Search This Blog

31.5.10

சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்

இனியாவது புத்திவருமா?
இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்

சுதேசமித்திரன் இந்து பத்திரிகைகளின் பத்திராதிபரும் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லா மக்களுக்கு இந்திய சட்டசபை பிரதிநிதி மெம்பரும், காங்கிரஸ் காரியதரிசியாயிருந்தவரும், இந்தியாவின் 33 கோடி பொது மக்களுக்கு சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்க உயிர் விட்டுக் கொண்டு பத்திராதிபராயிருப்பதில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிப்பவருமான திரு. எ.ரங்கசாமி அய்யங்கார் என்னும் பார்ப்பனர் இந்திய சட்டசபையில் சென்னை மந்திரி திரு.முத்தையா முதலியார் விஷயமாக சில கேள்விகள் கேட்டாராம்! அதாவது சென்னை சுகாதார மந்திரி ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவில் உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்துவதில் வகுப்புவாரி உரிமை ஏற்படுத்தியிருப்பது இந்திய அரசாங்கத்திற்கு தெரியுமா? அது சட்டவிரோதமல்லவா? அதனால் அரசாங்கத்தார் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரியுமா? அதைப்பற்றி இந்திய அரசாங்கத்தார் விசாரித்து அந்த உத்தரவை ரத்து செய்ய முடியுமா? என்பது பொருளாக பல கேள்விகள் கேட்டாராம்,

இதற்குப் பதில் சொல்லும் சமயத்தில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத ஒரு பிரதிநிதி (திரு.ஆர்.கே. சண்முகம்) தவிர மற்ற எல்லோரும் பார்ப்பனர்களானதால் யாரும் ஒன்றும் பேசாமல் கேள்விக்கு அனுகூலமாயிருந்தார்களாம். அரசாங்க மெம்பர் பதில் சொல்லுகையில் இதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும், சென்னை அரசாங்கத்தை விவரம் கேட்டுப் பதில் சொல்லுவதாயும் சொல்லிக் கொண்டிருக்கும் போது திரு. ஆர்.கே.சண்முகம் அவர்கள் எழுந்து அதைப்பற்றி சர்க்கார் மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்றும், மேலும் அநேகருக்குத் திருப்தி என்றும் சொன்னாராம் உடனே திரு.எ.ரங்கசாமி அய்யங்கார் இது உண்மையல்ல என்றாராம். உடனே திரு.சண்முகம் எழுந்து சென்னை சட்டசபையில் இதைப்பற்றி விவாதம் கிளப்பி அங்கத்தினர்கள் எல்லோராலும் வகுப்புவாரி உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டும், அநேக பொதுக்கூட்டங்களில் அரசாங்கத்தையும் மந்திரிகளையும் ஆதரித்தும் பாராட்டியும் தீர்மானங்களும் செய்யப்பட்டும் இருக்கின்றது என்று சொன்னாராம். இந்த சமயம் அரசாங்க மெம்பரும், சட்டசபை மெம்பர்களும் அய்யங்கார் முகத்தைப் பார்த்தார்களாம்; அய்யங்கார் முகம் பூமியை பார்த்ததாம். உடனே அரசாங்க மெம்பர் எழுந்து நல்ல சமயத்தில் தனக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி உதவி செய்ததற்காக திரு. சண்முகத்திற்கு வந்தனம் செலுத்துவதாய்ச் சொன்னாராம். இந்திய சட்டசபை அங்கத்தினர்கள் கைத்தட்டினார்களாம். இவற்றை அசோசியட்பிரஸ், பிரீபிரஸ் பிரதிநிதியும் பார்த்து கொண்டே இருந்தும் கூட இதை எந்தப் பத்திரிகைக்கும் தெரியப்படுத்தவேயில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கம் பத்திரிகைகளுக்கு விஷயங்கள் அனுப்புவதில் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றது என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அன்றியும் இந்திய சட்டசபை ஸ்தானங்களை பெரிதும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இருப்பதால் அவர்களால் நமக்கு எவ்வளவு துரோகங்கள் நடைபெறுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இனியாவது இந்திய சட்டசபை ஓட்டர்களுக்கு புத்திவருமா?

--------------- தந்தைபெரியார் - ”குடிஅரசு”, துணைத்தலையங்கம், 31-03-1929

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் யார்?


செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் யார்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது தமிழர்களின் நீண்ட காலக் கனவுத் திட்டம். ராமன் என்ற இல்லாத கற்பனைப் பாத்திரத்தைக் காட்டி முடக்கியுள்ளனர்.

அண்ணா பெயரால் கட்சி நடத்தும் ஜெயலலிதா ராமனைக் காட்டி உச்சநீதி மன்றம் சென்றுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்கிறார். தமிழர்கள் இவரை அடையாளம் காண்பார்கள்.

மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கை விரைந்து நடத்தக் கோரி அவசர மனுவை (Expedite Petition) தாக்கல் செய்யவேண்டும்.

சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள இந்த நிலையில், அதனை முடக்குவது மக்கள் வரிப்பணத்தை பாழடிப்பதாகும்.

காலதாமதமின்றி திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில்தான் ஜூன் 5 ஆம் தேதி திராவிடர் கழகம் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்திட உள்ளது. ஒத்தக் கருத்துள்ளவர்களை இதில் பங்கேற்க அழைக்கின்றோம்.

எங்கள் போராட்டம் என்றால் அங்கு வன்முறைக்கு இடம் இருக்காது; பொதுச் சொத்துக்குப் பங்கம் ஏற்டாது.

டில்லியில் பெரியார் விழா

தந்தை பெரியார் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை இந்த ஆண்டு டில்லி பெரியார் மய்யத்தில் நடத்த உள்ளோம்.

செப்டம்பர் 18, 19 ஆகிய இரு நாட்களிலும் சமூகப் புரட்சி விழாவாக பெரியார் பிறந்த நாள் விழா நடைபெறும். தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான கழகக் குடும்பங்கள் பங்கேற்று அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பகுத்தறிவாளர்கள், சமூக நீதியாளர்கள் பங்கேற்பார்கள்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி பற்றிய புள்ளி விவரங்களும் எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

திட்டக்குழு இதனை வலியுறுத்தியுள்ளது. நீதி மன்றங்களும் புள்ளி விவரங்களைக் கேட்கின்றன.

மதச் சார்பற்ற அரசாங்கம் என்றாலும் கணக்கெடுப்பில் மதம் பற்றியும் கேட்கப்படுகிறது. மதத்தைக் கேட்கும்போது ஜாதியையும் கேட்பதுதானே சரியானதாக இருக்க முடியும்?

ஷெட்யூல்டு கேஸ்ட் என்றுதானே சொல்லப் படுகிறது. ஜாதி சட்டப்படி இன்னும் ஒழிக்கப்பட வில்லையே. இந்த நிலையில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு கட்டாயம் தேவை.

இதில் மிகவும் முக்கியமானது ஒன்று கவனிக்கத் தக்கது. யார் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறார்-களோ, அவர்கள்தான் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடவே கூடாது என்கின்றனர். இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதை அடையாளம் காணவேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல; யாரும் போடும் பிச்சையும் அல்ல.

செம்மொழி மாநாடு

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை வெறும் உலகத் தமிழ் மாநாடு மட்டும்தான் நடந்துள்ளது. செம்மொழி தகுதி தமிழுக்குக் கிடைத்தபின் நடத்தப்படும் முதல் மாநாடு இது. ஆதலால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக நடத்தப்பட உள்ளது. எங்கள் பொதுக் குழுவில் இதற்குப் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மேலும் தேவை என்றும் தீர்மானத்தில் கூறியுள்ளோம்.

காலத்துக்கேற்ப மொழியில் மாற்றம் தவிர்க்க இயலாதது.

நாம் வாழுவது எழுத்தாணி காலத்தில் அல்ல. கணினி யுகத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.

பழைமை மொழி என்பது மட்டுமே மொழிக்குச் சிறப்பல்ல. அது புதுமை மொழியாகவும் மாற-வேண்டும். வளர வேண்டும். மாற்றம் என்பதுதான் மாறாதது; மாற்றம் ஏமாற்றமாக இருக்கக் கூடாது.

மொழி என்பது போராட்டக் கருவி என்று கூறியுள்ளார் தந்தை பெரியார். கருவிகள் காலத்துக்கு ஏற்றவைகளாக இருக்க வேண்டாமா?

அணு ஆயுதப் போர் பற்றிப் பேச்சு எழுந்துள்ள ஒரு கால கட்டத்தில் வில், அம்பு வைத்துப் போரிட முடியுமா?

உலகின் பல நாடுகளில் எழுத்துச் சீர்திருத்தம் நடைபெறத்தான் செய்கின்றன. தமிழிலும் பல காலகட்டங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. செம்மொழி மாநாடு அந்த வகையில் புத்தாக்க மாநாடாக அமைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்ப்பார்ப்பு!

கூடினால் கலையத்தான் வேண்டும்


செய்தியாளர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடு என்று சிலர் சொல்லு கிறார்களே?

தமிழர் தலைவர் பதில்: எந்த மாநாடும் கூடினால் கலையத்தானே வேண்டும். அதே இடத்தில் எத்தனை நாள்கள்தான் கூடிக் கொண்டு இருப் பார்கள். கூடிக் கலைவது என்பது சரியான ஒன்றே!


(உரத்தநாடு _ செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 30.-5.-2010)

------------------ “விடுதலை” 31-5-2010


விசித்திரமானது பெரியாரின் போர்முறை

தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தால் எல்லாம் கிடைத்துவிடுமா?
கோவையில் தமிழர் தலைவர் பதிலுரை

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தால் எல்லாம் கிடைத்து விடுமா? என்று கேட்கின்ற சில மனநோயாளிகளுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பதில் அளித்து விளக்கவுரையாற்றினார்.

கோவையில் 8.5.2010 அன்று குடிஅரசு தொகுதிகள், செம்மொழி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மனிதன் ஒழுக்கமாக இருக்க

மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் யோக்கியமாக நடக்க வேண்டும் என்று சொன்னால் அவனுக்குத் தண்டனை உண்டு என்று காட்டியாக வேண்டும் அல்லது அவன் மீண்டும் தவறான வழிக்கு செல்லாத அளவுக்கு இருக்க வேண்டும்.

இந்த பிராயச்சித்தம் என்பதிருக்கிறதே, அது ஆரிய கலாச்சாரம் வடமொழிக்கலாச்சாரம். பிரார்த்தனை பிராயச்சித்தம்.

பாவமா? கும்பகோணம் போ!

நீ என்ன தவறு வேண்டுமானாலும் செய். வெள்ளிக்கிழமை போய் உண்டியலிலே போடு அல்லது அய்யப்பன் கோவிலுக்கு வேண்டுதலை செய்து கொண்டு இருமுடி ஏந்தி கோவிலுக்குப் போனால் சரியாகப் போய்விடும் அல்லது இதையும் மீறி சில்லரை பாவம் வருகிறது என்று சொன்னால் நீ வேறு எங்கும் போகாதே. கும்பகோணத்திற்குப் போ. அங்கே மகாமக குளம் இருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாவத்தை ஹோல்சேலாக கழுவி விடலாம் என்று வைத்தால் என்ன நிலை? மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லையே என்பதுதான் தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு மூலமாக விடுத்த கணை.

பெரியாரின் போர்முறை விசித்திரமானது

அண்ணா அவர்கள் சொன்னார்கள். பெரியாரின் போர் முறை விசித்திரமானது-. மற்றவர்கள் எல்லாம் எதிரே படை இருக்கும்; அவர்களோடு போர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆனால் பெரியார் அவர்களுடைய போர் முறை கண்ணுக்குத் தெரியாத படைகள் அங்கே இருக்கும். மூலபலம் எங்கேயிருக்கிறது என்று பார்த்து அந்த மூலபலத்தை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று சொன்னார்கள்.

எனவே தந்தை பெரியார் அவர்களுக்கு பெரிய ஆயுதமாகத்தான் குடிஅரசு அறிவாயுதம் திகழ்ந்தது. அதனுடைய விளைவுதான் இந்த உணர்வுகள் எல்லா பக்கத்திலும் கிளம்யிருக்கிறது.

பெரியார் மய்யம் கொண்டார் என்று அற்புதமாக வர்ணித்தார். அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியைப் படைத்து வருகின்ற நம்முடைய முதல்வர் அவர்கள் ஆறாவது முறையும் அவர்தான் முதல்வர் என்று சொல்லக் கூடிய அளவுக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற முதல்வர் கலைஞர் டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவிலே டில்லிதலைநகரத்திலே முழங்கினார்.

பெரியார், மய்யம் கொண்டிருக்கிறார்

பெரியார், மய்யம் கொண்டிருக்கின்றார் என்று சொன்னார். பெரியார் மய்யம் கொண்டிருக்கின்றார் என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அழகாகச் சொன்னார்கள்.

அவருடைய ஊர் பொங்கலூர். எங்களுக்கோ மகிழ்ச்சி பொங்கியது. அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்கள் நாம் பெரியார் மய்யத்தை இங்கே தொடங்க வேண்டும் என்று சொன்னார்கள்.

கோவையில் பெரியார் மய்யம்.....!

நிச்சயமாக நீங்கள் இன்றைக்கு ஒரு விதையை நட்டிருக்கின்றீர்கள். அந்த விதை கிளம்பும். எவ்வளவு விரைவாக முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக செய்வோம். காரணம் உங்களுடைய தோன்றாத் துணை இருக்கிறது.

இரட்டைக் குழல்கள் இங்கே இருக்கிறது. எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று சொல்லக்கூடிய தெம்பும், துணிவும் இருக்கிறது. எங்கள் மீது வீசப்பட்ட கற்களைத் தவிர வேறு நாங்கள் பெற்றதில்லை. அதற்குரிய வாய்ப்பை பெற்றதில்லை.

எல்லா துறைகளிலும் இருக்கக் கூடியவர்கள் சொல்லுகிறார்கள். பெரியார் இல்லாவிட்டால், நாம் இல்லை என்று மிகப்பெரிய அளவுக்கு சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு தெளிவாக இந்த கொள்கையைச் சொல்லுகிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 1931லே தரங்கம்பாடி என்ற பகுதியிலே சுயமரியாதை மாநாடு. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஊர் இது. பொறையாருக்குப் பக்கத்திலே இருக்கிறது.

எமனையே எட்டி உதைத்தவன்

மார்கண்டேயன் என்றும் 16. அவன்தான் எமனையே எட்டி உதைத்தவன் என்றெல்லாம் கதை சொல்லுவார்கள். 60 வயதுக்கு மேல் ஆனவர்கள் நீண்டநாள் வாழ பொறையாருக்குத்தான் செல்லு வார்கள். அங்கேயிருக்கின்ற கடவுளைத்தான் பார்க்க விரும்புவார்கள். பொறையாருக்குப் பக்கத்திலே இருப்பதுதான் தரங்கம்பாடி. தந்தை பெரியார் அவர்கள் 1931ஆம் ஆண்டு தரங்கம்பாடியிலே நடைபெற்ற மாநாட்டிலே பேசும்பொழுது சொல்லுகிறார்கள்.

1931இல் பெரியார் சொன்னார்

தந்தை பெரியார் 1925 லே குடிஅரசு இதழைத் தொடங்கினார்கள். 1931 லே குடிஅரசைத் தொடங்கும்பொழுது சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிச் சொல்லுகிறார்கள்.

நான் சற்று நேரத்திற்கு முன்னாலே கோவை மு.ராமநாதன் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னேன். அவரே சொன்னார். இளைஞர்களுக்கு நாம் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும். அவர்களை சரியான பாதைக்குக்கொண்டு வரவேண்டும். அந்தப் பணிதான் இப்பொழுது முக்கியமாகத் தேவைப்படுகின்ற பணி.

வேர்கள் சரியாக இருந்தால்

ஓர் இயக்கத்திற்கு சோதனை ஏற்படும் பொழுது பல நேரங்களில் அந்த இயக்கத்தை விட்டு ஓடிப் போகிறவர்கள், இரட்டை வேடம் போடக்கூடிவர்கள். இப்படி எல்லாம் போடுவது எதற்காக? அடித்தளம் சரியாக இருந்தால், வேர்கள் சரியாக இருந்தால் விழுதுகள் பழுதாகாது. அந்த அடிப்படையிலே 1931 லே தந்தை பெரியார் எழுதுகிறார்.

அவர் சொல்லுகிறார். நம்மைப் பொறுத்த வரையிலே நம் கொள்கையின் பேரிலோ நமது செய்கையின் பெயரிலோ ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை. எவ்வளவு அழுத்தம் திருத்தமாக அதுவும் தொடங்கக்கூடிய இயக்கத்தின் சார்பாக எவ்வளவு தெளிவாகச் சொல்லுகிறார் பாருங்கள்.

அட்வான்ஸ் வாங்கவில்லை

அய்யா சொல்லுகிறார். நல்லதோ, கெடுதியோ, நமது இயக்கத்தின் தற்கால நிலை காரணமாக இருந்து வருகிறது. ஏனெனில் யாரிடத்திலும் நமது இயக்கத்திற்காக இப்படிச்செய்கிறேன், அப்படிச் செய்கிறேன் என்று வியாபாரம் பேசி ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் வாங்கவில்லை.

(அய்யா அவர்கள் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் பாருங்கள் நான் இதைச் செய்யவில்லை. அதைச் செய்யவில்லை என்னப்பா என்று கேட்க முடியுமா? என்று கேட்கிறார்.)

ஒருவருக்கும் கட்டுப்பட்டு ஏதாவது ஒரு விசயத்தை நம்பச்செய்து அதனால் நஷ்டம் அடையுங்கள் என்று யாருக்கும் நஷ்டத்தை உண்டு பண்ணவோ, யாருடைய தயவை எதிர்பார்த்தோ இதுவரையில் வைத்துக்கொள்ளவில்லை.

நம்மை பொறுப்பாளியாக்கிக்கொண்டு

நாம் சொல்வதற்கும், செய்வதற்கும், சொல்லாதற்கும், செய்யாததற்கும் நம்மையே பொறுப்பாளியாக்கிக் கொண்டிருக்கின்றோம். (இந்த எழுத்தினுடைய வேகம், கருத்தினுடைய சிந்தனை, எப்படியிருக்கிறது என்பதை தெளிவாக எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு அமைப்பை எவ்வளவு வேகமாக கட்டி ஒரு தலைவர் கொண்டு போவதை எண்ணிப்பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல அவர்மேலும் சொல்லுகிறார்.

மலைபோன்ற காரியத்தை

முன்பு ஒரு சமயம் நாம் சொன்னதைப் போல மலைபோன்ற ஒரு காரியத்தை கொண்டு வருவதற்காக தலைமுடி போன்ற அற்ப சக்தியைக் கொண்டு கட்டி இழுக்கப் பார்க்கிறோம். வந்தால் மலை போன்ற கொள்கைகள் வரட்டும்.

வராமல் அறுந்து போனால் நமது அற்ப முயற்சிகள் வீணாகப் போகட்டும் என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார். மேலும் சொல்லுகிறார். நமக்கு அதைப் பற்றி கவலை ஒன்றும் இல்லை. இதனால் பெரிய நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்று கருதிக்கொண்டு சொல்லுகிறோம். இவ்வளவு பெரிய இயக்கத்திற்கும், நமது மன உறுதியும் நிர்தாட்சண்யமும்தான் ஆட்சியாகவும், மூலப்பொருளாகவும் இருக்கின்றதே தவிர, வேறு இல்லை. இவ்வளவு தெளிவாக குடிஅரசு தனது பயணத்தைச் தொடங்கியது. தந்தை பெரியார் தொடங்கினார்.

இந்தியாவுக்கு வழிகாட்டிக்கூடிய ஆட்சி

இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய ஓர் ஆட்சி இருக்கிறதென்றால் அது தமிழகத்திலே நடைபெறக் கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதற்கு இந்த கொள்கையினுடைய வெற்றியினுடைய பரிமாணங்களாகத்தான் பன்முகங்களிலே தெரிகிறது. இப்படி எத்தனையோ சொல்லலாம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது தந்தை பெரியாரின் பெருவிருப்பம். தந்தை பெரியார் மறைந்த பொழுது அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவேன் என்று சொன்னார். அதன்படியே கலைஞர் செய்தார். இது சாதாரண காரியமல்ல.

தி.மு.கவுக்கே உண்டு

பாலங்கள் கட்ட முடியும், சாலைகள் கூட அமைக்க முடியும் மற்றவர்களால். அது வேறு அதைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் சமூகப் பிரச்சினையிலே கைவைக்கக் கூடிய துணிவு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர, அதிலும் குறிப்பாக நமது ஒப்பற்ற தலைவர், கலைஞர் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் வராது.

எவ்வளவு எளிதாக ஒரு துளி ரத்தம் சிந்தாமல் துப்பாக்கித் தூக்காமல் இராணுவத்தை அனுப்பாமல், அறிவாயுதத்தை மட்டுமே ஏந்தி பெரியார் பக்குவப்படுத்தினார். அந்த நிலத்தைப் பக்குவப் டுத்தினார்.

-----------------தொடரும் ... "விடுதலை” 30-5-2010

தேவநாதன், நித்யானந்தா காமலீலை

தேவநாதன், நித்யானந்தா ஒழுக்கக்கேட்டைப் பார்த்து நாடே சிரிப்பாய் சிரிக்கிறதே!
கோவையில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் பேச்சு

மதவாதிகள், காவி உடை அணிந்த தேவநாதன், நித்யானந்தா காமலீலை, ஒழுக்கக் கேடுகளைப் பார்த்து நாடே சிரிக்கிறது. ஆனால் நாத்திகவாதிகள் யாராவது இப்படி ஒழுக்கக் கேடர்களாக நடந்தார்கள் என்று சொல்ல முடியுமா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

கோவையில் 8.5.2010 அன்று குடிஅரசு தொகுதிகள், செம்மொழி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சி மனநிறைவு

மிகுந்த மகிழ்ச்சிக்கிடையிலே, மனநிறைவு கொள்ளத் தக்க வகையிலே இந்த கோவை மாநகரில் குடிஅரசு நூல்கள் அறிமுக விழா, உலகத் தமிழ்செம்மொழி மாநாடு விளக்கப் பெருவிழா ஆகிய இரண்டு விழாக்களை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய அறிவு ஆயுதமான குடிஅரசு வெளியீடு என்பது முறையாகப் பார்க்க வேண்டு-மானால் கோவையிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்.

வெள்ளைக்கார நீதிபதி முன்பு பெரியார்

காரணம் குடிஅரசு ஏட்டினை தந்தை பெரியார் அவர்கள் 1925 லே தொடங்கிய பொழுது எங்களைப்போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்திலே தொடங்கிய பொழுது இந்த மாவட்டம் கோவை மாவட்டமாகத்தான் ஈரோடு உள்ளடங்கியிருந்தது.

குடிஅரசுக்குத் தொந்தரவு ஏற்பட்ட பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் இந்த மாவட்டத்தின் வெள்ளைக்கார நீதிபதிகள் முன்புதான் நின்றிருக்கிறார்கள்.

குடிஅரசையே மூடும்படியாக உத்தரவிட்ட நேரத்திலே உடனடியாகப் புரட்சி என்ற ஏட்டினை தொய்வில்லாமல் நடத்திய பெருமையும் இந்த கோவை மாவட்டம்தான் அதற்கு பதிவு கொடுத்தது.

முதலில் கோவை மாவட்ட தலைவர்

தந்தை பெரியார் அவர்கள் முதலில் கோவை மாவட்டத் தலைவராக இருந்துதான் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வந்தார்கள்.

எனவே இப்படி பல்வேறு வரலாற்றைப் பார்க்கும் பொழுது கோவை சிறப்பாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்று சொன்னால் திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னால் வேறு எதுவுமில்லை. சுயமரியாதை இயக்கமான தந்தை பெரியாருடைய இயக்கம். திராவிடர் இயக்கத்தினுடைய அரசியல் வடிவம் அவ்வளவுதான். இதற்கு மேலே பெரிய வேறுபாடுகள் கிடையாது. நாங்கள் சமுதாயத்திற்கு முன்னாலே பாதை அமைத்துக்கொண்டு போகக் கூடியவர்கள்.

சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ்

இராணுவ மொழியிலே சொல்ல வேண்டுமானால், சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் என்று சொல்லுவார்கள். ஒரு படை பின்னாலே வருகிறது. எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்ய வேண்டும் என்று நினைத்து வேகமாக சேப்பார்ஸ் அண்டு மைனர்ஸ் படை முன்னேறிக்கொண்டிருக்கின்ற கால கட்டத்திலே இடையிலே எதிரிகள் என்ன செய்வார்கள் என்றால் பாலத்தைத் தகர்த்துவிடுவார்கள். பாதையை மூடி விடுவார்கள்.

உலகத்திலே நடக்கக் கூடிய ஒரு முறை. ஆனால் அதை எல்லாம் கண்காணித்து புதிய பாலங்களையும் உடனடியாக போட்டு புதிய பாதைகளையும் அமைப்பதுதான் ஈரோட்டுப் படையின் மிக முக்கியமான பணி.

படைக்கு பாதை அமைப்பு

எங்களுடைய பணி படைக்கு பாதை அமைத்துக்கொண்டு முன்னாலே செல்லும். பின்னாலே அரசியல் படை வரும்.

செங்கற்பட்டு மாநாடு, ஈரோடு மாநாடு, விருதுநகர் மாநாடு என்று சுயமரியாதை இயக்கத்தின் மாநாடுகள் எங்கெங்கெல்லாம் சிறப்பாக நடத்தப்பட்டன. அந்த மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். மிக முக்கியமான தீர்மானங்கள். ஏதோ கட்டுரைகளைப் போல படித்தார்கள்.

கசப்பாக சிலர் உணர்ந்தனர்

கசப்பாக சிலர் உணர்ந்தார்கள். சிலர் விமர்சனம் செய்தார்கள். பெண்களுக்கு உரிமையா? பெண்ணுக்குப் படிப்பா? பெண்களுக்கு சொத்துரிமையா? இந்த நாடு உருப்படுமா? பெண்களை அடக்க முடியுமா? இவைகளை எல்லாம் பெண்களுக்குக் கொடுத்து விட்டால் ஒழுக்கம் மிஞ்சுமா? இப்படி எல்லாம் கேட்டவர்கள் யார்? நித்யானந்தாக்களின் சீடர்கள்.

பக்திக்கே உதாரண பரம்பரை

இப்படி எல்லாம் கேட்டார்கள், காஞ்சிபுரம் தேவநாதன் பரம்பரையினர். பக்திக்கே இவர்கள்தான் உதாரணம். குடிஅரசு எப்படி வெற்றிபெற்றிருக்கிறது என்று சொன்னால் கடவுள் இல்லை என்பதை எங்களை விட அதிகமாக நிரூபித்திருக்கிறார்கள்.

பெரியாருடைய அகராதியிலே கொள்கையிலே சமரசம் கிடையாது. நட்பிலே சமரசம் உண்டு. அருமைச் சகோதரர் கோவைத் தென்றல் மு.ராமநாதன் அவர்கள் வேகமாகப் பேசினார்கள்.

கடவுள் இல்லை என்று அமைச்சர் பேசினார். நான் அன்றைக்கே சொன்னேன். அடக்கிப் பேசுங்கள் என்று. ஏனென்றால் பலரது ஓட்டுக்களை வாங்கி ஆட்சி அதிகாரத்திற்குள் உள்ளே போகக் கூடியவர்கள் என்பதற்காக. நாங்கள் தேர்தலிலே நிற்காதவர்கள், துணிச்சலுடன் சொல்லக்கூடிவர்கள்.

நித்யானந்தாக்களின் செயல்களே போதுமே!

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்பதை தங்களுடைய அற்புதமான செயல்களாலே உலகத்திற்குக் காட்டிய கருஞ்சட்டைக்காரனை விட நித்யானந்தாக்களுக்குதான் பெருமை உண்டு. (கைதட்டல்).

குடிஅரசு ஏடு எதற்காகத் துவக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை வெளிச்சம்போட்டு உலகத்திற்கு காட்டிக்கொண்டிருக்கின்றார். காத்மண்டு வரை ஓடிப்போனவரைத் தேடிக்-கண்டு-பிடித்திருக்-கின்றார்கள்.

ஏற்கெனவே சங்கராச்சாரியார் ஓடிப் போய் திரும்பி வந்தார். இருக்கும் பொழுதே கமண்டலத்தை விட்டு ஓடிப்போனவர். இப்பொழுது சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகளை கலைத்துக்கொண்டிருக்கின்றார்.

காவி முகத்திரைகள் கிழிகிறது

இன்றைக்கு காவியினுடைய முகத்திரைகள் கிழிந்து கொண்டிருக்கின்றன. அய்யோ என்ன இப்படி நடக்கிறார்களே என்று காவிச்சட்டை நண்பர்களுக்கே வெட்கம். குடிஅரசு எதற்காகத் துவக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் பெரு வெற்றியை குடிஅரசு ஏடு பெற்றிருக்கிறது.

பெரியார் பற்றி அண்ணா சொன்னார்

ஒரு முறை தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். பெரியார் அவர்களைப் பற்றி அவ்வளவு ஆழமாக சொன்ன தலைமகன் வேறுகிடையாது. பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் தளபதி அழகிரி சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சார பீரங்கி அவர் சொன்னார். ஈட்டி எட்டிய வரையில் பாயும். பணம் பாதாளம் வரையில் பாயும். ஆனால் எங்கள் தலைவர் பெரியாரின் கொள்கை இருக்கிறதே அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையிலும் பாய்ந்து அதற்கு அப்பாலும் பாயும் என்று சொன்னார்கள்.

பெரியார் கொள்கை உலகளாவிய அளவில்

இன்றைக்கு தந்தை பெரியாரின் கொள்கை உலகளாவிய அளவிலே பரவி வருகிறது. இன்றைக்கு தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு நாட்டிலே அடிபட்டுக்கொண்டிருக்கின்றார்களே அதற்கு என்ன அடிப்படை? மதம் தானே அடிப்படை? தந்தை பெரியார் மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன என்று குடிஅரசிலே எழுதிக் கேட்டார்.

மதம் என்ன நன்மை செய்தது?

இன்றைக்கு மக்கள் எல்லோரும் புரிந்துகொண்டார்கள். மதம் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. ஒரு பொதுக்கூட்டத்திலே நிம்மதியாக உட்கார முடியவில்லை. ரயில் நிலையங்களிலே நிம்மதியாகப் பயணம் செய்ய முடியவில்லை. பேருந்துகளிலே, மக்கள் கூடுகின்ற இடத்திலே நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொன்னால், அதற்கு யார் காரணம் பகுத்தறிவாளர்களா?

எந்த நாத்திகன் ஒழுக்கம் தவறினான்?

கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நாத்திகர்களா? இதுவரை எந்த நாத்திகனும் ஒழுக்கம் தவறியவன் கிடையாது. நாங்கள் சவால் விட்டுச் சொல்லுகின்றோம். எங்களுடைய பகுத்தறிவாளர்கள் இங்கே இருக்கிறார்களே இவர்களைப் பார்த்து உங்களுடைய சுட்டு விரலை நீட்ட முடியுமா? இவர்கள் இன்னின்ன தவறு செய்தார்கள். ஒழுக்கக்கேடர்களாக இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா? செம்மொழி மாநாடு கோவையிலே நடத்த இருக்கின்றோம். திருக்குறளிலே ஒரு பாடல் உண்டு தவறு செய்யாதே. தவறு செய்தால் தண்டனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நினைக்காதே.

உரிய தண்டனையைப் பெற்றுக்கொள். இதுதான் பகுத்தறிவாளர்களுடைய அணுகுமுறை. இதுதான் திராவிட இயக்கத்தினுடைய தெளிவான நிலைப்பாடு. இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடித்தளம். ஆனால் வைதீகர்களுக்கு அப்படி அல்ல. கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு அப்படி அல்ல. மாறாக நீ எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம். காசு போட்டால் பாவம் தீர்ந்தது

வெள்ளிக்கிழமை கோவிலுக்குச் சென்று உண்டியலிலே காசு போட்டால் உன்னுடைய பாவம் மறைந்து போகும். ஒரு மதம் வெள்ளிக்கிழமை இன்னொரு மதம் வியாழக்கிழமை. பாத்தியா ஓதினால் போதும். இன்னொரு மதம் ஞாயிற்றுக்கிழமை. அவர்கள் சொன்னார்கள் அல்லவா? இஸ்ரேல் அனுபவத்தைப் பற்றி.

ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ கோவிலுக்குச் சென்று ஏசுநாதரிடம் பாவ மன்னிப்பு பெறலாம். இந்த பாவ மன்னிப்பு பெருகிப் போய்தான் போப்புக்கே இப்பொழுது பெரிய சங்கடம் வந்திருக்கிறது. அதை எல்லாம் இந்த மேடையில் சொல்ல நேரமுமில்லை. மூன்று கோடி ரூபாய் சம்பாதித்த பாதிரியார் கைது என்று இன்று மாலை ஏட்டிலே செய்தி வந்திருக்கிறது. அவர்கள் அப்படி செய்வதற்கு என்ன அடித்தளம்? கர்த்தர் பாவத்தை மன்னிப்பார் என்று ஞாயிற்றுக்கிழமை பாவத்தைத் தீர்க்க உண்டியலில் பணம் போட்டுவிட்டால் பாவம் தீர்ந்துவிடும் அவர்களுக்கு. திங்கட்கிழமையிலிருந்து அவர்களுக்கு புதுக்கணக்கு. அடுத்த வாரம் அவன் ஏன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றான்.

(தொடரும்) ----------------”விடுதலை” 29-5-2010

30.5.10

இறைவா, இது என்ன சோதனை?இது நாம் கொடுத்த தலைப்பு அல்ல! தினமலர் பார்ப்பன ஏடு கொடுத்த தலைப்பு!

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்தது அல்லவா! இடிந்து வீழ்ந்து சுக்கல் நூறாகச் சிதறிக் கிடக்கும் படங்களைப் போட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புதான் இறைவா இது என்ன சோதனை?

ராஜ கோபுரம் இடிந்து வீழ்ந்தது. இறைவனுக்குத் தான் சோதனையே தவிர மற்றவர்களுக்கு அல்ல! நியாயமாக இந்தக் கேள்வி மாற்றித் தலை கீழாகக் கேட்கப்பட்டு இருக்க வேண்டும்.

இறைவா உனக்கு ஏன் இந்த சோதனை? என்று கேட்டு இருந்தால் தினமலர் கூட்டத்துக்குப் புத்தி கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்று கருத இடம் உண்டு.

பஞ்ச பூதத்தலங்களில் ஒன்று என்று பகவானை ஆகாயத்தில் தூக்கி வைத்துக் கொஞ்சுவது. இறைஞ்சுவது. அந்தப் பகவானின் சக்திக்குச் சவால் வந்து விட்ட பிறகு பகவான் சோதிக்கிறான் என்பது பச்சையான பசப்புத்தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

பக்தியின் பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் பாமரர்கள் விழித்த விடக் கூடாது. வீழ்ந்த பள்ளத்திலேயே மீண்டும் மீண்டும் உருண்டு புரள வேண்டும் என்ற சூழ்ச்சிதான் இதில் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணங்களை எழுதிக் குவித்து வைத்துள்ளார்களே. அதில் குடி கொண்ட பகவானின் பராக்கிரமங் களையெல்லாம் பத்தி பத்தியாக குவித்து வைத்துள்ளார்களே!

கோயில் திருக்குளத்துக்குப் பதிகங்கள் பாடி வைத்திருக்கிறார்களே! மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் குளித்தெழுந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் கூடப் போடும் என்று தங்களின் பார்ப்பனக் கோரப் புத்தியைப் பதிவு செய்து வைத்துள்ளார்களே.

முதலையுண்ட பாலகனை மீட்டது எது? எலும்பைப் பெண்ணுருவாக்கியது எது?

இந்தக் கடவுள் சக்திகள் எல்லாம் காணாமல் போனது ஏன்?

காளஹஸ்தியில் கோயில் அருகே ஓடும் நதியில் குளித்தால் ராகு கேது படித்த பாவங்கள் போகுமாம்.

ஜெகன்மோகினி என்ற திரைப்படத்தில் விட்டலாச்சாரியார் காட்டிய காட்சி அது! நாயும், ஆடும் தோஷம் நீங்கப் பெற்றனவாம். அந்தத் திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு அக்கோயிலுக்குப் பக்தர்கள் திரள ஆரம்பித்தார்களாம். நல்ல வசூலாம் இடிந்து கிடந்த கோயிலைச் செப்பனிட்டாரகளாம். பல ஆண்டுகளுக்குப்பின் அந்தப் பகுதிக்கு விட்டலாச்சாரியார் சென்றபோது கோயில் பார்ப்பனர்களும், பக்தர்களும் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்தார்களாம்.

காளஹஸ்தி கோவிலுக்குப் புனர்வாழ்வு வந்ததுகூட, ஜெகன்மோகினி திரைப்படத்தின் மூலம்தான் என்பது காளஹஸ்தி அப்பனுக்குப் புகழ் சேர்க்குமா? விட்டலாச்சாரியார் அல்லவா சாதனையைத் தட்டிக்கொண்டு போகிறார்!

அதுவும் கோபுரம் என்றால் சாதாரணமா? கோபுரம் இறைவனின் திருவடிகளைக் குறிக்கிறதாம். அதனால் கோபுரத்தரிசனம் விசேஷமானது என்கிறார்கள் ஆகமவாதிகள்.

அந்த இறைவனின் திருவடி உடைந்து சுக்கல் நூறாகிப் போய் விட்டதே! இதற்கு எந்தக் கட்டுப் போடப் போகிறார்கள்? புத்தூர் கட்டுதானா?

ஆமாம், வாஸ்து பார்த்துத்தானே கோயிலையும், கோபுரத்தையும் கட்டியிருப்பார்கள்? அப்படி இருக்கும்போது ராஜ கோபுரம் தலைகுப்புற வீழ்ந்தது ஏன்?

வாஸ்துவின் வண்ட வாளமும் தாண்டவாளத்தில் ஏறிவிட்டதே! இனி எதை வைத்துக் கோயிலையோ, கோபுரத்தையோ, கோயிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள கடவுளையோ காப்பாற்றப் போகிறார்கள்?

பக்தி பெருகிவிட்டது; பக்தி பெருகிவிட்டது. பகுத்தறிவாளர்களே, நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று பம்மாத்துப் பேசும் பக்தர்கள், காளஹஸ்தி அப்பனின் கோபுரம் குப்புற வீழ்ந்து மீசையில் மண் ஒட்டிய பிறகு உங்கள் பக்தியை ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திப்பீர்களா? கடவுள் கல் என்று கறுப்புச் சட்டைக்காரர்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் உங்களுக்கு உண்டா?

பிழைப்புக் கெட்டுப் போய்விடுமே. பகவானுக்கு ஒரு ஹானி என்றால் அது பார்ப்பனர் வயிற்றுச் சோற்றுக்கு வந்த திண்டாட்டமாயிற்றே! உயர்ஜாதி மமதையின் மீது விழுந்த மண்வெட்டி அடியாயிற்றே!

விட்டுக் கொடுத்து விடுவார்களா? உடனே ஜோதிடக்கட்டை எடுத்துப் புறப்பட்டு விட்டார்கள்.

ஏதோ.. ஏதோ தெரியவில்லை; நாட்டுக்குச் சோதனை! உடனே பரிகாரம் காணப்பட வேண்டும்; அல்லா விட்டால் ஆபத்துக்கு அணை கட்ட முடியாது என்று தோல்வியையும் வெற்றிக்கான தோரணையாக மாற்றி விடுவார்கள்.

மக்களிடம்தான் பயபக்தி (பயமும் பக்தியும்) பயங்கரமாகக் இருக்கிறதே! இந்த முதலீடு ஒன்று போதாதா பிழைக்கத் தெரிந்த பிர்மாவின் முகத்தில் பிறந்த பிரிவினருக்கு?

பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்ததால் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக, ராகு, கேது ராசிக்காரர்களுக்குச் சோதனை ஏற்படுமாம். அரசியல் தலைவர்களுக்கும் ஆபத்து நேரிடுமாம்.

இந்த இரு கிரகங்களுக்கும் உரியவர்கள் உடனே பரிகாரப் பூஜைகளில் ஈடுபட வேண்டுமாம். பரிகாரப் பூஜை செய்தால்தானே பார்ப்பான் வீட்டுக் கல்லாப் பெட்டி நிரம்பி வழியும்?

அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்று சொன்னால்தானே கனமான வருமானம் கணக்கில் காட்டாத கறுப்புப் பணக் கத்தைகள் வந்து குவியும் (பரவாயில்லை ஜெயலலிதா முந்திக் கொண்டார்; கடந்த வாரம்தான் காளஹஸ்தி சென்று பூஜைகள் நடத்திக் கனமான வகையில் கவனித்து விட்டு வந்தார்).

ஜோதிடர் பூவை நாராயணன் கூறுகிறார் கேளுங்கள்:

பொதுவாக கோயில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்கக்கூடாத வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனைப் பாதிக்கும்.

இதற்கு வைரணாச கல்ப சூத்திரத்தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களைப் படித்து அற்புத சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

புரிகிறதா! ஹோமத்திலேயே அற்புத ஹோமமாம். தொகை அதிகம் என்று பொருள். கோபுரம் இருந்தாலும் கொள்ளை! கோபுரம் இடிந்து வீழ்ந்தாலும் கொள்ளை! இப்படி எது நடந்தாலும் சுரண்டல் கொள்ளைக்கு வசதி செய்து வைத்துள்ள பார்ப்பன சூழ்ச்சி உலகில் வேறு எங்கும் கேள்விப்பட்டிட முடியாத ஒன்று.

அண்டப் புளுகு ஆகாயப் புளுகு என்பதற்கு மேலாக இன்னொன்று இருக்கிறது!

அதுதான் இந்துமதப் புளுகு! பார்ப்பனீயப் புளுகு!

ராகு கேது கிரகதோஷம் என்கிறார்களே, அப்படி ஏதாவது கிரகங்கள் உண்டு என்று எந்த விஞ்ஞானத்தில் கூறப்பட்டுள்ளது? இல்லாத கிரகங்களுக்குத் தோஷமாம். யாகமாம். பூஜையாம். அட, அக்கிரமமே உன்பெயர்தான் அக்கிரகாரமா?

------------------மின்சாரம் அவர்கள் 29-5-2010 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரைசூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்தவர்களா?


தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும். சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்கவழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன.

பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன். சூத்திரன், பஞ்சமன் என ஐந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றனவென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நமக்கு இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமோ, மனுஸ்மிருதியோ என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டினருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பொழுது ஆராயத் தேவையில்லை.

சூத்திரர் என்பது என்ன ? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப் பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது.

அப்பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.

அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூடமுடியவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப் படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி சூத்திரர் என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.

இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும் ஸ்நானம் செய்வதற்கோ, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கோ, வீதியில் நடப்பதற்கோ, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேல்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் இ சிற்சில சமயங்களில் இவர்களோடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர்களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்துகொள்ளுவதையும், சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்துகொள்வதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார். நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் போகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கொண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணுலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், “இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற ஐரோப்பியருக்குத் தீண்டாதவராகவும்”, இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம் பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்கவேண்டு மென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.

இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது ? அவர்களையா தொடுவது ? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டுவிடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாளனாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத்தனையோ உயர்குணங்களும் எவ்வித இழிவுமற்ற நம்மையா தேவடியாள் மகன், வைப்பாட்டிமகன், அடிமையென்று அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றனர். இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக்கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்துகொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்துவிட்டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக்கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. இது எதைப் போலிருக்கிறதென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு " இந்துக்கள் 'என்று சொல்லுவதற் கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும் நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை "' அல்லாதார் " என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு "மகமதியரல்லாதார்" பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.

ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப்பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும் இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.

பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக்கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டுமாமிசம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் "கள்' உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடை யுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே ? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா ? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா ? நம் துணி அழுக்காகாதா ? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா ? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா ? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக்கிறோம். மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாதவனாய் விடுவான் ? ஐரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா ? அவர்களை நாம் தீண்டாதார், பார்க்காதார் என்று சொல்லக்கூடுமா ? அப்படியே சொல்வதானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம் ? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலை களில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா ?

கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக்கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும் ? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக்கூடியவர் களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறோம். இந்தப்பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக்கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள் ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை ? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும் ? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப்படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடுதலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள். இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கொண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டிருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்ட்டும், ரெளலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது ? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோதரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்தவர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன். இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது ? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா ?.

--------------------------தந்தைபெரியார் அவர்கள் காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மாகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து -“குடிஅரசு” - 7.6.1925, 21.6.1925, 28.6.1925 --நூல்:- “பெரியார் களஞ்சியம் குடிஅரசு” தொகுதி -1 பக்கம் 31-36

பார்ப்பன சமாச்சாரம் என்றால் அப்படியே அமுக்கிவிடுவார்களே!


கீர்த்திவாசய்யர்!

எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்று நடந்த நிகழ்ச்சியையே மறந்துவிடக் கூடிய தமிழர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியா நினைவில் இருந்து தொலைக்கப்போகிறது?

தென்னக ரயில்வே பொது மேலாளராகயிருந்த பார்ப்பனர் கீர்த்திவாசன். (இப்பொழுது கொஞ்சம் நினைவுக்கு வந்தாலும் வரலாம்). வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு சேர்க்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 38 லட்ச ரூபாய்.

ஒரு நாள் வந்த செய்தி-யோடு கதை முடிந்து விட்டது. குற்றம் செய்த ஆசாமி பார்ப்பனர் ஆயிற்றே, ஊடங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் சு(சி)ண்டு விரல் நகத்தின் நுனியில் இருக்கும்போது, அதற்கு மேல் செய்தியை வெளியிட்டு விடுவார்களா?

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதுபற்றிய செய்தி ஒரே ஒரு தமிழன் ஏட்டில் மட்டும் வெளி வந்தது. சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டு இருந்ததாம். (யாருக்காவது தெரியுமா?) எந்த ஏடாவது ஒரு துளியளவு செய்தியையாவது கசிய விட்டதுண்டா?

கடந்த இரண்டுமுறை விசாரணை நடந்தபோது கீர்த்திவாச அய்யரோ, அவரின் சார்பில் வழக்குரைஞரோ நீதிமன்றம் வரவில்லையாம். நீதிபதி தட்சிணா மூர்த்தி என்ன செய்தார்? கீர்த்திவாசய்யருக்கும், அவரது மனைவி மீனாட்சி, மகன்கள் ஆனந்த், அரவிந்தன், ஆகியோருக்கும் பிணையில் (ஜாமீன்) வர முடியாத பிடிவாரண்டு ஒன்றைப் பிறப்பித்தார். மே 24 ஆம் தேதிக்குள் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு ஆணை பிறப்பித்தார் நீதிபதி.

24 ஆம் தேதியும் கழிந்து போய்விட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? நீதிமன்றத்துக்கு வந்தார்களா? என்ற செய்திகூட எந்த ஏட்டிலும் இந்நாள்வரை வரவில்லை. இதுவே ஒரு தமிழராக இருந்தால் இந்துவும், தினமணியும் முதுகில் தம்பட்டம் கட்டிக் கொண்டு அடித்துத் தூள் பரப்பியிருக்காதா?

துக்ளக் ஏட்டில் எப்படி எப்படியெல்லாம் கார்ட்டூன் போட்டிருப்பார்கள்?

மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் என்ற ஒரு பார்ப்பனர், கொலை வழக்கில் சிக்கினார். அவரைக் காப்பாற்றினாரே ஆச்சாரியார்.

ஆச்சாரியார் அமைச்சரவையில் மந்திரியாக இருந்த டி.எஸ்.எஸ்.ராஜன் கண்ட்ரோல் இருந்த காலத்தில் வெளிமாவட்டத்தில் 200 நெல் மூட்டைகளைக் கொண்டு போய் விற்றார். அதைப் பிடித்து வழக்கு தொடுத்தார் ஒரு காவல்துறை அதிகாரி. அந்த வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கியவர் இதே ராஜாஜிதான். ஊழல் வழக்கில் சிக்கிய எஸ்.ஏ.வெங்கட்ராமன் அய்.சி.எஸ். என்ற பார்ப்பனரைக் கொஞ்சம்கூடக் கூச்சநாச்சம் இல்லாமல் ரெவின்யூ போர்டு முதல் உறுப்பினராக நியமித்தவரும் சாட்சாத் அவரே!

பார்ப்பன சமாச்சாரம் என்றால் அப்படியே அமுக்கிவிடுவார்களே!. கீர்த்திவாசன் மட்டும் விதிவிலக்கா, என்ன!

------------------------------ மயிலாடன் அவர்கள் 29-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ஆரியமும் அண்ணா சொன்னதும்திராவிடர் கழகத்தில், ஒரு சில சொந்தக் காரணங்களுக்காக, நான் என்னைஇணைத்துகொள்ளவில்லையே தவிர, நான் என் 16_17 வயதிலிருந்தே, பெரியாரின் பற்றாளனாக உள்ளேன். என்னைப்போன்ற பல பேர், திராவிடர் கழகத்தில் உறுப்பினர்களாக இல்லாமல், வெறும் ஆதரவாளர்களாக, தமிழகத்தில் அல்ல; இந்தியாவில் அல்ல; அகில உலகிலும் உள்ளனர் என்பதை நான் பல மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளிலும் பயணம் செய்தபோது பார்த்திருக்கிறேன். எனவே, அப்படிப்பட்ட பெரியார் தொண்டர்கள் தைரியமாக வெளியே வந்து, அவர்களால் முடிந்த உதவிகளை இப்படிப்பட்ட பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தும் தோழர்களுக்குச் செய்து துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திராவிடர் கழகத் தோழர்கள் உங்களிடம் உண்டியல் ஏந்தி வந்தாலும், வருவார்களே தவிர, ஓட்டுக் கேட்டு வர மாட்டார்கள். அப்படியே நீங்கள் அவர்கள் ஏந்தி வரும் உண்டியல் நிறையப் பணத்தையும், சில்லரையையும் அள்ளிப் போட்டு விட்டீர்கள் என்றாலும், அந்தத் தொகையைக் கொண்டு அவர்கள் நீங்கள் வணங்குகிற கடவுளை, அதை உங்களிடம் புகுத்திய மதங்களை, அம்மதங்களினிமித்தம் செய்யப்படுகின்ற யாகங்கள், கிரியைகள், சடங்குகள் ஆகியவற்றையும், அவற்றுக்குப்பின் மறைந்துள்ள மடமையையும், அஞ்ஞானத்தையும், அசிங்கங்களையும், அதற்குக் காரண கர்த்தாவாக இருந்த, இன்னமும் இருந்து வருகின்ற வட்டமிடும் கழுகுகளான, வாய்திறந்து நிற்கும் ஓநாய்களான, நம் இனத்தைச் சுற்றி வளைத்துவிட்ட மலைப்பாம்புகளாக உள்ள பார்ப்பனர்களையும் உங்களுக்கு அடையாளம் காட்டி, அந்த நாசத்தின் நர்த்தனங்களிடமிருந்து, நயவஞ்சகப் பிசாசுகளிடமிருந்து, சிரித்து மயக்கிச் சல்லாபம் செய்து நம் இனத்தைச் சின்னாபின்னமாக்கும் சிறு நரிக் கூட்டத்தினிடமிருந்து மீட்கவே, கடமையுடன், இன்னொரு இடத்தில் பிரச்சாரம் செய்ய நீங்கள் கொடுத்த அந்த நன்கொடையை உபயோகிப்பார்கள். எனவே, அவர்களின் சுயநலமற்ற, பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரம் பட்டித் தொட்டிகளில் எல்லாம் பரவ, உங்களால் ஆன நன்கொடை-களை வழங்கி, உங்கள் மேலான ஆதரவைத் தர வேண்டும் என்றும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். எதிலும் புகுந்து சதி செய்து மதி மயக்கிய அந்த பூணூல் கூட்டம், இங்கும் தன் வேலையைக் காட்டி, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம்மைத் திசை திருப்பியது. குரு என்றால் யார்? அன்றைக்கு, நமக்குக் குரு அந்தப் பஞ்சாங்கப் பார்ப்பனன் தானே? அந்தக் குரு நமக்கு என்ன சொல்லித் தெய்வத்தை அடையாளம் காட்டினார்?

நம்முடன் தன்னையும் சேர்த்துக் கொண்டு, நான்கு வருணங்கள் என்று பிரித்து அதில், தான் பிரம்மாவுக்குத் தலையில் பிறந்தவன் என்றும், சத்திரியன் அதாவது அரசன் பிரம்மாவின் மார்பிலே பிறந்தவன் என்றும், வைசியன் அதாவது வாணிகம் செய்பவன்பிரம்மாவின் தொடையிலே பிறந்தவன் என்றும், கடைசியாக நாலாவதாக உள்ள நாம் அனைவரும், அதாவது, உடல் உழைப்-பில் வாழும் நாம், பிரம்மாவின் காலில் பிறந்த சூத்திரர்கள் அதாவது மேற்சொன்ன மூன்று மேல் ஜாதிப் பிரிவினருக்கும் பிறந்த வேசி மக்கள் என்று தாழ்த்தி வைத்ததோடு விட்டார்களா? சூத்திரர்கள் வேதத்தை, வித்தைகளைப் படிக்க கூடாது என்றனர். பின் அந்த அயோக்கியக் குருவிடம் எந்தத் தெய்வத்தை நாம் தெரிந்து கொள்வது? அதையும் மீறி, வேதத்தைப் படித்தால், அவன் நாக்கை அறுக்க வேண்டும். கேட்டால், அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கின்றவன் எப்படி நமக்குக் குருவாக இருக்க முடியும்?

நம்மை, நம்மோடு பிறந்த நம் இனத்தவரை, நாமே வேசி மக்கள் என்று அழைக்க, அழைக்க மட்டுமா, இன்றளவும் வெறுக்கவும் பழகினோம். நமக்குச் சொல்லப்பட்ட கடவுளை வணங்க, நாமே நமது சொந்த உழைப்பில், ஊதியத்தில், பணத்தில், கட்டிய அதே கோயிலில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டோம். நம்மைத் தாழ்ந்த ஜாதி என்று பாகுபாடு செய்தும், வெட்கம் மானமின்றி, அந்தக் குரு சொல்லிய எல்லாப் பூஜைகளையும், புனஸ்காரங்களையும், கிரியைகளையும் மறுப்புச் சொல்லாமல் தலைமேல் தாங்கிச் செய்து, அவருக்குத் தட்சணை என்ற பெயரில் நம் உடைமைகளையெல்லாம் வாரி வழங்கினோம். அரசர்களும், ஆளவந்தார்களும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனையை அளந்து தானம் செய்தனர். ஆயினும் என்ன பலன்? கண்ட லாபம் என்ன?

எனவே தான், அண்ணா சொன்னார்:

நாலு தலைச் சாமிகள், மூன்றுகண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறு தலைச் சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரசம் அனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண்படைத்த கடவுள்கள் நமக்கு வேண்டாம்.

நமக்கு ஊன் வேண்டாத சாமி, ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி, ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம், பாயசம், அக்காரவடிசல் கேட்காத சாமி, அங்கே இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி, அர்ச்சனை, உண்டியல் என்று கூறி அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து தியானத்தைப் பெறட்டும். அருளைத் தரட்டும். நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்லவென்று கூறுகிறோம்.

நமக்கு ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நாகன் தங்க ஓர் உலகம். மேலே ஏழு, கீழே ஏழு எனப்பதினான்கு உலகங்களாம்.அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம். பூலோக, புவலோக, சுவலோக, சுனலோக, தபலோக, மகலோக, சந்திரலோகம் என மேல் உலகம் ஏழாம். இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே. நமக்கு இவை வேண்டாம். நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும். நன்செயும், புன்-செயும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்குச் சுபீட்சமும் இருக்-கட்டும். காமதேனும், கற்பக விருட்சமும், ரம்பையும், ஊர்வசியும் இருக்கின்ற உலகத்திலே அந்த உந்திவிருத்திகள் உலா வரட்டும் என்று.

நம் பெண்களுக்கு, தாய்மார்களுக்கு, உலகில் எத்தனை கண்டங்கள் என்று தெரியாது. எத்தனை கடல்கள் என்று கேட்டால் தெரியாது. தினம் தினம் அனுபவிக்கின்றார்களே அந்த மின்சாரத்தை யார் கண்டுபிடித்தார்கள் என்று கேட்டால் தெரியாது.

பள்ளிகொண்ட கோலத்திலே விளங்கும் ஸ்ரீரங்கநாதன் எப்போதும் படுத்துக் கொண்டுதான் இருப்பார். அவர் போட்டுக்கொண்டுள்ள நகைகளை எழுந்து பார்க்கக்கூட அவருக்குத் தோன்றாது. அவர் மீதுள்ள நகைகளைக் கணக்கிடவே முடியாது. வைரத்திலே வெள்ளை நாமம் என்-றால், கெம்புக்கல்லினால் ஆக்கப்பட்டது சிவப்பு நாமம். மூலஸ்தானம் முதற்-கொண்டு மடைப்பள்ளிவரைக் கையாளப்-படும் சாமான்கள் அத்தனையும் வெள்ளி. வெள்ளி அண்டாக்கள், வெள்ளியாலான குத்துவிளக்குகள் எண்ணில.

உயிருள்ள பாம்பின் மேல் படுத்துக் கொண்டு கடலிலே அறிதுயில் செய்யும் மகாவிஷ்ணுவுக்கு வாகனமேன்? சிவனார், புலித்தோல் தவிர எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை என்கிறார். அப்படியிருக்கச் சிவனாருக்கு வாகனமேன்? தங்க யானை ஏன்? வெள்ளி ரிஷபமேன்?

அமெரிக்கா செல்வபுரியல்லவா? அமெரிக்காவில் ஏசுநாதருக்குத் தங்கத்-தேர் செய்ய முடியாதா? இத்தாலியிலே முடியாதா? இதுவரை நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நினைத்தால், ஏசுநாதருக்கு வைரக் கருடவாகனம் செய்ய முடியாதா? செல்வமில்லையா அவர்கள் நாட்டில்! நம் நாட்டில் தானே தங்கத்திலே கருட வாகனங்கள், தங்க யானைகள், வெள்ளி ரிஷபங்கள் எல்லாம் பல கோயில்களில் வைரமாக, முத்தாக, பச்சையாக, நவரத்தினங்களாக நகைகள் இழைத்து வைத்திருக்கிறார்கள்.

பொருள் அழியக்கூடியது; பொருள் மீதுள்ள பற்றை அகற்றுங்கள்; பொருள் தேவையில்லை. பற்றறுப்பதே ஆண்டவனை அடையும் வழி என்று பேசிவிட்டு அதே ஆண்டவனிருக்கும் கோயில்களில் எவ்வளவு பொருள்? இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாயமுறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்-தரும்? பாம்பை எடுத்துப்படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும்-போது குழியில் வீழ்வாரா? நாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்று ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார். அதன் இடுக்கில் போய்ச் சேரார். இழிவைத் தேடார் என்று அறிஞர் அண்ணா சொன்னதையே மீண்டும் உங்கள் அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.


---------------டி.ஏ.சாமி சேலம் அவர்கள் எழுதிய கட்டுரை - நன்றி:- “விடுதலை” 29-5-2010

29.5.10

பெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது - வெற்றிகொண்டான் உரை

தமிழ் நாடல்ல - தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் நமக்கு மிகப் பெரிய பெருமை
அலைகடல் வெற்றிகொண்டான் உரை

தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் நமக்கு மிகப் பெரிய பெருமையென்றார் அலைகடல் வெற்றிகொண்டான்.

சென்னை - புரசைவாக்கம் தாணா தெருவில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நேற்று (28.5.2010) நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பெரியாரும் வீரமணியும் என்ற தலைப்பில் தி.மு.க. சொற்பொழிவாளர் வெற்றிகொண்டான் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

நான் எனது சொந்த வீட்டில், தாய் வீட்டில் பேசும் உணர்ச்சியோடு பேசுகின்றேன். இங்கு நான் உரையாற்றும்போது புதுத் தெம்பும், புத்துணர்ச்சியும் பெறுகின்றேன்.

பிரித்துப் பார்க்காதே

தந்தை பெரியாரும்_ வீரமணியும் என்று சொல்லும்போது இருவரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. பெரியார் சிந்தித்தார்- சொன்னார்- செயல்பட்டார் - நம்மை மனிதராக்கினார். கொள்கைச் சொத்துக்களை விட்டுச் சென்றார்- நமக்கு வீரமணியையும் தந்தார்- வீரமணியோ பெரியார் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இதில் ஏன் இவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும்?

பிரித்துப் பேச ஆரம்பித்தால் உள்ளே எதிரி புகுந்துவிடுவான். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கருஞ்சட்டைத் தொண்டன் என்பவன் யார்?

இந்திய எல்லையில் இராணுவ வீரர்கள் நாட்டைப் பாதுகாப்பது போல ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழனும் இந்த நாட்டைப் பாதுகாத்து வருகிறான்.

இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற வாழ்வு எல்லாம், வளம் எல்லாம் பெரியார் என்ற தலைவன் கொடுத்துச் சென்றது.

ஒரு காலத்தில் வடநாட்டான் நம்மை ஆண்டான். நம் ஆட்சியை இருமுறை கவிழ்த்தான். இன்றைக்கு இந்திய ஆட்சியைக் கவிழாமல் காக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு அல்லவா கிடைத்திருக்கிறது! இந்தப் பலம் நமக்கு எங்கே இருந்து கிடைத்தது? காரணம் பெரியார் அல்லவா!

இந்தியாவின் தலைநகரம் டில்லியா? தமிழ் நாடா? என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதே! நம்மைப் பெரியார் ஆளாக்கி வைத்து விட்டுச் சென்ற தன்மையில் கிடைத்த மரியாதை இது.

பெரியார் நாடு

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் சரியானது, - நமக்குப் பெருமை அளிக்கக்கூடியதும் ஆகும்.

பெரியார் என்ற ஒரு மாமனிதன் நம்மிடம் தோன்றியிருக்காவிட்டால் இந்தத் தமிழ் ஏது? தமிழன் ஏது? எதிரி நம்மை ஏப்பமிட்டிருக்க மாட்டானா?

எதிரியின் கைகளில் இருந்த ஆயுதங்களை யெல்லாம் பறிமுதல் செய்து தந்தவர் பெரியார்தான்.

(சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில், பெரியாரும், வீரமணியும் என்ற தலைப்பில் அலைகடல் வெற்றிகொண்டான் உரை கேட்கத் திரண்டிருந்தோர்...)

பெரியாருக்குப் பிறகு வீரமணி

உங்களுக்குப் பிறகு இந்த இயக்கத்துக்கு வாரிசு யார்? என்று பெரியாரைக் கேட்டார்கள். கொள்கைதான் என்று பளிச்சென்று சொன்னார் . அந்தக் கொள்கைதான் நமக்குக் கிடைத்த ஆசிரியர் வீரமணி.

சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆதிக்கவாதிகள் மிரட்டிய போது கூட தம் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றையெல்லாம் முறியடித்துக் காட்டியவர் பெரியார்.

பெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது

உலகில் எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள்; கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள் - ஒழிக்கப்பட்டார்கள். ஆனால் நம் அய்யாதான் எல்லா எதிர்ப்புகளையும் பொடிப்பொடியாக்கிக் கொள்கையில் வெற்றி பெற்றார்.

உலகத்தில் எந்த கொள்கை அழிந்தாலும் நம் பெரியார் தந்த கொள்கைக்கு அழிவே இல்லை. அது நம்மிடம் இருக்கும் வரைக்கும்தான் நமக்குப் பாதுகாப்பு.

கடைசிக் கருஞ்சட்டைக்காரன் உள்ளவரை தந்தை பெரியார் கொள்கைக்கு அழிவே இல்லை.

பெரியார் இருந்த காலத்தில் இருந்த எதிர்ப்புக்கும் ஆசிரியர் வீரமணி காலத்தில் இருக்கும் எதிர்ப்புக்குமிடையே வேறுபாடுகள் உண்டு.

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் ஊடகங்கள்

இப்பொழுது இருக்கும் ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு மூடநம்பிக்கைகளைப் பரப்பி வருகின்றன. காலை முதல் இரவு வரை மூடச் சரக்குகள்தான்.

நீ பிரதமராக வேண்டுமா? உன் பெயரோடு இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள் என்கிறான். அந்த ஜோதிடனை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அட முட்டாளே! அடுத்தவனை ஏண்டா பிரதமராக்க ஆசைப்படுகிறாய்? உன் பெயரில் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு நீ ஜனாதிபதியாகப் போகவேண்டியதுதானே? என்று கேட்பேன். என் கண்களுக்கு அவன் சிக்க மாட்டேங்குறான்.

காந்தியைச் சுட்டபோது
கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கிறோம். இருக்கு, இருக்கு என்பவனைப் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன். காந்தியார் மேல்சட்டை கூட இல்லாமல் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு திரிந்தார். உண்மையான ஆசிரமவாசி போல இருந்தவர். அவரை கோட்சே என்ற பார்ப்பான் சுட்டபோது எங்கேடா போச்சு உன் கடவுள்? எதற்கு எடுத்தாலும் ராம் ராம் என்பவராயிற்றே காந்தியார்! அந்த ராமன் வந்து காப்பாற்றினானா? ( பலத்த கைதட்டல்)

வேலும் சூலாயுதமும் ஏன்?

எவ்வளவு காலமாக இந்த தெய்வங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வளரவே யில்லையே! பிள்ளைக் குட்டிகளைக் காணவில்லையே! இது கூட இல்லாமல் எதற்கடா உன் கையில் வேலு, சூலாயுதம் என்று கேட்பதில் என்ன தப்பு?

அது என்ன மரண யோகம்?

இராகு காலம் என்கிறான் மரண யோகம் என்கிறான். இப்படியெல்லாம் சொல்லி நாள் ஒன்றுக்கு நம்மை மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் படுக்க வைத்துவிட்டானே!

மரண யோகத்தில் அந்த ஒன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது? ஒன்றரை மணி நேரத்தில் செத்துப் போய் மீண்டும் பிழைத்துக் கொள்கிறானா? இப்படியெல்லாம் கேட்கக்கூடிய பகுத்தறிவை நமக்குக் கொடுத்துச் சென்ற தலைவர்தான் நம் பெரியார். இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கக் கூடிய ஒரு கூட்டம் உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் தந்தை பெரியாரே.

கர்ப்பக்கிரகத்துக்குள் என்னென்ன அக்கிரமங்கள்?

நாம் கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்றால் தீட்டு என்கிறான். நீ செய்கிற வேலை என்ன? அந்தக் கடவுளுக்கு முன்னால்தான் எல்லாம் நடக்குது. பிரேமானந்தா என்ற சாமியார் செய்யாத அக்கிரமமே இல்லை. இந்தியாவிலேயே பெரிய வக்கீலைப் பிடித்தான். அவர்தான் ராம் ஜெத்மலானி. கடைசியில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்ததே. எங்கே போனான் கடவுள்?

சாமியார் ஆகுமுன் அறுவை சிகிச்சை

நித்தியானந்தாவாம். அடேயப்பா ; என்ன கெட்டிக்காரன்? நான் சட்டப்படி தவறே செய்யவில்லை என்கிறானே. இனிமேல் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். சாமியார் ஆகவேண்டும் என்றால் அரசின் அனுமதி பெறவேண்டும். சாமியாராவதற்கு முன் அவனை மருத்துவமனையில் வைத்து சில அறுவை சிகிச்சைகளைச் செய்யவேண்டும்.

ராமனை செருப்பால் அடித்தாரே பெரியார்!

பெரியார் சேலத்தில் ராமனை செருப்பால் அடித்தார். எவன் எதிர்த்தான்? சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ராமன்பாலம் என்று குறுக்குச் சால் ஓட்டுகிறார்கள். ராமன் கட்டிய பாலம் என்கிறார்கள். ராமன் என்பவன் என்ஜினீயரா என கலைஞர் கேட்டார். பதில் தெரிந்தால் மரியாதையாகச் சொல். உடனே நாக்கை அறுப்பேன் என்கிறானே! பெரியார் இல்லை என்ற தைரியமா? பெரியார் இல்லை என்றால் என்ன? இதோ கருப்புச் சட்டைக்காரர்கள் இருக்கிறார்களே, விட்டு விடுவார்களா?

பெரியார் கொள்கை நாளும் வெற்றி பெற்று வருகிறது

டில்லி உச்ச நீதிமன்றத்துக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தலைமை நீதிபதியாக வந்தாரே பெரியார் மறைந்து வீரமணி காலத்திலே! - இது பெரியாருக்கும் வீரமணிக்கும் கிடைத்த வெற்றியல்லவா?

542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தலைவராக வந்துவிட்டாரே! ராமன் பிறந்ததாகக் கூறும் உத்தரப் பிரதேசத்திலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் அமைச்சராக வந்துவிட்டாரே! இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா? பெரியார் மறைந்திருக்கலாம் ஆனால் அவர் கொள்கை மறையவில்லை. நாளும் வெற்றி பெற்றே வருகிறது.

இந்த நாட்டிலே முதல் கவர்னர் ஜெனரல் யார் என்றால் ராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர்தான். கவர்னர் ஜெனரலாக இருந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் வந்தார்.

பெரியார் கொடுத்த சீதனம்

பச்சைத் தமிழர் காமராசர் பார்த்தார் பெரியார். சுற்றிச் சுற்றிப் பார்ப்பான்தானே அதிகாரத்துக்கு வருகிறான். இதற்கொரு முடிவைக் கண்டுபிடித்தார் பெரியார். அந்தக் கண்டுபிடிப்புதான் பச்சைத் தமிழர் காமராசர். காமராசரை நேருவா கண்டுபிடித்தார்? காங்கிரஸ்காரர்களா கண்டுபிடித்தார்கள்? கண்டு பிடித்தது பெரியார்தானே?

பெரியார் கொடுத்த சீதனம்தான் காமராசர். காமராசர் தயங்கினார்; தைரியம் கொடுத்தவர் பெரியார். குடியாத்தம் தேர்தலில் தானாகச் சென்று ஆதரித்தார். பெரியாரைத் தொடர்ந்து அண்ணாவும் ஓடோடிச்சென்று ஆதரித்தார். குணாளா,- குலக்கொழுந்தே - அஞ்சாதே! என்று தைரியம் கொடுத்து எழுதினார் அண்ணா.

காமராசரின் சாதனை

தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை அல்லவா இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆக்கினார் பச்சைத் தமிழர் காமராசர் காரணம் பெரியார் அல்லவா?

தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத்தது. உலக உயர் மொழிகளின் வரிசையிலே நம் அன்னைத் தமிழ்.

கோவை செம்மொழி மாநாட்டிலே

நமது தலைவர்கள்

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலே நமது முதல்வர் கலைஞர் அருகில் ஆசிரியர் வீரமணி அவர்களும் அமர்ந்திருக்கும் அந்த அழகிய காட்சியைக் காணவேண்டுமே!

மனிதாபிமானம் பெரியார் கற்றுத் தந்தது

தலைவர் கலைஞர் ஆட்சியிலே மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை. உயிர் காக்கும் மருத்துவம், - அவசர உதவிக்கு 108,தம் சொந்த வீட்டையே மருத்து-வமனைக்கு அர்ப்பணிப்பு; தளபதி ஸ்டாலினோ தம் குடும்பத்தோடு மருத்துவ மனைக்கு உடல் ஒப்படைப்பு இந்த மனிதநேயம் நம் அய்யா கற்றுக் கொடுத்த கொள்கையிலிருந்து கிடைத்த தல்லவா?

நம் உயிரைக் கொடுப்போம்!

திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டது. இன்னொரு திருவள்ளுவர் வரவில்லை.

இன்னொரு தந்தை பெரியார் தோன்ற இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

நம்மிடம் வாழும் நமது தலைவர்களை கலைஞரை, ஆசிரியர் வீரமணியை நம் அனைவரின் உயிரையும் தந்து அவர்களின் ஆயுளை நீள வைப்போம் என்று குறிப்பிட்டார்.

------------------------------- “விடுதலை” 29-5-2010

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு
மக்களவையில் பிரதமர் அளித்த வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும்;
இல்லையேல் இந்தியாவே கொந்தளித்து எழும்!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்வதில் தடங்கல் வருமானால், இந்தியா முழுமையிலும் உள்ள பெரும்பான்மை மக்கள் கொந்தளித்து எழுவார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:


2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் - ஜாதி வாரிக் கணக்கெடுப்பு குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பு தேவை என்ற கருத்தை, அநேகமாக இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.


பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?


இந்தச் சூழலில் இம்மாதம் 7 ஆம் தேதி மக்களவையில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இதுகுறித்து உறுதி அளித்திருக்கிறார்.


மத்திய அமைச்சரவை நேற்று (26.5.2010) கூடி இதுபற்றி ஆலோசித்த நிலையில் இரண்டே இரண்டு அமைச்சர்கள் இதில் கருத்து வேறுபாடு காட்டினர் என்பதற்காக, மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மக்களவையில் பிரதமர் அளித்த உறுதிமொழிக்கு மாறானது இந்த முடிவு.
இரண்டு பேர் மாறுபடுகிறார்கள் என்பதற்காக கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வுரிமையைச் சேர்ந்த ஒன்றைக் கிடப்பில் போடுவது எந்த வகையில் நியாயம்?


திட்டக்குழுவின் திட்டவட்டமான கருத்து


11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்திற்கான கருத்துருவில் திட்டக்குழு (Planning Commission) மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்புத் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரும் ஒப்புக் கொண்டுள்ளாரே!


திட்டக்குழுவின் தலைவர் வேறு யாருமல்லர்- பிரதமர்தான். 11 ஆவது திட்டக்குழுவின் அறிக்கைக்கு முன்னுரை வழங்கிய பிரதமர் பின்வருமாறு கூறியிருக்கிறார்:


We need to ensure that growth is widely spread so that its benefits, in terms of income and employment, are adequately shared by poor and weaker sections of the society especially the Scheduled castes and the Scheduled Tribes, (STS) Other Backward Classes and Minorities.


வருவாய், வேலை வாய்ப்பு போன்ற வளர்ச்சியின் பயன்கள், சமூகத்தில் உள்ள அனைத்து ஏழைகள் மற்றும் பலவீனமான பிரிவு மக்களையும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களையும், பரவலாகச் சென்றடைகிறதா என்பதைப்பற்றி நாம் உறுதி செய்து கொள்ளவேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.


மேலும்,திட்டக்குழுவின் அறிக்கையில் திட்டவட்டமாகத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்.


இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மக்கள்தொகை விவரங்கள்


6.111. The Second Backward Classes Commission headed by B.P.Mandal (1980), basing its calculation on the Census of 1931, estimated that OBCs constituted 52% of the population. Recently, the NSSO 61st Round (July 2004 to June 2005) report on ‘Employment and Unemployment Situation among Social Groups in India’ gave an estimate of OBCs constituting 41% of the population. State-wise, OBC-wise data on population as well as vital and demograhic variables are not available, which is the main hurdle in the formulation of policies and programmes for the development of Other Backward Classes.


6. 111 பி.பி. மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் (1980), 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மக்கள் தொகையில் 52 விழுக்காடு அளவுக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் இருப்பதாக மதிப்பிட்டிருந்தது. இந்தியாவில் உள்ள சமூகக் குழுக்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் அற்ற தன்மை என்ற 61 ஆவது சுற்றுக்கான (2004 ஜூலை முதல் 2005 ஜூன்வரை) அண்மையில் வெளியிட்ட தனது அறிக்கையில் என்.எஸ்.எஸ்.ஓ. அமைப்பு இப்பொழுது நாட்டில் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் 41 விழுக்காடு இருப்பதாக மதிப்பிட்டுக் கூறியுள்ளது. மாநில வாரியான, பிற்படுத்தப்பட்ட பிரிவு வாரியான மக்கள் தொகை பற்றிய புள்ளி விவரங்களும், அதே போன்று முக்கியமான அறிவியல்ரீதியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களும் இல்லாத நிலைதான், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் முன்னேற்றத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதிலும், திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் பெருந்தடையாக இருக்கிறது.


திட்டக்குழு இன்னொரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.


சமூக முன்னேற்றம்


6.128. Like SCs, STs, Minorities, and Persons with Disabilities, there is an imperative need to carry out a census of OBCs now or in the next census in 2011. In the absence of exact assessment of their population size; literacy rate; employment stauts in government, private and unorganised sectors; basic civic amenities; health status; poverty status; and human development and HPIs; it is very difficult to formulate realistic policies and programmes for the development of OBCs.


6. 128 தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் மாற்றுத் திறனாளிகளின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது போன்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் தொகையின் கணக்கெடுப்பையும் இப்போதோ அல்லது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதோ மேற்கொள்வது மிகவும் தவிர்க்கமுடியாத அவசரமான தேவையாகும். அவர்களின் சரியான மக்கள் தொகை அளவையும், அவர்கள் பெற்றுள்ள கல்வியறிவு விகிதம் பற்றியும், அரசு, தனியார் துறை மற்றும் முறை சாராத் துறைகளில் அவர்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், அவர்கள் பெற்றுள்ள அடிப்படை சுகாதார மற்றும் இதர சமூக வசதிகள், அவர்களின் வறுமை நிலை, அவர்களின் மனித ஆற்றல் வளர்ச்சி, அவர்கள் பெற்றுள்ள மனித ஆற்றல் அளவு ஆகிய விவரங்கள் இல்லாத நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் முன்னேற்றத் திற்கான ஆக்கரீதியான கொள்கைகளை_ உருவாக்குவது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு, பொருளாதார முன்னேற்றம், தேவையான நிதி ஒதுக்கீடு போன்றவற்றிற்கு ஜாதி வாரிய புள்ளி விவரங்கள் மிக மிக அவசியம் என்றும் திட்டக்குழுவின் அறிக்கை கூறியுள்ளது. அந்த அறிக்கையின் முன்னுரையிலும் அதனை வழிமொழிந்த பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


பெரும்பான்மைக் கருத்து


நீதிமன்றத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான புள்ளி விவரம் கேட்கப்படுகிறது.


இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளும் பெரும்பாலும் (பா.ஜ.க. உட்பட) இதற்கு உடன்பாடு தெரி-வித்துள்ள நிலையில் இதற்கு முட்டுக்கட்டை என்றால் இதன் பின்னணி இரகசியம் என்ன?


புதிய ஜனநாயகமா?


பெரும்பான்மையான மக்களின் உரிமையை நிராகரிப்பதுதான் புதிய ஜனநாயகமா?
இந்தப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை வாங்கித்தான் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.


முதலமைச்சருக்கு வேண்டுகோள்


முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் சமூக நீதிக்கண்ணோட்டத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்தவர் என்ற முறையில் மத்திய அரசுக்கு இந்த மிக முக்கிய பிரச்சினையில் தேவையான அனைத்து அழுத்தத்தையும் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


இந்தியாவே கொந்தளிக்கும் - எச்சரிக்கை!


எல்லாவற்றையும் புறந்தள்ளி மத்திய அரசு நடந்து கொள்ளுமானால் இந்தியா முழுமையிலும் பெரும் கொந்தளிப்பும், போராட்டமும் நடைபெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும். காரணம், இது பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினையாகும்.

சென்னை

27.5.2010

தலைவர்,

திராவிடர் கழகம்

--------------------"விடுதலை” 27-5-2010

28.5.10

பார்ப்பனர் ஒப்பாரி!பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு குறைத்தது வரவேற்கத்தகுந்தது; இதன்மூலம் கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூடப் பொறியாளர் ஆகும் வாய்ப்பு ஏற்படும் என்பது சமூகநீதியாளர்களின் கண்ணோட்டமாகும்.

நீண்ட ஆயிரம் ஆண்டுகாலமாக பிறப்பின் அடிப்படையில் எல்லா வாய்ப்புகளையும் தின்று உப்பியது ஒரு கூட்டம்; பெரும்பாலான இந்த மண்ணுக்குரிய மக்களோ, மதத்தின் பெயரால், ஆதிக்கக் கூட்டத்தால், மிதிக்கப்பட்டுக் கிடந்தனர்.

இந்தக் கண்ணோட்டத்தில் சமுதாயத்தைப் பார்ப்பவர்களுக்கு, மிதிபட்ட மக்கள் மேன்மை நிலையை அடைகிறார்கள் என்ற மனமகிழ்ச்சி _ நிறைவு ஏற்படும்.

ஆனால், பார்ப்பனர்களின் மனப்பான்மை என்ன? இவ்வார துக்ளக் இதழில் (2.6.2010) பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான துவேஷ உணர்வை தகுதி திறமை என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட்டனர்.

நுழைவுத் தேர்வை நீக்கியதைக்கூட கடுமையான சொற்களால் வெட்டிச் சாய்த்து விட்டனர் என்று ஆத்திரம் கொப்பளிக்க எழுதப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வை இருந்த இடம் தெரியாமல் வேரோடு வெட்டிச் சாய்த்து, கல்வித் தரத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டு வந்தவர்களுக்கு, கேவலம் இந்த கட் ஆஃப் மார்க்கை ஒழித்துக் கட்டவா வழி கிடைக்காது? என்று தனது மனப் புழுக்கத்தை எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது துக்ளக்.

பச்சைத் தமிழர் காமராசர் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது! பறையனைப் படிக்க வைத்தோம், டாக்டர் ஆனான்; அவன் ஊசிப் போட்டதால் எந்தக் குழந்தை செத்தது? பறையனைப் படிக்க வைத்தோம், என்ஜினீயர் ஆனான்; அவன் கட்டியதால் எந்தப் பாலம் இடிந்தது? என்று தந்தை பெரியார் பேசியதுபோல் பேசினாரே அதுதான் இந்தக் கூட்டத்துக்கு இப்போதும் பதில்.

காமராசரை மதிப்பதுபோல துக்ளக் சோ ராமசாமி எழுதுவதுண்டு. அந்தக் காமராசர்தான் இப்படி வினாக்களையும் தொடுத்தார் என்பதை வசதியாக மறந்துவிடுகிறது மனுதர்மக் கூட்டம்.

தகுதி மதிப்பெண் குறைக்கப்படுவதன் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் படிக்கக் கஷ்டப்படுவார்களாம்; இதனால் தேர்வுகளில் தில்லு முல்லுகளில் இறங்க மாணவர்கள் முயற்சிப்பார்களாம்.

எவ்வளவு திமிர் எடுத்த விவாதம்? பார்ப்பன மேல்தட்டு மக்கள் மட்டும்தான் படித்துக் கொண்டு இருக்கவேண்டும்; கீழ்த்தட்டு மக்கள் படிக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தால் அவர்களின் ஒழுக்கத்தையே கொச்சைப்படுத்தும் கொழுப்பினைத் தமிழர்கள் கவனிக்கத் தவறக்கூடாது.

பார்ப்பனர்கள் கூறும் மார்க் தகுதி திறமை என்பது அவர்களுக்கு வசதியானது. பொட்டை நெட்டுருப் போட்டு மார்க் வாங்கும் அந்தத் திறமை என்பது அவர்களுக்குப் பரம்பரைப் பரம்பரையாக வந்த ஒன்று. சமஸ்கிருதங்களை அர்த்தம் புரியாமல் மனப்பாடம் பண்ணிய, மரபு வழி வந்த தகுதி, திறமை அது.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு சம்பவம் நடந்தது. அப்பொழுது நேர்முகத் தேர்வு உண்டு. ஒரு உயர்ஜாதி மாணவன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று கூறி நீதிமன்றம் சென்றார்.

நேர்முகத் தேர்வின் குழுத் தலைவராக இருந்த ஜஸ்டிஸ் சோமசுந்தரம் அந்த வழக்கில் ஒரு பிரமாணப் பத்திரம் (அஃபிடவிட்) அளித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவன் எழுத்துத் தேர்வில் பதில் எழுதி மதிப்பெண் பெற்ற அதே கேள்வியை நேர்முகத் தேர்வில் கேட்ட பொழுது பதில் சொல்லவில்லை என்ற குட்டை உடைத்தார். ஆச்சாரியார்கூட நம் நாட்டுக் கல்வியின் நிலை அப்படித்தான் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டாரே!

இதிலிருந்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் தகுதி திறமை என்னவென்று தெரியவில்லையா? நேர்முகத் தேர்வில்தான் மாணவனின் உண்மையான தகுதி திறமையைக் கண்டறிய முடியும். ஆனால், நேர்முகத் தேர்வு கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் எப்பொழுதும் ஒத்தக் கருத்திலேயே இருப்பார்கள்.

பொறியியல் கல்லூரியில் சேரத் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதால், அது தி.மு.க.வுக்கு அரசியல் லாபமாம் பயன் அடைந்தவர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு விடுவார்களாம்; பயன் அடைந்தவர்கள் ஓட்டுப்போடத்தான் செய்வார்கள்? அதில் என்ன தவறு இருக்கிறது? தி.மு.க.வுக்கு இது சாதகமாகிவிட்டதே என்கிற ஆத்திரமும் இந்த அக்கிரகாரக் கூட்டத்துக்கு இருக்கிறது என்பதும் இதன்மூலம் அறிய முடிகிறது அல்லவா!

பார்ப்பனர்களுக்கு இருக்கும் இந்த உணர்வை பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொண்டால் சரி!


------------------ "விடுதலை” தலையங்கம் 28-5-2010

பார்ப்பனரல்லாதாரில் அயோக்கியர்களைக் கண்டு பிடிக்கும் தர்மா மீட்டர் எது?


(தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட அதிகம் அறியப்படாத அரிய கட்டுரை இது. முதன் முதலாக இணையத்தில் பதிவு செய்கிறோம். படியுங்கள்! சிந்தியுங்கள்!! தெளிவடையுங்கள்!!! -------- தமிழ் ஓவியா )

வாசக்காரி :- தம்பியாரே, இன்னும் கேளுங்கள். எந்தப் பார்ப்பானாவது, பார்ப்பானை திட்டுகிறானா? பார்ப்பானைத் திட்டுகிற பத்திரிக்கையைப் படிக்கிறானா? இதைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?

சத்திமூர்த்தியாரிடம் என்ன குணம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா அவர் “தமிழ்நாட்டுத் தலைவர்” ஆனதினால் நான் ஒன்றும் சொல்லக்கூடாது என்றாலும் உதாரணத்துக்குத் தானே சொல்லுகிறேன். அவரைப்பற்றி அவர் முதல் முதல் சீமைக்குப் போனது முதல் நாளது வரை நடந்ததை எந்தப் பார்ப்பானாவது, எந்தப் பத்திரிக்கையாவது ஏதாவது ழூச்சுகாட்டி எழுதுகின்றனவா? பேசுகின்றார்களா? ஒரே அடியாய் விளம்பரம் செய்து ஆகாயத்தில் தூக்கி வைத்து அவரை “ஒரு நாளாவது மந்திரி ஆக்கிப் பார்க்காமல் இருப்பதில்லை”என்று விரதம் எடுத்துக் கொண்டு இருப்பதோடு, அநேக பார்ப்பன அம்மாமார்களும் அதுவரை தலை முடிவதில்லை என்று சபதம் கூறி இருக்கிறார்கள். அதுதான் கிடக்கட்டும் தோழர் சர் ஆர்.கே.சண்முகத்ததைப் பற்றி அநேக பார்ப்பனரல்லாத கூலிகளும், காலிகளும் குரைக்கின்றனவே. அவரிடம் சொந்த நடவடிக்கைகளில், தனிப்பட்ட ஒழுக்கங்களில், சழூக கவுரவங்களில் எவ்வித கெட்ட நடத்ததையும் இல்லை என்பதை நம்மிடம் ஒப்புக்கொண்டு, பார்ப்பனர்களிடம் போய் கூலிகள் பெற்று பல பார்ப்பனரல்லாத காலிகள் குரைக்கின்றனவே. ஆனால் தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யர்வாள் அவர்களைப்பற்றி எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பனப் பத்திரிக்கையாவது ழூச்சுப் பேச்சு காட்டுகின்றனவா? எவ்வளவு கீழான மாமா பார்ப்பானாவது பேசுகிறானா? அவரும் ஒரு சமஸ்தானத்துக்கு ஒரு வேலை இல்லாத உத்தியோகஸ்தர் ஆக மாதம் 4,000 5,000 சம்பாதித்தார். அதுவும் போறாது என்று இன்னும் பெரிய உத்தியோகம் பெறப்பார்க்கிறார்.

சர். சி.பி.யின் பூசாரி வேலை

“லார்டு வில்லிங்டன் துரை மகனாருக்கு ரொம்ப வேண்டியவர்” என்கின்ற சேதி அடிபடுகின்றது. லார்டு வில்லிங்டன் துரையிடம் ஆக வேண்டிய காரியங்களுக்கு இவரே பூசாரி என்கின்றார்கள். இன்னமும் சி.பி.அவர்களைப் பற்றி என்ன என்னமோ மார்க்கட்டு நாடகக் கொட்டகை எல்லாம் கத்திரிக்காய் கடை முதல் தப்பட்டை அடிக்கப்படுகிறது. அதைப்பற்றி படமோ கேலியோ………………………….. ஒன்றும் இல்லாமல் காப்பிக் கடையிலும், வக்கீல் குமாஸ்தா அறைகளிலும், “பிறந்தால் சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்களுக்க கை,கால்களாகவாவது பிறந்து சுகம் அனுபவிக்க வேண்டும்” என்றுதானே புகழ்ந்து கூறி மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

இதிலிருந்து யார் கெட்டிக்காரர்கள்? யார் புத்திசாலிகள்? யார் மடையர்கள்? யார் சமூகத்துரோகிகள்? யார் வயிற்றுப் பிழைப்புக் கூலிகள்? என்பதையாவது உணர்ந்து பாருங்கள்.

சரி, பொப்பிலி ராஜாவை எதற்காக ராட்சதர் என்று சொல்ல வேண்டும்? ராவணனாவது ராமர் பெண்டாட்டியை தூக்கிக் கொண்டு போய் என்ன என்னமோ செய்தான் என்பதாகச் சொல்லி அதனால் ராட்சதன் என்று சொன்னார்கள், பொப்பிலி ராஜா யார் பெண்டாட்டியை அடித்துக் கொண்டு போனார்? என்ன செய்தார்? ஏன் அவரை ராட்சதர் என்று சொல்ல வேண்டும்? இனிமேலாவது எந்தப் பார்ப்பானாவது பொப்பிலியை ராட்சதன் என்று சொன்னாலும் சரி, படம் போட்டாலும் சரி, உடனே நம்ம ஆள் ஒருத்தர் அந்தப் பார்ப்பான் வீட்டுக்கு ஓடிப்போய் பார்த்து அவன் பெண்டாட்டி வீட்டில் இருக்கிறார்களா? இல்லையா? என்று தெரிந்து விட்டு வந்து அந்தப் பார்ப்பானை “அட மடையா,, உன் பெண்டாட்டி உன் வீட்டில்தான் இருக்கிறார்கள். இப்பொழுதுதான் நான் பார்த்துவிட்டு வந்தேன். ஏவனோ ஒரு ஏகாலி பேச்சைக் கேட்டுக் கொண்டு பொப்பிலி மீது சந்தேகப்பட்டு அவரை ராட்சதன் என்று சொல்லுகிறாயே. உனக்குப் புத்தியில்லையா? என்று கேட்பதோடு அது போலவே எழுதுவதோ ஆகிய காரியம் வைத்துக் கொண்டால் இனி எவனும் அந்த மாதிரி காரியம் செய்யவே மாட்டான்.


நாயை விரட்ட வேண்டாமா?

தம்பி :- அப்படியெல்லாம் கேட்பது நல்லதா? நாய் கடித்ததால் நாமும் அதைக் கடிக்கலாமா?

வாசக்காரி:- கடிக்க வேண்டாம். தடி எடுத்து விரட்டியாவது துரத்த வேண்டாமா? “ நாய்ச்சாமிக்கு மலக் கொழுக்கட்டை ஆராதனை” என்பது போல் அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டியது மனிதத் தன்மை மாத்திரமல்லாமல் அறிவாளியான வீரன் செயலுமாகும்.

நல்ல குதிரைக்கு சவுக்கை ஆட்டிப் போனால் போதும். தோல் மொத்தமாய் இருக்கிற மந்திக் குதிரை அல்லது எருமைக்கிடாவை மொத்தமான தொண்ணைக் கம்பால் இருக்கினால் தான் நகரும்.

அதுபோல் நம்ம தற்காப்பைப் பொறுத்தவரையாவது “ பதிலுக்குப் பதில் செய்யத் தயாராய் இருக்கிறோம் - எங்களால் முடியும்” என்றாவது காட்டிக் கொள்ளமல் கூட இருப்பதென்றால் நம்மை நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை.

அன்றியும், அப்படி இருந்ததாலேயேதான் எச்சக்கலைப் பார்ப்பான் கூட நம்மை ராட்சதன் என்கிறான்.

தம்பி :- இந்தப்பபடியெல்லாம் நாம நடந்தால் பாமர மூட ஜனங்களுக்கு நம்மிடம் இன்னும் அதிக வெறுப்பு ஏற்படும்படியாக இந்தப் பார்ப்பனர்கள் செய்துவிட மாட்டார்களா?

வாசக்காரி :- செய்து விட்டுப் போகட்டுமே. ஆதனால் என்ன முழுகிப் போகும்?
மந்திரி வேலையால் பயனென்ன?

தம்பி :- நம்மவர்களுக்கு மந்திரி வேலை போய்விடாதா?

வாசக்காரி :- போய்த்தான் தொலையட்டுமே. பார்ப்பான் மந்திரியாய் வந்து விட்டால் உலகமே முழுகிப் போய் விடுமா?

“ ஒரு வண்டி செங்கல்லும் பிடாரி ஆனது” என்பதுபோல் எல்லாப் பார்ப்பானுமே மந்திரிகளாய் விடட்டுமே நம்மை இனி என்ன அசைத்துவிட முடியமா?

மந்திரி அதிகாரம் நம்மை விட்டுத் தொலைந்ததால் நமது நிலை என்னதான் ஆகிவிடும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படவாவது மந்திரி உத்தியோகம் நம்மை விட்டுத்தான் ஒரு தடவையாவது தொலையட்டுமே. பாமர ஜனங்களுக்குப் புத்திவர ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்கலாமே?

இப்பொழுது “ பார்ப்பனர்கள் மந்திரிகளாய்விட்டால் பரிசம் இல்லாமல் பெண் கிடைக்கும்.ஆளுக்கு 2, 3 கூட கிடைக்கும்” என்று நினைத்துக் கொண்டிருக்கிற முட்டாள் பயல்களுக்கு அவனவன் வீட்டிலுள்ளதையாவது காப்பாற்ற முடிகின்றதா அல்லது மனுநீதி போல் நடக்க வேண்டி வருமா? என்பதையாவது தெரிந்து கொள்ளட்டுமே.

தம்பி :- அப்படியானால் இப்போது ஏன் “மந்திரி வேலை நம்ம கையை விட்டுப் போகக்கூடாது” என்று கருதுகின்றவர்களுடன் கூடிக் கொண்டு என்னையும் பாடுபடச் சொல்லுகிறாய்.

வாசக்காரி :- இது கூடவா தம்பி உங்களுக்குத் தெரியவில்லை.

தம்பி :- தெரியவில்லை

வாசக்காரி :- பார்ப்பான் சங்கதி வெளியாவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா? அதற்காக வேண்டி நானும் கூட்டத்தில் கோவிந்தாப்போடுகின்றேன்.

நான் கூப்பாடு போடாவிட்டாலும் நீ கூப்பாடு போடாவிட்டாலும் மந்திரி வேலை நம்ம ஆளுகள் கையை விட்டு ஒரு நாளும் போய்விடப் போவதில்லை.

ஆனாலும் நம்ம பிரசார சங்கதி நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? அன்றியும், நம்ம ஆட்களை இந்தப் பார்ப்பனர்கள் இவ்வளவு அயோக்கியத்தனமாய் தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்பது? அதற்காகத்தான்.

தம்பி :- சரி இன்னம் ஒரு நாளைக்கு சந்திக்கலாம். நான் போய் வருகிறேன்.

---------------8.9.1935 “குடிஅரசு” இதழில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது

திராவிடர் இயக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன சாதித்தது?

கா.அப்பாதுரையார்

எப்பாத் துறைக்கும்

இவனோர் பழம்புலவன்

அப்பாத் துறை யறிஞன்

ஆழ்ந் தகன்ற முப்பாலே

நூலறிவு நூறு புலவர்கள் சேரினவன்

காலறிவு காணார் கனிந்து

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பாராட்டப்பட்ட பன்மொழிப் பெரும் புலவர் கா. அப்பாதுரையார் நினைவு நாள் இந்நாள் (1989).

திராவிடர் இயக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன சாதித்தது என்று கேட்கும் அறிவுச் செவிடர்களின் செவிப்பறை கிழியும் அளவுக்கு அறிவு நூல்களை ஆய்ந்து தந்த புலவர் பெருமக்கள் வரிசையில் அப்பாதுரையாருக்குத் தனிச் சிம்மாசனமும் வைர மகுடமும் உண்டு.

தந்தை பெரியாரின் சீடர், திராவிடர் இயக்கத்தின் தூண்களில் ஒருவர்.

ஷேக்ஸ்பியர் கவிதைக் கொத்து (1941) இன்ப மலர் (1945), சிறுகதை விருந்து (1945), விந்தன் கதைகள், புத்தார்வக் கதைகள், பலநாட்டு சிறுகதைகள், ஆண்டியின் புதையல் (1953) நாட்டுப் புறச் சிறுகதைகள் ( 1954) ஷேக்ஸ்பியர் கதைகள், கட்டுரை முத்தாரம், எண்ணிய வண்ணம், செந்தமிழ்ச் செல்வம், தளவாய் அரியநாதர், குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு, இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு, பிளாட்டோவின் குடியாட்சி, வருங்காலத் தலைவர்களுக்கு என்ற எண்ணிறந்த நூல்களை யாத்த பெருமகன் ஆவார்.

திராவிட இயக்கத்தோடு அப்பாதுரையார் மிகவும் நெருக்கமாக ஆனதற்குப் புரட்சிக் கவிஞர் முக்கிய காரணமாவார்.

விடுதலை, லிபரேட்டர் ஏடுகளுடன் அப்பாதுரையார் அவர்களுக்கு நெருக்கம் அதிகமாகும்.

செந்தமிழ்ச் செல்வம், கலைமாமணி, விருதுகள் தமிழ்நாடு அரசால் இவருக்கு அளிக்கப்பட்டன.

5.6.1983 அன்று சென்னை பெரியார் திடலில், சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றியனார். அன்று அக் கூட்டத்திற்கு அப்பாதுரையார் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

அதில் திடுக்கிடும் ஓர் அரிய தகவலை வெளியிட்டார். ஆதி சங்கரர் கடைசியாக எழுதிய நூல் மனேசாப் பஞ்சகம் என்பதாகும். அதில் ஒரு சுலோகம் கடவுளை எதிர்ப்பது. அதன் காரணமாக ஆதிசங்கரர் உயிரோடு வைத்துப் புதைத்துக் கொல்லப்பட்டார் என்ற தகவலைக் கூறினார். (விடுதலை, 15.6.1983).

அப்பாதுரையார் அவர்கள் பற்றி அறிவுச் சுரங் கம் அப்பாதுரையார் என்னும் அரிய நூலை முகம் மாமணி எழுதியுள்ளார். அதனைப் பாராட்டி பேராசிரியர் வெள்ளையன் பகுத்தறிவு இலக்கிய அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி ரூ.10 ஆயிரம் பரிசளிக்கிறார்.

------------------- மயிலாடன் அவர்கள் 26-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27.5.10

கம்பனுக்குக் காவடியா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!கம்பனுக்கு இப்பொழுது என்ன கிராக்கி? மதுரை வட்டாரத்தில் கம்பனைக் காவடியாக்கித் தூக்கி ஆட்டம் போடும் ஒரு வேலை கிளம்பியிருக்கிறது. சென்னையில் கம்பன் பேரால் கழகம் வைத்து கம்பனைச் சீராட்டும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டுள்ளது.

திராவிடர் இயக்கம் கிளம்பி கம்பனை காட்டிக் கொடுக்கும் தமிழன் என்று அம்பலப் படுத்தியது. இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்ற விளம்பரம் பெற்ற தமிழ் அறிஞர்களுடன் திராவிடர் கழகத் தளபதியாக அன்று போர்க்கோலம் பூண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் விவாதப் போர் நடத்தி, எதிர்வரிசையில் நின்றவர்கள் தோற்றேன்! தோற்றேன்! தோற்றேன்! என்று ஒப்புக் கொள்ளும் வகையில் இனமான உணர்வைக் கட்டிக் காத்தார் தமது வழிகாட்டியான தலைவர் தந்தை பெரியார் அவர்களின் செறிவோடு!

அண்ணாவின் தீ பரவட்டும் என்ற அந்தவுரை பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி இளைஞர்கள் மத்தியில் தமிழன் என்ற இறுமாப்புப் பீறிட்டுக் கிளம்பியதுண்டு.

கம்ப இராமாயணம் ஆனாலும் சரி, அதன் மூல நூலான வால்மீகி இராமாயணமானாலும் சரி, மக்கள் மத்தியில் தோலுரித்துத் தொங்க விடப்பட்டது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட, பார்ப்பனர்களின் ஆதார நூல்களைக் கொண்டே தந்தை பெரியார் விளக்கிக் கூறி, பாமர மக்கள் முதற்கொண்டு, பட்டதாரிகள் வரை அறியும் வகையில் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாச நூல்களைப் பரிகாசத்திற்குரிய இடத்தில் ஒதுக்கித் தள்ளினார்.

ஒரு சமயம் தஞ்சாவூரில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்துக்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு என்றும், கலை உணர்ச்சிக்காகவும், அதனைப் போற்றவேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் அளித்த பதில் மிகவும் முக்கியமானது. நான் கலை உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல், கம்ப ராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்று பதிலடி கொடுத்தார் பகுத்தறிவுப் பகலவன்.

இதே கருத்தை அறிஞர் அண்ணாவும் விவாதப் போரில் விண்டுரைத்தார்.

இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட கம்ப இராமாயணத்தையே மக்கள் பெரிதும் அறிவர்; போற்றுவர். அதற்குக் காரணம் அதிலே உள்ள ஆரிய நெறி, தமிழ் மக்களை அடிமைப்படுத்தியதுதான். கம்ப இராமாயணத்திலே, சங்க நூல்களிலே காணப்படும் அணிகளும், அலங்காரங்களும், உவமைகளும் நிரம்ப உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. குறள் நன்றாக நுழைக்கப்பட்டு இருக்கிறது. கம்ப இராமாயணம் கவிச்சுவை என்று எதைப் பண்டிதர்கள் எடுத்துரைக்கிறார்களோ, அவை கம்பனின் சொந்தச் சரக்குமல்ல; சங்க நூற்கள் தந்த சுவை! அந்த மூலத்தை இழக்கும்படி நாங்கள் சொல்லவில்லை. அந்தச் சுவையை ஓர் ஆரியரின் கற்பனைக்குப் பயன்படுத்தியதால், அந்தக் கற்பனையின் விளைவு கேடு தருவதால், அந்த ஏடு வேண்டாம் என்று கூறுகிறோம்.

காடேக இராமன் கிளம்பும் போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில் சீதை கூறும் மொழியின் தன்மையும், இலக்குவன், கைகேயியை நிந்திக்கும் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறி உள்ளபடியே கம்பர் எழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களின் ஆபாச குணங்கள் கிடந்ததை தமிழர் கண்டு அவர்களைத் தெய்வங்கள் என்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள். ஆனால், கம்பரோ, ஆரிய இராமனைக் குற்றம் குறையற்ற சற்புத்திரனாக்கி, வழிபாட்டிற்குரிய தெய்வமாக்கிவிட்டார் (தீ பரவட்டும்) என்று ஆரிய அடிமையாக இராமாயணம் எழுதிய கம்பனை கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார் அறிஞர் அண்ணா.

அயோத்தி ராமன் பிரச்சினையெல்லாம் தமிழ் மண்ணில் எடுபடாததற்குக் காரணம் தந்தை பெரியார் கண்ட திராவிட இயக்கமே.

மறுபடியும் கம்ப இராமாயணப் பட்டிமன்றங்களையும் மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் ஆழ்வார்களான தமிழர்கள் நடத்திட முனைவார்களேயானால் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க திராவிடர் கழகம் தயார்! தயார்!!

காலமெல்லாம் கம்பனை இழித்துப் பேசியதால்தான் சென்னைக் கடற்கரையில் கம்பன் காலடியில் அண்ணா உறங்குகிறார் (அண்ணா சதுக்கத்தில் நுழைவு வாயிலில் கம்பர் சிலை) என்று பேசிய சாலமன்கள் கம்பனைத் தூக்கிக் கொண்டு வந்து தமிழன் தலையில் கட்டி, தமிழர்களை விபீடணர்களாக ஆக்குவதில் ருசி காண்கின்றார்கள் போலும்.

கம்பனையும், அவன் கால் வருடும் கூட்டத்தையும் வீதிக்கு வீதி தோல் உரிப்போம். எச்சரிக்கை! எச்சரிக்கை!!


--------------------- "விடுதலை” தலையங்கம் 27-5-2010