Search This Blog

31.10.14

தாழ்த்தப்பட்டோரும் திராவிடர் கழகமும்!தோழர்களே, இன்று யான் கூறப்போகும் கருத்துகள் சில பேருக்குப் பிடிக்காமலிருக்கும். எனினும் தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையோராகக் கூடியிருக்கும் இக்கூட்டத்தில் அம்மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே இன்று பேச ஆசைப்படுகிறேன்.

 
இன்று நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்துவரும் இழிநிலையை ஒழித்து, மற்ற சமுதாயம் போன்று வாழ வேண்டுமானால், அம்மக்களின் பேரால் உள்ள பெடரேஷன் தீவிர கொள்கையுடையதாயிருத்தல் வேண்டும். எக்காரணத்தாலோ அவ்வாறில்லை. அதைப்பற்றி யான் குறைவாகவோ வேறு விதமாகவோ பேச இஷ்டப்படவில்லையென்றாலும், திராவிட நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவுப் பட்டமும், தொல்லைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால் திராவிட இயக்கத்தினால் தான் முடியுமேயன்றி வேறில்லை ஏன்? திராவிடர் கழகம் என்ற ஒன்றுதான் இந்நாட்டில் பார்ப்பான் என்ற ஒரு சுயநல ஏமாற்றுக் கூட்டமும் பறையன் என்ற பேரால் உழைத்து உழைத்து எலும்புக்கூடு போன்ற தோற்றத்துடன் ஒரு பெருங்கூட்டமும் இருக்கக்கூடாதென்று திட்டம் வகுத்து நடைமுறையில் உருவான போராட்டமும் நடத்தி வருகிறது. இப்படிக் கூறுவதால் என் நண்பர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உங்களுக்கு பலன் ஒன்றும் கிடைக்காது என்று கருதுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களுக்கு அவரால் அல்லது அவரது பெடரேஷனின் தொண்டினால் ஒரு சிலருக்குப் பதவி, உத்தியோகம் கிடைக்கலாம். ஆனால், பஞ்சமன், பறையன் என்று சட்டத்திலிருப்பதை ஒழிக்க முடியாது. அந்த இழிநிலை ஒழித்து உங்களை மனிதத் தன்மையடையச் செய்யப்போவது திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதை வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி எச்சரிக்கை கூறுகிறேன்.

 
என் நண்பர் ஓமத்தூரார் கூடத்தான் இன்று முதன் மந்திரி, தோழர் பக்தவச்சலம், சுப்பராயன், கோபால் ரெட்டியாரும் தான் மந்திரிகள். தோழர் சிவஷண்முகம் சட்டசபைத் தலைவர். முனுசாமிப்பிள்ளை மாஜி மந்திரி, தோழர் சிவராஜ் மேயராகவும் இருந்தார்; மத்ய சட்டசபை மெம்பருங்கூட ஆனால், இவ்வளவிருந்தும் இன்றைய இந்துலா சட்டப்படி இவர்கள் அனைவரும் பஞ்சமரும் சூத்திரருந்தானே? அதில் ஏதாவது மாற்றமடைந்ததா? எனவே, நமது திராவிட இனத்துக்கு இன்று வேண்டுவது பதவியல்ல; பார்ப்பனியத்தால் பாதாளத்தில் அழுத்தப்பட்டுள்ள நம் இனத்திற்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்க வேண்டிய புரட்சியை நாம் செய்ய வேண்டும். அவ்வித புரட்சிக் கொள்ளையைத்தான் இன்று திராவிடர் கழகம் மேற்கொண்டு தற்போதுள்ள வசதிக்கேற்ற அளவு பணிபுரிந்து வருகிறது.

 
எனதருமை தாழ்த்தப்பட்ட மக்களே, இன்று நீங்கள் முஸ்லீம்களை விட முன்னணியிலிருக்க வேண்டியவர்கள். முஸ்லிம்களுக்கு இனஉணர்ச்சி என்ற முறுக்கையேற்றியது எது? தனித் தொகுதி என்ற தத்துவமே. உங்களுக்கும் அவ்வாறே அளிக்கப்பட்டதை காந்தியாரின், காங்கிரசின், பார்ப்பனியத்தின் சூழ்ச்சிக்கும், மிரட்டலுக்கும், தயவுக்கும் டாக்டர் அம்பேத்கரிலிருந்து காலஞ்சென்ற என் நண்பர் எம்.சி. ராஜா வரையில் ஏமாந்து போனார்கள். இதனால் உங்களின் முன்னேற்றத்திற்குக் கிடைத்த நல்ல அரசியல் வாய்ப்பைத் தற்கொலை செய்து கொண்டதாயிற்றே தவிர வேறில்லை. தனித் தொகுதியிருப்பதால் தான் முஸ்லிம்களின் உண்மைப் பிரதிநிதிகள் இன்று சட்டசபையிலிருந்து அவர்களின் இனத்துக்காக பாடுபடுகிறார்கள். ஆனால், கூட்டுத் தொகுதியால் பிரதிநிதிகள் முதல் தேர்தலில் பெருவாரியான ஓட்டுப் பெற்றும் இரண்டாவது தேர்தலில் காங்கிரசுக்கு கையாள்களாக இருக்கும், சமய சஞ்சீவிகளாக இருந்து வருபவர்கள் வெற்றி பெற நேர்ந்தது. இதை நான் கூறத் தேவையில்லை இன்று சட்டசபையிலுள்ள தாழ்த்தப்பட்ட மேம்பர்கள் காங்கிரசின் கைப்பாவைகளாகத்தானே இருந்து வருகிறார்கள்? இது மட்டுமல்ல; அப்படித்தானே இருக்க முடியும், காங்கிரஸ் தயவில் செல்பவர்கள்? எனவே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்று அவசரமாக வேண்டுவது வயது வந்தோர் அனைவருக்கும் ஓட்டுரிமையும், தனித் தொகுதியுமேயாகும். தாழ்த்தப்பட்ட தோழர்களில் சிலரும், அவர்களின் தலைவரும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி மறைமுகமாக தவறான பிரசாரம் செய்து வருவதைப்பற்றி அடிக்கடி என்னிடம் அந்த மக்களாலேயே புகார் செய்யப்பட்டு வந்தது. நான் அதைப்பற்றி இதுவரை கவலைப்பட்டதில்லை. இனியும் கூறுகிறேன். தனிப்பட்ட இப்பேர்ப்பட்டவர்களைப் பற்றி நாம் கருத்தில் கூட நினைக்கக் கூடாது. ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டுகிறேன்.

 

இந் நாட்டைப் பொறுத்தவரை தீண்டப்படாத மக்களின் உரிமைக்காக கடந்த 30- ஆண்டுகளாகவும் இன்றும் போராடி சில காரியங்களில் வெற்றி பெற்றுமிருப்பது சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும், அதாவது இன்று திராவிடர் கழகம் என்ற பேரால் உங்களின் - ஏழைகளின் கட்சியாக விளங்கும் திராவிடர் இயக்கமுமே என்பதை மறப்பவனோ அன்றி மறுப்பவனோ இருப்பானாகில் அவன் மனிதத் தன்மையற்றவன் என்றே கூறுவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கே பெரிதும் உழைக்கும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி குழி தோண்டுவதையே அம்மக்களில் ஒரு சிலரின் போக்காக இருந்து வருகிறது. அவர்களின் உட்கருத்தையும் யான் அறிவேன். ஆனால், திராவிடர் கழகம் அதற்கு இடம் கொடுத்து ஏமாந்து விடுமென்று எதிர்பார்ப்பது வீணேயாகும்.

 
கடைசியாக ஒன்று கூற ஆசைப்படுகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் யான் யாரையும் சேர வேண்டாமென்று கூறவில்லை. அதில் நம்பிக்கையுடையவர்கள் அதில் சேர்ந்து திராவிடர் கழகத்தினால் ஏற்படும் நன்மைகளையும்கூட பெற்றுக் கொள்ளட்டும். ஆனால், திராவிடர் கழகத்தில் சேர்ந்துள்ள சேர ஆசைப்படும் தாழ்த்தப்பட்ட தோழர்கள் திராவிடர் கழகக் கொள்கைக்கு ஏற்பவே நடக்க வேண்டும். கருப்புச் சட்டை அணிய வேண்டும். திராவிடர் கழக வெற்றி தாழ்த்தப்பட்டோரின் முக்கிய வெற்றி என்பதை மறக்கக் கூடாது.

 
தவிர, நாட்டுப் பிரிவினையொன்றே நம் இனத்தாருக்கும், நாட்டாருக்கும் நன்மை பயக்கும் என்று மற்றும் இந்துமதத்தின் பேரால் நடக்கும் கொடுமைகளையும், இன்றைய ஆட்சியினரின் போக்கையும் விளக்கிப் பேசினார். தோழர் டி.பி. பழனியாண்டி நன்றிகூற கூட்டம் இரவு 9.30- மணிக்கு முடிவுற்றது.

----------------------------------- 20.05.1947-இல் தூசூரில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "குடிஅரசு",21.05.1947

30.10.14

நடுநிலை பிறழ்ந்து யாருக்கும் சகாயம் செய்யாத அதிகாரி


அய்.ஏ.எஸ். அதிகாரி சகாயம் என்னும் பெயர் ஊட கங்களில்  அதிகம் இடம் பெறும் பெயராகி விட்டது - இதற்குத் தமிழ்நாடு அரசின் அணுகுமுறைதான் காரணம்.

கனிம குவாரிகளில் ஊழல் அதிகரித்து விட்டது; பெரும் சுரண்டல் நடைபெறுகிறது, இதனால் தனி நபர்கள் பெரும் பயன் அடைகிறார்கள்; அரசுக்கு வர வேண்டிய நிதி தனிப்பட்டவர் பீரோவுக்குள் செல்கிறது என்ற குற்றச்சாற்று பரவலாக மக்கள் மத்தியில் நிலவுகிறது; ஊடகங்களில் அவ்வப்போது கசிந்தும் வருகின்றன.


இந்தப் பகல் கொள்ளை தொடர்பாக சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அய்.ஏ.எஸ். அதிகாரியை விசாரணை அதிகாரியாக - சட்ட ஆணையராக நியமித்தது.


சகாயம் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியராக 2011 மார்ச்சு முதல் 2012 மே வரை பணியாற்றியவர். அந்தக் கால கட்டத்தில் மேலூர் வட்டாரத்தில் ரூ.16 ஆயிரம் கோடி அளவு கிரானைட் நிறுவனங்களில் முறைகேடு நடந்துள்ளது என்று அரசுக்கு அறிக்கை கொடுத்தவர் ஆவார்.


அதனை மனதிற் கொண்டுதான் சகாயம் அவர்களை விசாரணை அதிகாரியாக நியமித்து இரண்டு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் (முதல் அமர்வு) உத்தரவு பிறப்பித்தது (11.9.2014).


சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழ்நாடு அரசு. மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அதோடு நின்றதா தமிழ்நாடு அரசு? சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.

இந்த மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கனிமக் குவாரி குத்தகைகளை ரத்து செய்தாகி விட்டது. மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் சகாயம் என்ற அதிகாரியை உயர்நீதிமன்றம் நியமித்து விட்டது. இது ஓர் அரசின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாகும் மதுரை யில் 175 கிரானைட் குவாரிகள்மீதான ஆய்வுகள் முடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. எனவே அதிகாரி சகாயத்தின் விசாரணை இனி தேவைப்படாது. இதனால் மேலும் கால தாமதமும், குழப்பமும்தான் விஞ்சும் என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவைத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், சத்திய நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது.


தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்கெனவே உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதன் மூலம் ஒரு மாத காலத்தை தமிழ்நாடு அரசு வீணடித்து விட்டது. தமிழ்நாடு அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவாக விதிக்கப்படுகிறது. நான்கு நாட்களுக்குள் அதிகாரி சகாயம் கேட்கும் தேவை யானவற்றை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும். மாநில அரசிடமிருந்து இடையூறு ஏற்பட்டாலோ, உதவிக் குறைவு ஏற்பட்டாலோ அதிகாரி சகாயம் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கறாராக ஆணை பிறப்பித்து விட்டது சென்னை உயர்நீதிமன்றம்.


இத்தகைய ஒரு தீர்ப்பு அரசுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்பதில் அய்யமில்லை. இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் அணுகுமுறையும், செயல்பாடுமேயாகும்.

மடியில் கனமில்லை என்றால் எந்த அதிகாரி விசாரித்தால் தான் என்ன என்ற எண்ணம் வரும். தமிழ்நாடு அரசு நடந்து கொண்டுள்ள போக்கைக் கவனிக்கும் சாமான்ய மனிதன்கூட  தமிழ்நாடு அரசு தரப்பில் ஏதோ தவறு இருக்கிறது; அதன் காரணமாகத் தான் நேர்மையான ஓர் அதிகாரி விசாரணை நடத்தக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது என்று நினைக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.


சாதாரணமாக முடிய வேண்டிய ஒன்றை மேலும் சிக்கலாக்கிக் கொண்டு விட்டதே தமிழ்நாடு அரசு.


திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டமா? அதனை ஏற்க மாட்டோம்  - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமா? அது திமுக அமைச்சர் முன் னின்று நடத்திய திட்டம் - இப்படி எதற்கெடுத்தாலும் அரசியல் .கண் கொண்டு பார்த்ததும் பொது வானவர்கள் மத்தியில் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது.


மக்கள் நல அரசு என்ற கண் கொண்டு ஒரு பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர, வேறு உணர்ச்சிகளுக்கு இடம் தந்தால் அது எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும். சென்னை உயர்நீதி மன்ற அமர்வின் இந்த ஆணைக்குப் பிறகாவது தமிழ்நாடு அரசு தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது!


சகாயம் என்ற அதிகாரி யாருக்கும் சகாயமாக நடந்து கொள்ள மாட்டார் - நேர்மையான அதிகாரி என்ற பெயரெ டுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

                                  --------------------------”விடுதலை” 30-10-2014

வீண் வம்பை விலைக்கு வாங்க ஆசையா?


தமிழக அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு வீணாய்ப் போகாமல் இந்தியைக் கற்க வேண்டும் என்று தமிழக இளைஞர்களுக்கு பிஜேபியின் தமிழகப் பிரமுகர் திரு இல. கணேசன் அறிவுரை -  அறவுரை பகன்றுள்ளார்.

பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதலாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க மும்முரமாய் இருந்து வருகிறது.
எப்பொழுதெல்லாம் இந்த வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் தமிழ்நாடு கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்புப் புயலையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகிறது. குறிப்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முதல் கண்டனக் கணையை வீசி வருகிறார்; தேவைப்படும் சந்தர்ப்பத்தில் எல்லாம் போராட்ட நடவடிக்கைகளிலும் திராவிடர் கழகம் ஈடுபட்டு வந்திருக்கிறது.


தமிழ்நாட்டின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத மத்திய பிஜேபி அரசு - இந்தியைத் திணிக்க வேண்டும் என்று எங்கள் அரசு விரும்பவில்லை; தவறாக சுற்றறிக்கை வெளியாகி விட்டது என்பது போன்ற உப்புசப்பற்ற சமாதானங்களைச் சொல்லி சமாளித்து வருகிறது.


நான்கு நாட்களுக்கு முன் அகில இந்திய வானொலியில் இந்தி ஒலிபரப்பின் நேரத்தை அதிகரிக்கும் ஆணையை அனுப்பி இருந்தது மத்திய ஒலிபரப்புத்துறை.


திராவிடர் கழகமும் மற்றும் பல அமைப்புகளும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.


மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இந்தி விளம்பர ஒலிபரப்புகளை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இது கழகத்துக்கும், தமிழ் நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.


இதற்கிடையே அரசனை விஞ்சிய விசுவாசியாக சென்னை வானொலி உதவி இயக்குநர் முந்திரிக் கொட்டைத்தனமாக அது மாதிரி எல்லாம் எந்த உத்தரவும் இல்லை என்று சொன்னது தான் வேடிக்கை. எந்தவித உத்தரவும் இல்லையென்றால் மத்திய அமைச்சர் அதிகாரிகளை அழைத்து, இந்தி விளம்பர ஒலிபரப்பினை நிறுத்தச் சொல்ல வேண்டிய கேள்வி எங்கிருந்து குதித்ததாம்?


தமிழக பிஜேபி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டில்லியில் மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சரிடம் வானொலியில் இந்தி ஒலிபரப்புத் தொடர்பாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால், இன்னொரு முக்கிய பிஜேபி தலைவரான திருவாளர் இல. கணேசன் அவர்களோ இந்திக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார். அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்டு இந்தியைப் படிக்காமல் இருக்காதீர்கள் என்று தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்தியாளர்கள் மத்தியில் திருச்சியில் இதோபதேசம் செய்துள்ளார்.


தமிழிசை இந்தி கூடாது என்றால் இல. கணேசனார் இந்தி வேண்டும் என்பார் போலும்! அது அக்கட்சிக்குள் நடந்து வரும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் ஒரு பகுதி என்பது பரவலாகப் பேசப்படும் அன்றாட செய்தியாகி விட்டது.


அது அவர்கள் உள்கட்சிப் பிரச்சனை அது எப்படியோ போகட்டும்; ஆர்.எஸ்.எஸ். கொள்கையான சமஸ்கிருதம்தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்ற மனப்பால் குடித்து அவ்வப்போது வாலை ஆட்டினால் அந்த வாலை நறுக்க வாள்கள் தமிழ்நாட்டில் எப்பொழுதுமே உண்டு என்பதை மறக்க வேண்டாம்.


மத்திய காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயன்று - அதன் பலனை 49 ஆண்டு காலமாக அனுபவித்து வருகிறது என்பதை மறந்து விட வேண்டாம்.


மக்கள் மத்தியில் எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தது பிஜேபி என்பதை மறந்துவிடலாமா? விலைவாசியைக் குறைக்கும் வேலையில், வேலை யில்லாத் திண்டாட்டத்தை போக்கும் பணியில், இந்தி யாவின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் முயற்சியில் ஈடுபட வேண்டுமே தவிர,  இது போன்ற ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைத் தூக்கிக் கொண்டு திரிந்தால் வட்டியும் முதலுமாக வீழ்த்தப்படும் பிஜேபி ஆட்சி என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.


காங்கிரஸ் வகுத்த கொள்கைகளைத் தாண்டி, காங்கிரஸ் திட்டங்களுக்கு மாறாக ஆட்சி நடத்த துப்பில்லாத நிலையில், மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டால் எதிர் விளைவுதான் ஏற்படும் என்பது நிச்சயம்!


ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறபடி இந்தியா ஒரே தேசமல்ல - இது ஒரு துணைக் கண்டம்;  பல இனம், பல மொழி, பல பண்பாடுகளைக் கொண்ட துணைக் கண்டமாகும்.


இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொண்டாலும் ஆசை வெட்கமறியாது என்பதற்கொப்ப - இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, ஏதோ ஒரு வகையில் புகுத்தலாம் என்று நினைத்தால் இந்தியா என்பது வரைபடத்தில் மட்டும்தான் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்! வீண் வம்பை விலைக்கு வாங்க ஆசைப்படக் கூடாது!

இந்துத் தேசியமோ, இந்தித் தேசியமோ அல்ல இந்தியா! பன்மொழி பேசும் பல இனங்களின் கூட்ட மைப்பு என்பதை மறக்க வேண்டாம்! மறுக்க முயன் றாலோ எதிர் விளைவுதான் ஏற்படும்.

                 ---------------------------”விடுதலை” தலையங்கம் 29-10-2014

29.10.14

ஜாதி நோயைத் தீர்ப்பதற்கு பெரியார் தேவைப்படுகிறார்- கி.வீரமணி

க.ச. என்று இரண்டு எழுத்துக்களால் அன்போடு பொதுமக்களால் மதிக்கப்படும் தலைவர் பொத்தனூர் க.சண்முகம்
இதே ஊரில் நாமே முன்னின்று அவர்தம் நூற்றாண்டு விழாவையும் காண்போம்!
பொத்தனூர் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியான உரை


சென்னை, அக். 27- மிகுந்த மதிப்போடும், அன்போடும் ஊர்ப் பொதுமக்களால் க.ச. என்று அழைக்கப்படும் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் நாமே முன்னின்று இதே ஊரில் நடத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்களது புதிய வளாகக் கட்டடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழு உருவச் சிலையை 4.10.2014 அன்று தமிழர் தலைவர் திறந்து வைத்து உரையாற்றினார்.


அவரது உரை வருமாறு:

92 வயது இளைஞர் அய்யா க.ச. அவர்கள்
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய நம்முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, இந்தப் பொத்தனூரில் கொள்கை விழா, குடும்ப விழா என்ற சிறப்பான வகையில், நடைபெறக்கூடிய இந்தப் பெரியார் சிலை, பெரியார் வளாகம், அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார், சகோதரியார் சுந்தராம்பாள் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவராக இருக்கக்கூடிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்று நம்முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களால், அவர்களுடைய சொத்துக்கள் அத்தனையும் பாதுகாக்கக்கூடிய ஒரு அற்புதமான ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கிய நிலையில், அதனுடைய ஆற்றல்மிகு தலைவராக, அடக்கமும், ஆழமும், கொள்கை உறுதியும் கொண்டவராக இருக்கக்கூடிய, இந்த விழாவிற்கு அவர்தான் நாயகர் என்று குறிப்பிட்டால், அது பெருமையாக இருக்கும்.  அப்படிப் பட்ட அய்யா க.ச. என்று இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களால்,  இரண்டு எழுத்துக்களால் அறியப்படக்கூடிய  அற்புதமான நம்முடைய விழாத் தலைவர் அய்யா பெருமதிப்பிற்குரிய மானமிகு 92 வயது இளைஞர் அய்யா க.ச. அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பிலும் இந்தப் பெருமையைச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியை நாங்கள் எல்லோரும் அடைகின்றோம்.

அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இதே ஊரிலே நூற்றாண்டு விழாவையும் நாமே முன்னிருந்து நடத்து வோம் என்று சொல்லி அவருக்கு இந்த சிறப்பைச் செய் கிறேன்.

நம்முடைய தலைவர் க.ச. அவர்கள், இந்த விழா அழைப்பிதழை எனக்கு நேரில் கொண்டு வந்து கொடுத் தார்கள். ஏராளமானோருக்கு இந்த அழைப்பிதழை அவர் கள் அனுப்பியிருக்கிறார்கள்.

ஒரு குடும்ப விழாவாக, கொள்கைக் குடும்ப விழாவாக...

இயக்கத்தின் திருவிழாவாக அவர்கள் இதை கொள் கைத் திருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்றும், இதை அவருடைய வாழ்நாள் லட்சியமாக பொத்தனூரில் அய்யா அவர்களுடைய சிலையை அவர்கள் திறக்க வேண்டும் என்ற ஒரு பேராசையை, வாழ்நாள் முழுவதும் அது பெரிய ஆசை - பேராசை என்று சொன்னால் வேறு ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றை செய்துகாட்ட வேண்டும் என்ற மன உறுதியோடு, இடையில் ஏற்பட்ட பல்வேறு சோதனைகள், வேதனைகள் இவைகளை யெல்லாம் தாண்டி இன்றைக்கு இதை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய விழாவாக, ஒரு குடும்ப விழாவாக, கொள்கைக் குடும்ப விழாவாக, இதனை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்,

இந்த விழா அழைப்பிதழை நான் பார்த்தேன்; பொதுவாக நம்முடைய தோழர்கள் இயக்கத்தை முன்னிலைப்படுத்துபவர்களே தவிர, தங்கள் குடும்பத்து உறுப்பினர்களைக்கூட முன்னிலை படுத்துவது கிடையாது. ஏனென்றால் இயக்கம்தான் அவர்களுக்கு மூச்ச, வாழ்வு என்று கருதக்கூடியவர்கள்.

அப்படி நான் இந்த அழைப்பிதழைப் பார்க்கும்பொழுது, இந்த அழைப்பிதழில் ஒரு சின்ன குறையைக் கண்டேன். அது கொஞ்சம் நெருடலாக இருந்தது என் மனதுக்கு. உடனடியாக அவரிடம் பேசவேண்டும் என்று நினைத் தேன். அதற்கொன்றும் பொருள் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில், நான் நினைத்துக்கொண்டே வந்து, அவரிடம் கேட்டேன். ஏனென்றால், இவ்வளவு பெரிய சிறப்புகள் செய்திருக்கின்ற நேரத்தில், அவருடைய வாழ்விணையராக இருந்து, எல்லாவகையிலும் பங்கேற்று, அவருடைய இன்ப, துன்பங்கள் அத்தனையிலும் உட னிருந்து, மறைந்த அருமைச் சகோதரியார் சுந்தராம்பாள் அம்மையார் அவருடைய சிறப்புகளும் இதில் அமைந் திருக்கவேண்டும், இவ்வளவு பெரிய விழாவில், அவரைப் பொறுத்தவரை மறைந்தும் மறையாமலும் நம்முடைய நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்கிற உணர்வைக் காட்டவேண்டும் என்று நினைத்த நேரத்தில்தான், நான் அதனை நினைத்துக்கொண்டே வந்தேன். இந்த விழாவில் அந்த சிறப்பும்  இணைய வேண்டும். அந்தக் குறைகூட இருக்கக்கூடாது என்பதற்காக அவர்களி டத்தில் உரிமை எடுத்துக்கொண்டேன். ஏனென்றால், அவரைத் தலைவர் என்று நாங்கள் அழைக்கக் கூடியவர் கள். அப்படிப்பட்டவர்களிடத்தில் உரிமை எடுத்துக் கொண்டு, அம்மாவின் படத்தை எடுத்துக்கொண்டு வாருங் கள்,  இந்த விழாவில் அந்தப் படத்தையும் திறக்கவேண்டும் என்று சொன்னேன்.

உங்களுக்கு எவ்வளவு சிறப்பு செய்கிறோமோ அதேபோல, அவர்களுக்கும் சிறப்பு செய்யவேண்டும்.

ஏனென்றால், நம்முடைய நாட்டில் மகளிரைப் பின்னுக்குத் தள்ளிவிடுவது, இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்தில் சாதாரணமானது. ஆனால், கஷ்டத்தை முழுவதும் மகளிர்தான் அனுபவிக்கிறார்கள்.

இரண்டு பேருக்கும் சேர்த்தே போர்த்திவிடுகிறேன் என்று சொன்னார்கள்!

அதுமட்டுமல்ல, மகளிருக்கு இருக்கக்கூடிய சமயோ சிதம் இருக்கிறது பாருங்கள், அது மிகவும் அற்புதமானது. இங்கே கூட மணியம்மையார் பெயரில் இருக்கக்கூடிய மகளிர் குழு என்று மகளிர், தோழியர்கள் வந்து எனக்கு சிறப்பாடை போர்த்துவதற்கு வந்தார்கள். உடனே நான் சொன்னேன், எனக்கு வேண்டாம்; அய்யாவிற்குப் போடுங்கள் என்று சொன்னேன். ஆனால், அந்த அம்மையார் எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக இரண்டு பேருக்கும் சேர்த்தே போர்த்திவிடுகிறேன் என்று சொன்னார்கள்.

அந்த மாதிரியான சிறப்பு மகளிர் மத்தியில் எல்லோருக் கும் உண்டு என்ற முறையில், அம்மையார் சுந்தராம்பாள் அவர்கள், அய்யா அவர்களுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை, எங்களைப் போன்றவர்களும் சரி, அறிவாசான் தலைவர் தந்தை பெரியாரும் சரி, அதேபோல், அன்னை மணியம்மையாரும் சரி, அதுபோல, திராவிடர் இயக்கத் திலே, திராவிடர் கழகமாக மாறுவதற்குப் முன்பு இருந்து, இங்கே பலர் வந்திருக்கிறார்கள். பல பேச்சாளர்கள், தலைவர் எல்லோரும் பொத்தனூருக்கு வந்திருக்கிறார்கள்.

பொத்தனூர் நம்முடைய இயக்க வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பே பதிவு ஏற்பட்டதென்றால்,  அது அய்யா க.சா. அவர்கள், மாணவர் பருவந்தொட்டே அவர்கள் இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டதன் விளைவாகும். நான், ஏ.பி.ஜனார்த்தனம் மற்ற நண்பர்கள் எல்லோரும் வந்திருக்கிறோம். அப்படி வருகின்ற நேரத்தில், அவருடைய வீட்டிற்கு எதிரே உள்ள அறையை அலுவலகமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் உணர்வாக, கொள்கையாக...
நம்முடைய சுந்தராம்பாள் அம்மையாரையும், இந்த விழாவில் அவரையும் நினைவு கூர்வது மிகமிக அவசியம் என்ற முறையில், இவர்களைப் பாராட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், அந்த அம்மையாரின் படத் தினையும் திறந்து வைப்பது, ஒரு அற்புதமான, கழகக் கடமை என்று கருதி, அனைவரின் சார்பாகவும், அப்படத் தினைத் திறந்து வைப்பதிலும், இந்தக் குடும்பத்தின் சார்பிலும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நான் அய்யாவிடம் சொன்னதும், உடனே படத்தைக் கொண்டு வருகிறேன்; ஆமாம், எப்படியோ அது விட்டுப் போய்விட்டது என்று சொல்லி, படத்தை எடுத்து வரச் சொன்னார்கள்.

அந்த வகையில், இந்த அரங்கத்தில் அவர்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் உணர்வாக, கொள்கையாக என்ற அந்த உணர்வோடு இந்தப் படத்தினைத் திறந்து வைக்கிறேன். (ஆசிரியர் அவர்கள் அம்மையார் சுந்தராம்பாள் படத்தினை திறந்து வைத்தார்).

மதிக்கத்தகுந்த பெருங்குடும்பமாக அன்றும், இன்றும், என்றும்!

இந்தப் பொத்தனூர் எங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு புதிய ஊர் அல்ல. மாணவர் பருவந்தொட்டு, ஏறத்தாழ 70 ஆண்டுகாலத்திற்கு முன்பு, இந்த ஊரில் பல நாள்கள் நாங்கள் எல்லாம் தங்கியிருந்து முகாம் போட்ட ஊராகும். அய்யா சண்முகம் அவர்களுடைய இல்லத்திற்கு வராத திராவிட இயக்கத் தலைவர்களே இல்லை; தொண்டர்களும் அதேபோலத்தான். அவருடைய அன்பு என்பது, வற்றாத அன்பு. அவருடைய வாழ்க்கை என்பது பல்வேறு மேடு பள்ளங்களை சந்தித்த வாழ்க்கை.

இயல்பான மதிக்கத்தகுந்த பெருங்குடும்பமாக அன்றும், இன்றும், என்றும் இருக்கக்கூடிய ஒரு குடும்பம் என்றால், அது அய்யா அவர்களுடைய பொத்தனூர் க.சண்முகம் அவர்களுடைய பெருங்குடும்பமாகும்.
அருமையாக, வழக்குரைஞர் காமராசர் அவர்கள் சொன்னார்; அவருடைய சிறப்புகளைப்பற்றி. நான் நினைத்துக் கொண்டிருந்தேன்; அவர் சொல்லிவிட்டார். ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள்.

அவருடைய இல்லமே ஒரு பண்ணை. அதிலிருந்து வளர்ந்த இளைஞர்கள் ஏராளம்!
இந்த ஊரினுடைய இயல்பிற்கு மாறாக, நம்பவே முடியாத அளவிற்கு கொஞ்ச நாள்களுக்கு முன்பு ஜாதிக் கலவரம் வந்தது. அதைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். வந்திருக்கக்கூடாது, நம்ப முடியாது; ஏனென்றால், அவ்வளவு நல்ல அன்பாகப் பழகக்கூடிய மக்கள் உள்ள ஊர் இது. இங்கே யாரும் கொள்கைக்காக சண்டை போடு பவர்கள் கிடையாது. எவ்வளவுதான் கொள்கையாளர் களாக இருந்தாலும், அவர்கள் சொல்லியதுபோல், முழுக்க முழுக்க திராவிட இயக்கப் பண்ணையாகத்தான் அவர்கள் வளர்த்தார்கள். அவருடைய இல்லமே ஒரு பண்ணை. அதிலிருந்து வளர்ந்த இளைஞர்கள் ஏராளம். அவர் வயது முதிர்ந்தவர் என்றாலும், வயதானவர்களும் அவரிடத்தில் மரியாதை காட்டுவார்கள்; அதேபோல், இளைஞர்களைப் பார்த்தீர்க ளேயானாலும், அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருப் பார்கள். அதுதான் அவருடைய தனித்தன்மையாகும். சில நேரங்களில், இளைஞர்களிடையே, இளைஞராக இருப்பார்; மாணவர்களிடையே மாணவராக அவர்கள் இருப்பார். அதேபோல்தான், மற்ற நேரங்களில் முதியவர்களும், வயதானவர்களும் எல்லோருமே அவரை மதிப்பார்கள்.
உள்ளூர்க்காரர்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆகவே, மிகப்பெரிய அளவில் அவர் மதிக்கக்கூடியவராக இருப்பார். அதுதான் சிறப்பானது.

நீங்கள் தான் நிரந்தரமாகத் தலைவர், துணைத் தலைவரா?
இப்பொழுதுதானே போட்டிகள், ஊராட்சித் தேர்தலில் போட்டியெல்லாம் இருக்கிறது. இந்தப் பொத்தனூர் ஊராட்சி மன்றத்திற்கு என்ன சிறப்பு என்றால் நண்பர்களே, அய்யா குப்பையாண்டி பிள்ளை அவர்கள் காங்கிரஸ்காரர். தந்தை பெரியார் அவர்களிடத்தில் மிகுந்த மரியாதை உடையவர். அவர் 35, 40 ஆண்டுகளுக்குமேல் அவர்தான் தலைவர். அதேபோல், துணைத் தலைவர் என்றால், அய்யா க.ச.தான். நாங்கள் எல்லாம் அவரிடம் வேடிக்கையாகக் கேட்போம், என்னங்க, நீங்கள் தான் நிரந்தரமாகத் தலைவர், துணைத் தலைவரா? இங்கே மாற்றமே கிடையாதா! என்று கேட்போம்.
அவர் உடனே, இல்லீங்க, நாங்கள் வேண்டாம் என்றாலும், யாரும் விடுவதில்லை என்று சொல்வார்.


எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பார்கள். அய்யா அவர்கள் வந்தால், அவருடைய இல்லத்தில்தான் தங்கு வார். மற்ற வசதிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். அம்மா சுந்தராம்பாள் படத்திறப்புக்கு ஒரு காரணம் என்னவென்றால், அந்த அம்மையார் எங்களுக்கெல்லாம் சமைத்துப் போட்டு, அன்பு காட்டி, விருந்தளித்து உபசரித்திருக்கிறார்.

எனவே, இந்த ஊரில் இருக்கின்ற அத்துணை பேரும், இவருடைய மாமா அவர்கள், மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடியவர். அவர் சைவப் பழம் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்ப் பாட்டு, தமிழ் புலவராக இருந்தவர். எங்களிடம் அளவு கடந்த அன்பு காட்டுபவர். நூறாண்டைத் தாண்டி வாழ்ந்தவர்.

சிறந்த ஒழுக்கவாதி என்பதற்கான அடையாளம்தான், நம்முடைய அய்யா க.ச.
அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு அன்பு பாராட்டுப வர்கள். திருவாசகத்திலிருந்து எல்லாவற்றையும் பேசுவார். அய்யா அவர்களிடம் எல்லாக் கட்சிக்காரர்களும், எல்லாக் கருத்துள்ளவர்களும் வந்து பேசுவார்கள். அய்யாவை மதிப்பார்கள்; அய்யாவை பொதுத் தலைவராக நினைப் பார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், இவருடைய ஒழுக்கம்; அதுதான் மிக முக்கியம்.

ஒரு நல்ல நாத்திகர் என்பவர், நல்ல சுயமரியாதைக்காரர் என்பவர், சிறந்த ஒழுக்கவாதியாக இருப்பார் என்பதற்கான அடையாளம்தான், நம்முடைய அய்யா க.ச. அவர்கள். இந்த இயக்கத்திலே மற்றவர்கள் சேருவதற்குரிய பக்குவம் அவர்களுக்கு வருகிறதா, இல்லையா என்பது அவர் களைப் பொறுத்தது. ஏனென்றால், அவரவர்கள் தங்களுக் குள் சிறிய வட்டம் போட்டிருப்பார்கள். ஓகோ, இதிலே இருப்பதற்கு நமக்குத் தகுதியில்லை என்று நினைப்பார்கள். ஏனென்றால், இவ்வியக்கத்தில் இருந்தால், மிகவும் கட்டுப் பாடாக இருக்கவேண்டும். இவ்வியக்கத்தில் இருந்தால், ஒழுக்கத் தவறுகளுக்கு இடம் இல்லாமல் இருக்கவேண்டும்.


இந்த இயக்கத்தினுடைய பெருமை, பெரியார் கொள்கையினுடைய சிறப்பு!

அதையும்தாண்டி, இவ்வளவு இளைஞர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்திருக்கிறார்களே, இவ்வளவு கசப்பு மருந்துகளை சாப்பிடுபவர்கள், இந்த இயக்கத்தினுடைய பெருமை, பெரியார் கொள்கையினுடைய சிறப்பு என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆக, அந்த மாதிரியாக இருக்கக்கூடியவர்கள்கூட, அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்களைப் பார்த்து, இந்த இயக்கத்தைப் பார்த்து, அவ்வளவு பெருமையாக நினைப் பார்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு, மிகப்பெரிய அள விற்கு, இந்த சுற்றுவட்டாரத்தில், வேலூராக இருந்தாலும், அதே மாதிரி சுற்றுவட்டாரத்தில் அவருக்கு நண்பர்களாக இருக்கக்கூடியவர்கள். காமராசர் அவர்களுடைய தந்தையார் ஆச்சிக்கண்ணு என்று அழைக்கப்படக்கூடிய அய்யா பழனிமுத்து அவர்கள், அதேபோல், தவுட்டுப் பாளையம் பகுதிகளில், கச்சிப்பாளையம் கணபதி அவர்கள், இப்படி ஒவ்வொரு துறையைப் பார்த்தீர்களேயானால், பல பேர் சுற்றுவட்டாரங்களில் அவர்களுடைய பெருமையை நினைத்து, மிகப்பெரிய அளவிற்கு சொல்வார்கள்.
க.சண்முகம் வந்திருக்கிறாரா? கு.சண்முகம் வந்திருக்கிறாரா? எனக்கு பல நினைவுகள் வருகின்றன; அதைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த ஊரில், அய்யாவைப் பார்க்க வரும்பொழுது, சண்முகம் வந்திருக்கிறார் என்று புலவர் இமயவரம்பன் சொல்வார். உடனே அய்யா அவர்கள், எந்த சண்முகம் வந்திருக்கிறார்? க.சண்முகம் வந்திருக்கிறாரா? கு.சண்முகம் வந்திருக்கிறாரா? என்று கேட்பார்.

இரண்டு சண்முகமும் பார்த்தீர்களேயானால், இரட்டை யர் போல வருவார்கள்.
அவருடைய நிலை என்பது வேறு; இவருடைய பக்குவம் வேறு.
எனக்கு நன்றாக ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது.

என்னிடம் அவர் எப்பொழுதும் வருத்தப்பட்டது இல்லை. என்னுடைய திருமணத்திற்கே அவர்தான் நோட் புத்தகத்தில் அன்பளிப்புப் பட்டியல் எழுதியவர். திருச்சி பெரியார் மாளிகையில் அது இருக்கிறது. என்னுடைய வாழ்நாளில் அவருடைய பங்களிப்பு எப்போதும் இருக் கிறது. எனது திருமணத்திற்கு, அவர் காண்டேகர் புத்த கத்தை எனக்கு அளித்தார். அந்தப் புத்தகமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அவ்வளவு சிறப்பாக, மாணவர் பருவத்திலிருந்தே என்னிடம் சிறப்பாக இருக்கக்கூடிய வர்கள்.

நான் விடுதலை ஆசிரியர் பொறுப்புக்குச் சென்றவுடன் 1962ஆம் ஆண்டு, நான் சென்னை அடையாறில் அப் பொழுதுதான் குடியேறினேன். அப்பொழுது க.ச.வும், கு.ச.வும், அவருடைய தம்பி டாக்டர் ஆறுமுகம் எங்களு டன் திராவிடர் மாணவர் கழகத்தில் இருந்தவர். நம்முடைய மறைந்த ஆறுமுகம், ரமணி அவர்கள், வீரப்பா அவர் களுடைய மகள்.
அவர்கள் வந்தபொழுது என்ன செய்தார்கள் நண்பர்களே, இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள். அப்பொழுது எனக்கு வயது குறைவாக இருந்த சூழ்நிலையில், யாராக இருந்தாலும் எதாவது வாங்கி வந்து கொடுத்தால், ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் இந்தப் பொறுப்பில் இருக்கிறோம். ஏன் என்றால், அதற்கு முன்பு பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இவருக்கு இதைக் கொடுத்தால் சரிப்படுத்தலாம், அதைக் கொடுத்தால் சரிப்படுத்தலாம் என்று நினைக்கின்ற சூழ்நிலைகள் எல்லாம் இருந்தன.

அய்யா அவர்கள் வாங்கிக் கொள்ளமாட்டார்; அதை மறுத்துவிடுவார்
அந்தச் சூழ்நிலையில்,  நான் அந்த உறுதியை மேற் கொண்டிருந்தேன். சாதாரணமாக யாராவது பழம், வாங்கிக் கொடுத்தால் அய்யா வாங்கிக் கொள்வார். ஆனால், பரிந்துரை என்று வரும்பொழுது, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்றால், அதனை அய்யா அவர்கள் வாங்கிக் கொள்ளமாட்டார்; மறுத்துவிடுவார்.

தலைவர் எவ்வழியோ, தொண்டன் அவ்வழியே! அவ்வளவுதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. அந்த உறுதியோடு நான் இருந்த நேரத்தில், இவர்கள் வந்து சேர்ந்தார்கள்; வழக்கமாக நம்மிடம் அன்பு காட்டுபவர்கள்; குடும்ப நண்பர்கள். அவர்கள் பிஸ்கெட் பாக்கெட் வாங்கி வந்து கொடுத்ததும், நான் உடனே, மன்னிக்கவேண்டும், நான் பிஸ்கெட் பாக்கெட் வாங்குவதில்லை, அதை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள் என்று சொன்னேன்.

அய்யா அவர்கள் மிகவும் அடக்கமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், மிகவும் சென்சிட்டிவ்வாக இருப்பார். இவராவது கொஞ்சம் பொறுத்துக் கொள்வார்; ஆனால், கு.ச. அவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார். அவரைப் பற்றி உங்களுக்கெல்லாம்கூட தெரியும்.

கு.ச. எழுதிய கடிதம்!
பிறகு, அவர் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை இன்னும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன், குடும்பத்து நண்பர்கள் என்ற முறையில்தான், அன்பிற்காக மட்டும்தான்  நாங்கள் அந்த பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்தோம்; ஆனால், நீங்கள் அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லியதும் எங்களுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. நாங்கள் உங்களிடம் எதையும் எதிர்பார்த்து அதைக் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

உடனே என்னுடைய துணைவியார் அவர்கள், என்னங்க இவ்வளவு மனம் புண்பட்டு எழுதியிருக்கிறார் களே, நீங்கள் விளக்கம் சொல்லவேண்டாமா? சமாதானம் செய்யவேண்டாமா? என்று சொன்னார்கள்.

அப்படியில்லை. எனக்கு சில நேரங்களில் ஒரு முரட்டுத் தனமான சிந்தனை. அவர்களைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், அது நியாயம்தான். ஒரு சிறு ஓட்டையை நாம் சில நேரங்களில் உருவாக்கி விட்டோமேயானால், அந்த ஓட்டை மெல்ல மெல்ல பெரிதாகி, பிறகு யானையே உள்ளே நுழைந்து, வெளியே வரக்கூடிய நிலைக்கு ஆளாகிவிடும். ஆகவே, அந்த மாதிரியான வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். பிறகு அவர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

பிறகு, நாங்கள் வழக்கம்போல, சரியாகிவிட்டோம். எதற்காக இதை சொல்லுகிறேன் என்றால், அவ்வளவு நெருக்கமான ஒரு சூழ்நிலை. எனக்கு எவ்வளவுதான் பணிகள் இருந்தாலும், அவருடைய இந்த விழா தள்ளிப் போகக்கூடாது என்பதுதான் எனக்கு முக்கியம்.

கொள்கை உறவுக்காரர்களையெல்லாம் ஒன்றாக சேர்க்கவேண்டும் என்கிற உணர்வுஇந்தக் கட்டடத்தைக் கட்டி முடித்ததும்; அதில் அய்யா சிலையை வைக்கவேண்டும்; அதைப் பெரிய விழாவாக நடத்தவேண்டும். இயக்கத் தோழர்கள், ஊர்ப் பிரமுகர்கள், நண்பர்கள், குடும்பத்தவர்கள், உறவுக்காரர்கள், கொள்கை உறவுக்காரர்களையெல்லாம் ஒன்றாகச் சேர்க்கவேண்டும் என்கிற உணர்வு இருக்கிறது பாருங்கள், அந்த உற்சாகம்; ஆகவே, அதற்கு இடந்தரவேண்டும் என்பதற்காகத்தான், இப்படிப்பட்ட ஒரு நல்ல விழா இங்கே அமைந்திருக்கிறது. அவருடைய பிறந்த நாளான 90 ஆம் ஆண்டு விழாவினை மிகப்பெரிய அளவிற்கு, இங்கே உள்ள பள்ளிக்கூடத்தில் சிறப்பாகச் செய்தோம். இன்றைக்கு அடுத்த விழாவாக, அதற்குப் போனஸ் விழாவாக நடத்துவதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒரே தலைவர்; ஒரே கொள்கை; ஒரே கொடி!
திருச்சியிலுள்ள நேஷனல் கல்லூரி அது ஒரு அக்கிரகார கல்லூரி அது. அப்படிப்பட்ட ஒரு கல்லூரியில் அவர்கள் படித்த காலத்திலிருந்து இங்கே நண்பர்கள் சொல்லியதுபோல், இந்தக் கொள்கையில் அவர் எந்தக் காலகட்டத்திலும், 70 ஆண்டுகாலத்திற்கு மேலாக, பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள், அன் றைக்கு அணிந்த அதே கருப்புச் சட்டை; அதே கொள்கை; அதே கொடி; அதே தலைமை என்று வந்ததோடு மட்டு மல்ல, என்னைவிட  அவர் பத்து வயது அதிகமானவர்.
ஆனால், அமைப்பு முறையில், இந்த இயக்கத்தை நடத்தவேண்டும் என்கிறபோது, அவருடைய கட்டுப்பாடு உணர்ச்சி; என்ன சொல்கிறோமே அதைக் கேட்டுத்தான் அதன்படி நடப்பார். இந்த இயக்கத்திற்குப் பெருமையே அதுதான். இங்கே மூத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வயதால் மூத்தவர்கள்; அறிவால் மூத்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், ஒரு ராணுவ கட்டுப்பாடு என்று சொன்னால் என்ன? பெரியாரின் தனி மனித ராணுவம் இருக்கிறதே, அது ராணுவக் கட்டுப்பாட்டினையும் தாண்டிய ஒன்று என்ற அளவிலேதான், இங்கே நம்முடைய கருப்புச் சட்டைத் தோழர்கள் சிறப்பாக இருப்பார்கள்.
             --------------------------தொடரும்  -  "விடுதலை”   27-10-2014

 *******************************************

 இரட்டை வாழ்க்கை முறை இல்லாததே பகுத்தறிவு!
பொத்தனூர் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, அக். 28- பகுத்தறிவு என்றால் அங்கு இரட்டை வாழ்க்கை என்பது அறவே கிடையாது - அத்தகு

வாழ்வுக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர் கழகத் தோழர்கள் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார் திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமானபொத்தனூர் க.சண்முகம் அவர்களது புதிய வளாகக் கட்டடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழு உருவச்சிலையை 4.10.2014 அன்று தமிழர் தலைவர் திறந்து வைத்து உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு

கருப்புச் சட்டைக்கு இப்பொழுது இருக்கிற மரியாதை என்ன என்று தெளிவாகத் தெரியும். கருப்புச் சட்டைபோடாத கட்சிக்காரர்களே கிடையாது இப்பொழுது. யாருக்காவது நெருக்கடி ஏற்பட்டால், அவர்களுக்குக்
கைகொடுக்கின்ற ஒரே சட்டை கருப்புச் சட்டைதான். தந்தை பெரியார் கொடுத்த கருப்புச்சட்டை. மிச்சம் மீதிஇருப்பவர்கள் அய்யப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள், அவர்களும் கருப்புச் சட்டை.

நீதி வழங்கவேண்டுமா? வழக்குரைஞர்களா? நீதிமன்றமா? அங்கேயும் கருப்புதான். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. எனவே, கருப்புடை தரித்தோர் உண்டு; நறுக்கியே திரும்ப நாட்கள் என்று சொன்ன மாதிரி,
அறிவாயுதமாக தந்தை பெரியார் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்!

இன்றைக்குக் கருப்புச் சட்டையினுடைய மதிப்பு, அந்தக் கொள்கையினுடைய மதிப்பு என்பது இருக்கிறதே, அதுஒரு பெரிய பயர் பேக்டர் மாதிரி இருக்கும். மூச்சுத் திணறும்பொழுதெல்லாம், ஆக்சிஜனைக் கொடுப்பதுபோல்
உள்ளது. நெருக்கடியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமா? அல்லது யாருக்காவது எச்சரிக்கைகொடுக்கவேண்டுமா? அதற்கெல்லாம் இந்தக் கருப்புச் சட்டைதான் பயன்படும் என்று சொல்லக்கூடிய
அளவிற்கு, ஒரு பெரிய அறிவாயுதமாக தந்தை பெரியார் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, அந்த சட்டையை க.ச. அவர்கள் எத்தனைஆண்டுகாலமாக அணிந்துகொண்டிருக்கிறார். சுயமரி யாதை இயக்கம், நீதிக்கட்சி, அந்தக் காலத்தில் இருந்தவர்கள்; பிறகு, சேலத்தில் திராவிடர் கழகமாக மாற்றியமைக்கப் பட்ட காலத்திலிருந்து, எத்தனையோ சலசலப்புகள்,எத் தனையோ புயல்கள்; எத்தனையோ பிரிவுகள்; இயக்கத்தில் இருந்தவர்களின் துரோகங்கள் இவையெல்லாம்இயக்கத்தில் வந்திருக்கின்றன. ஆனால், நம்முடைய தலைவர் அவர்கள், கொஞ்சம்கூட சிறு சபலத்திற்கோ,சலனத்திற்கோ ஆளாகாதவர். அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், அவர்களை அடையாளங்கண்டு,பிரிக்கப்படாத சேலம் மாவட்டத் தலைவராக, பிறகு அம்மா அவர்கள் அடை யாளங்கண்டு, அவர்களைமிகப்பெரிய அளவிற்கு, அறக் கட்டளைக்கு ஆயுட்கால உறுப்பினராக, பிறகு இன்றைக்கு அந்தஅறக்கட்டளையின் தலைவராக உயர்ந்துள்ளதற்கு, அவர்களின் நாணயம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதுதான்

முக்கியம்.

அவர்களுக்கு வந்த சோதனை, சாதாரணமான சோத னைகள் அல்ல. ஒரு கட்டத்தில் அவருடைய துணைவியாரை இழந்த ஒரு கட்டம்; அதேபோல், உடல்நிலையில் சில சங்கடங்கள் ஏற்பட்ட ஒரு கட்டம்; அதுபோல்,
வேறு சில பிரச்சினைகள், வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள், சில சம்பவங்கள் நடைபெறுவது மிகவும்சாதாரணமானது. ஆனால், எதிலும் அவர் தன்னுடைய நிதானத்தையோ, முதிர்ச்சியையோ இழக்கவில்லை.

இதுதான் ஒரு நல்ல பகுத்தறிவுவாதி, சிறந்த சுயமரியாதைக்காரன், உயர்ந்த பெரியார் தொண்டன் என்பதற்குஇலக்கணம். எனவே, அவருடைய வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். அவருடைய வாழ்க்கை நமக்கு ஒரு நல்லபடிப்பினை. இளைஞர்கள் அதனைப் புரிந்துகொள்ளவேண்டும். தாய்மார்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

முன்னாள் சுயமரியாதைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?

சில நேரங்களில் என்ன செய்வார்கள், இந்த இயக்கத் திற்கு என்ன பெருமை? இந்தக் கொள்கைக்கு என்னபெருமை என்று சொன்னால், பதவிக்கு வேண்டுமானால், முன்னாள் என்று சொல்லலாம்; முன்னாள் அமைச்சர்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்று பதவிக்கு வேண்டுமானாலும்போட்டுக் கொள்ளலாம். ஆனால், முன்னாள் சுயமரியாதைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?

முன்னாள் கொள்கைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா? என்று நன்றாக நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும்.

அந்த வகையில்தான், எத்தனையோ நண்பர்கள், அவர்களிடத்தில் பழகியவர்களின் நீண்ட பட்டியல் உண்டு.

அவர்களோடு இருந்தவர்கள் உண்டு; மறைந்தவர்கள் உண்டு. ஆனாலும், அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு,ஒரு கொள்கைக்கு எழுச்சிமிகுந்த ஒரு நிலைப்பாட்டிலிருந்து, தன்னை மாற்றிக் கொள்ளாதவராக,உறுதிப்பாட்டில் நிலைத்தவராக இருக்கிறார்.

ஆகவே, அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும். அவருடைய வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும்.

கடவுள் மறுப்பாளர்கள் கெட்டுப் போவார்கள். பெரியாரிடத்தில் சென்றவர்கள் எல்லாம் அழிந்துபோய்விடுவார்கள். இந்தக் கட்சிக்காகவே உழைத்தார்; ஒன்றுமில்லாமல் போய்விட்டார் என்று சில பேர்சொல்வார்கள். கட்சிக்காக யாராவது உண்மையாகப் பாடுபட்டிருந்தால், ஒன்றுமில்லாமல் போய் இருக்க

முடியாது. ஒன்றுமில்லாதவர்கள் நன்றாக வளர முடியும். ஏனென்றால், பெரியாருடைய வாழ்வியல் இருக்கிறதே, அது வரவுக்கு உட்பட்டு செலவழி! யோக்கியமாக இரு! நாணயமாக இரு! குறுக்கு வழியில் போகாதே!

மிக முக்கியமாக, ஏதாவது தவறு செய்திருந்தால், தண்டனையை அனுபவிக்கவேண்டும்! தண்டனையைக் கண்டுபயப் படாதே! தண்டனையிலிருந்து தப்பவேண்டும் என்று நினைக்காதே என்பதுதான் தந்தை பெரியாருடையவாழ்வியல் முறையாகும். வாழ்க்கை முறை என்பது இருக் கிறதே, சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்றுசொன்னார்.

திருவள்ளுவரின் திருக்குறள்களின் அடிப்படை அதுதான்.

எற்றென்று இரங்குவ செய்யற்க மற்றன்ன செய்யாமை நன்று - என்ற ஒரு குறள் உண்டு.அக்குறளின் கருத்து என்னவென்றால், இப்படிப்பட்ட காரியத்தை செய்யாதே! அந்தக் காரியத்தை செய்யாமல்இருப்பது நல்லது! அப்படி செய்துவிட்டால், அதற்குரிய தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்பதுதான்வள்ளுவர் குறளின் பொருள்.

அந்த அடிப்படையில், சுயமரியாதை வாழ்வு, சுகவாழ்வு என்று சொல்வதன் அடிப்படை என்ன?

அந்த சுயமரியாதை வாழ்க்கையில் எல்லோரும் தவறு செய்வோம்; தவறே செய்யவில்லை என்று யாரும்சொல்ல முடியாது. ஆனால், அந்தத் தவறை செய்தாலும்கூட, தங்களைத் திருத்திக் கொண்டு வாழவேண்டும்.

திருத்துவது என்பதும், திருத்தத்தின்மூலமாக உயர்வு என்பதும், மிகப் பெரிய வாழ்க்கையினுடைய அற்புதமானவிளைச்சல்கள். அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

பழமொழியல்ல; இப்பொழுது புது மொழி!

அந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், உன்னுடைய நண்பர் யார் என்று சொல்; நீயார் என்று நான் சொல்கிறேன் என்று.
ஆனால், இப்பொழுது அப்படியில்லை, நீ இருக்கின்ற இயக்கம் எதுவென்று சொல்; நீ யார் என்று நான் சொல்கிறேன் என்பதுதான்.

எனவே, இது ஒரு அற்புதமான விழாவாகும். அறிவா சான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடையசிலையை இங்கே நிறுவவேண்டும் என்று அவர்கள் நினைத்தது, தன்னுடைய தலைவன் என்கிற மரியாதைக்காக
மட்டு மல்ல; இந்தப் பக்கத்தில் செல்கிறபொழுது, பெரியார் அவர் களுடைய சிலையைப் பார்க்கும்பொழுது,கம்பீரமாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவருக்கு வாழ்விணையராக மட்டுமல்ல, இந்த

இயக்கத் தையே காப்பாற்றியவர்களாக, அன்னை நாகம்மையாரும், அன்னை மணியம்மையார் அவர்களும்இருவரும் உறு துணையாக இருந்தது இருக்கிறதே, இதைவிட சுயமரி யாதை இயக்கத்தினுடைய சிறந்த

வெற்றிக்கு யார் அடித் தளமாக இருந்தார்கள் என்று காட்டுவதற்கு, இந்த கொள்கை வெற்றிக்கு, தியாகத்திற்குஎவ்வளவோ சோதனைகள் ஏற்பட்டாலும், அவர்களோடு நின்றவர்களுக்கு என்ன என்பதுதான், இந்தப்

பெரியார் வளாகத்தின் கீழே நின்று அந்த சிலையைப் பார்த்தால் தெரியும்.

அண்ணா அவர்கள் சொன்னார்!

அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார். பெரியாருடைய ஒரு போர் முறை. மிகவும் அற்புதமானது.பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு சகாப்தம்; அவர் ஒரு காலகட்டம்; அவர் ஒரு திருப்பம்

என்றெல்லாம் சொன்ன அண்ணா அவர்கள்,

மற்றவர்களுடைய போர் முறைக்கும், பெரியாருடைய போர் முறைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. மற்றவர்களுடைய போர் முறை என்பது, கண்களுக்கு எதிரே உள்ள எதிரிகளோடுதான் போராடுவார்கள். ஆனால்,

பெரியாருடைய பகுத்தறிவுப் போர் முறை இருக்கிறதே, கண்ணுக்கு அப்பாற்பட்டு, கண்களுக்குத் தெரியாதஎதிரிகளையும் அழிக்கக்கூடிய அளவிற்கு அவர்களுடைய போர் முறை இருக்கும்.

மூலபலம் எங்கிருக்கிறது என்று தெரிந்து, அதனை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று

மிகத்தெளிவாகச் சொன்னார்.

யாராவது வந்து உதவி என்று கேட்டால், உடனடியாக செய்வார் அய்யா க.ச.!

இந்தப் பகுதிகளில் அப்படிப்பட்ட தோழர்கள் ஏராளம். அவர்களெல்லாம் தொண்டாற்றினார்கள். உதாரணமாக,நம்முடைய கொம்புப்பாளையம் கே.கே.பொன்னப்பா போன்றவர்கள் உள்பட எத்தனையோ பேர் தலைவரிடத்

தில் வருவார்கள். அதுமட்டுமல்ல, அவருடைய உழைப்பு மிகப்பெரிய அளவிற்கு, அய்யா அவர்களுடையசிறப்பு, அய்யா அவர்களிடம் இவர் காட்டிய அன்பு, அதுமட்டு மல்ல, யார் அழைத்தாலும், நம்முடையதலைவர் அவர்கள் அய்யா காலமாக இருந்தாலும் சரி, அன்னை மணியம் மையார் காலமாக இருந்தாலும் சரி,தன்னிடம் யாராவது வந்து உதவி என்று கேட்டால், உடனடியாக செய்வார். எதைப்பற்றியும்கவலைப்படமாட்டார்.

அப்படிப்பட்ட அளவிற்கு, மற்றவர்களும் வாழவேண் டும்; மற்றவர்களும் சிறப்பாக இருக்கவேண்டும் என்றுநினைப்பவர்கள். வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத் துணைப் பேரும் பயன்படவேண்டும் என்று நினைப்பவர்.
இந்தப் பகுதிக்கு நான் வரும்பொழுது இந்த நிலையில், அய்யாவினுடைய கொள்கைகள் எவ்வளவு தேவைஎன்பதை வழக்குரைஞர் காமராசர் சொன்னார்.

செய்தித்தாளைப் பார்த்து வேதனைப்பட்டேன்! 

இன்று காலையில் பத்திரிகையில் நான் ஒரு செய்தியைப் பார்த்து வேதனைப்பட்டேன். இங்கேசுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு கோவிலில், தலையில் தேங்காய் உடைப்பது; சாட்டையால் அடிப்பது; குழந்தை

இல்லையென்றால் இதுபோல் செய்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன்.

இப்பொழுதுதான் எங்கே பார்த்தாலும், Fertility Center என்று உருவாக்கி வைத்திருக்கிறார்களே! ஆணிடம்குறை இருக்கிறதா? பெண்ணிடம் குறை இருக்கிறதா? செயற்கை முறையில் கரு தரிக்கவேண்டுமா?
இதை எவ்வளவு காலத்திற்குமுன்பு சொல்லியிருக் கிறார், இனி வருங்காலத்தில் ஆண், பெண் சேர்க்கைஇல்லாமல் குழந்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும் என்று. அது இன்றைக்கு நடைமுறையில் வந்திருக்கிறதா,

இல்லையா!

வளர்ப்புத் தாய் என்றுதான் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், இப்பொழுது வாடகைத்தாய்என்று சொல்கின்ற நிலைமை வந்திருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் இனிவரும் உலகம்!

இதை அய்யா அவர்கள், 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே, இனிவரும் உலகம் என்ற நூலில், இனிமேல்

உலகத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

அதனுடைய அடிப்படையை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், அறிவியல் உலகமே வியக்கக்கூடிய அளவிற்கு,அவர் சொல்லியது அத்தனையும் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. உடனே, தந்தை பெரியாரை, தீர்க்கதரிசி,

அவதாரம் என்று நாங்கள் சொல்லமாட்டோம்.

பெரியார் சொன்னார், முழுப் பகுத்தறிவை வைத்து சிந்தித்துப் பார்; உன்னுடைய பகுத்தறிவை தாராளமாக விடு;

இதுவரையில்தான் பகுத்தறிவு, இதற்குமேல் பகுத் தறிவை விடாதே! கடவுளா? கேள்வி கேட்காதே! மதமா?கேள்வி கேட்காதே! சாஸ்திரமா? கேள்வி கேட்காதே! இவற் றுக்கெல்லாம் தடை போட்டார்கள். அந்த
இடத்தில்தான் தந்தை பெரியாருடைய உழைப்பு, யார் சொன்னாலும் நம்பாதே! உன்னுடைய அறிவு என்னசொல்லுகிறதோ அதன்படி நட! அறிவுக்கு மட்டும் மரியாதை கொடு என்று சொன்னார். அப்படிசொன்னவர்கள், இவ்வளவு தெளி வாகச் சொன்னவர்கள் மூன்று பேர்தான்.

புத்தர்

ஒன்று, புத்தர்; 2600 ஆண்டுகளுக்கு முன்பாக சொன்னார். அவர் தெளிவாகச் சொன்னார், முன்னோர்கள்நடந்தார்கள் என்பதற்காக நீ நடக்கவேண்டும் என்று அவசியம் அல்ல. முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக, நீ நம்பவேண்டும் என்று அவசியம் அல்ல. முன் னோர்கள் பேசினார்கள் என்பதற்காக, அதனை ஏற்கவேண்டும் என்று அவசியம் இல்லை. உன்னுடைய அறிவு, பகுத்தறிவு என்ன சொல்கிறது என்று பார் என்றார்.

திருவள்ளுவர்

இரண்டாவதாக, வள்ளுவர்; வள்ளுவரும் அதையே தானே சொல்லியிருக்கிறார்,

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு

வள்ளுவர் இந்தக் குறளைச் சொல்லியிருக்கிறாரே, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றுகேட்டார்,

தந்தை பெரியார்

பெரியார் சொன்னார், வள்ளுவரே சொல்லியிருக் கிறாரே, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதே! ஏற்றுக்கொள்ளவேண்டியதை ஏற்றுக்கொள்! உன் அறிவு ஏற்றுக்கொள்ளுமா? அதுவரையில் செய் என்று தெளி வாகச்சொன்னார்.

ஆகவே, இப்படி எல்லாத் துறைகளிலும் பார்த்தீர்களே யானால், பகுத்தறிவு, அந்தப் பகுத்தறிவு சிந்தனைமட்டும் நம் நாட்டில் இருந்தால், மக்களுடைய வாழ்க்கைத் தரமாக இருந்தால், இப்படி தலையில் தேங்காய்
உடைப்பார்களா? மூளை இருக்கின்ற பகுதி அது. வேகமாக தேங்காயை உடைத்தால் என்னாகும்? அதனுடையபாதிப்பை மருத்து வர்கள் சொல்வதையெல்லாம் ஊடகங்களில் பேட்டி எடுத்து வெளியிடுகிறார்கள். ஆனாலும்,மீண்டும் மீண்டும் அங்கே சென்று, அதே செயலையே செய்கிறார்கள். பெண் களை சாட்டையை எடுத்துஅடிப்பது என்றால்,  எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாகும்!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று சொன்னபொழுது, பெரியாரிடம் ஆத்திரப்பட் டார்களே, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்தீர்களேயானால், காட்டுமிராண்டிகளா? இல்லையா? இது நாகரிகமானவர்கள் கடவுளை கும்பிடுகிற முறையா இது

என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

பகுத்தறிவு என்பது இரட்டை வாழ்க்கை வாழாதே! இரட்டை வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது இரட்டை வாழ்க்கை வாழாதே! என்று சொல்வதுதான் பகுத்தறிவு. எதைப்

பேசுகிறாயோ, அதனைத்தான் செய்யவேண்டும். எதை செய்கிறாயோ, அதனைத்தான் சொல்லவேண்டும் என்பதுதான்.

ஆனால், நம் நாட்டில் இரட்டை வாழ்க்கை முறைகூட அல்ல, மூன்று முறையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகளிலிருந்து, லேட்டஸ்ட் அய்யப்பன் சாமி வரையில்இருக்கக்கூடிய இந்தக் காலகட்டம்வரையில், இந்த நாட்டில் எவ்வளவு தூரம் இருக்கிறார்கள் என்று சொன்னால்,
இவர்கள் நினைப்பது ஒன்று; சொல்வது இன்னொன்று; செய்வது அதைவிட வேறு. ஆகவே, மூன்று வகையானவாழ்க்கை முறையை வாழுகிறார்கள்.

இதுபோல் இல்லாமல், நாங்கள் எதை சொல்கிறோமோ, அதை செய்கிறோம்; எதை செய்கிறோமோ, அதையேசொல்கிறோம். இவை அத்தனையும் நிறைந்த வாழ்க்கை தான், பெரியார் கண்ட பகுத்தறிவு நெறி என்ற
மிகப்பெரிய சுயமரியாதை வாழ்க்கை. பெரியார் எப்பொழுதும் தேவைப்படுவார்!

பெரியாருக்காக நாம் அதை யாரும் ஏற்கவேண்டிய அவசியமில்லை. இன்னமும் பெரியார் தேவையா என்றுசிலர் கேட்கிறார்கள். அதற்குத்தான் இந்தச் சம்பவங்கள் எல்லாம் உதாரணமாகும். பெரியார் எப்பொழுதும்

தேவைப்படுவார்.

இன்னமும் மருந்துக் கடைகள் தேவையா? என்று மருந்து கடைகளை மூடிவிட முடியுமா?  இன்னமும்மருத்துவக் கல்லூரிகள் தேவையில்லை. மருத்துவர்கள் உருவாகத் தேவையில்லை என்று யாராவது சொல்ல

முடியுமா?

நீண்ட காலமாக அம்மை நோய் இருந்தது; அதனை அறவே ஒழித்துவிட்டோம் என்று சொல்லி,மருத்துவர்களே தேவையில்லை என்று சொல்ல முடியுமா?

அந்த நோயை ஒழித்துவிட்டால், புதிதாக இன்னொரு நோய் வருகிறது. இப்பொழுது எபோலா என்ற புதியநோய் ஒன்று வந்திருக்கிறது. பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், நம்மூரில் பதவிக் காய்ச்சல் ஆகவே

இதுபோன்ற பல வகையான காய்ச்சல்கள் இருக்கின்ற சூழ்நிலையில், இவ்வளவுக்கும் மருந்து பெரியார் என்றமாமருந்து.

மருந்து எதற்காக? மருந்தை கண்டுபிடித்தவருக்கு மரியாதை காட்டுவதற்காகவா? ஏங்க மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், மருந்துக் கடையை திறந்து வைத்திருக்கிறாரே, மருந்து சாப்பிடாவிட்டால் அவர்

வருத்தப்படுவாரே என்பதற்காகவா? அல்ல, நம்முடைய நோயைத் தீர்ப்பதற்காக!

அதுபோல், அறியாமை நோயைத் தீர்ப்பதற்கு, ஜாதி நோயைத் தீர்ப்பதற்குத்தான் பெரியார் தேவைப்படுகிறார்.தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஒரு முதலமைச்சருக்கே இந்தக் கொடுமை!

பீகாரில் ஒரு முதலமைச்சராக இருக்கக்கூடிய தாழ்த்தப் பட்டவர் கோவிலில் சாமி கும்பிட்டார் என்பதற்காக,அவர் சென்றதும் அந்தக் கோவிலை கழுவி விடுகிறார்களே?

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் கழுவி விடுகிறான்; அவன்தான், மோடிக்கு முன்பாகவே, சுத்தப்படுத்து கின்ற வேலையை ஆரம்பித்துவிட்டான். மோடி
துடைப் பத்தை எடுத்தார்; அவன் தண்ணீர்க் குடத்தை எடுத்தான்.

ஆகவேதான், ஜாதி, தீண்டாமை, மனிதர்கள் ஒருவருக் கொருவர் எட்டி நிற்கவேண்டும் என்று சொல்வது,வேற்றுமை காட்டுவது, படிப்பு இன்னாருக்குத்தான் சொந்தம் என்று சொல்வது, இவற்றையெல்லாம் மாற்றியபெருமை யாரைச் சார்ந்தது என்றால், இதோ சிலையாக நிற்கிறாரே, அவர் தந்த சீலத்தினுடைய நெறிகள்தான்என்று போவோர், வருவோர் எல்லோருமே உயர்ந்து பார்த்து, தந்தை பெரியாருடைய சிலையைப் பார்த்து

பாடம் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

மற்றபடி, நீங்கள் எதை வேண்டிக்கொண்டாலும், ஒரு சுற்று சுற்றிவந்தால் நடைபெற்றுவிடும் என்று சொல்வதற்காக இந்த சிலையை வைக்கவில்லை.

பெரியாருடைய கொள்கைக்கு ஒரு நல்ல பிரச்சாரமாக அமைந்த விழா இது!

எனவேதான், நண்பர்களே, இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சியை, ஒரு நல்லகுடும்ப விழாவாக மட்டுமே இருக்கக்கூடிய நிகழ்ச்சியை, ஒரு குடும்பத்தினுடைய நிகழ்ச்சியாக மட்டும் ஆக்கிக்கொள்ளாமல், கொள்கைத் திருவிழாவாக மாற்றி, அதன் மூலம் மீண்டும் பெரியாருடைய கொள்கைக்கு ஒருநல்ல பிரச்சாரத்தை அமைக்கவேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்த நம்முடைய க.ச. அவர்களுக்கும்,செங்குட்டுவன் அவர்களுக்கும், மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக் கின்ற அத்துணை குடும்பத்து
உறுப்பினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், எல்லோருக்கும் என்னுடைய மனமுவந்த பாராட்டுதல்களையும்,நன்றிகளையும் தெரிவித்து விடை பெறுகிறேன். வணக்கம்!

அய்யா க.ச. அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்துவோம்!

மீண்டும் இந்த ஊரில் நூற்றாண்டு விழாவை அவருக்கு நடத்துவோம், கொண்டாடுவோம் என்றநம்பிக்கையோடு, நூற்றாண்டு விழா என்பது இப்பொழுது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏனென்றால்,
இப்பொழுது மருத்துவ முறை களும், கண்டுபிடிப்புகளும் வேகமாக வளர்ந்துகொண்டு, வந்துகொண்டிருக்கின்றகாலம்; அந்த நம்பிக்கையோடு விடைபெறுவோம்! நன்றி,வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
                    -----------------------”விடுதலை” 28-10-2014
Read more: http://viduthalai.in/page-4/90135.html#ixzz3HUiKjkbL

ஏது சார் ஜாதி? எங்கே இருக்குதுங்க தீண்டாமை?வக்கணை பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை!சங்கர மடங்கள் உள்ள வரை, வேத, இதிகாச, புராண சாஸ்திரக் குப்பைகள் உள்ள வரை பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி ஆதிக்கத்தினை ஒரு போதும் கெல்லி எறியப் போவதில்லை.

நெஞ்சை நிமிர்த்தி நீ தீண்டத்தகாதவன், எட்டி நில்! தூர விலகி ஓடு! என்று  இன்று சொல்ல முடியவில்லை என்பது உண்மை தான் என்றாலும், பார்ப்பனர் களின் சிந்தனையின் ஓரத்தில்கூட தீண்டாமை தவறு தானே -
மனித உரிமைக்கும், நேயத் துக்கும் எதிரானதுதானே என்று எண்ணம் கசியாது.

வெகுதூரம் போகவேண் டாம்; அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற மனித சமத்துவம். தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையாக திராவிடர் கழகத்தின் தீவிர முயற்சியால் சட்டரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்டிருப்பினும், ஏன் தடைப்பட்டு நிற்கிறது? எந்த இடத்தில் முட்டுக்கட்டை முறுக்கிக் கொண்டு நிற்கிறது?

கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் கட்டளையை ஏற்று சட்டம் செய்தாரே - ஆணை பிறப்பித்தாரே!

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குப் பார்ப்பனர் கள் சென்றநேரத்தில், அதற் குத் தூண்டுதல் பீடமாக இருந்தவர் காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிதானே? பிரபல வழக்குரைஞர் பல்கிவாலா
வுக்குச் சிபாரிசு செய்ததும், கனம் ராஜகோபாலாச்சாரி யார்தானே? (ராஜாஜி).

ஆனால், பார்ப்பன ஊடகங்களும் சரி, அவாளில் பெரிய மனிதர்களும் சரி, சங் பரிவார் பேர்வழிகளும் சரி பேசுவதைப் பாருங்கள், இந்தக் காலத்தில் ஏது சார் ஜாதி? எங்கே இருக்குதுங்க தீண்டாமை? என்று

வக்கணை எச்சில் ஒழுகப் பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.


இவர்களுக்கெல்லாம் யார் வழிகாட்டி என்றால், மறைந்த மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி தான்!

அவர் பேசினால் அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் தெய்வத்தின் குரல்!

பரணீதரன் என்ற புனைப் பெயரில் பார்ப்பனர் ஒருவர் ஆனந்தவிகடனில் தொடர் எழுதி வந்தார். அதில் ஒன்று

இதோ: (ஆனந்தவிகடன், 14.4.1974)

கடியாவிலிருந்து பெக்னி தார் என்ற இடத்துக்கு இமய மலையில் சங்கராச்சாரியார் பயணம், கரடு முரடான பாதை; தரை அரிப்புக் காலைக் குத்தும்; கற்களும், ஜல்லிகளும் - மலையேற்றம் - வெயில் ஏற்றம்... இப்
பாதையில் செருப்பில்லாத வெற்றுக்காலுடன் நடந்த தால், சங்கராச்சாரியார் காலி லிருந்து சிறிது ரத்தம்

கசிந்தது. இதனால்  உடனிருந்த பக்தர் கள் வேண்டிக் கொண்ட தால், அவர் தண்டிகையில் (பல் லக்கில்) ஏறிக் கொண்டாராம்.

தண்டிகையைச் சுமந்து வந்தவர்களுக்கு மடி விழுப்பு என்றால், என்ன வென்று தெரி யவில்லை. அவர்கள் இஷ்டத் துக்கு கைகளை வீசிக் கொண் டிருந்தார்கள் என்று எழுதுகிறார்.

விவரம் புரிகிறதா? தண் டியில் சங்கராச்சாரியார் அமர்ந்துள்ளார் என்று தெரி யாமல், சங்கராச்சாரியார் உடம்பில் இவர்களின் கைபட் டால் தீட்டு என்று தெரியாமல் கைகளை வீசி நடந்து கொண்டார்களாம்.

எப்படி இருக்கிறது? சங் கராச்சாரியார் காலில் சிறிது ரத்தம் கசிந்ததற்கே கசிந்து ருகிய பரணீதரன்கள், அதே கல்லில், முள்ளில் செருப்பு அணியாமல், தடியரைத் தண்டியில் வைத்துத் தூக்கிச் சென்றதுபற்றி ஒரே ஒரு வார்த்தை உண்டா? அவர் களின் மெய்வருத்தம் பற்றிச் சிந்திக்காதது ஏன்? கேட்டால், கர்ம பலன் என்று கூறி மடக்கி விடுவார்கள். 

சங்கராச்சாரிமீது கைபட்டால் அது என்ன சாதாரண தீண்டாமையா? மிகவும் விலை உயர்ந்த (காஸ்ட்லி) தீண்டாமை - அப்படித் தானே?
மடி - தீட்டு இல்லாத நிலை; விழுப்பு - தீட்டு

          ------------------ மயிலாடன் அவர்கள் 28-10-2014 -”விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.10.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 39


இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஒன்பதாம் அத்தியாயம் தொடர்ச்சி
19) பரதனுக்குக் கொடுப்பதாய் விவாக காலத்தில் பிரதிக்ஞை செய்த இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுப்பதாக

நிச்சயித்ததைக் கேட்டால் கேகய மன்னன் ஆட்சேபிப் பானென்று அவனுக்குச் சமாச்சாரம்

அனுப்பாமலிருந்ததும்.

20) மற்ற அரசர்களுக்குச் சொல்லி அனுப்பியதும் சிக்கலான் விஷயங்களே...

பதம புராணத்தில் இதைக் காரணமாக வைத்துக் கொண்டு கைகேயிக்குத் தசரதர் செய்த பிரதிக்ஞையை

நிறைவேற்றுவதற்காக இராமனுக்குச் செய்த பிரதிக்ஞை யைத் தவறினாரென்றும், அதற்காக அவருக்கு நல்ல கதி

கிடைக்கவில்லையென்றும் சொல்லப்படுகிறது... மேலும் கைகேயியும் மந்தாரையும் செய்த காரியங் களுக்குத்

தகுந்த நியாயமும் காரணங்களும் காணப்படு கின்றன. அவற்றைப் புறக்கணித்து அவர்களை எல்லையில்லாமல்

நிந்திப்பதும் குற்றஞ்சாட்டுவதும் நியாத்திற்கு ஒத்ததாகத் தெரியவில்லை. இதன் இரசியத்தைப் பரத்வாசர்

பரதனுக்குச் (92-ஆவதில்) சொல்லுகிறார்.

மேலே கண்ட குறிப்புகளெல்லாம் மொழி பெயர்ப் பாளர் அய்யங்காருடையன. அவற்றில் பல உண்மைகள்

உணரவிருப்பதை அறிஞர் அறிவார்களாக!

பத்தாம் அத்தியாயம்

இனி கதைத் தொடர்ச்சியிற் செல்வோம்.

பிராமணர்கள் பலர் இராமனைத் தொடர்ந்து சென்றனர். அவர்களை நோக்கி இராமன், என்னிடத் திலுள்ள

அன்பை இனி பரதனிடம் வையுங்கள். அவன் கைகேயியின் மகனல்லவா? அவளுடைய தீய குணங்கள்

அவனிடமுமிருக்குமல்லவா? அவனிடத்தில் எங்களைக் காட்டிக் கொடுக்கலாமா என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால், பரதன் மிகவும் நல்லவன், அவனை இளவரசனாக அரசர் நியமித்திருக்கிறார் என்றான்.

இச்சாதுரியமான பேச்சால் அவர்களுக்கு இராமனே அரசனாக வேண்டுமென்று ஆசை அதிக ரித்தது.

அவர்களிற் கிழவர் நடக்க முடியாது வருந்து வதைக் கண்டு இராமன் தேரை விட்டுக் கீழேயிறங்கி நடந்தான்.

தமசா நதிக்கரை குறுக்கிட்டது. இரவு அங்கே யாவரும் தங்கினர். விடிந்தது. பிராமணர்களனைவரும்

தூங்குவதைக் கண்ட இராமன் அவர்கள் எழுமுன்தான் அயோத்திக்குப் போனதாகத் தேரை நடத்திக் காட்டி

ஏமாற்றிவிட்டுச் சென்றான். பிராமணர்கள் ஏமாந்து அயோத்தியையடைந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலு முள்ள

பெண்ணும் தங்கள் கணவரைப் பார்த்து அழுது கொண்டு கூர்மையான மரவெட்டியால் யானையைக்

குத்துவதுபோல் ஏற்கெனவே புண்பட்ட அவர்களுடைய மனத்தைக் கொடுமையான சொற்களால் துளைத்து

அவர்களை நிந்திக்கிறார்கள். இராமனை அழைத்து வரத் திறமற்றவர்களுக்குப் பெண்டாட்டி பிள்ளைகளேன்?

தீயவளாகிய கைகேயியின் நாட்டில் யாம் தங்கோம். எல்லோரும் இராமனிடம் போவோம். மலையுச்சி

களிலுள்ள மரங்களின் அடிகளில் உதிர்ந்துள்ள தளிர் களாலும், மலர்களாலுமாகிய படுக்கைகளில் சீதையுடன்

இராமனைக் கூடிக் கலந்து விளையாடச் செய்யும் இராமனின் கட்டழகையுடைய திருமேனியைக் கண்டு

காட்டிலுள்ளவர்களல்லவா இன்புறுவார்கள்? அவன் எப்போதும் இனிமையாகப் பேசுகிறவன். யாரிலும் தானே

முதலில் பேசுபவன், எல்லோருடைய மனத்தையும் கவர்பவன். எப்போதும் சிரித்த முகத்தையுடைய அவனை

இன்னொரு முறை காண்போமோ? என அப்பெண்கள் புலம்பினர்.

இராமன் வடகோசல நாட்டின் எல்லையையடைந்த போது அங்குள்ள குடிகள், நம் அரசன் அறிவற்றவன்,

எவனாவது இந்தக் கிழவயதில் காமத்திற்கு அடிமைப் பட்டு இத்தீய செயலைச் செய்வானா? தன் மகனைக்

காட்டிற்கனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தசரதனுக்கு எப்படி வந்தது? கைகேயி மரியாதையற்றவள், மிகவும்

தீயவள் என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டு இராமன் கோசலத்தைத் தாண்டிப் போனான். அவன்

சுமந்திரனைப் பார்த்து, நான் திரும்பிவந்து இன்னுமொரு தரம் சரயூ நதிக்கரையிலுள்ள காடுகளில்

வேட்டையாடுவேனா? என்று கூறினான். பின் இராமன் அயோத்தி நகரத் தேவதைகளை வணங்கிக் கொண்டு

அங்கு நின்ற குடிகளையும் அனுப்பிவிட்டுக் கங்கைக் கரையைச் சீதையுடனும் இலக்குவனுடனும் அடைந்தான்.

சிருங்கபேரபுரத்தை நோக்கிச் செல்லும் இராமன் தேரை நிறுத்தச் சொல்லி அவர்களோடும் அங்கே தங்கினான்.
அந்த நாட்டிற்கு அரசன் குகன். அவன் இராமனுக்கு உயிர்த்தோழன். இராமன் வந்திருப்பதை அறிந்து அவன்

உறவினரோடு பார்க்க வந்தான். அவன் வருவதைத் தூரத்திலேயே கண்டு இராமனும் இலக்குவனும் எழுந்து

எதிர்கொண்டு உபசரித்தார்கள். இராமனை அந்நிலையிற் கண்டு மிகவும் கவலைப்பட்டு அவனை அன்புடன்

கட்டியணைத்து, இந்நாடு உன்னுடையது. இங்கேயே தங்கலாம் என்று கூறி மதுரமான பலவித மாமிசங் களையும்

உணவுப் பொருட்களையும் கொண்டு வந்து வைத்தான். அதைக்கண்டு இராமன் அவனை இறுகத் தழுவி,

உன்னுடைய இனிய சொற்களால் மிகவும் மகிழ்ந்தேன். இப்போது நான் பிறரிடத்தில் எதையும் பெறுவதும்

உண்பதும் கூடாது. இந்தக் குதிரைகளுக்கு வேண்டுவன கொடு என்று கூறி இலக்குவன் தந்த கங்கை நீரைக்

குடித்தான். இராமனும் சீதையும் தரையில் படுத்துக்கொண்ட பிறகு இலக்குவன் அவர்களுடைய கால்களைக்

கழுவிவிட்டுக் குகனிருந்த இடம் வந்தான். குகன் அவனுடன் விற்பிடித்து இராமனைப் பாதுகாத்தி ருந்தான்.

குகன் இலக்குவனையும் படுத்துக்கொள்ள வேண்டினன். இலக்குவனோ இராமனும் சீதையும் புல்லின்மேல்

தூங்குவதைப் பார். அவர்கள் அவ்வாறு தூங்கும்போது எனக்குத் தூக்கமும் வருமா! தந்தைக்கு எங்கள்

நால்வரிலும் இராமனிடத்தில் மிகவும் பிரியம்! அவனைப் பார்க்காமல் அவருடைய உடலில் உயிர் நிற்குமா?

கோசலையும் இறப்பாள். நிகரற்ற அழகு வாய்ந்த வேசைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அயோத்தியில்

வாழ்பவர்களே புண்ணிய சாலிகள். நாங்கள் திரும்ப அயோத்தியில் புகுவோமா? என்று ஏங்குகிறான்.

பொழுதும் விடிந்தது, இராமனுடைய வேண்டுதலால், குகன் நல்ல மரக்கலம் கொண்டு வரக் கட்டளையிட்டான்.

இராமன் தம்பியுடன் போர்க்கருவி களையணிந்து படகை நோக்கி நடந்தான். சுமந்திரன், பாவியாகிய

கைகேயியிடம் எங்களை ஒப்புவித்துப் போகலாமா? நானும் கூட வருவேன் என்றான். இராமன், என்

தந்தையின் மனோரதங்களெல்லாம் வீணாயின.

அதனால் காமத்தில் ஈடுபட்ட அவருடைய கவலை களைப் போக்குவது உமது கடமை. கைகேயிக்காக அவர்

விரும்புவதைச் செய்யும். அவரிடம் நாங்கள் விரைவில் பார்ப்போமெனச் சொல்லும் தாய்மாரிடம்

கவலையற்றிருக்கக் கூடும். பரதனிடத்தில் தந்தையைப் போலவே தாய்மார்களையும் பணிந்து நடக்க

வேண்டுமென்றும், அதிலும் என் தாய் கோசலையை மிகவும் கவனிக்க வேண்டுமென்றும், சொல்லும் எனப்

புகன்றான். சுமந்திரன் போக மறுக்க இராமன் மறுபடியும், நான் உம்மைத் திரும்பிப் போகக் சொல்லப்பல

காரணங்களுள.

கைகேயி நீர் போனவுடன் நான் காடடைந்தததாக உறுதியாக நினைத்து அரசர்மீதுள்ள பொய் சொல்லுகிறவன்

என்ற சந்தேகத்தை நீக்குவாள் என்றான். பின் அவன் குகனிடம் ஆலம்பால் கொண்டு வரச் சொல்லித்

தலையைச் சடையாக்கினான். பின் குகனுக்கும் விடை கொடுத்து இலக்குவனிடம், தம்பி! சீதையை ஓடத்திலேற்றி

நீயும் ஏறு என்றான். பின் தானும் ஏறினான். ஓடமோட்டி விரைவில் ஓட்டினான். போகும்போது சீதை

கங்காதேவி எங்களைக் காப்பாற்றும், நாங்கள் சுகமே திரும்பிவரும்போது பல்லாயிரம் பசுக்களையும், நல்ல

உடைமையும், நல்ல உணவையும். பிராமணர்களுக்குக் கொடுத்து உம்மைத் திருப்தி செய்கிறேன். பல்லாயிரம்

கள்ளுக்குடங்களாலும் பலவகையான மாமிசங்களாலும் உம்மையும் பிற தெய்வங்களையும் திருப்தி செய்கிறேன்

என வேண்டிக் கொண்டாள். அக்கரை சேர்ந்தவுடன்  அவர்கள் மூவரும் கரையில் இறங்கி நடந்தார்கள்.

இவர்கள் மத்ச நாட்டில் வந்து அங்கே காட்டுப்பன்றி, ரிசியம், பிருஷதம், மகாகுரு என்று சொல்லப்படுகின்ற

மான்கள் ஆகிய இந்நான்கு பெரிய மிருகங்களையும் விரைவிற் கொன்றெடுத்து ஒரு பெரிய மரத்தடியில்

அவற்றைத் தின்ன உட்கார்ந் தார்கள்.

தின்றபின் இராமன் படுக்கையிற் படுக்கப்போகும் போது இலக்குவனை நோக்கி, இப்போது தந்தை துக்கத்தால்

தூக்கம் வராமல் வருந்துவார். கைகேயி தன் மகனுக்கு நாடு உறுதியாகக் கிடைக்க வேண்டும் என்ற

எண்ணத்தால் ஒருவேளை தந்தையைக் கொன்றாலும் கொல்லுவாள். அவரோ காமத்திற்கு வசப்பட்டவர்.

கைகேயியிடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். நானும் பக்கத்திலில்லை. அய்யோ என் செய்வார்? நம் பிதா

செய்ததை ஒருவன் எவ்வளவு மூடனானாலும் ஒரு பெண்ணை மகிழ்விக்கத் தன் மனப்படி நடக்கும் மகனைக்

காட்டிற்குத் துரத்துவானா? அவர் இன்னும் எத்தனை நாள் வாழப்போகிறார்? பரதன் தன் மனைவியுடன்

கோசல நாட்டைத் தான் ஒருவனாகச் சுகமாக அனுபவிக்கப் போகிறானே. புதிதாக அதிகாரம் கிடைத்த

கொழுப்பால் கைகேயி இப்போதே கோசலை யையும் சுமித்திரையையும் தொந்தரவு செய்வாள். ஆதலின்

காலையில் அயோத்திக்குப் போ. கைகேயி அநியாயக்காரி. முற்பிறப்பில் என் தாய் பல மாதர்களைத் தன் தன்

பிள்ளைகளிடமிருந்து பிரித்தாளென்பது நிச்சயம். அதனாலேயே நான் அவளைப் பிரிய நேர்ந்தது. எனக்குக்

கோபம் வந்தால், நானொருவனே உலகை வென்று அயோத்திக்கு என்னை அரசனாக்கிக் கொள்வேன்.

உலகத்தார் பழிப்பார்களென்று அஞ்சியே சும்மாயிருக்கிறேன் எனப் பலவாறு புலம்பிக் கண்ணீர் வடித்தான்.

இலக்குவன் இராமனைப் பிரிந்தால் இறப்பதாகக் கூறினான். பின் அவர்கள் அந்த மரத்தடியில் படுத்துக்

கொண்டார்கள்.
     ------------------ தொடரும் ---------------"விடுதலை” 28-10-2014

27.10.14

பெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்-பெரியார்

பெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்


நாம் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறோம். ஆனால் மணமக்களை வாழ்த்துவது என்பதும் கூட ஒரு மூட நம்பிக்கையே ஆகும். அதையே இப்போது பலர் செய்தார்கள்.


இது ஒரு சம்பிரதாயமே ஆகும். இந்த முறையையேப் பார்ப்பான் காசு பறிப்பதற்காக ஏற்பாடு செய்ததே ஆகும். அவர்களுடைய வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற அறிவுரை கூறவே இதுபோன்ற நிகழ்ச்சியாகும்.


நாகரசம்பட்டியார் குடும்பம் நமக்கு மிக வேண்டிய குடும்பம் தான் என்றாலும், சொன்னால் வெட்கப்பட வேண்டும். சுயமரியாதைப்படி நடக்கிறதாகச் சொல்லிக் கொண்டு செய்யும் இத்திருமணமானது, சுயமரியாதைக் கொள்கைக்கு ஏற்றதாக இல்லை. இதை இப்படி ஏன் சொல்கிறேன் என்றால், இந்த இரண்டு திருமணங்களும் அவர்கள் சாதிக்குள்ளேயே செய்து கொண்டார்கள். அப்படி கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதில் சம்பந்தம் அவர்களுக்கு இடித்துக் கூட சொல்ல வேண்டிய உரிமை எனக்கு உண்டு.


இந்தச் சிறு வயதிலேயே அவர் தனது பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு செய்திருக்க வேண்டியதில்லை. அதை இன்னும் நல்ல முறையில் படிக்க வைத்திருக்கலாம். அது இன்னும் மற்ற தாய்மார்களும் தங்கள் பெண்களுக்கு அவசரப்பட்டுத் திருமணம் செய்யக் கூடாது. நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அவர்களே, தங்களின் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.


மூட நம்பிக்கையான காரியங்களை விட்டு விட வேண்டும். நமக்கு வேண்டியதெல்லாம் நம் நாட்டைப் பொறுத்தவரை அறிவின்மைக் குறை நீங்க வேண்டியதே ஆகும். அதைக் கொண்டு எல்லாவற்றையும் சரி செய்து கொள்ள வேண்டும். சமத்துவம் வரவேண்டும்.


கொஞ்ச காலத்திற்காவது பிள்ளை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள குறைகளில் மிகப் பெரியது இந்தப் பிள்ளைப்பேறுதான் ஆகும். இனி வரப் போகும் அரசாங்கமும் இதைத் தடுக்க முயற்சிக்கும் வகையில் பெண்களின் வயதை 21-ஆக்கப் போகிறது. பிள்ளைப் பெறுவது தங்களின் பிற்காலத்தில் தங்களுக்குச் சம்பாதித்துப் போட வேண்டுமே என்று கருதுகிறார்கள். இனி சக்தி குறைந்தால், சர்க்கார் மான்யம் கொடுக்கும். மனிதன் சந்தோஷப்பட வேண்டுமானால் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிகமாகப் பெற்றுக் கொண்டு அவஸ்தைக்கு ஆளாகக் கூடாது. காமராசரின் அரசாங்கத்தால் இப்போது கல்வி பரவி இருக்கிறதே ஒழிய, நம் மக்களால் கல்வி பரவவில்லை. படித்தவர்கள் எல்லோரும் சர்க்கார் உத்தியோகம் வேண்டுமென்று நினைக்கிறார்கள். அது நமக்கும் தொல்லை; சர்க்காருக்கும் தொல்லை. படிப்பைக் கொண்டு தொழில் செய்ய வேண்டும். தொழில் துறையில் நாம் ரொம்பவும் முன்னுக்கு வரவேண்டும்.


படித்தவர்கள் மனம் அரசாங்கத்தில் தான் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. இது மாற வேண்டும்.


நாம் நமக்காகத் தான் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு - மற்ற மக்களுக்குத் தங்களால் ஆன தொண்டுகளைச் செய்ய வேண்டும்.


நம் மக்களுக்கு இன உணர்ச்சி பெருக வேண்டும். மற்ற பிற இனத்தானுக்கு இருப்பது போல் தன் இனம் முன்னேற வேண்டும். பார்ப்பானை எடுத்துக் கொள்ளுங்கள் - அவன் பிச்சைக்காரனாக இருந்தாலும், சங்கராச்சாரியாக இருந்தாலும், இராஷ்டிரபதியாக இருந்தாலும் அவன் எண்ணமெல்லாம் தனது இனத்தின் முன்னேற்றத்தைப் பற்றியதாகவே இருக்கும். அதுபோன்ற எண்ணம் நமக்கு வர வேண்டும். நம் மக்கள் முன்னேற வேண்டுமென்பதில் ஒவ்வொருவருக்கும் எண்ணம் இருக்க வேண்டும். அதற்காகப் பாடுபட வேண்டும்.


மணமக்கள் வரவிருக்கு மேல் செலவிடக் கூடாது. ஆடம்பரமாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் சராசரி மனித வாழ்வு வாழ வேண்டும். மற்ற மக்களோடு சரி சமமாகப் பழக வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மணமக்கள் குடும்பத்தினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


---------------------------------21.05.1967- அன்று நாகரசம்பட்டி திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 28.05.1967

26.10.14

அகில இந்திய வானொலியில் 8 மணிநேரம் இந்தி ஒலிபரப்பா?கடும் போராட்டம் வெடிக்கும்!-கி.வீரமணி


அகில இந்திய வானொலியில் 8 மணிநேரம் இந்தி ஒலிபரப்பா?
சமஸ்கிருதம், இந்தித் திணிப்பில் தொடர்ந்து முனைப்புக் காட்டும்
மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் போக்குக்கு முடிவு கட்டவேண்டும்
கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கை!
வானொலியில் 8 மணிநேரம் இந்தித் திணிப்புக்கு வழி செய்யும் மத்திய பி.ஜே.பி. ஆட்சியைக் கண்டித்தும், இதை விலக்கிக் கொள்ளாவிட்டால், கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:


அகில இந்திய வானொலி இயக்குநர் ஜவகர் சிறீகார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானொலி நிலையத்திற்குச் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். இன்றுமுதல் (26.10.2014) இந்தி நிகழ்ச்சிகளை நான்கு மணிநேரம் ஒலிபரப்பவேண்டுமென்றும், அதன் பிறகு மறு ஒலிபரப்பாக மீண்டும் விளம்பரதாரர் நிகழ்ச்சியாக நான்கு மணிநேரம் ஒலிபரப்பவேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள சில உள்ளூர் வானொலி நிலையங் களிலும் இந்தி ஒலிபரப்பு தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

நொண்டிச் சமாதானம்

அனைத்திந்திய வானொலி இந்தி ஒலிபரப்பின்மூலம் உள்ளூர் வானொலி நிலையங்களின் தயாரிப்புச் செலவைக் குறைக்கவும், விளம்பர வருவாயைப் பெருக்கவும்தான் இந்த நடவடிக்கை என்று இதற்குச் சமாதானமும் கூறப்படுகிறது.


தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று கேட்டபோது, புல் பறிக்கப் போனேன் என்றானாம் ஒருவன்; கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பாருக்குப் புத்தி எங்கே போயிற்று? என்பதும் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பழிமொழி யாகும்.
வர்த்தக நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை தென்னிந்தி யாவில் உள்ள மாநிலங்கள், வட மாநிலங்களவைவிட அதிக வருவாயை விளம்பரங்கள்மூலம் ஈட்டியே வருகின்றன. வானொலியின் மறு ஒலிபரப்பு என்றால், அது தாய்மொழியாகிய தமிழில் ஒலிபரப்பினால்தான் பயன் ஏற்படும். விளம்பரதாரர்களும் அதிகம் பார்க்கும் பகுதிக்குத்தான் தங்கள் விளம்பரங்களையும் அளிப்பார்கள். இந்தியில் வந்தால் நிறுத்தி விடுவார்கள். தொலைக்காட்சி அறிமுகமான பிறகு, வானொலியின் பயன்பாடு குறைந்த நிலையில், மாநில மொழிகளுக்கு மாறாக இந்தியை ஒலிபரப்பினால் நிரந்தரமாக வானொலிப் பெட்டிகள் குறட்டை விட வேண்டியதுதான்.

மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை

ஏற்கெனவே, நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் 5 மணிவரையிலும் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுதான் வருகின்றன. அந்நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த நிலையில், மேலும் நான்கு மணிநேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி, அதை மறு ஒலிபரப்பாக நான்கு மணிநேரம் செய்தால், அதன் விளைவு - தமிழ் ஒலிபரப்பு நேரத்தை ஒழிப்பதுதானே! புதுச்சேரி வானொலி நிலையத் தைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு போன்ற மொழிகள் மாத்திரமே ஒலிபரப்பப்பட்டு வரும் நிலையில், அங்கும் இந்தியைத் திணிக்கும் நிலையில் மற்ற மொழிகளின் தலையில் கைவைக்கும் சூழ்ச்சிதானே இது!

1990 இல் நடந்தது என்ன?

1990 ஜனவரி 25 முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரவு 7.40 மணிமுதல் இரவு 10.30 மணிவரை இரண்டாவது அலைவரிசை தமிழ் ஒளிபரப்பின் இடையில் 8.40 மணிக்கு இந்திச் செய்தி அறிக்கை ஒளிபரப்பாகும் என்பதுதான் அந்த மாற்றமாகும்.

அன்றிரவு இதை அறிவித்த உடனேயே ஒரு நொடி கூடத் தாமதியாமல், முதலமைச்சர் கலைஞருடன் பேசினேன்; நான் பேசுகிறேன், ஆனால், உங்களுக்கு மத்திய அமைச்சர் உபேந்திரா நன்கு அறிமுகமான நண்பர் ஆதலால், நீங்களும் உடனே பேசுங்கள் என்றார் முதல்வர் கலைஞர். நானும் மத்திய அமைச்சரிடம் தொலைப்பேசி யில் பேசினேன். அவர் உடனடியாக மாற்றம் செய்ய என்னிடமும் உறுதி சொன்னார்; முதலமைச்சர் கலைஞரிட மும் உறுதி செய்தார். அன்றிரவு 11 மணி செய்தியிலேயே தமிழ் ஒளிபரப்பின் இடையில் இந்தி செய்தி ஒளிபரப்பு கிடையாது என்ற மாற்றத்தை அறிவித்தனர்.

அன்றைய சென்னை தொலைக்காட்சி இயக்குநர் திரு.நடராசன் அவர்களே வியந்து பாராட்டினார். இவ் வளவு விரைவாக மாற்றியமைக்கப்பட்டது என்பது மத்திய அரசின் வரலாற்றில் மிகவும் புதுமை என்றும் கூறினார்.

இந்தித் திணிப்பில் முனைப்புக் காட்டும் மத்திய பி.ஜே.பி. ஆட்சி

இன்றைக்கு மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பி.ஜே.பி. வந்தது முதல் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என்பதில் மிகவும் குறியாகவே இருந்து வருகிறது.

பல்கலைக் கழக மானியக் குழு அனைத்துப் பல்கலைக் கழகங்களும் இந்தியையே பயிற்று மொழி, பரப்பு மொழி யாகக் கொள்ளுதல் கட்டாயம் என்பதான ஓர் அறிக் கையை அனுப்பியது; கடுமையான எதிர்ப்புப் புயல் வெடித்துக் கிளம்பிய நிலையில், ஆமை தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதுபோல, அந்த அறிக்கை யைப் பின்வாங்கியதோடு, அவ்வறிக்கை தவறுதலாக அனுப்பப்பட்டது என்று சமாளித்தது.

மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத் தளங்களில் கட்டாயமாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும். வேண்டுமானால், இந்தியுடன் ஆங்கிலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று மே 27 ஆம் தேதி (2014) மத் திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்தது. அப் பொழுதும் கடும் எதிர்ப்பு - குறிப்பாக தந்தை பெரியார் பிறந்த - திராவிட இயக்கம் வேரோடிய தமிழ் மண் கொதித்துக் கிளம்பியது. அது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே என்று கூறி, நழுவிக் கொண்டது. மத்திய பி.ஜே.பி. அரசு.

சமஸ்கிருத வாரம்!

சூடுபட்ட பிறகாவது புத்திக் கொள்முதல் பெறவேண் டாமா? கடந்த ஆகஸ்டு 7 முதல் 13 ஆம் தேதி முடிய இந்தியா முழுமையும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ் கிருத வாரம் கொண்டாடவேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது.


ஆசிரியர் தினத்தை (செப்டம்பர் 5) குரு உத்சவ் என்று சமஸ்கிருதமயமாக்கி அறிவித்தது; அப்பொழுதும் கண்டித்து அறிக்கை வெளியிட்டோம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22, அதிலே ஒன்று சமஸ்கிருதம்; அவ்வளவுதானே! இதற்கு மட்டும் என்ன அப்படியொரு முக்கியத்துவம்? சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸின் முயற்சிதான் இது என்று அப்பொழுதே கண்டித்தோம். (விடுதலை, 1.9.2014).
மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு சந்தர்ப்பம் கிடைக் கும்பொழுதெல்லாம் இந்தி, சமஸ்கிருதத்தை மேலோங்கச் செய்யும் செயல்பாட்டில் இறங்குவதும், நாம் விழித்துக் கொண்டு எதிர்த்துக் குரல் கொடுத்தால் பதுங்குவதுமான இந்தச் செயலுக்கு நிரந்தர முடிவு கட்டியாகவேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக!

1. பொதுப் பட்டியலிலிருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது  அட்டவணையில் தமிழ் உள்பட உள்ள 22 மொழிகளுக்கும் ஆட்சி மொழியாகும் ஒரு நிலை சட்ட ரீதியாக உருவாக்கப் படவேண்டும்.

அதுதான் நிரந்தரப் பரிகாரமாகவும் இருக்க முடியும் - விரைவில் அதற்கொரு முடிவைக் காண்போம்!

கடும் போராட்டம் வெடிக்கும்!

வானொலியில் இந்தியைக் கூடுதல் நேரத்தில் ஒலி பரப்பக் கட்டாயப்படுத்தும் ஆணையை மத்திய அரசு உட னடியாக விலக்கிக் கொள்ளவேண்டும். இல்லையெனில், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் போராட்டத்தை எடுத்துச் செல்வதில் திராவிடர் கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1990 இல் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்பட்டதுபோல, இன்றைய முதலமைச்சரும் இதில் தலையிடுமாறும் வற்புறுத்துகிறோம்.


-------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம். --”விடுதலை” 26-10-2014

தீபாவளிப் பண்டிகையைப் பற்றி விவாதம் விமர்சனம் செய்ததற்காக ஆர்ப்பாட்டமா?

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?


தீபாவளிப் பண்டிகையைப்பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் விவாதம் நடைபெற்றுள்ளது (22.10.2014).


பேராசிரியர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் எஸ்.இராம கிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் வீ.அரசு, வழக்குரைஞர் இராமமூர்த்தி ஆகியோர் விவாதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.


தீபாவளி என்றால் என்ன? அதற்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? மூடத் தீபாவளியைப்பற்றிய அறிவுக்குப் பொருந்தாத மூடக் கதைகள்பற்றி எல்லாம் விவாதத்தில் எடுத்துரைக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். கும்பல் சிலர் ஒன்று கூடி அந்தத் தனியார் தொலைக்காட்சிமுன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.


மாற்றுக் கருத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளாத பாசிஸ்டுகள் இப்படித்தான் அராஜகமாக நடந்துகொள்வார்கள். கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத கோழைகளின் கூப்பாடு இது. இந்த அணுகுமுறை கண்டிக்கப்படவேண்டும். இதனை அனுமதித்தால் நாட்டில் எந்தவித விவாத அரங்கமும் நடைபெற முடியாது.


எடுத்துக்கொண்ட பொருள்பற்றிய விவாதத்தில் ஒரு சாராருக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம்; சில நேரங்களில் சங்கடமாகவும் இருக்கலாம். அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பது என்று ஆரம்பித்தால், அறிவுக்கும், விமர்சனத்துக்கும் இடமில்லாமல் போய்விடும்.
உண்மையைச் சொல்லப்போனால், தீபாவளி என்பது தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது. தமிழர்களாகிய திராவிடர்களை இழிவுப்படுத்தக் கூடியதாகும்.


வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படும் அசுரன், அரக்கன், ராட்சதன் என்பவர்கள் எல்லாம் திராவிடர்கள்தான்; ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் தங்களின் எதிரிகளாகிய திராவிடர்களை இழிவுப்படுத்தவே இந்தச் சொற்களைக் கையாண்டுள்ளனர் என்று பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் உள்பட - இன்னும் சொல்லப்போனால், இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்த விவேகானந்தர் மற்றும் ஜவகர்லால் நேரு உள்பட எழுதியுள்ளனரே! மறுக்க முடியுமா?


சுரன் என்றால் சுரா பானம் குடித்தவன் - ஆரியப் பார்ப்பான்; அசுரன் என்றால் பானம் குடிக்காதவன் - குடியை மறுத்தவன்; ஆனால், இதனைத் தலைகீழாக மாற்றி, சுரனை ஒழுக்கவான் போலவும், அசுரனை கொடியவன் போலவும் சித்தரித்த ஆரிய நயவஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!


இரண்யாட்சன் என்ற திராவிட வீரன் ஆரியர்களை எதிர்த்து இருக்கிறான்; ஆரியப் பார்ப்பனர்களின் உயிர்ப் பலி யாகங்களை அழித்தவன்! மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தான் என்று கதை கட்டி சூழ்ச்சியால் அம்மாவீரனைக் கொன்றனர்.


இரண்யனின் மகன் பிரகலாதனையே அப்பனுக்கு எதிராக துரோகம் செய்யும் வலையை விரித்தவர்களும் பார்ப்பனர்களே!


இந்தப் பின்னணியில் தீபாவளியை முன்னிறுத்தும் அத்தனை யையும் எதிர்க்கவேண்டிய கடமை உணர்வு திராவிடர்களுக்கு உண்டு. தீபாவளிக்காக திராவிடர்கள்தான் தீயெனக் கொந்தளித்து எழவேண்டுமே தவிர, தீபாவளியைக் கொச்சைப்படுத்தாதே! என்று அப்பாவி தமிழர்கள் நாம் என்ன செய்கிறோம் என்ற விவரம் தெரியாத தமிழர்கள் குரல் கொடுப்பது வெட்கக்கேடானது!


அந்த அளவுக்குப் பார்ப்பனீயம் நம் தமிழ் மக்களை மூளைச் சாயம் ஏற்றியிருக்கிறது; பக்திப் போதையால் ஏற்பட்ட தடுமாற்றத்தின் தீய விளைவு இது.


சொந்த வீட்டுக்காரன் படுகொலையை வீட்டுக்கு உரியவன் கொண்டாடுவானா? அப்படி கொண்டாடுகிறான் என்றால், அதன் பொருள் என்ன? எந்த இடத்திலோ அவன் மூளை பழுது பட்டுள்ளது என்று பொருள்.


தீபாவளியைப்பற்றி விமர்சனம் செய்ததற்காக ஆர்ப்பாட்டம் நடத்தியதில் அனேகமாக பெரும்பாலும் நம் தமிழர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்; அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்து ஆழ்வார் பட்டம் பெற்ற விபீஷணர்களின் பரம்பரை இன்னும் தொடர்வது வேதனைக்குரியது. அவர்கள்மீது கோபப் படுவதைவிட அனுதாபப்படத்தான் வேண்டும்; அவர்களுக்கும் நல்லறிவு கொடுக்கவேண்டியதும் நமது கடமை என்றுதான் கருதுகிறோம். நம்முடைய பிரச்சாரம் இன்னும் தீவிரம் அடையவேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது.


இந்த நேரத்தில், நாம் கவனிக்கவேண்டியது - கருதவேண் டியது ஒன்று உண்டு. காவல்துறையின் முன் அனுமதி பெறாமல் ஒரு கும்பல் திடீரென்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிமுன் ஆர்ப்பாட்டம் நடத்தியது எப்படி?


பொதுவாக ஓர் இயக்கமோ, கட்சியோ, அமைப்போ அறப்போராட்டங்களுக்கு அனுமதி பெறவேண்டும் என்றால், 5 முழு நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்று நிபந்தனை வைக்கும் மாநகரக் காவல்துறை, திடீரென்று நினைத்து, திடீரென்று கூடி, ஒரு நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி கொடுத்ததா? அப்படி அனுமதி கொடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு என்றால், அந்த வாய்ப்பு மற்ற அமைப்புகளுக்கும் கிடைத்திட வாய்ப்புண்டா? என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம்.


அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது; 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்கவேண்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதுதான் காவல்துறையின் நிலைப்பாடு என்று கூறப்படு மேயானால், தனியார்த் தொலைக்காட்சிமுன் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அது சட்ட விரோதம் என்று கைது செய்யாதது ஏன்? உரிய நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்? என்று கேட்க விரும்புகிறோம்.

சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே! மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி நடக்கிறது; அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம்; சட்டத்தை, நடைமுறைகளை மதிக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசோ, அதன் காவல்துறையோ எழுதப்படாத ஒரு சட்டத்தைக் கைவசம் கொண்டுள்ளதா?


தமிழ்நாட்டில் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்த நிலையில், சங் பரிவார்க் கும்பலை தானடித்த மூப்பாக நடந்துகொள்ள அனுமதித்தால், அது தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்கும் - அதன் பயன் ஆட்சிக்குத்தான் - காவல்துறைக்குத்தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.


கடைசியாக ஒன்று, நான்கு பேர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தால், பாவ மன்னிப்புக் கோருவதுபோல, இந்தத் தனியார் தொலைக் காட்சி விளக்கம் அளிப்பது சரிதானா? இது ஒரு பலகீனமான அணுகுமுறையல்லவா?


ஒரு முடிவை எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். ஓடுகிறவனைக் கண்டால் விரட்டுகிறவன் வீரனாகிவிடுவானே!

                         -------------------------------”விடுதலை” தலையங்கம் 25-10-2014