Search This Blog
25.5.09
திராவிடர்கழகமும்-கம்யூனிஸ்ட் கட்சியும்
கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கும், திராவிடர் கழகக் கொள்கைகளுக்கும் அதிகமான பேதம் கிடையாது. அதாவது, இன்றைய தினம் ஒரு தற்குறியை அழைத்து அவனிடம் கட்சிகளைப்பற்றிக் கேட்டால், அவன்,‘கம்யூனிஸ்ட் கட்சி என்றால் பணக்காரர்களை ஒழிப்பது; நாட்டைத் தொழிலாளிகள் ஆதிக்கத்தில் ஆக்குவது’ என்றும்; ‘திராவிடர் கழகம் என்றால் பார்ப்பனீயத்தையும், பணக்காரனை - ஏழையை - பார்ப்பானை - பறையனை உண்டாக்கிய சாமியையும் ஒழிப்பதும், கோவில்களிலே அடைபட்டுக் கிடக்கும் குழவிக் கற்களை உடைத்து எறிந்து அதன் சொத்துக்களைக் கல்விக்கும், தொழிலுக்கும் ஆஸ்பத்திரிக்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் கூறுவது’ என்று தான் கூறுவான்.
அப்படியே தான் இன்றையதினம் பொதுமக்களும்கூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில் முதற்படியில் நிற்கிறது. திராவிடர் கழகம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறது. என்றாலும், பணக்காரர்களை ஒழிப்பதில் திராவிடர் கழகத்திற்குக் கவலை இல்லை என்று சொல்ல முடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால், பார்ப்பனீயத்தை, மூடநம் பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று திராவிடர் கழகம் கருதுகின்றது.
பணக்காரத்தன்மைக்கு பார்ப்பனீயமும், மேல் சாதி - கீழ் சாதித்தன்மையும், கடவுள் தன்மையும்தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். சாக்கடையையும், கொசுக்களையும் ஒழித்தால்தான் அழுக்குத் தண்ணீரையும், மலேரியாக் காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால்தான், திராவிடர் கழகம், ‘பணக்காரத் தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை’ என்று கருதி, இதைச் செய்கின்றது.
பணக்காரத் தன்மைக்கு எளிதில் எதிர்ப்புக் கிடைக்கும்; பார்ப்பனீயத்திற்கு எதிர்ப்புக் கிடையாது. இந்த நாட்டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால், முதலில் சுலபமானதைச் செய்து கொண்டு பிறகு கஷ்டமானதைச் செய்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். ஆகையால், நாம் இந்த கம்யூனிசத்தை ஏற்பதில் தவறு இல்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம் அங்கு சென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் செய்து நிற்கும்.
-------------------தந்தைபெரியார் - ‘விடுதலை’ - 04-10-1951
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment