Search This Blog

16.4.10

அண்ணாவை கோவிலுக்குள் விட மறுத்தது ஏன்?


திவானின் விருந்தினராகச் சென்ற அண்ணாவை கோவிலுக்குள் விட மறுத்தது ஏன்?
சென்னை பல்கலை.யில் தமிழர் தலைவர் விளக்கவுரை

திவான் விருந்தினராகச் சென்ற அண்ணா அவர்களை கோவிலுக்குள் விட நம்பூதிரி மறுத்து விட்டார் என்று அண்ணா கூறிய சம்பவத்தை எடுத்து விளக்கிக் கூறினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பல்கலைக் கழகத்தில் 31.3.2010 அன்று மாலை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சி; மனநிறைவு

மிகுந்த மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்குமான இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தினுடைய தமிழ் இலக்கியத் துறையால் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளை சார்பாக நடைபெறக் கூடிய ஓர் அற்புதமான சிந்தனைகளை நம் உள்ளத்திலே ஏற்படுத்தி, ஒரு சிறப்பான திருப்பத்தை நாட்டிலே உருவாக்கிய தனிப்பெரும் சுயசிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்களுடைய பங்கு, தமிழகத்தினுடைய வரலாற்றில் எவ்வளவு சிறப்பானது என்பதைத் தகுதி மிக்க ஒருவர் நம்முடைய இனமானப் பேராசிரியர், தமிழக நிதியமைச்சர் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டு, தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையிலே இன்றைக்கு வந்து சிறப்பாக இன்னும் சற்று நேரத்திலே தந்தை பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவினை நிகழ்த்த இருக்கின்றார்கள்.

பல்கலைக் கழகப் பதிவாளர் சரவணன்

சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய பதிவாளர் சரவணன் அவர்களே! இந்த அருமையான வாய்ப்பை ஆண்டுதோறும் உருவாக்குவதற்குக் காரணமாக இருந்து திராவிடர் கழகம் இப்படி ஓர் அறக்கட்டளையை சென்னைப் பல்கலைக் கழகத்திலே ஏற்படுத்த வேண்டும் என்பதை வற்புறுத்தி, எங்களை எல்லாம் அதற்கு ஈடுகொடுக்கச் செய்த நம்முடைய அருமை தமிழ்த்துறையினுடைய தலைவர் பேராசிரியர் அரசு அவர்களே! மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள பேராசிரியப் பெருமக்களே! மாணவச் செல்வங்களே! சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருக்கக்கூடிய அருமை நண்பர்களே! ஊடகத் தோழர்களே! உங்கள் எல்லோருக்கும் அன்பான மாலை வணக்கம்.

இந்த நிகழ்ச்சியிலே பேராசிரியர் அவர்களுடைய சிறப்பான உரை எப்பொழுதும் தனித்தன்மையோடு இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு உரையாக இருக்கும்.

எதிர்பாராத விதமாக...

எதிர்பாராதவிதமாக இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை என்று பல்கலைக் கழகத்தினுடைய தமிழ்த்துறையினர் என் பெயரைப் போட்டிருக்கிறார்கள்.

பேராசிரியர் அவர்களுடைய உரைக்கு முன்னாலே ஒரு நீண்ட உரையோ, மற்றதோ தேவையில்லை. பெரியாரின் பெருமைகளை எல்லாம் பேசாத நாள்கள் பிறவா நாள்களே என்று கருதி எந்த நிகழ்ச்சியானாலும் தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டினைக் குறிப்பிடாமல் அவர்களுடைய உரை இருக்காது என்ற பெருமை தமிழ்நாட்டிலே ஒருவருக்கு உண்டென்றால் அவர்தான் நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

பேராசிரியரின் பொதுத்தொண்டு

அவருடைய பொதுத்தொண்டு நீண்ட நெடிய பொதுத்தொண்டு அதுவும் திராவிடர் இயக்கத்தையே மய்யமாக வைத்திருக்கின்ற பொதுத்தொண்டு.

நாங்கள் எல்லாம் மாணவப் பருவத்திலே இருந்த நேரத்திலேயே தொடங்கிய அந்தத் தொண்டு, இன்றைக்கும் அவர்கள் அதே புள்ளிகளில் நின்று எந்தவிதமான மாறுதல்கள் அங்கொன்று, இங்கொன்று என்று இல்லாத ஒரே நிலையிலே தெளிவாக இருந்து ஆழமாக சிந்தித்து, தமிழர்கள் தமிழர்களாக இல்லையே என்ற அந்த ஆதங்கத்தின் காரணமாக தமிழா தமிழனாக இரு! தமிழ் மொழிக்குரிய இடத்தை பெறு! சுயமரியாதையை இழக்காதே! என்பதை எல்லாம் மிகத் தெளிவாக எந்த நிகழ்வாக இருந்தாலும் எடுத்துச்சொல்லக்கூடியவர்.

பேராசிரியரைப் பற்றி இந்த அவைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் முறைப்படிசொல்ல வேண்டுமானால் ஓரிரு செய்திகளை மாத்திரம் நான் சுருக்கமாக இங்கே சொல்ல விழைகிறேன்.

பேராசிரியரைப் பற்றி புரட்சிக் கவிஞர்

நீண்ட நாள்களுக்கு முன்னால் 1945 லேயே நம்முடைய பேராசிரியர் அவர்களைப்பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சில வரிகளிலே மிக அருமையாக படம் பிடித்துக்காட்டிருக்கிறார்.

பெரியாரைப் பற்றி பேராசிரியர் சொல்ல இருக்கிறார். ஆகவே அவருடைய முன்னுரைக்கு நான் எதையுமே அதிகமாக வைக்காமல் சமுதாய மாற்றம் எப்படிப்பட்டது என்பதை மாத்திரம் ஒரே ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்.

தந்தை பெரியார் அவர்களுடைய அறக் கட்டளையிலே தகுதிமிக்க ஒருவரை அழைத்திருக்கிறோம் அவர்கள் பேச இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நம்முடைய இனமானப் பேராசிரியர் நிதியமைச்சர் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னாலே 1945 லே நான்கு வரி கவிதையிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் திராவிட இயக்கத்துக் கவிஞர் எழுதியிருக்கின்றார்கள்.

தேசியக் கவிஞர் என்று மற்றவர்கள் பாரதியாரைச் சொல்லுவார்கள். ஆனால் அதைவிட இவர் உலகக் கவிஞர் என்று சொல்லக் கூடிய அளவுக்கு மானிடத்தை மய்யப்படுத்திப் பாடியிருக்கின்ற கவிஞர். அப்படிப்பட்ட புரட்சிக் கவிஞர்அவர்கள் பேராசிரியரைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

அந்த அறிமுகம் ஒன்றே போதும்

அது ஒன்றே இந்த அவையினுடைய அறிமுகம் என்பதற்குப் போதுமானது. பன்மொழியில் பல்கலையில் ஆய்வும் பழந்தமிழாம் பொன்மொழியை தம் உயிராய்ப் போற்றும் பெரும் மாண்பும் இன்மொழியில் நாட்டின் இருளகற்றும் நற்றிறனும் என்மொழிவேன் அன்பழகர் இன்நாட்டின் பொன்னொளியே என்று பாடியிருக்கிறார் புரட்சிக் கவிஞர் அவர்கள் (கைதட்டல்). எனவே அத்தகைய பொன்னொளி இன்றைக்கு இந்தப் பல்கலைக் கழகத்திலே நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. தலைதாழ்ந்த நன்றி

அதற்காக நாங்கள் திராவிடர் கழகத்தின் சார்பிலே பல்கலைக் கழகத்தினுடைய அறக்கட்டளையை நிறுவியவன் என்ற முறையிலே அவர்களுக்கு எங்களுடைய தலைதாழ்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்து நண்பர்களே! அய்யா அவர்கள் எவ்வளவு பெரிய மாறுதல்களை உருவாக்கினார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல் மாற்றங்கள் சுலபமாகப் போராட்டங்களிலே கிடைத்துவிடும். அந்த போராட்டங்கள் வெளி உலகப் போராட்டங்கள்.

ஒவ்வொருவருடைய மனதிலும் மாற்றம்

ஆனால் சமுதாய மாற்றங்கள் என்று சொன்னால் அது வெளி உலகத்திலிருந்து மட்டும் போராடக் கூடியது அல்ல. மாறாக ஒவ்வொருவருடைய மனதுக்குள்ளாக, சிந்தனைக்குள்ளாக புகுந்து போராடக் கூடிய மிகப் பெரிய நிலை.

மண்டல் கமிசன் அறிக்கையிலே மிக அழகாக மண்டல் அவர்கள் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் என்பதிருக்கிறதே தெருக்களிலே அந்த போராட்டங்கள் நடைபெற்றது என்பதை விட, அதாவது மக்களுடைய சிந்தனையிலே ஒரு பெரிய போராட்டத்தை பெரியார் அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள்.

எனவே அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பை இன்றைக்கு அவர்கள் பெற்றதினுடைய விளைவுதான் ஒரு நல்ல ஆட்சிக்கு அவர்கள் நிதியமைச்சராக இருக்கிறார்கள். சிறப்பான வரவு செலவு திட்டம்

அதுவும் ஒரு சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை ஏறத்தாழ இரண்டே கால் மணி நேரம் அவர்கள் நின்று, படித்து, எடுத்துச் சொல்லி இன்றைக்கு அதிலே எந்தக் குறையும் யாரும் சுலபமாக சொல்லி விடமுடியாத அளவிற்கு அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவ்வளவும் மக்கள் நலத்திட்டங்கள், சமுதாய நலத்திட்டங்கள்.

சமுதாய மேம்பாட்டிற்கு கலைஞருடைய அரசு எவ்வளவு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது என்பதை எல்லாம் நாம் அறிந்தவர்கள். ஒன்று மிக முக்கியம். மற்ற திட்டங்கள், பாடங்கள் பள்ளிக்கூடங்கள், அணைகள், கட்டடங்கள் என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும், மனதுக்குள் இருக்கிற போராட்டம் என்று சொல்லுகின்ற நேரத்திலே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற ஜாதி ஒழிப்பிலே தீண்டாமை ஒழிப்புக் கொள்கையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சிறப்பான ஒரு சட்டத்தை உருவாக்கி அந்த சட்டத்தின் மூலமாக இதுவரையில் கருவறையின் உள்ளே நுழைய முடியாத அத்துணைப் பேரும் உள்ளே நுழையலாம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அதற்குரிய தகுதியைப் பெற்றவர்கள் அதற்குரிய பயிற்சியைப் பெற்றவர்கள் நுழையலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் இந்த நாட்டிலே நடைபெற்றிருக்கிறதென்றால் அதுதான் பெரியார் கண்ட புரட்சி. அதுதான் சமுதாயத்திலே ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய மாற்றங்கள்.

திராவிட இயக்கம் பாடுபட்டதின் விளைவு

அந்த மாற்றங்கள் எல்லாம் பேராசிரியர் போன்றவர்கள், அறிஞர் அண்ணா அவர்கள் அந்த பாரம்பரியத்திலே வரிசையாக வந்து கலைஞர் என்று இப்படி எல்லோரும் திராவிடர் இயக்கத்திலே பாடுபட்டதினுடைய விளைவாகத்தான் தந்தை பெரியார், அவருடைய சிந்தனைகள் வெகுவேகமாக வந்திருக்கின்றன.

இன்றைக்கு நீதிமன்றத்திலே அந்த சட்டம் இருக்கலாம். ஆனால் எப்படியும் அதை தடுத்துவிடக் கூடிய ஆற்றல் சட்டத்திற்கும் கிடையாது. சமுதாயத்திற்கு இன்றைக்கும் கிடையாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வலிமை வாய்ந்ததாக அது உருவாக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்

அந்த வகையிலே ஒரே ஒரு நிகழ்ச்சி. எந்த அளவிற்கு அந்த சமுதாய மாற்றம் பெருமைக்குரியதாக வந்திருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதைப் பற்றி நீண்ட நெடுங்காலமாக திராவிடர் இயக்க முன்னோடியான டி.எம்.நாயர் அவர்கள், பார்ப்பன அல்லாதார் இயக்கத்தை உருவாக்கிய தலைவர். சர்.பிட்டி.தியாகராயர் முக்கியமோ, அது போல டி.எம்.நாயர் அவர்கள் முக்கியமானவர்கள்.

டி.எம்.நாயர் அவர்கள் ஆற்றிய ஸ்பர்டாங்ரோடு என்ற சிறப்பு மிகுந்த உரையிலே அன்றைக்குச் சொல்லுகிறார். நாங்கள் எல்லாம் கோவிலுக்குள்ளே போக முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழல் இருந்தது.

அதை எல்லாம் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதற்குத் தான் இந்த இயக்கம் இருக்கின்றது என்று. அந்த முறையிலே 1916, 1917 களிலே சொன்னார்கள். படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு இந்த மாறுதலைத் தந்திருக்கிறது. எவ்வளவு பெரிய மாறுதல் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

1945இல் குடந்தையில் அண்ணா பேச்சு

இன்னொன்று திராவிடர் நிலை என்பதைப்பற்றி 1945 லே குடந்தையிலே அண்ணா அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்.

அந்தக் காலத்தில் அண்ணா அவர்களுடைய உரை தொகுத்து புத்தகங்களாக வருவதில்லை. அப்பொழுது மாணவர் பதிப்பகம் என்ற பெயராலே டி.எம்.பார்த்தசாரதி அவர்கள் முயற்சி எடுத்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்கள்.

அப்படி வெளியிட்ட நேரத்திலே அதிலே ஒரு செய்தி. அண்ணா அவர்கள் ஏறத்தாழ இரண்டு அல்லது இரண்டரை மணிநேரம் குடந்தையிலே ஆற்றிய உரையிலே இறுதியிலே முடிக்கப் போகும்பொழுது ஒரு செய்தியை மிக அழகாகச் சொல்லுகிறார்.

அண்ணா கூறிய ஒரு சம்பவம்

சமுதாய மாற்றம் என்பது எவ்வளவு பெரிய அளவுக்கு இன்றைக்கு எளிதாக வந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்னாலே எவ்வளவு சங்கடத்தோடு இருந்தது என்பதற்கு அண்ணா அவர்கள் ஒரு சாட்சியத்தை, ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறார்கள், அந்தப் பொதுக்கூட்டத்திலே.

அண்ணா பேசுகிறார் கேட்போம். மதத்துறையிலே மக்கள் மறுமலர்ச்சி பெற உழைக்க வேண்டும். இது சமயம் மத மமதை ஒன்று என் நினைவிற்கு வருகிறது.

கொச்சி திவான் வீட்டில் அண்ணா

1937ஆம் ஆண்டு நமது சர்.சண்முகம் (ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டுவிழா) கொச்சித் திவானாக கொலு வீற்றிருந்தபொழுது நடந்த சம்பவம் அது. நானும் இன்னும் சிலரும் (அண்ணா அவர்களும், மற்ற நண்பர்களும்) கொச்சிக்குப் போய் கோவை கோமான் வீட்டில் தங்கினோம். (திவான் வீட்டிலே தங்கியிருக்கின்றார்கள்).

மாலையில் அவருடைய மோட்டார் காரிலேயே கோயிலுக்குச் சென்றோம். (குருவாயூர் கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதில் என்ன சிறப்பு என்பதற்காகப் பார்க்கச் செல்லுகிறார்கள்.) அவர் (திவான்) உடன் வரவில்லை. எங்களை கோவிலுக்குள்ளே விட நம்பூதிரி மறுத்தார். நாங்கள் திவான் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறி, சலுகை பெற முயன்றோம். (திவான் வீட்டு விருந்தினர் என்று சொன்னால் உடனே விடுவார்கள் என்பதற்காக சொன்னோம்)

செட்டிமாரை கோவிலுக்குள் விடுவதில்லை

அதற்கு நம்பூதிரி திவான் வீட்டிற்கு வந்திருப்பதால்தான் எங்களை கோவிலுக்குள் விட மறுத்ததாகவும் திவான், இந்த வகுப்பாரை செட்டிமாரை கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறினார்.

ஏனென்றால் அவர் வாணியச் செட்டியார். அவர் சூத்திரர். அவர் திவானாக இருக்கலாம். திவான் என்று சொன்னால் முதலமைச்சர் பிரதம அமைச்சர் மாதிரி நிருவாகத்தை நடத்தக் கூடியவர். அவர்களுடைய விருந்தினர்கள் இவர்கள். திவான் வீட்டிற்கு வந்ததினாலேதான் விடவில்லை என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றார்.

கோயிலுக்குச் செல்லும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்

அவர் கீழ் ஜாதிக்காரர். ஆகவே கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறினார். அண்ணா விடவில்லை. விவாதம் பண்ணுகிறார்கள், நாங்கள் அவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர். மேலும் எங்கள் ஊரில் கோயிலுக்குள் செல்லும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். நாங்கள் என்று கூறி உள்ளே போக முயன்றோம்.

(அப்படியாவது அனுமதி கிடைக்கும் என்பதற்காக)

அதற்கு நம்பூதிரி, திவான் வீட்டில் விருந்துண்ணும் நீங்கள் அவர் ஜாதி இல்லையானால் அதைவிட மட்டமான ஜாதியாராகத்தான் இருப்பீர்கள்; இருக்க வேண்டும். எனவேதான் அவர் வீட்டில் தங்கினீர்கள் என்று உள்ளே விடவில்லை தோழர்களே! ஜாதித் திமிரின் ஜம்பத்தை, மதத்தின் மமதையைப் பாருங்கள்.

அறிஞன் ஆலயம் நுழைய அருகதை....! அரச குடும்பத்தின் ஆதரவைப் பெற்ற அறிஞன் ஆலயம் நுழைய அருகதை அற்றவன் என்ன கேவலம்? இத்தகைய இந்து மதம் வேண்டாம் நமக்கு, இவைகளை ஒழிக்க வேண்டாமா? என்று குடந்தையிலே 1945 லே அண்ணா அவர்கள் சொன்னார். ஆனால் இன்றைக்கு திவான் வீட்டு விருந்தினர்கள் அல்ல. தெருவிலே இருக்கக் கூடிய சாதாரண ஆதிதிராவிட தோழன் கூட அவன் பயிற்சி பெற்று உள்ளே போகலாம் என்று செய்த ஓர் ஆட்சியின் சார்பாக நம்முடைய நிதியமைச்சர் வந்திருக்கிறார் என்று சொன்னால் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். பெரியாருடைய கொள்கைக்குத் தோல்வி இல்லை என்ற சமுதாய மாற்றம், சமுதாயப் புரட்சி, அறிவுப் புரட்சி ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு துளி பேனா மை மூலமாக, முதலமைச்சர் போட்ட ஆணையின் மூலமாக, அது வந்திருக்கிறதென்றால், இந்த 60, 70 ஆண்டுகளிலே எப்படிப்பட்ட சமுதாய மாற்றம் மலர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

அதற்கெல்லாம் காரணம் பேராசிரியர் போன்றவர்களுடைய இடையறாத பிரச்சாரம், உழைப்பு, கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னது.

தமிழகத்தின் முதல் பேராசிரியர் அதனால்தான் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும் பொழுது, பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று. இந்த பேராசிரியர் பாரம்பரியம் எதிலிருந்து வருகிறதென்றால் பெரியாரிடத்திலே இருந்து வருகிறது. அண்ணா சொன்னார். தமிழகத்தினுடைய முதல் பேராசிரியரின் வகுப்பு மாலை நேரத்திலே தொடங்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னாலே தொடங்கும் என்று சொன்னார்கள்.

எனவே அத்தகைய முறையிலேயும் பேராசிரியராக இருந்து, வகுப்புகளிலும் பேராசிரியராக இருந்து அன்றும், இன்றும், என்றும் நமக்கெல்லாம் பேராசிரியராக இருக்கக்கூடிய இனமானப் பேராசிரியர் அவர்கள் இப்பொழுது இந்த உரையை நிகழ்த்த வேண்டும் என்று உங்களைப் போலவே அன்போடு கேட்டுக்கொண்டு இதைவிட மீறுவதற்கு நான் தயாராக இல்லை. காரணம் அவர் பேராசிரியர். நான் வெறும் ஆசிரியர் என்று சொல்லி முடிக்கிறேன். வணக்கம். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------- “விடுதலை” 14-4-2010

4 comments:

Anonymous said...

தமிழ் ஓவியா மற்றும் திரு மயிலாடன் அவர்களுக்கு,
கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் அடுத்த பதிவை எழுதுகிறீரே.இது உமக்கு கேவலமாக இல்லை.சரி மீண்டும் கேட்கிறேன்.
1.பார்ப்பன வருடப்பிறப்பு இது என்கிறீர்.எனில் தமிழ் வருடம் எது?தமிழ் மாதம் எது?அவை எத்தனை?அவற்றிற்கு பெயர் உண்டா?பெயர் வந்த காரணம் என்ன? உண்மையாக தெரிந்துகொள்ளதான் கேட்கிறேன் கூறுங்கள் தமிழ் ஓவியா.
2.செல்வி ஜெயலலிதா மற்றும் திரு வைகோ இவர்கள் சித்திரை மாதம் 1ம் தேதியை தமிழ் வருடப்பிறப்பு நாளாக கருதி(இதுவரை மக்களால் கடைபிடிக்கின்ற முறைதான்)மக்களுக்கு வாழ்த்துச் செய்தி கூறியதால் அவர்களை சாடியுள்ளீர்கள்.சரி...அந்த சித்திரை,வைகாசி...(அதாவது நீங்கள் இவைகளை தமிழ் மாதம் அல்ல என்கிறீர்)இவ்வரிசையில் உள்ள தை மாதம் 1ம் தேதியை தமிழ் வருடப்பிறப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.உங்கள் கூற்றுப்படி அதுவும் தவறுதானே?எனில் நீங்கள் முதல்வர் தை 1ம் தேதி மக்களுக்கு வாழ்த்துச்சொன்னால்,முதல்வரேயும் சாடுவீரா?அல்லது வேறு சாக்குபோக்குகள் வைத்துள்ளீரா?

உங்கள் பதிவை படித்தபின் எனக்கு எழுந்த சந்தேகங்கள் இவை.வேறு விஷயங்களை எழுதி கேள்வியை திசை திருப்பாமல் இதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

Vipasana said...

"அவர் பேராசிரியர். நான் வெறும் ஆசிரியர்"...

ஆசிரியரின் வார்த்தைகள் என்னை நெகிழ செய்தது ...

அனைத்து கருத்து வேறுபாடுகளையும் தாண்டி ஆசிரியரிடம் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடங்கள்தாம் எத்துணை எத்துணை ...

அஹோரி said...

நாலு படத்துக்கு கதை வசனம் எழுதியவநேல்லாம் , தமிழ் இன தலைவனா ? உங்க தொல்லையெல்லாம் எப்ப முடியும் ?

நம்பி said...

//அஹோரி said...

நாலு படத்துக்கு கதை வசனம் எழுதியவநேல்லாம் , தமிழ் இன தலைவனா ? உங்க தொல்லையெல்லாம் எப்ப முடியும் ?

April 16, 2010 11:41 PM//

உங்க தொல்லைகளெல்லாம் முடிந்தவுடன் முடிந்துவிடும்...?