Search This Blog

30.4.10

புரட்சிக்கவிஞரின்அறிவியல்பார்வைஇருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் பாரதிக்குப் பிறகு அறிவியலும், கவிதையுமாகத் தமிழ் பரப்பியவர் புரட்சிக்கவி பாரதிதாசன். எதிலும் சமுதாயக் கண்ணோட்டம், பகுத்தறிவு சீர்திருத்தக் கொள்கைகளுக்குக் குறைவில்லை. பாவேந்தரின் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, சொற்பொழிவு, துணுக்கு போன்ற எல்லா ஊடகங்களிலும் அடிநாதமாக இழையோடும் அறிவியல் கருத்தாழத்தையும், தமிழின் முன்னேற்றத்தையும் எடுத்தெழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்நூற்றாண்டுக் கவியானபடியால் உலகில் நிகழ்ந்து வரும் விஞ்ஞானப் புரட்சியிலும் இரண்டறக் கலந்து, ஏவுகணைகள் முதல் சூரண மருத்துவம் வரை எத்தனையோ துறைகள் இவரது மனதில் உட்கடல் முத்துக்களாகப் பளீரிடுகின்றன. பொதுவாக அறிவியல் தமிழை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். பாமரருக்குப் புரியுமாறு எழுதப்படும் விஞ்ஞானச் செய்தி; மாணவருக்குப் புகட்டத்தகும் அறிவியல் பாடம்; கற்றோருக்கன்றி மற்றோருக்குப் பொருள் விளங்காத உயர்தரத் தொழில்நுட்ப ஆய்வுக் குறிப்பு ஆகிய மூன்று தளங்களில் நின்று கவனித்தால் பாவேந்தரின் அறிவியல் கொள்கை களில் விஞ்ஞானத் தகவல் நிலையினின்று உயர்ந்து, அறிவியல் பாட நிலைக்கு எட்டமுயலும் வேகமும், வீரியமும் புலப்படும்.

கால விரைவினைக்

கடக்கும் வானூர்தி

ஞாலப் பரப்பினைச்

சுருக்கிற்று பார்நீ.

தொலைபேசித் தொடர்பு

தோழமை நட்பு

அலைகடல் மலையை

அறிந்து பெட்பு

வானொலி யாலே

வைய மொழிகள்

தேனொலி யாயின

திக்கெலாம் கனிகள்.

ஏவுகணைகள்

கோள்விட்டுக் கோளைத்

தாவின எங்குமே

நாம் செல்வோம் நாளை.

இன்றைக்குச் செவ்வாய்க்கு மனிதன் குடிபெயரும் பிரயத்தனங்கள் வலுவடைந்து வருகின்றன. சந்திரனில் தளம் அமைத்துப் பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு ஓய்வு முகாமிட்டுச் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் தொடரும் பூர்வாங்க முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. பாவேந்தரும் செவ்வாய் உலக யாத்திரை (ஏழைகள் சிரிக்கிறார்கள் -பாரதிதாசன் சிறுகதைத் தொகுப்பு) குறித்து கற்பனை ஓவியம் தீட்டியிருக்கிறார்.

1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் ஏவப்பட்ட ரஷ்யாவின், லூனா-2 எனும் விண்கலம் சந்திரனில் ஆர்க்கிமிடிஸ் குழியின் அருகே தரையை முட்டிற்று. இதுகுறித்துப் பாவேந்தர் நடத்திய குயில் (22.9.59) ஏட்டின் கேட்டலும் கிளத்தலும் பகுதியில் ஒரு வினா விடை இடம் பெற்றது. வான் இடத்தின் இரண்டாம் தலைவனான திங்களை மண்ணிடத்தில் உருசிய எறிகுண்டு பாம்பு தொட்டது என்றால் திங்களின் மானந்தானே கப்பலேறிற்று என்ற கேள்விக்கு மண்ணின் பெருஞ்செல்வந்தான் கரியாயிற்று எனப் பதிலிறுக்கிறார். புரட்சிக்கவி, சந்திரனைப் பாம்பு விழுங்குகிற புனைக் கதைகளைப் பொய்யாக்கி இம்மண்ணுலகப் போலிச் சாத்திரங்களை எரித்துவிட்ட விஞ்ஞான வரலாறு பாவேந்தர் வாக்கில் அங்கதமாக அறிவிக்கப்படுகின்றது.

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் பாரதி.

நிலவில் மாந்தர் இறங்கும் நாள்

நெடுநாள் ஆகாது என்று தீர்க்கதரிசித்தார், பாரதிதாசனார். கவிஞர் மேலும் வெண்ணிலாவில் தமிழ்ப் பெண் சென்று இறங்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் பாவேந்தராகிய ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது எனினும் நிலவினில் முதல் மனிதன் கால் வைத்தது இந்திய நேரப்படி 1969 ஜூலை 21ஆம் நாள். பாவேந்தர் மறைந்து சரியாக 5 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்தே விண்வெளி வரலாற்றின் அந்த மகத்தான சாதனை அப்போலோ- 11 எனும் அமெரிக்கத் திட்டத்தினால் நிறைவேறியது.

ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும் என்ற தலைப்பில் பகுத்தறிவு மலர் இதழில் பாரதிதாசன் எழுதின கவிதையின் சில வரிகளைக் கவனிப்போம்.

இரோஷிமா நாகசாகி எனும் இரு ஊரில் வைய

விரோதிகள் வீசின ராம் வெடிகுண்டை; எரி மலைத்தீ

சரேலெனக் கவிழ்ந்த தைப் போல் சாவில்பல்லாயி ரம்பேர்

ஒரே விஷப் புகை நெருப்பால் உருவிலா தழிந்தா ராமே

இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் இரண்டூரின் சுற்றுப்பக்கம்

ஒன்றுமே முளையா தாமே! வாழ்தலும் ஒண்ணா தாமே

அணுகுண்டு எதிர்ப்பை மிக ஆழமாக இதில் பதிவு செய்துள்ளார்.

மேலும் உங்கள் தெரு கெட்ட தெரு எனும் தலைப்பில் தூய்மையான சுற்றுப்புறம் குறித்து ஆதங்கப்படுவதைக் கேளுங்கள்:

உங்கள் தெரு வீட்டின்முன்னே

மாடு கட்டி இருக்கும் - அங்கு

உள்ள சாணி சிறுநீரில்

கொசுக்கள் நோயைப் பெருக்கும்.

அங்கங்கேயும் வீட்டெதிரில்

குப்பைக் கூளம் கிடக்கும் - எனில்

அதனை நாயும் கோழியும்போய்

கிளறிக் காற்றைக் கெடுக்கும்

தங்குழந்தை தெருவில் பகலில்

வெளிக்குப் போகக் கண்டு - நல்ல

தந்தையரும் இருட்டினிலே

செய்வார் அந்தத் தொண்டு

கிண்டலைப் பாருங்கள்.

புகைபிடித்தல் உடலுக்குத் தீங்கு என்கிற கொள்கையோடு,

புகைச்சுருட்டால்

மூச்சுக் கருவிகள் முற்றும்நோய் ஏறும், பிள்ளை

முத்தம் தரும்நே ரத்தில் வாய் நாறும்,

ஓய்ச்சல் ஒழிவில் லா(து) இருமல் சீறும் - நல்.

ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்

எனப் புகை சுருட்டுக் கவிதையில், தீமையைச் சுட்டிக்காட்டுகிறார்.

இதுகாறும் புரட்சிக்கவி பாரதிதாசனாரின் அறிவியல் தமிழுள்ளமும் ஆழ்ந்த கவிநெஞ்சமும் நுணுகி ஆராயப் பெற்றோம். அரசு மொழியாக, ஆட்சி மொழியாக, அறிவியல் மொழியாகத் தமிழ் செழிக்கவேண்டும்.

-------------------நெல்லை சு.முத்து -நன்றி: தீக்கதிர், 26.4.2010

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டி


பார்ப்பான் வயிறு

திருப்பதிக்கு கடந்த 19 ஆம் தேதி பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். அப்பொழுது திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமணா தீக்ஷித்லு, முகேஷ் அம்பானி தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, கோவிலின் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதமும் செய்தார்.

இது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது, முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலுக்குள்தான் தலைமை அர்ச்சகர் பிரசாதம் வழங்கவேண்டும். விதிமுறைகளை மீறியது ஏன் என்பதற்கு 10 நாள்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டு, தலைமை அர்ச்சகர் ஏழுமலையான் கோயில் அதிகாரி கிருஷ்ணாராவ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் (தினத்தந்தி, 29.4.2010, பக்கம் 3).

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று ஒரு அரசு சட்டம் செய்தால் ஆகம விதிகளைத் தூக்கிக் கொண்டு உச்சநீதிமன்றம் வரை இந்த உச்சிக் குடுமிகள் ஓடுகிறார்கள். அதேநேரத்தில், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பண முதலாளிகள் என்றால், கோயில் சம்பிரதாயங்களை மலம் துடைக்கும் காகிதமாகக் கருதி வேறு மாதிரியாக நடந்து கொள்கிறார்கள்.

ஆங்கிலப் பிறப்பின்போது, ஜனவரி முதல் தேதி இரவு முழுவதும் இந்துக் கோயில்களைத் திறந்து வைக்கிறார்கள். இது ஆகம விதிகளுக்கு எதிரானது. அவ்வாறு செய்யக்கூடாது என்று சங்கராச்சாரியாரும், இராமகோபாலனும் கரடியாகக் கத்துகின்றார்கள். எந்தக் கோயில் அர்ச்சகரும் அதுபற்றி எல்லாம் காதில் வாங்கிக் கொள்வது கிடையாது. காரணம், அர்ச்சனை என்ற பெயராலே பார்ப்பனர்களின் கல்லாப்பெட்டி நிரம்பி வழியுமே! அதுவும் முகேஷ் அம்பானி என்றால் லகரத்தில் தானே தொகை இருக்கும்.

சம்பிரதாயங்கள் ஆகமங்களைப் பார்த்தால் அதெல்லாம் நடக்குமா? பணம்தான் பாதாளம்வரை பாயுமே! ஏழுமலையானைப் பற்றி மற்றவர்களை விட அர்ச்சகப் பார்ப்பான்களுக்குத்தான் நன்னா தெரியும். அது அடித்து வைக்கப்பட்ட குத்துக்கல்லு அல்லது அய்ம்பொன் பொம்மை என்று அர்ச்சகப் பார்ப்பான்களுக்குத் தெரியாதா என்ன?

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியா என்று அன்று சுவர் எழுத்தாளர் சுப்பையன் எழுதியதுதான் நினைவுக்கு வந்து தொலைகிறது!

-------------- மயிலாடன் அவர்கள் 30-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29.4.10

ஆரிய திராவிடப் பிரச்சினைக்கு ஒரு விளக்கம்


திராவிடர் என்றே பதிவு செய்யுங்கள்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கடைப்பிடிக்க தமிழர் தலைவர் வேண்டுகோள்!
திராவிட இன உணர்வே இன்றைய தேவை ஒரு வரலாற்றுப் பார்வை


சென்னையில் திராவிடர் கழக மாணவர் மாநாடு 16.4.2010 அன்று பெரியார் திடலில் நடைபெற்றபோது, மாணவர்களே ஆசிரியர் விரும்பியது போல் மிகச் சிறப்பாக எழுச்சியோடும், இடையிடையே பகுத்தறிவுப் பாடல்களுடனும் தொய்வில்லாமல் நடத்திக் காட்டிய மாண்பினைக் கண்டோம்.

அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்திய உரை இருக்கிறதே, அது எதிர்கால இளைஞர் சமுதாயம் பகுத்தறிவுப் பாதையில் ஏன் நடைபெறவேண்டும், எப்படி நடை போடவேண்டும் என வழிகாட்டும் உரையாக அமைந்தது.

அதில் குறிப்பிடத்தக்கது திராவிடர் என்ற சொல்லின் மகத்துவத்தை எடுத்துக்காட்டி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தமிழர் என்றோ வேறு வகையிலோ பதிவு செய்யாது, திராவிடர் என்றே பதிவு செய்யுங்கள் என்று தமிழர் தலைவர் வலியுறுத்தினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவில் திராவிடன் என்று சொல்லும்போதுதான் ஆரியன் என்ற இனத்தோடு எவ்வகையிலும் ஒட்டாதவன் என்ற பொருள் கிடைக்கும் என்றார்.

இது இளைய தலைமுறைக்கு இன்றியமையாத அறிவுரை. திராவிடர் என்பது தீண்டத்தகாத சொல் போலச் சிலர் பேசி வருகின்றனர். அதுவும் தந்தை பெரியாரையே ஒதுக்கிவிட்டுத் திராவிடர் வாழ்க்கையில் ஏற்றம் செய்வதாகத் திராவிடர் சிலரே கிளம்பியிருப்பதைப் பார்க்கிறோம்.

தமிழர் என்று பதிவு செய்தோமேயானால் நம் தனித்த அடையாளம் மறைந்துபோய்விடும். ஆரியரும் தங்களைத் தமிழர் என்று அழைத்துக் கொண்டு விடுவர். ஆரியஅடிமைத்தனம் புரியாமல் போய்விடும். எனவேதான் திராவிட மாணவர் இயக்கம் என்பது நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் என்று மாற்றம் பெறும் முன்னரே தோன்றியது என்பதை எடுத்துச் சொன்னார்.

திராவிடர் கழகம் என்னும் சேலம் மாநாட்டுத் தீர்மானம் 1944 இல் நிறைவேறிய தீர்மானம்! அண்ணாவின் தீர்மானம் என்று அழைக்கப்பட்டாலும், அது அய்யாவின் தீர்மானம், தந்தை பெரியாரின் தீர்மானம், குடிஅரசு அச்சகத்திலே பெரியார் அச்சிட்டு, சேலம் மாநாட்டிற்கு முன் சேலத்தில் அதனைக் கொண்டு சென்று அய்யா தொலை நோக்கோடு அண்ணா தீர்மானம் என்று தோன்றச் செய்ய அங்கிருந்து அனைவருக்கும் அனுப்பினார் தொலைநோக்கோடு என்று எடுத்துக் கூறினார்.

ஆசிரியரின் அன்றைய இந்த முழக்கம் இன்று, நேற்று தோன்றிய முழக்கமல்ல என்பதை வரலாற்றுப் புதிவுகள் எடுத்துக் கூறுகின்றன. கடலூர் வீரமணி என்று அழைக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிய முழக்கம். இதற்கு ஆதாரம் 16.-1.-1955 விடுதலையில் காணக்கிடக்கிறது. தமிழா இன உணர்வு கொள் என்று கூறுவதற்குப் பதிலாகத் தமிழா திராவிட இன உணர்வு கொள் என்று இன்று கூறவேண்டியது காலத்தின் கட்டாயம். திராவிட விழிப்புணர்வு இன்றைய தேவை. இதனை அன்றே அதாவது இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன், அதுவும் மும்பை நகரை எடுத்துக் காட்டாகக் கொண்டு காட்டுவதை இன்றும் சுட்டிக் காட்டுவது மிக மிகப் பொருத்தமாக இருக்கிறது.

16.-1.-1955 விடுதலையில் இடம் பெற்றது இது.

பம்பாயில் திராவிட இன முழக்கம் கடலூர் வீரமணி

என்ற தலைப்பு. தமிழர் தலைவர் இப்படி தொடங்குகிறார். தம் இன உணர்வுப் பிரச்சாரத்தினை அன்று அவருடைய உரை இன்றும் திராவிடன் என்ன நிலையில் இருக்கிறான்? ஏற்றம் பெறவில்லை முழுமையாக என்று காட்டும்.

பம்பாய் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள மூன்று முக்கிய நகரங்களில் ஒன்று. தென்னாட்டில் வடவர் சுரண்டிடும் செல்வத்தின் வளம், பெரிய ஆலைகளின் வடிவிலே காட்சியளிக்கும் இடம் வடக்கு உயருகிறது, தெற்கு தாழ்கிறது பாரத புத்திரர் ஆட்சியிலே என்பதற்கோர் எடுத்துக்காட்டு சென்னையிலிருந்து சுமார் 800 மைல்கட்கு அப்பால் உள்ள இந்த இடத்தில் நமது லட்சியமாகிய திராவிட நாடு திராவிடர்க்கே என்ற இன முழக்கம் எழாத இடமில்லை. நமது இயக்க வளர்ச்சியைப் பற்றிப் பேசாத ஆள்களில்லை. திராவிடத்தின் தனிப்பெரும் ஒரே தலைவராம் பெரியாரின் பெருந்தொண்டு தாயகத்தில் மட்டுமல்ல, தாயகத்தைத் தாண்டியும் கூட, வஞ்சக வடவர்கள் வாழும் இடங்களிலும் பரவுகிறது வேகமாக என்று எடுத்துத் தொடுக்கையில் தலை நிமிர்கிறோம்.

திராவிடரை மும்பையில் அடையாளம் காட்டுகிறார் தமிழர் தலைவர் இவ்வாறு:

பம்பாயில் தென்னாட்டவர்கள் வாழுகிறார்கள். அவர்களை இரு பிரிவாகத்தான் பிரிக்கலாம். வழக்கம் போல ஆரியர், திராவிடர் என்று. ஆரியராவது திராவிடராவது என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பம்பாய் சென்று தாராவி, மாதுங்கா இந்த இரண்டு பகுதிகளையும் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டே தீருவார்கள் -தீரவேண்டும்.

அன்று திராவிடர்கள் மும்பையில் தாராவியில் வாழ்ந்த நிலையை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அய்ம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் திராவிடர் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையே.

தாராவி பஞ்சைகளாம் திராவிடர் வயிறு வளர்க்க வறுமையுடன் போராடிக் காலம் தள்ளும் வறண்ட பகுதி. எங்கு பார்த்தாலும் சாக்கடை. சிறுசிறு குடிசைகள் சுகாதாரத்திற்கும் தாராவிக்கும் வெகு தூரம்! திராவிடச் சமுதாயத்தில் மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுவது போல அங்கு ஒரே துர்நாற்றம். தோல் பதனிடும் தொழிற்சாலை-களிலேதான் நம் தோழர்கள் உழைத்து உருக்குலைந்து இருக்கிறார்கள். சிறந்த நிருவாகத்துடன் நடத்தப்பெறுவது என்று சொல்லப்படும் பம்பாய் கார்ப்பரேஷனின் ஒரு பகுதிதான் தாராவி என்று சொன்னால் நம்ப முடியாது. தமிழ்நாட்டில் வட்டமிடும் ஆரிய, வடநாட்டுக் கழுகுகளைப் போலவே அப்பகுதியில் மலைக் கழுகுகள் ஏராளமாக வட்டமிட்டுக் கொண்டுள்ளன. சகல நோய்களின் ஊற்றாக வறுமைக் கேணியில் வீழ்ந்தவர் வாழுமிடமாக அமைந்துள்ளது தாராவி. இது திராவிட இனத்தின் நிலை.

மும்பையில் வாழும் திராவிட இனம் குறித்துக் கூறும் ஆசிரியர் கண்களில் மறையோர் வாழும் மாதுங்கா படுகிறது. ஆரியர் வாழும் அற்புத வாழ்க்கை தோன்றுகிறது. இந்த அவலத்தை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

மாதுங்கா மறையவர்கள் வாழும் மயிலாப்பூரின் மற்றொரு மாடல்! சமுதாயத்தில் பார்ப்பான் ஏற்படுத்திய ஜாதிகளின் வரிசையை நினைவு படுத்துவது போன்று, அந்தச் சாலையோரங்களில் மரங்கள் நிற்கின்றன நிழலுக்கு! நான்கைந்து மாடிக் கட்டடங்களைத் தவிர்த்து சிறு வீடுகளைக் காண முடியாது. கோவில், விளையாட்டு மய்தானம், பள்ளிக் கூடம், பூங்கா இவைகள் இங்கு ஏராளம்.

ஆசிரியர் 16-.4.-2010இல் குறிப்பிட்டாரே, அதை நினைவூட்டுகிற அடுத்த வரிகள் இங்கே சற்று ஊன்றிக் கவனிக்க வேண்டும். தமிழர்கள்! என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள் அங்குத் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் வாழும் அக்ரகாரத்தின் அத்தனைப் பண்புகளும் காணப்படுகின்றன. அவர்கள் அறிந்த கலைகளை யெல்லாம் பயன்படுத்தி உயர்ந்த பதவியில் வாழ்கின்றனர். அந்த உஞ்சவிருத்திக்கும், இந்த நிலை ஆரிய திராவிடப் பிரச்சினைக்கும் புது விளக்கம் தருகிறது.

மானத்திற்காக வாழ்வின் தேவைகளையும் தியாகம் செய்து வாழ்வது திராவிடம், வாழ்வின் தேவைகட்காக, மானத்தையும் தியாகம் செய்து வாழ்வது ஆரியம்.

வடநாட்டானை வெளியேற்றினால் அங்குள்ள தென்னாட்டாரின் கதி என்ன என்று சில மரமண்டைகள் கேட்கிறார்களே! அவர்கள் சிந்திக்கட்டும். தாராவி என்ன சவுகார்பேட்டை போலவா இருக்கிறது? அங்கு சென்று பிழைப்பவர்கள், சுரண்டச் சென்றவர்களல்ல, உடலுழைப்பைக் கூலிக்கு விற்று வாழ்பவர்கள்.

இப்படிப்பட்ட திராவிட சமூகத்தின் இருள் நிலை ஒழிய, இங்குள்ள நிலை மாற திராவிட நாடு திராவிடருக்கே என்ற உண்மையை நாம் உணரச் செய்வதுதான் என்று கூறும் ஆசிரியர் தாராவியில்தான் நமது கழகம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று அது விரிந்து பரந்து வளர்ந்துள்ளது, ஓர் பெரிய ஆல மரம் போன்று நிலை புரியாது வாழ்ந்த திராவிடர்கள் இன்று நம் கழகத்திற்கு வரத் தலைப்பட்டுள்ளனர் என்கிறார். தமிழர் தலைவர் அன்று உரைத்தது இன்று மெய்ப்பட்டிருக்கக் காண்கிறோம்.

ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்திண்மை, எதிர்ப்புக்கஞ்சாப் பண்பாடு, எஃகு உள்ளம் இத்தகைய பண்பு கொண்டவர்களே இங்கும்போல் அங்கும் அதிகம் பெரியாரின் பெரும்படையில் இருக்கிறார்கள்.

பெரியாரின் இயக்கம் ஒன்றுதான் திராவிடத்தின் விடுதலையைக் காண ஜாதி வகுப்பற்ற சமுதாயத்தைக் காண சாதி மதத்தை ஒழிக்க, இழிவைத் தொலைக்கப் பாடுபடும் ஒரே இயக்கம் தென்னாட்டில் என்ற கருத்தை எல்லாத் திராவிடர்களும் அங்கு உணர ஆரம்பித்துள்ளனர் என்று கூறும் ஆசிரியர், திராவிடர் கழகம் ஏழைகள் கழகம். ஆனால் எஃகு உள்ளம் கொண்டவர்கள் கழகம் என்கிறார். இன்றும் அது உண்மைதானே. எனவே திராவிட விழிப்புணர்வு பெறுவோம்.


---------------------முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 28-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

திருக்குறளிலேயே கோவில் இல்லை - அரசு சின்னத்தில் கோயில் ஏன்?


குறளில் கோயில் இல்லை

இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள். தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கவிதைத் தேனில் தந்த தேர்ந்த புலவன் பாரதிதாசன்.

ஒரு கட்டத்தில் மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு பாடிக் கொண்டிருந்த இந்தக் கவிஞர் புரட்சிக்கவிஞன் ஆனது மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆகும்.

இது தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உள்ள ஆளுமை! கருத்தின் வலிமை சேர்ந்த வளமை!!

தந்தை பெரியாரின் ஓர் உரை ஒரு புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்குத் தந்தது. ஒரு தொண்டரைத் திராவிடர் கழகத்துக்குத் தந்தது எனின் தந்தை பெரியார் அவர்களின் ஒப்புவமையில்லா சிந்தனைப் பெருக்கை எண்ணிப் பார்க்கவேண்டும் எவரும்!

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தந்தை பெரியார் கருத்துகளை, கொள்கை முழங்கும் எழுத்துகளைக் கொண்டு சேர்ப்பதுவரைதான் நமது கடமையும், பணியும் ஆகும். அது கொண்டு போய் சேர்க்கப்பட்டால் அதன் வேலையைக் கண்டிப்பாய் செய்து முடித்தே தீரும் என்பதில் எவ்வித அய்யமும் கிடையவே கிடையாது! புரட்சிக்கவிஞரே இதற்கொரு ஈடில்லா எடுத்துக்காட்டாகும்.

இந்து சமய கலை விழா என்று கூறி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சென்னையில் 1983 இல் விழா ஒன்றை நடத்துவதாக அறிவித்தார். இந்துத்துவாவைத் திணிக்க, பரப்பிட சங்கராச்சாரியார் புது அவதாரம் எடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்த ஆண்டுமுதல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவை தமிழர் கலை,பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திட முடிவு செய்தார்.

சங்கராச்சாரியார் அந்த ஆண்டோடு அதனை மூட்டைக் கட்டிக் கொண்டாலும் திராவிடர் கழகம் தொடர்ந்து புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திக்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு விழாவில், அவர் கூறிய கருத்து ஒன்றுக்கு வலிமை சேர்கிறது. குடும்ப விளக்கு நான்காம் பகுதியில் திருக்குறள் குறித்து புரட்சிக்கவிஞர் கூறும் வரிகள் மிகவும் முக்கியமானவை நயமானவை.

நாடி முத்து வேடப்பனிடம்

இன்றியமையா ஒன்றுக்காகக்

கடன் பத்து ரூபாய் கொடுவென்று கேட்டான்

வேடன் கொடுப்பதாய் விளம்பினான் அதற்குள்

அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்

தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்

கோவிலுக் காட்டுப்பா என்று கூறினாள்

குறளில் கோயிலே இல்லையம்மா

என்றான் வேடன். இதனைக் கேட்ட

நாடிமுத்து நவிலுகின்றான்;

தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே

பத்து ரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்

கோவில் இல்லையா குறளில்?

ஆயில் என் பணத்துக்கில்லை அழிவே!

இதன்மூலம் திருக்குறளில் கோயில் என்ற சொல்லே இல்லை என்பதை மிக அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார் புரட்சிக்கவிஞர்.

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான கருத்துத் தலைதூக்கி எழுந்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் சின்னம் இந்து மதக்கோயில் கோபுரமாக உள்ளது.

மதச்சார்பற்ற ஓர் அரசின் சின்னம் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக இருக்கலாமா என்ற அர்த்தமுள்ள வினா சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. கோபுரத்திற்குப் பதில் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் என்பதுதான் அந்த அறிவார்ந்த யோசனையாகும்.

திருக்குறளிலேயே கோவில் இல்லை என்கிறபோது, அரசு சின்னத்தில் கோயில் ஏன்? கோயிலையோ, கடவுள் என்ற சொல்லையோ எந்த இடத்திலும் குறிப்பிடாத மிகமிகச் சிறந்த மதச் சார்பற்ற புலவரான திருவள்ளுவர் உருவத்தை கோயிலுக்குப்பதில் பொறிப்பது என்பதுதானே பொருத்தமானதும், அறிவார்ந்ததுமாக இருக்க முடியும்?

இந்தக் கருத்தை சட்டப்பேரவையில் தோழர் ரவிக்குமார் தெரிவித்தாலும், இதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்தான் என்பதை, கவிஞரின் பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.

அடுத்த கட்டத்திற்கு இந்தக் கருத்தை நகர்த்த சூளுரைப்போம்!

----------------------- “விடுதலை” தலையங்கம் 29-4-2010

28.4.10

கிறித்துவ மதத்திலும் நித்தியானந்தாக்கள்அமெரிக்காவில் பாதிரியாராகப் பணியாற்றி, தமிழ்நாடு திரும்பிய கிறித்துவப் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபாலன்மீதான பாலியல் புகார் உலகம் முழுவதும் நாற்றமெடுக்கிறது. நித்தியானந்தாவைப் பற்றி ஊர் சிரிக்கும் தகவல்கள் புற்றீசல் போலக் கிளம்பியிருக்கும் இந்தக் கால கட்டத்தில் கிறித்துவ மதத்திலும் இதுபோன்ற நித்தியானந்தாக்கள் இருக்கிறார்கள் என்பதற்கான தகவல் இது.

2004-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா நகரில் கிராக்ஸ்டன் தேவாலயத்தில் இவர் பாதிரியாராகப் பணி புரிந்திருக்கிறார். ஒரே நேரத்தில் நான்கு தேவாலயங்களில் பணிபுரிந்துள்ள இவர் சிறுமிகளிடம் தன் பாலியல் சேட்டைகளை நடத்தி வந்திருக்கிறார்.

அந்தக் கால கட்டத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் அமெரிக்கப் பேராயர் விக்டர் பால்கோவிடம் புகார் கூறியுள்ளனர். அதன்பின் அந்தப் பாதிரியார் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகும் சென்னை மயிலையில் உள்ள பேராயருக்கும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரச்சினை வாடிகன் போப் வரை சென்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிமீது நடவடிக்கை மட்டும் எடுக்கப்படவேயில்லை.

அங்கு சுற்றி, இங்கு சுற்றி இப்பொழுது போப்மீதே பழி விழுந்திருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டாம்; காவல் துறைக்கும் கொண்டு போக வேண்டாம் உங்கள் மத்தியிலேயே சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாலியல் தொடர்பான குற்றச் சாற்றுகள் பாதிரியார்கள்மீது வரும் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று போப் சுற்றறிக்கை ஒன்றை விட்டுள்ளார்.

இந்தப் பாதிரியார் ஜோசப் பழனிவேல் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இருந்தும் பாதிரியார்கள் மீது ஏராளமான குற்றச்சாற்றுகள் கிளம்பிய வண்ணமே உள்ளன. போப்புக்கும் இது தெரிந்த ஒன்றுதான்.

அண்மையில் போப் இத்தகைய குற்றம் இழைத்தவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்புக் கொடுத்த செய்தியும் வெளியில் வந்தது.

இதன் பொருள் என்ன? குற்றம் புரிந்தவர்கள் ஒருவரா இருவரா? ஆயிரக்கணக்கில் என்கிறபோது போப் திணறிப் போன நிலையில்தான் இப்படி ஒரு ஒட்டு மொத்தமான கையிருப்பை பாவ மன்னிப்பை அருளியிருக்கிறார் போலும்!

மராட்டிய மாநிலம் விருந்தவன், மஸ்கத்து ஆகிய இடங்களில் ஆசிரமங்களை நடத்திவரும் திரிபாலு மகராஜ் என்னும் மத போதகர் ஒருவர் தாம் கிருஷ்ண பகவானின் மறு அவதாரம் என்று கூறி பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றம் செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டார்.

மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியது. விசாரித்த நீதிபதிகள் வி.என்.ரே; ஜி.டி. நானாவதி ஆகியோர் ஆவர்.

சாமியார் மகராஜ் ஒரு வயது முதிர்ந்த துறவி என்பதையும், உலகம் எங்கும் பல சீடர்கள் அவருக்கு உள்ளனர் என்பதையும் கருத்தில் கொண்டு, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் தவறானது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுபோல் இவ்வகை சாமியார்கள் எல்லாம் தவறான வழியில் ஈடுபட மாட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனையோ மதக் குருமார்கள் இளம் கன்னிகளைத் தம் காம இச்சைக்குப் பயன்படுத்தி உள்ளனர் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

மதங்கள் என்பவை குற்றங்களுக்குச் சுலபமான கழுவாய்களை, பாவ மன்னிப்புகளை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றன. எந்தப் பாவத்திற்கும் பரிகாரம் எல்லா மதங்களிலும் உள்ளன.

இந்த நிலையில் அவர்கள் பாவம் செய்யவோ, பஞ்சமா பாதகங்களில் ஈடுபடவோ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே!

கழுவாய்களும், பரிகாரங்களும் வைத்துக் கொள்ளாத மதம் ஒன்று உண்டா!

மதம் நல்வழி காட்டுகிறது என்பதைவிட தீயவழியில் செல்; அதிலிருந்து வெளிவர அகலமான வேறு ஒரு வழி இருக்கிறது என்று காட்டுவதுதான் மதங்களாக இருக்கின்றன. பக்தியும் மதமும் காட்டும் ஒழுக்கம் இத்தகையதுதான்.

ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தி தனிச் சொத்து என்று தந்தை பெரியார் கூறிய உயர் எண்ணத்தை இந்த இடத்திலே சீர்தூக்கிப் பார்க்கட்டும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும்!

------------------- “விடுதலை” 28-4-2010

பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால்...


பார்ப்பனரல்லாதார் இயக்கம்

1. தங்களைப் பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆச்சார அனுஷ்டானங்களில் எவ்வித வித்தியாசமுமில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர்களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ, அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அருகதையோ உண்டா?

2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது சத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திரனென்றோ, பஞ்சமன் என்றோ, சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்ப வனுக்குப் பார்ப்பனரல்லாதான் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?

3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனியத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?

4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால், பார்ப்பனர்களிடம் உள்ள உத்தியோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?

5. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனியமானது, பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?

6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக்களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கிட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிட மிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரம் வளர்ந்து விடுமல்லவா?

7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனியத்தை ஒழிப்பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே அழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனியத்தை ஒழிக்கும் கொள்கையில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக்கங்களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும், சொல்வது சரியா? தப்பா? உதாரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கத்தின் பலனாய் இயக்கத்தில் உள்ள பார்ப்பனா திக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கிலம் படித்தவர்கள் ஆதிக்கம், முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப் போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?

--------------------தந்தைபெரியார் - “ குடிஅரசு”, துணைத் தலையங்கம், 06.01.1929

27.4.10

குடிஅரசு பத்திரிக்கை பற்றி பெரியார் - 3

நமது பத்திரிகையின் நான்காவதாண்டு


குடிஅரசு பத்திரிகை தோன்றி இன்றைக்கு மூன்றாவது ஆண்டு கழிந்து நான்காவது ஆண்டு தொடங்கிவிட்டது.

அது தோன்றிய நாள்முதல் இதுவரை செய்து வந்த தொண்டைப்
பற்றியும், அதனால் ஏற்பட்ட பலனைப்பற்றியும் பொது ஜனங்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

குடிஅரசின் கொள்கையை அதன் முதல் மலர் முதலிதழில் தலையங்கத்தில் தெரிவித்தபடி, அதாவது:-

மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும்...

உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இன்னோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி இவர் எமக்கு இனியர் இவர் எமக்கு மாற்றார் என்கின்ற விருப்பு வெறுப்புகள் இன்றி... நண்பரே ஆயினும் ஆகுக. அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்.

என்று நாம் உலகத்தாருக்கு ஆதியில் வாக்குக்கொடுத்தது போலவே இதுகாறும் ஒரு சிறிதும் மாறுதல் இன்றியும் கள்ளங்கபடின்றியும் தயவு தாட்சண்யம் இன்றியும் அது, தனக்கு சரி என்று பட்டதை எவருக்கும் அஞ்சாது எப்பழிக்கும் பின் வாங்காது உண்மையுடன் உழைத்து வந்திருக்கின்றது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

எனவே இப்பத்திரிகையின் கொள்கை இன்னது என்பதையும், அது ஆரம்பித்த நாள் முதல் இதுவரை அதையே கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தவே இக் குறிப்பை வெளியிட்டோம்.

அன்றியும் குடிஅரசின் இக் கொள்கை கொண்ட உழைப்பானது மற்ற பெரும்பான்மையான பத்திரிகைகளின் உழைப்பைப் போல் பத்திராதிபரின் வாழ்வுக்கும், ஜீவனத்திற்கும் மாத்திரம் அனுகூலமாக்கிக் கொண்டு நாட்டை பாழ்படுத்திக்கொண்டோ அல்லது ஒரு பயனும் இல்லாமல் மக்களை மூட பக்தியிலும், குருட்டு நம்பிக்கையிலும் அழுத்திக் கொண்டோ அல்லது சோம்பேறி வேதாந்தம் கற்பித்துக்கொண்டோ அல்லது அர்த்தமற்ற சுயராஜ்ய பேச்சோ, தேசியப் பேச்சோ பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டோ இருந்துவராமல் மக்களுக்குள் ஒருவித உணர்ச்சியையும், எழுச்சியையும் கொடுத்து அறிவை விளக்கி வந்திருக்கின்றது என்பதை பல நண்பர்கள் நமக்கு எடுத்துக் காட்டி இருப்பதையே நாம் இங்கு இது சமயம் சுட்டிக் காட்டுகின்றோம்.

குடிஅரசினால் தேசிய வாழ்வுக்காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும், புராணபிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக்கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம். ஆனாலும் அக்கூட்டத்தையும் அவர்களது கூச்சலையும் ஒரு கடுகளவும் லட்சியம் செய்யாமல் நாம் முனைந்து நிற்பதால் அவர்களால் நேரிடும் இடையூறுகள் யாவும் தூள் தூளாய் சின்னாபின்னப்பட்டு காற்றில் பறப்பதும் வாசகர்கள் நித்தமும் உணர்ந்ததேயாதலால் அதைப்பற்றி நாம் அதிகம் எழுத வரவில்லை.

உதாரணமாக, மோட்டார் வண்டிகள் தெருக்களில் வேகமாகச் செல்லும்போது தெருப்பொறுக்கும் சுணங்கன்கள் அவ்வண்டியின் நிலையறியாது அதை வழிமறித்து தடுத்து கடித்தெறிந்து விடலாம் என்கின்ற ஆவலுடன் குரைத்துக் கொண்டு சிறிதுதூரம் வண்டியைத் தொடர்ந்து ஓடி காலும் வாயும் வலித்த உடன் எப்படி முணுமுணுத்துக்கொண்டு திரும்பிப்போய் விடுகின்றனவோ அதுபோல் குடிஅரசின் வேகத்தினிடம் அநேகப் பத்திரிகைகளும் தனி நபர்களும் வெகு ஆத்திரமாக அதைத் தடுத்து நிறுத்திவிடுவது போல் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்துவிட்டு அடங்கிப் போனவைகளும், சில மறைமுகமாய் விஷமம் செய்து கொண்டிருப்பதும் சில மானம் வெட்க-மில்லாமல் நின்ற நிலையில் இருந்தே குரைத்துக் கொண்-டிருப்பதுமான நிலையை தினமும் உணருகின்றவர்களுக்கு குடிஅரசின் வேகத்தைப் பற்றியோ தத்துவத்தைப்பற்றியோ அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதைப் பற்றியோ அறிவிக்க வேண்டியதில்லை.

நிற்க, தமிழ்நாட்டின் நிலைமைகளும் வயிற்றுப் பிழைப்புத் தேசிய வாழ்வுக் காரர்களின் யோக்கியதைகளும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வேறுபாடுகளும் வெளிமாகாணத்தாருக்கும், வெளி தேசத்தாருக்கும் தெரியப்படுத்த சுமார் 10,12 வருஷங்களாக பார்ப்பனரல்லாதார் இயக்கமும் ஜஸ்டிஸ் திராவிடன் பத்திரிகைகளும் எவ்வளவோ பாடுபட்டும் பார்ப்பனருடையவும் அவர்களது கூலிகளுடையவும் பலவித சூழ்ச்சிகளால் அதன்குரல் வெளியில் போகாமல் தடுக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்த விஷயமாகும். அவ்விதத் தடைகளை எல்லாம் தாண்டி இப்பொழுது வெளி மாகாணங்களுக்கும் மேல் நாடுகளுக்கும் கூட அவைகள் எட்டி இருப்பதற்கு நம்நாட்டு தேசியப் புரட்டும் பார்ப்பன சூழ்ச்சியும் பாமரர்கள் யாவரும் அறிந்திருப்பதற்கும் குடிஅரசின் தொண்டு ஒரு சிறிதாவது காரணமென்று சொல்வது மிகையாகாது.

குடிஅரசு முதல் வருஷத்தின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும் இரண்டாவது வருஷ முடிவில் 4500 சந்தாதாரர்களையும் மூன்றாவது வருஷ முடிவில் 7000 சந்தாதாரர்களையும் கொண்டு உலவி வருவதனாலேயே அது ஒரு விதத்தில் பொது ஜனங்களின் ஆமோதிப்பை பெற்று வருகின்றது என்று சொல்லலாம். அதோடு, தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் குடிஅரசே அதிகமான சந்தாதாரர் களையும் வாசகர் களையும் கொண்டிருப்பதாகவும் சொல்லலாமானா லும் இனியும் அது அடைய வேண்டிய உயர்ந்த எண்ணிக்கையை அது அடைந்து விட்டதாக நாம் சொல்வதற்கில்லை.

சற்றேறக்குறைய, 2 கோடி மக்களையுடைய தமிழ்நாட்டில் குடிஅரசு 7000 பிரதிகள் மாத்திரம் உலவுவ-தானது ஒருக்காலும் போதாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் குடிஅரசு மேற்போட்டுக் கொண்டிருக்கும் தொண்டு இலேசானதல்ல என்பதாலும் அது அழிக்க முனைந்திருக்கும் கேடுகள் இன்று நேற்று ஏற்பட்ட கெடுதி அல்ல வென்பதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மயங்கும்படியான தெய்வத்தின் பேராலும், மோட்சத்தின் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்டு என்றென்றைக்கும் விடுதலையடைய மார்க்கமில்லாமல் கட்டிப் போடப்பட்டிருக்கின்றதாலும், இந்த கேட்டைப் பரப்புவதையும், நிலை நிறுத்துவதையும் பார்ப்பனரல்லாதாரிலும் பலர் பக்தியாகவும் ஜீவனோ பாயமாகவும் கொண்டிருக்கிறதினாலும், இப்புரட்டுகளும் சூழ்ச்சிகளும் உலகத்தில் நூற்றுக்கணக்கான வருஷங்களில் கூட அழிக்க முடியாதபடி கோவில்களாகவும், தெய்வங்களாகவும், வேதங்களாகவும், புராணங்களாகவும், படங்களாகவும், பஜனை பாட்டுக்களாகவும், இலக்கணங்களாகவும், இலக்கி-யங்களாகவும் நாடெல்லாம் நிறைந்து அரசன், செல்வந்தன், படித்தவன். பிச்சைக்காரன் ஆகிய எல்லோர் வாயிலும், மனத்திலும் குடிகொண்டதாலும் இப்-படிப்பட்ட விஷயத்தை எவ்வளவு புரட்டான-தானாலும், மோசமானதானாலும் மக்களுக்கு எவ்வளவு இழிவும் கேடும் சூழ்வதானாலும் அதை ஒழித்து உண்மையை வெளியாக்கி மக்களை சீர்படுத்துவதென்றால் அதை சில வருஷங்களில் வாரம் ஒரு 7000 பிரதி வெளியீட்டில் முடியக்கூடிய காரியம் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனமேயாகும். ஆதலால்தான் ஏழாயிரம் பிரதி போதாதென்பதோடு குறைந்தது 50,000 பிரதியாவது வாராவாரம் வெளியாக வேண்டுமென்பதே நமதபிப்பிராயம்.

மற்றபடி இதற்கு ஏற்படும் எதிரிகளைப்பற்றியோ எதிர்ப்பிரசாரத்தைப்பற்றியோ நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இதுவரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும் தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத்துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத்தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமப் பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டார்கள். இவைகளினாலெல்லாம் குடிஅரசின் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிநிதிகள் உயர்வதிலும் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே உறுதி கூறலாம்.

அன்றியும் குடிஅரசையும் அதன் கொள்கைகளையும் எதிர்ப்பதாகவோ வெளியில் எதிர்த்து பிரசாரம் செய்வதாகவோ வெளியில் வந்த யாரும் இதுவரை குடிஅரசில் கண்ட விஷயங்களில் எதற்காகவாவது ஒன்றுக்கு யோக்கியமான சமாதானம் சொல்லவும் முன்வரவில்லை என்பதினாலும் உணரலாம்.

ஆனாலும் குடிஅரசு தமிழ்நாட்டில் 50,000 பிரதிகள் உலவி அதில் காணும் முக்கிய விஷயங்களை ஜில்லாதோறும் பதினாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வெளியாக்கி வினியோகித்து வந்தால் மாத்திரம் சரியானபடி பரவக்கூடுமேயல்லாமல் இந்த 7000 பிரதியோ அல்லது 17000 பிரதியோ ஒரு காரியமும் செய்து விடாது என்றே சொல்லுவோம்.

தவிர, குடிஅரசு இனி ஈரோட்டிலிருந்து வெளிவருவது சற்று கஷ்டமாகவே தான் காணப்படுகிறது. ஏனெனில் யந்திரங்கள் போதுமானதாயில்லாததோடு, போதிய சவுகரியமும் இல்லை. இன்னும் ஒரு மிஷின் வாங்க வேண்டியதாகவும் இருக்கின்றது. இதல்லாமல் இனி குடிஅரசு ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆதிக்கத்தில் இருப்பதும் சரியல்ல வென்றே நினைக்கின்றோம். என்னவெனில் இப்படி ஒருவராலேயே நடத்தப்படுவதாயிருத்தல் இது இனி வெகு காலத்திற்கு நடந்து வர முடியுமா என்பதுதான். ஆதலால் குடிஅரசை ஒரு லிமிடெட் கம்பெனியாக்கி இந்த கொள்கை கொண்ட ஒரு நிருவாக கம்பெனியிடம் ஒப்படைத்து இன்னமும் கொஞ்சம் குறைந்த விலையில் அதாவது வருஷம் 2 ரூபாய் சந்தாவில் இனியும் அதிகமான பிரதிகள் வெளியாக்கத்தக்க மாதிரியிலும் இனியும் அதிகம் பேர் படிக்கத்தக்க மாதிரியிலும் செய்ய வேண்டுமென்றே ஆசைப்படுகின்றோம். சாதாரணமாக 20,000 பிரதிகள் வாராவாரம் வெளியானால் வருட சந்தா 2 ரூபாயாக ஆக்கினாலும் நஷ்டம் வராது என்பது நமது துணிவு. பக்கங்களை வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளலாம். லிமிடெட் கம்பெனி ஆக்க வேண்டுமென்பது பொறுப்பை உண்டாக்கவே ஒழிய பணம் அதிகம் தேவை என்பதாகவல்ல என்றும் சொல்லுவோம். இனி ஒரு மிஷினைத் தவிர வேறு ஒன்றும் வேண்டியதில்லை. தவிர நமக்கு எவ்வளவு மனஉறுதி இருந்தாலும் சற்று உடல் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. என்னவெனில் 2 அல்லது 3,4 மணிநேரமானாலும் பேசுவது சுலபமாயிருக்கின்றதேயல்லாமல் எழுதுவது அரைமணி நேரமானாலும் தலைவலி வந்து விடுகின்றது. கையும் வலி எடுத்துக் கொள்ளுகின்றது. அடிக்கடி மயக்கம் வருகின்றது. இது தவிர இங்கிலீஷ் வாரப் பத்திரிகையும் (ரிவோல்ட்) நடத்த வேண்டியிருப்பதாலும் அடிக்கடி பிரச்சாரத்திற்காக வெளியில் போகவேண்டியிருப்பதாலும் திராவிடன் பத்திரிகையின் பொறுப்பையும் ஒப்புக்கொண்டிருப்பதாலும் இவ்வளவு காரியமும் ஒரு மனிதன் தலையிலேயே போடக்கூடிய காரியம் ஆகுமா என்பதும் யோசிக்கவேண்டிய காரியமாகும். அன்றியும் இக்கொள்கைக்கு ஒரு கட்டுப்படான இயக்கம் ஏற்படுத்தி அதற்கு ஜில்லா தாலுகா பிரசாரக்காரர்களையும் ஏற்படுத்தி அவ் வியக்கத்தின் சார்பாய் இப்பத்திரிகைகள் நடைபெறுவது நலமளிக்குமாதலால் அம்மாதிரி இயக்கம் ஒன்று வேண்டியிருப்பதோடு அதற்காக வேறு பல பிரயத்தனங்களும் செய்யவேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

------------------தந்தை பெரியார்- "குடிஅரசு" - தலையங்கம், 29-04-1928

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி - ஏழுமலையான் - நாமமோ, நாமம்!

ஏழுமலையான் - நாமமோ, நாமம்!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தங்கள் அணிதான் ஜெயிக்கவேண்டும், போட்டிகளை ஏலத்தில் எடுத்த பணத் திமிங்கலங்கள் திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டுதல் செய்தும், தரிசனம் செய்தும், காணிக்கைகளை குவித்தும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தனர்.

பெங்களூரு அணிதான் வெற்றி பெறவேண்டும் என்று அதன் தலைவர் விஜய் மல்லையா கடந்த 25 ஆம் தேதி நேரில் வந்து ஏழுமலையானுக்குக் கும்பிடு தண்டம் போட்டார்.

மும்பை அணிதான் ஜெயிக்கவேண்டும் என்று முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 24 ஆம் தேதி இரவு _ கோயில் மூடியதற்குப் பிறகும்கூட, கதவைத் திறக்கச் சொல்லி காணிக்கைகளைக் கொட்டினார். இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பணமாம். ஒரு பெரிய பை நிறைய நகைகளாம். இவையெல்லாம் அம்பானி குடும்பத்தினர் தனி விமானத்தில் வந்து ஏழுமலையானுக்குக் கொட்டிய காணிக்கைகளாம்.

இந்த வகையில் அம்பானி குடும்பம் திருப்பதிக்கு வருவது மூன்றாவது முறையாம்!

ஏழுமலையான் கோயிலில் விமானத் தங்கத்தகடு திருப்பணிக்காக ரூபாய் 5 கோடி கொடுத்துள்ளாராம்.

பஞ்சாப் அணியை ஏலம் எடுத்த பிரபல நடிகை பிரித்தி ஜிந்தா என்ன செய்தார் தெரியுமா? இரண்டு ஹெலிகாப்டரில் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹரித்துவாரில் சின்மயானந்த் சாமியார் ஆசிரமம் சென்றார். கங்கையில் நீராடினார். தர்மங்கேஷ்வர் கோயிலுக்குச் சென்று சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. பஞ்சாப் அணி வெல்லவேண்டும் என்பதற்காகத்தான் இந்த யாகங்கள்.

இதில் உள்ள வேடிக்கை விநோதம் என்னவென்றால், அய்.பி.எல். போட்டியில் பங்குகொண்ட எட்டு அணிகளில் கடைசி இடம் இந்தப் பஞ்சாப் அணிக்குத்தான்.

சின்மயானந்தா சாமியாரின் ஆசிக்கு என்ன மரியாதை? யாகங்களால்தான் என்ன புண்ணியம்? கும்பிடு போட்ட கோயிலால் ஏற்பட்ட பலாபலன் என்ன?

சாயிபாபாவிடம் ஆசி பெற்று களம் இறங்கிய கவாஸ்கரும், டெண்டுல்கரும் பரிதாபமாகத் தோற்று வெளியேறிய கதைகளும் உண்டு.

இவ்வளவுக்கும் பிறகும், பெங்களூரு அணி மண்ணைக் கவ்வியது; மும்பை அணியும் மூக்கறுபட்டது.

சென்னை அணிதான் வெற்றி பெற்றது. ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லாத - காணிக்கைகளைக் கொட்டாத சென்னை அணிதான் கடைசியாக வெற்றிக் கோப்பையைக் கவ்வியது.

சென்னை அணியை ஏலம் எடுத்த இந்தியா சிமெண்ட் சீனிவாசனும், ஜோசியரிடம் சென்று இருக்கிறார். ஜோசியர் என்ன கூறினார் தெரியுமா? நான் சொல்லும் வரிசையில் வீரர்கள் களம் இறங்கவேண்டும் என்று கூறியுள்ளார். அணியின் தலைவர் தோனியோ அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, தன் போக்கில் நடந்துகொண்டார் வெற்றியும் கண்டார்.

விளையாட்டில் வெற்றி பெறுவதுகூட வீரர்களின் திறமை, உழைப்பின் அடிப்படையில் அல்ல அதுகூட திருப்பதி வெங்கடாஜலபதியின் கடாட்சம் வேண்டும் என்று நம்பியவர்களுக்குக் கடைசியாகக் கிடைத்தது ஏழுமலையான் மொழியில் சொல்லவேண்டுமானால், குழைத்துப் போடப்பட்ட பட்டை நாமம்தானே!

------------ கருஞ்சட்டை 27-4-2010 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

வருஷம், வருஷமாக அழகர் தாமதமாக வருவது ஏன்?


ஆற்றில் இறங்குவாரா அழகர்?

(புதனன்று (28.4.2010) மதுரையில் கள்ளழகர் திருவிழா நடைபெறுகிறதாம். இதன் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளவே இந்தக் கட்டுரை).

மதுரை மாநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது அழகர் கோயில். அது அழகர்மலை என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. அங்கு ஓர் ஆட்சி நடந்ததற்கான ஆதாரங்களாக கோட்டையும், பெரிய மதில் சுவர்களும் இன்றும் உள்ளன!

அழகர் என்பவர் கடவுளோ, கடவுளின் அவதாரமோ கிடையாது. அவன் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்பதே உண்மை. பண்டைய பாண்டிய அரசர்களால், தொடர்ந்து கள்ளர் சமூக மக்கள் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், நகர்ப்புறங்களில் வாழவும், மலைசார்ந்த விளை நிலங்களில் புகவும், அவர்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டும் வந்தே உள்ளார்கள். கள்ளர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக அன்றைய அரசு அதிகாரத்துடன் பல்வேறு போர்களை நடத்தி வந்தனர். இதனால், கள்ளர்கள் முதன்முதலாக கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி தங்கள் வாழ்வுக்காக கொள்ளையடித்தும்; தானியம், ஆடு, மாடுகளைக் கவர்ந்தும் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.

திப்பு சுல்தான் கூட திண்டுக்கல் கோட்டையிலிருந்து கள்ளர்களுக்கு ஆதரவாக படை அனுப்பியதாக செய்திகள் உள்ளன.

இசுலாமிய மக்களும், கள்ளர்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

கள்ளர்களின் திருமண முறை கூட இசுலாமிய முறைப்படிதான் நடந்து வந்தன. திருமணம் இரவு நேரங்களில், இந்து வைதீக முறைப்படியின்றி மணப் பெண்ணுக்கு மணமகனின் அக்கா கருகமணி சூட்டுவார்கள்.

திருமணத்தின் போது, கிடா அடித்து சாப்பாடு! தற்போதும் கூட, இப்பகுதியில் உள்ள கள்ளர் சமூகத் திருமணங்களில், 10, 20, 50 வரை என ஆடுகள் வெட்டப்பட்டு, அவரவர் செல்வாக்கிற்கேற்ப திருமணங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலூர் வட்டாரத்தில் சென்னகரம்பட்டி, கள்ளம்பட்டி ஆகிய கிராமங்களில் கள்ளர் பலர் இசுலாமியராக மதம் மாறியுள்ளார்கள். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இப்போதும் கூட இந்து எனக் கூறிக்கொள்கிற கள்ளர்கள் ரம்ஜான் நோன்பின்போது, முசுலிம்களுக்கு நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுகின்ற முறை, இங்கு நிகழ்ந்து வருகின்றது. இந்த நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதற்காக பரம்பரை, பரம்பரையாக நஞ்சை நிலம் ஒதுக்கப்பட்டு அந்தக் காரணத்திற்காக அதன் வருமானங்கள், பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிறமலைக் கள்ளர்கள் இசுலாமியார் போன்று சுன்னத் செய்வதும், முசுலிம்கள்போல சிய்யான் (தாத்தா) என்ற பொருள்பட அழைப்பதும் உதாரணங்-களாகும்.

ஜாதி, சமூக வேறுபாடுகளில்லாத இம் மக்களுக்கு, ஆட்சியாளர்களும், பாண்டிய நாட்டு உயர் குடி மக்களும் வைத்த பெயர்தான் கள்ளன் என்பது. இன்று தீவிரவாதிகள், போராளிகள் என்றழைக்கப்படுவது போன்ற ஒரு சொல்லே கள்ளர் ஆகும். அது ஜாதி ஆகாது.

சித்திரைத் திருவிழாவுக்கும், அழகர் ஆற்றில் இறங்குவதற்கும் இன்றுள்ள-படியான மத ரீதியான தொடர்பு ஏதுமில்லை. சொல்லப்போனால் இவ்விரண்டும், வெவ்வேறானவை. முரண்பட்டவை.

சித்திரைத் திருவிழா, மதுரை மீனாட்சி சொக்க நாதர் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. பண்டைய நாள்களில் இந்த விழாவிற்கு பக்கத்து நாட்டு மன்னர்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்கள், திவான்கள், சிற்றரசர்கள் என பெருந்தனக்காரர்கள் கூடுவார்கள். இன்று போல அன்று சாலைகள், அவற்றைக் கடக்கும் பாலங்கள், விரைவாகச் செல்ல வாகனங்கள் இல்லாத காலம். பெரும்பாலும் இவர்கள் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளிலும், மாடு பூட்டிய கூண்டு வண்டிகளிலும், ஆட்கள் தூக்கும் பல்லக்குகளிலும் பயணம் செய்வர்.

பழைய மதுரை; அதாவது அன்றைய பாண்டிய நாடு வைகை ஆற்றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின.

வடபகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகள் இன்றைய ஆழ்வார்புரத்திற்கு வந்து ஆற்றைக் கடந்துதான் மதுரைக்குச் செல்லவேண்டும். இதைப் பயன்படுத்தி கள்ளர் படை ஆற்றுக்குள் இறங்கி தக்க தருணம் பார்த்து பயணிகளின் வருகையை எதிர் நோக்கி இருப்பர்.

மீனாட்சிசொக்கன் திருக்கல்யாணத்திற்கு வருகின்ற சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது கள்ளர்களின் திட்டமும் வழக்கமும் ஆகும்.

கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் தம் கூட்டாளிகள் துணையுடன் வைகை ஆற்றில் இறங்கி அங்கிருந்த புதர்களில் மறைந்திருந்து இத் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளான்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவன் வழக்கமாயின!

அழகர் மலைக் கொள்ளையர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவன் அழகரின் பின் தோன்றல் ஆவான். இந்த கள்ளர் படையின் தொல்லைகள் மதுரைப் பாண்டிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டது. இன்றைக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிரச்சினைபோல அது மிகப்பெரிய அளவில் இருந்திருக்கலாம்.

பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை.

கள்ளர் வாழ்வில் நல்லதொரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர் திருமலை நாயக்கரே என்றால் அது மிகையாகாது! கள்ளழகர் சமூக மக்களும் மற்ற மக்களைப்போல தம் பகுதியில் வாழ வழிவகை செய்யப்பட்டது. அதன் விளைவாக அதன்பின் கள்ளர்கள் சித்திரைத் திருவிழா வின்போது கொள்ளையடிப்பது தடுக்கப்பட்டது. அரசருக்கும் ஆட்சிக்கும் விசுவாமாக இருப்பது; அதே நேரத்தில் மேலூர் வட்டாரப் பகுதியை 18 கிராமங்களுடன் கூடிய கள்ளர் சீமையை அமைத்து கள்ளர் தாமே சுயமாக ஆள்வது என அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் கள்ளர்களின் தலைவர் அடக்கமான அழகர் மலையில் கோயில் எழுப்பி மன்னர் அழகரைப் பெருமானாகக் கருதி வணங்கினர். பின் அழகர் கள்ளழகர் ஆனார்.

கள்ளர்கள் எக்காரணம் கொண்டும் மதுரைக்குள் நுழைவது இதன் மூலம் தடுக்கப்பட்டது. என்றாலும், வழக்கம்போல அழகர் நினைவாக ஆற்றில் இறங்கி வண்டியூர் சென்று திரும்ப அழகர் மலை வந்து சேரும் நிகழ்வுகள் அரசு துணையுடன் நடத்தப்பட்டன. அவ்விழாவில் கலந்துகொள்ளும் கள்ளர்களுக்குத் தேவையான தானியங்கள், ஆடு, மாடுகள் இவற்றைத் தானமாக வழங்க அரசரால் ஆங்காங்கே மண்டபப்படிகள் அமைக்கப்பட்டு அரசரால் அவற்றிற்கு மானியங்கள் வழங்கப்பட்டன.

கள்ளர்கள் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதால் தம்மோடு பெண்களை அதிகமாக வைத்திருக்கவில்லை.

நாயக்கர் காலத்தில் கள்ளர்கள் மீதிருந்த ஒடுக்கு முறை தளர்த்தப்-பட்டதால்மேலூர் வட்டாரப் பகுதியில் நல்ல கலாச்சாரத்துடன் பெரும்பான்-மையினராக இருந்த கோனார், வெள்ளாளர் சமூக மக்களை எதிர்த்து அவர்களிடமிருந்து ஆடு, மாடு இவற்றுடன் அவர்கள் வீட்டுப் பெண்களையும் சிறை பிடித்து, கள்ளர் சீமை அமைந்தது என்றே சொல்லலாம்.

அதைப் போல பிறமலைக் கள்ளர்கள் உசிலம் பட்டியை மய்யமாக வைத்து அங்கு வாழ்ந்த வடுகர்களை விரட்டிவிட்டு வடுகப் பெண்களுடன் கூடி வாழ்ந்தனர். வடுக மொழி என்பது கொச்சைத் தமிழாகும்! இன்றும் கூட பிறமலைக் கள்ளர்கள் பேசும் தமிழ் கொச்சையாக இருப்பதைக் காண்கிறோம்.

இந்த அடிப்படையில்தான் கள்ளழகர் கள்ளர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் ஆண்டு தோறும் இறங்கி விட்டு வண்டியூர் சென்று துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குவதும், தீட்டுப்படுவதும், அழகர் மலை சென்றதும், தீட்டு நீக்கப்பட்டபின் கோயிலுக்குள் அனுமதிப்பதுமான விழாக்கள் நடக்கின்றன.

திருக்கல்யாணத்தைக் காண, பார்ப்பனர்கள், உயர் ஜாதிக்காரர்கள் மற்றும் சற்சூத்திரர்களுடன் மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களோ, அழகருடன் வந்து, அழகருடன் திரும்ப அழகர் கோயில்வரை செல்வதும், வணங்குதுமான முறைகளை இப்போதும் கூட பார்க்க முடிகிறது.

இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து சைவ வைணவ ஒற்றுமையை உருவாக்க நினைத்த சிலர் சம்பந்தமில்லாத அழகரை, மீனாட்சி சகோதரர் எனவும், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டதால், அழகர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று விட்டதாகவும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். பொய்யான பிரச்சாரம் பக்தியின் பெயரால் உண்டாக்கப்பட்டதை அதிநவீன காலத்திலும் பகுத்தறியாது, பக்திப் பரவசம் காண்கிற முட்டாள்களை என்னவென்பது?

தந்தை பெரியார் சொன்னது போல் அவர்களைக் காட்டு மிராண்டிகள் என்பதில் என்ன சந்தேகம்? நியாயம்தானே!

அக்காலத்தில் வாகன வசதி இல்லை. நல்ல சாலை வசதிகள் இல்லை. ஒப்புக்காக ஏற்றாலும்கூட, அப்போது, அழகரால் தன் தமக்கையின் திருமணத்துக்கு வந்து சேருவதில் தாமதம் உண்டாகியிருக்கலாம். இன்று அவ்வாறில்லை. வாகன வசதிகள் உள்ளன. ஹெலிகாப்டரைக்கூட அவசரத்திற்குப் பயன்படுத்தலாம். சாலை வசதிகளுக்கும், மேம்பாலங்களுக்கும் குறைவு இல்லை. மதுரை நகருக்குள் நுழைய 7,8 பாலங்கள் வரை கட்டப்பட்டுள்ளன.

வருஷம், வருஷமாக இந்த அழகர் தாமதமாக வருவது ஏன்? ஒருத்தருக்கு ஒரு முறைதானே திருமணம். நம்ம மீனாட்சி சொக்கநாதருக்கு ஆண்டுதோறும் திரும்பத் திரும்பத் திருமணமா? நல்ல தமாஷாக உள்ளது. இந்தப் பொம்மைக் கல்யாணத்தை நம் பெரியவர்கள் எப்போது விடப் போகிறார்களோ?

நம்ம மந்திரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையாளர் சமூக முன்னேற்றத்தை அழகரிடம் எடுத்துச் சொல்லி, இந்த ஆண்டாவது முதல் நாளே புறப்பட்டு மதுரை வந்துவிடுங்கள். உங்கள் சகோதரியும் சந்தோஷமடைவாள். விரைவான சொகுசான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இனி மேலாவது தாமதிக்காமல் திருமணத்திற்கு வரவேண்டும் என ஏன் சொல்லவும், செய்யவும் மறுக்கிறார்கள்.

அழகர் ஆற்றில் இறங்க வேண்டியதில்லை. ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் வழியாக மதுரையம்பதி வரலாமே! செய்வார்களா நம் ஆட்சியாளர்கள்? பக்த கே()டிகள் இருக்கிறவரை, அழகர் ஆற்றைக் கடக்கமாட்டார்! அவர் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆள்வதாகவே நினைத்திருக்கலாம்! அழகரை வைத்து வைதீகக் கூட்டம் வயிறு நிறைப்பது... நிற்பது... எப்போது?

----------------------- “விடுதலை” 27-4-2010

26.4.10

திராவிடர் வரலாற்று மய்யம்


திராவிடர் வரலாற்று மய்யம்

சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமையிடத்தில் எத்தனை எத்தனையோ சிறப்புமிக்க கருத்துகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றபேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) ஒன்று உருவாக்கம் செய்யப்பட்டது.

இது உருவாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றில் மூத்த இனமான ஒரு காலத்தில் இந்தியா முழுமையும் பரவியிருந்த இனமான திராவிட இனம் பற்றி சரியான வரலாற்றுத் தகவல்களையும், ஆவணங்களையும் வெளிப்படுத்துவது என்பது அதன் முதன்மையான நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆரியராவது திராவிடராவது என்று பார்ப்பனீயத்தை முதுகெலும்பாகக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கும்பல் திட்டமிட்ட வகைகளில் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களில் இத்தகைய தவறான தகவல்கள் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் தங்களின் வசீகர கதாநாயகனாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிற விவேகானந்தரிலிருந்து, ஜவஹர்லால் நேரு, பி.டி.சீனிவாச அய்யங்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் உள்பட வரலாற்றில் ஆரியர் இனம் பற்றிப் பலபடப் பேசி இருக்கிறார்கள், எழுதிக் குவித்தும் இருக்கிறார்கள். இராமாயணம் என்பதே ஆரியர் திராவிடர் போராட்டத்தின் வெளிப்பாடே என்று எத்தனை எத்தனையோ பேராசிரியர்கள் ஆய்வுக் கண்ணோட்டத்தில் மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவியும் இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, ஒரு சுயநல நோக்கோடு பல திரிபுவாதங்கள் நாட்டிலே தலைதூக்கும் வண்ணம் திட்டமிட்ட வகையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட நலன்களையும், மாற்றங்களையும், உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே திராவிடர் என்பது. திராவிடர் இயக்கம் என்பது ஆகாத ஒன்று. கூடாத ஒன்று என்பது போல, ஆரியர்களின் கைப்பிள்ளைகளாக சிலர் மழலை மொழி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

திராவிடர்கள் பற்றிய முறையான வரலாறு இல்லாமையாலும், திராவிடர் இயக்கம்பற்றி போதுமான தகவல்கள் வெளிவராமையாலும், சிலர் குழப்ப முயற்சிக்கின்றனர். இந்தப் படுகுழியில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நம் இளைஞர்கள் வீழ்ந்து விடக்கூடாது என்ற பொறுப்பான கடமை உணர்ச்சியோடு, இந்த அமைப்பு நேற்று பெரியார் திடலில் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு வரலாற்றால் வாழ்த்தி வரவேற்கப்படும் என்பதில் அய்யமில்லை. மிக பொருத்தமானவர்கள், இந்தத் தத்துவத்தில் உயிர் மூச்சு வைத்திருப்பவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர் அல்லாத திராவிட இனத்தைச் சேர்ந்த அத்தனைப் பேரும் ஆதரவுக் கையை உயர்த்திக் காட்டுவார்கள் என்பதில் அய்யமில்லை. பல வகைகளிலும் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்பு கூடி விவாதிக்கும், கருத்தரங்குகளை நடத்தும், காலாண்டு இதழ் ஒன்றையும் இரு மொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடங்கவும் உள்ளது.

காலங்கருதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை உருவாக்கியவர்களுக்கு உள்ளங் கனிந்த பாராட்டுகளை, நன்றியினை உரித்தாக்கிக் கொள்வோம். இந்த அமைப்பு மேலும் மேலும் வலுப்பெற, ஒளிபெற கட்சிகளைக் கடந்த அனைத்துத் தரப்பு இன உணர்வாளர்களும் ஆதரவு அளிப்பார்களாக!

------------------ ”விடுதலை” தலையங்கம் 26-4-2010

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?

பார்வதி அம்மையாரை சிகிச்சை பெறாமல் தடுத்ததே ஜெயலலிதாதான்
வைகோ, நெடுமாறன் போயஸ் தோட்டத்திற்குமுன் உண்ணாவிரதம் இருந்திருக்கவேண்டும்
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்!
சென்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கமான உரை


பார்வதி அம்மையாரை சிகிச்சை பெறாமல் தடுத்ததே ஜெயலலிதாதான்.

உண்ணாவிரதம் இருந்த வைகோ, நெடுமாறன் ஆகியோர் ஜெயலலிதா வீட்டு முன் உண்ணாவிரதம் இருந்திருக்கவேண்டியதுதானே. பார்வதி அம்மையாரை தமிழக முதல்வர் கலைஞர்மூலம் காப்பாற்றுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

சென்னை பெரியார் திடலில் நேற்று (25.4.2010) மாலை நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:

மிகுந்த வேதனையான கூட்டம்

மிகுந்த வேதனையோடு நடைபெறக்கூடிய கூட்டம் இது. எனக்கு முன்னாலே பேசிய எழுச்சித் தமிழர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களும், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்களும் விளக்கமாகப் பல செய்திகளைச் சொன்னார்கள்.

நான் நீண்ட நேரம் பேசப் போவதில்லை. என்னுடைய உரை ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் இருக்கலாம், அவ்வளவுதான்.

பிரபாகரனின் தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்

பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்று சொல்லுவார்கள். பாவத்தில், புண்ணியத்தில் நாங்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்.

பிரபாகரனின் தாயார் செய்த குற்றமென்ன? ஒரு தமிழச்சியாகப் பிறந்ததுதான் குற்றமா? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறவர். பாதி நினைவோடு இருப்பார்கள்; மீதி பாதி நினைவில்லாமல் இருப்பார்கள். அத்தகைய சங்கடமான சூழ்நிலையிலே அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசுகூட...

இலங்கை அரசுகூட அவருக்குக் கருணை காட்டி மலேசியாவிற்கு அனுப்பியிருக்கிறது. மலேசிய அரசும் உதவியிருக்கிறது. இந்திய அரசு தூதரகத்தில் விசா பெற்று சிகிச்சைக்காக பார்வதி அம்மையார் சென்னை வந்திருக்கிறார்.

நான் செய்தித்தாளைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்

அவர்கள் வருகின்ற செய்தி மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எங்களுக்கு அவர்கள் யாரும் சொல்லவில்லை. பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டார் என்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் நான் செய்தித்தாள்களைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.

நம்முடைய கோபதாபங்களை வெளிப்படுத்திட ஒரு நீண்ட கண்டன அறிக்கையை மனிதநேயத்துடன் எழுதினேன். மற்ற ஏடுகளுக்கும் உடனடியாக அனுப்பி வைத்தோம்.

கலைஞர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திட

இது முழுக்க முழுக்க ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகும். மனிதாபிமானமற்ற முறையில் சென்னை விமான நிலையத்திலிருந்து மீண்டும் அவர்களை மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பி விட்டார்கள். அவர்களை திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?

கலைஞர் அரசுக்கு எப்படியாவது கெட்ட பெயர் ஏற்படுத்தவேண்டும் என்கிற பின்னணி இருந்திருக்கலாம்.

பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி இவர்கள் திருச்சியிலிருந்தார்கள். பிறகு, யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள்.

இங்கே இருந்த ஜெயலலிதா அன்றைக்கு வாஜ்பேயி அரசுக்கு ஒரு கடிதமே எழுதினார் தமிழக அரசின் சார்பில்!

பூனைக்குட்டி வெளியே வந்தது!

இந்த செய்திதான் பூனைக்குட்டி வெளியே வந்தது என்பதைக் காட்டியது. இந்தச் செய்தி இந்து ஏட்டில் வெளிவந்தது.

ஜெயலலிதா வாஜ்பேயிக்கு எழுதிய கடிதம்

2003 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களையும், அவருடைய தாயார் பார்வதி அம்மையாரையும் இந்தியா வர தமிழகத்திற்கு வர அனுமதிக்கப்படக் கூடாதவர்கள் என்று அன்றைய வாஜ்பேயி அரசுக்குக் கடிதம் எழுதினார்.

பாலசிங்கத்தையும் தடுத்தார்

இதே அம்மையார் ஆண்டன் பாலசிங்கம் நீரிழிவு நோயினால் வெளிநாட்டில் லண்டனில் அவதிப்பட்டு சென்னைக்கு வந்து சிகிச்சை பெற முயன்றபோது பாலசிங்கம் இங்கு வரவே கூடாது என்று தடுத்தவர் இதே ஜெயலலிதா அம்மையார்தான்.

ஒருவர் விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் அவர்களுடைய பாஸ்போர்ட்டை வைத்து விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் கணினிமூலம் பார்ப்பார்கள். இவர்கள் வரக்கூடாதவர்கள் பட்டியலில் இருக்கிறார்களா? என்பதை சரி பார்ப்பார்கள். அது அவர்களுடைய கடமை. அப்படி இருந்தால் திருப்பி அனுப்புவார்கள். அது மத்திய அரசு அதிகாரிகளுடைய கடமை. இது ஒரு நடைமுறை.

பார்வதி அம்மையார் வருவது முதல்வர் கலைஞர் அவர்களுக்குத் தெரியாது. சொல்லப்படவில்லை.

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?

அருமைச் சகோதரர் வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்களே.

2003 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, வேலுப்பிள்ளை அவர்களையும், பார்வதி அம்மையார் அவர்களையும் தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியவராயிற்றே.

சட்ட ரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ...

அதுமட்டுமல்ல, இந்து பத்திரிகையில் இவர் எழுதிய செய்தி அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது.

Legally or illegally சட்ட ரீதியாகவோ அல்லது சட்டத்திற்கு விரோதமாகவோ எப்படியோ இவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் எழுதியவர் ஜெயலலிதா அவர்கள்தானே.

ஜெயலலிதா வீட்டுமுன் உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே!

சகோதரர் வைகோ அவர்களுக்கும், நெடுமாறன் அவர்களுக்கும் உண்மையிலேயே அந்த உணர்வு இருந்திருந்தால், ஜெயலலிதா வீட்டு போயஸ் தோட்டத்திற்கு முன் அல்லவா உண்ணாவிரதம் இருந்திருக்கவேண்டும்?

இதில் கலைஞரை சாடுவதற்கு என்ன இருக்கிறது?

இவ்வளவு மோசமான பின்னணி இருக்கிறது. இதை அவர்கள் மறைக்கலாமா? இந்த லட்சணத்தில் தமிழக முதல்வர் கலைஞரை சாடுவதற்கு இதில் என்ன இருக்கிறது?

இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்லவா? இதில் போய் அரசியல் நடத்தலாமா?

நம்முடைய நோக்கம் எப்படியும் பார்வதி அம்மையாரை சிகிச்சைக்காக மீண்டும் அவர்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதில் போய் மலிவான அரசியலை புகுத்தக்கூடாது.

பிரச்சினையே இவர்களால்தான்!

வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் விமான நிலையத்திற்குச் சென்ற பிறகுதான் பிரச்சினையே உருவாகியிருக்கிறது.

உடனடியாக முதலமைச்சரைத் தொடர்பு-கொண்டு இதுபற்றித் தெரிவித்தார்களா?

யாரும் எளிதில் அணுகக்கூடிய முதல்வர் ஆயிற்றே!

பார்வதி அம்மையார் வருகை தடுக்கப்பட்டால், இதன்மூலம் உலகத் தமிழர்கள் மீது கலைஞர் அரசுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த பழி சுமத்தக்கூடிய ஒரு தவறான எண்ணத்தை அல்லவா இவர்கள் உருவாக்கிவிட்டார்கள்?

அதற்கு இதை ஒரு வாய்ப்பாக அல்லவா வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்?

சட்டமன்றத்தில்
முதல்வர் பேச்சைக் கேட்காத அ.தி.மு.க.

சட்டமன்றத்திலே இந்த சம்பவம்பற்றி பேசியிருக்கிறார்கள். இடதுசாரிகள், பா.ம.க.வினர், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரவிக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எல்லாம் பேசினார்கள். அதற்குப் பதில் சொல்ல முதல்வர் கலைஞர் எழுந்தவுடன் ஒவ்வொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வாக வெளியேறுவதா? இந்து பத்திரிகையில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி கலைஞர் அவர்கள் பேச முற்பட்டார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களையும் அவையில் அமர்ந்து அவர் சொல்லப் போகின்ற கருத்துகளைக் கேட்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக நழுவி வெளியேறிவிட்டார்களே. கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கிறார். இதில் நாம் அனைவரும் ஒரே குரல் எழுப்பி செயல்படவேண்டிய செயலாயிற்றே.

இவர்கள் எல்லாம் வெட்கப்படவேண்டாமா? போர்க் களத்தில் முதலில் கள பலியாவது வீரர்கள் அல்ல. உண்மைதான். அதைத்தான் நாங்கள் இங்கே எடுத்துச் சொல்கின்றோம்.

பார்வதி அம்மையார் சிகிச்சை பெறவேண்டிய மனிதாபிமான செயலில் இருந்து நழுவிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

ஜெயலலிதாவிடம் வைகோ பேசினாரா?

சகோதரர் வைகோ போன்றவர்கள் ஏப். 27 ஆம்தேதி கடை அடைப்புக்காக ஜெயலலிதா அம்மையாரை சந்தித்திருக்கின்றன. படமெல்லாம் பத்திரிகையில் வந்திருக்கிறது.

பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகுதான் அந்த அம்மையார் மற்றவர்களை உட்கார வைத்தே பேசுகிறார் (சிரிப்பு, கைதட்டல்).

பார்வதி அம்மையார் பிரச்சினைபற்றி உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால், இதைப்பற்றி அந்த அம்மையாரிடம் பேசினீர்களா?

நெடுமாறன்- சுப.வீக்கு வாய்ப்பூட்டு

சகோதரர் நெடுமாறன் அவர்களுக்கும், சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும் எங்கும் பேசக்கூடாது என்று நீதிமன்றத்தின்மூலம் உத்தரவு பெற்று பழிவாங்கியவர்தானே இந்த அம்மையார்.

நாங்கள்தான் பேசினோம்; கோயில் பூட்டையே அகற்றியவர் நமது முதல்வர் கலைஞர். எனவே, இவர்களுடைய வாய்ப்பூட்டையும் அகற்ற வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களுக்கு பொதுக்கூட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தோம்.

விடுதலையைப் படித்தார் கலைஞர். மறுநாள் அவரை நான் சந்தித்தேன். இப்படி நீங்கள் பேசியிருப்பது விடுதலையில் வந்திருக்கிறது. இதில்நாம் என்ன செய்ய முடியும் என்று கலைஞர் கேட்டார். ஒன்றுமில்லிங்க, நாம் அரசு வழக்கறிஞர் மூலமாக அந்த வாய்ப்பூட்டுத் தடையை நீக்கலாம் என்று சொன்னேன்.

முதலமைச்சர் உடனே பேசினார்

உடனே அவரே தொலைபேசியை எடுத்துச் சுழற்றி அரசு வழக்கறிஞரிடம் பேசினார்.

என்ன இப்படிச் சொல்லுகிறார்களே! அதற்கு உடனே ஏற்பாடு செய்து அந்தத் தடையை நீதிமன்றத்தின் மூலம் நீக்கிவிட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று சொன்னார்.

அப்பொழுது சகோதரர் நெடுமாறன் அவர்களுடைய நிலையும், சுப. வீரபாண்டியன் அவர்களுடைய நிலையும் என்ன?

பொம்மலாட்ட சைகைதான்!

எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேச மாட்டார்கள். பொம்மலாட்ட சைகைமூலம் காட்டிவிட்டு, நீதிமன்றத் தடை இருக்கிறது. எங்களால் பேச முடியாது என்று உட்கார்ந்து விடுவார்கள். இதுதானே ஜெயலலிதா செய்தது. அந்த வாய்ப்பூட்டை அகற்றியதற்காகத்தான் சுப.வீ. அவர்கள் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வைகோவுக்கு ஜெ. கொடுத்த 13 மாத சிறை

வைகோ அவர்கள் 13 மாதம் இந்த அம்மையாரால் சிறையில் இருந்ததை மறந்துவிட்டாரா? நாடாளுமன்றத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீதிபதியிடம் வைகோ அவர்கள் அனுமதி பெற்றது தெரிந்தவுடன் இரவில் தலைமை நீதிபதியிடம் இந்த அம்மையார் ஆட்சியில் உத்தரவு பெற்று இவரை ஒரு நாள் டில்லி செல்ல அனுமதிக்காதவர்தானே இந்த அம்மையார்.

பார்வதி அம்மையாருக்கு வேண்டுகோள்

பார்வதி அம்மையாருக்கு தமிழர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். தமிழகத்தில் சிகிச்சை பெற தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதுங்கள். இதுதான் அரசியல் ரீதியான அலுவலக முறை.

ஏற்கெனவே கலைஞர் அவர்களும், சட்டமன்றத்தில் சிகிச்சை பெற மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

டி.ஆர். பாலு கேட்டாரே!

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலே டி.ஆர். பாலு அவர்களை கேள்வி கேட்க வைத்தார் கலைஞர். தமிழக அரசுக்குத் தெரியாமல் எப்படி மத்திய அரசு பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது என்று கேள்வி கேட்க வைத்திருக்கின்றார்.

எனவே, பார்வதி அம்மையாரை தமிழகத்தில் சிகிச்சை பெற வைத்து, அவரைக் காப்பாற்றவேண்டியது நம்முடைய கடமையாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் இதற்குத் தேவையான உதவிகளை எல்லாம் செய்வார்.

சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருக்கின்றார். முதல் கட்டமாக இதை சட்டப்படி நாம் செய்தாகவேண்டும்.

பலத்த கரவொலி எழுப்பி ஆதரியுங்கள்!

எனவே, இங்குக் கூடியிருக்கின்ற அனைத்துக் கட்சித் தோழர்களும் பலத்த கரவொலி எழுப்பி இதை ஆதரிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

----------------------------- "விடுதலை” 26-4-2010

25.4.10

திருவள்ளுவர் உருவமா?கோயில் கோபுரமா?


மறுமலர்ச்சியோ!

கேள்வி: தமிழக அரசின் கோபுரச் சின்னம் மாற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்க ஆரம்பித்-துள்ளனரே?

பதில்: அரசுச் சின்னம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று காரணம் கூறுகிறார்கள். சின்னத்தை உருவாக்கிய அறிஞர்களுக்கு நமது மதச் சார்பின்மை தெரியாததல்ல. கட்டடக் கலை ரீதியில் தமிழகக் கோயில் கோபுரங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. கோபுரம் உடனடியாகத் தமிழகத்தை உணர்த்தும். அதற்காகத்தான் கோபுரச் சின்னமே தவிர மதத்துக்காக அல்ல. மேலும், அசோகரின் சிங்கச் சின்னமும், தேசியக் கொடியும் அதில் உண்டு.

இவ்வாறு பதில் சொல்லியிருப்பது ஒரு அக்கிர-கார இதழைத் தவிர வேறு யார்தான் சொல்லியிருக்க முடியும்? கல்கி (25.4.2010) இதழ்தான் இவ்வாறு பதில் சொல்லுகிறது.

கல்கி கூறுவதை விவாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும், ஓர் அரசின் சின்னம் கட்டடக் கலையைத் தான் சார்ந்ததாக இருக்க வேண்டுமா?

திருவல்லிப்புத்தூர் கோயில் கோபுரச் சின்னம் தான் அது என்பதை மறுக்க முடியுமா? அது இந்து மதக் கோயில் என்பதைத் தான் புறந்தள்ள முடியுமா?

மதச் சார்பற்ற ஓர் அரசுக்கு மதம் சார்ந்த ஒன்று அரசு முத்திரையாக இருக்கலாமா என்ற வினாவுக்குப் பதில் சொல்ல வக்கற்ற நிலையில் கட்டடக் கலை என்ற முகமூடிப் போடுவதன் சூட்சமம் தமிழர்களுக்குத் தெரியாதா?

திருவள்ளுவர் உலக மக்களுக்கே தேவையான உயர் கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளவர். காலங் கடந்து நிற்கும் கருத்துகளை ஒண்ணே முக்கால் அடியில் உணர்த்துகிறார்.

மதம் சாராத அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் உள்ளபடி தமிழராக இருப்பவர்கள் எவரும் ஆயிரம் கைகளைக் கடன் வாங்கியல்லவா வரவேற்று வாழ்த்துப் பா படிப்பார்கள்.

குறளா? கோயில் கோபுரமா? என்று கணக்கெடுப்பு வைத்துக் கொள்ளத் தயார்தானா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த பிள்ளைதான் 60 தமிழ் வருஷங்கள் என்று ஆபாசமாக எழுதி வைத்திருந்ததை மாற்றி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணை பிறப்பித்ததையே வரவேற்க மனம் இல்லாத வஞ்சகப் பார்ப்பனர்கள், கோபுரத்துக்குப் பதில் திருவள்ளுவர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

கோயில் ஒழிந்த இடம் பார்ப்பான் செத்த இடமாயிற்றே! அது சரி, கல்கி எழுதியதை ஆதாரமாகக் காட்டி மதிமுகவின் அதிகாரப் பூர்வ சங்கொலி ஏடு (30.4.2010) திருவள்ளுவர் உருவம் கூடாது, கோபுரம் தான் இருக்க வேண்டும் என்று எழுதுகிறதே, என்ன சொல்ல! ஓ, அது தெரியாதா? இதற்குப் பெயர்தான் மறுமலர்ச்சி என்பதோ!

------------ மயிலாடன் அவர்கள் 25-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

அருந்தொண்டாற்றிய அந்தணர்களை அடையாளம் காணுவீர்!

அண்மையில்
அருந்தொண்டாற்றிய அந்தணர்களை அடையாளம் காணுவீர்!

1. சசிதரூர்: அண்மையில் ரூ.70 கோடி தன் காதலிக்குத் தந்ததாகக் கூறப்பட்டு, குற்றஞ் சாற்றப்பட்ட கேரளப் பார்ப்பனர்.

2. கேத்தன் தேசாய்: மண்டலை எதிர்த்து எழுந்த மனிதர்; மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க லஞ்சம் வாங்கி பிடிபட்ட பார்ப்பனர்.

3. வரதராஜ அய்யங்கார்: குமுதம் வார ஏட்டின் ஆசிரியர் கொடுத்த புகார்படி ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இப்பார்ப்பனர்மீது குற்றச்சாற்று!


----------------நன்றி:- “விடுதலை” 24-4-2010

24.4.10

பராசக்தி திரைப்படமும் புரட்சிக் கவிஞர் பாடலும்


ஒரு முறை புரட்சிக் கவிஞர் சென்னையிலே உள்ள ஏ.வி.எம்.. திரைப்பட நிறுவனத்திற்கு வருகை தந்தார்.

எதற்காக வந்தார் என்றால் பராசக்தி படம் அப்பொழுது தயாராகிக் கொண்டிருந்தது. பராசக்தி படத்தில் வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடலை முதல் பாடலாக ஒரு நடனத்திற்கு அமைக்கலாம் என்று ஒரு கருத்து எடுத்துச் சொல்லப்பட்டபோது அந்தப் பாடலை இந்தப் படத்திற்கு உரிமையாக எழுதித் தருவாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு புரட்சிக் கவிஞரைச் சந்திக்கப் புதுவைக்குச் சென்றேன்.

எங்கே வந்தாய்? என்று கேட்டார்.

பராசக்தி என்ற ஒரு படம் எடுக்கப்படுகின்றது. அந்தப் படத்திலே தாங்கள் எழுதிய வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு என்ற பாடலை எப்படியாவது புகுத்த வேண்டும் என்று எண்ணுகிறோம்; அதற்கு நீங்கள் உரிமை வழங்க வேண்டும். அதனுடைய உரிமையாளர்கள் என்னை நம்பி உங்களிடத்திலே அனுப்பியிருக்கிறார்கள்; அந்த உரிமையைப் பெற்று வர முடியுமென்று என்று கூறினேன்.

புரட்சிக் கவிஞர் தன்னுடைய விழிகளை அகல விரித்து என்னைப் பார்த்தார். நான், அந்தப் பாட லுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் நான் வாங்கித் தருகிறேன் பட உரிமையாளர்களிடத்தில் என்று சொன்னேன்.

உண்மையிலேயே அந்தப் பாட்டை அந்தப் படத்தில் வைக்கப் போகிறார்களா? என்று கேட்டார்.

நான்தான் உரையாடலை எழுதுகிறேன், வைக்கத்தான் கேட்கிறேன் என்று சொன்னேன்.

அப்படி வைப்பதாக இருந்தால் அவர்கள் ஒன்றும் எனக்குப் பணம் தர வேண்டாம். நான் தருகிறேனப்பா பணம்! என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அன்றைக்குச் சொன்னார்.

காரணம் திராவிடநாடு, அல்லது திராவிடர் இயக்கக் கொள்கை என்ற ஒரு சொல் நம்முடைய படங்களிலே அன்றைக்கு வருவதற்கு அவ்வளவு சிரமம் இருந்தது.

எனவேதான் புரட்சிக் கவிஞர் அவர்கள் அந்தப் பாடலை வைப்பதாக இருந்தால் நான் பணம் தரு கிறேன் என்று குறிப்பிட்டார்.

ஏ.வி.எம். கலைக் கூடத்தில் ஒரு நாள்!

பிறகு அந்தப் பாடலுக்கான உரிமையை நான் பெற்றேன். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப் படுகிற நேரத்தில் அவர் சென்னைக்கு ஏ.வி.எம். நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டு வந்தார்.

அவரும் நானும் காரில் ஏ.வி.எம். நிறுவனத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம்.

அதற்கு முன்பு சேலம் மாடர்ன் தியேட்டருக்கு ஒரு படத்திற்கான பாடலை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதிவிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார். இங்கே ஏ.வி.எம். நிறுவனத்திற்குள் நுழைகிற நேரத்தில் சிவப்பு விளக்குப் போடப்பட்டு எங்களுடைய கார் நிறுத்தப்பட்டது.

ஏன்? என்று கேட்டோம்.

இங்கே பாடல் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. கார் ஒலி கேட்டால் அந்த ஒலி உள்ளே ஒலிப்பதிவைப் பாதித்து இந்த ஒலியை அந்த ஒலிப்பதிவுக் கருவி ஈர்த்து விடும். ஆகவே காரை நிறுத்துங்கள் என்று சொன்னார்கள்.

பாரதிதாசன் அவர்களுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. அப்படி என்ன பெரிய ஒலிப்பதிவு கருவி இது? என்று கோபித்தார்.

ஏன் இப்படிக் கோபிக்கிறீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, சேலத்திலே நான் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேனப்பா, கமழ்ந்திடும் பூவிலெல்லாம் என்று அந்தப் பாட்டிலே எழுதினேன்.அந்த ஒலிப்பதிவாளர் சொல்லிவிட்டார், கமழ்ந்திடும் பூவிலெல்லாம் என்ற அந்த வரியை மாற்றுங்கள் என்றார். ஏன் என்று கேட்டேன். கமழ்ந்திடும் என்பதை எங்களுடைய ஒலிப்பதிவு இயந்திரம் பதிவு செய்யாது என்றார். பிறகு நான் யோசித்து அதை மாற்றி குலுங்கிடும் பூவிலெல்லாம் என்று எழுதிக் கொடுத்தேன். கமழ்ந்திடும் என்பதிலே வருகிற அந்த ழகரம் இருக்கிறதே அது அந்த ஒலிப்பதிவிலே சரியாகப் பதியாது என்று சொன்னார்கள். அதனால்தான் எனக்குக் கோபம். என்னுடைய கமழ்ந்திடும் என்ற வார்த்தையையே சரியாகப் பதிவு செய்ய முடியாத இந்தக் கருவி, கார் ஒலியையா பதிவு செய்து விடும்? என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றைக்குச் சொன்னார்கள்.

ஏன் இவைகளைச் சொல்லுகிறேன் என்றால், தாம் சொல்லுகின்ற சொல் தாம் எழுதுகின்ற எழுத்து அதில் ஒரு திருத்தமோ அல்லது அது சரியில்லை; அதைப் பதிவு செய்ய இயலாது என்று கூறவோ உரிமை படைத்தவர்கள் அல்லர் அவர்கள் என்ற அளவுக்கு அத்தகைய துணிச்சலும், அதை எடுத்துச் சொல்லுகின்ற ஆற்றலும், அத்தகைய வீரமும் பொருந்தியவராகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் திகழ்ந்தார்கள்.

கவிஞர்களிடத்திலே தனிப்பட்ட முறையிலே சில குறைபாடுகள் இருக்கலாம். நாம் பாரதிதாசன் என்றது, அவருடைய உயர்ந்த தோற்றம் நான் ஒரு கவிதையிலே அவரைப்பற்றி எழுதியிருப்பதைப்போல நெற்கதிர்க்கட்டு மீசை நெடிய உருவம் வேங்கை போல் நிமிர்ந்திருக்கின்ற அந்தச் சாயல் அந்தக் கம்பீரம் இவைகளை எல்லாம் மறந்துவிட்டு, பாரதிதாசன் என்றதும் அவருடைய இயல்புகள், அவருடைய குணாதிசயங்கள், அவருடைய செயல்கள் இவைகளை எல்லாம் மறந்துவிட்டு நம் முன்னால் நிற்க வேண்டியது.

சிற்றூரும் வரப்பெடுத்த வயலும்

ஆறுதேக்கிய நல்வாய்க்காலும் வகைப்படுத்தி

நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்

நிறை உழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?

என்று கேட்டாரே அந்தக் கேள்விதான் நம் முன்னால் நிற்க வேண்டுமே அல்லாமல், அன்பில் குறிப்பிட்டதைப்போல பாரதிதாசன் என்கின்ற ஒரு தனி மனிதர் அல்லர்.

பாரதிதாசன் என்பவர் கவிதையின் வடிவம்!

பாரதிதாசன் என்பவர் தமிழன் உருவம்!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்

தோள் எங்கள் வெற்றித் தோள்கள்..

வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ்

எங்கள் மூச்சாம்.

என்றாரே அந்தக் கவிதை வடிவம்தான் நம் முன்னால் நிற்க வேண்டுமே அல்லாமல் வேறு அல்ல.

--------------பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடத்திய புரட்சிக் கவிஞர் விழாவில் மானமிகு கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து 1984

பார்ப்பனர்களுக்கு முன்புத்தியே கிடையாது


மனுவாதிகள் புதைந்து போய்விடவில்லை!


‘‘Tale of Two Chief Justices’’ என்ற தலைப்பில் கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான திருவாளர் எஸ். குருமூர்த்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (14.4.2010) கட்டுரை ஒன்றினைத் தீட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வயது மோசடி செய்ததன் காரணமாக, பதவி விலகி ஓடிய திருவாளர் எஸ். இராமச்சந்திர அய்யரையும், கருநாடக மாநில தலைமை நீதிபதி பி.டி. தினகரன் அவர்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

பார்ப்பனர்களுக்கு முன்புத்தியே கிடையாது; ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிச் சுமக்கும் தன்மையர்கள் என்பதற்கு இது ஒன்று போதும்.

அவர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்லர் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதையும் இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளலாம். ஜஸ்டிஸ் எஸ். இராமச்சந்திர அய்யர்வாளின் பிரச்சினைதான் என்ன? இவருக்கு ஒரு தம்பியும் இருக்கிறார். தம்பிக்கு சஷ்டியப்தபூர்த்தி நடந்தது. ஆனால் அவரின் அண்ணனான ஜஸ்டிஸ் ராமச்சந்திர அய்யர் பதவி ஓய்வு பெறாமல் பதவியில் நீடிப்பது எப்படி என்பதுதான் பிரச்சினைக்குக் காரணம்.

இதுகுறித்து அப்பொழுதே விடுதலையில் (20.6.1964) பிரதம நீதிபதியின் வயது மர்மம் எனும் தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கித் தலையங்கமாகவே வெளிவந்திருக்கிறது.

தம்பியின் கல்வி சம்பந்தப்பட்ட பதிவேட்டில் பிறந்த நாள் 21.1.1904 என்று இருக்கிறது. ஆனால் அண்ணனாகிய நீதிபதி இராமச்சந்திர அய்யரின் பிறந்த நாளோ 1.10.1904.

தம்பி முதல் மாதத்தில் பிறந்திருக்கிறார் அண்ணனோ ஒன்பது மாதம் கழித்து அக்டோபர் மாதத்தில் பிறந்திருக்கிறார். (பார்ப்பனர்களின் இந்தப் பித்தலாட்டத்தைக் கண்டு வாயால் சிரிக்க முடியுமா?)

இந்திய அரசின் டில்லி தலைமைச் செயலகத்தில் நீதிபதியின் அண்ணன் பெரும் பொறுப்பில் இருக்கிறாராம். அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தித்-தான் இந்தப் பித்தலாட்டம்.

நீதிபதி இராமச்சந்திர அய்யரின் வயது மோசடி விவகாரத்தை சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (19.4.1964) தந்தை பெரியார் விலா வாரியாக எடுத்துக்காட்டி பார்ப்பனீயப் பித்தலாட்டத்தில் விலா எலும்பை முறித்துக் காட்டினார்.

நியாயமாக தலைமை நீதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர் செய்த இந்த மோசடிமீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் தள்ளியிருக்க வேண்டும். ஓய்வு வயதைத் தாண்டி பணியாற்றிய கால கட்டத்தில் பெறப்பட்ட சம்பளத்தையும் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? சத்தம் போடாமல் அந்தப் பார்ப்பன நீதிபதி விடுப்பில் சென்று விட்டார். அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணனும் பார்ப்பனர்; காதும் காதும் வைத்தாற்போல கதையை முடித்துக் கொண்டனர். ஒன்றுமே நடக்காதது போல பார்ப்பன ஊடகங்கள் பார்த்துக் கொண்டன. இதுபோன்ற குற்றத்தினை பார்ப்பனர் அல்லாத பிரதம நீதிபதியான திரு. ராஜமன்னார் அவர்கள் மீதோ, அல்லது ஓய்வு பெற்றுள்ள மற்ற தமிழர் நீதிபதிகளான சோமசுந்தரம், கணபதியா பிள்ளை போன்றவர்கள் மீதோ அவர்களது பதவிக் காலத்தில் வந்திருக்குமாயின் இந்நேரம் அக்கிரகார ஏட்டினர் இதை அகில உலகத்திற்கும் தெரியும் வண்ணம் தம்பட்டம் அடித்திருக்க மாட்டார்களா? கூப்பாடு போட்டிருக்க மாட்டார்களா? என்று அன்று விடுதலை (20.4.1964) விவேக மிக்க வினாவை எழுப்பியதுண்டு.

உண்மைகள் இவ்வாறு இருக்க திருவாளர் குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிலே கொஞ்சம்கூட வெட்கமின்றி அறிவு நாணயமின்றி பூணூல் பாசத்துடிப்புடன் என்ன எழுதுகிறார்?

20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டத்தில் பிறப்புச் சான்றுகள் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லையாம் அதனால்தான் இந்தத் தவறு நேர்ந்து விட்டதாகப் பசப்புகிறார். உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்ட நிலையில், பதிவாளர் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி இராச்சந்திர அய்யருக்கு முறைப்படி தெரிவித்த அடுத்த சில விநாடியே பதவி விலகி விட்டாராம். ஆகா, இவரைப் போன்ற உத்தமர் யார் இருக்க முடியும் என்று சீராட்டுகிறார்.

காலந் தாழ்ந்தால் அய்யர் வாளின் கந்தாயம் மூக்கைத் துளைக்க நாற்றம் எடுத்து விடுமே பிரச்சினை பெரிதாக வெடித்து விடுமே என்பதால்தான் உடனடியாக ஓடினாரே தவிர வேறு அறிவு நாணயத்தால் அல்ல.

பார்ப்பனர்கள் செய்யும் மோசடியைக்கூட திசை திருப்பி பெருமைக்குரியதாக உருமாற்றிக் காட்ட முடியும் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒன்று போதாதா!

ஆகா! எவ்வளவு அருமையாகக் கொலை செய்திருக்கிறான் பார்த்தீர்களா? அடடே, எவ்வளவு கில்லாடித்தனமாக ஜேப்படி செய்திருக்கிறான் என்பதைக் கவனித்தீர்களா? எத்தனை உளவுத்துறை, காவல்துறைக் கண்களில் எல்லாம் மண் தூவிவிட்டு எத்தனைக் கோடிரூபாய் கள்ள நோட்டை விநியோகித்திருக்கிறார்கள் இது இவர்களைத் தவிர வேறு யாரால் சாதிக்க முடியும் என்று சம்பந்தப்பட்டவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால் இவர்கள் எழுத மாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா?

வேலியே பயிரை மேயும் கதையாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய ஒருவரே ஆவணங்களில் வயது மாற்றி அரசுப் பணத்தையும் சம்பளமாகப் பெற்று, அதிகாரத்தைத் துய்த்து இருக்கிறார் என்ற போது எவ்வளவு ஆவேசமாக பேனாவைத் தூக்கிச் சுழற்றியிருக்க வேண்டும்?

கருநாடக மாநில தலைமை நீதிபதி பாவம் பஞ்சமர் தானே அவரை எப்படி வேண்டுமானாலும் கொச்சைப்படுத்தலாம்!

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒருவர் பார்ப்பனராகவும், இன்னொருவர் பஞ்சமராகவும் இருந்தால், அந்தக் குற்றத்திற்குக்கூட வருணாசிரம வர்ணம் தீட்டும் மனுவாதிகள் மண்ணுக்குள் புதைந்துபோய் விடவில்லை; இதோ குருமூர்த்திகள் சோ ராமசாமிகள் வடிவத்தில் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள் பாழாய்ப் போன இந்தத் தமிழர்கள் என்றுதான் இதை உணர்ந்து தொலைப்பார்களோ!

-----------------------மின்சாரம் அவர்கள் "விடுதலை” 24-4-2010 இல் எழுதிய கட்டுரை

23.4.10

பெரியாரின் புத்தகக் காதல்! உலகப் புத்தக நாள்! சிந்தனை


பெரியாரின் புத்தகக் காதல்!


இன்று (23.4.2010) உலகப் புத்தக நாள்!

புத்தகங்களைப் போன்ற அரிய நண்பர்கள் எவரும் கிடைக்கமாட்டார்கள்!

புத்தகங்களைவிட அறிவுச் செல்வ வங்கி எதுவும் இல்லை!

கற்றனைத்தூறும் அறிவுக்கு ஆக்க ஊற்று புத்தகங்களே!

உழைப்பாலும், அயர்ச்சியினாலும் களைத்துப்போய் இருக்கும் நம் உள்ளங்கள் புத்தாக்கம் பெறவே புத்தகம்! புதுமையானதாக நம் அகத்தை ஆக்குவதினால்தான் அது புத்தகம் என்றே அழைக்கப்படுகிறதோ!

நேற்று (22.4.2010) பெரியார் சாக்ரட்டீஸ், பிரின்ஸ், பிராட்லா ஆகிய கழக இளைஞர்களான நம் தோழர்களோடு உரையாடும்போது, புத்தகங்கள் பற்றியும், அவற்றை எப்படி படிக்காதவர் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் மாய்ந்து, மாய்ந்து படித்தார் என்பதுபற்றியும் பலரும் அறியாத அரிய தகவல்களைக் கூறினேன்.

இதுபற்றியே நாளை உலகப் புத்தக நாளானபடியால் எழுதுங்களேன் என்றனர்.

தந்தை பெரியார் அவர்கள் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர்; ஆனால், தன் கருத்துக்கு வலுவூட்ட ஆதாரங்கள் கிடைக்கின்றனவா என்பதற்காக அவர்கள் புத்தகங்களைப் படிக்கும்போது, ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் படிப்பார்கள்.

மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி என்பது அக்காலத்தைய தமிழ் என்சைக்ளோபீடியா தனி ஒரு மனிதரின் அளப்பரிய சாதனை (சீதைப் பதிப்பக உரிமையாளர், புத்தகத் தேனீ நண்பர் இராஜசேகரன், கிடைக்காத அதனை அழகுற அச்சிட்டு மக்களிடையே கொணர்ந்துள்ளார்கள். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது!) இலங்கையில் அக்காலத்தில் வெளியான அபிதானகோசம் ஆங்கில அகராதி உள்பட பலவற்றை அய்யா அவர்கள் தனியே கட்டிலில் அமர்ந்திருக்கும்போது கூட சதா படித்துக்கொண்டே இருப்பார்கள்; அப்புத்தகத்தின் முக்கிய குறிப்புகள்பற்றி யோசித்துக் குறித்துக் கொள்ளவேண்டும் என்று அவருக்குத் தோன்றினால், அதைத் தமது டைரியில் குறித்துக் கொள்வார்கள்!

இராமாயணம், பாரதம், பாகவதம் மற்றும் புராணங்களின் பழைய பதிப்புகளை அவர்கள் திரும்பத் திரும்பப் படித்து, முக்கியமானது என்று அவர்கள் நினைக்கும் பகுதிகளை அடிக்கோடிடுவார்கள்! அந்த நூலின் கடைசி உள்பக்க மூலையில், ஓரிரு வார்த்தைகளில் எத்தனையாவது பக்கத்தில் குறிப்பிட்ட செய்தி உள்ளது என்று எளிதில் புரட்டிச் சொல்ல வாய்ப்பு ஏற்படும் வகையில், குறித்து வைப்பார்கள்!

அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் விடுதலை பொறுப்பு ஆசிரியராக இருந்தபோது, அவரும் நண்பர்கள் ப. சண்முகவேலாயுதம், எஸ்.ஆர். சந்தானம் (அய்யாவின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளின் மூத்த மகன்) நடைபயிற்சிபோல் ஈரோடு சந்திப்பு ரயில் நிலையம்வரை சென்று, அங்கே தேநீர் அருந்திவிட்டு திரும்பு முன் அண்ணா அங்கிருந்த ஹிக்கின்-பாதம்ஸ் புத்தக ஸ்டாலில் உள்ள புதுப்புது ஆங்கில நூல்களை எடுத்து ஆழமாகப் படித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு வீடு திரும்புவார்கள். விலையோ 50, 60 ரூபாய் என்று இருக்கும்; அண்ணாவால் வாங்க முடியாதே!

அடுத்த நாள் அய்யாவிடம் உரையாடும்போது, அந்தப் புது புத்தகம்பற்றியும், அதில் நமக்குப் பயன்படக்கூடிய ஆதாரங்கள் ஏராளம் உண்டு என்பதைப் பற்றியும் அண்ணா கூறுவாராம். உடனே வியக்கத்தகுந்த வகையில் சிக்கனத்தின் இலக்கணமான பெரியார் அய்யா அவர்கள் தன் பர்சை எடுத்து, இந்தாங்க அண்ணாத்துரை, அந்தப் புத்தகங்களின் இரண்டு காப்பிகள் வாங்குங்கள். ஒன்று நம்ம ஆபீசில் இருக்கட்டும்; மற்றொன்று உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் பேசும்போதும், எழுதும்போது அது உங்களுக்குப் பயன்படக் கூடும் என்று தாராளமாக சொல்லி, பணத்தைத் தருவார்களாம்!

தனது தோழர்களுக்கு இட்லி (காலை உணவு) வாங்க, வீடுகளில் தெருக்கடைகளில் சுடும் மலிவு விலை வீட்டு இட்லியை வாங்கி வர தனது உதவியாளர்களிடம் கூறும் அந்த சிக்கனத்தின் சின்னம், நல்ல புத்தகங்கள் மூலம் அறிவைப் பெறுவதில்தான் எத்தனைத் தாராளம்!

சிக்கனம் என்பது கருமித்தனமல்ல! எதற்கு, எப்போது, எப்படி, எந்த அளவில் செலவழிப்பது என்பதுதான் சிக்கனம்.

ஊதாரித்தனம் என்பது கணக்கு வழக்குப் பார்க்காமல் செலவழிப்பது!

அறிவுக்குத்தான் எத்தனை விலை உயர்வு பார்த்தீர்களா!

அறிவுக்குப் பொருளாதாரத் தடை எவரிடமும் கிடையாதே!


------------------கி.வீரமணி அவர்கள் 23-4-2010 "விடுதலை” யில் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து..

பெரியாரின் வேண்டுகோள்


வேண்டுகோள்

தஞ்சை ஜில்லாவில் சுற்றுப்பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில இடங்களில் சிலர் படங்களை நெருப்பிற்கிரையாக்கியதாக திராவிடன் பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆட்சேபிப்பதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும் தராததோடு, மனித சமுகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிடம் நமக்கு எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங்களையும், தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம் விரோதங்கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில் கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்லவென்றே நினைக்கிறோம். யார் வந்து எதை வேண்டுமானாலும் பேச நாம் இடம் கொடுக்க வேண்டும். நமக்கு ஆண்மை இருந்தால் அக்கூட்டத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே பேச அனுமதிகேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும், பேசவும் அனுமதி கிடைக்காவிட்டால் கண்ணியமாயிருந்து மறுநாள் கூட்டம் கூட்டி இதைப்பற்றி பேசலாம், கண்டிக்கலாம், சமாதானம் சொல்லலாம். இதுதான் யோக்கியர்களுக்கழகு. அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கலவரம் செய்வது என்பது கலவரம் செய்பவர்களையும், அவர்களது கொள்கைகளையும் பலக்குறைவாக்கி விடுகிறதோடு, பேசுபவர்களுக்கு யோக்கியதையை உண்டாக்கிவிடுகிறது. நாம் போன இடங்களிலும், இரண்டொரு இடங்களில் இம்மாதிரி சிலர் முயற்சித்தும் நாம் சவுகரியப்பட்ட இடங்களில் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து சமாதானம் சொன்னதில் கேட்க வந்தவர்கள் நமது கொள்கையை ஏற்றுக் கொள்ள நேர்ந்ததோடு, நமது கொள்கைகளுக்கு முன்னிலும் அதிகமான பொதுஜன ஆதரவு கிடைத்ததேயல்லாமல் நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. கேள்விக்கு சமாதானம் சொல்ல முடியாதவர்கள் வெளியில் போய் பேசுவது என்பது கேவலமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். நமது கொள்கைகளும், தீர்மானங்களும் நம் மனதிற்கு உறுதி உள்ளதானால் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லலாம். நமக்கே உறுதி உள்ளதானால் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லலாம் நமக்கே உறுதி இல்லாமல் மற்றோரை ஏமாற்றுவதானால் மாத்திரம் பதில் சொல்லுவது கஷ்டம்தான். ஆகையால் மற்றவர்களைப்பற்றி கவலை இல்லாமல் நமது கட்சியைப் பொறுத்தவரையிலாவது ஒழுங்காய் நடந்து கொள்ள வேண்டும். யார் வந்தாலும் தாராளமாய்ப் பேச இடம் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

------------தந்தைபெரியார் - “குடிஅரசு”, 10.04.1927

22.4.10

இலவசக் கட்டாயக் கல்வி-விதைத்தது நீதிக்கட்சி!-வளர்த்தது சுயமரியாதை இயக்கம்!

இலவசக் கட்டாயக் கல்வி

விதைத்தது
நீதிக்கட்சி!

ஆரியப் பார்ப்பனர் வந்தேறிகள். நல்ல நிறமுடையவர்கள். இவர்கள் நிறத்தில் மயங்கிய இந்நாட்டு மன்னர்கள் அவர்கள் கருத்துகளை ஏற்றனர். வர்ணாசிரம தர்மம் உருவாயிற்று. பிறப்பினால் ஒருவன் உயர்ந்தவன் பிறப்பினால் ஒருவன் தாழ்ந்தவன் என ஆயிற்று. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு சாதிப் பிரிவுகள் அவர்களால் உருவாக்கப்பட்டன. அய்ந்தாம் சாதியாக பஞ்சம சாதியும் தோன்றியது. நான்காம் சாதி சூத்திர ஜாதி அடிமைச் சாதி. இச்சாதியினர் பார்ப்பனர்க்கு வைப்பாட்டி மக்கள் என்றனர். எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வி கொடுக்கக்கூடாது என்றனர். ஆரியப் பார்ப்பனக் குடும்பங்களின் கவர்ச்சியில் திளைத்த மன்னர்கள் - சூத்திர மன்னர்கள் - இவற்றை நடைமுறைக்குக் கொணர்ந்தனர். இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனரல்லாத் திராவிடச் சமுதாயம் கல்வி மறுக்கப்பட்டு நசுக்குண்டு கிடந்தது.

நீதிக்கட்சி தோன்றியது

இவ்வாறு நசுக்குண்ட திராவிட மக்களின் உரிமைகட்கும் நல்வாழ்வுக்கும் போராடத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் கட்சி 1916 இல் தோன்றிற்று. இதைத் தோற்றுவித்தவர்கள் சின்னக் காவனம் நடேச முதலியார், பிட்டி தியாகராயச் செட்டியார், தாரவாத் மாதவன் நாயர் ஆகியவர்கள். இக்கட்சிக்கு ஜஸ்டிஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகையும், ஆந்திரப் பிரகாசிகா என்னும் தெலுங்குப் பத்திரிகையும், திராவிடன் என்ற தமிழ்ப் பத்திரிகையும் தோன்றின.

காலப் போக்கில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஜஸ்டிஸ் என்ற பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் கட்சி என்றும் அதன் தமிழ் வடிவமாக நீதிக் கட்சி என்றும் அழைக்கப்பட்டது.

மாநாடுகள்

மக்களை ஒன்று திரட்டி அவர்களிடையே மான உணர்வை ஊட்ட நீதிக்கட்சி பல மாநாடுகளை நடத்திற்று. திராவிட மக்கள் கடைத்தேறப் பல தீர்மானங்களை நிறைவேற்றிற்று. இம்மாநாடுகளில் திராவிட மக்கள் கல்வி பெறவேண்டும் என்ற தீர்மானம் தவறாமல் நிறைவேற்றப்பட்டது.

ஆட்சி அமைத்தது

1916 இல் தோன்றிய நீதிக்கட்சி 1921 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அப்பொழுது தான் கூறியவற்றுக்கெல்லாம் அவ்வரசு செயல்வடிவம் தர முன்வந்து வெற்றி பெற்றது.

கல்வி குறித்த நீதிக்கட்சியின் தீர்மானங்கள்

1917 ஆம் ஆண்டு டிசம்பர் 8,9 நாள்களில் புதுக்கோட்டை மன்னர் கே.எஸ். துரைராஜா அவர்கள் தலைமையில் சேலத்தில் நடந்த பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை வைசிராய்க்கும் (அரசப் பிரதிநிதி) இந்திய மந்திரிக்கும் அனுப்பப்படக் கோரி சென்னை அரசுக்கு அனுப்பப்பட்டது.

இம்மாநாட்டில் கல்வி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

3 (அ) தொடக்கக் கல்விதான் நாட்டிற்கு முதல் தேவை என்றும், பிள்ளைகட்குத் தொடக்-கக் கல்வி அளிப்பதற்கான முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றும் மக்களுக்குத் தொடக்கக் கல்வி கொடுப்பதற்குத் தரப்படும் திட்டங்களுக்கு முக்கிய இடம் தரவேண்டும் என்றும், தொடக்கக் கல்வியை எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கட்டாயக் கல்வி ஆக்க வேண்டும் என்றும், நகராட்சிப் பகுதியில் தொடக்கக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டுமென்றும் இதற்கான செலவுகளில் 2/3 பங்கை அரசு ஏற்கவேண்டும் என்றும் எஞ்சிய 1/3 பகுதியை நகராட்சி ஏற்கவேண்டுமென்றும், அவ்வாறு ஏற்க முடியாத நகராட்சி இச்செலவுக்காகத் தனி வரி வசூலித்துக் கொள்ளலாம் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

(ஆ) உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்குப் போதிய வசதிகள் இல்லை. ஏராளமான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுவதிலிருந்து இதனை நாம் அறிகிறோம். எனவே, தகுதி பெற்றுள்ள மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரத் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுகிறது.

(இ) பார்ப்பனரல்லாத மாணவர் கல்வி பெறப் போதிய ஊக்கம் அரசால் அளிக்கப்படவில்லை என இம்மாநாடு கருதுகிறது. எனவே, பொருளாதார வசதியற்ற ஏழை மாணவர்கட்கு உதவி நிதிகள் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

(ஈ) ஒவ்வொரு ஜில்லாவிலும் பார்ப்பனரல்லாதார் கல்விக் கூடங்கள் அமைக்க வேண்டியது கட்டாயம் என்றும், இதை மாவட்டத்திலுள்ள எல்லாப் பார்ப்பனரல்லாப் பெருமக்களுக்கும் அறிவிக்கிறது.

(உ) படித்து முடிக்கும் வரை எல்லாப் பஞ்சமர் மாணவர்கட்கும் இலவசக் கல்வியை வழங்கவேண்டும் என இம்மாநாடு கருதுகிறது.

(ஊ) நன்கு மேற்பார்வையிடப்படும் பார்ப்பனர் அல்லாதார் மாணவர்க்கான விடுதிகள் கல்வி வழங்கப் படும் எல்லா இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது இன்றைய முதன்மையான தேவை என்றும் இவ்வாறு விடுதிகளை அமைக்க வேண்டுமென்றும் பொருளாதார வசதி இல்லாத பார்ப்பனரல்லா மாணவர்க்கு உதவி நிதி அளிக்க வேண்டும் என்றும் இதற்கான முயற்சிகளில் அந்தந்த மாவட்டத்திலுள்ள பார்ப்பனரல்லாப் பிரமுகர்கள் ஈடுபடவேண்டும் என்றும் இம்மாநாடு கருதுகிறது.

இத்தீர்மானம் சுந்தரக் கவுண்டர் அவர்களால் முன் மொழியப்பட்டு சக்ரபாணி நாயுடு அவர்களால் வழிமொழியப்பட்டு பீர்சடா சையது ஷா முகமது பீஷ் சாஹிப் சத்தார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு நிறைவேறியது.

இவ்விவரங்களை எண் 223 (பொது) 8.3.1918 நாளிட்ட அரசு ஆணையிற் காண்கிறோம். (ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் பக். 21, 22, 23).

1918 மார்ச் மாதம் நடைபெற்ற தஞ்சை, திருச்சி, பார்ப்பனரல்லாதார் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 5 - கல்வி

1. இம்மாநாடு தொடக்கக் கல்விக்கு செலவழிப்பதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான பணத்தை உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி இவற்றிற்காகச் செலவிடும் அரசின் கொள்கை மீது தன் அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டு தொடக்கக் கல்வியைப் பரப்புவதுதான் முதலும் முக்கியமானதுமான பணி என அரசு அடிக்கடி உறுதியளித்திருப்பதை நிறைவேற்ற வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டு இந்நாட்டில் கல்லாமையையே விரைவில் ஒழிப்பதற்காக இலவச, கட்டாயத் தொடக்கக் கல்வியைப் பரப்பத் தக்க நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டுமென்று எடுத்துக் கூறுகிறது. மேலும் போதுமான தொழிற் கல்வி நிலையங்களையும், தொடக்க, விவசாயப் பள்ளிகளைப் போல் நிறுவி அதன் மூலம் இந்தியத் தொழிலதிபர்கட்கும் விவசாயிகளுக்கும் திறன் வாய்ந்த, ஆய்வுப் பணியாளர் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றது.

2. பார்ப்பனரல்லாத மாணவர் கல்வி நலனுக்காகப் போதிய ஊக்கம் அளிக்கப்படவில்லை என்ற உண்மை காரணமாகவும் பெரும்பான்மையான வரி பார்ப்பனரல்லாதாரால் வழங்கப்பட்டு வருவதாலும், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பார்ப்பனர் அல்லதாராகிய மாணவர்கட்கும், மாணவிகட்கும் ஸ்காலர்ஷிப் வழங்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு கருதுகின்றது.

3. எந்தக் கல்வி நிலையமாவது எந்தத் தனிப்பட்ட சாதி மாணர்கட்கும் இடம் தர மறுத்தால் ரெவின்யூ துறையிலிருந்தோ, பிற பொது நிதியில் இருந்தோ அக்கல்வி நிலையம் எந்த உதவியும் பெற உரிமையுடையதாகக் கூடாது என்று இம்மாநாடு கருதுகின்றது.

4. தஞ்சையில் பெண்களுக்கென ஓர் உயர்நிலைப் பள்ளி திறப்பது மிகத் தேவையான ஒன்று என்பதையும் ஒரு தொழிற்கல்வி நிலையத்தை ஒரு முக்கியமான இடத்தில் நிறுவ வேண்டும் என்பதையும் இம்மாநாடு அரசுக்கு வற்புறுத்துகின்றது.

முன்மொழிந்தவர்:

அய்.குமாரசாமி பிள்ளை, பி.ஏ.,

வக்கீல், நகர் மன்ற உறுப்பினர்,

தாலுகா போர்டு உறுப்பினர்

தஞ்சை தென்னிந்திய நல உரிமைச் சங்கச் செயலாளர்

சிறீமதி அலர்மேல் மங்கைத் தாயாரம்மாள்

ஆதரித்தவர்:

ராஜகோபால் நாயுடு, திருச்சிராப் பள்ளி

தீர்மானம் நிறைவேறியது.

இச்செய்திகளை அரசு ஆணை எண். 82 (உள்துறை) கல்வி 21.1.1919 இல் காண்கிறோம். (ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் பக். 71, 72, 73). சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாவும்
பெறப்பட்ட விடையும்

19.11.1919 இல் சென்னை சட்டமன்றத்தில் எம்.சி. ராஜா கேட்ட கேள்விகள் பற்றிய குறிப்புகள்.

வினா:

பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகட்கு இலவசக் கல்வி:

நகராட்சி, உள்ளாட்சி மன்றப் பள்ளிகள் உள்ளிட்ட எல்லா அரசுப் பள்ளிகளிலும், உதவி பெறும் பள்ளி-களிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கட்டணம் வசூலிக்காமலிருக்கக் கூடிய வசதி குறித்து அரசு ஆராயுமா?

அலுவலகக் குறிப்பு:

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளாட்சித் துறைப் பள்ளிகள் உள்ளிட்ட எல்லாப் பள்ளிகளுக்கும் பொருந்தும். சென்னை கல்வி விதிகளின் (வி.ணி.ஸி.) 84, 99 ஆம் பிரிவுகளை; காண்க. விதி 84_4 வகுப்புகளை மட்டும் கொண்டுள்ள தொடக்கப் பள்ளிகள் வசூலிக்கக் கூடிய குறைந்த பட்சக் கட்டணம் குறித்துக் குறிப்பிடுகிறது. அய்ந்தாம் வகுப்புகள் உள்ள பள்ளிகள் வசூலிக்கக் கூடிய கட்டணம் குறித்தும் அது குறிப்பிடுகிறது. இந்த விதிகளின்படி பஞ்சமர், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களிடமிருந்து கட்டணம் நான்கு வகுப்புகளை மட்டும் கொண்டுள்ள லோயர் எலிமெண்டரி பள்ளிகளில் வசூலிக்க வேண் டியதில்லை. அய்ந்தாம் வகுப்பு உள்ள பள்ளிகளிலும் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளும் கட்டணம் செலுத்தப்படாமலே சேர்க்கப்படலாம்.

விதி 99: கல்லூரிகளிலும், செகண்டரி பள்ளிகளிலும் வசூலிக்கத் தக்க குறைந்த அளவு கட்டணம் குறித்துப் பேசுகிறது.

விதி 102: இந்தப் பள்ளிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களிடமிருந்து பாதிக் கட்டணம் வசூலிக்க வகை செய்கிறது. எல்லாப் பஞ்சமர் மாணவர்களையும் கட்டணம் இல்லாமல் சேர்ப்பதற்குக் கல்வித் துறை விதிகள் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

அளிக்கப்பட்ட பதில்:

அரசுப் பொதுத் தொடக்கப் பள்ளிகளில் பஞ்சமர் சமுதாய மாணவர்களிமிருந்து எக்கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இத்தகைய அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகட்கு அரசு மானியம் வழங்கக் கணக்கிடும்போது சேர்த்துத் தரப் படுகின்றது. மற்ற பள்ளிகளில் இதுபோன்ற ஒரு கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்த சலுகையை நீட்டிக்க அரசு இப்போது முன்வரவில்லை.

இவ்விவரங்களை அரசு ஆணை எண். 1573 (உள்துறை) கல்வி 15.12.1919 தாங்கி நிற்கிறது. (ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் பக். 106, 107, 108).

வளர்த்தது
சுயமரியாதை இயக்கம்!

முதன்முதலில் மாணவர்களுக்கான
இலவச உணவுத் திட்டம்

மாணவர்கள் தவறாது பள்ளிக்கு வருவதற்காக அற்றை நாளில் நீதிக் கட்சியை நிறுவிய சென்னை மாநகராட்சித் தலைவர் பி.தியாராயச் செட்டி மேற்கொண்ட வியத்தகு இலவச உணவுத் திட்டம்.

அடியில்கண்ட கடிதம் தியாகராயரால் 17,2,1922 அன்று அரசு உள்ளாட்சித் துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டது.

கடிதம்:

சென்னை எண். நி.ஞி.சி. ழிஷீ.110 ஷீயீ 22 நாள்: 17.2.1922

அனுப்புநர்:

திவான் பகதூர் சர்.பி.தியாகராயச் செட்டி எம்.எல்.சி., தலைவர், சென்னை மாநகராட்சி.

பெறுநர்:

அரசுச் செயலர், உள்ளாட்சித் துறை

அய்யா,

மாநகராட்சியின் பல பள்ளிகள் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும் மாணவர் வருகையும் மனநிறைவு அளிப்பதாக இல்லை. விசாரித்தபோது மாணவர்கள் தாமே உழைத்தும், பொருள் கொண்டு வந்தாலொழிய அவர்தம் பெற்றோரால் நண்பகல் உணவு வழங்க இயலாது என்பதும் குறைந்த நண்பகல் இடைவெளியில் மாணவர்கள் வீடு சென்று திரும்புவதில் உள்ள கஷ்டங்களும்தான் இதற்குக் காரணங்களாக அமைகின்றன எனத் தெரிய வந்தது.

இந்த இன்னல்களையெல்லாம் நீக்கு முகமாகவும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும் வருகையும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் 1920 செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் நடைபெற்ற மாநராட்சிக் கூட்டத்தில் இத்தகைய மாணவர்கட்கு ஒரு நாளைக்கு ஒரு மாணவர்க்கு ஒரு அணாவுக்கு மேல் போகாமல் நண்பகல் சிற்றுண்டி அளிக்க முடிவு செய்தது. பரீட்சார்த்தமாக இத்திட்டம் முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. விளைவு மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. எனவே, இத்திட்டம் சேத்துப்பட்டிலும், மீர்சாகிப் பேட்டையிலும் உள்ள இரு மாநகராட்சிப் பள்ளிகட்கும் நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஏழு பள்ளிகட்கு இதை நீட்டிக்க முடிவு செய்யப்பட்-டுள்ளது.

2. 1919 ஆம் ஆண்டைய சென்னை மாநகராட்சி சட்டத்தால் இது அனுமதிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் உள்ளாட்சி மன்றக் கணக்கு ஆய்வாளர் இந்தச் செலவை ஏற்க மறுக்கிறார். இந்த வசதியை நிறுத்திவிட்டால் குறிப்பிடப்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அது பாதிக்கும். எனவே, இதற்குச் சிறப்பு ஒப்புதல் அளிக்குமாறு சென்னை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் கீழ்படிதலுள்ள ஊழியன்,

பி.தியாகராயச் செட்டி, தலைவர்

இதுவே கடிதம்.

மாநகராட்சித் தலைவர் எழுதிய இரண்டாம் கடிதம்.

எண். ஸி.நி.ஞி.சி. ழிஷீ.110 ஷீயீ 22 நாள்: 23.5.1922

அனுப்புநர்:

திவான் பகதூர் சர்.பி.தியாகராயர் செட்டி எம்.எல்.சி., தலைவர்,

சென்னை மாநகராட்சி.

பெறுநர்

அரசுச் செயலர், உள்ளாட்சித் துறை

அய்யா, இந்த மாநகராட்சியின் சில மாதிரிப் பள்ளி-களில் நண்பகல் சிற்றுண்டி அளித்ததற்காக ஏற்பட்ட செலவு-களைச் சிறப்பு நிலையில் அனுமதித்து ஆணை பிறப்பிக்கக் கோரிய எண்.ஸி.ளி.நி.ஞி.சி. ழிஷீ.110 ஷீயீ 22 நாள் 17.2.1922 கடிதத்தின் பேரில் தங்கள் ஆணையை விரைவில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் கீழ்படிதலுள்ள ஊழியன்,

பி.தியாகராயச் செட்டி,

அலுவலகக் குறிப்பு:

1919 ஆம் ஆண்டைய சென்னை நகர நகராட்சிச் சட்டத்தில் ஷெடியூல் மிமி இல் விதிகள் 1 முதல் பத்து வரை உள்ள பிரிவுகள் நகராட்சியின் செலவுகள் குறித்துப் பேசுகின்றன. இந்தச் சட்டங்களில் எதுவும் நண்பகல் சிற்றுண்டி அளிப்பதற்கான செலவினத்தை அனுமதிக்கவில்லை. எனவே, கணக்குத் தணிக்கையாளரின் எதிர்ப்பு இன்றுள்ள சட்டப்படி சரியானதே. எனினும் சட்டம் திருத்தப்பட்டுவிட்டது. சட்ட மன்றத்தில் 14.3.1922 அன்று நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 (2) அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அத்தகைய செலவினங்களை மேற்கொள்ள வழி வகுக்கிறது. அதுவும் இத்திருத்தம் 1.10.1920 முதல் பின்னாளிலிருந்து நடைமுறைக்கு வருவதாகும். இதற்காக ஏற்பட்ட செலவுகளை அரசு ஒரு சிறப்பு மாற்றம் ஆக 14.3.1922 இல் நிறைவேறிய இச்சட்டம் அமலுக்கு வரும்போது இது வழங்கப்படும். அதுவரை இது அப்படியே இருக்கும்.

இச்செலவுகள் அரசால் அனுமதிக்கப்படுவதாக ஆணை எண். 1008 நாள் 7.6.1922 அறிவிக்கிறது

இவ்விவரங்களை அரசு ஆணை 1008 உள்-ளாட்சித் துறை 7.6.1922 இல் காண்கிறோம். (ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் பக். 168, 171).

அறுவடை செய்கிறது
இன்றைய இந்திய அரசு!

நீதிக்கட்சியைப் போற்றுவோம்!

வந்தேறி ஆரியப் பார்ப்பனர்களால் தற்குறிச் சமு-தாய-மாக ஆக்கப்பட்ட திராவிடப் பெருங்குடி மக்கள் கல்வியில் முன்னேற நீதிக்கட்சியும் அதன் அரசும் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி இவற்றை நூறாண்டுகட்கு முன்னரே அளிக்க முயன்றமை கண்டு மெய்சிலிர்க்கிறோம்.

வறிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த திராவிட இனச் சிறுவர்கட்கு இலவச நண்பகல் உணவு கொடுத்து கல்வி அளித்த பெருமகனால் பிட்டி தியாகராயச் செட்டியார் என்பதும் காண்கிறோம்.

இந்த முயற்சிகள் காரணமாகத் திராவிட மக்கள் அறிவு பெற்றுத் தன்மான உணர்வையும் அறிவு வழி பெற்று இன்று தலை நிமிர்ந்து வாழ்வது காண்கிறோம்.

நடுவிட அரசின் இன்றைய செயற்பாடுகள்

இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்கச் சட்டம் இற்றை நாளில்அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் 92 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். இக்குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதியளிப்பது மத்திய_ மாநில அரசுகள் மாவட்ட நிருவாகம், உள்ளாட்சி மன்றங்கள் இவற்றின் கடமை ஆக்கப்பட்டுள்ளது என்ற செய்தி 2010 ஏப்ரல் பிறந்ததும் நமக்குக் கிட்டுகிறது.

மகிழ்ச்சி ஊட்டுகிறது

தொண்ணூறு ஆண்டுகட்கு முன்னரே இலவசக் கட்டாயக் கல்வியைச் செயல்படுத்த முனைந்தது நீதிக்கட்சி அரசு. இதற்காக இடையறாது உழைத்தது சுயமரியாதை இயக்கம். தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் அதனை இன்று சட்ட வடிவமாக்கியது இன்றைய இந்திய அரசு!

இலவசக் கட்டாயக் கல்வி என்னும் விதையை விதைத்தது நீதிக்கட்சி!

இக்கல்வியின் இன்றியமையாமையை நாளெல்லாம் மக்களிடையே எடுத்துக் கூறி அக்கருத்தை வளர்த்தது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!

இதன் விளைவுகளை அறுவடை செய்கிறது இன்றைய இந்திய அரசு!

இலவசக் கட்டாயக் கல்விக்கு வித்திட்ட நீதிக்கட்சி வாழ்க! அதனைச் செயல்வடிவம் பெற இடையறாது உழைத்த சுயமரியாதை இயக்கம் வாழ்க!

இதைச் சட்டமாக்கிப் பெரும் நன்மையை இந்நாட்டு மக்களுக்கு விளையச் செய்ய இத்திட்டத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் வாழ்க!


--------------------நன்றி:- “விடுதலை” 4-4-2010