Search This Blog

9.5.10

குடிஅரசு பத்திரிக்கை பற்றி பெரியார் - 5

குடிஅரசின் அச்சமற்ற ஊழியம்

(குடிஅரசின் 8 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கம் இது).

நமது குடிஅரசுக்கு ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது ஆண்டின் முதல் இதழ் வெளிவருகிறது. நமது குடிஅரசு பிறந்தது முதல் இது வரையிலும் நாட்டில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை எதிரிகளும் வயிற்றெரிச்சலோடு ஒப்புக்கொண்டுதான் தீருவார்கள்.

நமது குடிஅரசு மக்களுடைய உயர்வு தாழ்வுக்குக் காரணமான எல்லா மாசுகளையும் போக்கிச் சமத்துவத்தை உண்டாக்கும் கொள்கையுடன் ஏற்பட்டது என்பதை வாசகர்களுக்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

முதலில் புரோகிதப்புரட்டில் உள்ள சூழ்ச்சிகளையும் அர்த்தமற்ற செயல்களையும் வெளிப்படுத்திச் சிக்கனத்தையும், மூட நம்பிக்கையைப் போக்கிப் பகுத்தறிவையும் போதித்தது.

இரண்டாவது மக்களிடம் ஜாதி பேதத்தையும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளையும் உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கும் வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களின் ஆபாசங்களையும், பொய்யுரைகளையும், அவைகள் பார்ப்பனர்களின் சுயநலத்திற்காக உண்டாக்கப்பட்டவை என்பதையும் எடுத்துக்காட்டிற்று.

மூன்றாவது மக்கள் ஏமாறுவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் காரணமான, அவதாரம், நாயன்மார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், ஜீயர்கள், சந்நிதானங்கள், பாதிரிகள், முல்லாக்கள், புரோகிதர்கள், குருக்கள் முதலியவர்களின் சூழ்ச்சிகளையும், மோசங்களையும் வெளிப்படுத்திற்று.

கடைசியாக, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு முதலியவற்றில் உள்ள சூழ்ச்சிகளையும், புரட்டுகளையும், இவ்வார்த்தைகளில் உள்ள அர்த்தமற்ற தன்மைகளையும் வெளிப்படுத்தியது.

மேற்கூறிய விஷயங்களைப் பிரசாரம் பண்ண நாம் எல்லா மதங்களையும் தாக்க வேண்டியதிருந்தது. மதங்களைத் தாக்காமல் மேற்கூறிய காரியங்களைச் செய்யவே முடியாது.

கடவுள், வேதம், ஆன்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, அவதாரம் ஆகிய புரட்டுகள் எல்லாவற்றையுமோ, அல்லது இவைகளில் சிலவற்றையோ, அல்லது பலவற்றையோ, அல்லது ஒன்றையோ அஸ்திவாரமாகக் கொண்டிராத மதமே உலகில் இல்லை. ஆகவே மேற்கூறிய அஸ்திவாரங்களையெல்லாம் அகழ்ந்தெறிய வேண்டுமானால் மதங்களையும் அடியோடு அழித்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்தது.

பெண்களின் சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும், குடிஅரசு செய்திருக்கும் அவ்வளவு வேலை இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகையும் செய்ததில்லை-யென்று தோள்தட்டிக் கூறலாம். இன்று நமதுநாட்டில் நடைபெறும் எந்தப் பெண்கள் கூட்டத்திலும் சுயமரியாதைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்-படுவதற்குக் குடிஅரசின் பிரசாரமே காரணமாகும்.

குடிஅரசு இவ்வாறு மத விஷயத்திலும், சமூக விஷயத்திலும், பங்கு எடுத்துக் கொண்டதோடு மாத்திரம் நிற்காமல் அரசியல் விஷயத்திலும் மக்கள் ஏமாறாமலிருக்குமாறு அடிக்கடி எச்சரிக்கத் தவறவில்லை.

அரசியல் வாதிகளின் புரட்டுகளையும், அயோக்கியத்தனங்களையும், தாட்சண்யமில்லாமல் பொது ஜனங்களுக்குக் கூறி வந்தது. இதன் பலனாகத் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்குப் பொது மேடைகளில் இடங்கிடைக்காத நிலைமையும் உண்டாயிற்று. இன்று தென்னாட்டில் வருணாசிரம தருமிகளுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் செல்வாக்கு இல்லாம-லிருப்பதற்குக் காரணம் குடிஅரசின் பிரசாரமே-யாகும். சுருங்கக் கூறினால் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் மதப் பிரசாரத்தையும் வருணாசிர தருமப் பிர-சாரத்-தையும், முதலாளி ஆதிக்க பிரசாரத்தையும் ஆரம்ப முதல் இன்று வரையிலும் வெட்ட வெளிச்சமாக்கிப் பொது ஜனங்களை ஏமாறாமல் இருக்கும்படி செய்து வருவதும் இக்காரணங்களில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை அடியோடு அழித்தால் ஒழிய நமது நாட்டுக்குச் சமதரும ராஜ்ஜியம் கிடைப்பதற்கு வழியில்லை என்று பிரசாரம் பண்ணி வருவதும் நமது குடிஅரசு ஒன்றேயாகும். இவ்வாறு குடிஅரசு மத விஷயத்திலும், சமூக விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் உள்ள சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வந்த காரணத்தினால் இதற்கு உண்டான எதிர்ப்புகள் எண்ணற்றவை.

மத பக்தர்கள் எல்லோரும் குடிஅரசு வாலிபர்களையெல்லாம் கெடுக்கிறதென்றும், குடிஅரசு பெண்களையெல்லாம் கெடுத்து விடுகிறது என்றும், குடிஅரசுப் பிரசாரத்தால் உலகமே முழுகிப் போய் விடுமென்றும், மறுபடியும் கடவுள் அவதாரம் பண்ணித்தான் குடிஅரசையும் அதை ஆதரிக்கும் சுயமரியாதைக்காரர்களையும் தொலைக்க வேண்டுமென்றும், ஊர் ஊராகப் பிரசாரம் பண்ணினார்கள்; பத்திரிகைகளில் எழுதினார்கள்; புதிய பத்திரிகைகளும் ஆரம்பித்து நடத்தினார்கள்; அவர்கள் நம்பும் ஆண்டவனை நோக்கித் தவமும் கிடந்தார்கள்.

இரண்டாவது, குடிஅரசு தோன்றுவதற்குமுன் சமுகச் சீர்திருத்தக்காரர்களாக விளங்கி வந்தவர்களெல்லாம் குடிஅரசைக் கண்டு நடுநடுங்கினார்கள். குடிஅரசு சீர்திருத்த விஷயத்தில் அளவு கடந்து செல்லுகிறதென்றும், இவ்வாறு சென்றால் உள்ள சீர்திருத்தமும் அழிந்து விடும் என்றும் மதங்களையெல்லாம் அழித்துவிட்டுச் சீர்திருத்தம் பண்ணுவது முடியாத செயலென்றும், ஆப்கானிஸ்தானத்தில் மாஜி அரசர் அமனுல்லாகான் அதிதீவிரச் சீர்திருத்தம் செய்ய முயன்றதனால் ராஜ்ஜியத்தை இழக்கும்படி நேர்ந்ததைப் போல குடிஅரசுக் கொள்கையும் மதிப்பிழந்து புறக்கணிக்கப்படுமென்றும், பலவாறாக பயமுறுத்தல் பிரசாரமும், அவதூறுப் பிரசாரமும் பண்ணினார்கள்.

மூன்றாவதாகப் பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் பொறாமைக்காரர்களும் குடிஅரசை ஒழிப்பதற்குச் செய்த சூழ்ச்சிகள் எண்ணத் தொலையாதவை குடிஅரசைத் தேசத் துரோகப் பத்திரிகையென்றும் அரசாங்கதாசப் பத்திரிகை யென்றும், ஜாதித்துவேஷப் பத்திரிகையென்றும், நாஸ்திகப் பத்திரிகையென்றும், பலவாறு பொது மக்களிடம் பிரசாரம் பண்ணினார்கள். குடிஅரசு பொது உடைமைப் பிரசாரம் பண்ணுகிறதென்றும், ஆகையால் அதையும் அதைச் சேர்ந்த கூட்டத்தாரையும் அடக்காவிட்டால் நாட்டில் கலகமும் கொள்ளையும் உண்டாகுமென்றும், அரசாங்கத்தாரிடமும், பொது மேடைகளிலும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பிரசாரம் பண்ணினார்கள்.

அதிலும் சென்ற இரண்டு ஆண்டுகளில், அதற்கு முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் குடிஅரசையும் அதன்மூலம் உண்டான சுயமரியாதை இயக்கத்தையும் அழிக்கப் பாடுபட்டவர்களின் முயற்சி மிகவும் அதிகம் என்றே கூறவேண்டும், நமது நாட்டில் உப்புச் சத்தியாக்கிரகத்திலும், சட்ட மறுப்பிலும் ஈடுப்பட்ட பார்ப்பனர்களும், சில பார்ப்பனரல்லாதாரும் குடிஅரசைப் பற்றியும், குடிஅரசை ஆதரிப்போரைப் பற்றியும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மேடையிலும், கூட்டத்திலும், நாள் தவறாமல், நாழிகை தவறாமல், அவதூறுப் பிரசாரம் பண்ணினார்கள். நம்மவர்களுக்குள்ளேயே சிலர் புத்தி தடுமாற்றத்தினாலேயோ அல்லது சுய நலத்தினாலேயோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலேயோ எதிரிகளுடன் சேர்ந்து கொண்டும், தேசிய சுயமரியாதை என்ற புதுப் பெயர் வைத்துக் கொண்டும் குடிஅரசையும் சுயமரியாதை இயக்கத்தையும் எதிர்த்தார்கள் இவ்வாறு எவ்வளவு பாடுபட்டுங்கூட அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையைச் சிறிதளவு குறைக்க முடிந்ததேயொழிய வேறு இந்த இதன் கொள்கைகளின் நமது எதிரிகளால் ஒரு உரோமத்தைக் கூட அசைக்கமுடியவில்லை என்பது வாசகர்களுக்குத் தெரியாத செய்தியல்ல.

குடிஅரசு தோன்றிய நாள் முதல் இது வரையிலும் தனது கொள்கையிலிருந்து சிறிதும் வழுவாமல், உழைத்து வருவதற்குக் காரணம், யாருடைய தயவையும் தாட்சண்யத்தையும் எதிர்பாராமல் வேலை செய்வதேயாகும் ஒரு கொள்கையைப் பிரசாரம் பண்ண ஏற்பட்ட எந்தப் பத்திரிகையாகட்டும், எந்த ஊழியராகட்டும், பிறருடைய தயவு தாட்சண்யத்திற்குக் கட்டுப்படாமலிருந்தால் தான் கொள்கைக்காக உழைக்க முடியும் என்ற தத்துவத்திலிருந்து சிறிதும் பிசகாமலே குடிஅரசு இது வரையிலும் இருந்து வருகிறது.

எண்ணற்ற எதிர்ப்புகளிருந்தும் குடிஅரசு பொது ஜனங்களின் கவனத்தை நாளுக்கு நாள் எதிர் பார்ப்பதற்கு அதிகமாகவே கவர்ந்து வருவதற்கு அதன், அசைக்கமுடியாததும், பகுத்தறிவுக்குப் பொருத்தமானதும் உண்மையில் நாட்டில் சமதருமத்தை யுண்டாக்கத் தகுந்ததும் ஆகிய கொள்கைகளே காரணமாகும் என்று நாம் கூறுவது மிகையேயாகும்.

ஆரம்பத்தில், குடிஅரசைத் தங்களுடைய தேர்தல் பிரசாரத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்று கருதி அதன் கொள்கைகளை ஒப்புக் கொள்வது போலச் சிலர் நடித்து வந்தார்களானாலும், நாளடைவில் அவர்கள் குடிஅரசின் உண்மைக் கொள்கைகளையும் அது யாருடைய தயவையும் போற்றுதல், தூற்றுதல்களையும் எதிர்பார்ப்பதல்ல என்பதையும் அறிந்த பின் குடிஅரசு படிப்பதையும் அதன் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதையும் விட்டு விட்டதோடு மாத்திரமல்லாமல் மறைமுகமாகச் சிலர் எதிர்ப்பிரசாரங்கூடச் செய்ய ஆரம்பித்தார்கள் என்னும் விஷயம் குடிஅரசு வாசகர்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம் இப்படி இருந்தும் குடிஅரசின் கொள்கைகளுக்கும் குடிஅரசுக்கும் ஒரு குறைவும் உண்டாகவில்லை.

வைதிகர்களும், பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் குடிஅரசை உபயோகப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் குடிஅரசை ஒழிக்கப் பாடுபட்டாலும், ஆரம்பத்தில் குடிஅரசின் சீர்திருத்த கொள்கைகளை ஆதரித்து வந்த பணக்காரர்களும், உத்தியோகஸ்தர்களும், மந்திரிமார்களும் குடிஅரசை ஆதரிக்கவும், சுயமரியாதைக் கூட்டங்களுக்கு வரவும் பயந்து ஒதுங்கியிருந்தாலும் பணக்காரர்களில் சில உண்மையான சுயமரியாதைப் பற்றுடையவர்களைத் தவிர மற்ற எல்லாப் பணக்காரர்களும் ஜமீன்தாரர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் இவர்களுடைய கையாட்களாக வேலை செய்யும் ராஜ்யவாதிகளும் குடிஅரசுக் கொள்கையை முந்திய ஆண்டுகளைவிடச் சென்ற ஆண்டில் அதிகமாக எதிர்த்துப் போராடினாலும் அதன் வேலை சென்ற ஆண்டிலேயே அதிகமாக நடைபெற்றிருக்கிறது என்று தைரியமாகவே கூறவேண்டும். உதாரணமாகச் சென்ற ஆண்டில் நடைபெற்ற சுயமரியாதை மகாநாடுகளை எடுத்துக்கொள்ளலாம்.

சென்ற ஆண்டில் தூத்துக்குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு, காரைக்குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு, பொறையாற்றில் ஒரு சுயமரியாதை மகாநாடு, நன்னிலத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, லால்குடியில் இரண்டு சுயமரியாதை மகாநாடுகள், விருதுநகரில் மாகாணச் சுயமரியாதை மகாநாடு, நாகப்பட்டினத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, சென்னையில் ஒரு சுயமரியாதை மகாநாடு ஆக பத்து, சுயமரியாதை மகாநாடுகள் நடத்தியிருக்கின்றன. இவைகளைத் தவிர நாடெங்கும் நடைபெற்றுள்ள பொதுக்-கூட்டங்கள் எண்ணற்றவை. இந்த மகாநாடுகளின் பயனாலும், பொதுக் கூட்டங்களின் பயனாலும் ஆயிரக்கணக்-கான மக்கள் சுயமரியாதையி-யக்கத்தின் உண்மைக் கொள்கைகளையறிந்து, அவைகளைக் கூடிய வரையிலும் பின்பற்றி நடக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் யார் மறுக்க முடியும்? இவற்றுக்கெல்லாம் குடிஅரசின் அச்சமற்ற ஊழியம் அன்றோ காரணம்.

சுருங்கக் கூறவேண்டுமானால், சென்ற ஏழாண்டுகளாகக் குடிஅரசு தனது கொள்கையை விட்டு நழுவாமலும், யாருடைய தயவுக்கும் கட்டுப்படாமலும், எவருக்கும் அஞ்சாமலும், உழைத்து வந்ததன் பலன் வீண் போகாமல் நாளுக்கு நாள் அதிகமான மக்கள் ஆரம்பத்தில் அதன் கொள்கைகளில் நம்பிக்கையில்லாமலிருந்தவர்கள் கூட அதன் கொள்கைகளைப் பற்றிச் சிந்திக்கவும் பின்பற்றவும் முன் வருகிறார்கள் என்ற உண்மையை அறியும்போது குடிஅரசும் அதன் வாசகர்களும், பெருமையும் மேலும் மேலும் உறுதியோடும், அஞ்-சாமையோடும் பிரசாரம் பண்ணுவதில் ஊக்கமும், தைரியமும் அடைய வேண்டுமேயொழிய வேறு தளர்ச்சியோ, கவலையோ படவேண்டிய அவசியமில்லை யென்றே நிச்சயமாகக் கூறுவோம்.

மற்றொரு விஷயத்தையும் குடிஅரசின் வெற்றிக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சென்ற நாலைந்து மாதங்களாக நமது ஆசிரியர் நமது நாட்டில் இல்லாமல் மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணத்திற்காக தோழர் இராமநாதன் அவர்களுடன் சென்றிருந்தும் குடிஅரசின் வளர்ச்சியில் ஒரு விதமான குறைவும் ஏற்படவில்லை என்பதைக் கொண்டும் அதன் கொள்கைக்குத் தேசத்தில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை அறியலாம்.

இனி எதிர்காலத்தில் சென்ற ஆண்டுகளைவிடக் குடிஅரசின் வளர்ச்சியும், அதன் கொள்கைகளுக்கு ஆதரவும் அதிகப்படும் என்றே எதிர்பார்க்கிறோம் நமது ஆசிரியர் ஈ. வெ. ராமசாமி அவர்களும், தோழர் எஸ். இராமநாதன் அவர்களும் மேல் நாட்டினர் மத சமுதாய விஷயங்களில் எவ்வாறு முன்னேறியிருக்கின்றார்கள் என்பதையும், அவ்வாறு முன்னேறியிருப்பதற்குக் காரணங்கள் என்ன என்பதையும் நேரில் பார்த்து அறிந்துகொள்ளும் பொருட்டு மேல் நாடுகளில் இப்பொழுது சுற்றுப் பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சுற்றுப் பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தவுடன் குடிஅரசின் கொள்கைக்காக வேண்டி இன்னும் அதிதீவிரமாக உழைப்பார்கள் என்பதில் அய்யமில்லை. ஆகவே இனி வருங்காலத்தில் பொது ஜனங்களின் கவனமும், வாசகர்களின் ஆதரவும் குடிஅரசினிடமும் அதன் கொள்கைகளிடமும் அதிகமாகவே ஏற்படுமென்று உறுதியாக நம்புகின்றோம்.

------------------ தந்தைபெரியார்- ”குடிஅரசு” - தலையங்கம் - 01.05.1932

0 comments: