Search This Blog

31.5.09

உலக நாடுகள் -தூரப்பார்வை-ஆஸ்திரியா- அஜர்பைஜான் - பஹாமாஸ்


ஆஸ்திரியா

அய்ந்தாம் நூற்றாண்டு வாக்கில் ஹூன் வமிசத்தினரும் ஜெர்மானியர்களும் டான்யூப் நதிக் கரையில் அமைந்திருந்த நாடுகளைத் தாக்கி அழித்தனர். ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இவை விளங்கின. ஜெர்மனிய இனத்தைச் சேர்ந்த கோத், ருகில், ஹெருலி, லங்கோபார்டி போன்ற பழங்குடியினர் இந்தப் பகுதியில் குடியேறினர். ரோமானிய சக்ரவர்த்தியாக வந்த கார்ல்மாகன் என்பவர் 788 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார்.

13 ஆம் நூற்றாண்டி லிருந்து ஹப்ஸ்பர்க் வமிசத்தினர் ஆஸ்திரியாவை ஆண்டு வந்தனர். இந்த ஆஸ்திரிய அரச வமிசம் முதல் உலகப் போர் நடந்த காலம் வரை ஆட்சியில் இருந்தது.

நெப்போலியன் காலத்திய போர்களுக்குப் பிறகு, வியன்னா காங்கிரஸ் 1814-15இல் நடந்து அய்ரோப் பியக் கண்டத்தில் அரச எல்லைகளையே மாற்றி அமைத்தது. ஆஸ்திரிய நாடு, பெரும் பயனடைந்த நாடுகளில் ஒன்றானது. அய்ரோப்பாவில் வலிமை மிக்க சக்தியாக இந்நாடு வளர்ந்தது. 1867 முதல் 1918 வரை ஹப்ஸ்பர்க் அரசவமிசம் ஆஸ்திரிய ஹங்கேரிய சாம்ராஜ்யமாக ஆயிற்று.

ஆஸ்திரிய மன்னர் பிரான்சிஸ் பெர்டினான்டு 1914இல் கொலை செய்யப்பட்ட சம்பவம் முதல் உலகப் போருக்குக் காரணமானது. ஜெர்மனி, பல்கேரியா, ஒட்டாமான் அரசு ஆகியவற்றுடன் ஆஸ்திரியா அணி சேர்ந்து மத்திய சக்தியாக விளங்கிப் போரிட்டது. உலகப் போரின் முடிவில் ஆஸ்திரிய ஹங்கேரிய பேரரசு வீழ்ந்தது.

ஜெர்மன் நாஜிகளில் சிலரை 1934இல் சிறையிலடைத்த செயலால், ராணு வப்புரட்சி ஏற்படுத்தப்பட்டு அதிபர் டோலிபஸ் கொலை செய்யப்பட் டார். 1936இல் ஜெர்மனி நாட்டின் ஒரு பகுதியா கவே ஆஸ்திரியா தன்னை வெளிப்படுத்திக் கொண் டது. இட்லர் இந்நாட்டைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்ட வேளையில், 1938இல், அன்ஸ்சலஸ் அல்லது ஆஸ் திரிய அரசியல் அமைப்பு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1945 இல் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருந்த ஜெர்மனியப் படைகளை சோவியத் தோற்கடித்த பிறகு ஆஸ்திரியா நேசநாடுகளின் ஆதிபத்யத்தில் வந்தது. 1955 ஆம் ஆண்டில் பிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் ஆகிய நேச நாடுகளிடம் ஆஸ்திரியா உறுதி தந்தது; நாடு எப்போதும் அணி சேரா நாடாகவே சுதந்திரமாக இயங்கும் எனக் கூறியது. அதன்படி அதற்கு விடுதலை அளிக்கப் பட்டது. அதே ஆண்டில் ஆஸ்திரியா அய்.நா. சபையில் அங்கத்தினராகிவிட்டது.

1986இல் அய்.நா. சபையின் செக்ரடரி ஜெனரலாக இருந்த கர்ட் வால்ட் ஹீம் ஆஸ்திரியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1995 இல் அய்ரோப்பிய ஒன்றியத்தில் ஆஸ்திரியாவும் இணைந்துள்ளது.

83 ஆயிரத்து 870 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் 82 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். இவர்களில் 72 விழுக்காடு ரோமக் கத்தோலிக்கர்கள். புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள் 5 விழுக்காடும், இசுலாமியர்கள் 4 விழுக்காடும் பெரும்பான்மையாக உள்ளனர்.

அஜர்பைஜான்

அஜர்பைஜான் நாட்டுப் பகுதியில் நாகரிமற்ற துருக்கிப் பழங்குடியினர், குர்து இனத்தவர், ஈரான் மொழி பேசுவோர், அல்பேனியா நாட்டின் காகாசிய இன மக்கள் முதலியோர் வாழ்ந்தனர். இப் பகுதி காகாசியாவுக்கு இடைப்பட்ட பகுதி எனப்பட்டது. ஏழாம் நூற்றாண் டில் அரபியர் படையெடுப்புக்குப் பிறகு ஷா என்ஷா எனப்பட்ட உள்ளூர் மன்னர்கள் இசுலா மிய ஆட்சியை அமைத்தனர். 16 ஆம் நூற்றாண்டில் காகாசிய இசுலாமியர்கள் ஷியா முசுலிம்களாயினர்.

1828இல் ரஷியாவுக் கும் பாரசீகத்துக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ரஷ்ய அஜர் பைஜான் என்றும் தெற்கு அஜர்பைஜான் என்றும் இரண்டாகப் பிரிக்கப் பட்டது. (ரஷ்ய அஜர்பை ஜான் சோவியத் அஜர்பை ஜானாகிப் பிறகு தற்போது தனி அஜர்பை ஜான் நாடாகியுள்ளது.) தென் பகுதிய அஜர்பைஜான் பிரிவினையின் பிறகு தற்போது ஈரான் நாட் டின் பகுதியாக உள்ளது.

1918இல் சோவியத் புரட்சிக்குப் பின் (ரஷ்ய) அஜர்பைஜான் தன் விடுதலையைப் பிரகடனப் படுத்தியது. என்றாலும் 1920இல் செஞ்சேனை இந்நாட்டைத் தாக்கி சோவியத் ஒன்றியத்து டன் சேர்த்துவிட்டது.

1988 இல் அஜர்பைஜான் தன் அண்டை நாடான ஆர்மீனியாவுடன் எல்லைத் தகராறில் இறங்கியது. தகராறுக்குரிய பகுதியான நகோர்னோ - கரபாக் பகுதியில் வாழும் மக்கள் ஆர்மீனியக் கிறித்துவர்கள் என்பதால் அவர்கள் ஆர்மீனியாவுடன் இணைய விரும்பினார்கள். இசுலாமிய நாடான அஜர்பைஜான் இதனை எதிர்த்தது. இறுதியில் 1994 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டதே ஒழிய தகராறுக்கு முடிவு ஏதும் ஏற்படவில்லை.

1991 இல் சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அஜர்பைஜான் சுதந்திர நாடாகியது. என்றாலும் எல்லைத் தகராறு தீரவில்லை. மதங்கள் ஒழிந்தால்தான் தீரும் போலிருக்கிறது!

86 ஆயிரத்து 600 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 80 லட்சம். 93 விழுக்காட்டுக்கு மேல் இசுலாமியர்கள். பழமைவாதக் கிறித்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 5 விழுக்காடு உள்ளனர்.

பஹாமாஸ்

இந்தியாவைக் கண்டு பிடிக்கிறேன் என்று கிளம்பிய கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 அக்டோபர் மாதத்தில் இறங்கிய நிலப்பகுதிதான் கான்சால் வடார் என்று அழைக்கப்பட்ட பஹாமாத் தீவுகள். 17 ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளில் பிரிட்டன் தன் குடியேற்றத்தைத் தொடங்கி தன் நாடாக ஆக்கிக்கொண்டது.

1717 முதல் 1964 வரை பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தது. 1964 இல் சுய ஆட்சி உரிமை வழங்கப்பட்டது. 1973 இல் சுதந்திர நாடாக ஆக்கப் பட்டது.

கியூபாவுக்கு அருகில் கரிபியன் தீவுக் கூட்டத்தில் அடங்கியது பஹாமாஸ் தீவுகள். 13 ஆயி ரத்து 940 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்த நாட்டின் மக்கள் தொகை 3 லட்சத்திற்கும் சற்றுக் கூடுதல். கிறித்துவ மதத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இங்கு ஆள்கள் உண்டு. வேறு மதத்தினர் என்று யாரும் இல்லை.

இங்கிலாந்தின் அரசி தான் நாட்டின் தலைவர். கவர்னர் ஜெனரலும் உண்டு. பிரதமரும் உண்டு. குடிக்கோனாட்சி முறை.

பஹ்ரைன்

பஹ்ரைன் தீவுகளை ஆதியில் பாரசீகர்கள் ஆண்டனர். இடையில் அராபியர்களும் போர்த்து கீசியர்களும் பலகாலம் ஆண்டு கொண்டிருந்த போது 1602 ஆம் ஆண்டில் பாரசீகர்கள் மீண் டும் சொந்தம் கொண்டாடினர். கலிஃபா அகமது என்பார் 1783 இல் பஹ்ரைனைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினார். கலிஃபா என்பவர் இசுலாமிய மத குரு. அவரேதான் அரசரும் கூட.

1820 இல் பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருக்கத் தொடங்கி 1971 இல் விடுதலை அடைந்தது. பின்னர் 1975 இல் ஷேக் இசாபின் சல்மான் எனும் கலிஃபா ஆட்சியைக் கைப்பற்றி சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு, தாமே ஆளத் தொடங்கிவிட்டார்.

அமெரிக்க நாட்டின் முக்கிய நட்பு நாடு. 1991 இல் வளைகுடாப் போர் நடந்தபோது அமெரிக் காவுக்கு விமான தளமாக இந்த நாடுதான் பயன் பட்டது. அமெரிக்காவின் அய்ந்தாம் கடற் படை நங்கூரமிட்டிருப்பதும் இங்குதான்.

சவூதி அரேபியாவுக்குக் கிழக்கே உள்ள இந் நாட்டில் எண்ணெய் வளமும் எரிவாயும் மிகமிக அதிகம். முத்துக்களும் ஏராளமாக விளைகிறது. மிகப் பணக்கார நாடு.

வெறும் 665 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டின் மக்கள் தொகை 7 லட்சம். ஷியா, சன்னி பிரிவுகளைச் சேர்ந்த இசுலாமியர்கள் தான் 81 விழுக்காடு உள் ளனர்.கிறித்துவர்கள் 9 விழுக்காடு உள்ளனர். அரபி, இங்கிலீஷ், உருது, பார்சி ஆகிய மொழி பேசுகின்றனர்.

பரம்பரை மன்னராட்சி முறை இன்னும் இருக்கிறது; மதகுருக்களின் கட்டுப்பாட்டில் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். மதத்தின் பிடிப்பு அவ்வளவு இறுக்கமானது.

--------------------நன்றி:-"விடுதலை"30-5-2009

சமுதாய இழிவு நீங்க... பெரியார் அறிவுரைசாதி முறைகள் என்பவையெல்லாம் மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமே தான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன. பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் - மத சாத்திரங்களுக்கும் மதத்திற்கும், வேதாந்தமும் தத்துவார்த்தமும் சொல்லி இவற்றை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளையாக ஆவதற்கு முயற்சிப்பார்கள்.

இந்த அறிவீனமும், மோசமும், தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதை அடையலாமே தவிர, சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. ஆகையால், உங்களுக்கு முதலாவதாக நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய நிலையை சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டுமென்று உண்மையாய் ஆசைப்படுவீர்களேயானால் மதம் என்பதையும் அது சம்பந்தப்பட்ட கடவுள், மத, புராண, சாத்திர, இதிகாசம் என்பவைகளையும் உதறித்தள்ளி அவற்றிலிருந்து வெளிவாருங்கள்.

நீங்கள் அதைச் செய்யவில்லையானால், இனியும் ஓராயிரம் ஆண்டிற்குக் கூட நீங்கள் எப்படிப்பட்ட மாநாடுகளும், சங்கங்களும், பிரசாரங்களும், கிளர்ச்சிகளும் நடத்தினாலும், எவ்வளவுதான் அரசியல் சுதந்திரமும், பொருளாதார முன்னேற்றமும், பட்டம் பதவிகளும் பெற்றாலும், உங்கள் சமுதாயத்திலுள்ள இழிவு நீங்கப் போவதில்லை! இது உறுதி! உறுதி!

---------------தந்தைபெரியார் - "இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை" என்ற நூலிலிருந்து

1935 ஆம் ஆண்டு விடுதலை பற்றி பெரியார் என்ன எழுதினார்?

விடுதலை இதழ் துவக்கப்பட்டபொழுது தந்தை பெரியார் அவர்கள் என்ன எழுதினார் என்பதை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கினார்.
தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் 29.5.2009 அன்று தஞ்சையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

கலந்துரையாடலுக்கு ஒப்புக்கொள்ள காரணம்...

இது போன்ற கலந்துரையாடலுக்கு நான் ஒப்புக்கொள்ளுவதற்குக் காரணம் ஒன்று, தேர்தல் நேரத்திலே பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நீங்கள் கூட்டத்திற்கு வந்திருந்தாலும் கூட, உங்களை எல்லாம் கூட்டத்திலே பார்த்துவிட்டு, அவசர அவசரமாகப் புறப்பட்டு அடுத்த கூட்டத்திற்கு உரிய நேரத்தில் சென்று சேர வேண்டும் என்பதற்காக ஒரு பரபரப்போடு செய்யப் பட்ட பிரச்சாரம் அது. எனவே நான் மேடையிலிருந்து பார்க்கிறேன். எல்லா தோழர்களையும், யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். எங்கேயிருக்கிறார்கள்? எங்கே அமர்ந்திருக்கின்றார்கள் என்றெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடிய வாய்ப்பு இருந்தது. இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் அளவளாவி சந்திக்கக்கூடிய ஒரு நிதானமான சூழல் அப்பொழுது இல்லை. ஆகவே மீண்டும் அந்த வாய்ப்பை இன்றைக்கு உருவாக் கிக்கொள்ளலாம். என்பது முதல் நோக்கம்.

விடுதலை பவள விழா


இரண்டாவது விடுதலை பவளவிழா என்ற அந்த வாய்ப்பைக் கருத்திலே கொண்டு நம்மு டைய இயக்கப் பணிக்கு அடித்தளமாக இருப்பது தமிழ்நாட்டிலே இந்த இரண்டு மாவட்டங்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். (பலத்த கைதட்டல்)

எனவே உங்களோடு கலந்துரையாடுவதிலே உங்கள் கருத்துகளைக் கேட்பதிலே ஒரு புதுத் தெம்பும், உற்சாகமும் எனக்கும் ஏற்படும். என்னுடைய பேட்ரியும் சார்ஜ் ஆகும்.
ஆகவே அந்த வகையிலே இது ஒரு பெரிய வாய்ப்பு. பல கருத்துகளை நீங்கள் எடுத்துச் சொன்னீர்கள். நான் நிறைய எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பழைய செய்தி கள் இளைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும்.

75 ஆண்டுகள் வரலாறு

விடுதலையினுடைய நீண்ட நெடிய வரலாறு 75 ஆண்டுகள் வரலாறு என்பது சாதா ரணமல்ல. அதுவும் 75 ஆண்டு காலத்தை தென்றல் காற்றைப் போல அல்லது தடையில்லாத ஒரு நீரோட்டத்தைப் போல அது நடந்து கொண்டிருக்கின்றது. எத்தனையோ இடர்பாடுகள் அவைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்; வயதானவர்கள் அறிவீர்கள்.

இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டிய புதிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. எனவே அந்த வகையிலே அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். மூன்று, நான்கு முறை விடுதலையைப் பற்றி எழுதியிருக்கின்றார்கள்.

அதைப்பற்றிச் சொல்லுகின்றேன். இதைப்பற்றி பவளவிழா மலரில் எழுதியிருக்கின்றேன். அதைப்பற்றி ஒரு பகுதிதான் இங்கே துண்டறிக்கையாக உங்களுக்கு அச்சடித்து வழங்கக்கூடிய அளவிலே வேண்டுகோளாக வைக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக விடுதலையை நிறுவியவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கப் பொறுப் பாளர்கள் ஆவார்கள். ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்பட்ட அதனுடைய சரியான பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

திராவிடன் இதழ் இல்லாமல் போய் விட்ட சூழ்நிலையில் கட்சியின் வார இரு முறை இதழாக அக் காலத்தைய அரையணா விடுதலை வெளி வந்தது.

1935இல் விடுதலை துவக்கம்

1.6.1935 ஆம் நாளிலிருந்து விடுதலை ஏடு தமிழ்மக்களுக்குக் கிடைத்தது. இது அப்பொழுது வாரம் இரு முறை வந்தது. அரையணா விலை. அறிஞர் டி.ஏ.வி நாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு எண்.14, மவுண்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலிருந்து அது வெளி வந்தது.

தந்தை பெரியார் அவர்கள் இதனைப் பாராட்டி தம் குடிஅரசு இதழில் மகிழ்ச்சி பொங்க எழுதினார். நம்முடைய பேராசிரியர் பெரியார் பேருரை யாளர் அ.இறையனார் அவர்கள் ஒரு பெரிய ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக நூலாக வெளிவந்திருக்கிறது.

இதழாளர் பெரியார் என்ற நூல் ரொம்ப அற்புதமான நூல். இந்த நூலில் தேன்கூட்டிலிருந்து தேனை எடுத்து வந்து திரட்டித் தருவது போல அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். நம் நூலகத்தில் இந்த நூல் இருக்கிறது.

விடுதலை ஏடுகளை கிடைத்த வரையிலே நாமும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அய்யா அவர்கள் மகிழ்ச்சி பொங்க விடுதலையை வரவேற்கிறார்கள். விடுதலை பற்றி பெரியார்
1935இல் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ் பத்திரிகை ஒன்று விடுதலை எனும் பெயரால் சென்னையிலிருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப் பற்றி ஒரு மதிப்புரை அவசியம் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

(அய்யா எழுதுகிறார் அதற்கு என்ன காரணம் என்பதை சொல்லுகின்றார்) ஏனெனில் இரண்டு, மூன்று வருடங்களா கவே (1933) நமது செயலவைத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர் கள் சொன்ன மாதிரி நீதிக்கட்சியைச் தோற்கடிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இவ்வளவு சாதனைகளைக் குவித்த கட்சியை தோற்கடிக்கிறார்கள். பத்திரிகைகள் மூலமாக பார்ப்பனர்கள் செய்கிறார்கள்)

(அய்யா எழுதுகிற வார்த்தையைப் பாருங்கள்)

பரிசுத்த, வீரரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரும் (என்ன அதற்குத் தகுதி பாருங்கள்) இரவும், பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை, தமிழ்ப்பத் திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல், அலட்சிமாய் இருந்ததும் அதன் பயன்களை சமீபத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும் மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை, தமிழ்பத்திரிகை என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விசயம் யாரும் அறியாததல்ல.

இன்றைக்கும் அதே கூப்பாடுதான்!

75 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைக்கும் நம்முடைய நாட்டு அரசியலிலே இதே கூப்பாடு தேவைப்படுகிறது. (பலத்த கைதட்டல்)

அப்படியானால் அந்த இனப்போராட்டம் - தேவாசுரப் போராட்டம். இன்றைக்குக் கூட முதல்வர் அவர்கள் குறிப்பிட்டிருக்கக் கூடிய ஆரிய -திராவிட போராட்டம் எவ்வளவு நீண்ட நெடுங்காலமாக ஒரு தொடர் போராட்டமாக இருக்கிறது என்பதை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

நேற்றைய தலை முறை கூக்குரலிட்டது. இளைய தலைமுறையினருக்கும் இதே முழக்கம் தேவைப்படுகிறது.

இந்த மருந்தையே திருப்பித் திருப்பிக் கொடுக்கிறீர்களே என்றால் நோய் தொடர்ந்து கொண்டி ருக்கிறதே அதனால் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே அதற்கு மருந்து தேவை என்பதற்கு அடையாளமாகச் சொல்லுகின்றார்கள்

அப்படிப்பட்ட நிலையில் விடுதலை எனும் பெயரால் ஒரு பத்திரிகை வெளியாகியிருப்பதைப் பார்த்து எந்த பார்ப்பனர் அல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய இதற்கு மதிப்புரை வருகின்றதா? எப்படி வருகின்றது? என்பதை யாரும் கவனிக்கமாட் டார்கள்.

(எப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த எழுத்துகள். எவ்வளவு ஆணித்தரமான கருத்துகள், எவ்வளவு அடித்தளத்திலே இருந்த இன உணர்வு கொப்பளிப்புகள் இவைகளை எல்லாம் நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்) ஆதலால் நாம் மதிப்புரை எழுதும் வீண் வேளையில் பிரவேசிக்காமல் வந்து விட்டது தமிழ் பத்திரிகை (அய்யா எப்படி சொல்லுகிறார் பாருங்கள்) என்று விளம்பரம் செய்யவே ஆசைப் படுகிறோம் என்று அய்யா அவர்கள் சொல்லியிருக்கின்றார்.

நாம் இதில் தெரிந்து கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் வந்து விட்டது விடுதலைக்குப் பவள விழா ஆண்டு என்ற புதிய ஓட்டத்தை உருவாக்க வேண்டும். இன உணர்வு கொண்ட தமிழர்கள், கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழர்கள் வந்துவிட்டது, வந்து விட்டது, வந்துவிட்டது தமிழினத்தைக் காப்பாற்றிய ஒரு பத்திரிக்கைக்கு பவள விழா ஆண்டு வந்து விட்டது. தமிழினத்திற்கு மூச்சுக் காற்றாகத் திகழ்ந்த விடுதலைக்குப் பவள விழா வந்துவிட்டது.

என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று ஆனந்தக் கூத்தாடு கின்ற அளவிற்கு மகிழ்ச்சியாக செய்ய வேண்டியதை நமக்கு அய்யா அவர்கள் ஆரம்ப காலத்திலேயே சொல்லியிருக்கின்றார்கள். இது மிக முக்கியமான ஒரு நிலை.

பழைய விடுதலை அலுவலகம்

அதற்கு அடுத்த படியாக நண்பர்களே! அய்யா அவர்கள் 15.12.1965இல் 2, ரண்டால்ஸ் சாலை பெரியார் திடலிலே இயக்க உரிமையாகி விட்ட புதிய கட்டடத்திற்கு விடுதலை மாறி யது.

விடுதலைக்கு எத்தனையோ தடைகள் இருந்ததை சுருக்கமாகச் சொல்லுகின்றேன்.
அண்ணா அவர்கள் ஆசிரியராக, குத்தூசி குருசாமி அவர்கள் ஆசிரியராக இருந்தார்கள். சிந்தாதிரிப்பேட்டை எண்.2 பாலகிருஷ்ணா பிள்ளை தெரு என்ற இடத்தில்தான் விடுதலை அலுவலகம் இருந்தது. அவர்களுக்குப் பிறகு அய்யா அவர்கள் என்னையும் கொண்டு போய் உட்கார வைத்தார்.

அந்த கட்டடம் குடோன் மாதிரி இருக்கும். ஒரு சிறிய கழிப்பறை ஒரு பக்கம் இருக்கும். மெசின் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே சிலதுகள் எல்லாம் வந்து கொட்டும். மேசைகள் எல் லாம் எப்படியிருக்கும் என்று கேட்டால் பலகைகளை வாங்கி ஆணி அடித்து உருவாக்கு வார்கள் பாருங்கள் அந்த மாதிரி அய்யா அவர்களுடைய எண்ணப்படி மேசை, நாற்காலி உருவாக்கப்பட்டது.

நாம் வாங்குகிற பேப்பருக்கு பலகைகள் அடித்து பெட்டி மாதிரி கொடுப்பார்கள் அந்த பலகை பெட்டியை மேஜையாகவும், நாற்காலியாகவும், செய்து போட்டிருப்பார்கள். எங்கள் சேருக்கு - நாற்காலிக்கு கையெல்லாம் இருக்காது. அய்யாவே அதில்தான் உட்கார்ந்திருப்பார்கள் என்றால் நமக்கெல்லாம் சாதாரணம். அந்த கட்டடம் நாட்டுக் கோட்டை நகரத்தாருக்கு உரிய கட்டடம். அந்த கட்டடத்திற்கு மாத வாடகை முப்பது ரூபாய். அதற்கு முன்பு இன்னும் குறைவுதான். நான் விடுதலை ஆசிரியராக சென்ற சமயம் வாடகை முப்பது ரூபாய். சென்னையில் 1962இல் 30 ரூபாய்க்கு அவ்வளவு பெரிய இடம் வாடகைக்குக் கிடைத்தது.

--------------------தொடரும் "விடுதலை" 31-5-2009

விடுதலைப்புலிகளை ஒழிக்க இலங்கைக்கு உதவிய சீனாவின் தந்திரம்

இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்ததன் பின்னணியாகக் கூறப் படும் பல்வேறு காரணங்களில், சீன வல்லரசு இலங்கைக்கு அளித்த மிகப்பெரிய உதவிதான், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முடிவைக் கொண்டுவந்தது என்று அனைத்துலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இலங்கைக்கு அருகில் உள்ள இந்திய நாடு செயல்பட்ட விதத்தையும், சீனா உறுதியாக இலங்கைக்கு உதவி செய்த விதத்தையும் காணும்போது எதற்காக இலங்கை மீது சீனா இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அனைத்தும் அய்.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர பலமுறை முயற்சித்த போதும், அவை தோல்வி அடைய முக்கிய காரணம் சீனா தெரிவித்த எதிர்ப்புதான்.
சீனாவின் நிதி, ராணுவ மற்றும் தூதரக ஆதரவு ஆகியவற்றை முழுமையாகப் பெற்றி ருந்ததாலேயே ராஜபக்சே அரசால் மேற்கத்திய நாடுகளில் நிர்ப்பந்தங்களை நிராகரிக்க முடிந்தது. இதனால், இலங்கையில் பெரிய அளவுக்குப் போர் நடந்த போது, அய்.நா.வால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு சீனா பல ஆயிரம் கோடி நிதியை இலங்கைக்கு அளித்தது. மேலும், சீனாவின் ஆறு எப்7 ரக போர் விமானங்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டன. மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களும், ஆயுதங்களும் இலங்கை ராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் இந்த தாராள உதவியினால் தான், 25 ஆண்டுகளாக தங்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவத்தால் ஒழிக்க முடிந்தது.
தான் செய்யும் இத்தகைய உதவிகளுக்கெல்லாம் சீனா இலங்கையிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறது? மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வரும் சரக்குக் கப்பல்கள் பயணிக்கும் முக்கியமான இந்தியக் கடல் பகுதியில் சீனாவுக்கு இடம் தந்து இலங்கை தனது நட்பை பலப்படுத்திக் கொண்டது.


இலங்கையில் ஹம் பன்தொடா என்ற இடத்தில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்கும் பணிகள் அனைத்தையும் சீனாவே செய்து வருகிறது. 2007 இல் தொடங்கிய இப்பணிகள் 2022 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வர்த்தக ரீதியான நடவடிக்கை என்று சீனா கூறினாலும், இதன் பின்னணி மிகவும் ஆபத் தானது. எதிர்காலத்தில் இத்துறைமுகத்தை சீனா ஒரு கடற்படைத் தளம் போல பயன்படுத்தலாம். மேலும், பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் குவாதர் என்ற இடத்தில் ஒரு துறைமுகத்தையும், மியான்மரில் கியாவுக் புவ் என்ற இடத்தில் ஒரு துறைமுகத்தையும் சீனா அமைத்து வருகிறது.

அமெரிக்காவையும் விஞ்சி வல்லரசாகும் எண்ணம் ஏதும் சீனாவுக்கு இல்லையென்றாலும், தெற்காசியப் பகுதியில் தன் பலத்தை நிரந்தரமாக வலுவானதாக ஆக்கிக் கொண்டு, எந்த சக்தியாலும் அசைக்க முடியாத அடிப்படைகளை உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த நீண்டகால உத்தியைக் காணும்போது, ஹம்பன் தொடா எதிர்காலத்தில் சீனாவின் கடற்படைத் தளமாக அமையக்கூடும்.

எரிசக்தியையே பெரிதும் சார்ந்துள்ள சீனாவுக்கு தேவையான 80 விழுக்காடு எரிசக்தி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மலாக்கா நீரிணைப்பு வழியாக கப்பல் மூலமாகக் கொண்டு வரப்படுகிறது. மியான்மாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீரிணைப்பு வழி மிகவும் குறுகியது என்பதால், சீனாவுக்கு இந்தியக் கடல்வழித்தடம் வழியாகவே பெட்ரோலிய, டீசல் கொண்டு செல்லப்படுகின்றன.

இக்கடல் வழித் தடத்தில் ஆங்காங்கு தங்களது துறைமுகங்கள் இருந் தால் எரிசக்திப் பொருள் கள் கொண்டுவர இடை யூறு இருக்காது என்று கருதும் சீனா இவ்வாறு இலங்கை, மியான்மா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் துறைமுகங்களை அமைப்பதாகக் கூறப்படுகிறது.
அணுஆயுத உதவிக்கு சீனாவை பாகிஸ்தான் நம்பியிருக்கிறது. விடுதலைப்புலிகளை அழிக்க இலங்கைக்கு சீனா முழு உதவியை அளித்தது. ராணுவ ஆட்சியில் திணறும் மியான்மாவில் கால் பதிப்பதில் சீனாவுக்கு பெரிய சிக்கல் ஏதுமிருக்காது. இதில் இந்தியா மட்டுமே பெரிய ஜனநாயக நாடு என்ற தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது.

அகாசிசின் என்ற பனிமலைப் பகுதியில் இந்தியாவின் 16 ஆயிரத்து 500 சதுரமைல் பரப்புள்ள பகுதியை சீனா கைப்பற்றியுள்ளது. மேலும் அருணாசலப் பிரதேசம் தனது நாட்டைச் சேர்ந்தது என்பது போல் சீனநாட்டு வரை படத்தில் சேர்த்துக் கொண்டுள்ளது.

பெரிய அளவுக்கு இந்தியாவுடன் மோதல் பாதையை சீனா பின்பற்றாவிடினும், இந்தியா வுக்கு நெருடல் தரும் செயல்களைச் செய்வதற்கு சீனா தயங்குவதேயில்லை. தெற்காசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீனாவின் செயல் பாடுகளை எச்சரிக்கையுடன் கவனிக்கவேண்டிய காலமிது.

-------------------------நன்றி:-"விடுதலை" 31-5-2006

விடுதலை சிறுத்தைகள் பேரணியைத் துவக்கி வைத்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை உரை
உணர்ச்சிப் பிழம்பான இந்த பேரணிக்கு ஆழமான பொருள் உண்டு!
இந்திய அரசே, இலங்கை அரசே! தப்புக் கணக்குப் போடாதே!

விடுதலை சிறுத்தைகள் பேரணியைத் துவக்கி வைத்து
தமிழர் தலைவர் எச்சரிக்கை உரை


உணர்ச்சிப் பிழம்பான இந்த பேரணிக்கு ஆழமான பொருள் உண்டு. இலங்கை அரசும், இந் திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

விடுதலை சிறுத்தை கள் சார்பில் 28.5.2009 அன்று மாலை 5.15 மணிக்கு இலங்கையில் வீரமரணமடைந்த விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்திட அமைதி பேரணி சென்னை மன்றோ சிலையிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்றிட ஏற்பாடாகியிருந்தது. இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணியைத் தொடங்கி வைத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முக்கிய உரை வருமாறு:

தலைநகரில் காணா எழுச்சி

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தலைநகரத்தில் இதுவரை காணாத எழுச்சி மிகுந்த வீரவணக்கப் பேரணியைத் துவக்கி அந்தப் பேரணியின் மூலமாக இதுவரை ஈழத்தமிழர் களுடைய குரலை அடக்கிவிட்டோம், ஒடுக்கிவிட்டோம் என்று கொக்கரித்துக் கொண் டிருக்கின்ற சக்திகளுக்கு இல்லை - தமிழ்நாடு உரியவர்களுடைய தலைமையிலே எழுந்து நிற் கிறது என்பதைக் காட்டுவதற்கு (ஆரவாரம் கைதட்டல்) இளைஞர்கள், தாய்மார்கள், இன உணர்வாளர்கள், வீர அணியினர் எத்தகைய உயிர்த் தியாகத்திற்கும் தயார் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுடைய தலைமையிலே நாம் இங்கு திரண்டிருக்கின்றோம். இப்பொழுது சிறுத்தைகள் திரளுகிறார்கள்

பக்கத்திலே தொப்புள்கொடி உறவுள்ள நம்முடைய ஈழத்திலே இலங்கையிலே தமிழ் ஈழத்திற்காகப் போராடியவர்களை எல்லாம் நாங்கள் அடக்கி விட்டோம். இனிமேல் புலிகள் இல்லை. புலிகளுக்கு வேலை இல்லை. புலிகளை அழித்துவிட்டோம். ஒழித்துவிட்டோம் என்றெல்லாம் சொல்கின்ற நேரத்தில் புலிகளை நீங்கள் அழித்தது உண்மை அல்ல என் பதற்காக சிறுத்தைகள் திரண்டிருக்கக் கூடிய (பலத்த ஆரவாரம் கைதட்டல்) ஓர் உணச்சிகர மான நிலையைப் பார்க்கின்றோம்.

எனவே திரண்டிருக்கின்ற இவர்கள் வெறும் உணர்ச்சிப் பிழம்புகள் அல்ல. உணர்வுகளினுடைய வெளிப்பாடு. அதுவும் அறுபடாத உறவுகளினுடைய வெளிப்பாடு. அது வும் அரசியல் இலாபத்தைக் கருதாமல் மனித நேயத்தோடு இங்கு நாம் கூடியிருக்கின்றோம்.

யாரை அடக்கிவிட்டோம் ஒடுக்கி விட்டோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்களோ; யாருடைய உரிமைக் குரல் வளையை நெரித்து விட்டோம் என்று கருதிக்கொண்டி ருக்கின்றார்களோ அது இல்லை என்று காட்டுவதற்கு திரண்டிருக்கின்ற அணிதான் இந்த அணி யாகும். (கைதட்டல்)

எனவே அதிகமாகப் பேச வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களிலே நம்முடைய அமை திக்கே - பேசுவதைவிட வலிமை அதிகம்.

பிரபாகரன் தனிமனிதரல்ல

ஆகவே நாம் அமைதியாக கட்டுப்பாடாக நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு ஈழம் மலர்வது உறுதி என்று தெளிவான அந்த உணர்வுகளை உருவாக்க வேண்டும். ( ஆரவாரம் - பலத்த கைதட்டல்)

பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதரல்ல; அவர் தமிழர்களின் திரண்ட உணர்வு. (பலத்த கைதட்டல்)

அவர் இருக்கிறாரா? இல்லையா? என்பது முக்கியமல்ல.

அந்த உணர்வுகளை தட்டி எழுப்புவதற்கு நம்முடைய திருமா போன்ற தளபதிகள் இருக் கிறார்கள். எனவே யாருக்கு அக்கறை இருக்கிறது என்பது இங்கு தெளிவாக ஆகியிருக்கிறது.

நமக்கோ உயிர் பிரச்சினை

சிலருக்கு அது தேர்தல் பிரச்சினை; நமக்கோ அது உயிர்ப் பிரச்சினை, மானப்பிரச்சினை. கொளுத்தும் வெய்யிலாக இருந்தாலும், அதே போல கொட்டும் மழையாக இருந்தாலும், சீறும் புயலாக இருந்தாலும் இந்த அணியைப் பொறுத்தவரையிலே, ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தைப் பொறுத்தவரையிலே இந்த இயக்கமானாலும் திராவிடர் கழகமானாலும் இறுதிவரை குரல் கொடுக்க நாம் இங்கே திரண்டிருக்கின்றோம்.

கட்டுப்பாடு காக்க வேண்டும் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இது போன்ற அமைதிப் பேரணியிலே கட்டுப்பாடு காக்க வேண்டும். அது தான் தலைமைக்கு நீங்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பு.

எதிரிகளுக்கு எது பலம் என்று சொன்னால் இது போன்ற பேரணி யிலே ஊடுருவி கலவரம் விதைத்து விடுவார்கள். இங்கே இருபாலரும் திரண்டிருக்கின்றோம். கட்டுப்பாடாக இந்த கொள்கையை வலியுறுத்துவதற்கு, சர்வபரித் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றவர்கள்.

மீண்டும் பிறப்பார்கள்

நம்முடைய உணர்வுகளை காட்டுவதற்கு இது ஒரு சிறு ஒத்திகை.

ஈழத்திலே இறந்தவர்கள் அவர்கள் மீண்டும் பிறப்பார்கள். எப்படிப் பிறப்பார்கள்? நம்முடைய இன உணர்வின் மூலம் பிறப்பார்கள். நம்முடைய கட்டுப்பாட்டின் மூலம் பிறப்பார்கள். நம்முடைய உரிமைக் குரல் மூலம் பிறப்பார்கள்.

அவர்கள் புதைக்கப் படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே விதைக்கப்பட்ட வர்கள் பெரும் ஆலமரமாக அவர்கள் கிளம்புவார்கள்.

தப்புக்கணக்கு போடாதீர்!

எனவே யாரும் வரலாற்றைப் பார்த்து தப்புக் கணக்குப் போட வேண்டாம். எல்லா அரசுகளுக் கும் சொல்லுகிறோம். இலங்கை அரசுக்கும் சொல்கிறோம். இந்திய அரசுக்கும் சொல்கி றோம். இந்தப் பேரணியை தவறாகக் கணிக்காதீர்கள். இந்தப் பேரணிக்கு ஆழமான பொருள் உண்டு. இந்த உணர்ச்சிக் கொப்பளிப்பு என்பது ஒரு சின்ன ஒத்திகை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொல்லக்கூடிய இந்த இனமானப் போரிலே, அறப்போரிலே நம் அனைவரையும் ஒப்படைப்போம்.

தமிழ்ஈழம் மலரும்

அங்கே மறைந்தவர்கள், மறைந்தவர்கள் அல்லர்; நம் நெஞ்சில் நிறைந்தவர்கள். எனவே அப்படிப்பட்ட அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த அமைதிப் பேரணியைத் துவக் குகின்றேன்.

விரைவில் வரும் தமிழ் ஈழம், வருக தமிழ் ஈழம், விரைவில் மலரும் தமிழ் ஈழம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் உரை யாற்றினார்.

தொல்.திருமாவளவன் பேச்சு

விடுதலைச் சிறுத்தைகள் ஊர்வலம் மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தலைமை தாங்கினார். ஊர்வலத்தை திராவிடர் கழகத் தலைவரும் தமிழர் தலைவருமான கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து பேசினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும் பங்கேற்றார்.

பின்னர் வீரவணக்கம் வீரவணக்கம்! வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம்!

சாகவில்லை சாகவில்லை, பிரபாகரன் சாகவில்லை என்று தொல். திருமாவளவன் ஒலி முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து அமைதி பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஒலி முழக்கமிட்டனர்.

பின்னர் ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை சென்றடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், வீரமரணம் அடைந்த 50 ஆயிரம் ஈழத்தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரிய மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தப்பட் டது.

பின்னர் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தலைவர் தொல்.திருமாவளவன் :

ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்று விட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிர பாகரனை சுட்டுக் கொன்று விட்டதாக சிங்கள இனவெறியன், கோழைப் பயல் ராஜபக்சே அண்டப் புளுகு புளுகினான்.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கிளிநொச்சி பகுதியை ராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப் போனேன். அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த சோனியா காந்தியிடம் எப்படியாவது இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினேன்.

ஆனால் இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டு கோளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இலங்கைக்கு சீனா உதவு கிறது.

தா.பாண்டியன் போன்றவர்கள் சீனா உதவுவது பற்றி பேசமாட்டார். நடேசன், பூலித்தேவன், சார்லஸ் அந்தோணி ஆகியோர் இறந்த பிறகு தான் எம்.கே.நாராயணன் இலங்கை சென்றார். அதற்கு முன் செல்ல எத்தனை முறை சொன்னோம் கேட்கவில்லை.

நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக் கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்டப் போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்டப் போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும் என்று தொல். திருமாவளவன் பேசினார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

அய்.நா. மனித உரிமை பாதுகாப்புப் பேரவையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

போர் மரபுகளை மீறி விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்களான நடேசன், பூலித் தேவன் கொல்லப்பட்டதற்கு சர்வதேச வல்லுநர்களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

3 லட்சம் ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழீழத்தை மீட்டுத்தர விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளோடு பேச்சு வார்த்தை நடத்த சர்வ தேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் இந்த அமைதி பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் நிருவாகிகள் வன்னியரசு, சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

----------------"விடுதலை" 30-5-2009

உலக நாடுகள் -தூரப்பார்வை-அங்கோலா- அர்ஜென்டினா


அங்கோலா

கொய்சாம் எனும் மொழி பேசும் ஆப்ரிக்க இன மக்கள் ஆதியில் வசித்து வந்த அங்கோலா நாட்டில், பான்டு மொழி பேசும் மக்கள் 1000 ஆண்டு களுக்கு முன் பெருமள வில் இடம் பெயர்ந்து வந்து குடியேறினார்கள். நாளடைவில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியாகிவிட்ட கதை நடந்துவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பான்டு மொழி பேசும் மக்கள் வளர்ந்துவிட்ட னர்.

1480 ஆண்டு வாக்கில் போர்த்துகீசிய வணிகர்கள் இந்நாட்டுக்கு வந்தனர். 1575 இல் லுவான்டா எனும் தலைநகரை உரு வாக்கியதே அவர்கள் தான்! அதுவே பின்னர், இந்தியாவுடனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் வணிகம் செய்ய வாய்ப்பான மய்ய இட மாக வளர்ந்தது. கொடுமை என்னவென்றால், போர்த்துக்கீசிய குடியேற்ற நாடான பிரேசில் நாட்டுக்கு ஆப்ரிக்க அடிமைகளை அனுப்பும் முக்கிய நகர மாகவும் வளர்ந்துவிட்டது.

அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் விடுதலை எண்ணம் வேரூன் றத் தொடங்கியது. தேசிய உணர்வு மிக்க இயக்கங் கள் தோன்றின. விடுதலை யைப் பெற வேண்டும் எனும் எண்ணத்தில் கொரில்லாப் போர் முறைத் தாக்குதலில் இறங்கினர். பாப்புலர் லிபரேஷன் மூவ்மெண்ட் ஆப் அங்கோலா எனும் சமதர்மக் கொள்கை கொண்ட அமைப்பு (MPLA) 1956 இல் அமைக்கப்பட்டது. (FNLA)1957இல் போராளி இயக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டது. (UNITA)எனும் மற்றொரு அமைப்பும் முழுச் சுதந்திரம் அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் 1966இல் தொடங்கப்பட்டது. ஜொனாஸ் சாவிம்பி என்பவர் இதனைத் தொடங்கினார்.

இவர்களின் போராட்டத்தின் விளைவாக 1975இல் போர்த்துகீசிய ஆதிக்கவாதிகள் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதிகாரத்தை மாற்றிக் கொடுக்காமலே வெளியேறி விட்டார்கள். 500 ஆண்டுக் காலம் ஆண்டு அனுபவித்த நாட்டைக் கைமாற்றிக் கொடுக்க மனம் வரவில்லை போலும்! மவுனமாகப் போய்விட் டனர்.

உள்ளூரில் இருந்த பல கட்சிகளில் பதவிப் போட்டி தொடங்கியது. ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு வெளி நாட்டின் ஆதரவு தானாகவே கிடைத்தது. MPLA அமைப்புக்கு கியூபா ஆதரவு அளித்தது. FNLAவும் UNITAவும் இணைந்து போட்டியில் இறங்கிய போது தென் ஆப்ரிகாவும் அமெரிக்காவும் ஆதரவு தந்தன.

லுவான்டா (தலைநகர்)வில் கட்டுப்பாடு செலுத்திய MPLL அமைப்பு விடுதலை பெற்ற அங்கோலாவின் அரசாங்கமாகத் தம்மை அறிவித்துக் கொண்டது. மற்ற இரு அமைப்புகளும் வேறொரு நகரமான ஹூவாம்போவில் தங்கள் அரசு அமைந்திருப்பதாகப் பிரகடனப்படுத் தினார்கள். இம்மாதிரி நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் போர்த்துகீசியர்கள் பேசாமல் வெளியேறி விட்டார்களோ?

பதவிப் போட்டிகளில் ஈடுபட்டிருந்த அமைப்புகளுக்கி டையே 1994 இல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. லூசாகா அமைதிப் பேச்சு ஒப்பந்தம் 1996 இல் ஏற்பட்டது. MPLA அமைப்பின் எடுவர்டோ டாஸ் சன்டேர்ஸ் என்பவரும் UNITA அமைப்பின் நிறுவனர் ஜொனாஸ் சவிம் பியும் இணைந்து அரசு அமைப்பதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை.

2002 பிப்ரவரி மாதத் தில் ஜொனாஸ் சவிம்பி அரசு தரப்புப் படையின ரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு அரசும் UNITA அமைப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். இது நடந்தது 2002 ஏப்ரல் மாதத்தில்! ஜொனாஸ் சவிம்பி தடையாக இருந்தாரோ? தலைமையை இழந்துவிட்டதால் அமைதியை நாடினார்களோ?

ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் கடலோர நாடாக உள்ள அங்கோலா 12 லட்சத்து 46 ஆயிரத்து 700 ச.கி.மீ. பரப்புள்ளது. 1 கோடியே 22 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட இந் நாட்டில், போர்த்துகீசிய மொழியும் பான்டு உள்பட ஆப்ரிக்க மொழிகளும் பேசப்படுகின்றன. ரோமன் கத்தோலிக்க மதத்தை 38 விழுக்காட்டினர் பின்பற்றுகின்றனர். புரொடஸ்டன்ட் பிரிவை 15 விழுக்காட்டினரும் மீதமுள்ள 45 விழுக்காட்டினர் ஆப்ரிக்கப் பழைய நம்பிக்கைகளையும் பெற்றுள்ளனர். வறுமைக் கோட்டுக்குக் கீழே 70 விழுக்காடு மக்கள் உள்ளனர்.

அர்ஜென்டினா

தென் அமெரிகாவின் தென் பகுதியில் அட்லாண் டிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள அர்ஜென்டினா நாட்டின் டீகோ மாரடோனா, சிறந்த கால் பந்தாட்ட வீரர். இந்நாட்டின் வட மேற்குப் பகுதியில இன்கா வமிசத்தினர் ஆட்சி புரிந்தனர்.

1535 ல் ஸ்பெயின் நாடு ஒரு குழுவை இந்நாட்டுக்கு அனுப்பிக் குடியேறச் செய்தது. பெட்ரோ டி மென்டோசா என்பவரின் தலைமையிலான இக்குழுவினர் தொடக்கத்தில் வெற்றிகளைப் பெற்று சான்டா மரியா டெல் புவோன் அயர் நகரத்தை உருவாக்கினர். இந்நகரம்தான் தற்போது போனஸ்அயர்ஸ் எனும் இந்நாட்டின் தலைநகர்.

1776 இல் ஸ்பெயின் நாடு தன் சாம்ராஜ்ய எல்லையை விரிவுபடுத்தியது. தற்போதைய அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, பொலிவியாவின் தென்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய நாட்டை உருவாக்கி, போனஸ் அயர்சைத் தலைநகராக்கிக் ஆண்டது.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேசில், உருகுவே, ஆகியவற்றுடன் அர்ஜென்டினாவும் சேர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் ரத்தப் போராட்டம் எனத்தக்க; சண்டையில் இறங்கியது. பராகுவே நாட்டிற்கு எதிராக இந்த மூன்றுநாடுகளும் நடத்திய போரில் பராகுவே தோற்கடிக்கப்பட் டது. 1865 முதல் 1870 வரை 5 ஆண்டுகள் இப்போர் நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போர் நேரத்தில் தான் ஒரு நடு நிலை நாடு என அர்ஜென்டினா அறி வித்துக் கொண்டது. ஆனாலும் 1943 இல் ராணுவ ஆட்சி இங்கு அமைந்துவிட்டது. கர்னல் ஜூவான் பெரோன் என்பவர் இந்த ஆட்சியின் முக்கியப் புள்ளி. 1944 இல் ஜப்பான், ஜெர்மனி நாடுகளுடன் அரசு ரீதியான உறவை முறித்துக் கொண்ட அர்ஜென்டினா 1945 இல் அந்நாடுகளுடன் போரிட்டது.

1946இல் பெரோன் நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் இரண்டாம் மனைவி ஈவா பெரோன். எவிட்டா என்று அழைக்கப்பட்ட இவர் சமூகநலத் துறையின் பொறுப்பாளராக அதிகார பூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவாகத் தொழிலாளர்களின் ஊதியங்களை உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்து அதன் வாயிலாக அதிப ரான தன் கணவருக்கு உதவினார்.

ஆனாலும் 1955 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பெரோன் மீண்டும் 1973 இல் அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் 1974இல் மரணம் அடைந்துவிட்டார். பெரோனின் மூன் றாம் மனைவியும் துணை அதிபராக இருந்தவருமான இசபெல் அடுத்த அதிபராகப் பதவி ஏற்றார்.

பணவீக்கம் எக்கச்சக்கமாக ஏறிக் கொண்டே போய், 1976இல் ராணுவம் புரட்சி செய்து, ஜார்ஜ் விடெலா எனும் ராணுவத் தளபதியின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கொடுமைகளும் கொலைகளும் திட்டமிட்டுச் செய்யப் பட்டன. அசிங்கமான போர் என வருணிக்கப் படும் சண்டைகளில் ஆட்சியை எதிர்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டனர்.

1981 இல் லியோ போல்டோ கல்டியரி எனும் தளபதி ஆட்சித் தலைமையை ஏற்றார். இவர் காலத்தில்தான் பக்கத்தில் இருந்த ஃபாக் லாண்டு தீவில் அர்ஜென்டினா தாக்குதல் நடத்தி கைப்பற்றிக் கொண்டது. வல்லரசுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தீவு இது. பிரிட்டன் எதிர்த் தாக்குதல் தொடுத்து மீண்டும் தீவைக் கைப்பற்றிக் கொண்டது. இதனால் தளபதி கல்டியரி பதவி இழக்கும் நிலை ஏற்பட்டு ஜெனரல் ரெனால்டோ பிக்னான் என்பார் அதிபரானார்.

1983 இல் நாட்டில் மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது. ரவுல் அல் போன்சின் என்பவர் அதி பரானார். பணவீக்கம் மீண்டும் தாறுமாறாக உயர்ந்தது. 900 விழுக் காடு எனச் சொல்லக் கூடிய அளவுக்கு உயர்ந்து விட்டது. அதன் காரண மாக கார்லோஸ் மெனம் என்பவர் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளை எடுத்தார். புதிய பண நோட்டுகளைப் புகுத்தினார். பழைய நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். ஆயினும் என்ன? பொருளாதார மந்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

2002 இல் உலக வங்கிக்குச் செலுத்தவேண்டிய 8 ஆயிரம் லட்சம் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடிய வில்லை. மேற்கொண்டு சர்வதேச நிதியத்திடம் (IMF) இருந்து கடன் பெறவும் முடியவில்லை. கடன் தொகைக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதும் என்கிற அளவில் அர்ஜென்டினாவும் சர்வதேச நிதியமும் ஒப்பந்தம் செய்துகொண்டன.

இதுவாவது அந்நாட்டைக் காப்பாற்றிக் கரை சேர்க்குமா?

27 லட்சத்து 66 ஆயிரத்து 890 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 4 கோடி ஆகும். 92 விழுக்காட்டி னர் ரோமன் கத்தோலிக்க மதத்தினர். யூதர்களையும் புராடெஸ்டன்ட் கிறித்தவர்களும் 2 விழுக்காடு வீதமே உள்ளனர். ஸ்பெயின் நாட்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு ஜூலை 9 இல் விடுதலை பெற்ற பழம் பெரும் குடியரசு நாட்டின் கதி என்று தேருமோ?

------------------நன்றி:-"விடுதலை" 28-5-2009

30.5.09

எதிர்காலத் தமிழீழம் எப்படி அமையும்? - சுப.வீ .


பிறந்த இடத்திற்கே வந்துவிட்டேன்!

- பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நெகிழ்ச்சி


சென்னை போன்ற பெருநகரங்களில் மாலை நேரக்கூட்டங்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு மக்கள் அரங்கத்திற்கு வருவது கிடையாது. கேட்கிற ஆர்வமும், பொது வாழ்க்கையில் இருக்கும் ஆர்வமும் குறைவு என்பதும், பரபரப்பான வாழ்க்கைக்கு இடையில் இதற்கெல்லாம் நேரத்தை ஒதுக்குவதை தவிர்க்கிறார்கள் என்பதும் ஒருபுறமிருந்தாலும் விதிவிலக்காக குறிப் பிட்ட ஒரு சிலர் பேசுகிறார்கள் எனில் அதற்கு பெருத்த கூட்டம் அரங்கம் நிரம்பி வழிவதையும் காண முடிகிறது.

அப்படி அவனைவரையும் ஈர்க்கும் வகையில், குறிப்பாக இளைஞர்களை பெரிதும் ஈர்க்கிற வகையில் பேசக் கூடிய, நாடறிந்த சொற்பொழிவாளராக அறியப்படுபவர் சுப.வீ என அன்போடு அழைக்கப்படுகிற மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான இவர், சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவர். பல்வேறு தளங்களில் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடி வருபவர். எழுத்தாளராக, பேச்சாளராக, தமிழ் தேசிய போராளியாக, தற்போது கருஞ்சட்டைத் தமிழர் எனும் இதழாசிரியராக என பல்வேறு அடையாளங்களை தமிழுலகில் நன்கு பதித்தவர். நம் விடுதலை வாசகர்களுக்காக, விருந்தினர் பக்கத்திற்காக சந்தித்து உரையாடியதிலிருந்து........


விடுதலை :

அய்யா, வணக்கம். தாங்கள் சிறப்பு மிகுந்த ஒரு சுயமரியாதைக் குடும்பத்திலிருந்து வந்தவர். எனவே தாங்கள் பகுத்தறிவுப் பாதையில் நடப்பதற்கு குடும்ப சூழல்தான் காரணமா? இல்லை வேறு ஏதும் காரணமாக அமைந்ததா?

சுப.வீ :

குடும்பச் சூழல் தான் காரணம். குறிப்பாக அப்பா 1930 லிருந்தே அய்யா பெரியார் அவர்களுடனும், சுயமரியாதை இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டவர். நான் பிறக்கும் போதே அப்பா திமுகவில் இருந்தார். 1949-இல் திமுக தொடங்கும் போதே இருந்தவர். அதனால் வீட்டுக்கு திராவிட இயக்க இதழ்கள் நிறைய வரும். குறிப்பாக அதில் விடுதலையும் இருக்கும். நான் 5 வயது சிறுவனாக இருக்கும் போது அப்பா தேர்தலில் 1957-இல் போட்டியிட்டார்கள். எனவே அரசியல் சூழல் என்பது வீட்டில் முழுமையாக இருந் தது. அதுவும் திராவிடர் இயக்கம் சார்ந்த அரசியல். எனவே நான் எனது சுயசிந்தனையினாலோ அல்லது படித்து அறிந்து கொண்டேன் என்று சொல்ல முடியாது. அப்பாவின் வழியில் நான் திராவிட இயக்கத்திற்கு வந்தேன். வந்தததற்குப் பிறகு படித்தேன். படித்ததற்குப் பிறகு அதில் அழுத்தமாக ஊன்றி நிற்க வேண்டும் என கருதினேன். ஆனால் தொடக்கம் அப்பாவிடத்திலிருந்து தான்.

விடுதலை :

தங்களுடைய மாணவப் பருவகாலத்தில் தங்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

சுப.வீ:

மிகவும் சராசரி மாணவனாகவே நான் இருந்தேன். பொது அறிவிலும் சராசரி மாணவனாக வாங்குகிற மதிப்பெண்ணிலும் சராசரி மாணவனாகத் தான் இருந்தேன். பட்ட வகுப்பில் கூட மூன்றாண்டு தாண்டிப் பிழைத்து வந்தேன் என்கிற நிலைதான். நன்றாக படிக்கிற மாணவனாக இருந்தது முதுகைலயில் மட்டும்தான். குறிப்பாக சின்ன வயதிலிருந்து கடுமையான எம்ஜிஆர் ரசிகன். எம்ஜிஆர் படங்களைப் பார்க்கத் தவறியதில்லை. ஒரே ஒரு வேறுபாடு எனக்கு சின்ன வயதில் அய்யா பெரியாரின் நூல்கள் அல்லது பெரியாரைப் பற்றிய செய்திகள் நிறையக் கிடைத்தன. அப்பா மட்டுமில்லாமல், எங்க அம்மாவும் பெரியார் பற்றி நிறைய சொல்வார்கள். அடிக்கடி சொல்வார்கள். இவ்வளவுக்கும் எங்க அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில் சுயமரியாதை இயக்க ஈடுபாடு, பெரியரைப் பற்றிய செய்திகள் நிறைய சொல்வார்கள்.

எனவே எனக்கு அப்போது கடவுள் இல்லை என வாதிடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் சமூகநீதி, பெண்விடுதலை பற்றியெல்லாம் பின்னால்தான் அறிந்து கொண்டேன். பெரியாரைப் போல கடுமையான ஒரு நாஸ்திகனாக இருக்க வேண்டும் என்ற ஆசை. எம்ஜிஆரைப் போல ஒரு சண்டை போடுகிற வீரனாக வர வேண்டுமென விருப்பம். திமுக கழகத்தின் மீது ஒரு பற்றுதல். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறுகிறது. எனக்கு அப்போது 7 அல்லது 8 வயது இருக்கும். வீட்டில் ஒரே கொண்டாட்டம் . சித்தாந்தத் தெளிவில் ஏற்பட்ட மகிழ்ச்சி என்று சொல்லிட முடியாது.

1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கிற போது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற ஒரு மாணவன். அன்றைக்கு இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த ஏராளமான கால்களில் என் கால்களும் இருந்தன.

எல்லா திமுக மாநாடுகளுக்கும் என்னை அப்பா கூட்டிக்கொண்டு போவார். கரைக்குடியில் நடந்த எல்லாக் கட்சிக் கூட்டத்தையும் நான் கேட்பேன். அய்யாவின் பேச்சை தொலைவில் நின்று கேட்டிருக்கிறேன்.

அண்ணா, கலைஞர், நாவலர், சம்பத் இவர்களின் பேச்சில் மிகவும் கவரப்பட்டிருக்கிறேன். 65-இல் மாணவத் தலைவர்கள் சிலர் பேச்சினைக் கேட்டேன். குறிப்பாக காளிமுத்து, பெ.சீனிவாசன், போன்றவர்கள் பேச்செல்லாம் கேட்கிறபோது நாமும் மேடை ஏறி பேசலாம் என்கிற நம்பிக்கை வந்தது. ஏனெனில் என்னை விட இரண்டு மூன்றாண்டுகள் மூத்தவர்கள் என்பதால் நாமும் பேசலாம் என்கிற ஆர்வம் வந்தது. இதுதான் என் தொடக்கநிலை அரசியல். சித்தாந்த அரசியல் ஆழமாக அப்போது இல்லை. ஆனால் கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்தேன். நான் பிறந்ததிலிருந்தே கடவுள் நம்பிக்கை முற்றிலுமாகக் கிடையாது. இன்றைக்கு வரை; மேலும் மேலும் அதுவலுப் பெற்றிருக்கிறதே தவிர மாறவில்லை.

விடுதலை :

தாங்கள் தொடக்க காலங்களில் தமிழ் தேசியத்தின் உயர்வுக்கும், உணர்வுக்கும் பணி யாற்றிவர். அதைப்பற்றி?

சுப.வீ.:

தமிழ்தேசியம் என்கிற அரசியல் சொல்லாடல் எல்லாம் 80களின் இறுதியில் தான் என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்குத் தெரிந்ததெல்லாம் பெரியாரும், திமுகவும் சொன்ன திராவிட நாடு திராவிடர்க்கே. தமிழ்நாடு தமிழருக்கே என்பது மட்டும் தான். குறிப்பாக 82 லிருந்து 84 வரைக்கும் கும்பகோணத்தில் திருப்பனந்தாள் கல்லூரியில் வேலை பார்த்த போது பொது நிகழ்ச்சிகளில் மெல்ல மெல்ல கலந்து கொண்டேன். கவிஞர் இன்குலாப் உடன் பழகிய போது மார்க்சியத்தில் ஓர் ஈடுபாடு வந்தது. 1987 ஆம் ஆண்டு குறிப்பாக பல மாற்றங்களை என்னுள் கொண்டு வந்தது. என் அம்மா இறந்த போனதும், அதற்குப் பிறகு திலீபனின் மரணத்தையொட்டி நான் புலிகளின் ஆதரவாளனாக மாறியதும் 87-இல் தான். 83-இல் இருந்தே ஈழத்தை ஆதரித்தாலும் பொத்தாம் பொதுவில் எல்லா இயக்கங்களையும் ஆதரித்தேன். திலீபனின் மரணம்தான் என்னை புலிகளின் ஆதரவாளனாக ஆக்கியது. 1987-இல் தான் அமைப்பில் இணைந்து அந்த அமைப்பிற்கு அமைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது அந்த அமைப்பின் பெயர். பெரிய வியப்பு என்னவெனில் அவ்வமைப்பில் பெருஞ்சித்திரனார், சாலையார், கவிஞர் மேத்தா, ஞாநி, இன்குலாப், அருள்மொழி குகநாதன் இப்படி இத்தனைப்பேர் இருந்த அமைப்புக்கு நான் அமைப்பாளரானது ஒரு விபத்து. எல்லோரும் பெரியவர்களாக இருந்ததால் யரைத் தேர்ந்தெடுக்கலாம் என குழப்பம் வந்து புதிதாக வந்த என்னை தேர்வு செய்தார்கள். அதுதான் என் அரசியலின் முதல் நுழைவு அப்போதும் நான் ஆசிரியராகத்தான் இருக்கிறேன்.

பின்னர் மணியரசன், தியாகு போன்றவர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளால் தமிழ்தேசியம்நோக்கி செல்ல ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல திராவிடத் தேசியத்தை விட தமிழ் தேசியம் தான் சரி என்கிற உணர்வை ஏற்படுத்தினார்கள். தமிழ்த் தேசியத்திற்கு தடையாக இருப்பதில் திராவிட தேசியமும் ஒரு காரணம் என்கிற கருத்தை என்னுள் விதைத்தார்கள். நானும் உண்மை என் நம்பினேன். பெரியாரைத் தவிர மற்ற திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரையும் விமர்சித்தேன். அதில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான தலைவர்களில் கலைஞரும், ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் கூட அடங்கு வார்கள். இனி என்னும் இதழை நடத்திய அனுபவத்தில் நந்தன் இதழுக்கும் ஆசிரியவரானேன். 1990 ஆம் ஆண்டு விடுதலைக்குயில்கள், 94 ஆம் ஆண்டு தமிழ்தமிழர் இயக்கம், தமிழ்ச் சான்றோர் பேரவை, 2002 முதல் 2006 வரை நெடுமாறன் அவர்களின் தலைமையில் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றினேன்.

விடுதலை :

மீண்டும் நீங்கள் திராவிடர் இயக்கத்திற்கு வந்தது குறித்து?

சுப.வீ :

நான் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அதாவது திராவிடர் இயக்கத்துக்கே கொண்டு வந்து சேர்த்தது என்றால் அது ஓர் எதிர்மறையான நிகழ்ச்சி. 1995 ஆம் ஆண்டு பெங்களூரிலிருந்து குணா எழுதிய திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிற புத்தகம்தான் என்னை விழிக்க வைத்தது. அவர் செய்த ஒரு நல்ல காரியம் பெரியாரைக் கடுமையாகச் சாடியது தான். அப்போது தான் நான் விழித்தேன். திராவிட இயக்கம் அதுவும் தமிழின் பெயராலேயே சிதைக்கப்படுகிறது என்று உணர்ந்தேன்.

ஆனாலும் முழுமையாகத் தெளிவு பெறுவதற்கு மேலும் பத்தாண்டுகள் ஆயிற்று. 1987 க்குப் பிறகு 2005 ஆண்டு மீண்டும் ஒரு திருப்பத்தை என் அரசியல் வாழ்வு கண்டது. பெரியாரின் இடது சாரித் தமிழ்த்தேசியம் என்னும் நூல் திராவிட இயக்கம் என்பதே சரியானது என்கிற என் கருத்தை வெளிப்படுத்தியது.

அதற்குப் பெரும் வரவேற்பும் பலத்த எதிர்ப்பும் கிடைத்தது. பிறகு 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அதையொட்டி எழுந்த விவாதங்களின் அடிப்படையில் நான் தமிழர் தேசிய இயக்கத்தைவிட்டு வெளியேறினேன். ஏறத்தாழ 15 ஆண்டுகள் நான் யாரைக் கடுமையாக மேடைகளில் சாடிக் கொண்டிருந்தேனோ அந்தத் தலைவர் கலைஞரை 2006 ஏப்ரல் 17 ஆம் நாள் காலையில் நண்பர் நக்கீரன் கோபால் அவர்களின் உதவியோடு சந்தித்தேன். என் வாழ்க்கை மறுபடியும் ஒரு முறை புரண்டு படுத்தது. பிறகு 2007 ஆம் ஆண்டு ஜனவரில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை என்னும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். பெரியாரின் கொள்கைகளை பரப்புவதும், ஈழத்தமிழர்களின் உரிமைகளை உரத்து ஒலிப்பதுமா அமைப்பின் பணிகள் தொடர்ந்தன. தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

விடுதலை :

தமிழர் என்பவர் யார்? தமிழருக்கான வரையறை என்ன? தமிழ் பேசுகிற அனைவரும் தமிழரா?

சுப.வீ :

தமிழர் என்பதற்கும், தமிழ்த் தேசிய இனம் என்பதற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. தமிழை தாய் மொழியாகவும், சமூக மொழியாகவும் இம்மண்ணிலேயே தம் மண உறவுகளை அமைத்துக் கொண்டு வரலாறு, உடலியல் போக்குகளிலும் தமிழர்களின் பாரம்பரியத்தில் ஊன்றி நிற்பவர்கள் தமிழர்கள். 400, 500 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு குடியேறி இன்றைக்கும் அவர்களின் தாய்மொழி வேறாக இருந்தாலும் சமூகப் பொது மொழியாக, தமிழை ஏற்றுக்கொண்டு தமிழர்களோடு இரண்டறக் கலந்து விட்டவர்களையும் சேர்த்தே நாம் தமிழ் தேசிய இனம் என்று கூறுகிறோம். அந்த வரிசையில் பார்ப்பனர்களும் தங்களை நம் இனத்தோடு இரண்டறக் கலந்து கொண்டால் தமிழ்தேசிய இனத்தின் ஒரு பகுதியாக ஆக முடியுமே தவிர தமிழர்களாக ஆக முடியாது.

விடுதலை :

இன்றைய சூழலில் பெரியாரின் கொள்கைகள் எந்தளவுக்குத் தேவைப்படுகின்றன?

சுப.வீ :


முன்பு எப்போதைக் காட்டிலும் பெரியாரின் கருத்துகள் இப்போது தான் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. பெரியார் என்றால் கடவுள் மறுப்பும், பார்ப்பன எதிப்பும்தான் வெகுமக்கள் நினைக்கிறார்கள். பெரியாரின் சித்தாந்தத்திலிருந்து பிரிக்கப் பட முடியாதைவையே என்றாலும் பெரியாரின் சிந்தனை, உழைப்பு, செயல் ஆகியவை தங்கியிருப்பதன் ஆழம் என நான் கருதுவது ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை இரண்டும் தான். சுருக்கமாக சமத்துவம் தான் அவருடைய நோக்கம். சமத்துவத்துடன் மக்கள் சுயமரியாதையுள்ள பகுத்தறிவாளர்களாக ஆகவேண்டும் என்பதுதான். அதைத்தான் மானமும் அறிவும் என்று இரண்டு சொற்களில் அடைக்கிறோம். இவை இன்றைக்கும் தேவை; என்றைக்கும் தேவை.

விடுதலை :

கடைசியாக, ஒரு கேள்வி மிகவும் வருந்ததக்க செய்தியான ஈழத்தமிழர்களின் அண்மைக்கால அவலம் குறித்து? எதிர்காலத் தமிழீழம் எப்படி அமையும்?

சுப.வீ :

கற்பனையில் கூட நாம் எண்ணிப்பார்க்காத துயரம் இன்றைக்கு ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் கசப்பாக எப்போது இருந்தாலும் போர் என்பது ஒரு நேர்கோட்டில் செல்வது இல்லை எனும் உண்மையை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். உலகின் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் முன்னேற்றம், பின்னடைவுகள் இருந்திருக்கின்றன. களங்களை இழக்கும்போது போரையே இழந்துவிட்டதாக கருத வேண்டியதில்லை. தற்போது மறுபடியும் ஒரு முறை களத்தை இழந்திருக்கிறோம். அதே நேரத்தில் விடுதலைப் போராட்டம் மக்கள் நெஞ்சில் எரிகிற நெருப்பு. இன்றைக்கு புலிகள் இயக்கம் அங்கு பலவீனப்பட்டிருக்கலாம். ஆனால் விடுதலைக்கான காரணங்கள் மேலும் வலிமைபெற்றே இருக்கின்றன. நியாயம் சரியாக இருக்கும் வரையில் போராட்டத்தீ ஒரு நாளும் அணைந்து விடாது. பிரபாகரன்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தயங்காமல் வெளிப் படையாக பல செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு நன்றி கூறி விடை பெற்றோம்.

---------------சந்திப்பு : நம்பியூர் சென்னியப்பன்.- நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 30-5-2009

உலக நாடுகள் - தூரப்பார்வை - அல்பேனியா-அல்ஜீரியா-அண்டோரா
அல்பேனியா

பொது ஆண்டுக் கணக்கு 535 முதல் 1204 வரை பைஜான்டைன் வமிசம் அல்பேனியாவை ஆண்டது. அதன்பின் ஒட்டாமான் துருக்கியர் சுமார் 400 ஆண்டுகள் இந்நாட்டை ஆண்டனர்.
ஒட்டாமான் பேரரசிடமிருந்து 1912 இல் அல்பேனியா விடுதலை பெற்றது. இரண்டாம் உலகப் போருக்கு முன் இத்தாலியின் முசோலினி இந்நாட்டின்மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டான்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, அல்பேனியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்வர் ஹோக்கர் என்பவர் நாட்டின் அதிபரானார். 1948 முதல் சோவியத் நாடு அல்பேனியாவுக்கு உதவத் தொடங்கியது. வார்சா ஒப்பந்தத்தின் தொடக்க கால உறுப்பினராக 1955 முதல் அல்பேனியா இருந்தது. இருப்பினும் 1961 இல் சோவியத் இந்நாட்டுடன் அரசு ரீதியான உறவுகளைத் துண்டித்துக் கொண்டு விட்டதால், சீனாவுடன் அல்பேனியா சேர்ந்து கொண்டது. காரணம் சித்தாந்தப் பிணக்கு!

1967 இல் அல்பேனியா தன்னை ஒரு நாத்திக நாடாக அறிவித்துக் கொண்டது. இந்த அறிவிப்பைச் செய்த முதல் நாடும் அதுதான். ஒரே நாடும் அதுதான்.

1990 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தவறான ஆட்சி முறைகளால் பொது உடைமை நாடுகள் உடைந்து சிதறிப் போன நிலையில் ஆயிரக் கணக்கில் அல்பேனியர்கள் மேற்கு நாடு களுக்கும் இத்தாலிக்கும் ஓடிவிட்டனர்.

தொண்டறச் செம்மலும், நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரசா அல்பேனிய நாட்டில் பிறந்தவர்தான்.

28 ஆயிரத்து 748 சதுர கி.மீ. பரப்புள்ள நாடு. 35 லட்சத்து 81 ஆயிரத்து 655 பேர் (2006) வாழும் நாடு. முசு லிம்கள் 70 விழுக்காடு, அல்பேனிய பழமைவா தக் கிறித்துவர்கள் 20 விழுக்காடு, ரோமன் கத்தோலிக்கர்கள் 10 விழுக்காடு என்ற அளவில் வாழ்கின்றனர். டோஸ்க் எனும் அல்பேனிய மொழியும் கிரேக்க மொழியும் பேசப்படுகின்றன.
டிரானா என்பது தலைநகரின் பெயர்.

அல்ஜீரியா

ரோம சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நாடாக 16 ஆம் நூற்றாண்டு வரை இருந்த அல்ஜீரியா ஒட் டாமான் ராஜ்ஜியத்தின் ஆளுகைக்கு வந்தது. 1830 இல் பிரான்சு நாடு கைப்பற்றியது. 1848 இல் பிரான்சு நாட்டின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டது. 1962 இல் அல்ஜீரியா விடுதலை பெற்றது. விடுதலைக்குக் கொடுத்த விலை இரண்டரை லட்சம் பேர்களின் உயிர்கள்.

மோசமான பொருளாதார நிலைகளின் காரணமாக 1980 இல் நாட்டில் கலவரங்களும் குழப்பங்களும் தலை விரித்தாடின. 1991 இல் நாடாளுமன்றத்திற்கான முதல் தேர்தல் நடந்தது. இசுலாமிய மதவாதக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்று முதன்மைக் கட்சியாக வந்தது.

அதுவரை ஆட்சியில் இருந்த ராணுவத் தலைமை தேர்தலை ரத்து செய்துவிட்டு 5 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை முகம்மது பவுடியாப் என்பவரின் தலைமையில் அமைத்து நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. வன்செயல்கள் நிறைந்த உள்நாட்டுப் போர் வெடித்தது. இதில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இசுலாமிய மதவாதக்கட்சி தடை செய்யப்பட்டது. 1998 வாக்கில் உள்நாட்டுப் போர் ஓய்ந்து போனது. கொரில்லாப் போரில் ஈடுபட்டிருந்தவர்களும் 2002 இல் அழிக்கப்பட்டனர்: 1995 இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. பின்னர் 1999 இல் ஒரு தேர்தல் நடந்தது. அதில் அப்துல் அஜிஸ் பவு டெப்லிகா என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தக் குழப்பங்களுக்கு மொழியும் ஒரு காரணி. பெர்பெர் மொழிக்குரிய பெருமை தரப்படாத நிலையில், 2001 வரை கலவரங்கள் நீடித்தன. பெர்பெர் மொழி நாட்டு மொழி ஆக்கப்பட்டு பள்ளிகளில் கற்பிக்கப்படும் என்கிற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்பே போராட்டங்கள் ஓய்ந் தன.

23 லட்சத்து 81 ஆயி ரத்து 740 சதுர கி.மீ. பரப்புள்ள நாடு. 3 கோடி 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆட்சியாளரின் மதமான (அரசாங்க மதம்) சன்னி முஸ்லிம்கள் 99 விழுக் காடு உள்ளனர். மீதிப்பேர் யூதர்களும், கிறித்துவர்களும் உள்ளனர்.

அண்டோரா

468 சதுர கி.மீ. பரப்பளவும் 71ஆயிரம் மக்கள் தொகையும் கொண்ட அண்டோரா நாட்டின் வரலாறு வேடிக்கையானது. 1993 முதல் நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ளது என்றாலும் இரண்டு நாடுகளின் இரண்டு அதிகார மய்யங்களைத் தம் நாட்டுத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கும் நாடு - பிரான்சு நாட்டுக் குடியரசுத் தலைவர் ஒருவர் - ஸ்பெயின் நாட்டின் சியோ உர்கல் பிஷப் மற்றொருவர். இவர்களின் சார்பாக அந் நாட்டுப் பிரமுகர்கள் நாட்டின் கூட்டுத் தலைவர்கள்.

பிரான்சு நாட்டுத் தளபதி பாய்க்ஸ் பிரபும் ஸ்பானிஷ் பிஷப்பும் சேர்ந்து 1278 இல் இந்நாட்டுக்குச் சுதந்திரம் அளித்தனர். பிரான்சு, ஸ்பெயின் நாடுகளின் சட்டங்களே இந்த நாட்டுக்கும் சட்டங்கள்.

2005 மே 27 முதல் ஆர்பர்ட் பின்டாட் சான்டோலனியா என்பவர் ஆட்சித் தலைவராக உள்ளார். ஈரோ நாணயம்தான் செலாவணி.ரோமன் கத்தோலிக மதம்தான் முழுமையும். காட்டலன், பிரெஞ்ச், காஸ்டிலி மொழி, போர்த்துகீசிய மொழி ஆகியவை பேசப்படுகின்றன.

------------"விடுதலை" 27-5-2009

பஞ்சாபில் சீக்கியர்களின் கலவரத்திற்கான மூல காரணம் என்ன?
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள ரூடோல்ஷிஸ் என்ற இடம் சீக்கியர்களின் ஒரு பிரிவினரான தேரா கச்சா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வழி பாட்டுக் கூட்டத்தில் மற்றொரு பிரிவினரான அதர்மியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் இராமானந்த் என்ற மதக்குரு கொல்லப்பட்டார்; 16 பேர் காயப்பட்டனர்.

சீக்கிய குருக்கள் 1469-ஆம் ஆண்டு முதல் 1708-ஆம் ஆண்டு வரை பாடிய பஜனை பாடல்கள், போதனைகள் குருகிராந்த்சாகிப் என்ற புனித நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. 1430 பக்கங்கள் கொண்ட இந்த நூலை சீக்கியர்கள் வணங்கி வருகிறார்கள். சீக்கியர்களில் அதர்மி, தேரா என்ற இரு பிரிவினர் உள்ளனர்.

அதர்மி இன சீக்கியர்கள் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். தேரா இன சீக்கியர்கள் தலைப்பாகை கட்ட மாட்டார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். பஞ்சாபில் சுமார் 50 லட்சம் இப்பிரிவு சீக்கியர்கள் உள்ளனர்.

70 ஆண்டுகளுக்கு முன்பு தேரா கச்சா பிரிவு உண்டானது. இதன் தலைவராக நிரஞ்சன் தாஸ் உள்ளார். வியன்னா சென்றிருந்த அவரது காலில் விழுந்து, குரு நிரஞ்சன் தாஸின் காலைத் தொட்டு அவரது ஆதரவாளர்கள் வணங்கினார்கள். இதற்கு உயர்ஜாதி சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மையான சீக்கியர் புனித நூலான குருகிராந்த்சாகிப்பை மட்டுமே வணங்க வேண்டும். யார் காலிலும் விழக் கூடாது என்று தகராறு செய்தனர். இந்த தகராறு முற்றி, கத்திகுத்தாகி ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள குருத்துவாரா உள் ளேயே பெரும் ரத்தக் களரியை ஏற்படுத்தியது. குருத்துவாராவுக்குள் இரு சீக்கிய கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட கத்திச்சண்டையில் குத்துப்பட்ட சீக்கிய குரு மருத்துவ மனையில் மரணமடைந்தார். ஆஸ்திரியாவில் அவர் மரணமடைய, இந்தியாவில் - பஞ்சாப் தீப் பற்றிக் கொண்டது. பஞ்சாப் மாநிலம் எங்கும் நடந்த மோதலில் கோடிக் கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட துடன் மக்களின் பொது அமைதி பெரும் கேள்விக்குள்ளானது. தீ வைப்பு வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்களால் சிலர் கொல்லப்பட்டனர். சீக்கியர்களின் வன்முறை வெறியாட்டத்துக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் தப்பவில்லை. அதுவும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் எடுத்த அதிரடி அவசர நடவடிக்கைளால் பஞ்சாப் பிற்கு ராணுவம் அனுப்பப்பட்டு அங்கு அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்து மதத்திலிருந்து வெளியேறிய சீர்திருத்த மதம் தான் சீக்கிய மதம். அந்த மதத்திலேயே தீண்டாமை என்பது நியாயம் தானா?

இந்து மதத்தின் இரத்தத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகாலமாக ஊறித்திளைத்த ஜாதி - அதன் கொடிய நஞ்சான தீண்டாமை - அதைவிட்டு விலகி ஓடினாலும் நிழல்போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது எத்தகைய கொடுமை!

கிறித்துவ மதத்திலும் இந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கல்லறைகளில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக உள்ளது என்றால் இதற்கு மேல் எதைச் சொல்லி அழ?


இந்து மதத்தில் தான் தீண்டாமை இருக்கிறது. கிறித்துவ மதத்தில் இதோ பாருங்கள்; சீக்கிய மதத்திலும் சீறிடும் அந்தத் தீண்டாமைப் பாம்பைக் கவனியுங்கள்; என்று பார்ப்பனர்கள் கூறுவதற்கு அருகதை உடையவர்கள் அல்லர். இதற்கெல்லாம் மூலவித்து என்பது இந்தப் பாழாய்ப் போன இந்து மதம்தான்.

இந்த மூலபலம் தகர்க்கப்பட்டால் ஒழிய இந்து மதத்திலிருந்து கிளைத்த சீக்கிய மதத்திலும் சரி, மத மாறிச் சென்ற கிறித்துவ மதத்திலும் சரி தீண்டாமை என்னும் புற்றுநோய்த் தொற்றிக் கொண்டே தானிருக்கும்.

வியன்னாவில் தானே இந்தத் தாக்குதல் நடந்தது இந்தியாவில் ஏன் இந்தப் பிரதிபலிப்பு? இங்கு ஏன் வன்முறை? இரயில்கள் ஏன் எரிக்கப்படுகின்றன? பொதுச் சொத்துகள் அழிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி நியாயமானதாக இருக்கலாம்.

அதே நேரத்தில் தங்களைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டில் தாக்கப்பட்டால் அதனைக் கேள்விப்பட்டு நாங்கள் பூ பறித்துக் கொண்டிருக்க மாட்டோம் - எங்கள் உணர்வினை ஏதோ ஒரு வகையிலே வெளிப்படுத்துவோம் என்பதைக் காட்டிக் கொண்டுள்ளனர் பஞ்சாபிலும் அரியானா விலும் உள்ள சீக்கியர்கள்.

இலண்டனிலே இரு சக்கர வண்டிகளை ஓட்டிக் கொண்டு செல்பவர்கள் ஹெல்மட் அணிந்துதான் செல்ல வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது எல்லாருக்கும் ஒத்து வராது - தலைப்பாகைக்குமேல் ஹெல்மட் அணிவது என்பது இயலாத காரியம் என்று இந்தியாவில் துள்ளிக் குதிக்கவில்லையா? நமது பிரதமர் போன்றவர்களும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கவில்லையா?

அதே நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து முப்பதே கல்தொலைவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது. வாழும் உரிமை உண்டா? மொழிக்கு அங்கீகாரம் உண்டா? இரண்டாம் தர மக்களாகத்தானே ஆங்கே நடத்தப்படுகிறார்கள். ஒரே ஒரு சீக்கிய குரு கொல்லப்பட்டதற்கு இந்தியாவில் ரகளை நடக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் நாசமாக்கப்படுகின்றன.

இலங்கையிலே எங்கள் ஈழத் தமிழர் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஒரு அரசாங்கமே இதனை முன்னின்று செய்கிறது. குழந்தைகள் பயிலும் விடுதி என்றும் பாராது குறி பார்த்து குண்டுகளை வீசி கொன்று குதூகலிக்கிறார்கள். மருத்துவமனைகள் மீதும் குண்டு மழை பொழிகிறார்கள். மக்கள் சரணடைந்து கிடக்கும் வழிபாட்டு நிலையங்களையும் நீர்மூலமாக்குகிறார்கள்.

தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளைக் குடிமக்கள் மீது வீசுகிறார்கள். முகாம்களை ஏற்படுத்தி சித்திரவதைகளைச் செய்கிறார்கள். உலகில் பல நாடுகள் எச்சரித்தும் நீ யார், எங்களைக் கேட்பதற்கு? என்று திமிர்வாதம் பேசுகிறது ராஜபக்சே அரசு. அய்.நா. எச்சரித்தாலும் போய்ட்டுவா என்று பதிலடி கொடுக்கிறது.

இவ்வளவுக்கும் அந்த ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழர்கள் - அய்ந்து கோடிக்குமேல் 30 கல் தொலைவில் இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் இன அழிப்பு வேலையை எந்திரம் போல செய்து கொண்டிருக்கிறது.

உலகின் பல நாடுகளிலும் போர் ஆயுதங்களை வாங்கி தமிழர்களைப் பூண்டோடு ஒழிக்கும் கொலை பாதகச் செயலில் முழு மூச்சாய் ஈடுபடுகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழ் நாட்டின் நிலைமை என்ன? ஒரு சீக்கியர் கொல்லப்பட்டார் என்பதற்காக பஞ்சாபும், அரியானாவும் கொதிகலன் ஆகிறது. ஆனால் பல்லாயிரக் கணக்கில் பக்கத்துத் தீவில் தமிழர் படுகொலை செய்யப்பட்டது தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது? அரசியல் பட்டிமன்றம் நடக்கிறது.

ஒருவரை ஒருவர் குறைகூறும் அக்கப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு நடக்கும் போரை நிறுத்துவது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் தமிழர்களுக்குள் நடக்கும் போர் நிறுத்தப்படட்டும் என்று கூறி வருகிறார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி.

யார் காதில் போட்டுக் கொள்கிறார்கள்? தேர்தல் நேரத்தில் கிடைத்த வாராது வந்த மாமணியாக? இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்களே!

ராஜபக்சே மீது ஏவும் கண்டனக் கணைகளைவிட முதல் அமைச்சர் கருணாநிதி மீது ஏவும் எரியீட்டிகள்தான் ஏராளம்.

எதிலும் ஏட்டிக்குப் போட்டி என்பதுதான் இங்குள்ள தமிழர்களின் நினைப்பும் - நடப்பும்.

ஈழத்திலே தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கு பஞ்சாபிகளுக்கோ, வங்காளிக்கோ, நடந்திருந்தால் நாடே பற்றி எரிந்திருக்காதா!

இந்த நேரத்தில்கூட நம் தமிழர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் பஞ்சாபைப் பாருங்கள்; அரியானாவைக் கவனியுங்கள்.

வன்முறைகூட வேண்டாம்; அவர்கள் ஒன்று திரண்டு எழுகிறார்களே; அந்த ஒன்று திரளும் உணர்வு வந்தாலே போதுமே ராஜபக்சேக்களின் சப்தநாடிகளும் ஒடுங்கிப்போய் விடுமே!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக் கவிஞர் பாடல் வரிகளில் அடிநாதம் அதுதானே!

"தமிழா தமிழனாக இரு!"

"தமிழா இனவுணர்வு கொள்!"


----------------- மின்சாரம் அவர்கள் 30-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

அய்.அய்.டி.யும் - ஒடுக்கப்பட்ட மாணவர்களும்
அய்.அய்.டி.யில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 3 லட்சத்து 84 ஆயிரத்து 977 மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதினார்கள். அய்.அய்.டி.,யில் உள்ள மொத்த இடங்களே 8295 தான். இதில் முதல் கட்டமாக 10 ஆயிரத்து 35 பேர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டைவிட 24 சத விகிதம் அதிகமாக மாணவ மாணவிகள் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளனர்.

இந்த முறை பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு இருப்பதால் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்று கருதலாம். இலட்சக்கணக்கான மாணவர்கள் அய்.அய்.டி.,களில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு எழுதினர் என்பதே ஒரு நல்ல செய்தியாகும். இந்த எண்ணிக்கை உயர்ந்ததற்கு முதன்முதலாக பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது காரணமாக இருக்கலாம். இதன்மூலம் இட ஒதுக்கீடு எவ்வளவு அவசியம் என்பதை எடுத்த எடுப்பிலேயே தெரிந்துகொள்ள முடிகிறது.

தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவன் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அய்.அய்.டி., எய்ம்ஸ், அய்.அய்.எம்., போன்ற கல்வி நிறுவனங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நினைத்துப் பார்க்க முடியாத உயரமான இடங்களில் இருந்தன.

எங்கே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன? எங்கு விண்ணப்பம் வாங்குவது? விண்ணப்பிப்பதற்கான தகுதி மதிப்பெண்கள் என்ன? என்பது போன்ற அடிப்படையான தகவல் கள்கூட அறியாதவர்களாய் இருட்டிலே தடுமாறிக் கொண்டிருந்தனர் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும்.

இதை வைத்துப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நுழைவுத் தேர்வு எழுதியிருக்கின்றனர் என்று எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது. அகில இந்திய அளவில் முதன்மையான இடங்களில் தேர்வாகியிருக்கின்றனர் என்கிற போது, அந்தப் பெருமிதத்தில் மேலும் கூடுதலான உணர்ச்சி மெருகேறுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதன்முதலாக இப்பொழுது தான் இந்தக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. 27 விழுக்காடு இடங்களையும் ஒரே ஆண்டில் கொடுக்காமல், அதிலும்கூட ஆத்திரத்தைக் காட்டும் வண்ணம் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற முறையில்தான் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 58 ஆண்டுகள் ஓடிய பிறகு முதன்முதலாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நேரத்தில் அதில்கூட பார்ப்பனர்கள் தங்களின் ஆற்றாமையை, கீழறுப்பு வேலையைச் செய்வது வெட்கக் கேடானதாகும்.

அய்.அய்.டி.யைப் பொறுத்தவரை அதன் இயக்குநர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே! சென்னை அய்.அய்.டி போன்ற இடங்களில் சட்ட விரோதமாக தங்கள் பதவி காலத்திற்குள் எவ்வளவுக் கெவ்வளவு பார்ப்பனர்களை விரிவுரையாளர்களாக, பேராசிரியர்களாக, துறைத் தலைவர்களாகத் திணிக்க முடியுமோ அந்த அளவுக்கு, சட்டத்துக்குப் புறம்பான வகையிலும் ஈடுபடுகிறார்கள்.

சென்னை அய்.அய்.டி. இயக்குநராக இருக்கும் அய்யங்கார், அந்தப் பதவிக்கான கல்வித் தகுதி உள்ளவர்கூட அல்ல - அவர் பேராசிரியராக இருக்கும் 28 ஆண்டுகளில் அவர் ஒட்டுமொத்தமாக எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பத்துக்கும் கீழேதான்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்கிறபோது தகுதி - திறமை பேசும் பார்ப்பனர்களின் தகுதி - திறமை இந்த யோக்கியதையில்தான் உள்ளது.

இவர் பதவியில் நீடிப்பது செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடையைப் பெற்றுள்ளார். இப்படி நீதிமன்ற சந்து பொந்துகளில் நுழைந்து ஓடி தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம், முடிவான தீர்ப்பு வரும் இடைக்காலத்தில் எந்தவித பதவி நியமனங்களையும் செய்யக்கூடாது என்று தெளிவாகத் தீர்ப்புக் கூறி இருந்தும், அதனையும் அலட்சியப்படுத்தி, பார்ப்பனர்களைத் தேடித் தேடி தட்டிப் பார்த்து பதவிகளில் அமர்த்தியுள்ளார். இன்னும் 25 ஆண்டுகளுக்குத் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத் தப்பட்டோரும் அதற்குள் நுழைவதுபற்றி கனவுகூடக் காண முடியாது என்பதுதான் உண்மையான நிலை.

இப்படி பார்ப்பன வன்மத்தோடு செயல்படும் ஆசிரியர்கள் ஆதிக்கம் நிறைந்த நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உள்ளே நுழைந்த ஒடுக்கப்பட்ட மாணவர்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்ச மாகவிருக்கிறது. உள் மதிப்பீடு மதிப்பெண்கள் இவர்களின் கைகளில்தானே இருக்கிறது.

டெல்லி எய்ம்ஸில், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்கள் உயர்ஜாதிப் பார்ப்பனர்களால் எப்படியெல்லாம் மதிப்பீடு செய்யப்பட்டன என்கிற திடுக்கிடும் தகவல்கள் எல்லாம் வெளியில் வந்தனவே!

வகுப்புவாதம் தலைதூக்கி நிற்கும் ஒரு சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயில்வதற்கான ஒரு சூழல் கல்வி நிறுவனங்களில் அமைவது மிகமிக அவசியமாகும். பயிற்றுவிப்போர் (Faculty) பயில்வோர்க்கிடையே வேறுபாடான கண்ணோட்டம் இல்லாதிருக்க இந்த இரு இடங்களிலும் இட ஒதுக்கீடுமுறை ஒழுங்காக, கறாராக இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

---------------------"விடுதலை" தலையங்கம் -27-5-2009

29.5.09

இந்திய அரசு அய்.நா. சபையில் இலங்கையை ஆதரித்த செயல் தமிழர் விரோத நிலைப்பாடு


மத்தியில் நடப்பது காங்கிரசு ஆட்சி அல்ல;
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு

கலைஞரின் யோசனைக்கு முன்னுரிமை தரவேண்டாமா?

இனி வருங்காலத்தில்
இதற்குரிய விலையைக் கொடுக்கவேண்டிவரும்

தமிழர் தலைவர் அறிக்கை


இலங்கைப் பிரச்சினையில், முதல்வர் கலைஞரின் வேண்டுகோளைப் புறக்கணித்து இந்திய அரசு அய்.நா. சபையில் இலங்கையை ஆதரித்த செயல் தமிழர் விரோத நிலைப்பாடு என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:

அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கையின் இனப்படுகொலையையும், பல்லாயிரக்கணக்கான மக்களை சித்திரவதை செய்து, அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்று கருதாது பல்வேறு கொடுமைகளை, மனித உரிமை மீறல்களையெல்லாம் செய்ததை நியாயப்படுத்தி, சில ஆசிய நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை அரசின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை சிங்கள ராஜபக்சேயின் அரசின் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

இதில், இந்திய அரசு அவர்களுடன் சேர்ந்து - சீனா, போன்ற நாடுகளுடன் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்திருப்பது, பச்சை தமிழர் விரோத - மனித நேயத்திற்கு எதிரானதொரு நிலைப்படாகும்!

இரண்டு நாள்களுக்கு முன் தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிற்குக் கடிதம் எழுதி அவசர அவசரமாக தமிழர்கள் - உலகத் தமிழர்கள் அனைவரது உணர்வுகளையும் மதித்து நடந்து கொள்ள விடுத்த வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காக ஆனதோடு, ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போன்ற அடாவடித்தனத்துடன், இன்னமும் இலங்கையின் இராஜபக்சே அரசுக்கு தீவிர ஆதரவாளராக, அவ்வரசின் மனித உரிமை மீறலுக்குத் துணை போகிற அரசாகத்தான் இருப்போம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்தது போல் நடந்து கொண்டது, மிகவும் வெட்கமும் வேதனையும் அடைய வேண்டிய ஒன்றாகும்!


பிரதமர் பண்டித நேரு காலத்திலிருந்தே இலங்கைப் பிரச்சினை என்று வரும் போது தமிழ் நாடு முதல்வர் (காமராசர் போன்றவர்கள்)களைக் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தது முந்தைய வரலாறு.

அதுவும் மத்திய அரசால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மற்றொரு கேள்வி. மத்தியில் நடைபெறுவது வெறும் காங்கிரஸ் அரசு அல்ல. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சி அதன் முக்கிய துவக்க முதல் உறுப்பான தி.மு.க. - அதன் தலைவர் கருத்து, யோசனைக்கு முன்னுரிமை தரவேண்டாமா?

காங்கிரசுக்காகத் தான் பழி சுமந்து, தமிழர்களின் ஆவேசத்திற்கும் ஆளாகிஉள்ள, தமிழர்களின் தனிப் பெரும் காவலர் கலைஞர் அவர்கள் கருத்தை இப்படி அலட்சியப்படுத்துவது தான் ஜனநாயகமா? உரிமைக்குக் குரல் கொடுத்தவர் அவர்; அந்த நியாயத்தை ஏற்று குறைந்த பட்சம் நடுநிலையிலாவது மத்தியஅரசு இந்த தமிழர் உணர்வுப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்க வேண்டாமா? நமது முதல்வரின் வேண்டுகோள் கிள்ளுக் கீரையா?

இதற்காக உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் அனைவரது வன்மையான கண்டனத்தை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துவது நமது கடமை. நமது முதல்வர் உணர்வு தமிழர்களின் உணர்வு. அதை அலட்சியப்படுத்தினால் கொடுக்க வேண்டிய விலை பற்றி பின்னால் வருந்தவேண்டியிருக்கும்.


-------------- "விடுதலை" 29.5.2009

அர்ஜூன் டாங்கி வழங்கும் விழாவில் மூடநம்பிக்கை - வழக்கு தொடருவோம் - தமிழர் தலைவர்கி.வீரமணி


அர்ஜூன் டாங்கி வழங்கும் விழாவில் மூடநம்பிக்கை -
வழக்கு தொடருவோம் - தமிழர் தலைவர்!

* ஒரே மதம், ஒரே மொழி எனும் போக்கில் இருந்து, இந்தியாவைக் காப்பாற்றியிருப்பது திராவிடர் இயக்கமே! - டாக்டர் சாந்தி சிறீ

* கம்யூனிஸ்ட் ஆட்சி மேற்கு வங்கத்தில் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை - டாக்டர் ரிம்லி பாசு

சென்னை பகுத்தறிவாளர் கலந்துரையாடலில் கருத்து மழை


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மதச் சார்பின்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையாக அக்கோட்பாடு இந்தியாவில் பின் பற்றப்படவில்லை எனத் தமிழர் தலைவர், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள், சென்னைப் பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியபோது விவரித்தார்.

சென்னை பெரியார் திடலில் மே 28 மாலை 5.45 மணிக்கு பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முக்கியக் கருத்துரையாளர்களாக, புனெ பல்கலைக் கழகப் பேராசிரியைகளும், சுதந்திர ஆய்வு மய்யப் பொறுப்பாளர்களுமான டாக்டர் சாந்தி சிறீ பண்டிட், மற்றும் டாக்டர் ரிம்லி பாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அக்கொள்கையைப் பின்பற்றுவதை மேற்கொள்ளாமல், அதை மீறும் வகையில் நடைமுறை இருக்கிறது. அதற்குக் காரணம் மதச்சார்பின்மைக்கு இந்நாட்டில் தவறான விளக்கம் தரப்படுகிறது. மதச்சார்பின்மையின் உண்மையான பொருள், அரசு மத நடவடிக்கைகளில் ஈடுபடாது என்பதாகும். ஆனால், இந்திய நாட்டின் தலைவர்கள் அதற்குப் புதுவிதமான விளக்கம் தருகிறார்கள். எல்லா மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்; சமமாக பாவிக்க வேண்டும் என்ற தவறான பொருளை அதற்குக் கொடுக்கிறார் கள். அதன் காரணமாகப் பெரும்பான்மையராக இருக்கும் இந்துக்களின் மதச் சடங்குகளை அரசு நிருவாகம் பின்பற்றுகிறது.

பெரியார் கடுமையாக விமர்சித்தார்

இந்தத் தவறான நடை முறையைப் பெரியார் தொடக்கத்திலேயே கண்டித்தார். மதச்சார் பின்மை என்றால் அரசாங்கத்திற்கு மதத்துடன் தொடர்பு இல்லை என்றுபொருள். கன்னி என்றால், ஆண்களுடன் உடலுறவுத் தொடர்பு இல்லாதவர் என்பது உண்மையான அர்த்தம். அப்படி அல்லாமல், கன்னி என்பவள் எல்லா ஆண்களுக்கும் சம உடலுறவு வாய்ப்புத் தரு கிறவள் என விளக்கம் சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் சிந்தனைக்கும் ஏதாவது சம் பந்தம் உண்டா? எவ்வளவு மோசமாக இதை திரித்துச் சொல்கிறார்கள். அது போலவே, செகுலரிசம் அல்லது மதச் சார்பின்மை என்பதற்கு எல்லா மதங்களுக்கும் அரசு சம அளவில் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதும் அபத்தமான விளக்கமாகும் எனப் பெரியார் கடு மையாக விமர்சித்தார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் ராணுவக் கவச வண்டிகளுக்கு இந்துமத இதிகாசக் கதை நாயகனாகிய அர்ஜூனனின் பெயரை வைப்பது மதச் சார்பின்மையை மீறுவதாகும். இந்தியா எனும் நாடு இந்தியா எனும் பெயர் கொண்டதாகத் தான் இருக்கவேண்டும். அதை இந்துஸ்தான் என்பதாக மாற்றக் கூடாது. இந்துஸ்தான் டெலிபிரிண்டர் என்றெல்லாம் மாற்றக் கூடாது.

வழக்குத் தொடருவோம்

அர்ஜூன் டேங்க் எனும் இராணுவ கவச வண்டிகளுக்குத் தீமை எதுவும் தாக்காது இருப் பதற்கு எலுமிச்சம் பழம் வைத்துச் சடங்கு செய்யப்பட்டதாக மே 26 ஆம் நாள் பத்திரிகை படத்துடன் செய்தி வெளிவந்திருக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் கூறுகிற, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனும் அடிப்படைக் கடமையை மீறுவதாக ஆகி றதல்லவா? அரசு நிருவாகத்தில் இருப்பவர்கள் மதப்பண்டிகை வாழ்த்து அட்டைகளை அனுப்பு வது கூடாது. ஏற்கெனவே திராவிடர் கழகம் இது தொடர்பாக வழக்காடி வெற்றி பெற்றுள் ளது.

இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம். மக்கள் என்றும் விழிப்போடிருந்து நீங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள வேண்டும்.

மதம் மக்களை இணைப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அது மக்களைப் பிரிக்கவே செய்கிறது. ஒரே மதமான சீக்கிய மதத்திற்குள் இரு வேறு பிரிவினருக்குள் பலமான மோதல் நிகழ்ந்து, கோடிக்கணக்கில் சொத்துகள் நாசமான நிகழ்ச்சிகள் இரண்டு நாள்களுக்கு முன் நடந்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவ்வாறு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி தமது உரையில் விளக்கினார்.

சாந்தி சிறீ

பேராசிரியை சாந்தி சிறீ உரையாற்றுகையில், பகுத்தறிவு இயக்கத்தைப் பெரியார் மக்கள் இயக்கமாக ஆக்கியிருப்பது பாராட்டிற்குரியது என்றார். இந்தியாவின் பிற பகுதிகளில் அவ்வியக்கம் அறிவாளிகள் மத்தியில் மட்டும் தான் சிறிய அளவில் இருக்கிறது.

ஒரே மதம், ஒரே மொழி என்ற நிலைக்குச் செல்லாமல், இந்தியாவைக் காத்த பெருமை திராவிட இயக்கத்தை சேரும். அத்துடன் இந்து மதமும் சமஸ்கிருதப் பண்பாடும் வலியுறுத் தும் ஜாதிய ஏற்றத் தாழ்வை ஒழிப்பதற்குப் பெரியார் இயக்கம் பெரும் பங்கு ஆற்றிவருகிறது.

பெண்களும் தாழ்ந்த ஜாதியாரும் படித்து முன்னேறுவதை மனு அனுமதிப்பதில்லை - இந்து மதம் அனுமதிப்பது இல்லை. 19 ஆம் நூற்றாண்டில் பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கச் சென்ற சாவித்திரி பாய் ஃபுலேயை மேல் ஜாதி மக்கள் புனெயில் கல்லால் அடித்தார்கள்.

இந்திய மக்களைப் பிரிட்டிஷ் அரசு பிரித்து ஆளவில்லை; அவ்வாறு செய்தவர்கள் பார்ப்பனர்களே.

புரோகிதம் அற்ற தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதைத் திருமண முறை இந்தியா முழுவதும் பரவ வேண்டும். பெண் இழிவைப் போக்குவதற்கு அது உதவும்.

தர்ம சாஸ்திரத்தை எழுதிய மனுவின் மூளை மிகவும் கெட்டது; அழுக்குப் பிடித்தது.

பள்ளிப்பாடங்களில் இருந்து வரவேண்டும்

பகுத்தறிவைப் பற்றியும் பெரியாரைப் போன்றவர்களின் வாழ்வைப் பற்றியும், பள்ளிகளில் கற்றுத்தரவேண்டும். பாட நூல்களில் அவை இடம் பெற வேண்டும். தமிழ்நாட்டில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுக்க அறிவுப்பிரச் சாரத்தைப் பரப்பி வருகிறார். தமிழ்நாட்டில் கலைஞர் சிறந்த பகுத்தறிவு ஆட்சியை நடத்தி வருகிறார். இவ்வாறு, சாந்தி சிறீ, கருத்துகளை எடுத்து ரைத்தார்.

ரிம்லிபாசு

மேற்கு வங்காள மாநிலம், 30 ஆண்டுகளுக்கு மேல் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையிலான கூட்டணி ஆட்சியில் இருப்பினும், நிலச் சீர்திருத்தம் போன்ற வரவேற்கத் தக்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பினும், அங்குள்ள மக்கள் இன்னும் ஜாதிப் பிடிப்பில் கட் டுண்டவர்களாகவே இருக்கிறார்கள். பகுத்தறிவு எண்ணம் அங்கு பரவவில்லை; சமுதாய மாற்றம் ஏற்படவில்லை. சமூக நீதியும் அளிக்கப்படவில்லை என, டாக்டர் ரிம்லி பாசு கூறினார்.

முன்னதாகப் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் அனைவரை யும் வரவேற்று உரையாற்றுகையில், பகுத்தறிவுச் சிந்தனைக்கும் மனிதநேயப் பார்வைக் கும், தந்தை பெரியார் தமிழ் மக்களிடையே வலுவான அடித்தளம் போட்டிருப்பதையும், அவருடைய கொள்கைகள், ப.க புரவலர் ஆசிரியர் வீரமணியவர்களின் காலத்தில் உலகமயம் ஆகியவருவது குறித்தும் குறிப்பிட்டார்.

ப.க. மாநிலத் தலைவர் நேரு, புனெ பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த பேராசிரியை களை அறிமுகப்படுத்தினார்.

ப.க சென்னை மாவட்டத் துணைத் தலைவர் பொறியாளர் கரிகாலன் நன்றி கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் சிறப்பு விருந்தினர்கள் சாந்தி சிறீ அவர்களுக்கும், ரிம்லி பாசு அவர்களுக்கும் திராவிடர் கழக தலைவர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். கூட்டத் திற்கு வந்திருந்த பல தோழர்கள் பல்வேறு கோணங்களில் வினா எழுப்பினர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களும், தமிழர் தலைவர் அவர்களும் அறிவார்ந்த பதில்களை அளித்து கரவொலியைப் பெற்றனர். மணியம்மையார் அரங்கம் நிரம்பி வழிந்தது.


---------------நன்றி:-"விடுதலை" 29-5-2009

பார்ப்பனர் வஞ்சம் இன்னும் தணியவில்லைஈழத்தில் நடைபெற்று வந்த போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அங்கு வாழும் தமிழர்களுக்கான உரிமைகள் முற்றாகக் கிடைக்கும்வரை போர் அங்கு ஓயப் போவதில்லை; பல்வேறு வடிவங்களில் அது நடக்கத்தான் செய்யும் என்பது வரலாறு மக்களுக்குப் போதிக்கும் பாடமாகும். வரலாறு தரும் இந்தப் போதனையைத் துச்சமாக எண்ணுபவர்களின் வரலாறு சோகமாகத்தான் முடியும்.

போர் முடிந்துவிட்டது என்று ராஜபக்சே அரசு அறிவித்திருந்தாலும்கூட, பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

அய்.நா.வின் அதிகாரிகள் அங்கு அனுமதிக்கப்பட வில்லை. அய்.நா. செயலாளரைத் தடுக்க முடியவில்லை; அவ்வளவுதான்; நிலைமையை நேரில் பார்த்த அய்.நா. செயலாளர் பான்-கீன்-மூன் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை வேதனையுடன் வெளிப்படுத்தியும் உள்ளார்.

முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்களைக் கொடுமைப்படுத்தும் சிங்களர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் ஊடுருவல் என்ற பெயராலே தமிழினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் நிலை என்ன என்பது திகிலான கேள்வியாகத்தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அய்.நா.வில் மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்தியாவும், கம்யூனிஸ்ட் நாடுகளும் நடந்துகொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

அதோடு அல்லாமல் இலங்கை அரசுக்குப் பொருளாதார உதவிகள் அளிக்கப்படுவது இனி தடைபடாது என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.

எந்த எல்லைக்கும் சென்று மனித உரிமைகளைச் சாகடிக்கலாம்; இன அழிப்பைச் (Genocide) செய்யலாம்; சொந்த நாட்டு மக்களைக் குண்டுகள் போட்டு கொல்லலாம். தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி பொது மக்களைப் படுகொலை செய்யலாம்; மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசலாம்; மக்கள் புகலடைந்த வழிபாட்டுத் தலங்கள்மீதும் குண்டு வீசலாம். குடிமக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளைத் தடை செய்யலாம் - கேட்டால் இது ஒரு நாட்டின் உள்விவகாரம் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு இதன்மூலம் அய்.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான நாடுகள் பச்சைக் கொடி காட்டிவிட்டது என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது.


இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கைகள் தொடர்வது என்பது முன்னிலும் பல மடங்கு அதிகமாகிவிட்டன என்றே தோன்றுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்துக்குக் கூடுதலான சுமைகளும், கடமைகளும் பெருகியிருக்கின்றன.

நேற்று மாலை (28.5.2009) விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் சென்னையில் நடத்தப்பட்ட வீர வணக்க ஊர்வலம் இதில் ஒரு மைல்கல் என்றே குறிப்பிடப்படவேண்டும்.

அந்தப் பேரணியைத் தொடங்கி வைத்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், ஈழத் தமிழர்ப் பிரச்சினை சிலருக்கு அரசியல் பிரச்சினையாகவிருக்கலாம்; நமக்கோ உயிர்ப் பிரச்சினை; மானப் பிரச்சினை; மனித உரிமைப் பிரச்சினை; போராட்டம் தொடரும் - அது முற்றுப் பெறவில்லை என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர் தற்காலிகமாக முடிந்த நிலையில், பார்ப்பன ஊடகங்கள் குறிப்பாக சோவின் துக்ளக் போன்ற ஏடுகள் எழுதிவரும் நஞ்சு தோய்ந்த தமிழின வெறுப்பு - எதிர்ப்புக் கட்டுரைகளும், எழுத்துகளும், தமிழர் களை வெகுவாக உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் - பலியான பிறகும்கூட அவர்களின் ஆத்திரமும், வஞ்சகமும் தணியவில்லை என்று தெரிகிறது.

ஈழத்தில் 30 ஆண்டுகளாக நடைபெற்றது உரிமைப் போராட்டம் அல்ல. ஒரு நபர் தன்னுடைய சர்வாதிகாரத்தின்கீழ் ஒரு நிலப் பகுதியையும், மக்களையும் கொண்டு வருவதற்காக நடத்திய, கொலை வெறியாட்டம்தான் முடிந்திருக்கிறது. இது வேதனைக்குரிய விஷயம் அல்ல என்று திருவாளர் சோ பதில் எழுதியுள்ளார்

(துக்ளக், 3.6.2009, பக்கம் 24).

தமிழ்மொழி ஆட்சி மொழியல்ல என்று அறிவிக்கப்பட்டது. யாழ் நூலகம் கொளுத்தப்பட்டது; சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு அங்கு இருந்த கைதிகள் அடித்துக் கொல்லப் பட்டது - தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது. தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் நடத்தப்பட்டது. எல்லாமே நியாயம். இவற்றை எதிர்த்து நடத்தப்பட்டது என்பது ஒரு தனி நபரின் சர்வாதிகாரத்துக்குத்தான் என்று எழுதக் கூடிய வன்னெஞ்சம் கொண்ட நல்ல பாம்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நினைக்கும்போது, அத்தகைய ஏடுகளைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்களும் இன்னும் இருக்கிறார்களே என்று எண்ணும்போது தமிழர்களுக்கு இன்னும் பணிகள் அதிகமாகவே இருக்கின்றன - நம் பணிகள் தொடரும் - தயாராவீர்!

--------------------------29-5-2009"விடுதலை" தலையங்கம்

27.5.09

உலக நாடுகள் -தூரப்பார்வை -"ஆண்டிகுவா மற்றும் பார்புடா"
ஆண்டிகுவா மற்றும் பார்புடா

மேற்கிந்திய தீவுகளின் கூட்டத்தைச் சேர்ந்த ஆண்டிகுமா தீவை ஆங்கிலேயர்கள் 1632 இல் கைப்பற்றிக் குடியேறினர். பக்கத்தில் உள்ள பார்புடா தீவில் 1678 இல் குடியேறினார்கள். அவர்களின் ஆதிக்கத்தில் 20 ஆம் நூற்றாண்டு வரை இருந்த இந்த இரண்டு தீவுகளும் 1958 இல் லீவார்ட் தீவுக் கூட்டத்தில் இணைந்து மேற்கிந்தியக் கூட்டமைப்பில் சேர்ந்தன. 1981 இல் நவம்பர் மாதத்தில் முதல் நாள் விடுதலை பெற்ற நாடுகளாயின.

ஆண்டிகுவா 280 சதுர கி.மீ.பரப்பும் பார்புடா 161 ச.கி.மீ. பரப்பும் ஆக இரண்டும் சேர்ந்து 441 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே உள்ள மிகச் சிறிய நாடுகள் ஆகும். சுமார் 70 ஆயிரம் மக்கள் மட்டுமே வகிக்கின்றனர் இங்கிலீஷ் மொழிதான் பேசப்படுகிறது. கிறித்துவ மதம் - குறிப்பாக புரொடஸ்டன்ட் பிரிவு. மிகச் சிலர் ரோமன் கத்தோலிக்க மதம்.

இங்கிலாந்து நாட்டைப் போல குடிக்கோனாட்சி முறை. எலிச பெத் அரசிதான் நாட்டுத் தலைவர். அவர் சார்பாக கவர்னல் ஜெனரல் ஜேம்ஸ் கார்லைஸ்ல் 1993 முதல் இருந்து வருகிறார். பிரதமர் பால்ட்வின் ஸ்பென்சர் 2004 முதல் பதவியில் இருக்கிறார்.

ஆர்மீனியா

ஆர்மீனியா நாடு பழம் பெரும் நாகரிகச் சிறப்புடன் கூடிய நாடு. பொது ஆண்டுதொடங்கிய 300 ஆண்டுகளுக்கு முன்பே கிறித்துவத்தை மதமாக ஏற்றுக் கொண்ட நாடு.

துருக்கியின் ஒட்டோமான் அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள் இந்நாட்டை ஆண்டனர். தேசிய உணர்வும் விடுதலை வேட்கையும் முகிழ்த்துக் கிளம்பியதைக் கண்ட இக்கொடுங்கோலரசு 1894 முதல் 1896 வரை மூன்றாண்டுகள் கொன்று ஒழித்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. ஒட்டோமான் அரசர்கள் எத்தகைய கொடுங்கோலர்கள் என்பதற்கு ஒன்றைக் குறிப்பிடலாம்- 1915 இல் முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆர்மீனிய நாட்டவர்கள் அனைவரையும் மத்திய கிழக்குப் பகுதியில உள்ள பாவைனத்திற்குஇடம் பெயரச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இதன் விளைவாக கிட்டத்தட்ட 15 லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டும் பட்டியினால் இறந்தும் போயினர்.

உலகப் போரில் துருக்கி தோற்றது. அதற்காகவே காத்திருந்த ஆர்மீனியா 1918 மே மாதத்தில் விடுதலையை அறிவித்துக் கொண்டது. ஆனாலும் 1920 இல் சோவியத் ஒன்றியம் இந்நாட்டைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1936 இல் சோவியத் நாடுகளுடன் ஒன்றாக ஆர்மீனியா ஆகிப்போனது. 1991 செப்டம்பர் மாதத்தில் சோவியத் ஒன்றியம் உடைந்து போன சமயத்தில் ஆர்மீனியா தன்னை விடுவித்துக் கொண்டது.

ஆர்மீனியர்கள் தமிழ்நாட்டுடன் அந்தக் காலத்திலேயே உறவு கொண்டவர்கள். வணிகத் தொடர்பு இருந்துள்ளது. அதன் அடையாளமாகச் சென்னைத் துறைமுகத்திற்குப் பக்கத்தில் இவர்கள் வசித்த பகுதிக்குப் பெயர் ஆர்மீனியன் தெரு என்றே அழைக்கப்படுகிறது. அந்தத் தெருவில உள்ள கிறித்துவக் கோயிலின் பெயர் ஆர்மீனியன் சர்ச் என்பது.

29 ஆயிரத்து 800 ச.கி.மீ. பரப்புள்ள நாட்டில் 30 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆர்மீனிய அபோஸ்டோலிக் மதத்தை 94 விழுக்காட்டினர் சார்ந்துள்ளனர். 4 விழுக்காடு பேர் கிறித்துவர்கள். 2 விழுக்காட்டினர் பாரசீக ஜொராஷ்டிரிய (நெருப்பை வணங்கும்) மதத்தினராக உள்ளனர்.

ஆஸ்திரேலியா

தனியொரு கண்டமாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவில், ஆதி மனித குலம் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் பரவினார்கள் என்ற வகையில், சுமார் 40-50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடியினர் வசிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த நாட்டிற்கு நாடு பிடிக்கும் ஆங்கிலேயர்கள் 17 ஆம் நூற்றாண்டில் வந்து சேர்ந்தனர். ஜேம்ஸ்குக் என்பாரின் தலைமையில் ஒரு குழுவினர் 1770 இல் வந்து குடியமர்ந்தனர். உள்ளூர் தொல்மக்களுக்கு இவர்கள் இழைத்த கொடுமைகள் சொல்லி மாளாது. செய்த கொலைகளும் அத்தனையே!

ஆஸ்திரேலியாவைத் தன்னுடைய குடியேற்ற நாடாக்கிட இங்கிலாந்து முடிவெடுத்தது. 1788 இல் இங்கிலாந்து கடற்படை தளபதி தல் பிலிப் என்பவர் சிட்னி துறைமுக நகரில் குற்றவாளி களுக்கான குடியிருப்பை ஏற்படுத்தினார். 800 நாடு கடத்தல் தண்டனை பெற்ற கொடும் குற்றவாளிகளை 11 கப்பல்களில் ஏற்றிக் கொண்டு வந்து சிட்னியில் இறக்கினார்.

அந்தக் குற்றவாளிகளின் பரம்பரை ஆஸ்திரேலியாவில் வளர்ந்தது. 1901 இல் ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு ஏற்பட்டது. கொன்று குவிக்கப்பட்ட பழங்குடி மக்களின் நிலங்களையும் வளம் மிகுந்த காடுகளையும் கைப்பற்றிக் கொண்ட இங்கிலாந்துக்காரர்கள் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். இங்கிலாந்தின் அரசியே இந்நாட்டுக்கும் அதிபர். குடிக்கோனாட்சி முறையில் கவர்னல் ஜெனரலும் உண்டு; நாடாளுமன்றமும் பிரதமரும் உண்டு. ஆனால் மனித நேயமும் மனிதனை மதிக்கும் மாண்பும் மறைந்துவிட்ட நாடு.

ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட நேரத் தில் தாங்கள் செய்த கொலைகளுக்காகவும் கொடுமை களுக்காகவும் வருத்தம் தெரிவித்து நாடகம் ஒன்றை அந்நாட்டு வெள்ளையர்கள் நடத்தினர். பழங்குடியினரின் ஆதிகால நடனம் போன்றவற்றைக் கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நடத்தி, முதல் மரியாதை தந்து தங்களின் பழைய காலக் குற்றங்களை மறைக்கப் பார்த்தனர்.

76 லட்சத்து 86 ஆயி ரத்து 850 சதுர கி.மீ. பரப் பும் 2 கோடியே 3 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட நாடு. கத்தோலிக்க, ஆங்கிலிகன், கிறித்துவப் பிரிவினரும் கிறித் துவத்தில் பல்வேறு பிரிவினரும் நிறைந்த நாடு. புத்த மதத்தினர் 2 விழுக் காடு, முசுலிம்கள் 1 . 5 விழுக்காடு. துக்கடா மதங்கள் 12 விழுக்காடு என்றும் மக்கள் உள்ளனர். மதம் கிடையாது எனச் சொல்பவர்கள் 2001 கணக்கெடுப் பின்படி 15 விழுக்காட் டுக்கு மேல் உள்ளனர்.

ஆட்சித் தலைவராக இங்கிலாந்தின் ராணி உள்ளார். அவரின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் மைக்கேல் ஜெஃப்ரே என்பவர் 2003 முதல் உள்ளார்.


-------------நன்றி:-"விடுதலை" 26-5-2009

உலக நாடுகள் - தூரப்பார்வை - ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்


(உலக நாடுகள் மன்றத்தில் 192 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இவைபற்றி சுருக்கமாகச் சில செய்திகள். நாள்தோறும் அகர வரிசையில் இவை வெளிவரும்).

பொது ஆண்டு கணக்குக்கு (கி.பி.) முன் 400 ஆண்டுகளுக்கு முன், மகா அலக்சாண்டர் எனப்படும் கிரேக்க மன்னன் இந்தியாவுக்குள் நுழையும் வழியாகப் பயன்படுத்திய நாடு. கைபர், போலன் கணவாய்ப் பகுதிகள் இங்குதான் உள்ளன. இசுலாமிய மன்னர்களும் 7-ஆம் நூற்றாண்டு வாக்கில் இதன் வழியாக வந்தனர். 13-ஆம் நூற்றாண்டில் செங்கிஸ்கானும். 14-ஆம் நூற்றாண்டில் தாமர்லேனும் இந்தியாவுக்குள் நுழைந்ததும் இந்த நாட்டின் வழியாகத்தான்.

இங்கிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் சண்டைகள் நடந்த துண்டு. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த இங்கிலாந்தின் நாடு பிடிக்கும் ஆசை சண்டைகளை ஏற்படுத்தியது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, சண்டைதான். இந்நிலையில் 1893-இல் இந்திய - ஆப்கானிஸ்தானிய எல்லை வகுக்கப்பட்டது. டுரான்ட் கோடு (Durand Line) என இதற்குப் பெயர்.

1919-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, எமிர் அமா னுல்லாவின் தலைமையில் மன்னராட்சி ஏற்பட்டது. அவர், காலத்திற்கு ஏற்ப, பல சீர் திருத்தங்களைச் செய்ய முனைந்தார். இப்போது இருப்பதைப்போலவே அப்போதும் இசுலா மியப் பழமைவாதிகளால் எதிர்ப்புகள் ஏற்பட்டன. உள்நாட்டுப் போர்கள் மதவாதிகளால் ஏற்படுத் தப்பட்டன. ஒரே குழப் பம், கலவரம். மன்னர் நாட்டை விட்டு ஓடி னார் 1929-இல்.

1953-இல் முகம்மது தாவூத் எனும் போர்ப் படைத் தளபதி பிரதமரானார். அண்டை நாடான சோவியத் ஒன்றியத்திடம் ராணுவ உதவிகளைக் கேட்டுப் பெற்றார். இசுலாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும். கொடுமையான பர்தா முறையை ஒழித்துச் சட்டம் போட் டார். ஆனால் பத்தாண்டுகளுக்குள் அவரும் பதவி விலகும்படி நிலைமைகள் உருவாக்கப்பட்டன. 1964-இல் சட்டமன்றத் துடன் கூடிய முடியாட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட் டது.

1973-இல் தளபதி முகம்மது தாவூத் மீண்டும் நாட்டைக் கைப்பற்றினார். ராணுவப் புரட்சி யின் மூலம்! ஆப்கானிஸ்தானைக் குடியரசு நாடு எனப் பிரகடனப்படுத்தி ஆண்டார். ஆனால் 1978-இல் இடதுசாரிகள் எனக் கூறிக் கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி அவரைக் கொலை செய்து விட்டது. அதைத் தொடர்ந்து கல்க் பிரிவினரும் பர்ச்சம் பிரிவினரும் தங்களுக்குள் மோதிக் கொண்ட கலவரம் தோன்றியது. இதன் விளைவாக பர்ச் சம் இனத்தினர் கொன் றழிக்கப்பட்டனர்; நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர். அந்தச் சந்தர்ப் பத்தில் இசுலாமிய மத வெறியர்களும் இனக் குழுத் தலைவர்களும் சமூக மாறுதல்களை எதிர்த்து ஆயுதப் புரட்சி யில் ஈடுபட்டனர்.

இடதுசாரித் தலைவர்கள் எனப்படும் ஹபிசுல்லா அமீனுக்கும் நூர் முகமது தாராகிக்கும் மோதல். அமீன் வெற்றி பெற்றார். ஆனாலும் கலவரங்கள் ஓயாமல் போர்ப்படை கலகலத்து விட்டது. 1979 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் அமீனை அகற்றுவதற்காகத் தம் நாட்டுப் படைகளை ஆப்கானிஸ்தானத்திற்குள் நுழைத்தது. அமீனைப் பதவியிலிருந்து அகற்றி உயிரைப் பறித்தது. பர்ச்சம் பிரிவின் தலைவரான பப்ராக் கர்மல் என்பவரை ஆட்சிப் பீடத் தில் அமர்த்தியது. சோவியத் படைகளின் பலத்தில் இவர் நிருவாகம் செய்தார்.

இருந்தாலும் மதவாத அமைப்பான முஜாகிதீன்கள் வலுவுடன் விளங்கினார்கள். ஒரு லட்சம் சோவியத் துருப்புகள் நகர்ப்புறப் பகுதிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றால் ஊர்ப் புறங்களில் முஜாகிதீன்களில் செல்வாக்குதான். சோவியத்தின் போர்ப்படை பலம் அவர்களை ஒன்றும் செய்ய முடிய வில்லை. இந்நிலையில் அமெரிக்கா தன் மூக்கை நுழைத்தது. முஜாகிதீன்களுக்கு பணமும் நவீன போர்க் கருவிகளையும் வழங்கியது. அவர்களும் சோவியத் படைகளை எதிர்த்துப் போர் செய்தார்கள். இரு தரப்பிலும் அழிவு ஏற்பட்டாலும் பெருமளவில் இறந்தவர்களும் இழந்தவர்களும் ஆப்கன் மக்கள்தான்.

இதற்கு முடிவு கட்டும் வகையில் 1988-இல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்கா, சோவியத், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. அதன்படி சோவியத் படை முழுவதுமாகத் திரும்பிச் சென்றது மறு ஆண்டில்.

ஆனாலும் 1992 ஏப்ரலில், பாழ் செய்யும் உட்குழுக்கள் கலவரம் செய்து காபூல் நகரைத் தாக்கி சோவியத் ஆதரவாளரான அதிபர் முகம்மது நஜிபுல்லாவைப் பதவியிலிருந்து அகற்றினர். மறுஆண்டில் எல்லா இனக் குழுக்களும் ஒன் றிணைந்து பர்ஹனுடின் ரப்பானி என்பாரை அதிபராக்கினர். ஆனாலும் ஆங்காங்கே கலவரங்கள் தோன்றி நடந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் ரப்பானி அரசுக்கு வலுவான எதிர்ப்புச் சக்தியாக தாலிபான்கள் உருவாகினர். அதன் மதவெறித் தலைவனின் பெயர் முல்லா முகம்மது உமர். பழைய முஜாகிதீன் படையில் தளபதியாக இருந்தவன்.

1996-இல் தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றினார்கள். இசுலாமிய மதச் சட்டங்களை அப்படியே அமலாக்கினார்கள். வீட்டை விட்டு வெளியே எங்கும் பெண்கள் வேலை செய்யக் கூடாது. இசுலாமியக் குற்றவியல் சட்டமான பல்லை உடை, கண்ணைத் தோண்டு, கையை வெட்டு என்பனவற்றைப் புகுத்தினார்கள். உலக நாடுகள் மன்றக் கட்டடத்தில் இருந்த முன்னாள் அதிபர் நஜிபுல்லாவை யும் அவரின் தம்பியை யும் வெளியே இழுத்துப் போட்டுக் கொலை செய்தனர் தலிபான்கள். வடக்கே ஒரு மாகாணம் தவிர, ஏனைய ஆப்கானிஸ் தானின் பகுதிகள் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாக 1997-இல் அங்கீகரித்தனர்.
ஆனால் வேறு பல நாடுகள் ரப்பானியின் தலைமையை ஆதரித்தன. ஒசாமா பின்லேடன் எனும் அல்கொய்தா தீவிரவாதி ஆப்கன் நாட்டில் அடைக்கலம் புகுந்திருப்பதாக அமெரிக்கா கூறி அவனை ஒப்படைக்குமாறு கோரியது. 1999-இல் உலக நாடுகள் மன்றம் பொருளாதாரத் தடைகளை இந்நாட்டின் மீது விதித்தது. 2001-இல் அவை மிகவும் கடுமையாக்கப் பட்டன.

எனினும் தாலிபான்களின் மதவெறிச் செயல்கள் கூடிக் கொண்டே போயின. பாமியான் பகுதியில் இருந்த சிறந்த வரலாற்றுச் சின்னமான புத்தர் சிலைகளைச் சிதைத்தது. இசுலாமியர் அல்லாதவர்கள் அனைவரும் தாங்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதற்கு அடையாள அட்டையைத் தம் கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற ஆணையிடுமள வுக்கு மதவெறியுடன் நடந்து கொண்டனர். எல்லா மதப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் என்றனர். தாலிபான்களை எதிர்த்தவர்களின் தலைவரான அகமது ஷா மசூத் செய்தி யாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் இரட்டைக் கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா, இங் கிலாந்து நாடுகள் வான் வழித் தாக்குதலையும் தரை வழித் தாக்குதலையும் மேற்கொண்டதில் தாலிபான்கள் 2001 கடைசியில் ஓடி ஒழிந் தனர். ஆனாலும் தாலிபான்களின் தலைவரோ அல்கொய்தாவின் தலைவரோ அகப்படவில்லை.

இந்நாட்டின் பல் வேறு குழுக்களும் 5.12.2001-இல் ஜெர்மன் நாட்டின் தலைநகர் பான் நகரில் கூடிப் பேசி இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். 22-12.2001-இல் ஹமித் கர்சாய் எனும் பஷ்டுன் இனத்தைச் சேர்ந்தவர் 30 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால அரசின் தலைவராக அமர்த்தப்பட்டார்.

ஆப்கன் மன்னர் ஜாகிர் ஷா நாட்டுக்குத் திரும்பி வந்தார். ஆனாலும் தாம் அரசுரிமை கோரப் போவதில்லை என உறுதி அளித்தார். அனைத்து நாட்டு அமைதி காக்கும் படை வந்து சேர்ந்தது. எனினும் மீண்டும் கலவரங்கள் வெடித்தன. நாட்டோ அமைப்பு அய்ரோப்பாவுக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் முதன்முறையாகத் தன்னை ஈடுபடுத்தி காபூல் நகரப் பாதுகாப்பை மேற் கொண்டது.

2004-இல் மக்களவை புதிய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்து ஏற்றுக் கொண்டது. 9.10.2004-இல் ஹமித் கர்சாய் அதிபராகப் பதவி ஏற்றார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் குடியரசுத் தலைவரான இவர், ஆப்கன் அரச வமிசத்தைச் சேர்ந்தவர் தேசிய சட்ட சபை 19-12-2005-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. 6 லட்சத்து 47 ஆயிரத்து 500 சதுர கி.மீ பரப்புள்ள இந்நாட்டில் 3 கோடியே 10 லட்சத்து 56 ஆயிரத்து 997 (2006-இல்) மக்கள் வசிக்கின்றனர். சன்னி முசுலிம்கள் 80 விழுக்காடும் ஷியா முசுலிம்கள் 19 விழுக்காடும் உள்ளனர். பஷ்டு மொழி பேசுவோர் 35 விழுக்காடும், தரி எனப் படும் பாரசீக மொழி பேசுவோர் 50 விழுக் காடும், டர்கிக் மொழிக் காரர் 11 விழுக்காடும் உள்ளனர். மீதி மக்கள் சுமார் 30 மொழிகளைப் பேசுவோர்.

ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இனக் குழுக்களின் அடிப்படையில் மோதிக் கொள்கின்றனர். இங்கு மதம் எங்கே மக்களை ஒழுங்கிணைக்கிறது? ஒழுக்கத்தை வளர்க்கிறது? தற்காலக் கண்டுபிடிப்புகளான போர்க் கருவிகளை வைத்து சண்டையிடும் தாலிபான்கள் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய மதக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் திணிப்பது எப்படி ஞாயம்? சண்டைக் குணம் கொண்ட இந்நாட்டு மக்கள் ஏ.கே. 47, ஏ.கே. 50 போன்ற பலவித நவீன ரகத் துப்பாக்கிகளையும் தாங்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள் - எந்திரங்கள் இல்லாமலே!

மதவெறி மட்டும் இல்லாமல் இருக்குமானால்...----------------நன்றி:-"விடுதலை" 25-5-2009