Search This Blog

8.5.09

பார்ப்பனப் பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த பெரியார்


கொடுமையான காரியம்


(கேரள நாட்டில் நம்பூதிரிகளிடையே நிலவி வந்த ஆசாரங்களை - குறிப்பாகத் திருமண கொள்கை விஷயத்தில் நம் பூதிரி இளைஞர்களின் எதிர்ப்பையும், போராட்டத்தையும் தந்தை பெரியார் அளவு கடந்து பாராட்டி மகிழ்வதைக் "குடிஅரசு" தலையங்கத்தின் ஒரு பகுதி (26.10.1930) இங்கும் எடுத்துக்காட்டப்படுகிறது. பெண்ணுரிமைக்குப் பாடுபடுவோர் எவ்வினத்தவாரயினும் தந்தை பெரியார் தயக்கமின்றி பாராட்டுவார் என்பதற்கு இவ்வரலாற்றுக் குறிப்பு சிறந்த எடுத்துக்காட்டல்லவா?)


மலையாள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தங்கள் வகுப்புகளில் ஆண்கள் குடும்பத்தில் மூத்தவர் யாரோ அவர் மாத்திரமே தங்கள் ஜாதியில் அதாவது நம்பூதிரி ஜாதியிலேயே ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது என்றும் மற்ற ஆண்கள் வேறு ஜாதியில் அதாவது நாயர் ஜாதியில் உள்ள பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்தப்படி வைத்துக் கொள்வதிலும் நாயர் பெண்கள் வயிற்றிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு அக்குழந்தைகளைக் கொடுத்த நம்பூதிரியின் சொத்தில் பங்கு இல்லை என்றும் ஒரு கொள்கை இன்றும் இருந்து வருவதுடன் இதை நாயர் பெண்களும் ஆண்களும் ஒரு பெருமையாகவும் கருதி வருகிறார்கள். இதனால் நம்பூதிரி வகுப்புப் பெண்கள் அநேகர் 40, 50 வருஷம் வரையில்கூட கல்யாணமில்லாமல் பேருக்கு மாத்திரம் சாகும்போது ஒரு நம்பூதிரிப் பார்ப்பனக் கிழவனால் தாலி கட்டச் செய்து விடுவதும், மற்றும் இதற்காகவே ஒரு கிழவனுக்கு 6,7 மனைவிகளைக் கட்டுவதும், வழக்கமாயிருந்து வருகின்றது. இந்தக் கொடுமையை உணர்ந்த நம்பூதிரி வாலிபர்கள் தங்கள் சமூகத்தின் காட்டுமிராண்டித்தனமான இக்கொள்கைகளை அழிக்கத் தோன்றி இப்போது எவ்வளவோ தாராள விட்டார்கள். இவைகளில் ஒன்றாகத்தான் நம் பூதரிப் பார்ப்பனர்கள் பூணூல் அணிவது முட்டாள்த் தனமென்றும் அவற்றை கழற்றி நெருப்பில் கொளுத்தியும் விட்டார்.

பலர் தலையில் உள்ள முன்குடுமிகளை எல்லாம் சிறைத்துவிட்டு கிராப் செய்து கொண்டார்கள். இப்போது தம்பியாய் இருக்கின்றவர்களும் கல்யாணமும் செய்து கொண்டார்கள். இந்தக் கல்யாணக் கொள்கை விஷயத்தில் நாம் முக்கியமாய் மகிழ்ச்சியடையும் விஷயம் ஒன்றேயாகும். அதாவது நம் பூதிரிப் பெண்கள் 40 50 வருஷம் வரை பலர் பருஷனில்லாமல் இருக்கும் கொடுமைகள் ஒருவாறு ஒழியும் என்பதேயாகும். நம்பூதிரி ஆண்கள் கல்யாணமில்லாமல் இருக்கவேண்டும் என்றும் பெண் ஆசை இருந்தால் நாயர் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் என்றும் செய்து கொண்ட கட்டுப்பாடுகளைப் போலவே நம்பூதிரிப் பெண்களிலும் கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள் வேறு ஏதாவது ஒரு வகுப்பு ஆண்களை சம்மந்தக்காரரனாக, நாயகனாக வைத்துக் கொள்ளலாம் என்பதாக ஒரு திட்டம் செய்து கொண்டிருப்பார்களானால் அந்த வகுப்புப் பெண்களுக்குக் கஷ்டமே இருந்திருக்காது. அப்படிக்கில்லாமல் தங்கள் வகுப்புப் பெண்களை வீட்டில் கல்யாணமில்லாமல் அடைத்து வைத்துவிட்டு வேறு வகுப்புப் பெண்களை வைப்பாட்டிகளாக அனுபவித்துக் கொண்டு இருப்பதானதும் மிகவும் கொடுமையான காரியம் என்றே சொல்ல வேண்டும்.

இந்தக் கொடுமையை ஒழிக்க நம்பூதிரி வாலிபர்கள் முயற்சித்தால் அதற்கு இடையூறா நாயர் கனவான் பிரவேசித்து அந்த வாலிபரை பகிஷ்காரம் செய்வது என்பது மிகவும் மானக்கேடான காரியமாகும். சுயமரியாதை அற்ற ஜாதியைச் சேர்ந்த பெண்கள் என்று அந்த ஜாதியைப்பற்றி நம்பூதிரி வாலிப சங்கத்தார் வெளியிட்ட சுற்றுஅறிக்கையில் குறிப்பிட்டது. மிகவும் பொறுத்தமானது என்றே சொல்லுவோம்.

ஆகவே பழமையின் பேரால் பெண்களை வெகு காலமாகக் கொடுமைப்படுத்தி வந்த காரியங்கள் இப்போது திடீர் திடீரென்று அழியும்படியாக ஆங்காங்கு முயற்சிகள் அதுவும் காரியத்தில் நடைபெறுவதை இந்த இரண்டொரு வருஷங்களாகத்தான் பார்க்க முடிகின்றன. இவற்றிற்கு ஏற்படும் எதிர்ப்புகளை மக்கள் எவ்வளவு கேவலமாகவும், அலட்சியமாகவும் கருதக் காலம் வந்துவிட்டது என்பதை நினைக்கும்போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியவில்லை.

------------ தகவல்: மு.நீ.சிவராசன் -"உண்மை" மே 01-15_2009

2 comments:

த மி ழ் இ னி யா said...

பெண்ணுரிமைப் போராளி பெரியார் என்று அழைக்கப்படுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிறப்பான பதிவு.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி