Search This Blog
30.5.09
எதிர்காலத் தமிழீழம் எப்படி அமையும்? - சுப.வீ .
பிறந்த இடத்திற்கே வந்துவிட்டேன்!
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நெகிழ்ச்சி
சென்னை போன்ற பெருநகரங்களில் மாலை நேரக்கூட்டங்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு மக்கள் அரங்கத்திற்கு வருவது கிடையாது. கேட்கிற ஆர்வமும், பொது வாழ்க்கையில் இருக்கும் ஆர்வமும் குறைவு என்பதும், பரபரப்பான வாழ்க்கைக்கு இடையில் இதற்கெல்லாம் நேரத்தை ஒதுக்குவதை தவிர்க்கிறார்கள் என்பதும் ஒருபுறமிருந்தாலும் விதிவிலக்காக குறிப் பிட்ட ஒரு சிலர் பேசுகிறார்கள் எனில் அதற்கு பெருத்த கூட்டம் அரங்கம் நிரம்பி வழிவதையும் காண முடிகிறது.
அப்படி அவனைவரையும் ஈர்க்கும் வகையில், குறிப்பாக இளைஞர்களை பெரிதும் ஈர்க்கிற வகையில் பேசக் கூடிய, நாடறிந்த சொற்பொழிவாளராக அறியப்படுபவர் சுப.வீ என அன்போடு அழைக்கப்படுகிற மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான இவர், சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவர். பல்வேறு தளங்களில் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடி வருபவர். எழுத்தாளராக, பேச்சாளராக, தமிழ் தேசிய போராளியாக, தற்போது கருஞ்சட்டைத் தமிழர் எனும் இதழாசிரியராக என பல்வேறு அடையாளங்களை தமிழுலகில் நன்கு பதித்தவர். நம் விடுதலை வாசகர்களுக்காக, விருந்தினர் பக்கத்திற்காக சந்தித்து உரையாடியதிலிருந்து........
விடுதலை :
அய்யா, வணக்கம். தாங்கள் சிறப்பு மிகுந்த ஒரு சுயமரியாதைக் குடும்பத்திலிருந்து வந்தவர். எனவே தாங்கள் பகுத்தறிவுப் பாதையில் நடப்பதற்கு குடும்ப சூழல்தான் காரணமா? இல்லை வேறு ஏதும் காரணமாக அமைந்ததா?
சுப.வீ :
குடும்பச் சூழல் தான் காரணம். குறிப்பாக அப்பா 1930 லிருந்தே அய்யா பெரியார் அவர்களுடனும், சுயமரியாதை இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டவர். நான் பிறக்கும் போதே அப்பா திமுகவில் இருந்தார். 1949-இல் திமுக தொடங்கும் போதே இருந்தவர். அதனால் வீட்டுக்கு திராவிட இயக்க இதழ்கள் நிறைய வரும். குறிப்பாக அதில் விடுதலையும் இருக்கும். நான் 5 வயது சிறுவனாக இருக்கும் போது அப்பா தேர்தலில் 1957-இல் போட்டியிட்டார்கள். எனவே அரசியல் சூழல் என்பது வீட்டில் முழுமையாக இருந் தது. அதுவும் திராவிடர் இயக்கம் சார்ந்த அரசியல். எனவே நான் எனது சுயசிந்தனையினாலோ அல்லது படித்து அறிந்து கொண்டேன் என்று சொல்ல முடியாது. அப்பாவின் வழியில் நான் திராவிட இயக்கத்திற்கு வந்தேன். வந்தததற்குப் பிறகு படித்தேன். படித்ததற்குப் பிறகு அதில் அழுத்தமாக ஊன்றி நிற்க வேண்டும் என கருதினேன். ஆனால் தொடக்கம் அப்பாவிடத்திலிருந்து தான்.
விடுதலை :
தங்களுடைய மாணவப் பருவகாலத்தில் தங்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
சுப.வீ:
மிகவும் சராசரி மாணவனாகவே நான் இருந்தேன். பொது அறிவிலும் சராசரி மாணவனாக வாங்குகிற மதிப்பெண்ணிலும் சராசரி மாணவனாகத் தான் இருந்தேன். பட்ட வகுப்பில் கூட மூன்றாண்டு தாண்டிப் பிழைத்து வந்தேன் என்கிற நிலைதான். நன்றாக படிக்கிற மாணவனாக இருந்தது முதுகைலயில் மட்டும்தான். குறிப்பாக சின்ன வயதிலிருந்து கடுமையான எம்ஜிஆர் ரசிகன். எம்ஜிஆர் படங்களைப் பார்க்கத் தவறியதில்லை. ஒரே ஒரு வேறுபாடு எனக்கு சின்ன வயதில் அய்யா பெரியாரின் நூல்கள் அல்லது பெரியாரைப் பற்றிய செய்திகள் நிறையக் கிடைத்தன. அப்பா மட்டுமில்லாமல், எங்க அம்மாவும் பெரியார் பற்றி நிறைய சொல்வார்கள். அடிக்கடி சொல்வார்கள். இவ்வளவுக்கும் எங்க அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில் சுயமரியாதை இயக்க ஈடுபாடு, பெரியரைப் பற்றிய செய்திகள் நிறைய சொல்வார்கள்.
எனவே எனக்கு அப்போது கடவுள் இல்லை என வாதிடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் சமூகநீதி, பெண்விடுதலை பற்றியெல்லாம் பின்னால்தான் அறிந்து கொண்டேன். பெரியாரைப் போல கடுமையான ஒரு நாஸ்திகனாக இருக்க வேண்டும் என்ற ஆசை. எம்ஜிஆரைப் போல ஒரு சண்டை போடுகிற வீரனாக வர வேண்டுமென விருப்பம். திமுக கழகத்தின் மீது ஒரு பற்றுதல். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறுகிறது. எனக்கு அப்போது 7 அல்லது 8 வயது இருக்கும். வீட்டில் ஒரே கொண்டாட்டம் . சித்தாந்தத் தெளிவில் ஏற்பட்ட மகிழ்ச்சி என்று சொல்லிட முடியாது.
1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கிற போது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற ஒரு மாணவன். அன்றைக்கு இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த ஏராளமான கால்களில் என் கால்களும் இருந்தன.
எல்லா திமுக மாநாடுகளுக்கும் என்னை அப்பா கூட்டிக்கொண்டு போவார். கரைக்குடியில் நடந்த எல்லாக் கட்சிக் கூட்டத்தையும் நான் கேட்பேன். அய்யாவின் பேச்சை தொலைவில் நின்று கேட்டிருக்கிறேன்.
அண்ணா, கலைஞர், நாவலர், சம்பத் இவர்களின் பேச்சில் மிகவும் கவரப்பட்டிருக்கிறேன். 65-இல் மாணவத் தலைவர்கள் சிலர் பேச்சினைக் கேட்டேன். குறிப்பாக காளிமுத்து, பெ.சீனிவாசன், போன்றவர்கள் பேச்செல்லாம் கேட்கிறபோது நாமும் மேடை ஏறி பேசலாம் என்கிற நம்பிக்கை வந்தது. ஏனெனில் என்னை விட இரண்டு மூன்றாண்டுகள் மூத்தவர்கள் என்பதால் நாமும் பேசலாம் என்கிற ஆர்வம் வந்தது. இதுதான் என் தொடக்கநிலை அரசியல். சித்தாந்த அரசியல் ஆழமாக அப்போது இல்லை. ஆனால் கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்தேன். நான் பிறந்ததிலிருந்தே கடவுள் நம்பிக்கை முற்றிலுமாகக் கிடையாது. இன்றைக்கு வரை; மேலும் மேலும் அதுவலுப் பெற்றிருக்கிறதே தவிர மாறவில்லை.
விடுதலை :
தாங்கள் தொடக்க காலங்களில் தமிழ் தேசியத்தின் உயர்வுக்கும், உணர்வுக்கும் பணி யாற்றிவர். அதைப்பற்றி?
சுப.வீ.:
தமிழ்தேசியம் என்கிற அரசியல் சொல்லாடல் எல்லாம் 80களின் இறுதியில் தான் என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்குத் தெரிந்ததெல்லாம் பெரியாரும், திமுகவும் சொன்ன திராவிட நாடு திராவிடர்க்கே. தமிழ்நாடு தமிழருக்கே என்பது மட்டும் தான். குறிப்பாக 82 லிருந்து 84 வரைக்கும் கும்பகோணத்தில் திருப்பனந்தாள் கல்லூரியில் வேலை பார்த்த போது பொது நிகழ்ச்சிகளில் மெல்ல மெல்ல கலந்து கொண்டேன். கவிஞர் இன்குலாப் உடன் பழகிய போது மார்க்சியத்தில் ஓர் ஈடுபாடு வந்தது. 1987 ஆம் ஆண்டு குறிப்பாக பல மாற்றங்களை என்னுள் கொண்டு வந்தது. என் அம்மா இறந்த போனதும், அதற்குப் பிறகு திலீபனின் மரணத்தையொட்டி நான் புலிகளின் ஆதரவாளனாக மாறியதும் 87-இல் தான். 83-இல் இருந்தே ஈழத்தை ஆதரித்தாலும் பொத்தாம் பொதுவில் எல்லா இயக்கங்களையும் ஆதரித்தேன். திலீபனின் மரணம்தான் என்னை புலிகளின் ஆதரவாளனாக ஆக்கியது. 1987-இல் தான் அமைப்பில் இணைந்து அந்த அமைப்பிற்கு அமைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது அந்த அமைப்பின் பெயர். பெரிய வியப்பு என்னவெனில் அவ்வமைப்பில் பெருஞ்சித்திரனார், சாலையார், கவிஞர் மேத்தா, ஞாநி, இன்குலாப், அருள்மொழி குகநாதன் இப்படி இத்தனைப்பேர் இருந்த அமைப்புக்கு நான் அமைப்பாளரானது ஒரு விபத்து. எல்லோரும் பெரியவர்களாக இருந்ததால் யரைத் தேர்ந்தெடுக்கலாம் என குழப்பம் வந்து புதிதாக வந்த என்னை தேர்வு செய்தார்கள். அதுதான் என் அரசியலின் முதல் நுழைவு அப்போதும் நான் ஆசிரியராகத்தான் இருக்கிறேன்.
பின்னர் மணியரசன், தியாகு போன்றவர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளால் தமிழ்தேசியம்நோக்கி செல்ல ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல திராவிடத் தேசியத்தை விட தமிழ் தேசியம் தான் சரி என்கிற உணர்வை ஏற்படுத்தினார்கள். தமிழ்த் தேசியத்திற்கு தடையாக இருப்பதில் திராவிட தேசியமும் ஒரு காரணம் என்கிற கருத்தை என்னுள் விதைத்தார்கள். நானும் உண்மை என் நம்பினேன். பெரியாரைத் தவிர மற்ற திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரையும் விமர்சித்தேன். அதில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான தலைவர்களில் கலைஞரும், ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் கூட அடங்கு வார்கள். இனி என்னும் இதழை நடத்திய அனுபவத்தில் நந்தன் இதழுக்கும் ஆசிரியவரானேன். 1990 ஆம் ஆண்டு விடுதலைக்குயில்கள், 94 ஆம் ஆண்டு தமிழ்தமிழர் இயக்கம், தமிழ்ச் சான்றோர் பேரவை, 2002 முதல் 2006 வரை நெடுமாறன் அவர்களின் தலைமையில் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றினேன்.
விடுதலை :
மீண்டும் நீங்கள் திராவிடர் இயக்கத்திற்கு வந்தது குறித்து?
சுப.வீ :
நான் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அதாவது திராவிடர் இயக்கத்துக்கே கொண்டு வந்து சேர்த்தது என்றால் அது ஓர் எதிர்மறையான நிகழ்ச்சி. 1995 ஆம் ஆண்டு பெங்களூரிலிருந்து குணா எழுதிய திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிற புத்தகம்தான் என்னை விழிக்க வைத்தது. அவர் செய்த ஒரு நல்ல காரியம் பெரியாரைக் கடுமையாகச் சாடியது தான். அப்போது தான் நான் விழித்தேன். திராவிட இயக்கம் அதுவும் தமிழின் பெயராலேயே சிதைக்கப்படுகிறது என்று உணர்ந்தேன்.
ஆனாலும் முழுமையாகத் தெளிவு பெறுவதற்கு மேலும் பத்தாண்டுகள் ஆயிற்று. 1987 க்குப் பிறகு 2005 ஆண்டு மீண்டும் ஒரு திருப்பத்தை என் அரசியல் வாழ்வு கண்டது. பெரியாரின் இடது சாரித் தமிழ்த்தேசியம் என்னும் நூல் திராவிட இயக்கம் என்பதே சரியானது என்கிற என் கருத்தை வெளிப்படுத்தியது.
அதற்குப் பெரும் வரவேற்பும் பலத்த எதிர்ப்பும் கிடைத்தது. பிறகு 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அதையொட்டி எழுந்த விவாதங்களின் அடிப்படையில் நான் தமிழர் தேசிய இயக்கத்தைவிட்டு வெளியேறினேன். ஏறத்தாழ 15 ஆண்டுகள் நான் யாரைக் கடுமையாக மேடைகளில் சாடிக் கொண்டிருந்தேனோ அந்தத் தலைவர் கலைஞரை 2006 ஏப்ரல் 17 ஆம் நாள் காலையில் நண்பர் நக்கீரன் கோபால் அவர்களின் உதவியோடு சந்தித்தேன். என் வாழ்க்கை மறுபடியும் ஒரு முறை புரண்டு படுத்தது. பிறகு 2007 ஆம் ஆண்டு ஜனவரில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை என்னும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். பெரியாரின் கொள்கைகளை பரப்புவதும், ஈழத்தமிழர்களின் உரிமைகளை உரத்து ஒலிப்பதுமா அமைப்பின் பணிகள் தொடர்ந்தன. தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
விடுதலை :
தமிழர் என்பவர் யார்? தமிழருக்கான வரையறை என்ன? தமிழ் பேசுகிற அனைவரும் தமிழரா?
சுப.வீ :
தமிழர் என்பதற்கும், தமிழ்த் தேசிய இனம் என்பதற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. தமிழை தாய் மொழியாகவும், சமூக மொழியாகவும் இம்மண்ணிலேயே தம் மண உறவுகளை அமைத்துக் கொண்டு வரலாறு, உடலியல் போக்குகளிலும் தமிழர்களின் பாரம்பரியத்தில் ஊன்றி நிற்பவர்கள் தமிழர்கள். 400, 500 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு குடியேறி இன்றைக்கும் அவர்களின் தாய்மொழி வேறாக இருந்தாலும் சமூகப் பொது மொழியாக, தமிழை ஏற்றுக்கொண்டு தமிழர்களோடு இரண்டறக் கலந்து விட்டவர்களையும் சேர்த்தே நாம் தமிழ் தேசிய இனம் என்று கூறுகிறோம். அந்த வரிசையில் பார்ப்பனர்களும் தங்களை நம் இனத்தோடு இரண்டறக் கலந்து கொண்டால் தமிழ்தேசிய இனத்தின் ஒரு பகுதியாக ஆக முடியுமே தவிர தமிழர்களாக ஆக முடியாது.
விடுதலை :
இன்றைய சூழலில் பெரியாரின் கொள்கைகள் எந்தளவுக்குத் தேவைப்படுகின்றன?
சுப.வீ :
முன்பு எப்போதைக் காட்டிலும் பெரியாரின் கருத்துகள் இப்போது தான் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. பெரியார் என்றால் கடவுள் மறுப்பும், பார்ப்பன எதிப்பும்தான் வெகுமக்கள் நினைக்கிறார்கள். பெரியாரின் சித்தாந்தத்திலிருந்து பிரிக்கப் பட முடியாதைவையே என்றாலும் பெரியாரின் சிந்தனை, உழைப்பு, செயல் ஆகியவை தங்கியிருப்பதன் ஆழம் என நான் கருதுவது ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை இரண்டும் தான். சுருக்கமாக சமத்துவம் தான் அவருடைய நோக்கம். சமத்துவத்துடன் மக்கள் சுயமரியாதையுள்ள பகுத்தறிவாளர்களாக ஆகவேண்டும் என்பதுதான். அதைத்தான் மானமும் அறிவும் என்று இரண்டு சொற்களில் அடைக்கிறோம். இவை இன்றைக்கும் தேவை; என்றைக்கும் தேவை.
விடுதலை :
கடைசியாக, ஒரு கேள்வி மிகவும் வருந்ததக்க செய்தியான ஈழத்தமிழர்களின் அண்மைக்கால அவலம் குறித்து? எதிர்காலத் தமிழீழம் எப்படி அமையும்?
சுப.வீ :
கற்பனையில் கூட நாம் எண்ணிப்பார்க்காத துயரம் இன்றைக்கு ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் கசப்பாக எப்போது இருந்தாலும் போர் என்பது ஒரு நேர்கோட்டில் செல்வது இல்லை எனும் உண்மையை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். உலகின் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் முன்னேற்றம், பின்னடைவுகள் இருந்திருக்கின்றன. களங்களை இழக்கும்போது போரையே இழந்துவிட்டதாக கருத வேண்டியதில்லை. தற்போது மறுபடியும் ஒரு முறை களத்தை இழந்திருக்கிறோம். அதே நேரத்தில் விடுதலைப் போராட்டம் மக்கள் நெஞ்சில் எரிகிற நெருப்பு. இன்றைக்கு புலிகள் இயக்கம் அங்கு பலவீனப்பட்டிருக்கலாம். ஆனால் விடுதலைக்கான காரணங்கள் மேலும் வலிமைபெற்றே இருக்கின்றன. நியாயம் சரியாக இருக்கும் வரையில் போராட்டத்தீ ஒரு நாளும் அணைந்து விடாது. பிரபாகரன்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள்.
இவ்வாறு நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தயங்காமல் வெளிப் படையாக பல செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் சுப.வீ அவர்களுக்கு நன்றி கூறி விடை பெற்றோம்.
---------------சந்திப்பு : நம்பியூர் சென்னியப்பன்.- நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 30-5-2009
Labels:
நேர்காணல்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சுப.வீரபாண்டியன் பேட்டி நன்று. தெளிவான கருத்துக்களை, வாதங்களை வைத்துள்ளார். அவரின் அனுபவம் மற்றவர்களுக்கு குறிப்ப்பாக குழம்பிப்போனவர்களுக்கு நல்ல பாடம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
iyoo.iyoo. ivar thann sonnavar eela pooratathil karunithiyai ehtirpavarkal thurooikal endu. nakkran moolam vilai pooivitta athutha thurooki
Post a Comment