Search This Blog

22.4.10

இந்தியைத் திணிப்பது ஏன்?எதற்காக?

இந்தி செய்த உதவி!

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் (ராஜாஜி) சென்னை மாகாணத்தில் கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நாள் தான் இந்நாள் (1938).

சென்னை மாகாணத்தின் பிரதம அமைச்சர் என்ற முறையில், 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடிய கையோடு கட்டாய இந்தியையும் திணித்தார்.

இந்தியைப் புகுத்தியதற்குப் பிரதமர் ஆச்சாரியார் சொன்ன காரணம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

1926 ஆம் ஆண்டிலேயே இந்தியின் இரகசியம்பற்றி எழுதினார் தந்தை பெரியார். தமிழிற்குத் துரோகமும் இந்தியின் இரகசியமும் (குடிஅரசு, 7.3.1926) என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.

1931 இல் நன்னிலத்தில் கூடிய நன்னிலம் வட்டார சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழைய புராணக் கதை களைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வட மொழி முதலிய மொழிகளை நமது மக்கள் படிக்கும்படிச் செய்வது, பார்ப்பனீயத்துக்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகும் என்று 1931 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கப்பட்டது. அதைத்தான் 1938 இலும் லயோலா கல்லூரியிலும் ஆச்சாரியார் எதிரொலிக்கிறார்.

பார்ப்பனர்களின் உள்ளத்து ஆழத்தில் பதுங்கிக் கிடக்கும் நச்சுப் பொருள் எவ்வளவுத் தொலைநோக்கோடு துல்லியமாகக் கண்-டறிந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்பொழுது மிகுந்த ஆச்சரியமாகவே இருக்கிறது.

ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பும், அதனால் ஏற்பட்ட எதிர்ப்பும்தான் தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்களால் முழங்கச் செய்தது.

கட்சிகளை மறந்து ஜாதி மதங்களைத் துறந்து தமிழர்கள் என்ற உணர்வுடன் தந்தை பெரியார் தலைமையில் தமிழர்களை ஓரணியில் திரட்டியது ஆச்சாரியாரின் இந்தித் திணிப்புதான்.

இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், தந்தை பெரியார் தலைமை தாங்கிப் போர்க்குரல் எழுப்பி, இனமான, மொழிமான, தன்மான எழுச்சிப் பேரலையைத் தமிழர்கள் மத்தியில் எழுப்பியதன் விளைவுதான் பெண்கள் சென்னையில் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைக் கொடுக்கும் உணர்வை ஊட்டியது (13.11.1938).

இறுதி வெற்றி தமிழர்களுக்கே. கட்டாய இந்தி தொலைந்தது (21.2.1940).

எப்படியோ ஆச்சாரியாரின் சமஸ்கிருதத்தின் குட்டியான இந்தித் திணிப்பு தமிழர்கள் தம் தலைவரை அடையாளங் காணவும், தமிழர்கள் மத்தியில் இன உணர்வு வெடித்துக் கிளம்பவும் பேருதவி செய்தது என்பது மட்டும் உண்மை!

--------------------------மயிலாடன் அவர்கள் 21-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: