நிலம் இல்லையா? என்று கேட்டாலும் சரி கோபம் வராது. ஆனால், ஏங்க, உங்களுக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்டால்,
சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
உடனே அவர், ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு என்னைப் பார்த்தா இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று அடிப் பதற்குப் பாய்ந்து வருவார்.
மானமும் அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும் என்று சொன்னால், அறிவும், மானமும் நமக்கிருந்திருந்தால், பெரியாருக்கு முன்னால், எவ்வளவு மகாத்மாக்கள், ஜீவாத்மாக்கள், பரமாத்மாக்கள், அவதாரங் கள் எல்லாம் தோன்றினார்களே, அவர்கள் ஏன் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும் என்று சொல்லவில்லை.
சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
சூத்திரன் என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று எழுதி வைத்திருக்கிறானே, இன்னமும் சட்டத்திலே இருக்கிறதே! வழக்குரைஞர்களாக இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்; அவர்கள் தயவு செய்து இந்து சட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு மாற்றங்கள் வந்திருந்தாலும், இன்னமும் ஜாதி என்கிற வார்த்தை இருக்கிறது அல்லவா! அந்த ஜாதிப்படி, சூத்திரன் என்கிற வார்த்தை நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா?

செவ்வாய்க் கோளிற்கே ராக்கெட் விட்டுவிட்டார்கள் 

இன்றைக்கும் நாம் கட்டிய கோவிலுக்குள் செல்ல முடியாதே! வேண்டுமென்றால், குறிப்பிட்ட அளவிற்கு உள்ளே செல்லலாம். தமிழர்கள் நிலம் கொடுத்து; தமிழர்களின் பணத்தினால் கட்டப்பட்ட கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் செல்வதற்கு இன்னமும் உரிமை உண்டா? இதனைக் கேட்பதற்கு வேறு ஆள் உண்டா?
நீங்கள், இன்றைக்குப் பெண்கள் படிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்; பெண்கள் கல்லூரி வேண்டும் என்று சொல்கிறீர்கள். அது வரவேற்கத்தகுந்ததுதான்; பெண் களுக்கு அப்பொழுதுதான் அறிவும், தெளிவும், துணிவும் ஏற்படும்; சொந்தக்காலில் நிற்க முடியும். இன்றைக்கு மூட நம்பிக்கைகள் பரவியிருப்பதால், 45 வயதானாலும் பெண்களுக்குத் திருமணம் நடக்காமல் இருக்கிறதே, ஏனென்று கேட்டால், செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள். ஒரு செவ்வாய் தோஷக்காரர், இன்னொரு செவ்வாய் தோஷக்காரரைத்தான் தேடவேண்டும் என்று கதை கட்டிவிட்டார்கள். ஆனால், இன்றைய நிலை என்ன? அறிவியல் வளர்ந்துவிட்டது; செவ்வாய்க் கோளிற்கே ராக்கெட் விட்டுவிட்டார்கள்; அதுவும் என்றைக்கு அனுப்பினார்கள் என்றால், செவ்வாய்க்கிழமை அன்று. ஈரோட்டு சம்மட்டியால் மட்டுமே, பெரியாருடைய தத்துவங்கள் மட்டுமேதான்

மூட நம்பிக்கைக்கு மூளையில் போட்ட விலங்கு இருக்கிறது பாருங்கள், அது சாதாரண விலங்கல்ல; கையில் போட்ட விலங்கு, அரசியல் விலங்கு; காலில் போட்ட விலங்கு, பொருளாதார விலங்கு. ஆனால், மூளையில் போட்ட விலங்கு இருக்கிறதே, அது பண்பாட்டு படை யெடுப்பினால் போடப்பட்ட விலங்காகும். காலிலோ, கையிலோ விலங்கு போட்டால், அதனை உடைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். ஆனால், கண்ணுக்குத் தெரியாத மூளையில் அல்லவா விலங்கினை போட்டுள் ளான். அதை உடைப்பதற்கு ஒரே ஒரு சம்மட்டிதான்;  ஈரோட்டு சம்மட்டியால் மட்டுமே, பெரியாருடைய தத்துவங்கள் மட்டுமேதான் அந்தத் துணிச்சலை உண்டாக்கும்.
இன்றைக்கு அறிவியல் பரவினாலும், அங்கேயும் மூட நம்பிக்கை நிரவியிருக்கிறது; தயார் செய்கிறவர் என்ன செய்கிறார்; 1000 விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பாடுபட்டு, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்கு அறிக்கை தயார் செய்தால், அதைக் கொண்டு போய், திருப்பதி வெங்கடாசல பதி முன் வைத்து, ஒரு சுற்று சுற்றி, அங்குள்ள அய்யர் அதற்கு ஒரு அபிஷேகம் செய்வதுபோல், ஏதோ செய்த பிறகு, அதனை எடுத்துக்கொண்டு வருகிறார். ஏற்கெனவே விட்ட ராக்கெட்டால் ஒன்றும் ஆகவில்லை.

திருப்பதி வெங்கடாசலபதிக்கு ராக்கெட்டை விடக் கூடிய சக்தி இருந்தால், அவருக்கு ஏன் காவல்துறை யினரின் பாதுகாப்பு? உண்டியலுக்குப் பக்கத்தில் பாதுகாப்பு? உண்டியலிலுள்ள பணத்தை எண்ணும்போது, அறிவியல் சாதனமான கேமராக்கள் ஏன்?

சர்வசக்தி வாய்ந்தவர்; சர்வ வியாபி; அங்கிங்கெனாபடி எங்கும் இருக்கிறவர்தான் கடவுளாச்சே! காவலர் ஒருவரின் முன்பு பிக்பாக்கெட் அடித்தால், உடனே அவர் பிடித்துக் கொள்வாரா? மாட்டாரா? சாதாரண மனிதனுக்கே அந்த ஆற்றல் உள்ளபோது, சர்வ சக்தி ஆற்றல் வாய்ந்த கடவுள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்? செவ்வாய் தோஷம் என்று சொன்ன காலம் போய், இன்றைக்கு செவ்வாய்க் கோளில் மனிதன் குடியேறப் போகிறான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அறிவு வளர்ந்திருக்கக்கூடிய காலகட்டத்தில், இன்னமும், நம்மில் கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக்கூடாது; இன்னமும் நம் சொந்த சகோதரர்கள், நாய், பன்றி, கழுதை போகலாம்; ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் செல்லக்கூடாது என்று வைத்திருந்தார்களே; அதற்காகத்தானே தந்தை பெரியார் போராடினார்; அதுதானே வைக்கம் போராட்டம். காந்தியார்கூட தந்தை பெரியாரை கண்டித்தார்; நீங்கள் ஏன் கேரளாவுக்குச் சென்று ரகளை செய்கிறீர்கள்; தமிழ்நாட்டில் இருப்பவர் ஏன் அங்கே சென்றீர்கள் என்று கடிதம் எழுதினார்.

சத்தியாகிரகம் செய்து அந்த உரிமைக்காகப் போராடுகிறோம்; இது நியாயமா? தவறா?

பெரியார் அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதினார், மகாத்மா ஜி அவர்களே, வைக்கத்திலுள்ள கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நாய், கழுதை, பன்றி செல்கிறது; இவையெல்லாம் சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமை யைப் பெற்றன. நாங்களெல்லாம் சத்தியாகிரகம் செய்து அந்த உரிமைக்காகப் போராடுகிறோம்; இது நியாயமா? தவறா? என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கடிதம் எழுதினார்.

காந்தியார் அதற்குப் பதில் சொல்லவில்லை.

கீழ்ஜாதியைச் சேர்ந்த ஒருவர் வழக்குரைஞரான பிறகுகூட அந்தத் தெருக்களில் நடமாடக் கூடாது என்பதன் விளைவுதானே, அந்த வைக்கம் போராட்டமே வெடித்தது; இதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஜாதி ஒழியவேண்டும் என்பது எதற்காக? எல்லோருக் கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான். இன்றைய தலைமுறையினருக்கு வரலாறு தெரியாமல் இருக்கலாம்; இன்றைக்குக் கல்வி நீரோடை நாடெல்லாம் ஓடியிருக்கிறது; பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், திராவிட  ஆட்சியினால்!

பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 575 கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்தவை. இவை யெல்லாம் தனித்தனியே பல்கலைக் கழகங்கள்; தனித்தனி அமைப்புகள்.

முத்தன் மகன் முனியன்; குப்பன் மகன் சுப்பன் இவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்; அமெரிக்காவில் இருக்கிறார்கள்; எந்த ஊரில் இருக்கிறார்கள் என்றுகூட பெற்றோர்களுக்குத் தெரியாது! ஏதோ ஒரு ஊரில் இருக்கிறான்; ஞாயிற்றுக்கிழமை மட்டும் தொலைபேசியில் தொடர்பு கொள்வான்; நாங்கள் பேசுவோம் என்று சொல்வார்கள்.

ஒடுக்கப்பட்டவனுக்கு முன்னுரிமை கொடு!
அந்த அளவிற்கு இன்று வளர்ந்து வந்தது எப்படி? இதென்ன, மந்திரக்கோலால் வந்ததா? இல்லையே! தொடர்ந்து இந்த இயக்கம் பாடுபட்டதால், எல்லோருக்கும் படிப்பு வேண்டும்; சமூகநீதி வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டும்; இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்டவனுக்கு முன்னுரிமை கொடு; பசியேப்பக்காரனை  பந்தியில் முன்னால் உட்கார வையுங்கள்; புளியேப்பக்காரன் அஜீரணத்தினால் இருக்கிறான் - மேல்ஜாதிக்காரன் அவர்கள் எல்லாம் கொஞ்சம் பின்னால் இருக்கட்டும்; இப்படி இந்த இயக்கம் பாடுபட்டதினால், அருமை நண்பர்களே மிகப்பெரிய அளவிற்கு மாற்றங்கள் இன்றைக்கு வந்திருக்கிறது.

எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், நம்முடைய மக்களுக்கு அறிவும், மானமும் ஏற்பட வேண்டும். எனவே, இந்த சூத்திர இழிவு பட்டம் - ஜாதி ஒழியவேண்டும். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் என்று இருக்க வேண்டும்; பெண்ணடிமை நீங்கவேண்டும்; மனிதர்கள் எல்லோரும் கைகோர்த்துக் கொண்டிருக்கவேண்டும்; இருப்பதை எல்லாருக்கும் பங்கிட்டு வாழவேண்டும்.
இப்படி ஒரு நல்ல கொள்கையைச் சொல்லி, இந்த நாட்டில் அது இடையறாமல் வரவேண்டும் என்று நினைத் தால், ஆதிக்கவாதி சும்மா இருப்பானா? இன்றைக்குப் போராட்டம் அதற்காகத்தானே! இட ஒதுக்கீடு கூடாது! இட ஒதுக்கீடு கூடாது என்று இன்னமும் போராடிக் கொண்டிரு க்கிறார்கள். இன்னமும் நீதித் துறையில் பார்த்தீர்களே யானால், இந்த ஊரில் நிறைய வழக்குரைஞர்கள் இருக் கிறீர்கள்; நீதிமன்றம் இருக்கின்ற இடம்; உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார்கள்; 31 நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதிகூட கிடையாது. தாழ்த்தப்பட்ட சமுதாயம் இந்தியா முழுவதும் 24 சதவிகிதம் இருக் கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் 75 சதவிகிதம் இருக்கிறார்கள்; சிறுபான்மையர்களான கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து 90 சதவிகிதம் உள்ளனர்.  உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார் கள்; ஆனால் 31 நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட கிடையாது.

அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நன்றி அறிவிப்பு விழா!

நீண்ட காலத்திற்கு முன்பு, பெரியார் அவர்கள் பாடு பட்டு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், 1971 காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்; தந்தை பெரியாரை அழைத்து, நன்றி அறிவிப்பு விழா போல் ஒரு விருந்து கொடுத்தார்கள்;


அய்யா உங்கள் உழைப்பினால்தான் நாங்கள் இவ்வளவு பேர் இந்தளவிற்கு வந்திருக்கிறோம்; அதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம் என்று சொன்னார்கள்.

கலைஞருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும்

உடனே அய்யா சொன்னார், உங்கள் அறிவு, ஆற்றல், திறமையினால், வந்திருக்கிறீர்கள்; என்னுடைய கொள்கைக் காக நான் பாடுபடுகிறேன் என்று சொல்லிவிட்டு, நீங்கள் எல்லாம் இதை சொல்கிறீர்கள். என்னுடைய கவலை என்னவென்றால், நூறு வருஷத்தைத் தாண்டிய (அன்றைய காலகட்டத்தில்) சென்னை உயர்நீதிமன்றத்தில், தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், நீதிபதியாக வர முடியவில்லை. எவ்வளவு பேர் படித்து வழக்குரைஞர்களாக இருக்கிறார்கள். ஏன் வர முடியவில்லை. இப்பொழுது தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. ஆகவே, கலைஞருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும் என்று சொல்கிறார். என்னை அழைத்து, விடுதலையில் இதுபற்றி தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார்.

உடனே நான் மறுநாளே அதுபற்றி தலையங்கம் எழுதினேன்.

12 ஆவது இடத்தில் இருந்த, வரதராஜன்
அடுத்த நாள் தாமதிக்கவில்லை கலைஞர் அவர்கள், சட்ட அமைச்சர் மாதவனை அழைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில், மாவட்ட நீதிபதிகளாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டார். 12 ஆவது இடத்தில் இருந்தார், வரதராஜன் என்பவர். அவருக்குச் சலுகை கொடுத்து, வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இல்லை, அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

வரதராஜன் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் நீதிபதி யாக இருந்தார். அவருக்கு உத்தரவு வந்தது; நீங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டீர்கள் என்று.
அவருக்கு ஆச்சரியம்! நான் 12 ஆவது இடத்தில் இருக்கிறேனே, வரவே வராது என்று நினைத்திருந்தேனே; உடனே வந்துவிட்டதே என்று. அது பெரியார் சொல்லி உடனே நடைபெற்றது.

திருவில்லிபுத்தூர் வீராசாமி அவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக வரவேண்டும் என்பதில், அவருடைய பங்கும் இருந்தது; பிற்படுத்தப்பட்டவர்களும் ஒத்துழைத்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வரதராஜன் வந்தார். அதற்காக கலைஞர்மேல் பல பேருக்கு ஆத்திரம். தி.மு.க.வின்மீதும் ஆத்திரம், அது இன்றைய காலகட்டம் வரையில் நீடிக்கிறது.

ஏனென்றால், அதுவரையில் வழக்குரைஞர்களாக பார்ப் பனர்கள்தான் இருப்பார்கள்; நம்மாள் வழக்குரைஞராக வர முடியாது. நீதிபதிகளும் பார்ப்பனர்களாகத்தான் இருப் பார்கள்.
அங்கே நீதிபதியாக அய்யர் உட்கார்ந்திருக்கும்போது, அவரைப் பார்த்து, ஓ! மை லாட்! (கடவுளுக்கு சமமானவரே) என்று சொல்வார்கள்.
                 ---------- தொடரும்  --"விடுதலை” 23-07-2014
சூத்திரன் என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று எழுதி வைத்திருக்கிறானே, இன்னமும் சட்டத்திலே இருக்கிறதே! வழக்குரைஞர்களாக இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்; அவர்கள் தயவு செய்து இந்து சட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு மாற்றங்கள் வந்திருந்தாலும், இன்னமும் ஜாதி என்கிற வார்த்தை இருக்கிறது அல்லவா! அந்த ஜாதிப்படி, சூத்திரன் என்கிற வார்த்தை நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா?

Read more: http://viduthalai.in/page-4/84550.html#ixzz38JXYtG00

மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பே பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் 

மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பே பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும்
சிவகிரி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை
சிவகிரி, ஜூலை 24- மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பே பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.


சிவகிரியில் 28.6.2014 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


ஓ மை சூத்திரனே! என்று சொல்ல முடியுமா?


சூத்திரனும், பஞ்சமனும் நீதிபதியாக உட்கார்ந்தவுடன், அய்யர் வழக்குரைஞர், ஓ! மை லாட்! (கடவுளுக்கு சமமானவரே) என்றுதானே சொல்லவேண்டும்; அதற்குப் பதில் ஓ மை பறையனே! என்றோ! ஓ மை சூத்திரனே! என்று சொல்ல முடியுமா? அப்படி சொன்னால்தான் விட்டு விடுவார்களா?


அங்கே போய், ஓ! மை லாட்! என்று சொல்லிக் கொண்டே, மனதில் என்ன நினைக்கிறான், பெரியார் ஒழிக! கருணாநிதி ஒழிக, தி.மு.க. ஒழிக! தி.க. ஒழிக! நாசமாக போக, நம்மை இப்படி சொல்ல வைத்துவிட்டார்களே என்று!


அன்றைக்குத் தொடங்கிய கோபம், ஆத்திரம் இன்று வரைக்கும் நீடிக்கிறது.


21 ஆம் நூற்றாண்டில், 31 பேர் நீதிபதிகளாக இருக்கின்ற உச்சநீதிமன்றத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவர்கூட நீதிபதியாக இல்லையே! பிற்படுத் தப்பட்ட சமுதாயத்திலிருந்து 80 விழுக்காடு இருக்கின்ற மக்கள்; வழக்குரைஞர்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை; நல்ல ஆற்றல் உள்ளவர்கள்; திறமை உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; நாம் போராடியதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான நீதிபதிகள், அனுபவம் பெற்ற நீதிபதிகள் இருக்கின்றனர். டில்லியில் அவாள்தானே இருக்கிறார்கள்; இதனைக் கேட்பதற்கு ஆளில்லையே! இந்த மாதிரி இயக்கம்தானே அதற்காகப் போராடக்கூடியது! நாங்கள் என்ன எங்களுடைய அண்ணன் தம்பிகள் வரவேண்டும் என்று விரும்புகிறோமா? எங்கள் குடும்பத்திலிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறோமா? சொந்த ஆசாபாசங்கள் உண்டா? அருள்கூர்ந்து இதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


பந்தியில் பரிமாறும்போது எல்லோருக்கும் பரிமாற வேண்டும் அல்லவா? ஒருத்தனுக்கு இலையை மட்டும் போட்டுவிட்டு, எதையும் பரிமாறாமல் விட்டுவிட்டு, இன்னொருவன் வயிறு முட்ட முட்ட அவனே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன நியாயம்?


இந்தப் புரட்சியை செய்தவர் எங்கள் நாட்டின் பெரியார்; எங்கள் நாட்டின் திராவிட இயக்கம்!


வரதராஜன் அவர்கள் உயர்நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்; அதேபோல், ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்.


மண்டல் கமிஷன் அறிக்கைக்காக 9 பேர் அடங்கிய நீதிபதிகள் உட்கார்ந்திருந்தபொழுது, ரத்தினவேல்பாண்டி யன் அவர்கள் சொன்னார்: நான் இங்கே உட்கார்ந் திருக்கிறேன் என்றால், முற்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த உங்களுக்கெல்லாம் ஜாதிக் கொடுமை தெரியாது; உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்; சகோதரர் களே, நான் எந்த சமுதாயம் என்று என்னை ஆக்கியிருந் தார்கள் தெரியுமா? ஒரு குற்றமும் செய்யாத எங்களை குற்றப்பரம்பரை என்று ஆக்கி வைத்திருந்தார்கள் ஒரு காலத்தில். காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொன்னார்கள். அதையெல்லாவற்றை யும் திராவிட இயக்கம் ஒழித்ததினால்தான், நான் உங்கள் பக்கத்தில் நீதிபதியாக உட்கார்ந்ததோடு மட்டுமல்ல, காவல் நிலைய ஆய்வாளரையோ, காவல்துறை அதிகாரியையோ கூப்பிட்டு, நான் விசாரிக்கின்ற அதிகாரத்தைப் பெற்றிருக்கிறேன். இதுதான் ஒரு துளி ரத்தம் சிந்தாமல், இந்தப் புரட்சியை செய்தவர் எங்கள் நாட்டின் பெரியார்; எங்கள் நாட்டின் திராவிட இயக்கம் என்று சொன்னார்.


அப்படிப்பட்ட ஒரு அற்புதமான ஒரு சமுதாய மாற்றத்தை இந்த இயக்கம் செய்திருக்கிறது. இன்னமும் போராடவேண்டியது இருக்கிறது.
உதாரணத்திற்கு, இன்றைக்கு 31 பேர் நீதிபதிகளாக உள்ள உச்சநீதிமன்றத்தில், தாழ்த்தப்பட்ட நீதிபதிகளே கிடையாது. நேற்றுவரையில், ஒரே ஒரு சதாசிவம், தமிழ்நாட்டிலிருந்து சென்றார்; அவரும் குறுகிய காலத்திலேயே ஓய்வு பெற்றுவிட்டார்.  மறுபடியும் வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பு, வரதராஜன், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ரத்தினவேல்பாண்டியன், ஒரு சதாசிவம், ஆந்திராவிலிருந்து ஒரு ராமசாமி அவ்வளவு தான். வேறு யாரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து நீதிபதிகளாக வரவில்லை.


அப்புறம் என்ன சுதந்திரம்? சுதந்திரம் என்றால், எல் லோருக்கும் எல்லாமும் இருக்கவேண்டாமா? இன்னா ருக்கு இதுதான் என்று சொன்னால் என்ன அர்த்தம்? கேட்டால், தலையெழுத்து என்கிறான்! அப்பொழுதுதான் பெரியார் கேட்டார், எவன்டா உன் தலையில் எழுதினவன்? என்று!


இதையே காமராசர் கேட்டார், எவன் உன் தலையில் எழுதினவன்? என்று!
தலையில் எழுதுகின்றவரையில் தலையைக் காட்டிக் கொண்டிருப்பானா? இதனை நம்ப முடியுமா?


குன்றக்குடி அடிகளார் கேட்டார், தலையில் எழுதி வைத்துவிட்டான்; எழுதி வைத்துவிட்டான் என்று சொல்கிறார்களே, அதை நாமும் நம்புகின்றோமே, சாதாரண முடி திருத்துகின்ற கடைக்குத் தமிழன் சென்றால், முடி வெட்டுகிறவர், அரை மணிநேரத்திலேயே முடியை வெட்டுகிறார்; அந்த அரை மணிநேரத்திலேயே நான்கு, அய்ந்து முறை தலையைத் திருப்புகின்ற தமிழன், தலையில் எழுதுகின்றவரையில் தலையைக் காட்டிக் கொண்டிருப் பானா? இதனை நம்ப முடியுமா? என்று மிக அழகாகக் கேட்டார்.


அதனால்தான், மானமும், அறிவும் உள்ள சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். மானமும்  வரவேண்டும்; அறிவும் வரவேண்டும் அதுதான் மிக முக்கியம்.


உலகத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் கணினி மீது எச்சிலை துப்புங்கள்; அது என்ன செய்யும் என்று வி.பி. சிங் கேட்டாரே, அது என்ன கோபப்படுமா? என்று. அதுவே, ஒரு ஆள்மீது எச்சிலை துப்பிப் பாருங்கள், உடனே ஓங்கி ஒரு அறை விடுவான்; இதனை சொன்னது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்.


மழை பெய்யவில்லை என்று யாகங்களை நடத்துகிறார்கள்!

இப்பொழுது பார்த்தீர்களேயானால், யானை ஊருக்குள் புகுந்துவிட்டது, ஊருக்குள் புகுந்துவிட்டது என்று சொல்கிறார்கள்; காரணம் என்ன? யானைகள் வசித்த இடத்தை எல்லாம் மனிதர்கள் அழித்துவிட்டார்கள்; வனத்தை எல்லாம் அழித்துவிட்டார்கள்; பிறகு மனிதர்கள் வசிக்கின்ற இடத்திற்கு யானை வரத்தானே செய்யும். காடுகளை அழித்தார்கள் மரங்களை வெட்டி; மரங்களை வெட்டி விட்டால், மழை எப்படி பெய்யும்! மழை பெய்ய வில்லை என்று யாகங்களை நடத்துகிறார்கள்; மரத்தை வெட்டியதால், மழை இல்லை என்பதுபற்றி சிந்திப்பதில்லை. ஆகவே, அறிவுபூர்வமான சிந்தனை, பகுத்தறிவு சிந்தனை என்பது அறிவியல் ரீதியாக மக்களுக்குச் சொல்லப்பட வேண்டிய கருத்துகள். அதனைச் சொல்வதுதான் இந்த இயக்கம்.


எனவே, இந்த இயக்கத்தினுடைய வாழ்வு என்பது இருக் கிறதே, ஜாதி இருக்கின்ற வரையில், மனித சமுதாயத்தில் ஒற்றுமை இருக்க முடியாது.
மதவெறியை உண்டாக்கவேண்டும் என்று விரும்பு கிறார்கள்; அண்ணன் தம்பிகளாக இருக்கவேண்டிய வர்கள், கைகோர்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக அல்லாமல், இந்த மதத்தை வெறுக்கவேண்டும்; அடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஜாதி வெறிக்கு இடமில்லாமல், மதவெறிக்கு இடமில்லாமல் நாம் நடக்கவேண்டும்.


இன்றைக்கு ஒரு நல்ல திருப்பமாக, ஜாதிக்கோ, மதத் திற்கோ ஒரு அடிப்படையான, ஒரு விஞ்ஞானபூர்வமான அடிப்படை கிடையாது.


அய்யங்கார் ரத்தம் என்றா சொல்வார்?

சாதாரணமாக விபத்துகள் நடக்காத நாளே கிடையாது; நெடுஞ்சாலையில் ஒரு விபத்து நடக்கிறது; அந்த விபத்தில் அடிபட்டவர் ஒரு அய்யங்கார்; அருகிலுள்ள ஒரு மருத்துவ மனையில் அட்மிட் செய்கிறார்கள்; அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்; அதற்காக ரத்தம் தேவைப்படுகிறது என்று மருத்துவர் சொல்கிறார். உடனே அந்த அய்யங்காரிடம் உங்கள் ரத்த குரூப் என்ன என்று கேட்டால், அய்யங்கார் ரத்தம் என்றா சொல்வார்? ஏ-1 பாசிட்டிவ் ரத்தம் என்று சொல்கிறார் அந்த அய்யங்கார்.

உடனே மருத்துவமனையிலிருந்து விளம்பரம் கொடுக்கிறார்கள், ஏ-1 பாசிட்டிவ் ரத்தம் தேவை என்று.

அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு, ஒரு இளைஞர் வருகிறார்; என்னுடைய ரத்தம் ஏ-1 பாசிட்டிவ்தான்; நான் இதற்குமுன் பலமுறை ரத்தம் கொடுத்திருக்கிறேன்; இது ஏழாவது முறையாகக் கொடுக்க வந்துள்ளேன் என்று சொல்கிறார்.

அய்யங்கார் அவர்கள் மருத்துவரிடம் கேட்கிறார், டாக்டர், உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொன்னீர்களே, ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இல்லை, உங்களிடம் அனுமதி கேட்கவேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம் என்று மருத்துவர் சொன்னார்.

எதற்காக அனுமதி? என்று அய்யங்கார் கேட்கிறார்.

மருத்துவரோ, ரத்தம் கொடுக்க வந்திருப்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்; ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்; அவர்களைத் தொட்டாலே தீட்டு என்று சொல்வீர்களே; தலையிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொள்வீர்களே! உங்கள் அனுமதியில்லாமல், அவருடைய ரத்தத்தை உங்கள் உடம்பில் ஏற்றலாமா? அதற்காக உங்களிடம் அனுமதி கேட்க வந்தோம் என்று மருத்துவர் சொல்கிறார்.


நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று!
  அய்யங்கார் என்ன, இல்லை இல்லை, நான் செத்தாலும் பரவாயில்லை என்றா சொல்வார்?


உடனே அய்யங்கார் மருத்துவரின் கையைப் பிடித்துக் கொண்டு, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று! இப்பொழுதெல்லாம் இதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்? என்று சொல்வார்.
ஏனென்றால், அவர் பிழைக்கவேண்டும் பாருங்கள்; அதனால் அப்படித்தான் சொல்வார்.


ஜாதி எங்கே சென்றது? ஜாதிக்கு என்ன ஆதாரம்? குரூப் ரத்தம் என்றால், அதற்கு தனியே அறிவியல் ரீதியாக இருக்கிறது. ஜாதிக்கு அதுபோல் அறிவியல் ரீதி கிடையாது.


இப்பொழுது ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால், உறுப்புக் கொடையளிக்கிறார்கள். இந்துவினுடைய உறுப்பு களை இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கிறார்கள்.  இஸ்லாமி யருடைய உறுப்புகளை இந்துக்களுக்குக் கொடுக்கிறார்கள். அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊரில் உள்ளவர்களுக்கு உறுப்புக் கொடை அளிக்கப்படுகிறது. நல்ல ஒரு முன்னேற்றம்தான்.
கவுரவக் கொலை என்று சொல்கிறார்களே! இன்னமும் நம்மாள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக் கிறார்கள்; நம் ஜாதிக்குள்ளே ஏன் காதலை செய்யவில்லை; கத்தியை எடுத்து வெட்டிக் கொள்கிறார்களே! கவுரவக் கொலை என்று சொல்கிறார்களே! இதைவிட ஒரு காட்டுமிராண்டித்தனம், இதைவிட ஒரு சமுதாயத்தில் கொடுமையான ஒரு சூழல் வேறு இருக்குமா என்பதை எண்ணிப்பாருங்கள்.


எனவே, இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்; இன்னமும் பகுத்தறிவாளர் கழகம் தேவைப்படுகிறது; இன்னமும் திராவிடர் கழகத்தினுடைய பிரச்சாரம் தேவைப்படுகிறது. எப்படி மருத்துவமனைகள் என்றைக்கும் தேவையோ! எப்படி காவல் நிலையங்கள் என்றைக்கும் தேவையோ! எப்படி பள்ளிக்கூடங்கள் என்றைக்கும் தேவையோ! அதுபோல், சமுதாயத்தில் பகுத்தறிவாளர் கழகம், பள்ளிக்கூடம்போல, திராவிடர் இயக்கம் காவல் நிலையம் போல ஒரு பொது அமைப்பாகும்!


எனவே, இந்த பொது அமைப்பை நீங்கள் பலப்படுத்தி, புதிதாக இளைஞர்கள், ராஜபாளையத்தைச் சேர்ந்த இங்கே வந்து இயக்கத்தில் இணைந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.


ராஜபாளையத்தில் ஒரு காலத்தில் மாலை 4 மணிக்கு மேல் பெரியார் கூட்டத்தை கேட்டார்கள் என்பதற்காக, திருக்கை மீன் வாலால் அடித்த ஊர். அப்படிப்பட்ட அந்த ஊரிலிருந்து இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள்.
நீங்கள் கொள்கை ரீதியாக வாழுங்கள்; சமுதாயத் திற்குப் பாடுபடுங்கள்; ஒவ்வொருவரும் தொண்டறத்தோடு வாழுங்கள்; தவறான பழக்கவழக்கம் இருக்கக்கூடாது; தேவையற்ற செலவுகள் வேண்டாம்; ஆனால், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று சின்னதோர் கடுகு உள்ளத்தோடு இருக்காதீர்கள். தொல்லுலக மக்களெல்லாம் நம்முடைய மக்கள் என்று கருதி, பிறருக்குத் தொண்டு செய்யுங்கள்! பெரியாருடைய தொண்டறம் என்பதிருக் கிறதே, அது மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.


பெரியாருடைய சிந்தனைகள் உலகம் முழுவதும்!

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மிக அழகாகச் சொன்னார்,

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில்  சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார் பார்! - என்று சொன்னார்.


இன்றைக்குப் பெரியாருடைய சிந்தனைகள் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்துவிட்டன. எனவேதான், நீங்கள் பெரிய அளவிற்கு ஆதரவு கொடுப்பதற்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நிச்சயமாக, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உங்கள் பகுதிகளில் கல்லூரிகள் வருவதற்குரிய நல்ல வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் முயற்சிகளை எடுப்போம் என்று கூறி, சிறப்பாக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும், இறுதி வரை சிறப்பாகக் கேட்ட உங்களுக்கும், நன்றியைத் தெரிவித்து, முடிந்தவரையில், புத்தகங்களை வாங்கிச் செல்லுங்கள்; அதன்மூலமாக நீங்கள் புது வாழ்வைப் பெறுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.


மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பு

காவல்துறையினுடைய அதிகாரிகளுக்கு எங்கள் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் நினைவுபடுத்து கிறேன், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஒரு பொது அமைப்பு. மக்கள் நலன் சார்ந்த அமைப்பு; மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பு; இதற்கு மகத்தான ஆதரவைக் கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவாளர் கழகம்!! வளர்க பகுத்தறிவு!!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
                  --------------------- ---------- தொடரும்  --"விடுதலை” 24-07-2014
Read more: http://viduthalai.in/page-4/84589.html#ixzz38PROnF6K