ஒரு முறை புரட்சிக் கவிஞர் சென்னையிலே உள்ள ஏ.வி.எம்.. திரைப்பட நிறுவனத்திற்கு வருகை தந்தார்.
எதற்காக வந்தார் என்றால் பராசக்தி படம் அப்பொழுது தயாராகிக் கொண்டிருந்தது. பராசக்தி படத்தில் வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடலை முதல் பாடலாக ஒரு நடனத்திற்கு அமைக்கலாம் என்று ஒரு கருத்து எடுத்துச் சொல்லப்பட்டபோது அந்தப் பாடலை இந்தப் படத்திற்கு உரிமையாக எழுதித் தருவாரா? என்ற கேள்வியும் எழுந்தது.
நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு புரட்சிக் கவிஞரைச் சந்திக்கப் புதுவைக்குச் சென்றேன்.
எங்கே வந்தாய்? என்று கேட்டார்.
பராசக்தி என்ற ஒரு படம் எடுக்கப்படுகின்றது. அந்தப் படத்திலே தாங்கள் எழுதிய வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு என்ற பாடலை எப்படியாவது புகுத்த வேண்டும் என்று எண்ணுகிறோம்; அதற்கு நீங்கள் உரிமை வழங்க வேண்டும். அதனுடைய உரிமையாளர்கள் என்னை நம்பி உங்களிடத்திலே அனுப்பியிருக்கிறார்கள்; அந்த உரிமையைப் பெற்று வர முடியுமென்று என்று கூறினேன்.
புரட்சிக் கவிஞர் தன்னுடைய விழிகளை அகல விரித்து என்னைப் பார்த்தார். நான், அந்தப் பாட லுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் நான் வாங்கித் தருகிறேன் பட உரிமையாளர்களிடத்தில் என்று சொன்னேன்.
உண்மையிலேயே அந்தப் பாட்டை அந்தப் படத்தில் வைக்கப் போகிறார்களா? என்று கேட்டார்.
நான்தான் உரையாடலை எழுதுகிறேன், வைக்கத்தான் கேட்கிறேன் என்று சொன்னேன்.
அப்படி வைப்பதாக இருந்தால் அவர்கள் ஒன்றும் எனக்குப் பணம் தர வேண்டாம். நான் தருகிறேனப்பா பணம்! என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அன்றைக்குச் சொன்னார்.
காரணம் திராவிடநாடு, அல்லது திராவிடர் இயக்கக் கொள்கை என்ற ஒரு சொல் நம்முடைய படங்களிலே அன்றைக்கு வருவதற்கு அவ்வளவு சிரமம் இருந்தது.
எனவேதான் புரட்சிக் கவிஞர் அவர்கள் அந்தப் பாடலை வைப்பதாக இருந்தால் நான் பணம் தரு கிறேன் என்று குறிப்பிட்டார்.
ஏ.வி.எம். கலைக் கூடத்தில் ஒரு நாள்!
பிறகு அந்தப் பாடலுக்கான உரிமையை நான் பெற்றேன். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப் படுகிற நேரத்தில் அவர் சென்னைக்கு ஏ.வி.எம். நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டு வந்தார்.
அவரும் நானும் காரில் ஏ.வி.எம். நிறுவனத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம்.
அதற்கு முன்பு சேலம் மாடர்ன் தியேட்டருக்கு ஒரு படத்திற்கான பாடலை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதிவிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார். இங்கே ஏ.வி.எம். நிறுவனத்திற்குள் நுழைகிற நேரத்தில் சிவப்பு விளக்குப் போடப்பட்டு எங்களுடைய கார் நிறுத்தப்பட்டது.
ஏன்? என்று கேட்டோம்.
இங்கே பாடல் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. கார் ஒலி கேட்டால் அந்த ஒலி உள்ளே ஒலிப்பதிவைப் பாதித்து இந்த ஒலியை அந்த ஒலிப்பதிவுக் கருவி ஈர்த்து விடும். ஆகவே காரை நிறுத்துங்கள் என்று சொன்னார்கள்.
பாரதிதாசன் அவர்களுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. அப்படி என்ன பெரிய ஒலிப்பதிவு கருவி இது? என்று கோபித்தார்.
ஏன் இப்படிக் கோபிக்கிறீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, சேலத்திலே நான் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேனப்பா, கமழ்ந்திடும் பூவிலெல்லாம் என்று அந்தப் பாட்டிலே எழுதினேன்.அந்த ஒலிப்பதிவாளர் சொல்லிவிட்டார், கமழ்ந்திடும் பூவிலெல்லாம் என்ற அந்த வரியை மாற்றுங்கள் என்றார். ஏன் என்று கேட்டேன். கமழ்ந்திடும் என்பதை எங்களுடைய ஒலிப்பதிவு இயந்திரம் பதிவு செய்யாது என்றார். பிறகு நான் யோசித்து அதை மாற்றி குலுங்கிடும் பூவிலெல்லாம் என்று எழுதிக் கொடுத்தேன். கமழ்ந்திடும் என்பதிலே வருகிற அந்த ழகரம் இருக்கிறதே அது அந்த ஒலிப்பதிவிலே சரியாகப் பதியாது என்று சொன்னார்கள். அதனால்தான் எனக்குக் கோபம். என்னுடைய கமழ்ந்திடும் என்ற வார்த்தையையே சரியாகப் பதிவு செய்ய முடியாத இந்தக் கருவி, கார் ஒலியையா பதிவு செய்து விடும்? என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றைக்குச் சொன்னார்கள்.
ஏன் இவைகளைச் சொல்லுகிறேன் என்றால், தாம் சொல்லுகின்ற சொல் தாம் எழுதுகின்ற எழுத்து அதில் ஒரு திருத்தமோ அல்லது அது சரியில்லை; அதைப் பதிவு செய்ய இயலாது என்று கூறவோ உரிமை படைத்தவர்கள் அல்லர் அவர்கள் என்ற அளவுக்கு அத்தகைய துணிச்சலும், அதை எடுத்துச் சொல்லுகின்ற ஆற்றலும், அத்தகைய வீரமும் பொருந்தியவராகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் திகழ்ந்தார்கள்.
கவிஞர்களிடத்திலே தனிப்பட்ட முறையிலே சில குறைபாடுகள் இருக்கலாம். நாம் பாரதிதாசன் என்றது, அவருடைய உயர்ந்த தோற்றம் நான் ஒரு கவிதையிலே அவரைப்பற்றி எழுதியிருப்பதைப்போல நெற்கதிர்க்கட்டு மீசை நெடிய உருவம் வேங்கை போல் நிமிர்ந்திருக்கின்ற அந்தச் சாயல் அந்தக் கம்பீரம் இவைகளை எல்லாம் மறந்துவிட்டு, பாரதிதாசன் என்றதும் அவருடைய இயல்புகள், அவருடைய குணாதிசயங்கள், அவருடைய செயல்கள் இவைகளை எல்லாம் மறந்துவிட்டு நம் முன்னால் நிற்க வேண்டியது.
சிற்றூரும் வரப்பெடுத்த வயலும்
ஆறுதேக்கிய நல்வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறை உழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?
என்று கேட்டாரே அந்தக் கேள்விதான் நம் முன்னால் நிற்க வேண்டுமே அல்லாமல், அன்பில் குறிப்பிட்டதைப்போல பாரதிதாசன் என்கின்ற ஒரு தனி மனிதர் அல்லர்.
பாரதிதாசன் என்பவர் கவிதையின் வடிவம்!
பாரதிதாசன் என்பவர் தமிழன் உருவம்!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்..
வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ்
எங்கள் மூச்சாம்.
என்றாரே அந்தக் கவிதை வடிவம்தான் நம் முன்னால் நிற்க வேண்டுமே அல்லாமல் வேறு அல்ல.
--------------பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடத்திய புரட்சிக் கவிஞர் விழாவில் மானமிகு கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து 1984
0 comments:
Post a Comment