Search This Blog

20.4.10

பகவத் கீதை இடைச்செருகலே!




வியாசர் எழுதிய மகாபாரதம் காவியத்தில் பகவத்கீதை இடையில் சேர்க்கப்பட்டது என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறினார்.

திருநெல்வேலியில் கனரா வங்கி ஊழியர் சங்க தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 120 ஆவது பிறந்த நாள் விழா மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பேசியதாவது:

இந்திய ஜாதிகளின் தோற்றத்தை பலர் ஆய்வு செய்திருந்தாலும், அண்ணல் அம்பேத்கர் ஆய்வு செய்து, அவர்கள் அடிமடியில் கை வைத்தது போல் தெளிவாக வெளிப்படுத்தினார். ரிக்வேதத்தில் புருச சுத்தம் நான்கு வர்ணம் என்பது கிடையாது. இடையில் சேர்க்கப்பட்டது. அதே போல் வியாசர் எழுதிய மகாபாரதம் காவியத்தில் பகவத்கீதை இடையில் செருகப்பட்டது. வேதம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. எனவே வேதமாக நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன் என கிருஷ்ணன் சொல்வதாக பகவத்கீதையில் சொல்லப்பட்டுள்ளது. அவரவர் ஜாதிக்கு உட்பட்ட தொழிலையே செய்ய வேண்டும், மாற்றிச் செய்யக்கூடாது என்று கீதை சொல்கிறது.

ஜாதிக் கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இளம்பிராயத் திருமணங்கள், உடன்கட்டை ஏறுதல் கொண்டு வரப்பட்டன. முடியாட்சி உலகம் முழுவதும் இருந்தது. ஆனால் இந்திய மன்னர்களுக்கு வருணங்கள் கலந்துவிடாமல் பாதுகாக்கின்ற முக்கியக் கடமையும் இருந்தது. டாக்டர் அம்பேத்கர் வரலாறு மட்டுமல்ல வேதங்களையும் ஆராய்ந்து இவ்வுண்மைகளை வெளிக் கொணர்ந்தார். காலங்காலமாக இருந்த இந்தியாவின் அடிமை வேரைக் கண்டறிந்தார்.

அமெரிக்கா சென்று திரும்பிய போது அம்பேத்கர் கொண்டுவந்தது பெட்டி பெட்டியாக புத்தகங்கள்தான். புத்தகங்களை நேசித்த அம்பேத்கர் மனுதர்மம் என்ற நூலை மட்டும் இந்திய சமூகத்தை சமத்துவப்படுத்துவதிலிருந்து அந்நியனாக்குகிறது என்பதற்காகச் சிதை மூட்டி எரித்தார். உச்சநீதி மன்றத்தில் மனுவின் சிலை வைக்க வேண்டுமென்ற கருத்து வந்த பொழுது, சிலையை நிறுவினால் நானே நேரில் சென்று சுக்கு நூறாக உடைப்பேன் என்றார். தற்-போதுள்ள அரசியல் சூழ்நிலையில் டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் அதிகம் தேவைப்படுகிறது என்றார்.

------------------- நன்றி:- “விடுதலை” 19-4-2010

1 comments:

Vipasana said...

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கருத்துக்கள் குறித்து விரிவாக விவாதிக்க சிந்திக்க விரும்பும் தோழர்கள் தவிர்க்கவே கூடாத ஆய்வு நூல் "கீதையின் மறுபக்கம் ".... பெரும்பாலோருக்கு தெரிந்த தலைப்பு தான் எனினும் நான் இங்கு இதை குறிப்பிடுவது என்னை போன்ற புது முக நண்பர்களை கருத்தில் கொண்டு ...

ஆய்வு நூல் என்றவுடன் மிரண்டு விட வேண்டாம் தோழர்களே ... எளிமையான நடை .. குறைந்த பக்கங்கள் ...கருத்துக்களின் செறிவை ஒப்பு நோக்க விலையும் மிக மிக குறைவு (Rs.50 only).... நூலகங்களிலும் நிச்சயம் காண கிடைக்கும் ...

நீங்கள் இந்நூலை வாசிக்க தவறுவது பேருந்தில் உங்களை பார்த்து சிரிக்கும் குழந்தைக்கு பதில் புன்னகை அளியாமல் முகத்தை வெடுக்கென திருப்பிக் கொள்வதற்கு இணையானது ...

வாருங்கள் ... புன்னகைப்போம்!