அண்ணல் அம்பேத்கர்
இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் (1891). இந்துமத வருணாசிரமப் பிரிவால் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமராவ் ராமராவ்தான் பிற்காலத்தில் டாக்டர் அம்பேத்கர் என்னும் பெரு மகனாய் ஜொலித்தவர்.
வடநாட்டில் பிறந்த அண்ணல் அம்பேத்கரும், தென்னகத்தில் பிறந்த தந்தை பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். உலக அறிஞர்களுள் ஒருவர் போற்றத் தகுந்தவர் அம்பேத்கர் என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர். இருவரும் சம காலத்தில் வாழ்ந்த சமூகப் புரட்சியாளர்கள்.
வருணாசிரம எதிர்ப்பு, அதன் தோற்றுநர் களான பார்ப்பனர் எதிர்ப்பு இவற்றில், இரு தலைவர்களும் ஒரே போக்கில் நிமிர்ந்து எழுந்த இமயமலைகள்!
நோயின் மூலபலத்தை எதிர்கொண்டு தாக்கியதில் இவர்களுக்கு இணையானவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எவரும் இலர்.
காந்தியார் எதிர்ப்பு - காங்கிரஸ் எதிர்ப்பு என்று எடுத்துக் கொண்டாலும் இருவரும் இணைக் கோடுகள்தாம்.
இந்தியா ஒரு சமத்துவம் இல்லாத நாடு. இந்தியா பல அடுக்குகளை உடைய கோபுரம் போன்றது, ஆனால் இதற்கு நுழைவு வாயிலே இல்லை. ஓர் அடுக்கிலிருந்து மற்றொரு அடுக்கிற்குச் செல்ல ஏணிப்படி ஏதும் இல்லை. ஓர் அடுக்கில் பிறந்தவர் அங்கேயேதான் மடிய வேண்டும் என்று மிகத் துல்லியமாகக் கணித்த சிந்தனையாளர் அவர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி என்ற பிரச்சினையில் லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் நேருக்கு நேர் காந்தியாரையே எதிர் கொண்ட செம்மல் அவர். எதிர்த்ததோடு அல்லா மல் தமது அறிவார்ந்த நாணயமான முறை யீட்டால் அதில் வெற்றி பெற்றவரும்கூட!
கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்கு ஒரு வழி காட்டும் திட்டமான தனித் தொகுதியை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், உடன் இருந்தவர்களே அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கைவிட்ட கொடுமைகளை என்னென்பது!
அந்த நேரத்தில்கூட ஒரு காந்தியாரின் உயிரைவிட கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக் களின் உரிமை வாழ்வுதான் முக்கியம் பணிந்து விடாதீர்கள்! என்று அண்ணல் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்த ஒரே இந்தியத் தலைவர் தந்தை பெரியார் தான்.
அதனால்தான் தந்தை பெரியார் அவர்களிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார் அண்ணல்.
சட்ட அமைச்சராக இருந்த நேரத்தில் இந்து சட்டத்திருந்த மசோதாவை தாம் எண்ணிய போக்கில் கொண்டு வர முடியவில்லை என்ற நிலையில், பதவியில் ஒட்டிக் கொண்டு சுகமான பாக்கியங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினையாமல், பதவியைத் தூக்கி எறிந்து கொள்கையே பிரதானம் என்ற சான்றாண்மையை சூரியன் உள்ள வரைக்கும் நிலை நாட்டிய நீண்ட புகழுக்குரிய மாமணியாக நம்மிடம் ஒளிர்கிறார்.
இன்றைய நிலையில் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமைத் தகர்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை என்கிற கண்ணோட்டத்தில் இவ்விரு மாபெரும் தலைவர்களின் சிந்தனைக் கூர்மைகள் நிச்சயம் தேவைப்படுகின்றன.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைபற்றி இவ்விரு தலைவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இவ்விரு பகுதி மக்கள்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும்பான்மை மக்கள் ஆவார்கள். ஆட்சி அதிகாரம் இவர்கள் கைகளுக்கு வருவதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்க முடியும்.
இந்த ஒற்றுமையைச் சிதற அடிக்க ஆதிக்க சக்திகள் பல்வேறு யுக்திகளை, தந்திரங்களை அவ்வப்போது பிரயோகப்படுத்தி வருகின்றன. ஏன்? உச்சநீதிமன்றம்கூட பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்ததுண்டு.
இந்தக் கண்ணிவெடியில் சிக்காமல் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் சிறுபான்மையினரும் கைகோத்துத் தோள் தூக்கி எழுந்தால் சமத்துவமும், சமதர்மமும் ஒரே நொடி யில் பூத்து மலரும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 120ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனையாக இதனைக் கொள்வோமாக!
------------------------"விடுதலை” தலையங்கம் 14-4-2010
0 comments:
Post a Comment