Search This Blog

20.5.09

சீனாவின் உதவிதான் இலங்கைக்குப் பெரும்பலம் இதன்மூலம் ஏற்படும் அச்சுறுத்தலை இந்தியா ஏன் உணரவில்லை?


சீனாவின் உதவிதான் இலங்கைக்குப் பெரும்பலம்
இதன்மூலம் ஏற்படும் அச்சுறுத்தலை இந்தியா ஏன் உணரவில்லை?
பகத்சிங்கைத் தூக்கிலிட்டதால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்காமல் போனதா?
தமிழர் தலைவர் எழுப்பும் வினா


இலங்கை அரசு சீனாவின் துணை கொண்டு செயல்படுகிறது என்றும், இது இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தானது என்றும், இந்தியப் பேரரசு உணரவேண்டும் என்றும் குறிப்பிடுவதோடு, ஒரு பகத்சிங்கைத் தூக்கிலிட்டதால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்காமல் போகவில்லை என்ற வரலாற்று உண்மையையும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். அறிக்கை வருமாறு:

லண்டனிலிருந்து வெளி வரும் பிரபல நாளேடான தி டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் -
விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாகக் கூறிக் கொண்டு, சிங்களப் படையினர் தமிழ் இன மக்களை முற்றிலுமாக அழித்து வரும் கொடுமையில் முக்கிய பங்கு சீனா வழங்கிய ஆயுதங் களே என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கைக்குச் சீனாவின் பெரு உதவிகள்


உலகின் ஒட்டு மொத்த ஆயுத விற்பனையில் சீனா 48 சதவிகிதத்தையும், பிரித்தானியா 8 சதவிகிதத்தையும், அமெரிக்கா 40 சதவிகிதத்தையும் பெற்றுள்ளன என்றும், இலங்கையின் சிறிய மீன்பிடி கிராமத்தை சீனாவின் நிறுவனங்கள் மிகப் பெரிய துறைமுகமாக வளர்ச்சி பெறச் செய்து வருவதுடன்,

அம்பாந்தோட்டை - (ஒரு பில்லியன்) 100 கோடி டாலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தத் துறைமுகம் சீனாவின் கடற்படை கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் மய்யங்களாக தொழில் செய்ய ஏதுவாகலாம் என்ற செய்தி, நமது நாட்டிற்கு மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.

சீனப் படைத்துறையில் உள்ள அதிகாரிகள் திட்டமிடலில் தொலைநோக்குப் பார்வையுடையவர்கள். தைவானுடன் மோதல் ஏற்படும் சமயத்தில் அது சீனாவின் கடற்பாதைகளில் தடை ஏற்படுத்தினால் அதற்கு மாற்றுப் பாதை வழியை - இலங்கை மூலம் சீனா திட்டமிடுகிறது என்பதை, இந்திய வெளி உறவுத்துறை, மத்திய அரசு தொலைநோக்கோடு பார்த்து, இதனால் இந்திய இறையாண்மைக்கு அடுத்த பெரும் சவால் - இலங்கை சிங்கள அரசு - சீனத்தின் அரசு ஆகிய கூட்டணி - அதோடு பாகிஸ்தானும் சேர்ந்து விடும் அபாயமும் உண்டு; இலங்கைக்கு இப்போது இந்த இரு நாடுகளும் தான் அதிகமான இராணுவ உதவி, ஆயுத வழங்குதலை செய்து வரும் நாடுகளாகும்.

பாகிஸ்தானில் ஹெடார் துறைமுகத்தையும், சீனா நிர்மானித்து வந்துள்ளது என்றும் இதே டைம்ஸ் நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் சீனாவின் ஆயுதங்களே!

அந்நாளேடு மட்டுமல்ல; த சண்டே இந்தியன் வார ஏட்டில் (18.5.2009 முதல் 31.5.2009 நாளிட்ட) வெளிவந்துள்ள வாயிலில் நிற்கும் எதிரி என்ற தலைப்பில் பதிக்ரித்பைனே என்ப வர் எழுதியுள்ள பல்வேறு தகவல் களஞ்சியமாக உள்ள அந்த ஆய்வுக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தி இதோ:

இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களில் பெரும்பாலானவை சீனஆயுதங்கள் டி-58 ரைஃபிள்கள் , நடுத்தர மற்றும் கனரக இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள் அனைத்தும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், ஆறுக்கும் மேற்பட்ட எஃப் ரக போர் விமானங்களும் சீனாவால் கொடுக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், இலங்கை இராணுவத்திற்குக் குறி தவறாமல் வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கும் உத்தியிலும் பயிற்சி அளித்துள்ளது.

இதெல்லாம் இந்தப் பகுதியில் பிராந்திய வல்லரசாக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் தேடுகிற இந்தியாவின் கொல்லைப் புறத்தில்தான் நடக்கிறது.
அதே கட்டுரையில் உள்ள மற்ற முக்கிய தகவல் களும் நம்மை திடுக்கிட வைக்கக் கூடியவைகளாகும்.

இந்தியாவின் தயக்கம்

தற்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெரும் அளவிலான இராணுவத் தளவாடங்களை வாங்கி வருகிறார்; பெரும்பாலானவை சீனாவிடமிருந்து வாங்கப் பட்டவை. புலிகளை தீவிர வாத இயக்கம் என்று இந்தியா முத்திரை குத்தியிருந்தாலும் இலங்கைக்கு பெரும் அளவுக்கு ராணுவ தளவாடங்களை அளிக்க தயக்கம் காட்டியது. இதனால்தான் சீனாவை நோக்கி இலங்கை சென்றது. இந்தியா கொடுத்தது ரேடார்கள் மட்டும்தான். அந்நாட்டில் எம்மாதிரியான பங்களிப்பை சரி செய்வதென்று இந்தியா முடிவு செய்யவில்லை.

அதிகாரிகளின் தவறான வழி காட்டுதல்கள் விடுதலைப்புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பிரித்துப் பார்க்க இந்தி யாவால் முடியவில்லை. இந்த இடைவெளியில் சீனா புகுந்து விட்டது. இதைத் தொடர்ந்து இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றும் திறன் இந்தியாவுக்கு இல்லாமற் போய்விட்டது.
இந்தக் கட்டுரையில் பல்வேறு அச்சுறுத்தல்கள் எப்படி இந்தியாவைச் சுற்றியுள்ளன என்பவை வெளிவந்துள்ளன. இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் நாடுகளில் சீன உதவி என்ற பெயரில் ஆயுதங்கள் -அணு உலைகள் முதல் கப்பல் தளங்கள் வரை செய்து வருவது கண்டும் சரியான பார்வையின்றி ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோரைக் கண்டு இவர்கள் இறையாண்மைக்கு எதிரிகள் என்று திசை திருப்பும் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் இந்தியா - மத்திய அரசு கொடுக்கப் போகும் விலை வருங்காலத்தில் மிகப் பெரிதாக அமைந்து விடக் கூடும்!

திருமதி இந்திரா காந்தியின் மதிநுட்பம்


திருமதி இந்திராகாந்தி அவர்கள், இலங்கையில் அமெரிக்கா, திரிகோண மலைப்பகுதியை தங்களது கடற்படைத்தளமாக ஆக்கிக் கொண்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிம் மதிக்குமே மிகப் பெரிய அச்சுறுத்தல் - அறைகூவல் என்று தொலைநோக்கில் தான் ஈழத்து இளைஞர்களை அழைத்து தக்க இராணுவப் பயிற்சிகளைத் தந்தார். இந்த நிலைப்பாட்டை அவர் வழி வந்தவர்கள் மறந்து, நண்பர்களை எதிரிகளாகவும், எதிரிகளை நண்பர்களாகவும் கருதி தப்புக் கணக்கு போட்டதன் விளைவு மிகப் பெரிய விலையைத் தர வேண்டிய அபாயத்திற்கு நாளை நம் நாடு ஆளாகக் கூடும்.

வரலாற்றுப் பழி!

தமிழ் ஈழக் குரலை - அதன் குரல் வளையைப் பிடித்து நெரித்து விட்டோம் என்று நினைக்கக்கூடாது. இந்திய அரசோ மற்றவர்களோ - நடக்கக் கூடாத ஒரு தவறு, நடந்து விட்டதையே மறக்க முடியாமல் - மன்னிக்கத் தெரியாமல், இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கே அழிவு ஏற்படுத்துகின்ற வரலாற்றுப் பழியை ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கலாமா?

பாதுகாப்பு அரணாக எதனை இந்திராகாந்தி கருதி திட்டமிட்டாரோ, அந்த அரணையே அகற்றி விட்டோம் என்பது சிலரின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கோ, மன நிறைவுக்கோ, தீனியாக அமைய லாமே தவிர, இந்த பரந்து பட்ட 100 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் எல்லையில் இப்படி பேரபாயங்கள் உறுமிக் கொண்டிருப்பது, தலைவலி போய் திருகுவலியை உண்டாக்கிக் கொண்டதாகி விடக் கூடும்!

ஜனநாயகத்தில் மக்களது உணர்வுகளைப் புரிந்தவர்கள் - வெறும் அதிகாரிகளின் ஆலோசனைகளை - அதுவும் இனஉணர்வை, பண்பாட்டுப் பாதுகாப்பை பகைமை உணர்வோடு பார்க்கும் அதிகாரிகளின் - தவறான வழிகாட்டுதலை ஏற்பதால் சிக்கலில் கொண்டு தள்ளி விடுவது உறுதி!

பகத்சிங்கை தூக்கில் போட்டதால்

ஒரு பகத்சிங்கைத் தூக்கில் போட்டதால், சுதந்திர வேட்கை, வெள்ளையர் ஏகாதிபத்திய எதிர்ப்பு - அழிந்தாவிட்டது? 25 ஆண்டுகளுக்குப்பின் சுதந்திர நாடாக இந்தியா மாறிட வழிவகை செய்தது என்ற சரித்திரத்தை ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மறக்கக் கூடாது எவரும்.


----------------------- "விடுதலை' 19.6.2009

0 comments: