Search This Blog

11.4.10

பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தைக் கட்டுவதுதான் கோயில்


திருவிழாவா?

திருவிழா ஸ்பெஷல் என்ற தலைப்பிட்டு இவ்வாறு கல்கி இதழ் பல்வேறு தகவல்களைத் தந்திருக்கிறது.

பிரமோத்சவம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து பல தகவல்களை அது தந்திருக்கிறது.

சாமிக்கு எப்படி எப்படியெல்லாம் அலங்காரங்கள் என்று ஆரம்பித்து, உத்ஸவங்களுக்குள்ளிருக்கும் தாத்தா_ பாட்டிக் கதைகள் வரை சொல்லப்பட்டுள்ளது.

கிராம தேவதை உத்ஸவம் என்று தொடங்கி (கிராமத்துக் காவல் தெய்வத்துக்கு நடைபெறும் விழாவாம்).

அனுக்ஞை, வாஸ்து சாந்தி, ம்ருத் சங்கிரகணம், ரக்ஷாபந்தனம், பேரீதாடனம் அஸ்திர தேவர் பூஜை, திக்பந்தனம், விசர்ஜனம், தீர்த்தவாரி ரக்ஷா விசர்ஜனம் என்று ஒரு நீண்ட பட்டியல் தரப்பட்டுள்ளது.

இதனைப் படிக்கும் எவருக்கும் ஓர் அய்யப்பாடு எழத்தான் செய்யும் எழுந்திடவும் வேண்டுமே!

இந்தச் சொற்களில் ஒன்றுகூட தமிழ் இல்லையே, அனைத்தும் சமஸ்கிருதத்தில்தானே இருக்கிறது. அப்படியிருக்கும்பொழுது தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், இந்தக் கோயில் விழாக்களுக்கும் என்ன ஒட்டு உறவு?

நியாயமாக எழ வேண்டிய அறிவார்ந்த வினா இது என்பதில் அய்யமில்லை.

ஆரியர் தமிழில் தமிழ்நாட்டில் ஊடுருவியதன் பின்விளைவே இந்தக் கோயில் விழாக்கள் என்பதற்குப் பெரிய பெரிய ஆய்வுகள் தேவைப்படா.

இந்தக் கோயில் சமாச்சாரங்கள் என்பவற்றைத் தோலுரித்துப் பார்த்தால் பார்ப்பன ஜாதிக்கு அதிமுக்கியத்துவம் தலைதூக்கி நிற்பதை எளிதில் அறிந்துகொள்ள முடியுமே!

கோயில், அதற்குள் வடித்து வைக்கப்பட்டுள்ள மூல விக்ரகம், இவற்றின்மீது மக்களுக்கு மிகப்பெரிய பக்தியை மரியாதையை உண்டு பண்ணுவது; இவற்றோடு அணுக்கமாக நெருக்கமாக தொடர்புடையவர்களாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது இந்தப் பின்னணியில் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள், கடவுளால் மேல் நிலையில் படைக்கப்பட்டு இருப்பவர்கள் என்ற நம்பிக்கையை அழுத்தமாக நிறுவுவது இதன் பின்னணியில் இருப்பதைக் கவனிக்கவேண்டும்.

கடவுளுக்கு உகந்த மொழியும், பார்ப்பனர்களின் சமஸ்கிருதம்தான் அதுதான் தெய்வ மொழி என்று ஆக்கப்பட்டதன் சூழ்ச்சியைக் கவனித்தால் கடவுள் என்பதைவிட, அந்தப் பெயரைப் பயன்படுத்தி பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தைக் கட்டுவதுதான் இந்தக் கோயில், குளங்களின் தந்திரம் என்பதைப் பக்திப் போதையில் தத்தளிக்கும் மக்கள் உணர்வார்களா?

-------------------- மயிலாடன் அவர்கள் 11-4-2010 “விடுதலை” டில் எழுதிய கட்டுரை

0 comments: