Search This Blog

31.5.10

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் யார்?


செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் யார்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது தமிழர்களின் நீண்ட காலக் கனவுத் திட்டம். ராமன் என்ற இல்லாத கற்பனைப் பாத்திரத்தைக் காட்டி முடக்கியுள்ளனர்.

அண்ணா பெயரால் கட்சி நடத்தும் ஜெயலலிதா ராமனைக் காட்டி உச்சநீதி மன்றம் சென்றுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்கிறார். தமிழர்கள் இவரை அடையாளம் காண்பார்கள்.

மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கை விரைந்து நடத்தக் கோரி அவசர மனுவை (Expedite Petition) தாக்கல் செய்யவேண்டும்.

சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள இந்த நிலையில், அதனை முடக்குவது மக்கள் வரிப்பணத்தை பாழடிப்பதாகும்.

காலதாமதமின்றி திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில்தான் ஜூன் 5 ஆம் தேதி திராவிடர் கழகம் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்திட உள்ளது. ஒத்தக் கருத்துள்ளவர்களை இதில் பங்கேற்க அழைக்கின்றோம்.

எங்கள் போராட்டம் என்றால் அங்கு வன்முறைக்கு இடம் இருக்காது; பொதுச் சொத்துக்குப் பங்கம் ஏற்டாது.

டில்லியில் பெரியார் விழா

தந்தை பெரியார் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை இந்த ஆண்டு டில்லி பெரியார் மய்யத்தில் நடத்த உள்ளோம்.

செப்டம்பர் 18, 19 ஆகிய இரு நாட்களிலும் சமூகப் புரட்சி விழாவாக பெரியார் பிறந்த நாள் விழா நடைபெறும். தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான கழகக் குடும்பங்கள் பங்கேற்று அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பகுத்தறிவாளர்கள், சமூக நீதியாளர்கள் பங்கேற்பார்கள்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி பற்றிய புள்ளி விவரங்களும் எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

திட்டக்குழு இதனை வலியுறுத்தியுள்ளது. நீதி மன்றங்களும் புள்ளி விவரங்களைக் கேட்கின்றன.

மதச் சார்பற்ற அரசாங்கம் என்றாலும் கணக்கெடுப்பில் மதம் பற்றியும் கேட்கப்படுகிறது. மதத்தைக் கேட்கும்போது ஜாதியையும் கேட்பதுதானே சரியானதாக இருக்க முடியும்?

ஷெட்யூல்டு கேஸ்ட் என்றுதானே சொல்லப் படுகிறது. ஜாதி சட்டப்படி இன்னும் ஒழிக்கப்பட வில்லையே. இந்த நிலையில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு கட்டாயம் தேவை.

இதில் மிகவும் முக்கியமானது ஒன்று கவனிக்கத் தக்கது. யார் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறார்-களோ, அவர்கள்தான் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடவே கூடாது என்கின்றனர். இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதை அடையாளம் காணவேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல; யாரும் போடும் பிச்சையும் அல்ல.

செம்மொழி மாநாடு

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை வெறும் உலகத் தமிழ் மாநாடு மட்டும்தான் நடந்துள்ளது. செம்மொழி தகுதி தமிழுக்குக் கிடைத்தபின் நடத்தப்படும் முதல் மாநாடு இது. ஆதலால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக நடத்தப்பட உள்ளது. எங்கள் பொதுக் குழுவில் இதற்குப் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மேலும் தேவை என்றும் தீர்மானத்தில் கூறியுள்ளோம்.

காலத்துக்கேற்ப மொழியில் மாற்றம் தவிர்க்க இயலாதது.

நாம் வாழுவது எழுத்தாணி காலத்தில் அல்ல. கணினி யுகத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.

பழைமை மொழி என்பது மட்டுமே மொழிக்குச் சிறப்பல்ல. அது புதுமை மொழியாகவும் மாற-வேண்டும். வளர வேண்டும். மாற்றம் என்பதுதான் மாறாதது; மாற்றம் ஏமாற்றமாக இருக்கக் கூடாது.

மொழி என்பது போராட்டக் கருவி என்று கூறியுள்ளார் தந்தை பெரியார். கருவிகள் காலத்துக்கு ஏற்றவைகளாக இருக்க வேண்டாமா?

அணு ஆயுதப் போர் பற்றிப் பேச்சு எழுந்துள்ள ஒரு கால கட்டத்தில் வில், அம்பு வைத்துப் போரிட முடியுமா?

உலகின் பல நாடுகளில் எழுத்துச் சீர்திருத்தம் நடைபெறத்தான் செய்கின்றன. தமிழிலும் பல காலகட்டங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. செம்மொழி மாநாடு அந்த வகையில் புத்தாக்க மாநாடாக அமைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்ப்பார்ப்பு!

கூடினால் கலையத்தான் வேண்டும்


செய்தியாளர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடு என்று சிலர் சொல்லு கிறார்களே?

தமிழர் தலைவர் பதில்: எந்த மாநாடும் கூடினால் கலையத்தானே வேண்டும். அதே இடத்தில் எத்தனை நாள்கள்தான் கூடிக் கொண்டு இருப் பார்கள். கூடிக் கலைவது என்பது சரியான ஒன்றே!


(உரத்தநாடு _ செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 30.-5.-2010)

------------------ “விடுதலை” 31-5-2010


0 comments: