Search This Blog

17.5.09

இலங்கைமீது சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்ற வழக்கு


சர்வதேச நாடுகளின் பொதுநோக்கர்கள் முன்னிலையில்
பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு நிவாரணம் உடனடித் தேவை!

19 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழர் தலைவர் அறிக்கை


எவர் சொன்னாலும் கேட்பதில்லை என்பதில் முடிவோடு இருக்கும் இனப்படுகொலையாளன் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச நாடுகளின் நோக்கர்கள் முன்னிலையில் மரணத்தின் பிடியில் இருக்கும் தமிழர்களுக்கு உணவு, மருத் துவம் உள்ளிட்ட நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:-

இலங்கையில் அமெரிக்கா, பிரிட்டன் இந்தியா உள்பட சர்வதேச நாடுகளின் எச்சரிக்கை மீறி, சிங்கள இராணுவம் தொடர்ந்து குண்டுகளின் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

விடுதலைப்புலிகளும் அவர்களோடு உள்ள தமிழர்களும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முடக்கப்பட்டுள்ளனர்!

இந்தக் குறுகிய இடத்தில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதால் தமிழர்களின் உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. குழந்தைகள் - பெண்கள் முதலியோர் கொன்றொழிக்கப்படும் கொடுமை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது!

கொடுத்த வாக்கை காற்றில் பறக்கவிட்ட ராஜபக்சே!


சென்ற மாதம் 27 ஆம் தேதி கொடுத்த வாக்குறுதியை சிங்கள இராஜபக்சே அரசு காற்றில் பறக்க விட்டதை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் அய்.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பேசிய வேறு சில நாடுகளும் சுட்டிக் காட்டியுள்ளன.

போர்ப் பகுதியில் ஒரு தற்காலிக மருத்துவமனை, கூடாரங்களில் செயல்பட்டு வந்த நிலையில் அதன்மீதும் இரு முறை குண்டு வீசியுள்ளது சிங்கள இராணுவம்!

இதில் நூற்றுக்கணக்கான நோயாளிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள்! டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் கூட கொல்லப்பட்ட கோரத்தாண்டவம் நடைபெற்றுள்ளது!

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் எச்சரிக்கை - வேண்டுகோள் எதையும் கேட்க, ரத்த வெறிபிடித்த இனப்படு கொலையாளன் ராஜபக்சே தயாராக இல்லை!

யார் சொன்னாலும் நிறுத்தமாட்டேன் என்று கொக்கரித்த வண்ணம் உள்ளது அவரின் குரல்!

அய்.நா. தூதர் பயணம்!

இலங்கை நிலைமை மோசமாவதை அறிந்த அய்.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் ராஜபக்சேயுடன் பேசியதோடு, அய்.நா. சார்பில் அவரது தூதுவராக விஜய் நம்பியாரை அனுப்பியுள்ளார்!

இதற்கெல்லாம் இலங்கை அதிபர் இணங்குவார் என்று நம்ப முடியவில்லை.

எனவே, பிரிட்டன் கூறியுள்ளபடி, சர்வதேச நிதியம் (IMF) இலங்கைக்குக் கடன் உதவி (100 கோடி) கொடுப்பதை உடனடியாக நிறுத்தி பொருளாதாரத் தட்டுப்பாட்டை உருவாக்கி, பாடம் கற்பிக்கவேண்டும்!

போர் குற்ற வழக்கு!

அப்பாவி மக்களைக் கொல்லுவதை இலங்கை அரசு நிறுத்தாததால் இலங்கைமீது சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்ற வழக்கு தொடரப் போவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் பில்ரமென் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் எடுத்து வருவது ஆறுதல் தருகிறது!

அமெரிக்கக் கப்பல் அங்குள்ள தமிழர்களை மீட்கத் தயாராகி வருகிறது.

அமெரிக்காவின் ஆசிய பசிபிக் கடற்படை இதற்காகவே உஷார்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்திகளாவது சிங்கள வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்துமா என்று தெரியவில்லை!


உணவு இன்றி வாடும் அப்பாவி மக்களுக்கு உணவு, மருந்து, மருத்துவ மனைகள் ஏற்பாடு அத்துணையும் சர் வதேச செஞ்சிலுவை அமைப் பின் சார்பில்,பல சர்வதேச நாடுகளின் பொதுநோக்கர்கள் குழுவின் முன்னிலையில் நடத்திட ஏற்பாடு செய்தால் அதிலிருந்து தமிழர் களை ஓரளவேனும் காப்பாற்ற முடியும்!

19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

மனிதநேய அடிப்படையில் மேலும் தீவிர அவசர நடவடிக்கைகள் தேவை! தேவை!! இதை வலியுறுத்தவே 19 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழர்களே, அனைவரும் கலந்துகொள்வீர்!


-------------------- "விடுதலை" 16.5.2009

0 comments: