Search This Blog

Showing posts with label பெரியார்-பெண்ணியம். Show all posts
Showing posts with label பெரியார்-பெண்ணியம். Show all posts

16.3.10

பெரியார் அவர்களின் கடைசி 30 ஆண்டுகாலம்


அந்தக் கடைசி 30 ஆண்டுகள்

அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1978). வைதிக மனப்பான்மையோடு நினைவு நாளைக் கடைப்பிடிப்பார்கள். பகுத்தறிவாதிகளான நாமோ, கொள்கை ரீதியாக இயக்க ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்வதற்குக் காரணமாக, ஊக்க, ஊட்டச் சக்தியாக இருந்த அன்னையார் தமது வாழ்வை 58 ஆண்டுக்குள் முடித்துக்கொண்டார் என்பது வேதனைக்குரியதாகும்.

கூப்பிட்டால் வந்துவிடுவார்; கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார் என்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அன்னை மணியம்மையார் அவர்கள் மிகவும் சரியாகவே கணித்தவர்கள். அந்த வகையில் அய்யா அவர்களின் உடல்நலனைப் பேணுவதில் அம்மா அவர்கள் கண்டிப்பானவர்களாக இருந்தார்கள் என்பது தாம் ஏற்றுக்கொண்ட பணியின் கடமையின் செயல்பாட்டுக்கும் பெருமை சேர்க்கக் கூடியதேயாகும்.

மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிருவாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் (விடுதலை, 15.10.1962) என்கிறார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் அவர்களின் கடைசி 30 ஆண்டுகால பொதுவாழ்க்கை என்பது மிகவும் புரட்சிகரமானது.

பொதுவாக வயது ஏற ஏற சோர்வு ஏற்படுவதும், தளர்ச்சி அடைவதும், கொள்கைகளில் சமரசம் காண்பது என்பதும் இயல்பாக நாட்டில் நடக்கக்கூடியதுதான், காணக்கூடியதும்கூட!

ஆனால், தந்தை பெரியார் இதற்கு முற்றிலும் விதிவிலக்கு. பிள்ளையார் உடைப்பு, ராமன் படம் எரிப்பு, குலக்கல்வி எதிர்ப்பு, தேசியக்கொடி எரிப்பு அறிவிப்பு, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்பு என்று பீறிட்டுக் கிளம்பிய எரிமலையாக அமைந்தது தந்தை பெரியார் அவர்களின் கடைசி 30 ஆண்டுகாலம்.

சுற்றுப்பயணங்களும் இந்தக் காலகட்டத்தில் மிகக் கடுமையானதாகவே இருந்து வந்திருக்கின்றன.

இவ்வளவையும் தந்தை பெரியார் அவர்களால் செய்ய முடிந்திருக்கிறது என்றால், அவற்றின் பின்புலமாகவும், பலமாகவும் இருந்திருக்கிறார் அன்னை மணியம்மையார் என்பதுதான் உண்மை.

தந்தை பெரியார் அவர்களின் உடல் ஒத்துழைப்பு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால், இந்தத் தீவிரமான பணிகளிலும், பிரச்சாரத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்க முடியாது.

என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி செய்து வந்தார் மணியம்மையார் என்று தந்தை பெரியார் கூறியதற்கான பொருள் இதுவே!

கல்வி நிறுவனங்களையும் இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கியதால், அவற்றின் பொறுப்பையும் கூடுதலாகச் சுமக்கும் ஒரு நிலையும் அம்மா அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

கைவிடப்பட்ட குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்து தன் மடியிலும், தோள்களிலும் அந்தப் பச்சிளங் குழந்தைகளைச் சுமந்து வளர்த்தெடுத்தது என்பதெல்லாம் சாதாரணமானதல்ல!

பொதுத்தொண்டின் முழு பரிமாணம் என்பது என்ன என்பதை இந்த இரு தலைவர்களின் வாழ்வுமூலம் அறிந்துகொள்ளலாம்.

அதனால்தான் பல்கலைக் கழகத்திற்குக்கூட பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் என்னும் பெயரைச் சூட்டினார் தமிழர் தலைவர்.

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகும், தந்தை பெரியார் வைத்த நம்பிக்கைக்கு ஒளியூட்டும் வகையில், பெருமை சேர்க்கும் வகையில் கழகத்தை நடத்திக் காட்டிய சாதனையும் அன்னையாரைச் சார்ந்ததாகும்.

இத்தகைய வரலாற்று வீராங்கனை எளிமை, அடக்கம் எனும் இரு கால்களால் நடந்துகாட்டி, பொதுவாழ்வின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்தம் வரலாற்றுப் பாதையை அரிமா பார்வையுடன் நோக்கி, நாம் நமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோமாக!

வாழ்க தந்தை பெரியார்!

வாழ்க அன்னை மணியம்மையார்!

----------------------- "விடுதலை” தலையங்கம் 16-3-2010

15.3.10

அந்தச் சந்திப்பு ஓர் நிகழ்ச்சியல்ல, நெகிழ்ச்சி!-இதுதான் திராவிடர் கழகம்.

மாரியம்மாள்

திராவிடர் கழகத்தின் தொண்டர்கள் குறிப்பாக மகளிர் அணியினரைச் சேர்ந்தவர்கள் எவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்குக் கொள்கைச் செங்கோல் ஓச்சக் கூடியவர்கள்.

அதிலும் குறிப்பாக திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பெண்கள் என்றால், வீரமும், தியாக உணர்வும் கொப்பளித்துக் கிளம்பும்.

நமது தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்: என்னுடைய உண்மையான சொந்தங்கள் நிறைந்த பகுதி இந்த விவசாயப்பகுதி என்று மிகுந்த பெருமிதத்துடன் கூறுவார்கள்.

போராட்டம் என்றால் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி முன்வரிசையில் நிமிர்ந்து நிற்கும் வீரத்துக்குச் சொந்தக்காரர் அவர்கள்.

(கண்கொடுத்தவணிதம் பெரியார் பெருந்தொண்டர் உத்திரபதியின் வாழ்விணையர் மாரியம்மாளை தமிழர் தலைவர் சந்திக்கும் நெகிழ்ச்சி...).

திருவாரூர், நாகை, நன்னிலம் வட்டாரங்களில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் வீரமணி வருகிறார்கள் என்றால், அதுதான் அவர்களுக்கு ஊர்த் திருவிழா. உவகை குலுங்கும் உணர்வுப் பெருவிழா.

அந்தத் தாய்மார்கள் நமது ஆசிரியர் அவர்களின் கரங்களைப்பற்றிக் கொண்டு காட்டும் அந்தப் பாசமழையிருக்கிறதே, அதற்கு ஈடு பொன்னோ, பொருளோ அல்ல! அது ஒரு உயர்ந்த இலட்சியத் தொண்டர்களின் வீறுமிக்கக் கொள்கைப் பாசறையின் பற்றுப் பரிவர்த்தனை!

ஒரு தகவல் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு எஸ்.எஸ். மணியம் (95 வயது நிறைந்த இளைஞர்) இன்று மதியம் 12 மணியளவில் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்த்தன, கண்கள் குளமாயின.

திருவாரூரையடுத்த கண்கொடுத்தவனிதம் கழகத்தின் பாடிவீடு. பெரியார் பெருந்தொண்டர் உத்திராபதி என்னும் கருஞ்சட்டை வீரர். அவருடைய இணையர் மாரியம்மாள் (வயது 78). சிறிதுகாலமாக உடல்நலமற்று இருந்தார். தமிழர் தலைவர் அவர்களை தாம் மரணமடைவதற்குமுன் ஒருமுறை பார்க்கவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். நேற்று (14.3.2010) அப்பகுதிக்குச் சென்ற தமிழர் தலைவரிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சற்றும் தயங்காமல் அம்மையாரைக் காண தமிழர் தலைவர் விரைந்தார். நேற்று மதியம் 12 மணிக்குச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு ஓர் நிகழ்ச்சியல்ல, நெகிழ்ச்சி!

மானமிகு எஸ்.எஸ். மணியம் அவர்கள் இன்று மதியம் தந்த தகவல் என்ன தெரியுமா? இன்று காலை அந்த அம்மையார் மரணமுற்றார் என்பதுதான்.

இயக்கத் தலைவரை சந்திக்கும் தமது இறுதி விருப்பம் நிறைவேறிய மகிழ்வில் அம்மையார் தம் கண்ணசைவை நிறுத்திக்கொண்டு விட்டாரே!

இந்த உணர்வுக்கு ஈடு இணையாக இன்னொன்றையும் எடுத்து இயம்பத்தான் முடியுமா? இதுதான் திராவிடர் கழகம்.

------------------------- மயிலாடன் அவர்கள் 15-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

8.3.10

மார்ச் 8 - இல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?


அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.

சர்வதேச பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப் பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோ சனை குழுக்களில்) என்று கோரிக்கை களை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கிடைத்த ஆயுதங்
களைக் கையில் எடுத்துக் கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பெண்ணித்தை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத் தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள முழக்கங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி அய்ரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட் டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிருவாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857 இல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட் டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரி மைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வ தேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 அய் நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜெர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்தனர்.

ஜெர்மனியில் மகளிர் தொடங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும்; போராடினால் தான் உரிமை களைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் தொடங்கினர்!

அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக் கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்றனர்!

---------------- நன்றி:- “விடுதலை” 8-3-2010

14.7.09

அர்ச்சகர் உரிமை பெண்களுக்கு தேவையா?


அர்ச்சகர் உரிமை பெண்களுக்கும் தேவையே!

இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்மீது நேற்று சட்டப்பேரவையில் பேசிய அத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் ஒரு முற்போக்கான தகவலைத் தெரிவித்தார். பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை பற்றிய கருத்து அதுவாகும். அதுபற்றி கலந்தாய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு அது செயல்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் (நீதிமன்ற தடங்கலால் தாமதம் ஆனாலும், விரைவில் செயல் வடிவம் பெறும்) அடுத்தகட்ட உரிமை முழக்கமாக இது வெளிவருவதை யாரும் தடுக்க முடியாது. அது ஒரு இயல்பான பரிணாமச் சிந்தனையேயாகும்.

வழக்கம்போல இந்துத்துவா வாதிகள் பல காரணங்களைக் கொண்டுவந்து குறுக்கே போடுவார்கள். ஆகமங்களைக் காட்டுவார்கள், பெண்கள் உடற்கூறுபற்றி எல்லாம் கதையளப்பார்கள். இவையெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட வேண்டியவைதானே.

பெண்களுக்கு உடற்கூறு ஒரு வகையிருந்தால், ஆண்களுக்கு இன்னொரு வகையில் இருக்கத்தானே செய்கிறது.

அனைத்து ஜாதி ஆண்களுக்கும் அந்த உரிமை என்ற கோரிக்கைக்கே ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார்கள் என்கிறபோது, பெண்களுக்கும் அந்த உரிமை என்றால், பூமிக்கும், விண்ணுக்குமாகத் தாவிக் குதிப்பார்கள்தான். வழக்கம்போல அந்த எதிர்ப்புகளைச் சந்தித்து வெற்றி பெறவேண்டியது மனித உரிமையின் பாற்பட்டதே!

எல்லா மதங்களிலும் இத்தகு இடர்ப்பாடுகள் உண்டு என்றாலும், கிறித்துவ மதத்தில் சில பிரிவுகளில் நடைமுறைக்கு வந்துள்ளன.

நாட்டுக்குத் தாய்நாடு என்றும், மொழிக்குத் தாய்மொழி என்றும், தண்ணீருக்குக் கங்காதேவி என்றும் கூறப்படும் ஒரு நாட்டில், பெண்கள் அர்ச்சகராவதில் என்ன தவறு இருக்க முடியும்?

மேல்மருவத்தூரில் அய்யாவையே அம்மா என்றுதானே அழைக்கிறார்கள். கோயிலுக்குள்ளும் அம்மன் சன்னதி விசேஷமுடையதுதானே!

சக்தி, கல்வி, செல்வம் அனைத்துக்கும் முத்தேவிகள் என்று ஏற்பாடு செய்து வைத்திருக்கும் இந்து மதத்தில், பெண்கள் அர்ச்சகராவதை எப்படி எதிர்க்க முடியும்?

நவராத்திரி பூஜை என்பதும் மூன்று பெண் கடவுள்களுக்குத்தானே.

சிவபெருமான் தலையிலேயே ஒரு பெண்ணும், இடுப்பிலே ஒரு பெண்ணும் இருக்கும்போது, கோயில் கருவறைக்குள் சென்று பெண்கள் பூஜை செய்வது குற்றம் என்று எப்படி கூற முடியும்?

ஆண் கடவுளுக்கு ஆண் அர்ச்சகரும், பெண் கடவுளுக்குப் பெண் அர்ச்சகரும் இருந்துவிட்டுப் போகட்டுமே அதுதான் நாகரிகமும்கூட!

பெண்களுக்கு எத்தகைய உரிமைகள் வேண்டும் என்று தந்தை பெரியாரைக் கேட்டபோது, ஆண்களுக்குரிய அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் கட்டாயம் வந்தாகவேண்டும் என்றார்.

எந்த வகையிலும் ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற நிலை நிலைநாட்டப்படவேண்டும் என்றால், ஆண்களுக்குள்ள அத்தனை வாய்ப்புகளும் கண்டிப்பாகப் பெண்களுக்கு வந்தே தீரவேண்டும்.

தானாக வந்துவிடாது ஆண்களாகப் பார்த்து கொடுக்கவும் மாட்டார்கள். உரிமை என்பது பிச்சை போடுவதல்ல.

நீண்ட காலமாகவே அர்ச்சகர் உரிமை பெண்களுக்கும் தேவை என்ற குரலை கழகம் உயர்த்திக் கூவியதுண்டு. அண்மையில் ஊற்றங்கரையில் நடந்த (11.8.2007) திராவிடர் கழக மகளிர் மாநாட்டில்கூட இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுண்டு.

பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் அத்தனை அமைப்புகளும் இப்பிரச்சினையில் ஒன்றிணைந்து போராடவேண்டும். அதற்குத் திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறோம்.

------------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 14-7-2009

30.3.09

பெண்கள் வன்முறைக்கு இலக்காகும் வீட்டுப் பிராணியா?


வீதிக்கு வரவேண்டும் பெண்கள்!

மருத்துவ ஆய்வேடான "லேன் சட்" என்பதில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஊட்டக் கூடியவையே! பெண்களைப்பற்றிய தகவல்கள் அவை. 1,06,000 பெண்கள் ஓராண்டில் தீ விபத்துகளில் பலியாகியுள்ளனர். விபத்தா - வேண்டுமென்றா அன்றித் திட்டமிட்டா என்பது கேள்விக்குறியே!

தேசிய குடும்ப சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் தகவல்படி திருமணமான பெண்களில் 37.2 சதவிகிதம் பேர் வீட்டுக்குள் வன்முறைகளுக்கு இலக்காகின்றனர்.

பாதிப்புக்கு ஆளாகும் பெண்களில் 75 விழுக் காட்டினர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வளவுக் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டும், அந்தக் கொடுமைகள் குறித்து காவல்துறைக்குப் புகார் கொடுப்பது என்பது அரிதினும் அரிதே! இவ்வளவுக்கும் பெண்களுக்கென்றே காவல்துறை தனி அலுவலகம்கூட இருக்கின்றது என்றாலும்கூட தன்னிச்சையாக இந்த வாய்ப்புகளைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத சிக்கிலில்தான் குடும்பம், சமூகமும் சுற்றுச்சூழலும் இருந்து வருகின்றன!

வீட்டு வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2005 என்ற ஒரு சிறப்பான சட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கென்று இரு முக்கிய சட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. ஒன்று- பெண்களுக்குச் சொத்துரிமை; இரண்டாவது வீட்டு வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் - 2005 ஆகியவையாகும்.

ஆனாலும் இவைபற்றிய விழிப்புணர்வு சமூகத்தின் மத்தியிலே குறிப்பாக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் மத்தியிலே சென்றடையவில்லை என்பதுதான் சோகம்.

பெண்கள் மத்தியிலே கல்வி வளர்ந்திருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், சிந்தனை ரீதியாக - உடல் வலிமை ரீதியாக மேலும் அவர்கள் வளர்த்து எடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொதுவாக பெண்கள் மத்தியில்கூட ஒரு எண்ணம் வலிமையுடன் வளர்ந்திருக்கிறது. தமக்குத் துணை வராக வரக்கூடியவர் தன்னைவிட அதிகம் படித்திருக்க வேண்டும்; தன்னைவிட உயரமானவராக இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு தாழ்வு மனப்பான்மை என்னும் சங்கிலியால் பிணைத்துக் கொள்கிறார்கள். அதுபோலவே, தன்னைவிட வயதிலும் மூத்தவராக இருக்கவேண்டும் என்கிற எண்ணமும் வேறு.

இந்த எண்ணங்கள் எல்லாம் அடியோடு நிர்மூலம் ஆகாதவரை பெண்கள் வன்முறைக்கு இலக்காகும் ஒரு வீட்டுப் பிராணி என்னும் நிலையே தொடரும் - தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சரி, இதற்கு என்னதான் தீர்வு? தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் பாடத் திட்டங்களில் அடிப்படையாக கட்டாயமாக வைக்கப்படவேண்டும். இது ஏதோ இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உலகெங்கும் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் பரப்புரை செய்யப்படவேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்சத் திட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழியிருந்தும் அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவேயில்லை.

இன்னும் சொல்லப்போனால் 1996 ஆம் ஆண்டுமுதலே இந்தச் சட்டம் இதோ வருகிறது - அதோ வருகிறது! என்று பராக்குக் காட்டப்பட்டே ஏமாற்றப்பட்டுவிட்டது.

இதற்குக் காரணம் குறிப்பிட்ட ஒரு கட்சி என்று கூறி அதன் உண்மையின் விரிவைக் குறைத்திடவோ, சிதைத்திடவோ முடியாது.

எல்லா கட்சிகளிலும் உள்ள ஆண் ஆதிக்க மனப்பான்மைதான் இதற்கு ஆணிவேராகும். ஆண்களால் பெண்களுக்கு என்றைக்கும் விடுதலை இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் இந்த இடத்தில், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது.

பெண்கள் களத்திற்கு வரவேண்டும்; போராடாமல் எந்த உரிமையும் இலவசமாகக் கிடைத்துவிடாது; அதற்குரிய விலையைக் கொடுக்கத் தயாராகவேண்டும் - இதுவும் தந்தை பெரியார் என்ற ஆணாகிய தாயின் மனிதநேயக் குரலாகும்.

----------------"விடுதலை" தலையங்கம் 30-3-2009