Search This Blog

5.5.10

80 ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டு சமூக நிலை

ஆர்.கே. சண்முகம்

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமை பெற்ற சர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1953).

படிக்கும் காலத்திலேயே துடிப்புமிக்க இளைஞர் இவர். 1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைடெட் லீக் என்னும் ஓர் அமைப்பினை பார்ப்பனர் அல்லாத அரசு ஊழியர்கள் உருவாக்கினர். இதற்கு முதுகெலும்பாக இருந்து ஊக்குவித்தவர் டாக்டர் சி. நடேசனார்.

இந்த அமைப்பின் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டாக்டர் நடேசனார் வீட்டில்தான் நடைபெறும்.

அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் பட்டதாரியாவது என்பது அரிதினும் அரிது. அந்த நிலையில், ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் பார்ப்பனர் அல்லாத இளைஞர்களை வரவேற்றுப் பாராட்டி, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை இந்த அமைப்பு நடத்தி வந்தது.

திவான்பகதூர் பி. கேசவப்பிள்ளை தலைமையில் அத்தகு வரவேற்புக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சர் பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் அப்பொழுது வருகை தந்தனர். பட்டதாரிகள் சார்பாக வரவேற்புக்கு நன்றி கூறி, ஓர் இளைஞர் பேசினார். அவரின் ஆங்கில உரை அனைவரையும் வெகுவாக ஈர்த்துக் கட்டிப் போட்டது. அந்த இளைஞர் வேறு யாருமல்லர் அவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம்.

சுயரியாதை இயக்கத்தின் நீதிக்கட்சியின் முக்கிய தலைவராகவும் பிற்காலத்தில் ஒளி வீசினார்.

1931 ஆகஸ்டில் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு இவர் தலைமையில்தான் நடைபெற்றது.

தந்தை பெரியார் அவர்களின் உற்ற நண்பரான இவர் விடுதலை ஏட்டின் வளர்ச்சிக்குக் கடைசிவரை பொருள் உதவி புரிந்து வந்தார் என்பது அடிக்கோடிட்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் எத்தகைய சுயமரியாதை வீரர் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதும். 1930 ஆம் ஆண்டு கோவையையடுத்த இருகூரில் உள்ள பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்ப்பதில்லை. கோவை சமூகத் தொண்டு சங்கத்தார் தலையிட்டு சில தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தனர். பார்ப்பனத் தெரு வழியாக அந்தப் பிள்ளைகள் போகக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். உள்ளூர் காவல் துறையும் அவர்களுக்கு உடந்தை! பார்ப்பனர்களின் தூண்டுதலால், ஆர்.கே.எஸ். கட்டி வந்த நூற்பாலைக் கட்டுமானப் பணிக்குப் போகாதபடி ஆள்கள் தடுக்கப்பட்டனர்.

பார்ப்பனர்களின் சொல்லைக் கேட்டு வேலைக்குப் போகாமல் பட்டினியாகக் கிடக்கப் போகிறீர்களா? இதனால் பார்ப்பனர்கள் பாதிக்கப்படப் போவதில்லை என்று எடுத்துச் சொல்லித் தெளிவடைய செய்தார் ஆர்.கே.எஸ்.

80 ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டு சமூக நிலை எப்படி இருந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

பெருந் தனவந்தர்தான் என்றாலும், தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கையில் திளைத்த பெருமகன் ஆர்.கே.எஸ். ஆவார்.

கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. ஆர்.கே.எஸ். உருவச் சிலையை கோவையில் இந்தச் சந்தர்ப்பத்தில் அரசு நிறுவுவது பொருத்தமாக இருக்குமே!

ஆர்.கே. சண்முகம் நிதி அமைச்சரான நிலையில், அவர் ஜாதியைக் குறிக்கும் வகையில் (வாணியச் செட்டியார்) செக்குப்படம் போட்டுக் கேலி செய்தது ஆனந்தவிகடன் என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.

----------------- மயிலாடன் அவர்கள் 5-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

வாணியர் இளைஞர் நலச் சங்கம் said...

தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி!இந்த தருணத்தில் ஆர்.கே. எஸ் அவர்களின் செய்தியை பதிவு செய்தது மிகவும் சரியானது.
நாங்கள் சாதி சங்கம் நடத்தினாலும் மற்ற சாதி மதத்துக்கு எதிராக நடத்துவதில்லை.வாணியச் செட்டியார் இனத்தில் இன்று ஒரு IAS அதிகாரி கூட தமிழ்நாட்டில் இல்லை.இந்த நிலையை மாற்றவும் கல்வியில் சிறந்து விளங்கவும் நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு முக்கியமான பதவியில் இருந்தார்கள்.ஆர்.கே.எஸ்.ஆங்கில ஏகாதிபத்தியத்தையே தன கைக்குள் வைத்திருந்தார்.நம் நாடு விடுதலை பெறக்காரனமாக இருந்தவர்களுள் ஆர்.கே.எஸ் ஸும் ஒருவர்.என்பதனை நாடு முழுவதும் உள்ள அனைவரும் தெரிந்து ,அவரைப் போல நாமும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கு நன்றி