Search This Blog

14.4.10

பார்ப்பனீயத்தின் வேரறுத்த மாவீரர்கள்!


அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் உறுதி
ஜாதி, மதமற்ற புதிய சமூகம் படைப்போம்!
தமிழர் தலைவர் அறிக்கை

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மனிதகுல மாமேதை, சமூகநீதிக் களத்தில் சாயாமல், சரியாமல், சரித்திர வெற்றியை நிலை நாட்டிய மாவீரர் அண்ணல் அம்பேத்கரின் 120ஆவது ஆண்டு பிறந்த நாள் இன்று.

ஆமைகளாய், ஊமைகளாய், அடிமைகளாய் ஆண்டாண்டு காலம் அவதிப்பட்ட கோடானுகோடி மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரவே தனது வாழ்வினை அர்ப்பணித்த அகிலம்புகழும் அறிஞர் அம்பேத்கர் பிறவாதிருந்திருந்தால் . . .? என்று ஒரு கேள்வியைக் கேட்டு, விடை காண முயன்றால், அவரின் பெருமை, புரியாதோர்க்கும் புரியும்.

ஊடகங்களில் பலவும், வரலாற்றாளர்கள் பலரும் வர்ணிப்பது போல் அண்ணல் அம்பேத்கர் வெறும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அல்லர்.

ஒடுக்கப்பட்ட மக்கள், மனித உரிமைகள் பறிக்கப்பட்டதை மீண்டும் பெறுவதற்கு நடத்திடும் போர்ப்படையின் களநாயகன் அவர்! உலக சிந்தனையாளர்!

அவரைப் பாராட்டி, போற்றி, புகழ்ந்து அவர் தம் உருவப்படத்திற்கு, சிலைகளுக்கு மாலையிடுவது மட்டுமே போதாது; அதை விட முக்கியம், அவர் விரும்பிய சீலம் ஜெகமெங்கும் பரவிட உழைப்பதேயாகும்!

அம்பேத்கர் ஒரு தனிமனிதரல்லர், ஓர் அமைப்பு - நிறுவனம்!

அவர்தம் அறிவுரைகளை வாழ்க்கைநெறியாக்கிக் காட்டத்தான் அவரது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்!

அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அடிமை விலங்கொடித்த அண்ணல் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்!

இருவரும் பார்ப்பனீயத்தின் வேரறுத்து புதிய சமுதாயம் காண உழைத்து பெரும் அளவில் வெற்றி கண்ட மாவீரர்கள்!


ஜாதி மத பேத சண்டை உலகுதனை மாற்றி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவைகளை அனைத்து மக்களும் சுவாசித்து சுகவாழ்வு வாழ, சுயமரியாதை பெற இயக்கங்களைக் கண்டவர்கள்!

அவர்கள் விரும்பிய ஜாதியற்ற, மதமற்ற, மூடநம்பிக்கையற்ற, பெண்ணடிமை ஒழிந்த புதியதோர் உலகைப் படைக்க உறுதி எடுத்துக் கொண்டு அவர்கள் வழி இலட்சியப் பயணத்தைத் தொடருவோம் - வாரிர்! வாரீர்!!

வாழ்க பெரியார்!

வாழ்க அம்பேத்கர்!


தலைவர்,
திராவிடர் கழகம்

14.4.2010
சென்னை

0 comments: