Search This Blog

9.5.10

இட ஒதுக்கீடு பொதுப் பிரிவு உயர்ஜாதியினருக்கு மட்டும்தானா?

அய்.ஏ.எஸ்., தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்கள் தலையின்மீது இறங்கிய இடி! சமூகநீதியாளர்கள் களத்தில் இறங்கவேண்டிய நேரம் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலையிடுவார்களாக! தமிழர் தலைவர் அறிக்கை

அய்.ஏ.எஸ்., தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்கள் தலையின்மீது இறங்கிய இடி!
சமூகநீதியாளர்கள் களத்தில் இறங்கவேண்டிய நேரம்
முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலையிடுவார்களாக!

அய்.ஏ.எஸ்., தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஆபத்தான தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதித் திசையில் ஜாண் ஏறினால் முழம் சறுக்கல் என்ற நிலை தொடர்ந்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

அந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.எச். கபாடியா, பி. சுதர்சன் ரெட்டி, ஆர்.வி. ரவீந்திரன், பி. சதாசிவம் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கொடுத்திருக்கும் தீர்ப்பு (7.5.2010) தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் தலையில் இறக்கப்பட்ட பேரிடியாகும்.

பின்பற்றப்படவேண்டிய முறை என்ன?

1. இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை கல்வியானாலும், வேலைவாய்ப்பானாலும் முதலில் திறந்த போட்டிக்குரிய இடங்களைப் பூர்த்தி செய்யவேண்டும்.

மத்திய அரசுத் துறைகள், மத்திய தேர்வாணையம் போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடும், மலைவாழ் மக்களுக்கு 7.5 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடங்களும் ஒதுக்கப்படவேண்டும்.

மீதியுள்ள 50 விழுக்காடு இடங்கள் என்பவைதான் பொதுப் போட்டியாகும் (Open Competition).

இந்தப் பொதுப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் மற்றும் இட ஒதுக்கீடு அளிக்கப்படாத உயர்ஜாதியினரும் அடங்குவார்கள்.

இந்த இடங்களைப் பூர்த்தி செய்த பின் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்குரிய 22.5 விழுக்காடு இடங்களையும், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடங்களையும் பூர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த சட்ட ரீதியான நிலையாகும்.

மத்திய தேர்வாணையத்தின் குளறுபடி!

2. 1994 ஆம் ஆண்டு முதல் மத்திய தேர்வாணையம் ஒரு தவறான சமூகநீதிக்கு எதிரான அதற்குமுன் முறையாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைக்கு முரணாக ஒரு விஷமத்தை அரங்கேற்றியது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரில் அதிக மதிப்பெண்கள் பெற்றோர் பொதுப் போட்டியில் இடம்பெற்று வந்தார்கள் அல்லவா?

அவர்கள் விரும்பினால் தங்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்பதுதான் அந்த விஷம நடவடிக்கை. இதற்குச் சொல்லப்படும் காரணம் பொதுப் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோருக்கோ, தாழ்த்தப்பட்டோருக்கோ அய்.ஏ.எஸ். கிடைக்காமல் அய்.ஆர்.எஸ். என்பது போன்ற வேலை வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் அத்தகையவர்கள் இட ஒதுக்கீடுப் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டால், அய்.ஏ.எஸ். கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது என்பதுதான் அவர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதமாகும்.

பாதிப்புகள் என்னென்ன?

3. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?

பொதுப் பிரிவில் மதிப்பெண் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 10 தாழ்த்தப்பட்டோரோ, 10 பிற்படுத்தப்பட்டோரோ, இட ஒதுக்கீடுப் பிரிவுக்குக் கொண்டு செல்லும்போது, ஏற்கெனவே இட ஒதுக்கீடுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருந்த 10 தாழ்த்தப்பட்டோரும், 10 பிற்படுத்தப்பட்டோரும் வேலை வாய்ப்புக்கு இடமின்றி வெளியில் தள்ளப்பட்டு விடுவார்கள்.

சான்றாக, 1994 ஆம் ஆண்டுமுதல் 2005 ஆம் ஆண்டுவரை வாய்ப்பு இழந்த பிற்படுத்தப்பட்டோர் 350, தாழ்த்தப்பட்டோர் 100 இந்த விலைமதிக்க முடியாத இழப்பை எப்படி ஈடுகட்ட முடியும்?

பொதுப் பட்டியலிலிருந்து இட ஒதுக்கீடுப் பிரிவுக்கு வருவதால் பொதுப் பட்டியலில் காலியாகும் அந்த இடங்களுக்கு, பொதுப் பட்டியலில் காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கு (Waiting List) கிடைத்துவிடும்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலில் இடம்பெறுவோர், பிற்படுத்தப்பட்டோர் பெற்ற மதிப்பெண்களைவிடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்துவிடும். இதைவிட ஒரு கேலிக்கூத்து இருக்க முடியுமா?

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு உள்ள இட ஒதுக்கீடு முறையே 27 மற்றும் 22.5 விழுக்காடு என்பது குறைந்தபட்சமே தவிர, அதிகபட்சம் அல்ல என்பது இதன்மூலம் அடிபட்டுப் போகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

4. மத்திய தேர்வாணையம் மேற்கண்ட சமூகநீதிக்கு எதிரான முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2006 ஆகஸ்டில் சென்னை மத்திய நிருவாகத் தீர்ப்பாயத்தில் (Central Administrative Tribunal) வழக்குத் தொடர்ந்தனர். மத்திய தேர்வாணையத்தின் செயல் முறைக்கு மத்திய நிருவாகத் தீர்ப்பாணையம் தடை விதித்தது.

ஆனால், என்ன நடந்தது? அந்தத் தீர்ப்பைப்பற்றிக் கவலைப்படாமல் தேர்வாணையம் தான் எடுத்த தவறான வழிமுறையையே பின்பற்றி வந்தது.

2003 ஏப்ரல் 18 ஆம் தேதியன்று தேர்வு விதி 16(2) அய் ஊழியர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training) தனக்குத்தானே திருத்திக் கொண்டு-விட்டது. நிருவாக ஆணை ஒன்றை (Executive Order) சட்டத்துக்கு விரோதமாகப் பிறப்பிக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லை.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்தனர். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப் தர்மாராவ், எஸ்.ஆர். சிங்காரவேலு ஆகியோர் மத்திய தேர்வாணையத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினார்கள்.

திறந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குக் கொண்டு வந்து, ஏற்கெனவே இட ஒதுக்கீட்டுப் பிரிவில் தேர்வானவர்களை வெளியே தள்ளுவது எந்த வகையில் நியாயம் என்ற நியாயமான வினாவினை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியது.

கவனத்தில் கொள்ளாத உச்சநீதிமன்றம்

இதன் பின்னணியில் இவ்வாறெல்லாம் இருக்க இவற்றைப்பற்றி எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் உச்சநீதிமன்றம் நேற்றைய தீர்ப்பில் மத்திய ஊழியர் மற்றும் பயிற்சித் துறைக்கு ஆதரவாகத் தீர்ப்பினை வழங்கியுள்ளது என்பது எவ்வளவுப் பெரிய அநீதி கொடுமை!

அநீதிகளின் சுருக்கப் பட்டியல் இதோ!

5. உச்சநீதிமன்ற தீர்ப்பின்மூலம் ஏற்பட்டுள்ள அநீதியைப் பற்றிய சுருக்கமாவது:

(அ) பொதுப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்று தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையில் எத்தனைப் பேர் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குக் கொண்டு வரப்படுகிறார்களோ, அந்த அளவு எண்ணிக்கையில் ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தேர்வானவர்கள் வெளியே தள்ளப்பட்டு விடுவார்கள்.

வெற்றி பெற்றும் வாய்ப்பு இல்லை

10 தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவிலிருந்து இட ஒதுக்கீடுப் பிரிவுக்கு வரும்போது, ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இடம் பெற்றிருந்த பத்துப் பேர் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கும் அதே கதிதான்.

உயர்ஜாதியினருக்கு லாட்டரி சீட்டா?

(ஆ) பொதுப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்டோர் 10 பேர் பிற்படுத்தப்பட்டோர் 10 பேர் இட ஒதுக்கீடு பிரிவுக்கு வருவதால், பொதுப் பிரிவில் காலியாகும் அந்த 20 இடங்களிலும் காத்திருக்கும் (Waiting List) பட்டியலில் உள்ள உயர்ஜாதியினர்களுக்கு லாட்டரி சீட்டு அடித்ததுபோல் இடங்கள் கிடைத்துவிடும்.

இந்த நடைமுறையால், தமிழ்நாட்டில் 127 பேர்கள் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர் என்றால், அத்தனைப் பேருக்கும் பணி கிடைத்துவிடும் என்ற உறுதி-யில்லை.

(இ) இதன்மூலம் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்குமான மொத்த இடங்கள் குறைந்து உயர்ஜாதியினருக்கு அதிக இடங்கள் கிடைத்துவிடும்.

பிற்படுத்தப்பட்டோர்களிடையும், தாழ்த்தப்பட்டோர்களிடையும் பிரித்தாளும் தந்திரமும், இதில் அடங்கியுள்ளது எச்சரிக்கை!

பொதுப் பிரிவு உயர்ஜாதியினருக்கு மட்டும்தானா?

(ஈ) பொதுப் பிரிவு என்பது எல்லோருக்கும் உரிய இடம் என்பது போய், பொதுப் பிரிவுக்கான அத்தனை இடங்களும் சட்ட ரீதியாக இட ஒதுக்கீடு இல்லாத உயர்ஜாதியினருக்கே போய் சேர்ந்துவிடும்.

இந்த அநீதியை முறியடிக்காவிட்டால் இத்தனை-ஆண்டுகாலம் போராடி, பாடுபட்டு, உழைத்த அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடும்.

ஆபத்து! ஆபத்து!! பேராபத்து!!!

வாசல் வழியாகப் போராடிப் பெற்ற சமூகநீதி உரிமைகள், கொல்லைப்புற வழியாகக் களவு போகும் கொடுமை நிகழ்ந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கையிணைந்து வீதிக்கு இறங்கவேண்டிய மிக முக்கிய தருணம் இது. சமூகநீதியாளர்கள் களம் அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

1950 இல் தந்தை பெரியார் கிளர்ந்து எழுந்ததுபோல கிளர்ச்சிகள் வெடித்தாகவேண்டும்.

இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் இதுபோன்ற விரிசல்களை அனுமதித்துவிட்டால், கடைசியில் முழு கட்டடமும் இடிந்து தரைமட்டமாகிவிடும். எதிரிகள் செய்யும் சன்னமான விஷமங்களைப் புரிந்துகொள்வது என்பதே கடினமான ஒன்றாகும்.

முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு...

சமூகநீதியின் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள் சமூகநீதித் தொடர்பான அத்தனை விவரங்களிலும் அத்துப்படியாகும் அளவுக்கு அறிந்த சமூகநீதியாளர்.

இந்த மிக முக்கியமான காலகட்டத்தில், அவசர அவசரமாகத் தலையிட்டு, சட்ட ரீதியான பாதுகாப்பு நிலையை உருவாக்க முயற்சிக்கவேண்டுமாய் இந்தியா முழுமையும் உள்ள கோடானு கோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக்கு வாழ்வளித்த வரலாற்றுப் பெருமையும் ஏற்படும்.

சமூகநீதியாளர்கள் ஒன்று கூடி விரைவில் உரிய முடிவெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


தலைவர்,
திராவிடர் கழகம்.

சேலம்,
8.5.2010

1 comments:

Unknown said...

After excluding 47.5% under reservation 50.5% is open to all including OBCs.So when an OBC candidate wants to get the benefit of getting alloted to higher cadre available under OBC quota (s)he can exercise the option.If his/her choice affects somebody else in OBC category why (s)he bother about it.Will Veeramani suggest that this option should be removed and no such 'migration' should be permitted in the larger interests of OBC candidates.Why he is not suggesting this.If an OBC candiadte can get alloted to IAS under OBC category while (s)he gets allotted to IRS under general category (s)he might choose to get allotment to IAS.Veeramani should argue that such a choice should not be available and those who opt for general category should stick to that.