Search This Blog

18.4.10

சிகிச்சை பெற வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்புவதா?


ராஜபக்சே அரசு அனுமதித்திருக்கிறது - பாகிஸ்தானியர்களுக்கு இங்கு சிகிச்சை சிகிச்சை பெற வந்த பிரபாகரனின் வயதான தாயாரை திருப்பி அனுப்புவதா? மத்திய அரசு அதிகாரிகளின் செயல் கண்டனத்திற்கு உரியது உலகமே வெட்கித் தலை குனிய வேண்டியது - தமிழர் தலைவர் உள்ளக் குமுறல் வேதனை அறிக்கை

பிரபாகரனின் தாயார் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டவர். அவர் ராஜபச்சே அனுமதியோடு சிகிச்சை பெற சென்னை வந்தால், மத்திய அரசு அதிகாரிகள் அவரை கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்புவதா? பாகிஸ்தானி யருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கின்றீர்கள். மத்திய அரசின் அதிகாரிகள் பிரபாகரனின் வயதான தாயாரை திருப்பி அனுப்பியது மனிதநேயமற்றது, மாபெரும் கண்டனத்திற்குரியது. உலகமே வெட்கித் தலை குனிய வேண்டிய செயல் என்று தமிழர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரபாகரனின் தாயார் பார்வதி

இலங்கையில், ஈழப் பகுதியில் அதுவும் ராஜபக்சே அரசின் கண்காணிப்பில்முகாமில் வாழ்ந்த விடு-தலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் (அவர் ஓய்வு பெற்ற (யாழ்ப்-பாணத்தில்) அரசு ஊழியர்). இயக்க நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் வாழ்ந்தவர். அவரது துணைவியார் பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் (வயது 81).

பக்கவாதத்தால் தாக்கப்பட்டவர்

ஏற்கெனவே, அவர் பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பக்க வாதத்தினால் தாக்கப்பட்டவர்; தனது கணவர் திரு. வேலுப்பிள்ளை இறந்த செய்தியைக்கூட சரி-வரத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல்-நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவர்.

கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பினர்

இன்று காலை சில செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திப்படி, நேற்றிரவு 10.30 மணிக்கு (16.4.2010) மலேசி-யத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மருத்துவ சிகிச்சையை சென்னையில் பெறுவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், தனக்கு உதவியாக ஒரு நர்சுடன் வந்துள்ள அவரை, சென்னையில் இறங்கி சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது என்று, விமான நிலைய அதிகாரிகள் மறுத்து, அதே விமானத்திலேயே வைத்து அவரை மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பிள்ளார்கள் என்று தெரிய வருகிறது.

முறைப்படி எல்லாம் இருந்துள்ளது

அவரிடம் முறைப்படி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான விசாவும் இருந்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அப்படியிருந்தும் அந்த முதுமையடைந்த தாயை 81 வயதில் பக்கவாதத்திற்கு சென்னையில் சிகிச்சை பெறக்கூட அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பப்படுவதைவிட மனிதாபிமானம் அறவே அற்ற கொடுஞ்செயல் வேறு இருக்க முடியுமா?

மத்திய அரசா? ராஜவிசுவாச அதிகாரிகளா?

இதற்கு யார் பொறுப்பானவர்கள் மத்திய அரசா அல்லது அதில் பணிபுரியும் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாச அதிகாரிகளா என்பது நமக்குப் புரியவில்லை.

யார் இதற்குக் காரணமானாலும் உலகமே வெட்கித் தலைகுனியக் கூடிய, மத்திய அரசின் செயல் கண்டனத்திற்குரிய செயலாகும் இது உண்மையில் அவர்கள் ஆணையிட்டிருப்பார்களானால்!

பாகிஸ்தானியருக்கு இங்கு சிகிச்சை

தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் காசாப்புகளுக்கு கவசமாக உள்ளது என்று குற்றம் சாற்றப்படும் பாகிஸ்-தானத்திலிருந்து நோயாளிகள் இங்கே வந்து அறுவை சிகிச்சை மருத்துவம் செய்து திரும்பவில்லையா?

தீவிரவாதம் இங்கே புகுந்து கொள்ளுமா?

81 வயதான அந்த அம்மையாருக்கு சிகிச்சை அளித்தால் தீவிரவாதம் இங்கே வந்து புகுந்துகொள்ளுமா?

மலேசிய நாடு அவரை ஏற்றுத் தங்க வைத்துக் காட்டும் நிலையில், தமிழ்நாட்டுக்கு தொப்புள்கொடி உறவுள்ள 30 கல் தொலைவில் உள்ள ஈழம், இலங்கையில் இருந்து வந்தவர் மனித உரிமை அற்றவரா?

கலைஞர் அரசுக்கு அல்லவா கெட்ட பெயர்?

எவ்வகையில் இது நியாயம்? நீதி? மத்திய அரசோ, அதன் அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளோ, அல்லது உளவுத் துறையோ இந்தச் செயலைச் செய்தாலும், சென்னை விமான நிலையத்தில் இக்கொடுமை நடந்துள்ளபடியால், தி.மு.க. அரசுக்கும், கலைஞர் ஆட்சிக்கும் அவை சில கெட்டப் பெயரைத் தருவதாக அமையாதா?

ராஜபக்சே அரசு கூட அனுமதித்திருக்கிறது

இலங்கையின் ராஜபக்சே அரசுகூட அந்தத் தாய், மருத்துவ சிகிச்சை பெற, மலேசியா செல்வதற்கு விசா வழங்கி அனுமதித்துள்ள நிலையில், இந்திய அரசு இப்படி இதயமற்ற செயலில் இறங்குவது முறையா?

ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பது எங்கள் அரசின் கடமை என்றும், தீவிரவாதத்தினைத் தான் நாங்கள் எதிர்ப்பவர்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் கூறியிருக்கிறார்களே, அதன்படி பார்த்தால் திருமதி பார்வதி அம்மாள் செய்த குற்றம்தான் என்ன? பிரபாகரனுக்குத் தாயாக இருந்ததுதானா?

உள்ளம் குமுறுகின்றது

நமது உள்ளம் குமுறுகின்றது. மனிதாபிமானம் இப்படி செத்து சுண்ணாம்பாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதானா நம் கடமை? அந்தோ வெட்கம்! வேதனை!! இனியாவது பரிகாரம் தேடட்டும்!

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
17.4.2010

2 comments:

துபாய் ராஜா said...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...

Unknown said...

How can you say Kalaignar is not aware of this? He is so powerfull and influential, he might have stopped it. Does he use it for his family and not for the people?