Search This Blog

7.4.10

பெரியாரின் குடிஅரசு பட்டிதொட்டிகளிலெல்லாம் பரவ வேண்டும்!

குடிஅரசு தொகுதிகள், பட்டிதொட்டிகள் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவ வேண்டும்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

தந்தை பெரியாருடைய கருத்துகள், குடிஅரசு தொகுதிகள் பட்டிதொட்டிகள், மூலை முடுக்குகள், பள்ளிக் கூடங்கள், மாணவச் செல்வங்களிடமெல்லாம் பரவவேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 30.3.2010 அன்று நடைபெற்ற குடிஅரசு தொகுதிகள் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இன்றைக்கு மகிழ்ச்சியாக நடைபெற்றிருக்கிறது. இங்கே கூடியிருக்கின்ற பலரும் அந்தப் புத்தகங்களை எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றார்கள். இவ்வளவு நேர்த்தியாக ஒரு புத்தகம் வெளியிடப்பட்டு, அதுவும் குடிஅரசு ஆறு தொகுதிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்தப் புத்தகங்களை எல்லாம் எடுத்துச் செல்ல அதற்கு அழகான ஒரு பையை எடுத்துக்கொடுத்து அதில் போட்டு வழங்கியிருக்கின்றீர்கள் (கைதட்டல்).

புத்தகம் கனம்

கையடக்கப் பிரதியைத்தான் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். இத்தனை நூல்களையும் ரூ. ஆயிரத்திற்கு கொடுத்திருக்கிறீர்களே, உள்ளபடியே கையடக்கமாகத்தான் கொண்டு போகக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

நீங்கள் சிக்கனத்தைக் கடைப் பிடித்ததை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் விலை நிருணயிப்பதில் கூட இவ்வளவு சிக்கனமாக உள்ளபடியே ஆயிரம் ரூபாய்க்கு நிருணயித்திருக்கிறீர்கள் (கைதட்டல்).

ஏன் நான் இவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறேன் என்றால், அவை அத்தனையையும் வாங்கி கையில் கொடுத்தது எனக்குத் தான் தெரியும். (கைதட்டல்). அதனால் நான் உள்ளபடியே உணர்ந்து அனுபவித்துப் பார்த்துச் சொல்லுகின்றேன்.

விசயங்களும் கனம்

புத்தகத்திற்கு இவ்வளவு கனம் வந்ததற்குக் காரணம் உள்ளே இருக்கின்ற விசயங்களும் அவ்வளவு கனமானது (கைதட்டல்).

உள்ளே இருக்கின்ற விசயங்களின் கனம் இன்னும் கூடி அது ஒரு சுகமான சுமையை அளித்-திருக்கிறது என்று தான் நான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கு இந்தப் புத்தகங்களை எல்லாம் வாங்கியிருக்கின்றீர்கள். என் எதிரில் அமர்ந்திருக்கின்ற உங்களை எல்லாம் நான் காணுகின்றேன்.

அடுத்த தலைமுறைக்கும் சென்றடைய வேண்டும்

இன்னும் அடுத்த தலைமுறையாக பள்ளிக் கூடங்களில் இருக்கி-றார்களே அந்த மாணவச் செல்வங்களுக்கு இந்த அறிவுச் செல்வம் சென்றடைய வேண்டும் (கைதட்டல்).

தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு....

மாணவச் செல்வங்களுக்கு, பள்ளிக்கூடங்களுக்கு இந்தக் கருத்துகள் சென்றடைய வேண்டும். பொதுநூலகத்துறை மூலமாக நிச்சயமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு இந்த நூல்கள் சென்றடைய வேண்டும். (கைதட்டல்).

நான் பொது நூலகத்துறை இயக்குநர் அறிவொளி அவர்களை பக்கத்திலே வைத்துக்கொண்டு சொல்வதற்குக் காரணம் அது அவருக்கும் வசதியாக இருக்கும் என்கின்ற காரணத்தால் இந்தக் கூட்டத்திலேயே நான் இதை துவக்கி வைத்துச் சொல்லுகின்றேன்.

மூலை முடுக்குகளில் எல்லாம் பெரியார் கருத்துகள்

காரணம் தந்தை பெரியாருடைய கருத்துகள் தமிழ்நாட்டில் உள்ள பட்டி தொட்டிகள், மூலை முடுக்குகள், பள்ளிக் கூடங்கள், நூலகங்கள் அத்தனை இடங்களிலும் பரவவேண்டும் என்று சொல்லுவதற்கு தலைநிமிர்ந்து எந்த இடத்திலும் உரத்துச் சொல்லக்கூடிய கருத்துகள்; யாருக்கும் அதிலே தயக்கம் கிடையாது.

கயல்தினகரன் சொன்னார்

விடைபெற்றுச்சென்றிருக்கின்ற அண்ணன் கயல் தினகரன் பேசும்பொழுது சொன்னார், எப்படி குலக்கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டிலே கொண்டு வந்து எப்படி வர்ணாஸ்ரம தர்மம் பள்ளிக்கூடத்திலே பள்ளிப் பாடத்திலே ஊடுருவி இருந்தது என்பதைச் சொன்னார்கள்.

முதலில் பெரியார் பாடம்தான்

சமச்சீர் கல்வி திட்டத்தை நமது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கொண்டு வரும்பொழுது அந்தப் பாடத்திட்டத்தில் முதலாவதாக யாரைப்பற்றி எழுதியிருக்கிறதென்று சொன்னால், இந்த வர்ணாஸ்ரம தர்மத்தை அடியோடு ஒழிக்கப் புறப்பட்டாரே நம்முடைய தலைவர் அய்யா பெரியார் அவர்களைப் பற்றித்தான் எழுதப்பட்டிருக்கின்றது (கைதட்டல்)

அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்திருக்கலாம்

இன்றைக்கு நாங்கள் அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்திருக்கலாம். வேறு இடத்திலே நிற்கிறோம் என்றால் அது கலைஞர் அவர்கள் ஊட்டி வளர்த்த உணர்வு. அதனால்தான் எங்கேயிருந்து ஆரம்பிக்கின்றோம் என்று சொன்னால் நம்முடைய தலைவர் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து ஆரம்பித்திருக்கின்றோம்.

பெரியார் அவர்களிடத்திலே ஆரம்பித்து நாங்கள் வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிடாமல் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறோம்.

நெஞ்சுக்கு நீதியில் கலைஞர்

தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்பதை படிக்கின்றபொழுது குடிஅரசைப் பற்றி அதிலிருந்துதான் தெரிந்து கொண்டோம்.

நெஞ்சுக்கு நீதி என்ற தனது வரலாற்றில் கலைஞர் அவர்கள் எழுதுகிற பொழுது எப்படி புதுச்சேரியிலே தலைவர் கலைஞர் அவர்கள் குண்டர்களாலே தாக்கப்பட்டபொழுது, அய்யா அவர்கள் கலைஞரை அழைத்து அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கெல்லாம் மருந்திட்டு அவரை ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று குடிஅரசு இதழின் துணை ஆசிரியராக பணியாற்றிக்-கொண்டிருக்கின்ற ஒரு வாய்ப்பை அவருக்கு உருவாக்கித் தந்தபொழுது எப்படி குரு குலவாசம் இருந்தது என்பதை இன்றைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லுவார்.

பெரியார் குருகுலத்தில் கலைஞர்

ஈரோடு குருகுலவாசத்திலே தந்தை பெரியார் அவர்களுடன் இருந்து பணியாற்றிய அந்த காலகட்டத்திலே அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் சொல்லுவார்.

குடிஅரசிலே தலைவர் கலைஞர் எழுதிய கட்டுரை தீட்டாயிடுத்து என்பதாகும். தண்டபாணி தேசிகர் அவர்கள் திருவையாறிலே தமிழிலே பாடினார் என்பதற்காக அந்த மேடை தீட்டாயிடுத்து என்று சொன்னார்கள்.

தீட்டாயிடுத்து

அதைக் கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் குடிஅரசிலே தீட்டாயிடுத்து என்று எழுதினார்கள். அதைப் படித்த தந்தை பெரியார் அவர்கள் அவரை அழைத்துப் பாராட்டிய நிகழ்ச்சிகளைச் சொன்னார்கள்.

இப்படி தலைவர் கலைஞர் குடிஅரசைப் பற்றி எழுதுகிறபொழுதுதான் அவைகளைப் பற்றி எங்களாலே தெரிந்துகொள்ள முடிகிறது.

பழைய செய்திகளை, வரலாற்றுச் செய்திகளை நாங்கள் நூல்நிலையங்களில் தேடிப்பார்த்தால் கூட கிடைப்பதில்லை. இன்றைக்கு அவைகளை எல்லாம் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

அதுவும் 1925ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த குடிஅரசு தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களாலேயே வெளியிடப்பட்ட அந்த சிறப்பு மலிவுப்பதிப்பாக சிறப்பாக இருக்கிறது. இன்றைக்கு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

குடிஅரசு காலப்பெட்டகம்

1926, 1927, 1928ஆம் ஆண்டுகளுக்கான இந்த ஆறு தொகுதிகள், குடி-அரசு தொகுதிகள் பெரிய காலப்பெட்டகமாக, கருத்துப் பேழையாக வந்திருக்கிறது. அந்தக் காலத்திலே நடைபெற்ற சம்பவங்கள் வெறும் கட்டுரைகளாக மட்டுமல்லாமல், அய்யா அவர்கள் எந்தெந்த இடத்தில் எல்லாம் சென்றார்கள் என்ற ஒரு பெரிய காலண்டரே இருக்கிறது.

எந்தெந்த நாள்களில் எந்தெந்த ஊருக்குச் சென்றார்கள் என்பதிருக்கிறது. ஒரு கூட்டம் ரத்து செய்யப்பட்டால் கூட அந்த கூட்டம் ஏன் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கூட மிகத் தெளிவாகச் சொல்லுகின்ற அளவுக்கு மிக அற்புதமாக இந்த குடிஅரசு நூல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

குடிஅரசு நூல்களை வெளியிடுகின்ற வாய்ப்பை உங்களோடு பெற்றதிலே மகிழ்ச்சி அடைகிறோம்.

உரிமையோடு கேட்டுக்கொண்டு

அதற்குப் பிறகு அய்யா அவர்கள் பேச வேண்டும். இன்றைக்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்பைப் போல ஒரு அருமையானதொரு வாய்ப்பை என்றைக்கும் நீங்கள் தரவேண்டும் என்று நான் உரிமையோடு கேட்டுக்கொண்டு, இந்த குடிஅரசு நூல்கள் எல்லா இடங்களிலும் பரவவேண்டும் என்கின்ற என்னுடைய விழைவைத் தெரிவித்து வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி நான் விடைபெறுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.

------------------- “விடுதலை” 7-4-2010

0 comments: