Search This Blog

4.4.10

மானத்தை சொல்லிக் கொடுத்தவர் பெரியார்

தமிழினத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
ஒவ்வொருவர் கையிலும் கட்டாயம் குடிஅரசு இதழ் இருக்கவேண்டும்

பெரியார் திடலில் தமிழர் தலைவர் உரை

தமிழினத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிஅரசு புத்தகங்கள் இருக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

குடிஅரசு தொகுதிகள் (1926, 1927, 1928 தொகுதிகள்) வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 30.3.2010 அன்று மாலை நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நான் கண்டித்தது

தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு முதல் ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டுக்கான குடிஅரசு இதழ் பற்றி எழுதுகின்றார்:

பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், குடிஅரசினாலும் அரசியல் இயக்கங்கள் என்பவைகளை நான் கண்டித்தேன். மற்ற தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதச் சடங்குகள் என்பவைகளைப் பற்றி கண்டித்திருக்கின்றேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். கோவில் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சாமி என்பதனைக் கண்டித்திருக்கிறேன். வேதம் என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கிறேன். சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். புராணம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். பார்ப்பனியம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். ஜாதி என்பதைக் கண்டித்திருக்கிறேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். நியாயாதிபதி என்பவர்களைக் (நீதிபதி) கண்டித்திருக்கின்றேன். நிருவாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கின்றேன்.

ஜனப்பிரதிநிதித்துவம் (ஜனநாயகம்) என்பதைக் கண்டித்திருக்கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சுயராஜ்யம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். ஸ்ரீமான்கள் கல்யாண சுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, ராஜகோபாலாச்சாரியார் போன்ற ஒரே துறையிலே வேலை செய்து கொண்டு வந்த நண்பர்களை கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்னென்னவற்றையோ, யார் யாரையோ கண்டித்திருக்கின்றேன்.

எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை

கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன். (அய்யா அவர்கள் எவ்வளவு வேகமாக சொல்லுகிறார்கள் பாருங்கள் சிரிப்பு). எதைக் கண்டித்திருக்கிறேன், எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்றால் பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும், கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலையே ஏற்படுகின்றது என்பது ஒழிய வேறில்லை. கண்டிக்கத் தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படவே மாட்டேன் என்கிறது என்று அய்யா அவர்கள் சொன்னார்.

மனதில் பட்டதை பேசக் கூடியவர்

இதுமாதிரி புரட்சிகரமாக தன்னுடைய மனதிலே பட்டதை அவருக்கு மனம் வருத்தப்படுமே, இவருக்கு மனம் வருத்தப்படுமே என்று கொஞ்சம்கூட கவலைப்படாமல் கருத்துகளை எடுத்துச் சொன்ன ஒரு மாபெரும் தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்கள்.

குடிஅரசு குருகுலத்தில் பயின்றவர் முதல்வர்

நமக்கு என்ன மகிழ்ச்சி என்றால் நாமெல்லாம் பிறக்காத காலத்தில் குடிஅரசு பிறந்தது. பகுத்தறிவு பிறக்காத காலம். சுயமரியாதை பிறக்காத காலம். இருண்ட காலம். அறிவொளி பரவாத காலம்.

இன்றைக்கு அறிவொளி என்று பெயர் உள்ளவர் நூலகத்திற்கு தலைவராக வரக்கூடிய அளவுக்கு வந்ததுதான் பெரிய சமுதாய மாற்றம்.

நமது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் குடிஅரசு குரு குலத்திலே வளர்ந்தவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் இன்றைக்கு ஓர் அற்புதமான சாதனையை வரலாற்றுப் புகழில் என்றைக்கும் நிலைத்திருக்கும்படியாக செய்திருக்கிறார். நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களின் துணையோடு நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்திருக்கின்றார்.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்

சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தையும் தாண்டி அதைவிட சிறப்பாக நடத்துவோம் என்ற உணர்விலே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சென்னை, கோட்டூர்புரத்திலே திறக்கப்பட இருக்கிறது. இதிலே இரண்டு மகிழ்ச்சி எனக்கு. ஒன்று அண்ணா அவர்களுடைய பெயரிலே நல்ல நூலகம் அமைந்திருக்கிறது. இரண்டாவது பெரியார் அறிவியல் ஆராய்ச்சி மய்யம் அதற்கு அருகில் உள்ளது.

பெரியாருக்குப் பக்கத்தில்தான் அண்ணா இருப்பார் என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டுகள் (கைதட்டல்). அந்த வாய்ப்பை நமது முதல்வர் கலைஞர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார்கள். சென்ற ஆட்சியில்

கோட்டூர்புரத்தில் அண்ணா பெயரில் நூலக கட்டடமே ஓர் எழுதப்படாத வரலாறு. நினைவூட்டப்பட வேண்டிய ஒரு வரலாறு.

இப்பொழுது கலைஞரால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற அந்த இடத்தை, தலைமைச் செயலகம் கட்ட அந்த அம்மையார் தேர்வு செய்தார்.

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கின்ற சங்கராச்சாரியார், அவர் இன்னமும் கொலைக் குற்றவாளியாக இருந்த நிலையில் ஒவ்வொரு வழக்கு முறைக்கும் சென்று ஒவ்வொரு சாட்சியாக கலைத்துக் கொண்டு வருகின்றவர். சென்ற ஆட்சியிலே முதலமைச்சராக இருந்த அந்த அம்மையார் சங்கராச்சாரியாரை அழைத்துக் கொண்டு வந்து பெரிய யாகம் செய்து, அந்த யாகத்தில் குழி தோண்டி நெருப்பை மூட்டி, பட்டுப் புடவைகளை எல்லாம் போட்டு, அங்கே தலைமைச் செயலகம் உருவாவதற்காக யாகம் நடத்திய அந்த இடத்தில்தான் அதைத் தலைகீழாக மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டையொட்டி, கலைஞர் அரசின் சாதனையாக அண்ணா பெயரில் நூலகம் பெரிய அளவுக்கு வளர்ந்து கொண்டு வருகின்றது.

ஒரு கல்லில் பல மாங்காய்கள்

ஒரு கல்லிலே நாங்கள் பல மாங்காய்களை அடித்திருக்கின்றோம். இதுதான் திராவிடர் இயக்கத்தின் சாதனை.தங்கம் தென்னரசு அவர்களையே குடிஅரசு புத்தகங்கள் இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றன.

எனவே நாங்கள் எவ்வளவோ இப்படி சொல்லிக் கொண்டிருக்கலாம். அதைவிட, அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடைய தந்தையார் தலை சிறந்த பகுத்தறிவாளர். திராவிட இன உணர்வினுடைய சின்னம். வரும் பொழுது நான் சொல்லிக் கொண்டு வந்தேன்.

கெட்ட பெயர் எடுப்பது

செம்மொழி மாநாடு நடத்த இருக்கிறோம். அதைப்பற்றி குறை சொல்லுகிறவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் சொல்லுகின்றார்கள். நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை என்று அய்யா அவர்கள் சொன்னார். கெட்ட பெயர் எடுப்பதுதான் என்னுடைய நோக்கம் என்று அய்யா அவர்கள் சொன்னார். அதனால் அவருக்கு அரங்கம் இருக்கிறதா? இவருக்கு அரங்கம் இருக்கிறதா? அவருக்கு அது இருக்கிறதா? இது இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். கலைஞர் அவர்கள் அரசியலில் இருப்பதால், முதல்வராக இருக்கின்ற காரணத்தினாலே ஜனநாயக ரீதியாக விளக்கம் சொல்லுகின்றார். ஆனால் தாய்க் கழகத்தைச் சார்ந்த பெரியாருடைய பாசறையில் வளர்ந்த நாங்கள் யாருக்கும் பதில் சொல்லுவதில்லை. விளம்பரம் கொடுப்ப தில்லை. அப்படி சொன்னால் அவன் வளர்ந்து விடுவான் என்று தந்தை பெரியார் சொல்லுகின்றார்.

அய்யா சொல்லுகிறார். எனக்கு எந்தவிதமான உணர்ச்சிக்கும் இடமில்லை என்று சொல்லுகின்றார்.

மானத்தை சொல்லிக் கொடுத்தவர்

மானத்தையே சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார்பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு, குடிசெய்வார்க் கில்லை பருவம் மடி செய்து மானங் கருதக் கெடும் என்ற குறளால் ஈர்க்கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகிறார்.

எனக்கு இந்த விதமான உணர்ச்சிக்கு இடமில்லாத மானத்தைப் பற்றிக் கவலை இல்லாத திராவிட மக்களிடத்திலே நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று கவலை சிறிதும் இல்லை. (யாரைப் பற்றியும் கவலைப்படாத மக்களிடத்திலே எனக்கென்ன நல்ல பெயர் எடுக்க வேண்டியிருக்கிறது என்று கேட்கின்றார்). அப்படி போலி நல்ல பெயரை வாங்க விரும்பவில்லை. திராவிட இனத்துக்கு தொண்டாற்ற வேண்டும். அதில் முதன்மையாக திராவிட இன இழிவு நீங்க வேண்டும் என்ற ஆசையும் கவலையுமே தவிர, வேறொன்றுமே எனக்குக் கவலையாக இல்லை. என் வாழ்வைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனையும் இல்லை

நாம் பிறக்காத காலத்தில் உருவானது

இதுமாதிரி இந்த குடிஅரசு கருவூலத்தில் பார்த்தீர்களேயானால் நாம் பிறக்காத காலத்திலே தமிழ்நாட்டு அரசியல் பொருளாதார வாழ்க்கை இந்திய வாழ்வு, இந்த நாட்டிலே எப்படிப்பட்ட போராட்டங்கள் நடந்தன என்பதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு குடிஅரசு நம்முடைய உள்ளங்களிலே இல்லங்களிலே இருந்தால்தான் நாம் உணர முடியும்.

ஆகவே இது எல்லா இடங்களுக்கும் பரவ வேண்டும். குடிஅரசு நூல்கள் நூலகத்திற்குப் பரவ வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொன்னார்கள். அதற்காக தலைமுறை தலைமுறையாக நன்றி செலுத்துகிறோம். இது ஏதோ வெளியீட்டாளர் களுக்கு உதவி செய்வதல்ல. மாறாக எல்லோர் உள்ளத்திலும் அய்யா அவர்களுடைய கருத்து வெள்ளம் பாய வேண்டும் என்கின்ற ஆவலால்தான். அய்யா அவர்கள் எவ்வளவு தொலைநோக்கு உள்ளவர் என்பதற்கு உதாரணம் விடாமல் எழுதிக் கொண்டிருந்து தான் ஒருவனே இருந்தாலும், அதை எழுதுவேன், படிப்பேன் என்று சொல்லுவது.

சித்திரபுத்திரன் கட்டுரை

அது மட்டுமல்ல, அவருடைய எழுத்துக்கள் ஆழமான எழுத்துக்கள் என்று தான் நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். கடுமையான எழுத்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருப்போம்.

அய்யா அவர்கள் சித்திரபுத்திரன் என்ற பெயரில் பல கருத்துக்களை எழுதியிருக்கின்றார்கள். அதில் மிக முக்கியமான ஒன்று.

கல்வியின் ரகசியம்

கல்வியின் ரகசியம் என்று ஒரு கட்டுரை அந்தக் காலத்தில் படித்த பார்ப்பனர்களின் எண்ணிக்கை எப்படி அதிகமாக இருந்தது? அவாளின் கல்வியின் ரகசியத்தை அய்யா அவர்கள் வெளிப்படுத்தி யிருப்பார். அவர்கள் தகுதி திறமையினால் வந்தவர்கள் என்ற ஒரு போலித்தனத்தைக் காட்டுகிறார்கள். அது ஒரு பாசாங்குதனம். அதை ரொம்ப அழகாக விளக்கிச் சொல்லியிருக்கின்றார். 1926லேயே ரொம்பத் தெளிவாக விளக்கிச் சொல்லியிருப்பார். தந்தை பெரியார் அவர்கள் எப்படி நினைவூட்டி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய நினைவாற்றலைப் பாருங்கள் 1958லே அய்யா அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையிலே இருக்கின்றார்.

ஜாதி ஒழிப்புப் போராட்டம் அரசியல் சட்டத்தை கொளுத்திய நிலை. அய்யா அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது அய்யா அவர்கள் சொல்லுகின்றார்.

அதை எடுத்து போடுப்பா!

அய்யா சொல்லுகிறார். 1926 என்று நினைக்கின்றேன்.1926 அல்லது 1927 ஆக இருக்கலாம். அய்யா சொல்லுகிறார். சித்திரபுத்திரன் என்ற பெயரில் நான் கல்வியின் ரகசியம் என்று ஒரு கட்டுரையை எழுதி யிருக்கின்றேன்.

அதை எடுத்துப் போடுப்பா என்று சொன்னார்கள். உடனே நாங்கள் குடிஅரசைத் தேடி, சித்திரபுத்திரன் கட்டுரையைக் கண்டுபிடித்தோம்.

அதற்குப் பிறகு சித்திரபுத்திரன் கட்டுரையை தொகுத்து ஒரு புத்தகமாகவே வெளியிட்டோம். நேரத்தின் நெருக்கடியையொட்டி என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். அய்யா அவர்களுடைய நகைச்சுவை உணர்வுகூட எவ்வளவு தொலைநோக்கு உணர்வு கொண்டது என்பதற்கு உதாரணம். தேவநாதனைவிட யாரும் நிரூபிக்க முடியாது. இன்றைக்கு நீங்கள் பார்த்தீர்கள். இந்த காவிகள் படுகிற பாட்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நமது கொள்கையை இதன் மூலம் ஒரு பரிசோதனை கூடம் போல நிரூபித்துக் காட்டியிருக் கின்றார்கள். கடவுள் இல்லை என்பதை நன்றாக நிரூபித்திருக்கின்றார்கள்.

கடவுள் இல்லை என்பதை செயல்முறை மூலம் அர்ச்சகர் தேவநாதனை விட வேறு யாரும் நிரூபிக்க முடியாது (கைதட்டல்).

அது மட்டுமல்ல ஆனந்தாக்கள். ஒரு ஆனந்தாபோய், இன்னொரு ஆனந்தா வந்துவிட்டார். 1926-இல் பிராமண அகராதி வினா விடை என்று போடு கிறார். அதில் ஆசிரமம் என்றால் என்ன என்று எழுதுகின்றார்.

கேள்வி கேட்கும்பொழுது, காந்தர்வ விவாகமும், ராட்சச விவாகமும், நடக்கிறது. (சிரிப்பு)

ஆசிரமம் என்றால்

அதாவது ஆசிரமம் என்றால் காந்தர்வ விவாகம் காதல். ஆரிய முறையில் எட்டுத் திருமண முறை இருக்கிறது. அதில் காந்தர்வ விவாகம் என்பது விரும்பி நடக்கின்ற சங்கதி.

ராட்சச விவாகம் என்று இருக்கின்றது பாருங்கள். மிரட்டிக் கொண்டு போவதுதான் ராட்சச விவாகம். இந்த இரண்டும் நடக்கின்ற இடத்திற்குப் பெயர்தான் ஆசிரமம் என்று அய்யா அவர்கள் எழுதுகின்றார். இன்றைக்கு அது எவ்வளவு சரியாக இருக்கிறது தெளிவாக இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி எத்தனையோ செய்திகளைச் சொல்லிக் கொண்டு போகலாம். எனவே குடிஅரசு என்பது சுயமரியாதை என்ற ஆழ்கடலில் நாம் மூழ்கி எடுக்கின்ற முத்துக்கள்.

ஆழ்கடலில் தோன்றி எடுத்த முத்துக்கள்

எதிர்காலத்திற்கு வேண்டியவையும் அதுதான். சுயமரியாதை முத்துக்கள். இந்த விழாவிலே குடிஅரசு தொகுப்புப்பணிக்காக பாராட்டப்பட்ட தோழர்கள், வர வாய்ப்பில்லாத தோழர்கள் எல்லோரும் இதற்கு ஒத்துழைப்புத் தந்திருக்கின்றீர்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்ற இந்த நேரத்தில் பாராட்டு, வாழ்த்தைத் தெரிவிக்கின்ற இந்த நேரத்தில், 30 குடிஅரசு தொகுதிகள் அடுத்து வர இருக்கின்றன.

30 தொகுதிகள்

எனவே 30 தொகுதிகளில் இதுவரை ஏழு தொகுதிகள் வந்திருக்கின்றன. குடிஅரசு தொகுதிகள் வெளிவர தொடர்ச்சியாக இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இது போன்ற தொகுதிகளை வெளியிட இருக்கின்றோம் என்பதை எடுத்துச் சொல்லி, அருப்புக்கோட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடைய தொகுதி.

அருப்புக்கோட்டை சுயமரியாதை இயக்கப் பாசறையாக இருந்தது. அருப்புக்கோட்டைக்கு அருகில் இருந்த சுக்கிலநத்தம் என்ற ஊரில்தான் தந்தை பெரியார் அவர்கள் முதன் முதலாக சுயமரி யாதை திருமணம்1928 ல் தந்தை பெரியார் அவர் களாலே நடத்தப்பட்டது. எனவே அத்தகைய சுயமரி யாதை ஊரிலிருந்துதான் வருகிறார்கள் என்று நினைக்கின்ற நேரத்திலே அமைச்சர் அவர்களே சொன்னார்.

அடுத்து அருப்புக்கோட்டை

அடுத்து இது போல ஒரு விரிவான வெளியீட்டு விழாவை நாம் அருப்புக்கோட்டையிலேயே ரொம்ப சிறப்பாக நடத்தி விடலாம் என்று அருமையாகச் சொல்லியிருக்கின்றார்கள். அடுத்து நீங்கள் எப்பொழுது தேதி கொடுக்கின்றீர்களோ அப்பொழுது நாமே இதை நடத்தலாம்.

தலைநகரத்திலே இருக்கின்ற மக்களுக்கு மட்டு மல்ல அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளுக்கும் பரவவேண்டும் என்று தாராளமாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

தேன்மாரி பொழிந்தது

எனவே இது சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்தது என்பதைப் போல இது பழம் நழுவி பாலில் விழுந்து பாலும், பழமும் வாயில் நுழைந்த மாதிரி நமக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்று கூறி, அனைவருக்கும் நன்றி கூறி, அமைச்சருக்கும் நன்றி கூறி, நம்முடைய நூலகர் கோவிந்தன் அவர்களைப் பற்றி சிறப்பான கருத்துக்களைச் சொன்னார்கள். அவர்களுக்கும் நன்றி கூறி வந்திருக்கின்ற எல்லோருக் கும் நன்றி கூறி எல்லோரும் குடிஅரசைப் பாருங்கள்.

சுயமரியாதை இயக்கம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றது என்று சொன்னால் இதனுடைய அடித்தளம் ஆழமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா சொன்ன பதில்

1967 லே அண்ணா அவர்கள் வெற்றி பெற்று வந்தவுடனே செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். 1957 லே நீங்கள் தேர்தலிலே நிற்க முடிவெடுத்து 10 ஆண்டு காலத்தில் நீங்கள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றீர்கள் என்று-சொன்னார். உடனே அண்ணா சொன்னார், மன்னிக்க வேண்டும். நீங்கள் கூறுவது போல 10 ஆண்டு காலத்தில் நாங்கள் வரவில்லை. எங்களுடைய நீதிக்கட்சி இருக்கிறதே, அது 1920 லேயே தொடங்கியது. எனவே நீதிக்கட்சியினுடைய பெயரன் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று.

ஆகவே அது சாதாரணமானதல்ல. எனவே அதற்குரிய பாரம்பரியம், அஸ்திவாரம் உண்டு. இது கண்களுக்கு வெளியே தெரியாது என்று சொன்னார்.

அப்படிப்பட்ட அற்புதமான இந்த கட்டடத்தின் அஸ்திவாரம் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் இந்த குடிஅரசு நூல் வெளியீட்டு விழா. குடிஅரசு புத்தகங்கள் வெளியீட்டு விழா என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கும், புத்தகத்தை வாங்கிய உங்களுக்கும் நன்றியைக்கூறி விடை பெறுகிறோம்.

_ இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

2 comments:

Unknown said...

அருமையான வரிகள்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி