Search This Blog

4.4.10

மசூதியை இடிக்க வேண்டாம் என்று எந்த தலைவரும்சொல்லவில்லை!


குற்றவாளிகள் இருவர்


இந்தியத் துணைக்கண்டத்தில் சட்டமும், நீதியும் இருவர் விஷயத்தில் மிகவும் நெளிந்து தண்டால் இட்டுக் கொண்டு இருக்கிறது.

ஒருவர் முன்னாள் இந்தியத் துணைப்பிரதமர் லால்கிஷண் அத்வானி இன்னொருவர் அன்றைய இன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி! அத்வானியைப் பொறுத்தவரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதற்குத் தலைமை தாங்கியவர். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 153பி வகுப்புவாத வெறி உணர்வைப் பரப்புதல் 147 கலவரம் செய்தல்

149 பொது இலக்கை எட்டுவதற்கு ஒரு குற்றவியல் காரியத்தைச் செய்தல்

505 வழிபாட்டுத்தலத்தில் வெவ்வேறு வகுப்பாரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துதல்.

சமூகத்தில் நல்லிணக்கத்தென்றலை உலவவிட வேண்டும் என்று விரும்புகிற எந்த நாகரிக மனிதன் முன்பும் இந்தக் குற்றச்சாற்றுகளுக்கு இலக்காகியுள்ள எந்த மனிதனும் நிற்கத்தகுதி யற்றவரே.

ஒரு கட்சியின் அகில இந்தியத் தலைவ-ராக, மத்திய ஆட்சியின் உள்துறை அமைச்சராக, துணைப்பிரதமராக இருந்த ஒருவர் இத்தகு குற்றச்சாற்றுகள்முன் கைகட்டி, வாய்ப் பொத்தி நிற்கின்றார் என்றால், இதற்காக இந்த நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனும் தலைகுனியவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

இதில் இன்னொரு வெட்கக்கேடு வழக்கினை நாணயத்தோடு, சான்றாண்மையோடு நீதிமன்றத்தில் சந்திக்கும் திராணியின்றி, அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்ட நிலையும் உண்டு. நீதிமன்றத்தின் உரத்த குரலால் மீண்டும் இவர் இணைக்கப்பட்டார் என்பது கடைந்தெடுத்த வெட்கக்கேடு.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கரசேவகர்கள் மத்தியில், இந்தப் பெரிய மனுஷர் என்ன பேசினார் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. செய்தி-யாளர்கள் சாட்சிகளாக இருக்கின்றார்கள். போதும் போதாததற்கு அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் பாபர்மசூதி இடிப்பதற்கு அத்வானியின் பேச்சு தூண்டுகோலாக இருந்தது என்று நீதிமன்றத்தில் சாட்சியாக கூறியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரி சாதாரணமானவர் அல்லர்; பெண் அய்.பி.எஸ்., அதிகாரி, பெயர் அஞ்சுகுப்தா, இப்பொழுது ரா உளவுத் துறையில் பெரிய அதிகாரியாக இருந்துவருகிறார். ரேபரேலி சி.பி.அய். நீதிமன்றத்தில் (26.3.2010) சாட்சியம் அளித்தார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து 150 முதல் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ராம் கதா கஞ்ஜ் மஞ்ச் கட்டடத்தின் மேல்தளம் மேடையாக பாவிக்கப்பட்டு, அங்கிருந்து சங்பரிவார் தலைவர்கள் கரசேவகர்களைத் தூண்டிவிடும் வகையில் பேசிக் கொண்டிருந்தனர். 1992 டிசம்பர் 6ம் தேதி காலை 11 மணிக்கு நான் அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக அங்குசென்றேன்.

பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என அத்வானி உள்ளிட்டதலைவர்கள் திரும்பத் திரும்ப பேசினர். இது கரசேவகர்களைத் தூண்டி விடுவதாக இருந்தது.

அந்த மேடையில் சங்பரிவார் தலைவர்கள் வினய் கட்டியார், உமாபாரதி, சாத்வி ரிதம்பாரா ஆகியோரும் இருந்தனர். அவர்கள் கரசேவகர்களைத் தூண்டும் வகையில் பேசினர்.

மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து வருமாறு என்னை பார்த்து வரச் சொன்னார் அத்வானி. நானும் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தேன். அப்போது கரசேவை தொண்டர்கள் ஆக்ரோஷமாக கட்டடத்தை இடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். சிலர் மசூதியின் கோபுரத்தில் ஏறினர். அவ்வாறு ஏறும்போது கீழே விழுந்து சிலருக்குக் காயமேற்பட்டது. இதை அத்வானியிடம் நான் கூறினேன். இதைக்கேட்டதும் மேடையிலிருந்து அந்த இடத்துக்கு செல்ல அத்வானி விரும்பினார். கோபுரத்தில் ஏறி உள்ளவர்கள் கீழே இறங்குமாறு கேட்டுக் கொள்ள அவர் விரும்பினார்.

