Search This Blog

10.5.10

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சியே!


மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சியே! மத்திய அரசை வலியுறுத்தி மே 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் அறிக்கை

2011 இல் நாடு தழுவிய அளவில் எடுக்கப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிபற்றிய விவரமும் சேர்க்கப்படவேண்டும் - சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இது மிகவும் அவசியமாகும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் இது தொடர்பாக வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புதுடில்லியில், புதிய பெரியார் மய்யம் என்ற 5 அடுக்குக் கட்டடம் 2.5.2010 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்டவுடன், அடுத்த நாளே (3.5.2010) அதன் கருத்தரங்கக் கூடத்தில் முதல் சமூகநீதி கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே. ராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். பல்துறை அறிஞர்களாகிய, டாக்டர் எஸ். இராசரத்தினம், டி.பி. யாதவ் (முன்னாள் மத்தியக் கல்வி அமைச்சர்) ஆகியோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவை அமைப்பாளர் திரு. அனுமந்த்ராவ் எம்.பி. நிறைவுரை நிகழ்த்தினார். நான் கருத்தரங்கிற்குத் தலைமை வகித்தேன்.

முக்கிய தீர்மானங்கள்

பிரபல கருநாடக சமூகநீதிப் போராளி ரவிவர்மகுமார் (கருநாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர், மூத்த வழக்கறிஞர்), உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சமூகநீதிக்கான வழக்கறிஞர் கழகத்தின் நிருவாகத் தலைவருமான சுப்பாராவ், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தேசிய யூனியன் பொதுச்செயலாளர் திருமதி கீதா, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ. கருணாநிதி (யூனியன் வங்கி), பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் முதலியோர் பங்கேற்றதில் முக்கிய 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் உடனடியாக, இப்போது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (சென்சஸ்) ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். மக்கள் தொகை யில் 80 விழுக்காடு உள்ள மக்களின் உண்மைக் கணக்கெடுப்பு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தேவைப்படுகிறது. அப்போதுதான் சமூகநீதி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பது ஒரு முக்கிய தீர்மானம் ஆகும்.

சாத்தியமில்லையா?

அதனைத் தட்டிக் கழித்து, மத்திய அரசின் அதிகாரவர்க்கம் குறுக்குசால் ஓட்டி, அதை இப்போது நடத்த சாத்தியமில்லை என்று ஒரு சூழ்ச்சிப் பொறியின்மூலம், உயர்ஜாதி வர்க்கத்தின் ஏகபோக ஆதிக்கம் கல்வி, உத்தியோகத்தில் இருப்பதை மறைத்து, அதனை நிரந்தரமாக்கிட முயலுகிறது!

வேண்டாம் என்பவர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்களா?

ஆகா! இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஜாதி வாரியாக கணக்கெடுக்கக் கோரிக்கையா? என்று ஏதோ மிகப்பெரிய ஜாதி ஒழிப்பு வீரர்களைப்போல், பார்ப்பன ஏடுகளும், தலைவர்களும், அவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள பார்ப்பனரல்லாத, கீழ்ஜாதி தலைவர்களில் சிலரும் கேட்டு தங்களது ஞானத்தை விளம்பரப்படுத்திக் கொள்கின்றார்கள்.

நாட்டில் ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டதா?

நாம் அவர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் இதோ:

1. நாட்டில் ஜாதியே இல்லையா? ஒழிந்துவிட்டதா?

2. இந்த 63 ஆண்டுகால சுதந்திரத்தில் ஜாதி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தார்களா? நடைமுறைப்படுத்தப்பட்டதா? இல்லையே!

3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பதை இவர்கள் யாராவது மறுக்க முடியுமா?

4. நாட்டில் திருமணங்களில் 90 விழுக்காடு ஜாதி பார்த்துத்தானே நடைபெறுகிறது?

5. பார்ப்பனர்கள், ஜாதி வாரி சென்சஸ் கூடாது என்று கூறும் மேதாவிலாசங்கள் தங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறதே அது எதற்காக? முதுகு சொறிந்து கொள்வதற்கா?

பின் ஏன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு மட்டும் நெருப்புக் கோழி மனப்பான்மை?

சிக்கல் என்ன?

நடைமுறை சாத்தியமானதல்ல இப்போது என்று கூறும் மத்திய அரசின் அமைச்சர், அதிகாரிகளைக் கேட்கிறோம்.

அதில் என்ன சிக்கல்? ஒன்றுமில்லையே!

ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டுப் பட்டியல் மாநிலங்களில் உள்ளது. (S.C., S.T., OBC) இதுபோல பள்ளிச் சான்றிதழ்களில் உள்ளது! அந்த யதார்த்தத்தை உணர்ந்து பதிவு செய்வதில் என்ன கஷ்டம்? கல்வி நிறுவனங்களில் சேரும்போது, தவறான தகவல் தர முனைந்தால், ஆள் மாறாட்டம், ஜாதி மாறாட்டம் சான்றிதழில் பொய்க்கூற்று என்று கூறி வழக்குப் போட்டுத் தண்டிக்கும் நிலையில், இதற்கென என்ன தனி ஏற்பாடு?

1931 ஆம் ஆண்டிற்குப் பிறகு அம்முறை மாற்றப்பட்டு விட்டது என்பது போதுமான அறிவார்ந்த காரணமல்ல. வெறும் எண்ணிக்கை எடுப்பது என்பதற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவா?

முக்கிய தகவல்கள் இல்லாமல் மொட்டைத் தாதன் குட்டையில் வீழ்ந்தான் என்பது போன்ற தகவலால் என்ன லாபம்?

சமூகநீதி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்-காகவே இந்த ஜாதியைத் தவிர்க்கும் சூழ்ச்சியான இம்முயற்சி!

அனைத்துப் பெரும்பான்மை மக்களும் இதனை எதிர்த்து, ஜாதி வாரியான சென்சஸ் எடுக்க மத்திய அரசினை வற்புறுத்திடவேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் லாலுபிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பிரதான எதிர்க்கட்சியாகிய பா.ஜ.க.விலும், ஆளும் காங்கிரசிலும் இந்தக் குரல் வேகமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது!

மாவட்டத் தலைநகரங்களில் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

இதை மக்களுக்கு முன்னெடுத்துச் சென்று மத்திய அரசினை வற்புறுத்தும் மக்கள் அறப்போராட்டத் திட்டம் உடனடியாக செயல்படவேண்டும் என்று முடிவு எடுத்ததனை செயல்படுத்த,

திராவிடர் கழகம் சார்பில், அதன் தோழர், தோழியர்கள் வரும் 10.5.2010 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசினை வற்புறுத்தும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும்!

நான், மே 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் தஞ்சையில் கலந்துகொள்ளவிருக்கிறேன். கழகப் பொறுப்பாளர்கள், சமூகநீதியாளர்கள் அனைவரும் ஆங்காங்கே சிறப்பான வகையில் நடத்திட வேண்டுகிறோம். இடையில் இருக்கும் நாள்கள் குறைவு! உடனே செயல்படத் தொடங்குங்கள்!


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
4.5.2010


-------------------”விடுதலை” 4-5-2010

3 comments:

Sivakasikaran said...

திறமை இருப்பவனுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? அவன் என்ன ஜாதியாக இருந்தால் நமக்கென்ன? ஆள் மாறாட்டம் பெயர் மாறாட்டம் எல்லாம் ஹிந்துக்கள் செய்வதில்லை. அதை செய்பவர்கள் ஹிந்து மதத்தில் இருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் தான். நான் ஐயர் (உங்கள் பாசையில் பாப்பான்) இல்லை.

vignaani said...

சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டாம் என சொல்வது "மிகப் பின் தங்கிய சாதிகள் " என்ற பெயரில் ஒதுக்கீடு அனுபவித்தவர் களாகத்தான் இருப்பார் என்பது என் கணிப்பு .

தாம்ப்ராஸ் என்ன தான் கத்தினாலும் , அவர்கள் சராசரி நிலைக்கு குறைவாக இல்லை . அவர்கள் ஒதுக்கீடு முறைகள் பற்றி பட்டுக் கொள்வது இல்லை - சோ முதலிய மேதாவிகள் தவிர்த்து -

சமூகத்திலே சலவை செய்பவர் , முடி திருத்துவோர் , முதலிய சாதியினர் , கிராமங்களில் , பழைய வருடத்துக்கு கொடுக்கும் முறை மானியங்கள் நின்று விட்டது ; என்றுமே நிலம் இருந்ததில்லை ; நகரத்துக்கு வந்தால் வருமானம் பரவாயில்லை ; ஆனால் குடியிருப்பு வசதி மிக மிக மோசம் ; சென்னையிலோ , மும்பாயிலோ எந்த ஒரு குடிசைப் பகுதிக்கு சென்றவர் கண்ணீர் விடுவர் . சொல்ல நா கூசுகிறது : உடல் உழைப்பு செய்தும் அவர்கள் பிச்சைக்காரர்களை விட எந்த விதத்திலும் வசதி ஒன்றும் அனுபவிக்கவில்லை ;

இந்த நிலைக்கு காரணம் பார்ப்பனர்களா அல்லது உயர்சாதியினரா என்று பட்டி மண்டபம் அனாவசியம் ( சில வலைப் பதிவுகள் ஆயிரம் ஹிட்டுகளைப் பெறும். ஆனால் ஒரு நலிந்தவர்க்கு ஒரு பயனும் இல்லை) . அறுபது ஆண்டுகளில் பல சாதியினரின் நிலை தாழ்ந்து விட்டது என்பதை உணர்ந்து , இப்போது எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என பார்ப்பனர் அல்லாத , மேல் சாதியினர் அல்லாத மண்டல் போன்ற ஒரு குழு ஆராய வேண்டும்

நம்பி said...

//Ramu said...

திறமை இருப்பவனுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? அவன் என்ன ஜாதியாக இருந்தால் நமக்கென்ன? ஆள் மாறாட்டம் பெயர் மாறாட்டம் எல்லாம் ஹிந்துக்கள் செய்வதில்லை. அதை செய்பவர்கள் ஹிந்து மதத்தில் இருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் தான். நான் ஐயர் (உங்கள் பாசையில் பாப்பான்) இல்லை.
May 10, 2010 11:48 PM //

அந்த திறமையை யார் முடிவு செய்வது...ஐயரா சாரி எல்லோர் பாஷையிலும் இருக்கும் பார்ப்பனரா...?

முதலில் எந்த அடிப்படையில் திறமையை கணக்கிடுகிறீர்கள்...திறமை எனபது என்ன?

உழைப்பா? அறிவா? மதிப்பெண்ணா? சமுதாய அந்தஸ்தா? ஜாதியா? பொருளாதாரப்பின்னணியா...? பிறரிடம் பெற்றிருக்கும் செல்வாக்கா..? ஏழ்மையிலும் கல்விப்பயின்று மேலே வருவதையா..? ஏழ்மையிலிருந்தும் கல்வி பயில முடியாதவர்களையா? என்னதான் திறமை இருந்தும் என்னை மேலே வரவிடமாட்டேன் என்கிறார்களே எனற நிலையையா...? எதனடிப்படையில் திறமை கணக்கிடப்படுகிறது.

திறமையை கணக்கிடுவது எந்திரமா? மனிதனா...? மனிதன் என்றால் அப்படி நடுநிலையுடன் திறமையைக் கணக்கிடும் மனிதன் யார்? என்ன தகுதி..? அவர் யார்? அவன் நடுநிலையுடன் தான் கணக்கிடுகிறான் என்பதற்கான அளவீடுகள் என்ன? அவன் அப்படி திறமையைக் கணக்கிடும் பொழுது ஜாதிய எண்ணம் அவன் மனதில் துளிகூட தோன்றவில்லை என்பதற்கான வெளிப்படைத்தன்மை என்ன? அப்படி வெளிப்படைத்தன்மையுடன் பார்ப்பவர் நிறைந்திருந்தால் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்...?

எம்மாடியோ இது வுட்டா போய்கிட்டேயிருக்கும்...இதுக்கே ஒரு திறமை வேணும் போல இருக்கே....