Search This Blog

5.4.10

பெரியாருக்குப் பிறகு பொருத்தமான தலைவராக கி.வீரமணி


தமிழர் தலைவர், மானமிகு கி.வீரமணி அவர்கள்
வாழ்க பல்லாண்டு!

கடற்கரைப் பட்டினமாகிய கடலூரில் சாதாரண குடும்பத்தில் திரு கிருட்டினசாமி, திருமதி மீனாட்சியம்மை ஆகிய இணையருக்குத் திருமகனாக 2.12.1933 இல் பிறந்தவர் போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரிய கி.வீரமணி அவர்கள்.

இவர், தொடக்கக் கல்வியையும் உயர் கல்வியையும் படித்த பின்னர் முறையாகப் பொருளாதாரத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றார். 1956 இல் பி.எல். பட்டமும் பெற்றார். வழக்குரைஞர் தொழிலையும் மேற்கொண்டார்.

தமது 10 ஆம் வயதிலேயே தந்தை பெரியார் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெரியாரின் கொள்கைகளுக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகத் திகழ்ந்தார். திராவிட இயக்கத்தின் செய்தி இதழாகத் திகழ்ந்த விடுதலை ஏட்டினைத் தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டபோது, அதன் பொறுப்பை ஏற்றுத் தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

தந்தை பெரியாருக்குப் பிறகு, மணியம்மையார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுச் செம்மையாக இயக்கி வருகிறார்.

போற்றுதலுக்குரிய கி.வீரமணி அவர்கள் பதவிச் சுகத்தை எதிர்பார்க்காமல், நினைக்காமல், நாளெல்லாம் தமிழர் தம் நலம், இனமானம், மேம்பாடு, சயமரியாதை, சீர்திருத்தம் ஆகியவற்றை மட்டுமே கருத்திற்கொண்டு, தம் வாழ்நாளை முற்றிலுமாக ஈகம் செய்துவரும் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் தம் தலைமையில் 2-1.2.2007 இல் திரு.கி.வீரமணி அவர்களின் பவழவிழா நடைபெற்றது. பவழ விழா நாயகர் கி.வீரமணி அவர்கள் 75 அகவை நிறைவுபெறும் நாளிலும் தொய்வில்லாமல் நாள்தோறும், தமிழர் நலனுக்காகவும், பின்தங்கிய மக்களின் உயர்வுக்காகவும் நாடெங்கும் சென்று தந்தை பெரியார் தம் கருத்தைப் பரப்பி வருகின்றார். 10 வயதில் தொடங்கிய பொதுப்பணியை 67 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஆற்றி வருகின்றார்.

இவர், இளைஞராய் இருந்தபோதே, இவர்தம் எழுச்சி மிகு பேச்சைக் கேட்கப் பெருங்கூட்டம் கூடும். தந்தை பெரியாரும் இவர்தம் பேச்சைக் கேட்டுப் பெரிதும் பாராட்டி மகிழ்வார். பேரறிஞர் அண்ணா அவர்கள் இவரைத் திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்று குறிப்பிட்டுப் பாராட்டுவார்.

தொண்டு என்பது பயன் கருதாமல் இருக்க வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும். பெரியாருக்குப் பிறகு அதற்குப் பொருத்தமானவராக தலைவராக கி.வீரமணி அவர்கள் விளங்கி வருகின்றார்.

பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பெருமைக்குரிய வீரமணி அவர்கள் யாரையும் எதிர்பார்த்து வாழவில்லை. யாருக்கும் தீங்கு செய்ய எண்ணியதில்லை. உள்ளத்தில் தோன்றிய கருத்தை உரத்த குரலில் எடுத்துக் கூறுவார். உண்டிக்காகவோ, உயர்வுக்காகவோ யாரையும் அணுகியதில்லை. மனத்தில் நல்லதென்று தோன்றிய கருத்துகளை மறைக்காமல் வெளிப்படையாகக் கூறுவார்.

சாதியால் உயர்வு தாழ்வு கூடாது; அனைத்துச் சாதியினரும் கோயிலில் அர்ச்சகராக வேண்டும்; பின் தங்கிய வகுப்பினருக்கு வேலை வாய்ப்பில், உயர் கல்வி பெற 27 விழுக்காடு பெறவேண்டும் என்பதற்காகப் போராடி வெற்றி கண்டவர். சமூக மேம்பாடு, சமத்துவம், கல்வி ஆகியவை பெறப் புரட்சிகள் பலவற்றிற்கு வித்தாக விளங்கியவர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமிழர்தம் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நூல்களைப் படைத்துள்ளார். அவர்தம் சொற்பொழிவுகள் பொருள் பொதிந்தனவாய் இருக்கும். எம்.ஏ., படிக்கின்ற போது தங்கப் பதக்கம் பெற்ற முதல் மாணவர். இவருக்குப் புதுக்கோட்டை திராவிடர் கழக மாநில மாநாட்டில் எடைக்கு எடை வெள்ளி வழங்கப்பட்டது. அத்தொகையைக் கொண்டு,-பெரியார், மணியம்மை அறக்கட்டளை தொடங்கப்பட்டது. கருத்துக்கலை, இனமானப் போராளி, பேரறிவாளர் ஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளன. ஆக்ஸ்போர்டு தமிழ் விருது, பீமரத்னா, பாரத் ஜோதி ஆகிய விருதுகளும் பெற்றுள்ளார். இத்தகைய பெருமைக்குரிய கி.வீரமணி அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பி வருகின்றார்.

மதிப்பிற்குரிய, பெருமைக்குரிய தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், மாணவர் மன்றத்தின் 77 ஆம் ஆண்டு விழா 15.3.2008 இல் நடைபெற்றபோது அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தமிழ்ச் சான்றோர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் விருதுகள் வழங்கிப் பேருரையாற்றினார். மாணவர் மன்றத் தமிழ்த் தேர்வில் தாம் தேர்வு எழுதிச் சான்றிதழ் பெற்றுள்ளதையும், மன்றத்தை நிறுவிய டாக்டர் தருமாம்பாள் அம்மையார் ஆற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் நினைவு கூர்ந்து, அரியதோர் சிறப்புரையாற்றினார். மாணவர் மன்றத் தேர்வுகளில் சிறப்புப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு வழங்க, ரூ 5,000 மதிப்புடைய பெரியார் இயக்க நூல்களை ஆண்டுதோறும் வழங்குவதாக அறிவித்தார். அய்யாயிரம் ரூபாய் மதிப்புடைய நூல்களைத் தந்து உதவினார். 2010 ஆம் ஆண்டிலும் ரூ 5000 மதிப்புடைய நூல்களை வழங்கியுள்ளார். அவருக்கு மன்றத்தினர் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அவர்கள் பல்லாண்டு நலமாக வாழ்ந்து, தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வாழ்த்துகிறோம்.

நன்றி: மாணவர் மன்றம் நடத்தும் "நித்திலக் குவியல்" , மார்ச் 2010

10 comments:

குரு said...

மதிப்பிற்குரிய, பெருமைக்குரிய தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் சொத்து கணக்கை வெளியிட முடியுமா???

Unknown said...

பெரியாரால் திரு.வீரமணி அவர்கள் அடையாளம் காணப்பட்டது போல், அடுத்த பொருத்தமானவர் யார் என்பதை அறிய, நாடு காத்துக் கொண்டு இருக்கிறது. களப்பணி ஆற்றும் தலைவருக்கு இதமான தென்றல். இந்த கட்டுரை.

வால்பையன் said...

நியுமரலாஜி பிரகாரம் பார்த்த பொருத்தமா!?

தமிழ் ஓவியா said...

சரியான விபரங்களை அரசுக்கு சமர்பிக்கப் பட்டு வருகிறது குரு.
உங்களின் நல்ல எண்ணம் புரிகிறது

தமிழ் ஓவியா said...

//நியுமரலாஜி பிரகாரம் பார்த்த பொருத்தமா!?//

பெரியாரின் கொள்கை,நிலைப்பாடு அடிப்படையில் பார்க்கப்பட்ட பொருத்தம்.

நியூமரலாஜி என்பதே பித்தலாட்டமானது வால் பையன்.

அஹோரி said...

உங்க அக்கபோரு தாங்க முடியல.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))

இருபதாண்டுகளுக்கு முன் வந்திருக்க வேண்டிய நல்ல கட்டுரை!

அப்போது படித்துவிட்டு பின்னர் மறந்திருக்க வேண்டியது!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தாலும் அவரையும் கி.வீரமணியார் ஆதரிப்பார் என்பது எனது நம்பிக்கை!

பகுத்தறிவோடு சிந்தித்துப் பார்த்தால் இது மூட நம்பிக்கை இல்லை என்பது நிதர்சன உண்மை!

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி !

தமிழ் ஓவியா said...

//விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தாலும் அவரையும் கி.வீரமணியார் ஆதரிப்பார் என்பது எனது நம்பிக்கை!

பகுத்தறிவோடு சிந்தித்துப் பார்த்தால் இது மூட நம்பிக்கை இல்லை என்பது நிதர்சன உண்மை!//இதில் விஜயகாந்தாக இருந்தாலும் சரி அத்திவெட்டி ஜோதிபாரதியாக இருந்தாலும் சரி

இன்னார்- இனியார் என்று வேறுபாடு இல்லாமல் யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். கெடுதல் செய்யும் எவரையும் கண்டிப்போம்.