இதனால் சர்ச்சைக்குரிய இடத்துக்கு செல்வது குறித்து மூத்த அதிகாரிகளுடன் அத்வானி ஆலோசனை நடத்தினார். தற்போதைய நிலையில் சம்பவ இடத்துக்கு போவது நல்லதல்ல என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். மேலும் அத்வானி அங்கு செல்லும்போது ஏதாவது நடந்து விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்று கூறப்பட்டதால், அத்வானி சம்பவ இடத்துக்குச் செல்லாமல் அருகிலேயே இருந்தார்.

இதையடுத்து உமா பாரதியை சம்பவ இடத்துக்கு அத்வானி அனுப்பினார். உமாபாரதி திரும்பி வந்து கரசேவகர்கள் கைகளில் இரும்புத் தடிகளையும் கடப்பாரை கம்பிகளையும் எடுத்துச் செல்வதாகக் கூறினார்.

மசூதி இடிக்கப்படுவதை தடுக்க நான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு போலீஸ் படையை அனுப்புமாறு கூறினேன். ஆனால், எனது பேச்சு எடுப்படவில்லை. மசூதி இடிக்கப்படுவதைப் பார்த்து மேடையில் உள்ள தலைவர்களின் பேச்சு அமைந்திருந்தது.


அஞ்சுகுப்தா அய்.பி.எஸ்

முதல் கோபுரம் பகல் 1.45 மணிக்கு இடித்துத் தள்ளப்பட்டது. கடைசி கோபுரம் 4 மணிக்கு இடித்துத் தள்ளப்பட்டது.

ரகசிய ஆலோசனை: உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கல்யாண்சிங். மாவட்ட ஆட்சியர், போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று அத்வானி என்னிடம் கேட்டார். முதல்வருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய என்னால் இயலாது என்பதை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் மாவட்ட ஆட்சியர், போலீஸ் கண்காணிப்பாளருடன் பேச ஏற்பாடு செய்தேன். அவர்கள் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்தனர். அவர்கள் அத்வானி மற்றும் பிற தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் அத்வானி முதல்வர் கல்யாண்சிங்குடன் தொலைபேசியில் பேசினார். ஆனால் என்ன பேசினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

அங்கிருந்த போலீஸ் டிஜிபி தீட்சித், பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டினர்.

கரசேவகர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு உங்களது பெயர்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று அவர்களிடம் அவர் கூறினார்.

பிற்பகல் 2.30 மணிக்கு மசூதியைச் சுற்றி உள்ள பகுதிகளில் புகை மண்ட-லம் தெரிந்தது. முஸ்லிம்கள் தங்களது வீடுகளுக்கு தாங்களே தீவைத்துக் கொண்டதாக உமா பாரதி கூறினார். மசூதி பகுதியில் பாதுகாப்பு போதிய அளவில் இல்லை. ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்பி வரும் போலீஸ் ஜீப்களை மட்டுமே கரசேவகர்கள் அந்த பகுதிக்குள் அனுமதித்தனர்.

மசூதியின் கோபுரங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின் உமாபாரதியும், ரிதம்பாராவும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இனிப்புகளையும் வழங்கினர். அவர்கள் அத்வானிக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கும் வாழ்த்துத் தெரிவித்தனர். எந்த தலைவரும் மசூதியை இடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என்றார் அஞ்சு குப்தா. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி உள்பட சங்பரிவார் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என விரிவாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

குப்தா சாட்சியம் அளித்த பின்னர் அவரிடம், குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.

(ஆதாரம் தினமணி 27.3.2010)

18 ஆண்டுகள் ஓடிவிட்டபிறகும், மிகப் பெரிய குற்றத்தைச் செய்த ஒருவர் தண்டனை அளிக்கப்படாமல் ராஜநடை போட்டுத் திரிகிறார் என்றால் இந்தியாவின் நிருவாகமும், சட்டமும், நீதியும் எந்த இலட்சணத்தில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது பெரிய மனுஷர் தான் நரேந்திர மோடி பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பார்கள். அந்த நிலைதான் இன்றைக்கு மோ(ச)டியைப் பொறுத்தவரை.

கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசு பயங்கரவாதமாகக் கொம்பு சீவி விடப்பட்ட வன்முறை காலா காலத்திற்கும் இந்தியாவைத் தலைதூக்காமல் செய்துவிட்ட துயரம் கொப்பளிக்கும் பேரிடர் ஆகும்.

ஆட்சி அதிகாரம் தம் கையில் இருந்ததால் இந்தப் பெரிய மனுஷர் எந்தவித விசாரணைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் தந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தார்.

நவீன நீரோமன்னன் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும்கூட கொஞ்சம் கூட கூச்சப்படவில்லை இந்த ஆசாமி.

வெளிநாடுகளுக்குச் செல்ல இவர் ஆயத்தமான போது இவருக்கு விசா வழங்க மறுத்தது என்பதைக்கூட உடம்பில் ஒட்டிக் கொண்ட தூசுகளைத் தட்டி விட்டது போலத்தான் நடந்து கொண்டார். பல வழக்குகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி படுகுழிக்குள் தள்ளிய நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈசான் ஜாஃப்ரி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மூலம் முதல் அமைச்சர் மோடி சட்டத்தின்வெளிச்சத்துக்கு இழுத்துக்கொண்டு வரப்பட்டுள்ளார்.

அகமதாபாத் நகரின் முக்கிய பகுதியான குல்பர்கா சொசைட்டி என்னும் இடத்தில் தான் இந்தப்படு-கொலை நடந்தது. 69 பேர் துடிக்கத் துடிக்கப்படுகொலை செய்யப்பட்-டனர்.

இந்த வழக்கில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை என்பது பயங்கரமானது.

படுகொலை செய்யப்பட்ட ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரிஎன்ற பெண்மணி மட்டும் தன்னந்தனியான வீராங்கனையாக இருந்து, அதிகார மலைகளோடு மோதினார்; மோதிக் கொண்டே இருந்தார்.

கடைசியில் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். இப்பொழுது விடிவு காலம் ஏற்படும்என்ற நம்-பிக்கை ஒளிக்கீற்றுப் படர்ந்திருக்-கிறது.

ஆர்.கே. இராகவன் தலைமையில் 5பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து, முதல் அமைச்சர் மோடி, அவரது அமைச்சரவையினர் உட்பட அனைத்து அதிகாரிகளையும் விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

சிறப்புப் புலனாய்வுக்குழு முன் மார்ச்சு 21 அன்று ஆஜராக வேண்டும் என்று மோடிக்கு சம்மன், அனுப்பப்பட்டது. விராதி வீரரான மோடி விசாரணைக்குச் செல்லவில்லை.

அடுத்த கட்டமாக வேறு வழியின்றி விசாரணைக்குச் சென்றார் (27.3.2010) புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரி மல்ஹோத்ரா தான் மோடியை விசாரித்துள்ளார்.

பகலில் 5 மணி நேரமும், இரவில் 4 மணிநேரமும் விசாரிக்கப்பட்டுள்-ளார். முதல் அமைச்சர் ஒருவரிடம் சி.பி.அய். இவ்வளவு நேரம் விசாரித்தது என்பது இதுதான் முதல் தடவை என்று சி.பி.அய். வட்டாரம் தெரிவித்-துள்ளது.

தெகல்ஹா ஊடகம் குஜராத் கலவரத்தின் பின்னணியில் முதல் அமைச்சர் நரேந்திரமோடி மிக வலுவாக இருந்தார் என்பதை வீடியோவில் பதிவு செய்து இருட்டில் இருந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

ஆளும் பிஜேபி வட்டாரங்களைச் சேர்ந்தவர்களின் வாய்களிலிருந்து நடந்த சம்பவங்களின் உண்மை-களைப் பிடுங்கிக் கொண்டு வந்து விட்டது.

பாபு பஜ்ரங்கி என்ற பஜ்ரங் தலைவர் கூறியுள்ளார். கோத்ரா கலவரங்கள் நடந்தபோது எல்லாவற்றையும் கச்சிதமாக மோடி செய்து முடித்தார்; முதல்வர் மோடியின் ஆசியின்றி யார்தான் இவ்வளவையும் செய்து முடித்திருக்க முடியும்? என்று கூறியுள்ளார்.

ஹரேஷ்பட் என்ற இன்னொரு பஜ்ரங்தள் தலைவர்கூறியது மோடியின் முகத்திரையைக் கிழிக்கக்கூடியதாகும்.

மூன்று நாள்களில்அனைத்தையும் முடிந்து விடுங்கள்; அதற்கு மேல் காலஅவகாசம் கேட்காதீர்கள் என்று முதல் அமைச்சர் மோடி உத்தரவு விட்டார் என்பதையெல்லாம் டெகல்கா வெளியிட்டு விட்டதே!

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளி-களும், குஜராத் மதக்கலவரத்திற்குத் தூண்டுதலான குற்றவாளிகளும் சட்டரீதியாக தண்டிக்கப்படாவிட்டால், இந்தியாவில் சட்ட ஆட்சி என்பது இல்லவே இல்லை என்று உறுதிப்பட்டு விடும். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற ஓர் அராஜக நிலைதான் நிர்வாணக் கூத்தாடும் எச்சரிக்கை!

----------------- 3-4-2010 “விடுதலை” ஞாயிறு மலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: