Search This Blog

28.4.10

கிறித்துவ மதத்திலும் நித்தியானந்தாக்கள்அமெரிக்காவில் பாதிரியாராகப் பணியாற்றி, தமிழ்நாடு திரும்பிய கிறித்துவப் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபாலன்மீதான பாலியல் புகார் உலகம் முழுவதும் நாற்றமெடுக்கிறது. நித்தியானந்தாவைப் பற்றி ஊர் சிரிக்கும் தகவல்கள் புற்றீசல் போலக் கிளம்பியிருக்கும் இந்தக் கால கட்டத்தில் கிறித்துவ மதத்திலும் இதுபோன்ற நித்தியானந்தாக்கள் இருக்கிறார்கள் என்பதற்கான தகவல் இது.

2004-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா நகரில் கிராக்ஸ்டன் தேவாலயத்தில் இவர் பாதிரியாராகப் பணி புரிந்திருக்கிறார். ஒரே நேரத்தில் நான்கு தேவாலயங்களில் பணிபுரிந்துள்ள இவர் சிறுமிகளிடம் தன் பாலியல் சேட்டைகளை நடத்தி வந்திருக்கிறார்.

அந்தக் கால கட்டத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் அமெரிக்கப் பேராயர் விக்டர் பால்கோவிடம் புகார் கூறியுள்ளனர். அதன்பின் அந்தப் பாதிரியார் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகும் சென்னை மயிலையில் உள்ள பேராயருக்கும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரச்சினை வாடிகன் போப் வரை சென்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிமீது நடவடிக்கை மட்டும் எடுக்கப்படவேயில்லை.

அங்கு சுற்றி, இங்கு சுற்றி இப்பொழுது போப்மீதே பழி விழுந்திருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டாம்; காவல் துறைக்கும் கொண்டு போக வேண்டாம் உங்கள் மத்தியிலேயே சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாலியல் தொடர்பான குற்றச் சாற்றுகள் பாதிரியார்கள்மீது வரும் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று போப் சுற்றறிக்கை ஒன்றை விட்டுள்ளார்.

இந்தப் பாதிரியார் ஜோசப் பழனிவேல் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இருந்தும் பாதிரியார்கள் மீது ஏராளமான குற்றச்சாற்றுகள் கிளம்பிய வண்ணமே உள்ளன. போப்புக்கும் இது தெரிந்த ஒன்றுதான்.

அண்மையில் போப் இத்தகைய குற்றம் இழைத்தவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்புக் கொடுத்த செய்தியும் வெளியில் வந்தது.

இதன் பொருள் என்ன? குற்றம் புரிந்தவர்கள் ஒருவரா இருவரா? ஆயிரக்கணக்கில் என்கிறபோது போப் திணறிப் போன நிலையில்தான் இப்படி ஒரு ஒட்டு மொத்தமான கையிருப்பை பாவ மன்னிப்பை அருளியிருக்கிறார் போலும்!

மராட்டிய மாநிலம் விருந்தவன், மஸ்கத்து ஆகிய இடங்களில் ஆசிரமங்களை நடத்திவரும் திரிபாலு மகராஜ் என்னும் மத போதகர் ஒருவர் தாம் கிருஷ்ண பகவானின் மறு அவதாரம் என்று கூறி பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றம் செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டார்.

மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியது. விசாரித்த நீதிபதிகள் வி.என்.ரே; ஜி.டி. நானாவதி ஆகியோர் ஆவர்.

சாமியார் மகராஜ் ஒரு வயது முதிர்ந்த துறவி என்பதையும், உலகம் எங்கும் பல சீடர்கள் அவருக்கு உள்ளனர் என்பதையும் கருத்தில் கொண்டு, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் தவறானது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுபோல் இவ்வகை சாமியார்கள் எல்லாம் தவறான வழியில் ஈடுபட மாட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனையோ மதக் குருமார்கள் இளம் கன்னிகளைத் தம் காம இச்சைக்குப் பயன்படுத்தி உள்ளனர் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

மதங்கள் என்பவை குற்றங்களுக்குச் சுலபமான கழுவாய்களை, பாவ மன்னிப்புகளை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றன. எந்தப் பாவத்திற்கும் பரிகாரம் எல்லா மதங்களிலும் உள்ளன.

இந்த நிலையில் அவர்கள் பாவம் செய்யவோ, பஞ்சமா பாதகங்களில் ஈடுபடவோ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே!

கழுவாய்களும், பரிகாரங்களும் வைத்துக் கொள்ளாத மதம் ஒன்று உண்டா!

மதம் நல்வழி காட்டுகிறது என்பதைவிட தீயவழியில் செல்; அதிலிருந்து வெளிவர அகலமான வேறு ஒரு வழி இருக்கிறது என்று காட்டுவதுதான் மதங்களாக இருக்கின்றன. பக்தியும் மதமும் காட்டும் ஒழுக்கம் இத்தகையதுதான்.

ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தி தனிச் சொத்து என்று தந்தை பெரியார் கூறிய உயர் எண்ணத்தை இந்த இடத்திலே சீர்தூக்கிப் பார்க்கட்டும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும்!

------------------- “விடுதலை” 28-4-2010

4 comments:

ஆட்டையாம்பட்டி அம்பி said...

தமிழ் ஓவியா அவர்களே எப்போதிலிருந்து ஐயரா மாறினீங்க!

கிறித்துவ மதத்திலும் நித்தியானந்தாக்கள் மட்டும் தானா? அவாள்லாம் இல்லையா?

நித்தியானந்தாக்களை ஒட்டு மொத்தமா காலி பண்ணுங்க. எல்லா சாமியாருங்களையும் ஒட்டு மொத்தமா காலி
பண்ணுங்க. கூடவே அவாளையும் சேர்த்துக்குங்க.

தயவு செய்து அவாளையும் சேர்த்து தலைப்பை வையுங்கள்.செய்வீர்களா??

என்றும் அன்புடன்... ஆட்டையாம்பட்டி அம்பி!?

ராஜவம்சம் said...

//மதங்கள் என்பவை குற்றங்களுக்குச் சுலபமான கழுவாய்களை, பாவ மன்னிப்புகளை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றன. எந்தப் பாவத்திற்கும் பரிகாரம் எல்லா மதங்களிலும் உள்ளன.//

எல்லாம் தெரிந்த உங்களுக்கு இஸ்லாத்தைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்
ஏன் என்றால் இஸ்லாத்தில் பாலியல் கொடுமைக்கு மரணதண்டனை.

நன்றி

Karthik Vasudevan said...

கிறிஸ்துவ மதத்தில் நித்யனந்தாவை விட மோசமான சாமியார்கள் உள்ளனர். இப்போது தான் ஐரோப்பிய நாடுகளில் பல வருடங்களாக பாதரியார்கள் அப்பாவி சிறுவர்களை சீரழித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நாடுகளில் இந்த பாதரியார்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள், ஆனால் இந்தியாவில் பாதரியார்கள் மீது நடவதிக்கை எடுக்க முடியுமா? உடனே சிறுபான்மையினர் என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் பார்பனர்களை விட மிக மோசமான மூட நம்பிக்கைகளை மக்களிடையே குறிப்பாக ஏழை மக்களிடம் பரப்பி வருகிறார்கள். ஆரம்பித்தலேயே இதை தடுக்கா விட்டால் இவர்களை கட்டுபடுத்தவே முடியாது.

தனி காட்டு ராஜா said...

யாருக்கும் வெட்கமில்லை ........

http://thanikaatturaja.blogspot.com/2010/04/3.html