Search This Blog

30.4.14

மழை பொழிய வருண ஜெபமாம்?ஏதாவது பலன் ஏற்பட்டதா?

மழை பொழிய வருண ஜெபமாம்!

நாட்டில் வறட்சி தாண்டவமாடுகிறது; குடிநீர்ப் பிரச்சினை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது ஆண்டின் தொடர்ச்சியாக, குறுவை சாகுபடி இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் கிடையாது என்ற நிலைதான் இன்றுவரை!

இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் மழை பொழியும்; தண்ணீர்ப் பஞ்சம் தீரும் என்று விவரம் தெரிந்த எவரும் நம்பமாட்டார்கள்.

ஆனால், தமிழ்நாடு அரசு - அதன் இந்து அறநிலையத் துறைக்கு அசாத்திய நம்பிக்கை என்ன தெரியுமா? யாகம் செய்தால், வருண பகவானைப் பிரார்த்தித்தால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற நம்புகிறது. அந்த அடிப்படையில்தான் எல்லாக் கோவில்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை விட்டுள்ளது. மழை வேண்டி வருண பூஜை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் ஆங்காங்கே யாகங்களும், வருண ஜெபங்களும் நடந்துகொண்டுள்ளன.

இதற்கு முன்பேகூட இத்தகைய அறிவுக்குப் புறம்பான வேலையில் ஈடுபட்டதுண்டு. விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை என்ற நிலைப்பாடுதான்.

இதே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மழை வேண்டி புழல் ஏரிக்கரையில் உட்கார்ந்துகொண்டு குன்னக்குடி வைத்திய நாதய்யர்வாள் அமிர்தவர்ஷினி ராகத்தை வாசிக்க வில்லையா? ஏதாவது பலன் ஏற்பட்டதா?

அவர்கள் சொல்லுவதை விவாதத்துக்காகவே ஏற்றுக்கொள்வோம். மழைக்குக் காரணம் வருண பகவான் என்கிறார்களே, அந்தக் கடவுளுக்கு நாட்டு மக்கள்மீது அக்கறை இல்லையா? மழை இல்லாமல் வறட்சி நிலை தாண்டவமாடுகிறது. விவசாயம் பாதிக்கப்பட்டுவிட்டது. குடிக்கத் தண்ணீரின்றி மக்கள், விலங்குகள் பரிதவிக்கும் நிலை! இந்த நிலையில், இம்மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற சாதாரணப் புத்திகூட இந்த வருண பகவான் என்கிற கடவுளுக்கு இல்லையா?

கடவுளைக் கருணையே உருவானவன் என்று சொல்லுகிறார்களே - அது உண்மையானால், காலா காலத்தில் மழையைக் கொடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது பொறுப்புள்ள ஒரு கடவுளின் கடமை யல்லவா!
ஜெபம் செய்தால்தான் கடவுள் கருணை புரிவார் என்றால், அந்தக் கடவுளைவிடப் பொறுப்பற்றவன் வேறு யார்?

மழை எப்படி பொழிகிறது? மழை பொழிவதற்கு என்னென்ன கூறுகள் அவசியம் என்பது மூன்றாம் வகுப்பு மாணவனைக் கேட்டால்கூடக் கூறிவிடுவான்.

ஆனால், மெத்த படித்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு இந்த அடிப்படை அரிச்சுவடிகூடத் தெரியாதது வெட்கக்கேடானதாகும்.
தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு வருண ஜெபம் உதவும் என்றால், மின்பற்றாக்குறைக்கு என்ன பரிகாரம்? நாட்டில் நிலவும் பற்றாக்குறைகளுக்கு எல்லாம் ஆன்மீகத்தில் தீர்வு இருப்பது உண்மையானால், நாட்டில் அரசுகளே கூடத் தேவையில்லையே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; சீர்திருத்த உணர்வைத் தூண்டவேண்டும்; இது ஒவ் வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறதே (51ஏ(எச்)).

இந்த நிலையில், அரசுத் துறை அதிகாரிகள் விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக பச்சையான மூடநம்பிக்கையின் அடிப்படையில், வருணஜபம் செய்யுமாறு சுற்றறிக்கை விடுவது சரியானதுதானா? அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட ஓர் அரசு துறைக்கு அதிகாரம் உண்டா?

1988 இல் வடநாட்டில் மதுராவில் விஞ்ஞானிகள் ஒரு சோதனையை மேற்கொண்டனர். மந்திரத்தால் மழை பொழிவிக்கலாம் என்று சொன்னார் 86 வயதுள்ள சர்மா ஒருவர். அவருக்குத் தேவையான அத்தனை உதவி களையும் அரசு செய்து கொடுத்தது.

சர்மாவும் வேத மந்திரங்களை மூச்சு முட்ட ஓதித் தீர்த்தார்; விளைவு ஒரு சொட்டு மழைகூட இல்லை. இதனை புதுடில்லியிலிருந்து வெளிவரும் நேச்சர் (Nature, Vol.333 June 1988)  ஏடு வெளியிட்டு வருண ஜெபத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டதே!

இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்பது மூட நம்பிக்கையின் மொத்த உருவம்! முதலமைச்சரே, யாகம், யோகம் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்.

முதலமைச்சரே இந்த நிலையில் இருந்தால், அரசு அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்? மேலும் நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்? படிப்பும், பட்டமும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்சாக இருக்கும்போது, அவர்களிடம் விஞ்ஞான மனப்பான் மையை எதிர்பார்க்க முடியுமா?

விஞ்ஞானம் படிப்பது என்பது வேறு - விஞ்ஞான மனப்பான்மை என்பது வேறு; இது ஒரு வெட்கக்கேடான - தலைகுனியும் நிலையே!

                         -------------------------"விடுதலை” தலையங்கம் 30-04-2014
Read more: http://viduthalai.in/home/71-2010-12-25-09-37-00/79503-2014-04-30-09-45-31.html#ixzz30MlQW6Gi

ஜாதி - மதவெறியாளர்களுக்கு எதிராக சிந்தனையூட்டும் நாள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 124-ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

ஜாதி - மதவெறியாளர்களுக்கு எதிராக சிந்தனையூட்டும் நாள் தமிழர் தலைவர் பேட்டி
 

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி

 

பாரதிதாசன் படத்திற்கு குமரி ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 29- புரட் சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

புரட்சிக்கவிஞர் பாவேந் தர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) சென்னை காமராசர் கடற் கரை சாலையிலுள்ள புரட் சிக்கவிஞர் சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் கி.வீர மணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவி யும் மரியாதை செய்தார்.

புரட்சிக்கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்தவுடன் தமிழர் தலைவர் செய்தியா ளர்களிடம் கூறும்போது:-

புரட்சிக் கவிஞர் அவர்க ளுடைய பிறந்த நாளான இன்று (29.4.2014) ஒரு புதுமை நாள் என்பது மட்டு மல்ல. இன்றைக்கு நாட்டை மதவெறியும், ஜாதி வெறி யும் கப்பிக்கொண்டு இருண்ட எதிர்காலம் சூழ்ந்து விடுமோ என்று அஞ்சுகின்ற இந்தக் காலத்தில் புரட்சிக் கவிஞருடைய கருத்துக்கள் மிகவும் தேவை.

தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள் கையை ஒரு சூரணமாக்கி இலக்கியத்திலே தந்த பெரு மைக்குரியவர் புரட்சிக்கவி ஞர். இருட்டறையில் உள்ள தடா உலகம் என்று அன் றைக்குக் கேட்டார், அதை விரட்டுவது பகுத்தறிவே என்று சொன்னார். அப்படிப் பட்ட அந்த பகுத்தறிவை வலியுறுத்திப் பாடிய கார ணத்தால் உலகக் கவிஞராக உயர்ந்திருக்கக்கூடிய அவருக்கு உரிய விளம்பரம் தரப்படாவிட்டாலும்கூட, என்றென்றைக்கும் அவரு டைய இடத்தை எவரும் பறிக்க முடியாது.

புரட்சிக் கவிஞர் அவர்கள் மிகப் பெரிய சமுதாயப்புரட்சியை உருவாக்கித் தனித்த ஒரு தன் மையோடு மதவெறியை மாய்த்து மனித நேயத்தை மானுடத்தைக் காப்பாற்று வதற்காக மிகப்பெரிய அள விலே மானிடப்பரப்பையே தன்னுடைய அளவு கோலாக, தன்னுடைய நாடாக, தன் னுடைய கனவாக அமைத் துக் கொண்டவர்கள், அந்த வகையில் மானுடத்திற்கு மிகப்பெரிய மன்பதை உல கத்திற்கு அரிய கருத்துக்க ளைச் சொன்ன அந்தக் கவி ஞருடைய பிறந்த நாள் என் பது சமுதாயத்தினுடைய எழுச்சி மிகுந்த நாள். அவர் வாழ்க! அவர் புகழ் வாழ்க இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.
இன்று  - ஏப்ரல் 29- புதுவை தந்த புரட்சிப் பாவலர், ஒப்புவமையற்ற பெரியாரின், ஒப்புவமை யற்ற புரட்சிக் கவிஞரின்  124ஆவது பிறந்த நாள்! இந்நாள் (1891).

தனது நன்றி உணர் வைக் காட்டுவதற்காக  பாரதிதாசன் என்று  தன்னை அடக்கத்துடன் அழைத்துக் கொண்ட கவிஞர் கனக சுப்புரத்தினம் - ஓர் புரட்சி இலக்கியத்தில் எவரும் எட்ட முடியாத பெரும் இமயத்தின் உச்சியிலும் உச்சி!
சுயமரியாதை கொள் தோழா, என்று அறிவுறுத் தியதால் ஆரிய ஊடகத்தாலும், இன உணர்வு, மொழி உணர்வற்ற நமது ஏடுகளாலும் இன்னும் இருட்டடிக்கப்பட்டாலும் இணையிலாச் சூரியனைப் போன்று பகுத்தறிவு உலகத்திற்கு ஒளியூட்டும் ஓர் ஒப்புவமை இல்லா உயர் கவிஞர் அவர்.
விளம்பர சடகோபம் எதிர்பார்த்து எவருக்கும் ஆழ்வாராகிட துடிப்போர் உண்டு; ஆனால், தன் னேரிலா தன்மானப் பெருங் கவியாக, தனித்தே நின்று, தகத்தகாய ஒளியுடன் இன்றும் என்றும் வாழுபவர் நம் புரட்சிக் கவிஞர்!
பண்பாட்டுப் படையெடுப்புதான் நம் திராவிடர் இனத்தை வீழ்த்தியது என்பதை தனது சொடுக்கு வரிக் கவிதைகளால் மிடுக்குடன் எடுத்துரைக்கத் தயங்காதவர் நமது போற்றதலுக்குரிய புரட்சிக் கவிஞர்!

இதோ ஒரு சிறு எடுத்துக்காட்டு:

பகவத்கீதை பகர்ந்த கண்ணனை
நல்வட மதுரைக் கச்சென நவில்வர்
திருக்குறள் அருளிய திருவள்ளுவரோ
தென் மதுரைக்கோர் அச்சென செப்புவர்
இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்
இதனால் அறிவதென்ன வென்றால்
இரு வேறு நூற்கள் இருவேறு கொள்கைகள்
இருவேறு மொழிகள் இருவேறு பண்பாடு
உள்ளன உணர்தல் வேண்டு மன்றோ?
கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளினன் என்க!
அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை
எதனடிப் படையில் இயற்றினார் என்றால்
ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல்
அடிப்படை தன்னில் அருளினர் என்க!
எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழியாளர் வழங்குகின் றார்
பரிமே லழகர் திருக்கு றளுக்குச்
சாங்கியக் கருத்தைத் தாம் மேற்கொண்டே
உரைசெய் தாரா? இல்லைஎன்று ணர்க!
ஆதலின் அவ்வுரை அமைவில தாகும்!
சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!
சாங்கியம் மதமன்று தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே
மதமிலார் நூற்கு மதமுளார் உரை செயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்


- இப்படி மற்ற புலவர்கள், இலக்கிய மேதைகள் கூட சொல்ல அஞ்சும் உண்மைகளை அப்படியே உலகுக்குச் சொல்லி, அதனால் தன் புகழ் பலிபீடத் தில் ஏற்றப்பட்டாலும் கவலை இல்லை; ஏற்ற கருத்தை எவர் எதிர்ப்பினும் அஞ்சாமல் அயராமல் வெளியி டுவதே எம்பணி என்று வாழ்ந்து, வரலாற்றைப் படைத்த  வைர நெஞ்சக் கவிஞர் எம் புரட்சிக் கவிஞர் ஒரு வற்றாத ஜீவநதி!
பெரியார் என்ற தலைக் காவிரியின் கிளைத்த தனித்த ஆறு! வாழ்க! வாழ்கவே!!

-----------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் சென்னை
                                -------------------”விடுதலை”   29.4.2014


29.4.14

மூடநம்பிக்கையைப் பரப்புவது குற்றம் என்று சடுதியில் தண்டிக்க வேண்டாமா?

மூடநம்பிக்கையைப் பரப்புவதற்கு எல்லையேயில்லையா?


ஏடுகள், இதழ்கள், ஊடகங்கள் மக்களுக்கு நல்லறிவைக் .கொளுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை மூடநம்பிக்கை இருளில் கொண்டு தள்ளுவதற்குப் பயன்படக் கூடாது; இன்னும் சொல்லப் போனால் அப்படிச் செய்வதற்கு அவற்றிற்கு எந்த வகையிலும் உரிமையும் கிடையாது.

மேலும் சொல்லப் போனால் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் அது விரோதமானதும்கூட! மக்களின் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வைத் தூண்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடி மகன் - மகளின் கடமை என்று அது வலியுறுத்துகிறது (51A-h).

அதற்கு மாறாகச் செயல்படுவது சட்ட விரோதம் தானே! இதில் விஷமம் என்ன தெரியுமா? அந்த மூடநம்பிக்கைகளைப் பரப்பும் அந்த ஏடுகளோ, இதழ்களோ அதன் உரிமையாளர்களோ அவற்றை நம்புவதில்லை, கடைப்பிடிப்பதும் இல்லை அதே நேரத்தில் மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நாசமாய்ப் போனால் என்ன? என்ற நினைப்புதான் அந்த ஊடகங்களுக்கு.

இன்னும் ஒரு மோசமானது என்ன தெரியுமா? மூடநம்பிக்கைகளால் நாசமாகப் போகும் அந்த மக்களிடத்தே இதழ்களை விற்றுக் காசாக்கும் கொடுமையாகும்.

ஒரு மாலை ஏடு ஒரு சிறப்பிதழை வெளியிட் டுள்ளது. மகப்பேறு அருளும் ஆலயங்கள் என்னும் தலைப்பில் 16 பக்கங்களைக் கொண்ட இணைப்பை வெளியிட்டுள்ளது.

பிள்ளை வரம் அருளும் உஜ்ஜீவனத் தாயார் (துறையூர்) புத்திரப் பேறு அருளும் நெல்லை ஸ்ரீ ராஜகோபால்சாமி, பாயசத்துக்கு அருள்புரியும் பால சுப்பிரமணியன் (தென்காசி ஆய்க்குடி) மகப்பேற்றுக்கு வாழைத் தார் காணிக்கை (திருச்சி) புலியூர் ஆனந்த வல்லி சமேத அகத்தீசுவரர் (திருநின்றவூர் அருகில்) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிள்ளைப் பேறு அருளும் வெண்டி முத்து கருப்பு (மதுரை - உசிலம்பட்டியையடுத்த பி. கள்ளப் பட்டி) காஞ்சிபுரத்தையடுத்த கீழம்பியில் உள்ள அம்பிகாபதீசுவரர் கோவில் இந்தக் கோயில்களின் பட்டியல் எதற்குத் தெரியுமா? இந்தக் கோவில்களில் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர் களுக்கு அந்தப் பேறு - சந்தானப் பாக்கியம் கிட்டுமாம்.

மேற்கண்ட கோவில்களுக்கு சென்று என்னென்ன செய்ய வேண்டும் என்ற சாங்கியங்கள் வேறு.

குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில்களில் குழந்தைகளுக்குப் பால் புகட்டும் பாலாடையைக் காணிக்கையாக அளித்தால் தொட்டில் கட்டித் தாலாட்டும் பேறு கிட்டுமாம்.

சில கோயில்களில் குழந்தை இல்லாத பெண்ணுக்கு எலுமிச்சம் பழம் வழங்கப்படுமாம். அதனைக் கொண்டு போய் வீட்டுப் பூஜை அறையில் வைத்து மூன்று நாள்கள் வழிபட்டு வந்தால் விட்டில் குவா குவா சத்தம் கேட்குமாம்.

நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் பாலசுப்பிர மணியம் கடவுள் - அவர் பாயசப் பிரியராம்.

பதினோர்படி பச்சரிசி, சிறு பருப்பு ஒருபடி, தேங்காய் 108, பசும்பால் 8 லிட்டர், சர்க்கரை 35 கிலோ,  நெய் கொண்டு பாயசம் செய்ய வேண்டும்.

கோவிலுக்குப் பக்கத்தில் அனுமான் நதி படித்துறை;  குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் அந்த ஆற்றில் குளித்தெழுந்து, அந்தப் பாயசத்தை படிக்கட்டுகளில் ஊற்றிக் கொண்டே போவார்கள். அப்படிச் செய்தால் அந்தப் பெண்ணுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

இவை ஏதாவது புரிகிறதா? இப்படி செய்வதற்கு ஏதாவது காரண காரியம் உண்டா? சாராயம் குடித்த பயித்தியக்காரன் போல எந்தக் காலத்திலோ எவனோ ஒருவன் கிறுக்கி வைத்தது எல்லாம் தலப்புராணங் களாகி, பேராசையும் பேரச்சமும் கொண்ட மக்கள் நம்பி மோசம் போகிறார்கள் என்பதெல்லாம் வேறு என்னவாம்?

ஒரு பெண் கருத்தரிக்கவில்லையென்றால் அதற்குப் பல்வேறு காரணம் உண்டு என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

குறைபாடு பெண்ணிடம்தான் இருக்கிறது என்று கூறுவதுகூட ஒரு வகை ஆண் ஆதிக்கப் புத்தி! உடற்கூறு ரீதியாக ஆணிடம் குறைபாடு இருந்தாலும் கருத்தரிப்பில் சிக்கல் வரலாம் அல்லவா!

இதுபற்றி எல்லாம் தெரியாத காலத்தில் ஏதோ கிறுக்கி வைத்தான் என்றால் அறிவியல் வளர்ந்த  - இன்னும் சொல்லப் போனால்  செயற்கை உயிர் செல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சகாப்தத்தில், கோயிலுக்குச் சென்று குழவிக் கல்லுக்குப் படையல் போட்டால் பெண் கருத்தரிப்பாள் என்று சொல்லலாமோ, நம்ப லாமா? பிரச்சாரம் செய்யலாமா? ஏடுகள் எழுதலாமா?

இவற்றை அரசுகள் தான் எப்படி அனுமதிக் கின்றன? தடை செய்ய வேண்டாமா? மூடநம்பிக்கையைப் பரப்புவது குற்றம் என்று சடுதியில் தண்டிக்க வேண்டாமா?

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகை யும் ஒன்று என்று தந்தை பெரியார் சொன்ன அருமையைத் தான் நினைத்துப் பார்க்க வேண்டியுள் ளது. ஏடு நடத்தும் முதலாளிகளே, தயவு செய்து  மூட நம்பிக்கைகளைப் பரப்பி மக்களைப் பழி வாங்காதீர்! கேடு பயக்காதீர்!!

நாய் விற்ற காசு குரைக்காது என்ற மனப்பான்மை யும் வேண்டாம் - வேண்டவே வேண்டாம்!
                     ------------------------------"
Read more: http://viduthalai.in/page-2/79424.html#ixzz30EOKWsTL

28.4.14

பெரியார் பாதையில் செல்லுங்கள்! - புரட்சிக்கவிஞர்


13 ஆண்டுகளுக்கு முன், 1957 ஆம் ஆண்டு பிராமணாள் உணவு விடுதி களுக்கு எதிராக தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சாதி ஒழிப்புப் போராட்டத் தீ  தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம், பட்டி தொட்டியெல்லாம் கொழுந்து விட்டு எரிந்த நேரம். இந்தப் பின்ன ணியில் 23.6.57 அன்று குடந்தையில் நடை பெற்ற திராவிடர் மாணவர் மாநாட்டில் புரட்சிக்கவிஞர் ஆற்றிய வீர உரையின் பகுதிகள் இவை:

இப்போது பார்ப்பனர் உணவு விடுதிகளில் உண்ணக்கூடாது என்று பெரியார் அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இதில் மாணவர்கள் முற்றிலும் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்கலாம். அரசியலாரை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் மக்கள் மட்டுமே கலக்க வேண்டும். எந்தப் பகுதியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பெரியார் அவர்கள் கூறுகிறார்களோ அதில் கலந்து கொள்ளக்கூடாது. நம் முடைய சீர்திருத்தப் போராட்டத்திற்கு வேண்டிய கிளர்ச்சிகள் உங்களிடமே உள்ளன. எத்தனை முயற்சிகள், எந்தெந்த முயற்சிகள் உண்டோ அத்தனை முயற்சிகளையும் கையாள வேண்டும்.

இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைக்கப்பட்டு ஒன்று நமக்கென்றும், மற்றொன்று பார்ப்பானுக்கு என்றும் கூறப்பட்டால் சும்மா விடலாமா? இது போன்ற சின்ன தகராறுக்கெல்லாம்கூட பெரியாரிடம் செல்லலாமா? நாமே இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

பெரியார் பாதையில் செல்லுங்கள்: ஆகையினால் தோழர்களே! அரசியல் பகுதி எது, சமூகப்பகுதி எது என்பதை நீங்கள் நன்கு அலசிப் பார்த்துப் போராட வேண்டும். இப்படிப்பட்ட சமுதாயத் துறையில் பெரியாருக்கு முப் பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு. நீங்கள் அவர் வழி நிற்க வேண் டும். அவர் பாதையில் செல்ல வேண்டும்.

தியாகத்தால் வளர்ந்த இயக்கம்: சிதம்பரம் பக்கம் பாதூர் என்ற ஊரில் ராஜன் என்ற வாலிபர் இருந்தார். இந்த இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர். அந்த ஊரிலே நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றைப் போட்டார். அதற்கு அந்த ஊரில் உள்ளவர்கள் என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? நீங்கள் சற்றுக் கவனமாகக் கேளுங்கள். அவருடைய மனைவியைத் தூக்கிச் சென்றனர். அவரையும் அடித்து ஊரை விட்டு விரட்டினர். அவருடைய வீட்டைப் பிடுங்கிக் கொண்டு அவரு டையது அல்ல என்று சொல்லிவிட்டனர். தாய், பாட்டி முதலியோரை ஊருக்கு அனுப்பிவிட்டனர். கடைசியிலே மானத் திற்கு இழுக்கு வந்ததை எண்ணி எண்ணி ஏங்கிய அந்தத் தமிழன், தஞ்சைக்கருகில் உள்ள கல்லூரிக்குப் பக்கத்தில் தூக்கு போட்டுக் கொண்டு மாண்டார். அதைப் போல பல உத்தமர்கள் தியாகம் செய்து வளர்த்த இயக்கம் இது.

எதிரியின் பெரும் சதி: சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டு விழா. சகஜானந்தாவுக்கும் சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணி பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பெரிதும் விரும்பினார்கள். பெரியார் அவர்களும் வர ஒப்புக் கொண்டார். ஆனால் சனாதனிகளும் தீட்சதர்களும் எதிர்ப்பை பலமாக ஆரம்பித்துவிட்டார்கள்.

அன்றைய தினம் கலகம் செய்ய ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். ஒவ்வொருவனிடமும் கல், தடி, கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அன்று பெரியாரை ஒழித்துவிடுவது என்றே திட்டமிட்டுவிட்டனர். நிலைமை மிகமிக பயங்கரமாக இருந்தது.

நாங்கள் பத்துப்பேர்கள் போயிருந்தோம். இந்நிலையைப் பார்த்துவிட்டு பயந்தே போனோம். உடனே நாங்கள் ரயிலடிக்குப் போய் பெரியார் வந்ததும் திரும்பப் போகச் சொல்லி விடுவது என்று முடிவு கட்டிக்கொண்டு ரயிலடிக்குப் போனோம். பெரியார் வராமலேயே இருந்தால் நல்லது என்று எண்ணினோம்.
பெரியாரின் ஆண்மையும் வீரமும்: ஆனால் வருகிறேன் என்று கூறியிருந்த வண்டியில் வந்திறங்கினார். உள்ள நிலைமையைக் கூறினோம். 

கேட்டுக்கொண்டே விடு, விடு என்று ஊருக்குள் போனார். போக வேண்டாம். ஆபத்து, ஆபத்து என்று நாங்கள் கூறியதைக் கேட்டுக் கொண்டே போனார். எந்த வழியில் போகக்கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியில் போனார். போய் டக் என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று பயந்தோமோ அதே இடம். போலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம் பித்துவிட்டது. போலீஸ்காரர்களின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்து விட் டன. இன்று என்ன செய்யப் போகிறோம்? என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை.

எதிரிகளின் மனத்தையும் ஈர்த்த பேச்சு: இந்த நிலையில் பேசவும் ஆரம் பித்துவிட்டார்.

எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக - உள்ளம் கவரும் விதத்தில் பேசினார்.

உங்கப் பையன் ஒருவன் படித்திருக்கிறான். பார்ப்பனரின் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று தானே? ஆனால் இன்றைய பார்ப்பன ஆதிக்கத்தில் யாருக்குக் கிடைக்கும்? இதைத்தானே கூறுகிறேன் என்றார். உயர்ந்த கரங்கள் தாழ்ந்தன. அனைவரின் மனமும் சிந்திக்க ஆரம்பித்தன. 

கடைசியில் மூடநம்பிக்கையின் பிறப்பிடமான இந்த ஊர் ஆலயத்திலே உள்ள நடராசன் சிலையைக் கொண்டு வந்து திருப்பிப் போட்டு வேட்டி துவைப்பேன் என்றார். எதிர்த்த கரங்கள் திருப்பி தட்டுதலின் மூலம் ஓசையைக் கிளப்பின.
அன்று சாகடிக்கப்படவிருந்த பெரி யார், நடராசன் கோவில் துவம்சமாக்கப் பட வேண்டும் என்று பெரியார் அன்று கட்டளையிட்டிருப்பாரேயானால் நொடியிலே ஆகியிருக்கும். அப்படிப் பெரியார் அவர்கள் பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த இயக்கம் நிலையானது. இயக்கம் மக்களுக்கு உண்மையாகப்பாடுபடுவது - எந்த இயக்கம், சமுதாயம் முன்னேற உண் மையாக உழைக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் சேரவேண்டும்.

தமிழ் மாணவர்கள் எல்லோரும் ஒள்றுமையாக  இருக்க வேண்டும். பார்ப் பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது. எஞ் ஞான்றும் விழிப்போடு இருக்கவேண் டும். பெரியார் சொல்லுகின்ற அறிவுரை களை அன்றாடம் கடைப்பிடிக்க வேண் டும்.

---------------------------- "விடுதலை" இதழ்: 21.4.1970

நாம் கும்பிடும் சாமிகளும் கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல்! வெறும்கல்!!

நான் அருகில் சென்றால் செத்துப் போகும் என்றால் அந்தச் சாமி எதற்கு?

சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத் தொண்டிற்குப் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால்தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும், தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும் கல்.

எனக்கு முன்பேசிய மூன்று கன வான்களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ் யம் தூரமாகி விடுகின்றது என்று சொன் னார்கள். நான் தலைவனல்ல; ஒரு தொண் டனாவேன். நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக் கின்றது என்று சொன்னேனோ அதை யேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணா சிரம தர்மமும் ஒழிந்தாலல்லாது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி. அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டா மையும் வருணாசிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காகத் தனியாய் பிரச்சாரம் செய்கின் றேன். ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடவில்லை என்கின்றார்.
ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரி டம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணா சிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வ தோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத் தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.  இதைக் கேட்ட பிறகு அவரை மகாத்மா என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.
உண்மையான விடுதலை
மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவுகளும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாக சொல்லி யிருக்கிறார்.
மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமூகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டியது தான்.
ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக்கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களில் சீர்திருத்தத்தைப்பற்றி பேச யோக்கியதை உண்டு. ஆதலால் மற்ற மதங்களின் ஊழல்கள் இருப்பதற்காக நாம் நமது மதம் என்பதின் ஊழல்களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட்டால் அருகில் சென் றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலட்சியமாய் பேசினதற்காக வருந்துவதாக பேசினார். நான் அதற்குப் பரிதாபப்படுகின் றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்க மாட்டேன். யார் என்னை என்ன சொன் னாலும் சரி, எனக்குக் கவலை யில்லை அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத் திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல் லுவேன்.

ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள் ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதம் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்குத் தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்பதையும் அதற்கு விரோத மாக மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்திக் கொண் டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த இடத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும். 

ஸ்ரீ அய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை - என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து நீங்கள் கல்லென்று சொன்னீர்களே இது சரியா? என்றார்.
உடனே ஸ்ரீமான் நாயக்கர், ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள்! காட்டுகின்றேன் என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைத்தட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.
மற்றொரு பார்ப்பனர் - (பத்திரிகை நிருபர்) அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாட னம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன் னார்.
நாயக்கர்:- அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ள தானால் இதோ - எதிரில் இருக்கும் சகோதர ருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா? என்றார்.
அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.
புதுமதம் தேவையா?
மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன்! ஆனால் நீங்களா வது ஒரு புது மதம் சொல்லுவது தானே என்றார்.
நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றா தீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.
அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்ப தானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண் டாமா? என்றார்.
நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக் கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும்? இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே. அந்த துர் நாற்றம் போய்விட்டால் அதுவே போதும், நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்!
அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத் துவம் பேசுகின்றீர்களே! உங்களுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட் டுக் கொடுக்கக் கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.
நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல் லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடியதா யிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகி றேன். அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக - வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின்றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன். இந்தப் பிரசார செலவு சிலசமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகிவருகிறது மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படி இருந் தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.
ஒதுக்கிப் பொசுக்க வேண்டும்
அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத் திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தை தான் படிக்கின்றது.
நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத் திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந் தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல் லுகின்றேன் (என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்ன தாவது), இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த் திருக்கின்றேன். இதெல்லாம் அனுபவிப்பது எனக்குச் சகஜம் தான். எவ்வளவுக் கெவ் வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ் வளவுக் கெவ்வளவு எதிர்பிரச்சாரங்கள் ஏற்படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு எனது வேலை சுலபமாகும், எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரி யம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக் கிறார்கள். ஆனால் அந்தச் சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாக வும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது. ராமராஜ்யமாகவோ , பாண்டிய ராஜ்ய மாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே பாணத்தால் கொல்லப்பட் டிருப்பேன் அல்லது கழுவேற்றப்பட்டி ருப்பேன். நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது.

ஊன்றப்பட்டது சுயமரியாதை விதை!
சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாக வேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத் தொண் டிற்குள் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால் தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெ னில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல் லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும்கல். நமது தேசிய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவை வெறும் புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளா விட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப் பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள்ளுங்கள். தப்பானால் தள்ளி விடுங்கள். சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டிய தில்லை. பேசினாலும் நான் ஒப்புக் கொள் ளப் போவதில்லை. உண்மையான கடவு ளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும். அதை வெளியிடும் தொண்டு தான் இது என்று பேசி உட்கார்ந்திருந்தார்.
----------------------------------------25-02-1928 அன்று சிதம்பரத்தில் வக்கீல் இராமையா தலைமையில் நடந்த சுயமரி யாதைப் பொதுக்கூட்டத்தில் பல குறுக்குக் கேள்விகளுக்கு விடை  தந்து பெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு
- குடிஅரசு - சொற்பொழிவு - 04.03.1928

27.4.14

பிட்டி தியாகராயர் பிறந்தநாளில் உரத்தசிந்தனை தேவை


வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1852).

அரசியல் என்றாலே பதவி தேடி அலையும் மார்க்கம் என்று விமர்சிக் கப்படும் அளவுக்கு அதன் தன்மை சீர்கெட்டுக் குட்டிச் சுவராகி விட்டது!
இந்த நேரத்தில் நீதிக் கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயரையும், சமூகப் புரட்சித்  தலைவர்  தந்தை பெரியாரையும் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க் கட்டும்!

1920, 1923 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சென்னை மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற நிலையில் நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய பிட்டி தியாகராயரை ஆட் சிப் பொறுப்பேற்க கவர் னர் அழைப்பு விடுத்த போது, தான் அந்தப் பத வியை ஏற்காமல் கட்சியில் உள்ள, தம் நண்பர்களுக்கு வழி விட்டார்.

அதே போல நீதிக் கட்சியின் தலைவராகவி ருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு முதல் அமைச்சர் (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) பொறுப்பை ஏற்க இரு முறை அழைப்பு விடுக்கப் பட்டும், அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
பதவிதான் அரசியல் என்ற எண்ணம் தவறு என்பதை நம் தலைவர்கள் வழிகாட்டிடவில்லையா? பிட்டி  தியாகராயர் பிறந்த நாளில் இந்த உரத்த சிந்தனை தேவை.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அற நிலை யத்துறை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்து இந்துக் கோவில்களையும் கொண்டு வர வழிகோலப் பட்டது - காரணம் கோவில்கள் எல்லாம் குறிப்பிட்ட ஜாதிக்காரர் களின் கொள்ளைக் கூடா ரமாகவே இருந்ததுதான்!

இந்தச் சட்டம் கொண்டு வராமல் தடுக்கப்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் பெரும் கூச்சல் போட்டனர்.

அப்பொழுது திருப்பதி கோயிலை நிர்வகித்து வந்த ஒரு மடம் இருந்தது; அதன் பெயர் மகந்து என்பதாகும். அம்மடத்தின் தலைவர் மகந்து என்றே அழைக்கப்பட்டார்.

அவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி தியாக ராயரைச் சந்தித்து, இந்து அறநிலையத்துறை சட் டத்தைக்கொண்டு வரா மல் இருந்தால் பெருந் தொகையை அளிப்ப தாகப் பேரம் பேசினார்.

உடை மட்டும் வெள்ளையல்ல - உள்ளமும் வெள்ளையானதாயிற்றே! அந்த மகந்துவைக் கண் டித்ததோடு மட்டுமல்லாமல், வீட்டை விட்டு செல்லு மாறு எச்சரித்து வெளியே அனுப்பினார் தியாகராயர். (வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் வாழ்வும் பணியும் - முனைவர் பி.  சரசு. பக்கம் 53) அந்தப் பெருமகனாரின் பிறந்த நாளில் இந்த உன்னதப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்!    -

----------------- மயிலாடன் அவர்கள் “விடுதலை” 27-04- 2014 இல் எழுதிய கட்டுரை

இயக்கத்திற்கு வீரமணி அவர்கள் கிடைத்தது மிகப் பெரிய பேறு - வாய்ப்பு! - பேராசிரியர் மா.நன்னன்

இயக்கத்திற்கு வீரமணி அவர்கள் கிடைத்தது மிகப் பெரிய பேறு - வாய்ப்பு!

திராவிடர் கழகம் இல்லை யென்றால் வரலாற்றையே மாற்றியிருப்பார்கள்

இயக்கத்திற்கு வீரமணி அவர்கள் கிடைத்தது மிகப் பெரிய பேறு - வாய்ப்பு!
புத்தக வெளியீட்டு விழாவில் புலவர் மா.நன்னன் அவர்களின் ஆய்வுரை

சென்னை, ஏப். 25- தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வளம், திராவிடர் கழகத்தின் வரலாற்றுச் சிறப்பு, அன்னை மணியம்மையாரின் பேருள்ளம் தமிழர் தலைவர் கி.வீரமணி இயக்கத்திற்குக் கிடைத்தபேறு இவற்றையெல்லாம் தொகுத்து ஓர் ஆய்வுரை போல பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் வழங்கினார்.
28.3.2014 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
அன்பார்ந்த தலைவர் அவர்களே, தமிழர் தலைவர், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களே, பூ.பழனியப்பன் அவர்களின் நூல்களை வெளியிட்ட மருத்துவர் ராஜசேகரன் அவர்களே, வழக்குரைஞர் அருள் மொழி அவர்களே, டாக்டர் பழனியப்பன் அவர்களுடைய குடும்பத்தினைச் சேர்ந்த நண்பர்களே, தோழர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவன்
இந்த நிகழ்ச்சியில், படத்திறப்பு என்ற ஒரு நிகழ்ச்சி என்பது - மற்ற படத்திறப்பு நிகழ்ச்சிகளைவிட தனித்தன்மை வாய்ந்ததாக எனக்குத் தெரிகிறது. ஒரு சுயமரியாதைக் குடும்பம் - மூன்றாவது தலைமுறையினர் இவர்கள் - பூவராகன் - கணேசன் - சோலையப்பன் - பழனியப்பன் - அதற்கடுத்து இவர்கள் எல்லாம் தொடர்ந்து வருகிறார்கள். நான் இவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவன்.
பூவராகன் அவர்கள் பதிவாளராக சிதம்பரத்தில் பணி யாற்றியது முதல் நான் அவர்களை அறிவேன். திரு.கணேசன் அவர்களும், திரு.சோலையப்பன் அவர்களும், நான் புலவர் வகுப்புப் படித்தபொழுது,  அவர்கள் அங்கே படித்தவர்கள். கொஞ்சம் பேர்தான் நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அதனால் நான் அவர்களுடன் நெருக்க மாகவே பழகியிருக்கிறேன்.
ஒரு சுயமரியாதைக் குடும்பத்தில், ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்றபொழுது, எப்படிப்பட்ட மன உறுதியோடு இருக்கவேண்டும் என்பதற்கு, இந்தத் திருமகன் சேரலாதன் அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
அவர்கள் உரையாற்றியபொழுது, நான் ஒரு நிலையில் இல்லை. அன்றைக்கும் அங்கே நான் சென்றிருந்தேன். அய்யா காலத்தில் போடப்பட்ட நட்ட நடவு - பயிர்!
திராவிடர் கழகம் எப்படி உறுதியாக, எத்தனையோ சூழ்நிலைகளுக்கிடையில் நின்று வளர்ந்துகொண்டு, வாழ்ந்துகொண்டு செம்மையாக இருக்கிறதோ, அதுபோல் அந்தக் குடும்பமும் இருக்கிறது.
சுயமரியாதைக் குடும்பங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் குடும்பம் இருக்கிறது.
இவையெல்லாம் அய்யா காலத்தில் போடப்பட்ட நட்ட நடவு - பயிர்!
அமெரிக்காவில் இருந்து விதை நெல் வாங்கிப் போடுகின்ற பயிர் அல்ல!
நல்ல பொறுக்குமணி விதைகளைக் கொண்டு  பயிரிடு வதைப்போல - பயிரிட்ட குடும்பம் அது.
அந்தக் குடும்பத்தை முழுமையாக நாமெல்லாம் - நான் அந்த உறுதியை ஏற்றேன்.
நான் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று நினைத்து முயற்சி செய்பவன்தான் என்றாலும்கூட, அந்தக் குடும்பத்தை நான் மதித்துப் பாராட்டுகிறேன்.
டாக்டர் பழனியப்பன் அவர்கள் மருத்துவராக இங்கே அவர் பணியாற்றியபொழுது சென்றேன்; பிறகு அவர்கள் வீட்டுத் திருமணத்தை நடத்தி வைக்கச் சென்றேனே தவிர, அந்தக் காலத்தில் இவரோடு எனக்குப் பழக்கமில்லை.
டோக்கியோவிற்குச் சென்றுவிட்டு வந்ததுபோன்ற உணர்வு எங்களுக்கு...
டோக்கியோவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு (International Seminar - Tokkiyo)உலக மாநாட்டிற்கு அவர் தலைவராகச் சென்று, பிறகு இதே திடலுக்கு வந்து அவர் உரையாற்றினார். நானும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந் தேன். அவர் உரையாற்றும்பொழுது, நாங்கள் டோக்கி யோவிற்குச் சென்றுவிட்டு வந்ததுபோன்ற உணர்வு எங்களுக்கு அன்றைக்கு வந்தது.
அதில் ஒரு செய்தியைச் சொல்கிறேன்:
அந்த ஊர் கழிப்பறையை நீங்கள் என்ன பாடுபட்டாலும் அசிங்கப்படுத்த முடியாது என்றார்.

டோக்கியோவிலுள்ள ஒரு சுரங்கப் பாதைக்குச் செல்லும் வழி மறந்துவிட்டதால், எந்தப் பாதையில் செல்வது என்று தெரியாமல் இருந்தாராம்;  தவறான பாதையில் சென்றால், அது வேறு எங்கோ கொண்டு போய்விடுமாம்; இவர் வழி தெரியாமல் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த ஒரு ஜப்பான்காரர், அவர் கைகளில் வைத்திருந்த மூட்டைகளை ஓரிடத்தில் வைத்துவிட்டு, இவர் செல்லவேண்டிய இடத் திற்கு இவரைக் கொண்டு போய் விட்டாராம். ஜப்பான்காரர் களுடைய மனப்பான்மையை அவ்வளவு அழகாக அந்தக் கூட்டத்தில் அருமையாக விவரித்தார்.
பொறுக்குமணிகள் போல, அந்த நாட்டினுடைய பண்பாட்டை, அறிவு நுட்பத்தை, உழைப்பை அந்தக் கூட்டத்தில் எடுத்தியம்பினார்.
அவரிடம் மருத்துவத்திற்காக இரண்டு, மூன்று முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.
அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்பே மிக அருமையாக இருக்கிறது!
திராவிடர் கழகக் குடும்பத்தில், பெரியாரியல் குடும்பத் தில், சுயமரியாதைக் குடும்பத்தில் பட்டொளிவீசி நெடுங் காலமாக வாழையடி வாழையாக வாழவேண்டும் அந்தக் குடும்பம் என்று நான் வாழ்த்துகிறேன்.
இந்த நூல் வெளியீட்டு விழாவினைப்பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.
அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்பே மிக அருமையாக இருக்கிறது. அதற்கு முன், முன்னுரைக்கு முன்பாக ஒன்றைச் சொல்லிவிடவேண்டும் என்று நினைக் கிறேன்.
ஆசிரியர் அவர்களே, நீங்கள் தொடங்கியிருக்கின்ற இந்தப் பணி, மற்ற பணிகளையெல்லாம்விட இன்றியமை யாத பணி என்று நான் கருதுகிறேன்.
இந்த நாடு, நாசக்காரர்கள் வாழுகின்ற நாடு; எல்லா வற்றையும் பிரித்து நைத்து விடுவார்கள்; ஒரு வழக்கு நடக்கிறது என்றால், அதுவும் முக்கியமான வழக்கின் தீர்ப்பு என்றால், அந்தத் தீர்ப்பை அப்படியே மறைத்துவிடுகின்ற ஊடகம் இங்கே மட்டும்தான் இருக்கிறது; வேறு எங்கும் இருக்காது. இவர்களுக்கு மட்டுமல்ல, பாட்டன், முப் பாட்டன், நாலாயிரம், அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த இவர்களுடைய பரம்பரையினரின் குணமே அதுதான்.
பாண்டவர்கள் செய்தது தவறு
ராமாயணத்தைப்பற்றி நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு நூலை எழுதியிருக்கிறார் -
முதலில் கட்டுரைதான் எழுதினார் - பிறகு அது நூலாக வந்தது.
தசரதன் குறையும் - கைகேயியின் நிறையும்! தசரதன் செய்தது அயோக்கியத்தனம்; கைகேயி செய்ததுதான் சரி என்று சொல்கிறார். அதை விளக்கி நான் இங்கே உரையாற்ற முடியாது.
அதேபோல, பாரதத்தில், திருதராஷ்டிரர், அவருடைய மகன் துரியோதனன் ஆகியோர் செய்ததுதான் சரி; பாண்ட வர்கள் செய்தது தவறு என்று சொல்லியிருக்கிறார். அது நூலாக வரவில்லை. அது ஒரு அருமையான கட்டுரையாகும்.
அது மிராசுதாரர் வீட்டுக் குடும்பம் அல்ல; நான்கு பிள்ளை இருந்தால், நால்வரும் பங்கு போட்டு பிரித்துக் கொள்வதற்கு; அது அரச குடும்பம், யார் ஆட்சியில் இருக்கிறாரோ, அவருடைய மகன்களில் மூத்தவர்தான் பட்டத்திற்கு வரவேண்டும். அதன்படி, பாண்டு ஒரு நோயாளி; திருதராஷ்டிரன்தான் ஆண்டான். அவனுக்குப் பிறகு, அவனுடைய மகன் துரியோதனுக்குத்தானே பட்டம் கட்டவேண்டும். அதை ஒரு காப்பியமாக எழுதிக் கொண்டு வந்தார்.
சேரன் செங்குட்டுவன் - சிலப்பதிகாரம் - ஒரு குப்பை  குப்பையிலே இவ்வளவு செய்திருக்கிறவன் - இதை விடுவானா?
மாவீரன் - ஆரியர்களை எதிர்த்தவர்; கரிகாலற் சோழர்கூட புலிக்கொடியை இமயமலையில் நிறுவினார் என்று சொல்கிறார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதியதைத் தான் நான் இங்கே உரையாற்றுகிறேன், துறவியாகிய இளங்கோவடிகளின் மனதை மாற்றி, யாகம் செய்து, நாசமாகப் போவதுபோல் சிலப்பதிகாரத்தை முடித்து விட்டார்கள்.
எப்படிப்பட்ட காவியத்தை இப்படி முடித்துவிட்டார் கள். வள்ளலார் ஜோதியில் கலந்துவிட்டார் என்ற சொன்னார்கள் - கொன்றுவிட்டு!
நந்தனார் அந்தக் காலத்தில் முதல் ஆளாகப் புரட்சியை செய்தவர். இப்படித்தான் நண்பர்களே, எல்லாவற்றையும் திரித்துவிட்டார்கள்.

திருக்குறளா - பார்ப்பான் எழுதியது என்கிறார்கள்.
தொல்காப்பியமா - அறிவுள்ளவன் எவனாவது எதையா வது செய்திருந்தால், அவன் பார்ப்பானாகத்தான் இருக்க வேண்டும். அல்லது பார்ப்பானுக்கோ, பார்ப்பனத்திக்கோ பிறந்திருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். மாற்ற வேண்டும் அவ்வளவையும்!
திராவிடர் கழகம் இல்லாமல் இருந்திருந்தால், வரலாற்றை மாற்றியிருப்பார்கள்
திராவிடர் கழகம் இல்லாமல் இருந்திருந்தால், பெரியாருக்குப் பிறகு அந்த இயக்கம் - திராவிடர் கழகம் தளர்ந்து போயிருந்தால், சோர்ந்து போயிருந்தால், வர லாற்றை மாற்றியிருப்பார்கள்.
வள்ளலாருக்கு நேர்ந்த கதி - பெரியாருக்கு ஏன் நேரவில்லை?
நந்தனாருக்கு நேர்ந்த கதி ஏன் திராவிடர் கழகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படவில்லை? அதுதான் திராவிடர் கழகத்தின் தனிப்பெரும் சிறப்பு!
ஒரு பயலாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை; இப்ப வும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறான். நம்முடைய எதிரி என்றைக்கும் இருக்கக்கூடிய எதிரி. அவர்களை ஒழிக்க முடியவில்லை, இதுவரையில்.
எமர்ஜென்சி காலத்தில் இரண்டு பேர் வந்தார்கள் - தவே, ஆரிய சுப்பிரமணியன் என்பவர்கள். இரண்டே வருடத்தில் அத்தனையையும் மாற்றினார்கள். நடக்குமா?
தேர்தல் ஆணையம் ஆகட்டும்; மற்றவை ஆகட்டும் - அவர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கிருந்தெல் லாம் நமக்குக் கெடுதலைத்தான் செய்துகொண்டிருக் கிறார்கள்.
நாம் விழிப்போடு இருக்கவேண்டும்!
ஆகவே, இந்த இயக்கத்தையே மாற்றி, இயக்கத்தி னுடைய நோக்கம் போன்றவைகளை மாற்றி, கொண்டு போய் கவிழ்த்திருப்பார்கள்; அல்லது கவிழ்ப்பார்கள். இது வரையில் கவிழ்க்கவில்லை; நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
அதற்காகத்தான் நான் சொல்கிறேன், இந்த வரலாற்று நூல் வரிசை - அந்தப் பணியை தடுத்து நிறுத்துகிறது.
குடியரசுப் பதிப்பகம் இருக்கிறது, அது தொடர்பான ஏடுகள் எல்லாம் இருக்கின்றன என்றாலும்கூட, இப்படி ஒரு வரலாற்று முறையில், அதனோடு இரண்டறக் கலந்தவர் எழுதுகிறார் - யாரோ ஒருத்தர் எழுதவில்லை.
திராவிடர் கழகமாகவே, பெரியாரியலாகவே பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஆசிரியர் அவர்கள் - அந்தப் பணியை - அய்யா சொல்வதுபோல, எத்தனையோ பணிகள் - அதற்கிடையில் இதனையும் தம் தலைமீது போட்டுக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் படித்துப் பார்த்தேன். டாக்டர் இராசசேகரன் அய்யாகூட, எப்படி அய்யா ஆசிரியர் இப்படி எழுதுகிறார் என்று கேட்டார்.
நமக்கு இதுதான் முக்கியம் என்றில்லாமல், நம் ஆசிரியர் அய்யா அவர்கள், தேர்தல் சுற்றுப் பயணம் - இவரே தேர்தலில் நிற்பதுபோன்று - அந்தச் சுற்றுப் பயணத்தின் நடுவில் ஒரு நாள் தான் இடைவெளி இருக்கிறது. எங்காவது மூச்சுவிடு வதற்கு இடம் வைத்திருக்கிறாரா என்று பார்த்தேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளையாவது விடுகிறாரா? அதுவும் இல்லை. அப்படிப்பட்டவராக அவர்கள் விளங்குகிறார்கள். அவர்கள்தான் இந்த நூலினை எழுதியிருக்கிறார்கள்.
காந்தி சென்ற பாதைதான் இருக்கிறதே தவிர,  வேறு யாரும் பின்னால் சென்றதாக இல்லை
அதனால்தான் நான் சொன்னேன் என் இனிய தோழர் களே, இந்த நூல் வரிசையில், சரியான காலத்தில், சரியானவ ரால், சரியான நோக்கத்தோடு உருவாக்கப்படுகிறது. இது தேவையான, சரியான, இன்றியமையாத விளைவை இந்த நாட்டிலே விளைவிக்கும் என்ற அளவில் அதை நான் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். நூல் அமைப்பைப் பற்றியெல்லாம்கூட சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், உள்ளே போகவேண்டும் என்கிற ஆர்வத்தினால் அதனைப்பற்றி நான் அதிகமாக சொல்லவில்லை. இந்த நூலின் தலைப்பைத்தான் நான்  சொல்லத் தொடங்கினேன், அய்யாவின் அடிச்சுவட்டில்...

இதைப் பார்த்ததும் எனக்கு ஒரு நினைவு வந்தது; ஒரு காலத்தில் காந்தியினுடைய படத்தைப் போட்டு ரயில்வே நிலையத்தில் எல்லாம் வைத்திருப்பார்கள். அதற்கு மேலே “he showed as the way” என்று எழுதி வைத்திருப்பார்கள்.  அவர் நடந்து போவதுபோல, மைல்கல் எல்லாம் வளைந்து வளைந்து அந்தப் பாதையை வரைந்திருப்பார் அந்த ஓவியர் தன்னுடைய திறமையெல்லாவற்றையும் காட்டியிருப்பார். அதில் காந்தி சென்ற பாதைதான் இருக்கிறதே தவிர,  வேறு யாரும் பின்னால் சென்றதாக இல்லை. அவர் தெரிந்து விட்டாரோ, தெரியாமல் விட்டாரோ தெரியவில்லை. அது ஏனென்றால், அந்தப் பாதையில் செல்ல முடியாது. இப்படி வளைந்து வளைந்து போனால், எந்தக் காலத்தில் போய்ச் சேருவது? நேரான பாதையாக இல்லை; மணல் பாதையாக இருக்கிறது; அப்பாதை பயணத்திற்குத் தக்கதாக இல்லை என்று நினைத்து, இந்தியப் பெருநாட்டினுடைய மக்கள் எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டார்கள்.
எல்லோருமே வழிவிட்டார்களே ஒழிய, அந்தப் பாதையில் சென்றவர்கள் யாரும் இல்லை. அந்த நினைவுதான் எனக்கு வந்தது. இன்றைக்கும் காந்தி நெறி என்று எங்கே இருக்கிறது? அவருடைய காலத்திலேயே இல்லையே! ஆனால், நம் அய்யா பெரியாருடைய நெறி இருக்கிறதே - உங்களுக்கு இந்த அரசை காணிக்கையாக்குகிறேன் என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அரசியலே தேவையில்லை என்று சொன்னவருக்கு, ஒரு அரசை காணிக்கையாக்குகிறேன் என்று சொல்கின்ற நிலை.
                           ---------------------”விடுதலை” 25-04-2014

புத்தக வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் மா.நன்னனின் ஆய்வுரை


தமிழர் தலைவருக்கு மகிழ்ச்சியை, நிம்மதியை, ஊக்கத்தை, உண்டாக்க வேண்டும்
சிறிய கவலையோ, பதற்றமோ இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை
புத்தக வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் மா.நன்னனின் ஆய்வுரை

சென்னை, ஏப். 26- தலைவருக்கு மகிழ்ச்சியை, நிம்ம தியை ஊக்கத்தை உண்டாக்க வேண்டும். சிறிய கவ லையோ, பதற்றமோ இல்லாது பார்த்துக் கொள்ள வேண் டியது நமது கடமை என்றார் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள்
.
28.3.2014 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் அவர்கள் உரையாற்றினார். அவரது நேற்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:

இயற்கையை யாராவது அழிக்க முடியுமா?

இந்த இயக்கத்தினுடைய தனித்தன்மையை நான் சொல்லிவிடுகிறேன். பெரியாருடைய இயக்கம் உண்டாக்கப் பட்டது, உருவாக்கப்பட்டது என்பதுபோல சொல்லக்கூடிய இயக்கமன்று. பெரியார் என்ன திட்டம் போட்டு தன்னைச் சேர்ந்த நான்கு பேரை அழைத்துப் பேசி, சுயமரியாதைக் கட்சி ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதாக எனக்குத் தோன்ற வில்லை. திடீரென்று அவர் பேச ஆரம்பித்துவிட்டார்; எழுத ஆரம்பித்துவிட்டார், இயல்பாக - இயற்கையாக - ஒரு நோக்கத்திற்காக என்றெல்லாம்கூட இந்த இயக்கம் உருவாக வில்லை. இந்த இயக்கத்தை உருவாக்கியது பெரியார் என்றால், இடையிலிருந்து, செடியோ, கொடியோ, நாற்றோ முளைத்து வருவதுபோல, அவரிடத்திலிருந்து அது வெளிப்படுகிறது. வெறும் தரையாக இருக்கிறது; மழை பெய்தவுடன் அங்கிருந்து ஒரு மரக்கன்று முளைக்கிறது  அதுபோல; சூரியன் எப்படி உண்டாயிற்று என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்; இந்த நில உருண்டை எப்படி உருவாயிற்று என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதுபோல உண்டான இயக்கம்தான் திராவிடர் இயக்கம் - திராவிடர் கழகம் - சுயமரியாதை இயக்கம் எல்லாம். ஆகவே, இது அழியாது. இயற்கையை யாராவது அழிக்க முடியுமா? அதற்குமேல் நான் போக விரும்பவில்லை. இயற்கையாக முகிழ்த்த ஒரு இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம் பாரதிதாசன் அவர்கள் திருச்சி வானொலி நிலையத்தில், பாரதியாரைப்பற்றி ஒரு கவியரங்கத்தில் பாடினார். அங்கே இந்த இயல்பு இருக்கிறது என்று எனக்கு நினைவிற்கு வருகிறது. சரியான நேரத்தில், சரியானவனை இயற்கை தானே தோற்றுவிக்கும் என்ற பொருள்பட பாவேந்தர் அவர்கள் அக்கவியரங்கத்தில் பாடியிருக்கிறார். அப்படித்தான் பாரதி புலவன் வந்தான் என்று சொல்கிறார். இயற்கையாக முகிழ்த்த (தோன்றிய என்ற சொல் சரியில்லை) ஒரு இயக்கம்தான் - அது பெரியார் மூலமாக - மழை பெய்தவுடன் முளை விடுகின்ற செடி, கொடிகளைப்போல, சரியான முறையில் வெளிவந்தது.

நாம் எல்லாம் தோற்றுப் போனாலும்கூட, எவனாவது ஒருவன் வந்து கையில் எடுப்பான். அப்படித் தோற்றுப் போகும்படியாக,  விட்டுவிட்டுப் போகும்டியாக இந்த அமைப்பு இல்லை. ஆகையால், இந்த நெறி இயல்பாக, தானே தோன்றியது.

இந்த நூலாசிரியர் வீரமணி அவர்களைப் பற்றி ஒரே ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

இவர் இந்த இயக்கத்திலிருந்தே தோன்றி, இந்த இயக்கத்திலேயே வளர்ந்தவர். இவருக்கென்று தனியே ஒன்றும் கிடையாது. அவருடைய நினைப்பெல்லாம் - நான் ஒவ்வொரு சமயமும் அவர் உரையாற்றும்பொழுது நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பேன். உங்களைப்போல அதிகமாக அவர்களிடத்தில் நான் நெருங்கிப் பழக முடிய வில்லையே தவிர, ஓரளவுக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப் பைப் பார்த்து சொல்கிறபொழுது, பெரியாரியல் என்பது எப்படி ஒரு இயக்கமாக ஆகி, அந்த இயக்கத்திற்குள்ளே சேர்ந்து, அதுவும் வளர்கிறது, இயக்கமும் வளர்கிறது!

சிறுவனாக இருக்கும்பொழுது கூட்டத்தில் உரையாற்றுவார்; உரையாற்றி முடிந்தவுடன் தூங்கிவிடுவார்

நான் இங்கே முன்பு உரையாற்றும்பொழுது சொன்ன ஒரு செய்தியை சொல்கிறேன்: ஆசிரியர் அவர்கள் சிறுவனாக இருக்கும்பொழுது கூட்டத்தில் உரையாற்றுவார். உரை யாற்றி முடிந்தவுடன் தூங்கிவிடுவார், கூட்டம் முடிவதற்குள். யாராவது ஒருவர் தூக்கிக்கொண்டுதான் போவார்கள்.
அந்தக் காலகட்டத்தில் மாணவப் பருவத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். நான் அறிந்த வரையில், இந்த இயக்கத்திற்குக் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு, பேறு ஆசிரியர் அவர்கள் - தமிழர் தலைவர் அவர்கள்.
கைதட்டுகின்ற நீங்களும், இந்தச் செய்தியை விடுதலை யில் படிக்கின்ற மற்ற ஊர் தோழர்களும், ஆசிரியர் அவர் களுக்கு எவ்வளவு நிம்மதியை, மகிழ்ச்சியை, ஊக்கத்தை உண்டாக்க முடியுமோ அவ்வளவையும் செய்யவேண்டும் என்று நான் இந்த மேடையில் இருந்து வேண்டுகோள் விடுக்கிறேன். சின்ன கவலையோ, பதற்றமோகூட வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம்முடைய கடமை. அப்படிப்பட்ட ஒருவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். இந்த இயக்கம் இப்படிப்பட்டது என்று சொன்னேன். இந்த நூலை எழுதியிருக்கின்ற ஆசிரியர் அவர்கள் இப்படிப்பட்டவர் என்று சொன்னேன்.
யார் போனால் என்ன?
நான் பார்த்துக்கொண்டு வருகிற வரையில், வீழ்ச்சி, தளர்ச்சி, தேக்கம் இவையெல்லாம் ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.
இந்த இயக்கத்திலிருந்து அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிரித்துக் கொண்டு சென்றதற்கே, எதுவும் ஆகவில்லை. அப்புறம் யார் போனால் என்ன?

இங்கிருந்து பிரிந்து சென்றவர்கள் நடத்திய கூட்டத்தில் என்ன பேசினார்கள்? நாம் தான் திராவிடர் கழகம்; அந்தக் கட்டடத்தைப் பூட்டி சீல் வைக்கவேண்டும்; இதுதான் திராவிடர் கழகம், அது இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் உண்டு.

பெரியார் செத்துவிட்டார்; இப்பொழுது இருக்கிறவர் வெங்கட நாயக்கர் மகன் ராமசாமி நாயக்கர்தான்; அவரைப் பற்றி இங்கே எவரும் பேசாதீங்க என்று சொல்லப்பட்ட துண்டு. நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன்.

அன்னையாரைப் பற்றியது அன்னையார் காலத்தில் தொடங்குகிறது
நம் வக்கீல் வேதாச்சலம், குத்தூசி குருசாமி அய்யா அவர்கள் எல்லாம் தொடக்கவிழா நடத்தினார்கள் அல்லவா, கோகலே ஹாலில். இப்பொழுதுகூட யாரோ சிலர் கூட்டத்தைக் கூட்டினார்கள், அதிலேயும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அத்தனையையும் பார்த்த நான் சொல் கிறேன்,

இவர்களுக்கெல்லாம், இந்த மாதிரி ஏதோ சில்லூண் டித்தனமாக சில காரியங்களைச் செய்கின்ற அளவிற்குத்தான் அறிவும், திறமையும் இருக்குமே தவிர, அண்ணா ஒருவரைத் தவிர மற்ற யாருக்கும் வேறு எந்த சிறப்புத் தகுதியும், உருப்படியாகச் செய்யக்கூடிய யோக்கியதையும் யாருக்கும் கிடையாது. அப்படிப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். இதனுடைய வீழ்ச்சி இல்லை என்று சொன்னேன்; வீழ்ச்சி வேறு; தளர்ச்சி வேறு. இது இரண்டும் அல்லாமல் வேறு ஒன்று உண்டு. அதுதான் தேக்கம். தேக்க நிலைக்குக்கூட அவர்கள் விடு வதில்லை. நீங்கள் அவர்களுடைய திட்டங்கள், போராட் டங்கள், நடைமுறைகள் மற்ற இயக்க நடவடிக்கை களைப்பற்றி தனியே ஒரு பட்டியல் போட்டு, எப்படி அவர் கள் கொண்டுபோகிறார்கள் என்று நோக்குவீர்களேயானால், நான் சொன்ன இந்த முடிவிற்கு நீங்களும் வர முடியும். அப்படிப்பட்ட ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட இந்த அய்யாவின் அடிச்சுவட்டில் என்கிற நூலின் நான்காம் பாகம், அன்னையாரைப்பற்றியது. அன்னையார் காலத்தில் தொடங்குகிறது.

பெரியார் - அண்ணா நினைவகம்

ஈரோட்டிலுள்ள அய்யாவின் வீட்டிற்குப் பின்புறம் ஒரு சின்ன பகுதி உண்டு. குடியரசு அலுவலகத்திலிருந்து சாப்பாட்டுக்கு அங்கேதான் செல்லவேண்டும். அங்கேதான் அண்ணா அவர்கள் குடியிருந்திருக்கிறார். அந்த வீட்டை பெரியார் நினைவகமாக ஆக்கவேண்டும் என்று அரசு சொல்லி, அந்த இடத்திற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள்; அதனை அரசு கொடுத்துவிடும் என்று ஆசிரியரிடத்தில் முதல்வர் கலைஞர் சொல்கிறார்கள். அம்மா அவர்கள் உடனே, பணம் ஒன்றும் வேண்டாம்; நன்கொடை யாக இந்த இடத்தினை அரசாங்கத்திற்குக் கொடுத்துவிடு கிறோம் என்று சொன்னார்கள். பெயர் வைக்கிறபொழுது அம்மா சொன்னார்கள், அண்ணா பெயரும் அதில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். பெரியார் - அண்ணா நினைவகம். இந்த ஒரு மனப்பான்மை போதும், அம்மா அவர்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு.

ஒளிக்காமல், மறைக்காமல், திரிக்காமல், விடுபடாமல்...

மாற்றுக் கட்சிக்காரர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள்? இதில் எப்படி அண்ணாதுரை பெயர் வரலாம்? பெரியார் பெயரில்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார் கள்.

கொஞ்சம்கூட மாற்று இல்லாமல், ஒளிக்காமல், மறைக்காமல், திரிக்காமல், விடுபடாமல் ஆசிரியர் அய்யா அவர்கள் அதனைத் தொகுத்து இந்த நூலில் கொடுத்திருக் கிறார்.

அம்மாவினுடைய அந்தப் பேருள்ளம்போல, அதனை எழுதும்பொழுது, இவருடைய உள்ளமும் அமைந்திருக்கக் காண்கிறேன். திராவிடப் பாரம்பரியம் நண்பர்களே, எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறது பார்த்தீர்களா?

எல்லாம் ஒரே உள்ளம்!

ஒரு அரசாங்கத்தையே பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்ன அந்த அண்ணாவினுடைய உள்ளம்.

நீங்கள் எனக்கு செய்கிற சொல்கிற பிறந்த நாள் வாழ்த்து, தி.மு.க.வினரை வாழ வைக்கிறது என்று கழகத்தினருக்கு உத்தரவு போட்ட அய்யாவினுடைய உள்ளம்,

அண்ணாவினுடைய பெயரும் இதில் இருக்கவேண்டும் என்று சொன்ன அம்மாவினுடைய உள்ளம்; இதை விடுபடாமல், சரியாக, தக்கவாறு, அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கின்ற நம்முடைய ஆசிரியர் அவர்களுடைய உள்ளம் எல்லாம் ஒரே உள்ளம்.

இவர்களுக்குள் சண்டை வருவதும்; கூடிக்கொள்வதும் ஒரு வியத்தகு உண்மை. மற்ற இடத்தில் பகை பகையாகவே இருக்கும்.

தன் சொந்தக் கட்சியில் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்புக் கொடுக்காததால், அந்தக் கட்சியை எதிர்த்தவர்களின் வரலாறு நிறைய உண்டு. இந்த வரலாறு வேறு எங்கேயும் கிடையாது. இதுதான், நம் இயக்கத்தினுடைய நாடித்துடிப்பு - உயிர் மூச்சு - ரத்த நாளங்களுக்குள்ளே இருக்கின்ற உயிர்த்தன்மை இதுதான். அப்படிப்பட்ட ஒரு பெரிய நிகழ்ச்சியை இந்த நூலில் ஆசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

அதைத்தான் நான் சொன்னேன்; ஒரு நூல் எழுத வேண்டும்; அப்படியே ஒன்றைக்கூட மாற்றாமல் - மாற்ற வேண்டிய தேவையும் இல்லை. என்ன நடைபெற்றதோ அப்படியே அதனை எழுதவேண்டும். இந்த முரண் அல்லது இந்தப் பகை எப்படியெல்லாம் மாறி இருக்கிறது.

அந்த வெளிச்சம் - பகுத்தறிவு வெளிச்சம்!

தாய் - தன் மக்கள் செய்கின்ற தீங்குகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மறந்துவிட்டு, அந்தக் குழந்தையோடு உறவாடுவதுபோல, அதேபோல, இங்கே உரையாற்றிய அருள்மொழி அவர்கள் நன்றாக உரையாற்றினார்கள். என்னை நயம் சொல்லச் சொன்னீர்களேயானால், அவர்களை விட நான் நன்றாகச் சொல்வேன். ஏனென்றால், நம் கையில் பெரிய டார்ச் லைட் இருக்கிறது; இது போகாத இடத்திற் கெல்லாம் போகும்; அந்த வெளிச்சம் - பகுத்தறிவு வெளிச்சம். அருமையாக எடுத்துக்காட்ட முடியும் என்னால். நான் அதைப்பற்றி சொல்வதும் உண்டுதான் சில இடங்களில்.

ஆழ்வார்களைப்பற்றியும், நாயன்மார்களைப்பற்றியும் பாடமாகக் கொடுத்தார் ஒரு முதல்வர், என்னைப் பழிவாங்குவதற்காகவே. இவன் எதாவது சொல்வான், மாணவர்களிடத்தில் எதிர்ப்பு வரும்; இவனை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று நினைத்துத் திட்டம் போட்டு கொடுத்தார். நான் வகுப்பு எடுத்து முடித்தவுடன், நான்கு மாணவர்களாவது அழுதுவிடும் அளவிற்கு வந்துவிடு வார்கள்.

நீ என்ன பார்ப்பானா? என்றார்கள்!

பக்தி இயக்கத்தில் காணப்படுகின்ற சில உண்மைகள், நம் இயக்கத்தில் எவ்வளவு சாதாரணமாக  இருந்திருக் கின்றன என்பதை அது எடுத்துக்காட்டும்.
எனக்கு இன்றைக்குப் பேச பேச, அதைக் கண்டு நானே வியக்கின்றேன். இந்த இயல்தான், குடும்பம், குடும்பம் என்று சொல்கிறோமோ அது எவ்வளவு சரியானது. திராவிடர் கழகக் குடும்பம் என்று விருந்து நடத்துகின்றோம். நான் சைவம்; புலால் சாப்பிடுவது இல்லை.  திராவிடர் கழகத்தில் இருந்துகொண்டு, புலால் சாப்பிடமாட்டேன் என்கிறாயே, நீ என்ன பார்ப்பானா? என்றார்கள். இங்கே ஒருமுறை கோரா அவர்களுடன் மாட்டுக்கறியைச் சாப்பிட்டேன்.
இது சிறைச்சாலை; நாம் கைதி, அதனை மறந்துவிடாதீர்கள்!

நான் உங்களைப்போல இந்த இயக்கத்திற்காக கஷ்ட நஷ்டம் பட்டவன் அல்ல; போராட்டத்திற்குச் சென்றவன் இல்லை. ஒரே ஒருமுறை ஆசிரியர் தயவில், இந்தி எழுத்தை அழிப்பதற்காகச் சென்றேன். விருந்தாளிபோல கொண்டு சென்றார்கள்; ஆடாமல், அசையாமல் சிறைக்குச் சென்றேன். அப்படி சிறையில் இருக்கும்பொழுது ஒரு நாள் ராத்திரி நான் சிறை அதிகாரியிடம், ஏம்ப்பா, சாப்பாடு வருமா? இல்லை யென்றால் படுத்துக்கொள்ளலாமா? என்று கேட்டேன். உடனே ஆசிரியர் அவர்கள், இது சிறைச்சாலை; நாம் கைதி, அதனை மறந்துவிடாதீர்கள். இப்படி ஏன் சத்தம் போடுகிறீர்கள் என்று சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறது. அது ஒன்றுதான் நான் செய்த தியாகம். மற்ற எதிலும் நான் ஈடுபட்டது கிடையாது. ஆனால், எனக்கே இவ்வளவு உணர்வு இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் யாரும் அப்பழுக்கு சொல்ல முடியாது. என்னுடைய தந்தையார் அவர்கள் இறந்தபொழுது, சடங்கு எல்லாம் செய்ய முடியாது என்று சொன்னேன். என்னுடைய சகோதரர்கள் எல்லாம், தம்பி அப்படி சொல்கிறான்; அப்புறம் என்ன என்று சொல்லிவிட்டார்கள்.

என்னுடைய அம்மா, மாமியார், என்னுடைய மகன் இறந்தபொழுதெல்லாம்கூட சடங்கு ஏதுமின்றிதான் இறுதி மரியாதையை செய்தேன். மின்சார சுடுகாட்டில்தான் எரியூட்டினோம். இதுபோன்ற நிகழ்வுகளில் ஒழுங்காக இருப்பேன். மற்றபடி கஷ்ட நஷ்டங்களை ஏற்கின்ற அளவிற்கு நான் இந்த இயக்கத்திற்கு ஏதும் செய்யவில்லை. அதனை நினைத்தால் எனக்கு வருத்தம்தான் ஏற்படுகிறது. ஏனென்றால், அது ஒரு சுயநலம் என்று வைத்துக் கொள் ளலாம். நாம் வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் குடும்பத்தினைக் காப்பாற்ற முடியும் என்கிற உணர்வுதான். அதற்கு வேறு காரணம் கிடையாது.

அம்மாவினுடைய வீர செயல்கள்!

டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் எல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், உளுந்து போல உருண்டு கொண்டே இருப்பார். அதுபோல் எத்தனையோ பேர்! நான் என் சொந்த வாழ்க்கையை அதிகம் பார்த்துக் கொண்டாலும் எஞ்சிய நேரங்களில் என்னால் ஆன பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். எத்தனையோ மாணவர் களை நான் உருவாக்கியிருக்கிறேன்.

ராவண லீலாவைப்பற்றிச் சொல்லி நான் என் உரையை முடிக்கிறேன். அம்மாவினுடைய வீர மறச் செயல்கள்; துணிச்சல். நான் அன்றைக்குத் திடலில் இருந்தேன். ராவண லீலா நடைபெற்ற அன்றைக்குத் திடலில் நான் இருந்தேன். பரண் மேல் வைத்திருந்தார்கள் அந்த பொம்மைகளை யெல்லாம். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் தேடினார்கள். நான் அப்பொழுது அரசுப் பணியாளன். அந்த நிகழ்வுகளையெல்லாம் இந்த நூலில் அருமையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

நம் கொள்கை என்னவென்று தெளிவாக தெரியவேண்டும்

கட்டாயமாக நம்முடைய இயக்கத் தோழர்கள் முக்கியமாக இந்த வரிசையைப் படிக்கவேண்டும். பல பேர் சொல்லலாம், நான் கருப்புச் சட்டைதான் போடுகிறேன்; பெரியார் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறேன் என்று சொல்லலாம். அதெல்லாம் போதாது. எங்கேயாவது நம் முடைய எதிரிகள் கையில் சிக்கிக் கொண்டீர்களேயானால், அந்தப் பயல்கள் சில முரட்டுத்தனமான, முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்பார்கள். அப்பொழுது நாம் அதிலிருந்து மீளவேண்டுமானால், நமக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால்தான் இதுபோன்ற நூல்களைப் படிக்கவேண்டும். நம் கொள்கை என்னவென்று தெளிவாகத் தெரியவேண்டும்.
ஆனாலும் போய்விடுவான்; ஆகாது என்றாலும் போய் விடுவான் சில பேர் நம் இயக்கத்திலிருந்து சென்றிருப் பார்கள்.  தியாகம் எல்லாம் செய்திருப்பார்கள். திடீரென்று விபூதி பூசிக்கொண்டு, கோவிந்தா கோஷம் போட்டுக் கொண்டு செல்வார்கள்.

அய்யாவிடம் ஒரு கேள்வியை, ஆசிரியர் அவர்கள் கேட்டார்கள்:

அய்யா, எனக்கு ஒரு சந்தேகம்.
என்னவென்று அய்யா கேட்டார்.

சில பேர் நம் இயக்கத்திலிருந்து சென்றுவிடுகிறார்களே, நமக்குப் பிடிக்காத கொள்கைகளுக்குச் சென்று விடுகிறார் களே, அது எதனால் அய்யா என்று ஆசிரியர் கேட்டார்.

அய்யா அவர்கள் பதில் சொல்கிறார், ஒன்னு, இங்கே இருக்கும்பொழுது வேசம் போட்டிருப்பான்; நம் கொள்கை இருக்காது. ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருப்பான். ஆனவுடன் போய்விடுவான்; ஆகாது என்று தெரிஞ்சாலும் போய்விடுவான் என்று சொன்னாராம்.

இன்னொரு நிகழ்வை சொல்கிறேன்:

ஒருமுறை அய்யாவிடம், அய்யா டெபுடி கலெக்டர் வந்தாரே, அவர் சொன்னது ஆயிற்றா என்று கேட்டார்களாம்.

அய்யா உடனே,
அந்த ஆள் வந்தாரா? என்று கேட்டாராம்.

இல்லை என்று பதில் சொன்னார்களாம்.

உடனே அய்யா அவர்கள், அப்போ ஆயிருக்கும்; இல்லை என்றால் வந்திருப்பான் என்று சொன்னாராம்.

முதல் சொன்ன கேள்விக்கு வருகிறேன்,

அவன் நம் கொள்கை உடையவன்போல நடித்தானே தவிர, உண்மை இல்லை என்றார் அய்யா.

இல்லை, இல்லை அய்யா, அதெல்லாம் உண்மைதான். அவன் நெருப்பிலே போட்டெடுத்தவன் என்று சொன்னார்.

அப்படியானால், இப்பொழுது அவன் அங்கே வேசம் போட்டுக்கொண்டிருக்கிறான். அவனுக்கு பக்தியாவது, மண்ணாங்கட்டியாவது என்று அய்யா அவர்கள் சொன்னார்.

இந்த இரண்டு கூற்றுகளும் நம்முடைய மனதிலே நன்றாக இருக்கவேண்டியவை.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒரு கட்டத்தில் எனக்கு வலை பின்னினார்கள். அது சாதாரணமானதல்ல; நான் பேசுகின்ற கூட்டத்திற்கெல்லாம் வந்து குறிப்பெடுத்துக் கொண்டு, அய்யா நீங்கள் அங்கே பேசினீர்களே, இங்கே பேசினீர்களே, மிக அருமை; யாராலும் அப்படிப் பேச முடியாது என்று சொல்லி, வாழைப்பழத்தை வாங்கிக்கொடுத்துவிட்டு செல்வார்கள்.
குரங்குப் பிடிப்பவர்கள் வாழைப்பழத்தை வைத்துத்தான் பிடிப்பார்கள்
எனக்கு சந்தேகம்; பாப்பான் வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வருகிறான் என்றால் எதற்காக? ஒன்று அதில் விஷம் வைத்து நம்மைக் கொல்லவேண்டும்; இல்லையென்றால், அதனைக் காட்டி நம்மைக் கூண்டில் அடைக்கவேண்டும். குரங்கு பிடிப்பவர்கள் வாழைப்பழத்தை வைத்துத்தான் பிடிப்பார்கள்.

ஒருமுறை ராமகோபாலனையும், என்னையும் மோத விட்டார்கள்; பேசினோம். கலாட்டாவெல்லாம் நடை பெற்றது. பிறகு என் வீட்டிற்கு வந்தார்கள், நீங்கள் ஏன் பஸ்சில் போகிறீர்கள்? நாங்கள் ஒரு வீட்டை வாங்கித் தருகிறோம்; கார் ஒன்றை வாங்கித் தருகிறோம் என்றார்கள்.

நான் கேட்டேன், பஸ்சில் செல்கிறவர்கள் எல்லாம் கீழ்த்தரமானவர்கள் என்று முடிவு செய்திருக்கிறீர்களா என்று.

இல்லை இல்லை, உங்கள் விலை மதிப்பில்லாத காலம் வீணாகப் போகிறதே, கார் இருந்தால் நீங்கள் பத்து காரியங் களை முடிப்பீர்கள் அல்லவா என்று சொன்னார்கள்.

அவர்கள் ஒருமுறை குருதிக்கொடை முகாம் ஒன்றைத் தொடங்கி வைப்பதற்காக அழைக்க வந்தார்கள்.

நான் சொன்னேன், நான் யார் என்று தெரியாமல் நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொன்னேன்.

இல்லை, இல்லை உங்களைப்பற்றி எங்களுக்கு நன்றா கத் தெரியும். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பேசியிருக் கிறீர்கள் என்று சொன்னார்கள்.
நீங்கள் செய்வதெல்லாம் எனக்கு ஒத்து வராது!

நாங்கள் எந்தப் பகுதியில் விழா நடத்தினாலும், அந்தப் பகுதியில் செல்வாக்குள்ளவர்கள் யார் என்று பார்த்தோம்; சைதாப்பேட்டையில் உங்களைத்தான் எல்லோரும் சொல் கிறார்கள் என்று.
அவர்கள் சொன்னது பச்சைப் பொய். விஜிபி இருக்கிறார்; நடிகர்கள் இருக்கிறார்கள். நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், என்னைத்தான் எல்லோரும் சொன்னார்கள் என்று சொன்னார்கள்.

பிறகு என்னால் மறுக்கமுடியாமல், நான் சொன்னேன் நான் அந்த நிகழ்விற்கு வரவேண்டும் என்றால், நீங்கள் செய்வதெல்லாம் எனக்கு ஒத்து வராது என்று சொன்னேன்.


என்ன ஒத்து வராது என்று கேட்டார்கள்.

நீங்கள் சாமி கும்பிடுவீர்கள்; குத்துவிளக்கு ஏற்றுவீர்கள் என்று சொன்னேன்.
உடனே அவர்கள், ரிப்பன் கட் செய்வதற்கு உங்களுக்கு ஆட்சேபனை இல்லை அல்லவா என்று சொன்னார்கள்.

அதுமட்டும்தான் இருக்கும்; வேறு எதுவும் நாங்கள் செய்யவில்லை. சாமி படமே இருக்காது; தேங்காய் மற்றவை எதுவும் இருக்காது என்று சொன்னவுடன், என்னால் மறுக்க முடியவில்லை.

அப்பொழுதெல்லாம் அவ்வளவு கார்கள் கிடையாது

என்னை அழைத்துச் செல்வதற்கு கார் ஒன்று வந்தது; காருக்கு முன்பு இரண்டு பேர்; காருக்குப் பின்பு இரண்டு பேர் என்று மோட்டார் சைக்கிள்களில் பைலட் வருகிறார்கள்.

அந்த நிகழ்விற்குச் சென்றேன். ஊரிலுள்ள பெரிய மனிதர்களின் கார்கள் எல்லாம் அங்கேதான் இருக்கின்றன. நான் சொல்வது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு. அப்பொழுதெல்லாம் அவ்வளவு கார்கள் கிடை யாது; இப்பொழுதுதான் கார் வைத்திருப்பது ஒன்றும் பெரிதல்ல.
நான் சென்றதும், என்னை வரவேற்றனர். ஒரு சடங்கு மின்றி நிகழ்வு ஆரம்பித்தது.

வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் நான் என்னவெல்லாம் சொல்வேனோ, அதையெல்லாம் அவரே சொன்னார். நான் அதற்கு மேலே சொன்னேன். கடைசியில், வாலண்டரி ஹெல்த் சென்டர் வைத்திருப்பவர் நன்றியுரை ஆற்றுகிறார். பேராசிரியருடைய பேச்சை நான் இன்னும் இரண்டுமுறை கேட்டேன் என்றால், நான் நாத்திகனாகவே மாறிவிடுவேன் என்று பேசினார்.
இப்பொழுதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறு கின்றன. அதற்கு என்ன காரணம் என்றால், நான் கொஞ்சம் பக்குவமாக, கொஞ்சம் இணக்கமாக உரையாற்றுவதால், ஓகோ, இவன் நம்முடைய ஆள், இவனை இழுத்துவிடலாம் என்று அவன் நினைப்பதால்தான், இப்பொழுதுதான் திட்ட ஆரம்பித்திருக்கிறேன்.

இந்த நூலுக்குத் தலைமையிடம் கொடுக்கவேண்டும்

ஆகவே, நண்பர்களே, திராவிடர் கழகம் இந்த நாட்டிலே என்றைக்கும் இருக்கும்; இருக்கவேண்டிய  ஒரு அமைப்பு. அதற்கு இத்தகைய பணி - இந்த நூலாசிரியர் அவர்கள் எத்தனையோ நூல்களை எழுதியிருக்கிறார்கள். இந்த நூலுக்குத் தலைமையிடம் கொடுக்கவேண்டும். அப்படிப் பட்ட ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். இந்த நூலினை வெளியிடுகின்ற பெரும்பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன். நான் எதற்கு உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நீங்கள் சொல்கின்ற வேலையைச் செய்யக்கூடியவன். அதனால், அந்த மன நிறைவோடு என்னுடைய உரையை முடித்துக் கொள் கிறேன்.

- இவ்வாறு பெரியார் பேருரையாளர் முனைவர் மா.நன்னன் அவர்கள் உரையாற்றினார்.

திராவிடர் இயக்கத்தில் இணக்கம் - பிணக்கம்
என்கிற நூல் வெளிவரவேண்டும்


அன்னையார் வரவைப்பற்றி, அண்ணாவும், கலைஞரும், மற்றவர்களும் பேசியவை, எழுதியவை - அவர்களே பிறகு அன்னையாரைப்பற்றிப் பேசியவை, எழுதியவை, பாராட்டியது என்றெல்லாம் உண்டு. இங்கே நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். திராவிடர் இயக்கத்தில் இணக்கம் - பிணக்கம் என்கிற நூல் வெளிவரவேண்டும். இங்கே உள்ள இணக்கத்திற்கும், பிணக்கத்திற்கும்; மற்றவர்களுடைய இணக்குப் பிணக்குகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. - புலவர் மா.நன்னன்
 
                          ---------------------------------”விடுதலை” 26-4-2014

26.4.14

அம்பேத்கர் முகமூடியா? மோடி வாய் திறந்து சொல்லட்டுமே?


வாரணாசி தொகுதியில் வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நரேந்திர மோடி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்திருக்கிறார்.

சரியானதுதானே! இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி ஒருவருக்கு, பிரதமருக்கான வேட்பாளர் ஒருவர் மரியாதை செய்வது சான்றாண்மை மிக்க செயல்பாடு தானே என்று, அவசரக் குடுக்கைத்தனமாகச் சொல்லக் கூடும். அப்படி கருத்துச் சொல்லுவது மேலோட்ட மானதாக இருக்க முடியுமே தவிர, ஆழமானதல்ல.

சங்பரிவார், அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி. யைப்பற்றி சரிவர உணர்ந்தவர்கள் வேறு வகையாகத் தான் சிந்திக்க முடியும்.
அதுவும் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அறிவித்துத் தேர்தலைச் சந்திக்க உள்ளது.

அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவது, பசுவதைத் தடுப்பு, வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் பாதிக்கப் பட்டால், அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது உள்பட பச்சையான தனது இந்துத்துவா மனப்பான்மையை வெளிப்படுத்தக் கூடியதாய் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களோ, இந்துவாய் நான் பிறந்திருந்தாலும், நான் இந்துவாய்ச் சாகமாட்டேன் என்று சொன்னதோடு, அதனைத் தம் வாழ்நாளில் செய்தும் காட்டியவர்.

இந்து மதத்தை விட்டு, புத்த மார்க்கத்தில் ஏன் சேரப் போகிறேன் என்பதற்கான காரணத்தை இயோலா மாநாட்டில் (13.10.1935) அறிவித்தார் அண்ணல் அம்பேத்கர்.

நான் தீண்டப்படாதவனாக இந்த இந்து மதத்தில் பிறந்துவிட்டேன். இவ்வாறு நான் பிறக்க நேர்ந்ததைத் தடுப்பது என்பது என் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால், இந்து மதத்தின் மரியாதை கெட்ட இழிவு படுத்தும் சூழ்நிலையின்கீழ் நான் வாழ மறுப்பது என்பது என் சக்திக்கு உட்பட்டதேயாகும். ஆகவே, நான் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று குறிப்பிட்டாரே!
1956 அக்டோபர் 14 ஆம் நாள் நாகபுரியில் பல்லா யிரக்கணக்கானோர்களுடன் அம்பேத்கர் பவுத்தம் தழுவினார்.

அப்பொழுது அம்பேத்கரும், அவருடன் இணைந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களும் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்ன?

சமத்துவமின்மையும், ஒழுக்கமின்மையும் கொள்கை யாகக் கொண்டிருந்த என்னுடைய பழைய இந்து மதத்தைக் கைவிட்டதன்மூலம், இன்று நான் புதுப் பிறவி எடுத்துள்ளேன். கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்ற தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

விஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்று கூறுவது தவறானதும், விஷமத்தனமானதும் ஆகும். இனி நான் எந்த ஒரு இந்துக் கடவுளுக்கோ அல்லது கடவுளச்சிக்கோ பக்தன் அல்லன். நான் மூதாதையர்க்குச் சிரார்த்தம் (திதி) செய்ய மாட்டேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டாரே!

அம்பேத்கரின் கொள்கைகளும், கோட்பாடுகளும் இந்த நிலையில் உறுதியாக இருக்கும் நிலையில், இந்து மதத்தில் கூறப்படும் விஷ்ணுவின் அவதாரமான ராமனுக்குக் கோவில் கட்டுவோம் என்று கூறிக்கொண்டு தேர்தலில் நிற்கும் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட் பாளர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்யப் புறப்படுமுன் அம்பேத்கர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துவது ஒடுக்கப்பட்ட மக்களைத் திசை திருப்பும் திருகுதாளம்தானே!
அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்பற்றி மோடியின் மனப்பான்மை என்ன? மலம் எடுப்பதைத் தெய்வீகக் காரியமாக அவர்கள் நினைத்துச் செயல்படக் கூடியவர் கள் என்று எழுதியவர்தானே! அவர்களின் இழி தொழி லுக்கு ஆன்மிக மலர் சூடி அழுத்தி வைக்கும் நயவஞ்சகம்தானே அதில் அடக்கம்.

இன்னும் குஜராத் மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் குடிதண்ணீர் எடுப்பதற்குக்கூட, நேரம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதே!
போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில்கூட, குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது எத்தகைய கொடுமை! இவர்கள் எல்லாம் தீண்டாமையை அனுசரிக்கும் குற்றவாளிகள் அல்லவா!

1927 டிசம்பர் 25 அன்று மகத்தில் மாநாடு ஒன்றை நடத்திய பாபா சாகேப் அம்பேத்கர், அன்று காலை 9 மணிக்கு மனுநீதி சாஸ்திரம் சிதைக்குத் தீ மூட்டுவது போல, ஒரு குழியில் வைத்து தீ மூட்டப்பட்டதே!
அதேநேரத்தில், குஜராத் மாநிலத்தின் முதலமைச் சரான நரேந்திர மோடியின் நிலை என்ன? அம் மாநிலத்தில் மனு தர்ம சாஸ்திரம் பாடத் திட்டத்தில் வைத்துச் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே!

இப்பொழுதாவது மோடி வாய் திறந்து சொல்லட்டுமே பார்க்கலாம். தீண்டாமை - அதற்குக் காரணமான ஜாதியை ஒழிப்போம்! இந்துக் கோவில்களில் இந்து மதத்தைச் சார்ந்த எந்த ஜாதியினரும் அதற்குரிய மதக்கல்வி, பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் - அதற்கான சட்டம் செய் வோம் என்று பகிரங்கமாக அறிவிக்கட்டுமே பார்க்கலாம்.

உண்மைகளைக் களப்பலி செய்வது அல்லாமல் -  அம்பேத்கரைத் தவறாகச் சித்தரித்து கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளைத் தட்டிப் பறிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறார் - தந்திரம் செய்கிறார் மோடி என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வார்களாக!

                            ------------------------------"விடுதலை” தலையங்கம் 26-04-2014

நான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....பெரியார்இன்றையத் தினம் உண்மையிலேயே நமக்கெல்லாம் பண்டிகை நாள் போன்றதாகும் என்றாலும், இதற்காக அவர் எடுத்திருக்கிற முயற்சியும், செய்திருக்கின்ற பெரிய ஏற்பாடும், செலவும் தான் பயமாக இருக்கிறது. நண்பர் முத்து அவர்கள் ஒரு காசு செலவு இல்லாமல் பெரிய வீரராகி விட்டார். தன்னுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் நடத்தி, அதன்பின் பல பெருமைகளை எல்லாம் பெற்று, அதைத் தன் பெண்ணும் அடைய வேண்டுமென்று அவளுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் அமைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்து - காலம் பார்த்து, நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட பரிதாபத்திற்குரியவர்கள் பொறாமைப்படும்படியான அளவிற்கு அவர் வீரராகி விட்டார். நேரம், காலம், பொருத்தம் எல்லாம் பார்த்துத் தான் கண்ணகி - சீதை - சந்திரமதி - திரவுபதை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றன என்றாலும், இவற்றில் ஒழுக்கமாக நாணயமாக நடந்து கொள்ளவில்லை.

தமிழனுக்கு இதுபோன்ற ஒரு முறையே கிடையாது. இந்தக் கட்டுப்பாடு முறை எப்போது வந்தது என்றால், பார்ப்பான் வந்த பின் ஏற்பட்டது தானாகும். பார்ப்பான் இங்கு வரும்போது தேவையான பெண்களோடு வரவில்லை. இங்குள்ளவர்களைச் சரி செய்து கொண்டு வாழ்ந்தனர்.

இவர்கள் சரி செய்து கொண்ட பெண்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவர்களிடையே ஒழுக்கக் கேடுகள் ஏற்பட்டன. அதனால் பார்ப்பான் தனக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பெண்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். எப்படி அரசாங்கமானது நெருக்கடி நேரும்போது சட்டம் இயற்றிக் கொண்டு சமாளித்திருக்கிறதோ, அதுபோன்று பார்ப்பான் (சட்டம்) கட்டுப்பாடு ஏற்படுத்தினான். இதை நான் சொல்லவில்லை. தமிழனின் மிகச் சிறந்த இலக்கண நூல் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியத்தில் எழுதி இருக்கிறான். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" என்று. அய்யர் என்பது பார்ப்பனரைக் குறிப்பிடும் சொல் அல்ல. அக்காலப் பெரியவர்களை, அறிவில் சிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லாகும் என்று சில தமிழ்ப் புலவர்கள் கூறுவார்கள். இது சரியல்ல என்பதற்குத் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே" என்று. பார்ப்பனர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழேரான சூத்திரர்களுக்கும் ஆயிற்று என்று குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து அய்யர் என்ற சொல் பார்ப்பானையே குறிப்பதாகும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார்.


நானும் 100-வருடத்திற்கு இருந்து அவர்களும் (தி.மு.க அரசும்) 100- வருஷமிருந்தால் இத்திருமணத்தைக் கிரிமினலாக்கி விடுவார்கள். ஆண்கள், என்று அயோக்கியராயினரோ அன்றே பெண்களை அடிமையாக்கி விட்டான். நம் நாட்டிலே மட்டுமல்ல - உலகமே இப்படித்தான் இருக்கிறது. நம் நாட்டிலாவது நாகம்மாள், ராஜம்மாள் என்று பெண்கள் பெயரைக் குறிப்பிடுகின்றோம். ஆனால், வெள்ளைக்காரன் நாட்டில் எல்லாம் மிஸஸ் தான். பெண்ணிற்கு உரிமையில்லை. எனவே, பெண்ணடிமையைப் பற்றி எவனுமே கவலைப்படவில்லை. இந்தியாவிலேயே இதற்காகப் பாடுபடக் கூறயவர்கள் நாங்கள் ஒருவர் தான்.

பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடையவளாக இருக்க வேண்டுமென்று வள்ளுவன் சொல்கிறான் - அவ்வை சொல்கிறாள். மற்ற எல்லா புலவனும் இதைத்தான் சொல்கிறான். இரண்டு பேர்களும் சமம் என்று இம்முறையில் இருவரிடமும் உறுதி வாங்குகிறோம். அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்களோ, இல்லையோ. ஆனால் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உறுதி வாங்குகிறோம். அவர்களும் நடந்து கொள்வதாக உறுதியளிக்கின்றார்கள்.


வழக்கம் என்பது காட்டுமிராண்டி காலத்ததும், சாஸ்திரம் என்பது மிருகப் பிராயத்ததும் ஆகும்.

பொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பதும், ஜாதகம் பார்ப்பது, ஜோசியம் பார்ப்பது இவை யாவும் முட்டாள்தனமானது. மூட நம்பிக்கையானது. பெரிய பி.ஏ., எம்.ஏ., படித்தவனெல்லாம் மேதாவி, அறிவாளி எல்லாம் இதைப் பார்த்துத் தான் திருமணத்தை ஏற்பாடு செய்கின்றனர். அவ்வளவு மூட நம்பிக்கை படிந்திருக்கிறது. அறிவு வளர்ச்சி இல்லை.

இப்போது நடைபெற்ற இத்திருமணமானது 68-ஆம் வருஷ மாடல் ஆகும். 1967-ஆம் வருட மாடல் - இத்திருமணம் செல்லாதென்றிருந்தது. 1968-ஆம் வருடத்தில் சட்டப்படிச் செல்லும் என்றாகி இருக்கிறது. நாளை 1969-இல் இத்திருமண முறை எப்படி மாறுமோ சொல்ல முடியாது.

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கடங்கி செலவு செய்ய வேண்டும். ஆடம்பரமான வாழ்வு வாழக் கூடாது. பிறர் கண்டு பொறாமைப்படும்படியாக வாழாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். தங்களின் குடும்பத்தை மட்டும் நினைக்காமல் நம் சமுதாயத்தையே நினைக்க வேண்டும். நம் இனத்திற்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். மோட்சம் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கவலையற்ற தன்மையாகும். பிள்ளைகள் இல்லாமலிருப்பதும் வரவிற்கு மேல் செலவிடாமலிருப்பதும், மனிதனுக்குக் கவலையற்ற வாழ்வாகும், மோட்சமாகும். சிலர் அறிவுள்ள குழந்தைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்றார்கள். அறிவுள்ள பிள்ளையைப் பெற வேண்டுமானால் எந்தக் கடையிலே போய்ச் சாமான் வாங்குவது? பிள்ளை பிறந்த பின்தானே அதை அறிவுள்ளதாக்க நாம் தானே மாரடிக்க வேண்டும். பிறப்பதற்கு முன்பே - பெறும் போதே எப்படி அறிவுள்ளதாகப் பெற முடியும்?


------------------------ 12.07.1968 அன்று நடைபெற்ற பெருமாள் - இலங்கனி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை",- 12.08.1968

25.4.14

பெரியார் பார்வையில் நல்லதங்காள் கதை-குசேலர் சரித்திரம்

"இரணியன் அல்லது இணையற்ற வீரன்"

இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜுனன் வெகுவீரமுடன் நடந்து கொண்டதைக் காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன். நாடகங்கள் எல்லாம் குறைந்தது 2மணி நேரத்தில் முடிவு பெறவேண்டும். மத்தியில் பாட்டுக்களைக் கொண்டு வந்து நுழைப்பதால் கதையின் ஸ்வாரஸ்யம் குறைந்துபோகிறது; உணர்ச்சி மத்தியில் தடைப்படுகிறது. நாடகங்களில் இரண்டுவிதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பிப்பது. வசன ரூபமாய் காண்பிப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். 

பல உபந்யாசங்கள் செய்வதைவிட இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் கவர்ச்சியை உண்டாக்குகிறது. நம் எதிரில் நடந்த மாதிரிதான் ஆதியில் இரணிய நாடகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாக திருத்தி உபயோகப் படுத்திக்கொண்டார்கள். பழைய நாடகங்களை நாம் சீர்திருத்திப் புதிய முறையில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நாடகங்களில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த பழைய நாடகங்கள் மக்களை மூடர்களாயும், அர்த்தமற்ற கொள்கையுடை யவர்களாயும் செய்து இருக்கின்றன. நாடகத்தின் மூலம் அறிவு வளர இடமிருக்கிறது.

 நல்லதங்காள் கதை உலகம் அறிந்தது. நல்லதங்காள் மிகவும் கற்புடையவள் என்று கூறப்படுகிறது. வாழைப்பட்டையை விறகாய் வைத்து எரித்ததாகவும், மணலை அரிசியாகச் சமைத்ததாகவும், உயரத்தில் இருந்த மாங்கனியை கைக்கு கீழே தருவித்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வளவு பதிவிரதைத் தன்மை வாய்ந்த ஒருவர் வாழ்ந்த நாட்டிலே 12 வருடகாலம் தொடர்ச்சியாய் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டதென்றால் அவருடைய பதிவிரதத் தன்மை எவ்வளவு ஒழுக்கத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். (கூட்டத்தில் ஒரே சிரிப்பு; ஆரவாரம்)

அதே போன்று குசேலர் சரித்திரம் பிரமாதமாய் நடத்திக் காண்பிக்கப்படுகிறது. பார்ப்பனர்கள் தாங்கள் பிச்சை ஏற்பதற்குச் சாதகமாய் அதை தெய்வீக கதையாய் சிருஷ்டித்துவிட்டு பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்துங்கூட அவன் தரித்திரனாய் இருந்தான் என்றால், பகுத்தறிவு உள்ளவன் எவனாவது நம்பமுடியுமா? வருடத்திற்கு ஒரு குழந்தை பெற்றால்கூட முதல் குழந்தைக்கு 27 வருடமாகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 67 இருக்கலாம். (கூட்டத்தில் ஒருவர் ஒரு முறைக்கு 4 குழந்தை பெற்று இருக்கலாம்) அப்படி இருந்தாலும் வயது வந்த பிள்ளைகள் கூலி ஜீவனம் செய்தாவது மேற்படி குடும்பத்தை ரக்ஷித்து இருக்காதா? இதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் ஏதாவது பொருள் இருக்கிறதா? இப்படியாக ஒவ்வொரு கதையும் பாமர மக்களின் அறிவை மழுங்கச் செய்வதாய் இருக்கின்றது.

ஆகையால், நாடகங்களை புதிய முறையிலே திருத்தி மக்களுக்குப் பயன்படும்படி செய்ய நாடகாசிரியர்கள் முன்வரவேண்டும். வெறும் சங்கீதமும், பாட்டும் வேண்டியதில்லை. கருத்து இருந்தால் போதும். இந்த நாடகம் சென்னையில் இரண்டுமுறை காண்பிக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இதுவே மூன்றாம் முறை. இனி இம்மாதிரி நாடகங்களை நாடெங்கும் நடத்தினால் மக்கள் உணர்ச்சி பெற்று மூட நம்பிக்கைகளையும், அர்த்தமற்ற கொள்கைகளையும் உடைத்தெரிவார்கள். தோழர் அர்ஜுனன் தலைமையில் நடந்த இந்த நாடகத்தை நான் பாராட்டுகிறேன்.

--------------------------------- வாணியம்பாடியை அடுத்த அம்பலூரில் 04.07.1936 இரவு பாரதி சபையாரால் நடத்தப்பெற்ற "இரணியன் அல்லது இணையற்ற வீரன்" நாடகத்துக்கு தலைமையேற்று ஆற்றிய உரை. "குடி அரசு" சொற்பொழிவு 19.07.1936

பார்ப்பான் மிரட்டலுக்கு நடுங்காதீர்!-பெரியார்


என் மீது கேஸ் (வழக்கு) உள்ளது; பெரிய கேஸ் 5, 6-வருடம் வரை சிறையிலிடும்படி தண்டிக்கலாம். 2-வருடமாவது தண்டிப்பார்கள். அதுவும் தண்டிக்கவில்லை விட்டுவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்; 3000- பேருக்கு மேல் உள்ளே வைத்துவிட்டு நான் வெளியே இருக்க மனம் வருமா? மற்றவர்கள் என்னைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை; எனக்கே திருப்தி இருக்குமா? 3000-உடன் 3001-என்று இருக்க வேண்டும். எங்காவது இந்த அக்கிரமம் உண்டா? சாதி ஒழிய வேண்டும் என்பதற்காக எவ்வளவு கொடுமை!

திருட்டுப்பயல்கள் 4-பேர் சேர்ந்து நடத்துகிற அரசாங்கமாக இருந்தால் கூட இந்தக் கொடுமை நடக்குமா?

நீங்கள் கவனிக்க வேண்டியது இதுதான்; சிறை உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவேண்டும் என்று நினைக்காதீர்கள்! நீங்கள் எப்படி அங்குப் போவது என்று நினைக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? அவர்கள் எல்லோரும் அவர்களுக்காகவேதான் சிறை சென்றார்களா? அவர்கள்தான் மனிதர்களா? நாமும் நமது பங்குக்குச் செல்ல வேண்டும் என்கிற உணர்ச்சி ஏற்பட்டு மளமளவென்று காரியம் ஆக வேண்டும். அதுதான் உண்மையான சமுதாயக் கொந்தளிப்பு ஆகும். அதற்குத் தான் உண்மையான சமுதாயப் புரட்சி என்று பெயர்.

வருத்தத்தோடு சொல்கிறேன். அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள்! ஒரு காற்றில் அடித்துக் கொண்டு போய்விடும். இக்கிளர்ச்சி அடிக்க அடிக்க பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக்கூடியதல்ல! அத்தனை பேருக்கும் சம்பந்தமான காரியம்! மந்திரிகளுக்கே சாதி ஒழியவேண்டாம் என்ற எண்ணம் இருக்காது. எனக்குத் தெரியும் அடக்குமுறையை நம்பாதீர்கள்! அடக்கு முறையை நம்பிப் பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு விடாதீர்கள்! இந்த உணர்ச்சியை ஒருக்காலும் அடக்குமுறை மூலமே நசுக்கிவிட முடியாது. இன்று மந்திரிகள் என்னைப் பைத்தியக்காரனாக நினைக்கலாம். ஏன்? அவர்கள் இருக்கும் இடம் அப்படிப்பட்டது. 100-க்கு 97-பேர் ஆக உள்ள ஒரு இனத்திற்கு அவர்கள் மனம் புண்படும் காரியம் நடந்தால் நாட்டை இராணுவம்தானே ஆளவேண்டும்?

வடநாட்டான் விடாதே பிடி, அடை என்கிறான்! யாரைச் சொல்கிறான் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? உன்னைச் சொன்னால் என்ன? என்னைச் சொன்னால் என்ன?

அரசாங்க மரியாதை போய்விடும் என்று கருதினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதையாவது சொல்ல வேண்டுமே! நான் இப்போது விட்டுவிடுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன? சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்றுதானே பார்ப்பான் என்னைச் சொல்லுவான்? அரசாங்கத்தின் கடமை, புத்திசாலித்தனம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டம் கொண்டு வந்து அடக்கிவிடலாம் என்பதே போதுமா? ஒரு சட்டம் பண்ணினால் போதாதே? அடுத்த ஒவ்வொரு காரியத்திற்கும் சட்டம் செய்ய வேண்டுமே?

நேரு படத்தை எரித்தால், சிலையை உடைத்தால் இப்போதுள்ள சட்டம் ஒன்றும் செய்ய முடியாதே! காந்தியாவது செத்துப் போனவர். அவர் பெயரை இழுப்பதால் நாமும் அவரை இழுக்கவேண்டியுள்ளது. உயிரோடு இருக்கிற நேரு படத்தைக் கொளுத்தினால் இனிமேல் அதற்கும் சட்டம் கொண்டு வருவார்களா? எதற்கு இவற்றையெல்லாம் செய்கிறோம்? பதவிக்குவரவா? அல்லது அரசாங்கத்தைக் கைப்பற்றவா? அரசினரைக் கவிழ்க்கவா?

இன்று கைதானவர்கள் பட்டியல் 3000-போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்திருந்த சில இடங்களுக்குப் போலீசே (காவல் துறையே) போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பகுதிப் பேரைக்கூடப் பிடிக்கவில்லை. அதற்கே அங்கிருந்து லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு திருச்சிராப்பள்ளி வந்து திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால்குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்ப திருச்சிக்குக் கொண்டுவந்து இப்படிப் பந்து விளையாடியிருக்கிறார்கள்!

3000-பேருக்கு மேல் போயிருக்கிறார்கள் என்று பெருமைப் படவுமில்லை. 1000- பேர் போனாலும் வெட்கப்பட்டிருக்கவும் மாட்டேன்; ஏன் ஓட்டுக்கு, பதவிக்கு, விளம்பரத்திற்காகவா இந்தக் காரியத்தைச் செய்கிறோம்.

உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது. இன்னுமா பரீட்சை பார்க்க வேண்டும்?

சிலபேர் "இந்தக் காரியத்திற்கு இணங்கிவிட்டால் இன்னொரு காரியம் ஆரம்பிப்பார்" என்று யோசிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு காரியம் ஆரம்பிப்பதாயின் முக்கியம் என்று கருதி ஆரம்பிப்போமே தவிர விளையாட்டுக்கா செய்வோம்?

அடுத்த காரியம் திராவிட நாடு இல்லையென்றாலும் தமிழ்நாடு தமிழருக்கு வரவேண்டுமா வேண்டாமா? அடுத்த காரியம் அதுதான்!

இந்தச் சட்டம் என்றால் என்ன? வடநாட்டான் தூண்டுதல் தானே? என் மீது வழக்கு எப்படி வந்தது? 2-நாள் முந்தி 'ஹோம் மினிஸ்டர்' (உள்துறை அமைச்சர்) சி.அய்.டி ரிப்போர்ட்டைப் பார்த்தோம் பத்திரிகைக்காரர்கள் சொல்வதற்கும் அதற்கும் வித்தியாசம் இருக்கிறது. (பத்திரிகைக்காரர்களைப் பார்த்து) "உங்கள் ரிப்போர்ட்டைக் கொண்டு வாருங்கள்! ஒத்திட்டுப்பார்க்கலாம்; அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை" என்று சொல்லி விட்டாரே!

இந்த மாதிரியெல்லாம் சொல்லி விட்டு திடீரென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஆச்சாரியார் சொல்கிற மாதிரி வடநாட்டான் உத்தரவு வந்தது நடவடிக்கை எடுக்கிறார்கள் அவ்வளவுதான்.

இன்று டெல்லியில் நேரு பேசியிருக்கிறார்; பத்திரிகையில் பார்த்தால் தெரியும்! "இவையெல்லாம் காட்டுமிராண்டித்தனம்; சிலபேர் அவர்களுக்கு உள் ஆளாக இருக்கிறார்கள் (அதாவது இந்த மந்திரிகள் உள் ஆளாக இருக்கிறார்களாம்) நானே நடவடிக்கை எடுக்க வேண்டுமா" என்று பேசியிருக்கிறார்.

இவர்களைக் தவறாக நினைத்துப் பயனில்லை. இந்த நாட்டை வட நாட்டான் ஆள்கிறான்; அவன் உத்தரவு போடுகிறான்; அதன்படி நடக்கிறார்கள்!

வடநாட்டுப் பத்திரிகையெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலறுகின்றன. படம் போடுகிறார்கள் இது 'சங்கர்ஸ் வீக்லி' என்ற பத்திரிகை. இதில் படம் போட்டிருக்கிறான்; நான் பார்ப்பானை வெட்ட கையில் கோடாரி வைத்துக் கொண்டு ஓங்கிக் கொண்டு நிற்கிறேன். கருப்புச் சட்டைக்காரர்கள் பார்ப்பானைப் பிடித்து இழுக்கிறார்கள் பார்ப்பான்கள் மூலைக்கு மூலை ஓடுகிறான்கள். காமராசரை போலீஸ்காரன் போல போட்டிருக்கிறான். அவரைப் பார்த்து ஒரு பார்ப்பான் அய்யோ என்று கத்துகிறான். அவர் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு இதெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டது என்கிறாராம். இப்படிப் படம் போடுகிறான்.

இன்னொரு படம்: நான் நிற்கிறேன். வட நாட்டு மந்திரி - போலீஸ் மந்திரி பந்த் என் மீது நடவடிக்கை எடுக்க காமராசரைப் பிடித்தத் தள்ளுகிறார். அவர் அப்போதும் என்னிடம் நெருங்கப் பயப்படுகிறார். இப்படி ஒரு படம் போட்டிருக்கிறான். மந்திரிகள் நடுங்குகிறார்கள். மாஜிஸ்திரேட்டும் இந்த மந்திரி தயவை எதிர் பார்ப்பவர்கள். ஜில்லாதாஜிஸ்ரேட் மாத்திரமல்ல, அய்க்கோர்ட் ஜட்ஜ் கூட (உயர் நீதிமன்ற நீதிபதி) இப்போது மந்திரிகள் தயவை எதிர்பார்த்து ஆகவேண்டும்.

என் வழக்கில் முதலில் அவர்களேதான் சொந்த மூச்சலிகாவில் நீங்கள் போகலாம் என்றார்கள். பிறகு திடீரென்று 25-ஆம் தேதி மூச்சலிக்காவை ரத்து செய்ய வேண்டும். பழையபடி ஊர் ஊராகப் போய் குத்து வெட்டு என்று பேசுகிறான் என்று விண்ணப்பம் போடுகிறான். நினைத்தால் கஷ்டமாகத்தான் உள்ளது. எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறான்? 20-ஆம் தேதி எங்களிடம் கையொப்பம் வாங்கி இருக்கிறான்; 22-ஆம் தேதி மதுரையில் எனக்குச் சம்மன் சார்வு செய்தான்; 22-ஆம் தேதி மாலை வரையில் எங்கும் பேசவில்லை; கூட்டமுமில்லை நான் வாய் திறக்கவேயில்லை. பழையபடி 'குத்து வெட்டு என்று பேசுகிறான்' என்று சொல்கிறான். எப்போது பேசினார் என்றால் 17, 18, 19- ஆம் தேதி பேசியிருக்கிறார் என்கிறான். என்னிடம் கையொப்பம் வாங்கி கொண்டு 20-ஆம் தேதி விட்டிருக்கிறான். அதிலும் பேசக்கூடாது என்ற நிபந்தனை ஒன்றுமில்லை. இருந்தும் பேசாதே போதே 22-ஆம் தேதி சம்மன் வருகிறது 'ஏமாற்றி விட்டார்', 'நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்', 'சாட்சிகளைக் கலைப்பார்', 'சாட்சிகளுக்குத் துன்பம் கொடுப்பார் அதாவது காயப்படுத்துவார்' இப்படி ஏதேதோ கேவலமாக எழுதியிருக்கிறான்.

ஜட்ஜே (நீதிபதி) கேட்டாராம். என் காதில் விழவில்லை. சாட்சியைக் கலைப்பார் என்கிறாயே எல்லா சாட்சியும் போலீஸ்காரர்கள்தானே? அதுவும் ரிக்கார்டு சாட்சிதானே; அதை எப்படி கலைப்பார்? என்று கேட்டதற்கு அந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் (அவர் பார்ப்பனர்) போலீஸ்காரர்கள் எல்லாரும் அந்த உணர்ச்சி உள்ளவர்கள்; அதாவது என் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று பதில் சொல்கிறார். என்ன அக்கிரமம்? நீதி கெடுத்துவிடுவார் என்கிறான்; நான்தான் எதிர் வியாஜ்ஜிமே (எதிர் வழக்கு) ஆடப்போவதில்லை என்கிறபோது நீதி எப்படிக் கெட்டுப்போகும்? அந்த நீதிபதிக்கு, எங்குப் பேசினார்? எந்த தேதியில் பேசினார்? ஆதாரமென்ன? என்று கேட்டு 20-ஆம் தேதிக்குப் பிறகு எங்கும் பேசவில்லையே! ஆகையால் இந்த மனுவைக் கேன்சல் (தள்ளுபடி) செய்கிறேன் என்று சொல்லத் தைரியம் வரவில்லையே? என்னைக் கேட்கிறார் "இனிமேல்" பேசவில்லை என்று எழுதிக்கொடு" என்கிறார்.

என்னய்யா, நான்தான் பேசவே இல்லை என்கிறேன் இனி மேல் பேசவில்லை என்று எழுதிக்கொடு என்கிறீர்களே என்றால் "உனக்கு நான் சொல்வது புரியவில்லை. நீ சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றுதான் எதையாவது எழுதிக் கொடு; இப்ப, நீ வாயால் சொல்கிறாயே அதையே எழுதிக் கொடு" என்கிறார். என்னய்யா இது உங்கள் எதிரேயே சொல்கிறான் போலீஸ்காரன் எல்லாம் என் கட்சி என்று; அய்க்கோர்ட் (உயர்நீதிமன்றம்) போனாலும் நீதிபதிகூட என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான். பூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான்.

இப்படிப் பித்தலாட்டம் செய்கிறவர்கள் நான் ஏதாவது எழுதிக் கொடுத்தால் "எழுதிக் கொடுத்துவிட்டான்! எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று பத்திரிக்கைக்காரன் எல்லாம் பிரச்சாரம் செய்வானே? நான் பொதுவாழ்வில் இருப்பவன் அது பற்றியும் கவலைப்பட வேண்டும். நான் வேண்டுமானால் உடனடியாக 'வெட்டு' 'குத்து' என்று சொல்லவில்லை என்று எழுதித் தருகிறேன் என்றேன். 'உடனடியாக' என்று போட்டிருக்கிறாயே அந்த வார்த்தையை எடுத்துவிடு என்றார்.

"நான் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அது முடியாவிட்டால் வெட்டு, குத்து என்று சொல்ல வேண்டிய அவசியம் வந்தால் சொல்லுவேன் என்றுதான் இப்போதும் சொல்கிறேன். வேண்டுமானால் உங்கள் விசாரணை முடியும் வரையில் அதுபோலச் சொல்லவில்லை. அதற்குமேல் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் மூட்டை முடிச்சோடு வந்துவிட்டேன்; என்னைத் ஜெயிலுக்கு அனுப்பிவிடுங்கள்; நிம்மதியாக இருப்பேன்", என்றேன். பின்னர் ஏதேதோ செய்து எழுதி வாங்கியதாகப் பேர் செய்து கொண்டு விட்டார்கள்.

நான் 23-ஆம் தேதி இருக்கக்கூடாது என்பது எண்ணம்; அதற்கு ஏதேதோ காரணம் சொல்லி (சிறையின்) உள்ளே பிடித்துப் போடு என்றான் திரும்ப சீரங்கம் கூட்டத்திற்குப் புறப்படும் நேரம் வந்ததும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால் பார்ப்பான் மிரட்டினால் எல்லாம் நடுங்குகின்றன. ஒரு மந்திரி நினைக்க வேண்டாமா?

ஆகவே வடநாட்டு தென்னாட்டை அடிமை மாதிரி நடத்துகிறது; எதுவும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை; எனவே தென்னாட்டைத் தென்னாடே ஆளவேண்டும். அடுத்து இந்தக் காரியம் தான் செய்யப்போகிறோம்.

இந்திய ராஜ்ஜிய - இந்திய யூனியன் ராஜ்யப் படத்தைக் கொளுத்தப் போகிறேன். அதற்கும் ஒரு சட்டம் கொண்டுவர தடுப்புக்காவல் சட்டத்தின்படி பிடித்துப்போடுவேன் என்கிறான். அதாவது முத்துராமலிங்கத் தேவரைப் போட்ட மாதிரி எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் யாருக்கும் ஒரு சிறு கேடும் இல்லாமல் அமைதியாக நடத்திக் கொண்டு வருகிற எனக்கும் அதுவா? நடக்கட்டுமே!

ஓர் அதிசயமான சம்பவம்! நான் சிறையிலிந்து வந்ததும் சொன்னார்கள்: சிறையிலிருந்து வரும் போதே போலீஸ்காரர்களைக் கேட்டேன். காரில் வரும்போது சொன்னார்கள் - ஏதோ நாலுபேர் குடுமி பூணூல் வெட்டப்பட்டிருப்பதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்; செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை என்றார்கள். இங்கு வந்ததும் சிலர் சொன்னார்கள். சேர்ந்து பார்ப்பனர் தாங்களே இப்படிச் செய்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஒரு பார்ப்பன மிராசுதாரர் தூண்டிவிட்டிருக்கிறார். தன் ஆட்களை வைத்தே இதுபோல ஒரு காரியம் செய்து இருக்கிறார்.

நம் தோழர்கள் மீது பழி சுமத்த முயற்சி நடக்கிறது; (காவல்துறையினர்) போலீஸ்காரர்கள் இதற்குக் குப்பைக்கூளம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இது போலச் செய்து கொள்கிற நிலை வந்துவிட்டது என்றால் மகிழ்ச்சிதான்.

இன்றும் சொல்கிறேன். கழகக்காரர்கள் அதுபோல நடந்திருப்பார்களானால், வெட்கப்படாமல் சொல்கிறேன், அது தவறு. அவர்கள் கழக்கக்காரர்கள் அல்ல; கழகக்காரர்கள் அதுபோல நடந்திருக்க மாட்டார்கள், பூணூல் அறுப்பதும் குடுமி வெட்டுவதும் என் திட்டத்தில் இல்லாமலில்லை; ஆனால் அதை இப்போது செய்தால் அது தவறுதான்.

உயர்ந்த சாதிக்காரன் என்பதற்காக அதைக் காட்டிக் கொள்ளத்தானே உச்சிக்குடுமி, பூணூல். அதைப் பார்க்கும்போது எங்கள் இரத்தம் தொதிக்குமா இல்லையா?

ஆகவே ஓட்டல் போர்டுகளில் (உணவகப் பெயர்ப் பலகைகளில்) பிராமணாள் என்பதை அழிக்க வாய்தா கொடுத்ததுபோல் இதற்கும் வாய்தா கொடுப்பேன். ஆனால் இப்போது நடந்திருப்பது கழகத் தோழர்களால் என்று சொல்வது தப்பு உங்களுக்குத் தெரியாது. சென்னையில் பார்ப்பான் முகத்தில் தார் ஊற்றியதாகப் புகார் வந்தது. அவனே ஊற்றிக் கொண்டானா? யார் ஊற்றினார்கள் என்பது தெரியாது. போலீஸ்காரர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். "எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரையாவது ஒருவரை ஒத்துக் கொள்ளச் சொல்லுங்கள். எச்சரிக்கை செய்து விட்டுவிடச் சொல்கிறோம். இல்லாவிட்டால் எங்களுக்குக் கஷ்டமாகும் என்றார்கள்" நானும் ஏமாந்துதான் போய்விட்டேன். தோழர்களிடம் சொல்லி ஒருவரை ஒத்துக் கொள்ளுமாறு சொல்லச் செய்தேன். ஒரு குற்றமும் அறியாத ஒருவர் ஒத்துக் கொண்டார். அபராதம் போட்டார்கள். அதைக்கூட போலீஸ்காரர்கள் தான் தந்தார்கள். ஆனால் அது என்ன ஆயிற்று என்றால் அதை வைத்துத்தான் தடையுத்தரவு போட்டார்கள்; போட முடிந்தது.

------------------------------ 28.11.1957-அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஈ.வெ.ரா பெரியார் சொற்பொழிவு. "விடுதலை", 30.11.1957